‘தமது புற்றுக்கான சூத்திரத்தை எறும்புகளறியும்;
தமது தேனடைக்கான சூத்திரத்தை தேனீக்களறியும்;
சமூகத்திற்கான ‘அறிவியல்’ சூத்திரத்தை மனிதர் அறியவில்லை.’
- தஸ்தாயெவ்ஸ்கி
தஸ்தாயெவ்ஸ்கியின் “ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பில் ஒரு மூதாட்டி பற்றிய சித்திரம் இப்படி அமைகின்றது.
சாலையில் நடந்துபோகும் 104 வயது மூதாட்டி, கொஞ்ச தூரம் நடப்பதும் சிறிது ஓய்வெடுப்பதும், பின் நடப்பதுமாக இருப்பதைப் பார்க்கும் ஒரு பெண், அவரிடம் ‘களைப்பாயிருக்கிறதா?’ என்கிறார்.
‘களைப்பாக இருக்கிறது. எப்போதும் கதகதப்பாயிருக்கிறது. சூரியன் பிரகாசிக்கிறான்; நான் என் பேத்தி வீட்டில் சாப்பிடுவதற்காக ஏன் போகக் கூடாது?’ என்று பதில் வருகிறது மூதாட்டியிடமிருந்து.
அம்மூதாட்டியின் கண்களிலிருந்து வெதுவெதுப்பான கதிர்கள் பிரகாசித்தது போலிருக்க, அப்பெண் அவரது கையில் ஐந்து கோபெக் நாணயங்களை வைத்து, ஒரு ரொட்டியை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிச் செல்கிறாள்.
தட்டுத்தடுமாறி தன் மகள்கள், பேத்திகள், கொள்ளுப்பேத்திகள் இருக்கும் வீட்டைச் சென்றடைகிறார் அம்மூதாட்டி. எல்லாரும் பிரியத்துடன் உபசரிக்கின்றனர். சாப்பிடச் சொல்கின்றனர். வழியில் ஐந்து கோபெக்குகள் தந்து ரொட்டி வாங்கிக் கொள்ளுமாறு ஒரு பெண் கூறியதைச் சொல்லியபடி, நாற்காலியில் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார் மூதாட்டி. நிசப்தமாகி விடுகிறார். உதடுகளின் முறுவல் உறைந்துபோகிறது. தலை சாய்கிறது. ஐந்து கோபெக்குகள் உள்ள வலக்கை மேஜை மீது இருக்க, இடக்கை ஒரு கொள்ளுப்பேரன் தோளில் இருக்கிறது.
‘அவள் காலமாகிவிட்டிருக்கிறாள்!’ என்கிறார் வீட்டுக்காரர், சிலுவைக்குறி இட்டபடி.
‘வேதனையின்றியும் வெட்கப்படாமலும் காலமாகிவிட்டார்’ என்கிறார்.
The Insulted and Humiliated நாவலில் ஓரிடம்.
நரைத்து, முதுகு கூனி, சாவுக்களையுள்ள முதியவர் ஒருவர் தன் நாயுடன் மதுக்கடையின் கணப்பருகே அமர்ந்துள்ளார். வறுமையில் வாடும் அவர் அங்கு வருவது குளிர்காய்வதற்காக. அவர் எதிரில் மது அருந்துகின்ற ஜெர்மானியனை வைத்த கண் வாங்காது பார்க்கிறார். ‘ஏன் என்னை அப்படி உற்றுப் பார்க்கிறாய்?’ என்னும் ஜெர்மானியனின் கேள்விக்குப் பதிலில்லை. செவிடு என நினைத்துக்கொள்ளும் ஜெர்மானியன், மதுக்கடைக்காரனிடம் தன்னை அவன் அப்படி உற்றுப் பார்க்க வேண்டாம்’ என்று கூச்சல் போடுகிறான்.
அதிர்ச்சியும் நடுக்கமும் கொள்ளும் முதியவர், நெளிந்த தொப்பியையும் கைத்தடியையும் எடுத்துக்கொண்டு கிளம்ப ஆயத்தமாகிறார், பரிதாபமிக்க முறுவலுடன். எந்நேரமும் தான் வெளியேற்றப்படலாம் என்பதை அவர் எதிர்பார்த்திருக்க வேண்டும்.
‘வேண்டாம், வேண்டாம், உற்றுப் பார்க்க வேண்டாம் என்றுதான் ஜெர்மானியர் கேட்டுக்கொண்டார்’ என்கிறார் கடைக்காரர்.
ஆனாலும் அதைப் பொருட்படுத்தாது ‘அஜோர்கா, அஜோர்கா’ என நாயை எழுப்ப முற்படுகிறார், கைத்தடியால் தட்டுகிறார். அசைவே இல்லை, கைத்தடி நழுவுகிறது.
