ஒரு துண்டு வானத்தின் வழியே மினுக்கும் நட்சத்திரங்கள்

தமிழில் அறிவியல் சிறுகதைகள் 

சிறுகதை என்பது அளவில் சிறியதாகவும் அதே நேரத்தில் ஓர் உணர்வு, ஒரு நிகழ்வு, ஒரு மையம் என்று ஏதேனும் ஒன்றினைப் பற்றி மட்டும் பேசி அவற்றோடிழைந்த ஒரு திருப்பத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்ட நவீனத்துவக் காலம் தொடங்கி, பக்க அளவுகளுக்குள்ளோ கால அளவுகளுக்குள்ளோ குறுங்காமல், மையத்தைத் தகர்த்து, ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கதையிழைகளைக்கொண்டு, நுட்பமாகவும், நெருக்கமாகவும் பின்னப்பட்டு, வாசகனையும் படைப்பியக்கத்தில் தன்னோடு சேர்ந்து பங்கேற்கக்கோரும் பின் நவீனத்துவச் சிறுகதைகள் வரை பல்வேறு பரிமாணங்களைத் தரித்துக்கொண்டு நிற்கிறது. 

தமிழில் சிறுகதையின் வரலாறு மரமொன்று பெண்ணொருத்தியின் கதையைச் சொல்வதில் தொடங்கியது. தன்னிலை, முன்னிலை மற்றும் படர்க்கையில் கதைசொல்லுதல், உரையாடல் வழியே கதையை நகர்த்துதல், ஒருபக்கம் ஆற்றொழுக்கு; மறுபக்கம் கலைத்து விளையாட்டு, முழுக்க முழுக்க வர்ணனைகள், டயரிக்குறிப்புகள், கடிதங்கள் மூலமாகக் கதையைக் கட்டமைத்தல், யதார்த்தம், மாய யதார்த்தம், மீபுனைவு என்று வடிவ ரீதியிலும் பல்வேறு சோதனைகளும், அவற்றில் குறிப்பிடத் தகுந்த அளவு சாதனைகளும் இங்கே நிகழ்த்தப்பட்டுள்ளன. இப்படியாக இன்னதுதான் ‘சிறுகதை’ என்று வரையறுப்பதிலேயே ஏகப்பட்டச் சாத்தியங்கள் உள்ளடங்கியிருக்கிறன. இதனுடன் “அறிவியல்” என்ற பிரபஞ்சச் சொல் முன்னொட்டாகச் சேரும்போது அது இந்தக் கட்டுரையின் வேலையை இன்னும் சிக்கல் மிகுந்ததாக்குகிறது.

அறிவியல் என்ற சொல் ஆரம்பத்தில் இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற அடிப்படை அறிவியல் துறைகளைக் குறிக்கவே பயன்பட்டுவந்தது. ஆனால், இன்று சமூகவியல், அரசியல், உளவியல் என்று பல்வேறு துறைகளுக்கும் பொதுவானதொரு சொல்லாக மாறிவிட்டது. அது, இப்போது கிட்டத்தட்ட எல்லா அறிவுத்தளங்களையும் சுட்டும் ஒரு பொதுச்சொல்லாக விரிந்து வந்து நிற்கிறது. இக்கட்டுரையில் முதலில் குறிப்பிடப்பட்ட அடிப்படை அறிவியலையும், அவற்றிலிருந்து எழுந்த தொழில்நுட்பங்களையும் இயங்குதளமாகக் கொண்டு எழுதப்பட்ட அறிபுனைவுள் மட்டுமே கவனத்தில்கொள்ளப்பட்டுள்ளன. 

