சுகுமாரன் கவிதைகள்


லியான்ஹுவாவின் காதலர்

திரு. காங்க்மிங்க் ரேன் பனிக்கால நள்ளிரவில் மரணமடைந்தார்
திரு. காங்க்மிங்க் ரேன் மனைவியின் இல்லத்தில் உயிர்துறந்தார்.
திரு. காங்க்மிங்க் ரேன் மணம் முறித்திருந்தார்.

திரு. காங்க்மிங்க் ரேனும் திருமதி லியான்ஹுவாவும்
தனித்தனியே வாழ்ந்தனர்
எனினும் இருவரும் நண்பர்களாக இருந்தனர்.

திரு. காங்க்மிங்கின் மறைவை திருமதி. லியான்ஹுவா தெரிவித்தார்.
திரு. காங்க்மிங்கை இறுதியாகப் பார்க்க எல்லாரும் வந்தனர்.

திருமதி. லியான்ஹுவா திரு.ருவான் ரேனுடன் காதலில் இருந்தார்
திரு. ருவான் ரேனும் திருமதி லியான்ஹுவாவும்
22 ஆண்டுகளாகக் காதலித்துக் களித்திருந்தனர்
உயிருக்கு உடலாகவும் உடலுக்கு உயிராகவும் கலந்திருந்தனர்.

திரு. காங்க்மிங்க் ரேனுக்கு மரியாதை செலுத்தத் திரு. ருவான் ரேன்
திருமதி. லியான்ஹுவாவின் இல்லத்துக்கு வந்தார்.

திருமதி. லியான்ஹுவா இல்லக் கூடத்தில் நீள்துயிலிலிருந்த
திரு. காங்க்மிங்க் ரேனைச் சுற்றமும் நட்பும் சூழ்ந்திருந்தனர்.
இறுதி மரியாதை செலுத்திய எல்லாரும்
திருமதி. லியான்ஹுவாவை இறுக அணைத்து ஆறுதல் சொல்லினர்.
திருமதி. லியான்ஹுவாவால் காதலரைப் பார்க்கவோ தொடவோ
கட்டியணைத்துக் கண்ணீர் உகுக்கவோ முடியவில்லை.
திருமதி. லியான்ஹுவா அப்போது
திரு. காங்க்மிங்க் ரேனின் மனைவியாக இருந்தார்.

திருமதி. லியான்ஹுவா தன் காதலியல்ல என்று
அப்போது திரு.ருவான் ரே திடுக்குற்று உணர்ந்தார்.
திருமதி. லியான்ஹுவாவை உரிமையுடன் சேர்த்தணைத்து
ஆறுதல் சொல்ல இயலாது என்று
அப்போது திரு.யுவான் ரே பரிதவித்து அதிர்ந்தார்.

திருமதி. லியான்ஹுவாவுடன்
பேசிக்கழித்த நேரங்களும் தழுவிக் கரைந்த நிமிடங்களும்
குலவித் திரிந்த பொழுதுகளும் கூடிக்கிடந்த வேளைகளும்
திரு. ருவான்ரேயின் விழிகளில் கசிந்தன.

திரு.ருவான் ரே கூட்டத்தை விட்டு விலகி நின்றார்
உயிரை உதறிய உடலைப்போல ஒதுங்கிக் கொண்டார்

காதலியின் கணவர் மறைந்தால்
கைம்மைக்கு ஆளாவது காதலரே என்று
திரு.யுவான் ரே யாரும் காணாமல் தேம்பினார்.
தான் அந்நியமானதை எண்ணி வெதும்பினார்.
தான் மறைந்தால்
திருமதி. லியான்ஹுவாவும் அந்நியமாவாரே என்று
திரு.யுவான் ரே யாரும் அறியாமல் குமுறினார்.

வீடு திரும்பிய திரு. யுவான் ரே
விம்மிக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தார்.
தலைகீழ் நீருற்றின் அடியில் அம்மணமாய் நின்றார்.
22 ஆண்டுகளில் ஒரு நாளிலும் இல்லாதபடி
‘அன்பே லியான்ஹுவா, அன்பே லியான்ஹுவா’ என்று
குலுங்கிக்குலுங்கி அழுதுகொண்டிருந்தார்.

[ads_hr hr_style=”hr-fade”]

 

[ads-quote-center cite=’ சீன யேஃபூ நாட்டார் பாடல்’]பிரிவோ முறிவோ இல்லாமல்

உன்னுடன் காதலில் திளைக்க விழைகிறேன்

குன்றுகள் நொறுங்கித் தரிசானாலும்….

ஆறுகள் வறண்டு பரலானாலும்…. [/ads-quote-center]

 

திரு.ருவான்ரேனின் காதலி

லியான்ஹுவா : ஒரு கதாபாத்திரம்
லியான்ஹுவா : ஒரு விந்தைப்பெண்

பிற பெண்களிடமில்லாத விந்தையைத்
தனதாகக் கொண்டிருப்பதால்
லியான்ஹுவா பாத்திரமாகிறார்.
பிற பாத்திரங்களில் காணாத பெண்ணியல்பை
வரித்துக் கொண்டிருப்பதால்
லியான்ஹுவா விந்தையாகிறார்.