நீண்ட நாளைய நண்பனாகவும் பணியாளாகவும் துணையிருந்த அஜோர்காவின் கன்னத்துடன் கன்னத்தை அழுத்திவிட்டு வெளியேறுகிறார் நடுக்கத்துடன்.
‘நாயைப் பாடம் செய்து நீங்களே வைத்துக் கொள்ளலாம்… அதற்கான செலவை நான் ஏற்கிறேன்…’ என்றபடி குரல்கள் இரைகின்றன.
‘ஒரு கிளாஸ் பிராந்தி சாப்பிடுங்கள்’ என்கிறார் கடைக்காரர்.
முதியவர் பதற்றத்தில் எடுக்க, பாதி சிதறிவிடவே, கிளாஸை அப்படியே மேஜையில் வைத்துவிட்டு வெளியேறி விடுகிறார்.
தெருவோரத்தில் விழுந்துகிடக்கும் அவரிடம் ‘வாருங்கள், வீட்டிற்குப் போகலாம். தேநீர் அருந்திவிட்டு ஓய்வெடுக்கலாம்’ என்கிறார் ஒருவர்.
‘வாஸில்யெவ்ஸ்கி அய்லண்ட், ஆறாவது தெரு… ஆஹா… தெ…’ என முணுமுணுத்ததும் சாய்ந்துவிடுகிறார் முதியவர். இறந்துபோகிறார்.
தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கையில் மனைவியுடன் அவர் ஜெர்மனியில் கழித்த ஐந்து வார காலகட்டத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவல் Summer in Baden-Baden. இதனை எழுதியவர் ஒரு மருத்துவர், அதிலும் யூதர். ஆனால் தஸ்தாயெவ்ஸ்கி எழுத்துகளில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தவர் தஸ்தாயெவ்ஸ்கியின் இறுதி மூன்று தினங்களை விவரிக்கையில், இறுதித் தருணத்தை இப்படிப் பதிவு செய்வார் அந்த நாவலாசிரியர் லியோனிட் ஸிப்கின்.
‘இரு மெழுகுவர்த்திகள் மேஜையில் எரிகின்றன, குழந்தையுடன் மேகங்களில் மிதக்கின்ற sistine மடோன்னா உருவமுள்ள புகைப்படம், படுத்துக் கிடக்கும் தஸ்தாயெவ்ஸ்கியின் கட்டிலுக்கு மேலே தொங்குகிறது; ஜன்னல்களுக்கு வெளியே குளிர்காலத்தின் பீட்டர்ஸ்பர்க் இரவு – இத்தருணத்தில் இப்போது தோன்றுவது போலவே.
‘இறப்பதற்குச் சற்றுமுன், தஸ்தாயெவ்ஸ்கி திரும்பவும் மலையில் ஏறிக் கொண்டிருந்தார் – தன்னிடம் வசிப்போரது பகட்டுடைய பூமியை மட்டுமின்றி, தொலைதூர கிரகங்களின் பயங்கரமிக்க ரகசியங்களையும் கண்டுணர்ந்தபடி; அப்போது சூரியன் மறைந்துவிட, அவர் பீதியூட்டும், அடியாழமற்ற இருளுக்குள் அமிழ்ந்தார்.’
முதல் பதிவில் 104 வயது மூதாட்டி எந்தப் புகாருமின்றி குறையுமின்றி இறந்துபோகிறாள். காரணம் அவள் சக மனிதரிடமும் உற்றார் உறவினரிடமும் கரிசனம் கொண்டிருக்கிறாள். அவர்களும் அவளிடத்தே கரிசனம் காட்டுகிறார்கள். இதனால் வேதனையில்லாத வெட்கமில்லாத மரணம்.
இரண்டாவது பதிவில் வறுமையில் உழன்றாலும் கண்ணியத்துடன் வாழ்ந்திட பிடிவாதம் காட்டும் முதியவன். தனது வறுமையைப் போக்கிக்கொள்ள முடியாத நிலையிலும் தான் வளர்த்துவரும் நாயை விட்டுப் பிரிய மனமில்லாதவன். மதுக்கடைக்காரர் சற்று அன்புமிக்கவராதலால், அவன் குளிர்காய மட்டுமே அங்கு வந்து போகின்றவன். ஜெர்மானியன் வெறுப்பு அவனைச் சட்டென்று மடிய வைக்கிறது, அவனது நாயினையும். அவ்வளவு கூனிக்குறுகிப் போகிறான். கண்ணியமில்லாத வாழ்க்கை யாருக்கு வேண்டும்?
மூன்றாவதில், தஸ்தாயெவ்ஸ்கியின் மரணமுறும் தருணம், ஒரு நாவலாசிரியனின் புனைவாகக் கூறப்படுகிறது. பூமியின் ரகசியங்களையும் விண்ணகக் கோள்களின் ரகசியங்களையும் கண்ணுற்றபடி ஒரு மலை மீது ஏறிக் கொண்டிருக்கிறார் அவர். அப்போது சூரியன் மறைய, அவர் இருளில் அமிழ்ந்து போகிறார்.