தமிழின் முதல் சிறுகதை என்று பொதுவாகக் குறிப்பிடப்படும், வ.வே.சு ஐயர் எழுதிய “குளத்தங்கரை அரசமரம்” 1917 ஆம் ஆண்டு வெளிவந்தது. (பாரதி எழுதிய காக்கா பார்லிமெண்ட் என்ற கதையே தமிழின் முதல் சிறுகதை என்பவரும் உண்டு. அந்தக் கதையே தமிழின் முதல் அறிவியல் புனைவு சிறுகதை என்று எழுத்தாளர் சுஜாதா ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் – ‘அறிவியல் புனைகதைகளின் கூறுகள்’). அந்தக் கணக்கின்படி தமிழில் சிறுகதைகளின் வயது நூற்றிரெண்டு. சமகாலச் சிறுகதைகளின் போக்கு குறித்தான கட்டுரை ஒன்றுக்காக நண்பர் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் இரண்டாயிரத்துக்குப் பிறகு வந்த சிறுகதைத் தொகுப்புகள் குறித்த தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருந்தார். இரண்டாயிரத்துக்குப் பிறகு மட்டுமே கிட்டத்தட்ட எண்பத்தைந்துக்கும் மேற்பட்ட முதல் சிறுகதைத் தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் கணிசமானோர் இரண்டாம், மூன்றாம் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கக்கூடும். அதற்கு முந்தைய எண்பது ஆண்டுகளையும் சேர்த்தால் இந்த நூற்றியிரண்டு ஆண்டுகளில்  குறைந்தபட்சம் ஐந்நூறு சிறுகதைத் தொகுப்புகளாவது வெளிவந்திருக்கும். அவற்றில் இதுவரை மூன்றே மூன்று குறிப்பிடத்தகுந்த தொகுப்புகள் மட்டுமே அறிவியல் சிறுகதைகளுக்கென்று பிரத்யேமாக தமிழில் வெளியான சிறப்புத் தொகுப்புகளாகும்.(விஞ்ஞான சிறுகதைகள் – சுஜாதா – உயிர்மை வெளியீடு, விசும்பு – ஜெயமோகன் – கிழக்கு வெளியீடு, அமரர் சுஜாதா – தமிழ்மகன் – நாதன் பதிப்பகம்). இது கிட்டத்தட்ட வெறும் அரை சதவீதம். இவை தவிர ஆங்காங்கே வெளிவந்திருக்கும் உதிரிக்கதைகள் அத்தனையையும் திரட்டினாலும் மொத்தமாக நூறு கதைகள்கூட தேறாது என்பதே நிலைமை. 

கவிதை, சிறுகதை, நாவல் என்ற நவீன இலக்கிய வகைமைகளில் மற்ற இரண்டைக் காட்டிலும் சிறுகதையிலேயே உச்சபட்ச சாதனைகள் இங்கே நிகழ்த்தப்பட்டுள்ளன. உலகளவில் சிறந்த சிறுகதைகள் என்று சிலவற்றைப் பட்டியலிட்டால் அவற்றுக்கு இணையாக நிறுத்தும் தரத்திலான சிறுகதைகள் இங்கே பல உள்ளன. அப்படியிருந்தும் இங்கே அறிவியலை அடியொற்றி எழுதப்பட்ட கதைகள் வெகு சொற்பமாக இருப்பதற்கும் அவையும் புனைவின் உச்சங்களைத் தொடாமல் போனதற்கும் என்ன காரணம்(இதுவரை இடப்பட்டிருக்கும் தமிழின் ஆகச்சிறந்த சிறுகதைப் பட்டியல் ஒன்றிலாவது ஒரே ஒரு அறிவியல் சிறுகதையையாவது பார்த்தேனில்லை)? 

ஆரம்பக் காலம் தொட்டே தமிழில் விஞ்ஞானப் புனைவுகள் தீவிர இலக்கியச் செயல்பாடுகளுக்கு வெளியிலேயே வைத்துப்பார்க்கப்படுகின்றன. ஒரு நல்ல இலக்கிய ஆக்கம் எப்போதும் வாசிப்பவரை ஏதேனும் ஒரு புள்ளியில் தன்னுடன் இணைத்துக்கொள்கிறது. அப்படியான இணைவுக்குப் புறவெளிக் காரணங்களைவிட அகவெளிப்பயணமும் அதன் வழியே அப்படைப்பு முன்வைக்கும் புதியதொரு பார்வையும் உற்றதாக இருக்கிறது. அறிவியல் புனைவுகளோ பெரும்பாலும் வெளியிலிருந்தே இயங்குபவையாக உள்ளன. அதன் காரணமாகவே மற்ற கதைகளில் தனிமனிதன் ஒருவனின் ஒருவேளைப் பசியோ (புலிக்கலைஞன் – அசோகமித்திரன்), ஒரு குடும்பத்தின் வறுமையோ (எஸ்தர் – வண்ணநிலவன்) உணர்த்தும் பதற்றத்தையும், பரிவையும் ஒட்டுமொத்த உலகமே அழிவதாகக் காட்டும் அறிவியல் சிறுகதையால் தோன்றவைக்க முடியவில்லை. (ராகவேனியம், ஓர் அரேபிய இரவு – சுஜாதா, நம்பிக்கையாளன் – ஜெயமோகன்). இதை தமிழில் வெளிவந்துள்ள அறிவியல் சிறுகதைகளின் போதாமை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், இதே போன்று உலக அழிவைப் பற்றி அமெரிக்க எழுத்தாளர் ரே பிராட்பரி எழுதிய ‘உலகின் கடைசி நாள்’ என்னும் சிறுகதை அதன் கற்பனை உச்சத்தையும் தாண்டி எழுப்பும் அன்றாடத்தின் அபத்தம் பற்றிய கேள்வி மிக முக்கியமான ஒன்று. 

