நினைவஞ்சல்
தபால்காரர் ஊரில் நுழைகிறார்
சைக்கிள் மணியொலிப்பில்
சார் போஸ்ட் என்ற அழைப்பிழைய
வீட்டு வாசலில் ஞாபகத்தின் புறா
நிகழைத் தொட்டுச் சிறகடிக்கிறது
கழனிக் காட்டிலிருந்தவாறு
கடிதத்தை வாங்க கைநீட்டியதும்
போன நூற்றாண்டின் கடிதத்தை
இந்த நூற்றாண்டின் கைகளில்
கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.
செல்வம் தேய்க்கும் படை
கண்ணீர்த் துளிகளின் கேவல்
உங்களைச் சுற்றிலும் ஆங்காங்கு ஒலிக்கிறதே
உங்களுக்குக் கேட்பதில்லையா
நாணயப் பெறுமதி இன்மை
அவற்றின் பிழையல்லவே
தாம் வெளிப்பட்டு வீழ்வதாயினும்
ஒருவர் கண்ணுக்கும் அகப்படாது
புற்றுறை கறையானாய் ஊர்கின்றன
யார் தம் அன்பின் பொய்கையுள்
இவற்றை மடைதிருப்புகிறாரே
அவர் வாழ்வின் நிறைவை ஏற்கிறார்
நதியெனத் தேடி நடப்பவரோ
துயரினை வெல்லும் ஞானத்தைப் பெறுகிறார்
உலகின் கடைசித்துளி நீரும்
கடைசிச் சொட்டுக் கருணையும்
விடைபெற்ற பிறகும் வற்றாத ஒரு துளி
கண்ணீர்த் துளியாகவே இருக்கும்
இதன் பிரயோகத்துக்கு உள்ளம் உகுக்கும்
கடைசி ஒருவர்
கடவுளின் இருப்புக்கு மாற்றாகிறார்.
மழையாட்டு
மழை வந்து எச்சரிக்கும் இப்போதே கிளம்புகிறோம்
சாகசம்போல் பயணித்த சிறுதூரத்தில்
தூறல் வலுத்துவர நிற்கிறோம்
நின்றபின் விடாது தொடர்ந்து
மீண்டுமது இடியோடு வந்து மிரட்டியும் மிரளாது மீள்கிறோம்
மழை விளையாடுகிறது என விளங்கிக் கொண்ட பின்பு
நாங்களும் விளையாட விழைகிறோம்
பயணிப்பதுபோல் போக்குக் காட்டி பதுங்கிக் கொள்கிறோம்
அதுவும் விட்டதுபோல் வெளிச்சம் காட்டிப் பின் பொழிகிறது
குன்றேற வந்தவர்கள் மனம் குன்றும்வண்ணம்
ஓர் அதீதப் பேய்க் காற்று மின்னல் கீற்று
ஒருவன் மட்டும் அயராமல் விரைந்து
குன்றுச்சத்தில் ஆடை களைந்து
அங்கிருந்த பாறைமேல்
இடிக்கும் அஞ்சாது மல்லாக்கச் சரிந்துவிட்டான்
பின் தொடர்ந்து நாங்கள் உச்சி அடைவதற்குள்
நடந்ததென்னவென யூகிக்க இயலாதவாறு
அவனைச் சுற்றி ஓர் அடர்திரவக் கூந்தல் இறங்கிவிட்டிருந்தது
அத்திரை எங்களூடேயும் பரவியதாய்
வானிருந்து கொட்டிய நீர்த்தாரை
ஆனது எத்தனை காலம் அல்லது நேரம் எனக்
கணிக்கவியலாது மயக்கமூட்டிய நீண்ட பொழுதிருந்து
ஒருவர் இருப்பை ஒருவர் அறியுமாறு மீண்டு வெளிவந்தோம்
பாறை மீது இருந்தவன் மட்டும் பிறகெப்போதும் புலப்படவேயில்லை.
(சுகுமாருக்கு)
மஞ்சள் பூ
இடையே கொடிபோல ஓர் எண்ணம்
ஆழ் தியானத்திசையில் சிறு வெளிச்சம்
கொஞ்சம் கவனச் சிதறல்
பார்க்கக் கூடாததெல்லாம் காட்சிப்படும்போது
நயத்துடன் எப்படி நடந்து கொள்ள
பாதையல்லாத ஒரு மலைப்பாதை
ஏற்றம் முழுக்க இளமைக்காலப் புதிர்வுகள்
எப்படி முதுமையைக் கடந்து முடிக்க
தீட்டிய குருட்டுப்பூனை நக்கும் வாசனைப் பூ
அதன் மஞ்சளில் ஒரு மனமயக்கம் நடை தயக்கம்
இரவு வருமுன்னே வாசனை பகர்ந்து
அங்கிருந்து தாவும் கண்சிவந்த கரும்பூனை
குதித்த அதிர்வில் பெரும் நடுக்கம்
பின் பள்ளத்தாக்கில் பேரமைதி.
டேரிப் பூச் சிரிப்பு
பனிப்பொழிவு விடைபெற்ற பருவத்தில்
எருக்கனில் கருவண்டும்
உண்ணியில் தேன்பூச்சியும் உண்டித் தேடும்
ஏரிக்கரைப் பனையின் மடலிலிருந்து
இரண்டு காகங்கள் அருகருகே அமர்ந்து
நீலவான் பின்னணியில் ஆழ்ந்து காதலிக்கின்றன
மைனாக்களின் இடைவிடாத சிம்பொனியில்
வேறு பறவைகளின் உல்லாசக் கீச்சாட்டத்தில்
கோடை தொடங்கி மூப்படைந்த மார்ச்சில்
மதிய நேரக் காற்று சற்று உஷ்ணத்தில் மூச்சு விட
ஏரி நீர் தணிக்கச் சமன் செய்து அங்கே இடையிடையில்
அதனோடு குளிர்காற்றில் உரையாடுகிறது
இரவெல்லாம் கடந்த பல்லாண்டுகளில் மூழ்கி
விழித்தும் ஓயாத அவள் சுழலில் திணறி
விடுபட வந்த தனியனெனில் சாகும்வரை
சிரித்தால் டேரிப் பூ மலர்ச்சிக் காட்டும்
நினைவில் இங்கு மகிழக் கிடக்கலாம்
தவிர்க்கத் துணிந்தால்
தவழ்ந்து செல்லும் சிற்றலையில் ஏறி
பெருமலையின் பெருந்தனிமை உச்சியடையலாம்
வேண்டாமோவெனில்
துணை நிற்கும் மரவரிசைக்கிடையில் துயர் புதைத்து
மெனக்கெடல் ஏதுமின்றி கொஞ்சம் சும்மா இருக்கலாம்.