ஆறாயிரம் ஆண்டுகளாக சமூகத்தின் ‘அறிவியல்’ சூத்திரத்தை அறிய முற்பட்டுள்ள படித்த வர்க்கத்தால் முடியாது போயிற்று என்பார் தஸ்தாயெவ்ஸ்கி. தனது மரணத்தின்போது அந்த ரகசியங்களை அவர் காணமுடிவதாக ஒரு கற்பித அனுபவம் வாய்க்கிறது. ‘பீதியூட்டும் ரகசியங்கள்’ என்று சொல்லப்படுவதால் அவை அபாயமானவையா என்ற சந்தேகமும் எழும்.
“மிகச் சாதாரணமானவை என்னும் தோற்றத்தில் நாள்தோறும் நிஜவாழ்க்கை தந்திடும் ஆயிரக்கணக்கான சாத்தியங்களை, ஒரு நாவலாசிரியரால் கற்பனை செய்து பார்க்கவே முடியாது.” என்று ‘ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பி’ல் அவர் குறிப்பிடவும் செய்கிறார்.
எழுத்தாளராகத் தீவிரத்துடன் அவர் எழுதியதும், பத்திரிகையாளராகப் பொறுப்புடன் அவர் பதிவு செய்ததும், அவரால் ஈர்க்கப்பட்டு அவரது வாழ்வை ஒரு நாவலில் ஒருவர் பதிவு செய்ததும் ஆன மூன்று காட்சிகள் / தருணங்கள் இவை.
தன் சொந்த வாழ்விலும் தன் காலகட்டச் சூழலிலும் அசாதாரண நிகழ்வுகளைக் கொண்டு அசாதாரணமாக எதிர்வினையாற்றிய கலைஞர் அவர். பாரதூரமான அரசியல் – சமூகப் போக்குகளிலிருந்து நுண்ணிய ஆன்மாவின் சலனங்கள் வரை நுணுகிப் பார்த்தவர். கள்ளங்கபடமற்ற மானுடனின் கண்ணீரிலிருந்து சூதும் குரூரமுமிக்க சாத்தானின் வஞ்சனைவரை கண்டுணர்ந்தவர்.
எனவேதான் ஐன்ஸ்டீன் குறிப்பிட்டார்: ‘எந்தவொரு விஞ்ஞானியை விடவும் தஸ்தாயெவ்ஸ்கி எனக்கு மேலதிகமாக வழங்குகிறார்.’
வாழ்வின் ஆயிரக்கணக்கான சாத்தியங்களை நாவலாசிரியனால் கற்பனை செய்ய இயலாது என தஸ்தாயெவ்ஸ்கி உணர்ந்துள்ளது ஒரு புறம். எழுத்தின் நோக்கம் / அக்கறை / ஆர்வம் என்னவாயிருக்க வேண்டும் என 2021-ஆம் ஆண்டுக்கான நோபெல் உரையில் அப்துல்ரசாக் குர்ணா குறிப்பிடுவது மறுபுறம். மானுடத்தின் அக்கறை ஏதேனும் ஒருவிதத்தில், குரூரம், நேசம் மற்றும் பலவீனமாயுள்ளது. மற்றவர்களின் புறக்கணிப்பைப் பொருட்படுத்தாமல், பார்வைக்குச் சிறியவர்களாய் இருப்போர், தம்மளவிலே உறுதிப்பாட்டினை உணருமாறு செய்வதை ஆதிக்கம் செலுத்தும் கண்ணால் பார்க்க இயலாது என்பதையும் எழுத்து எடுத்துக்காட்ட வேண்டும். ஆதலின் அது பற்றியும் எழுதத் தீர்மானித்தேன் – அதனை உண்மையாகச் செய்யும்போது, அருவருப்பு – சீலம் இரண்டுமே காணக் கிடைக்கும்; எளிமைப்படுத்தல் – வகை மாதிரிகளிலிருந்து மானுடன் வெளிவருவான். அது நிகழும்போது ஒருவித அழகு வெளிப்படும்.”
தஸ்தாயெவ்ஸ்கியின் முதலிரு பதிவுகளிலும் இம்மானுடன் வெளிவருவதையும், அவரது இறுதித் தருணங்களில் ஒருவித அழகு படிந்திருப்பதையும் காண்கிறோம்.
ஆதாரங்கள்:
- தஸ்தாயெவ்ஸ்கி – ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு / தமிழில்: சா.தேவதாஸ் / நூல்வனம், 2019
- பீட்டர்ஸ்பர்க் நாயகன் ஜே.எம்.கூட்ஸி / தமிழில்: சா.தேவதாஸ் / வ.உ.சி.நூலகம், 2004
- In search of Dostoevsky / Joseph Frank / The New York Review, May 23, 2002
- The Insulted and Humiliated / Dostoevsky