ஒரு நல்ல சிறுகதை தான் கூறவிரும்புவதை எங்குமே விளக்கக்கூடாது என்பது அடிப்படை. பூடகமாக, மறைபொருளாக, ஒரு உருவகமாக, படிமமாகக் கதையில் அச்செய்தியை வைப்பதே சிறப்பு. ஆனால், அறிவியல் கருதுகோள் ஒன்றை முன்வைத்து எழுதப்படும் ஒரு கதையில் வாசகனுக்கு அதனைக் கதையினூடே விளக்கிச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஆதி சூன்யத்தைத் தவிர மற்ற எல்லாவற்றுக்கு அறிவியல் நிரூபணம் கேட்கும். அதையும் போகிற போக்கில் யாரோ ஒருவர் வந்து விளக்குவதென்பது கதையின் தருக்கத்துக்கும், அறிவியலுக்கும் நியாயம் செய்வதாக இருக்காது. எனவே அறிவியல் பின்புலம் கொண்ட நிபுணர் ஒருவரே – விஞ்ஞானி, ஆய்வு மாணவர், மருத்துவர் – வந்து விளக்க வேண்டியுள்ளது. எனவே இக்கதைகள் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான சூழலில் எழுதப்பட வேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கின்றன. வேறு, வேறு பெயர்களைக்கொண்ட ஒரே மாதிரியான பாத்திரங்கள் உலவுகின்றனர். உரையாடுகின்றனர். அவை வாசகனின் யூகத்துக்கு இடமளித்து எளிதில் சலிப்பினைத் தருவதற்கான சாத்தியங்கள் நிறைய உள்ளன. இதையெல்லாம் மீறி ஓர் அறிவியல் உண்மையை எடுத்துக்கொண்டு, அதை விரித்து, புதிய திறப்பொன்றினை உணரக்கூடிய சிறப்பான அறிவியல் சிறுகதைகள் தமிழில் விரல்விட்டு எண்ணுமளவிலேயே வெளிவந்துள்ளன. ஜெயமோகனின் விசும்பு சிறுகதைத் தொகுப்பிலுள்ள சில கதைகள் அப்படியானதொரு  முயற்சியை வெற்றிகரமாகச் செய்த கதைகள் எனலாம். 

பறவைகள் வலசை போவதை அறியும் முனைப்பிலிருக்கும் ஒருவன் அறிதல் என்பதை மீறி அவற்றின் போக்கை மாற்ற முற்படுகிறான். இயற்கையை வெல்லத் துடிக்கும் ஆதிமனித மனத்தின் மிச்சம். ஆனால், இயற்கையின் சமநிலையைக் குலைக்கும் எந்தவொரு நிகழ்வும் சற்றும் எதிர்பாரா பின்விளைவுகளில் கொண்டுவந்து நிறுத்தும். இவ்வுண்மையை நுணுக்கமாகச் சுட்டிக்காட்டும் கதை விசும்பு. மனப்பிளவு குறித்த கதையான ‘உற்று நோக்கும் பறவை’யும் முக்கியமான ஒன்று. 