லியான்ஹுவா – ஓர் அற்புதம்
தன்னைப்போன்ற இன்னொரு அற்புதமாக
திரு. காங்க்மிங்க் ரேனைக் கண்டடைந்தார்

திரு.காங்க்மிங்க் ரேன்: ஒரு சுதந்திரம்
திரு.காங்க்மிங்க் ரேன்: ஒரு விசித்திரம்

பிறர்போல் இராத விசித்திரத்தை
அடையாளமாக்கியிருப்பதால்
திரு.காங்க்மிங்க் சுதந்திரராகிறார்.
பிற விசித்திரங்களிடமில்லாத சுதந்திரத்தை
உயிராகக் கொண்டிருப்பதால்
திரு.காங்க்மிங்க் விசித்திரராகிறார்.

இரு அற்புதங்களும்
ஒருவரையொருவர் கண்டுகொண்ட
அற்புதத் தருணத்தில்
இன்னொரு அற்புதம் இயல்பாக நிகழ்ந்தது.

லியான்ஹுவா
திருமதி. காங்க்மிங்க் ரேன் என்று அறியப்பட்டார்.

வருடங்கள் கழிந்தன

இரு அற்புதங்களும்
ஒருவரையொருவர் தனித்துக் கண்ட
அலுப்பான வேளையில்
ஒருவரை ஒருவர் விலகி நடந்தனர்.

லியான்ஹுவா இனிமேலும்
திருமதி. காங்க்மிங்க் ரேன் என்று
அறியப்பட விரும்பவில்லை. எனினும்
இணையர்களாகப் பிரிந்தாலும்
தோழர்களாகத் தொடர்ந்தனர்.

லியான் ஹூவா – ஓர் அற்புதம்
ருவான் ரேனை அவர் காதலித்தது
அற்புதத்தின் அற்புதம்.

லியான்ஹுவாவின் காதல்
ருவான் ரேனுக்குப் புரிந்ததைவிட அற்புதம்
காங்க்மிங்க் ரேனுக்கும் அது தெரியுமென்பது.
அதை விட அற்புதம்
காங்க்மிங்க் ரேன் ஒருநாள்
மனைவியின் காதலரைத்
தொலைபேசி வழியே அழைத்ததில் நிகழ்ந்தது.

‘ஹலோ, ருவான் ரே,
லியான்ஹுவா இங்கே ஓயாமல் அழுகிறார்
கூந்தலைப் பிய்த்துக் கூப்பாடு போடுகிறார்
சுவரில் முட்டிக் கபாலம் பிளக்கிறார்.
நீங்கள் பேசினால் நிச்சயம் தணிவார்.’

கைநடுங்க ரிசீவரைப் பற்றிக்
காதலிக்கு ஆறுதல் சொல்லும்போது
கலங்கிய விழிகளால் ருவான் ரே
ஜன்னலுக்கு அப்பால்
மண்ணிலிருந்து விண்ணுக்கு
நட்சத்திரம் ஒன்று ஒளிபரப்பிப் போவதை
அண்ணாந்து பார்த்து ஆச்சரியம் அடைந்தார்.
அந்த விண்மனமீனுக்கு
காங்க்மிங்க் ரேன் என்று புதுப் பெயர் சூட்டினார்.

அன்பு பொதுவான அற்புதமென்பது
விந்தைதான், இல்லையா?

[ads_hr hr_style=”hr-fade”]

எப்போதும்

ழுத்து அதிர்ந்தது
இப்போதும் ஈரத்துடன் என்று

அசை முனகியது
இப்போதும் துடிப்புடன் என்று

சொல் ஒலித்தது
இப்போதும் உருவத்துடன் என்று

வாக்கியம் விளக்கியது
இப்போதும் பொருளுடன் என்று

கவிதை அறைகூவியது
எப்போதும் எப்போதும் இருக்கிறேன் என்று.

[ads_hr hr_style=”hr-fade”]

இருப்பு

ன்ன இது
விந்தையா விபரீதமா?
பூங்காவில்
ஸீசாப் பலகையின் இருமுனைகளிலும்
நானே அமர்ந்து ஆடுகிறேன்

தராசின் இருதட்டுகளிலும்
நானே நிரம்பி எடைபோடுகிறேன்

வான்நோக்கி நீளும் முடிவற்ற ஏணியை
நானே அசங்காமல் பிடித்து ஏறுகிறேன்

எதிர்வெள்ளத்தில்
நானே படகாகவும் துடுப்பாகவும் நதியோடுகிறேன்

மயானத்தில்
எரியுண்ணும் உடலாகவும்
தணலில் வேகாத நிழலாகவும்
நானே காத்துக்கிடக்கிறேன்

எந்த அங்கமும் எந்த லட்சணமும் இல்லாத
உடலாக இருக்கிறேன்
திருத்தமான உறுப்புகளும் துல்லியமான அடையாளமும்
சர்வ லட்சணங்களுமாக இருக்கிறது என் நிழல்

என்ன விந்தை
என்ன விபரீதம்.


  • சுகுமாரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.