இத்தொகுப்பில் உள்ள ‘ஐந்தாவது மருந்து’ என்னும் கதை எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டறிவதைப் பற்றிய ஒன்று. தினசரிகளில் பெட்டிச் செய்திகளில் அவ்வப்போது இதுபோன்ற கொடிய நோய்களுக்கான மருந்து கண்டுபிடிப்புகளைப் பற்றி அடிக்கடி வாசித்திருப்போம். அப்படியான ஒரு செய்தி ஒன்றிலிருந்தே இக்கதைக்கான விதை விழுந்திருக்க வேண்டும். ஆனால், மருத்துவத்தின் மிக முக்கிய பிரச்சனை ஒன்றைத் தொட்ட விதத்திலும், அதையும் தமிழ் மரபு சார்ந்த மாற்று மருத்துவத்தின் வழியே சொன்னவிதத்திலும் இக்கதை மிக முக்கியமான படைப்பாக மாறுகிறது. இது இங்கிருந்து மட்டுமே எழுதப்படக்கூடிய கதை. இதுபோன்ற தனித்துவமான அறிவியல் கதைகளே மேற்குலகில் ஏற்கனவே திடமாக எழுந்துவிட்ட அறிவியல் புனைவுகளைத் தாண்டி தமிழில் அறிபுனைவுகளைத் தேடி வாசிப்பவருக்கு உரிய மரியாதை செய்யும். 

இக்கதைகளை அவரின் அறிவியல் புனைவுச் சிறுகதைகளில் சிறந்தவை என்று கூறலாமே தவிர ஜெயமோகனின் சிறுகதைகளின் உச்சமென்று கூற முடியாது. 

கால பயணம், கருந்துளை என்று விண்வெளி பற்றிய கதைகள், தானியங்கிகள், ரோபாட்டுகள் போன்ற கணிப்பொறி சார்ந்த எதிர்கால தொழில்நுட்பக் கதைகள், உலகப் பேரழிவு, மருத்துவம் சார்ந்த கண்டுபிடிப்புகள், நோய்மை பற்றிய கதைகள் என்று இதுவரையில் வந்துள்ள விஞ்ஞான சிறுகதைகளை ஓர் ஒப்புமைக்காக வகைப்படுத்திக்கொள்ளலாம். இப்படி எத்தனை வகையாகப் பிரித்தாலும் வகைக்கொன்றாக சிறுகதை எழுதியவராக சுஜாதா இருக்கிறார். இதே போன்ற தளத்தில் தொன்மம், மரபு சார்ந்த அறிவியல் உண்மைகள் அவற்றின் மூலம் அடைய முயலும் தரிசனம் என்பதாக ஜெயமோகனின் விசும்பு சிறுகதைகளைக் கூறலாம். தமிழ்மகன் தான் எழுதிய அறிவியல் கதைகளின் வழியே தான் நம்பும் சமூகம் மற்றும் அரசியல் விமர்சனங்களை முன்வைக்கிறார்.

இதற்கிடையில் இத்தொகுப்புகளிலும், வெளியிலும், மீபுனைவு, அதிபுனைவு, மாய யதார்த்தம், உளப்பகுப்பாய்வு ஆகியவற்றோடு அறிவியல் கதைகளைச் சேர்த்துக் குழப்பிக்கொள்ளும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது. சற்று கடினமாக இருந்தாலும் இப்படியாக மீச்சிறு வித்தியாசத்தில்தான் கதைகளை வகைபிரிக்க வேண்டியிருக்கிறது. புவி வெப்பமாதல், காடுகளை அழித்தல், பிளாஸ்டிக் பயன்பாடு போன்றவற்றால் ஏற்படும் சூழலியல் சீர்கேடுகளை முன்வைத்து வரும் படைப்புகள் இப்போது உலகெங்கும் தனித்த கவனத்தைக் கோருகின்றன. மேற்கில், அவற்றை அறிபுனைவோடு சேர்க்காமல் ‘சூழியற்புனைவு’ (cli-fi) என்று தெளிவாகப் பிரித்தே அழைக்கிறார்கள். சமீபத்தில் ஞானபீட பரிசு பெற்ற அமிதவ் கோஷின் கடைசி நாவலான ‘கன் ஐலேண்ட்’ கூட ஒரு சூழியற்புனைவே. பொருட்படுத்தத்தக்க வகையில் தொடர்ச்சியாக அறிவியல் புனைவுகள் வெளிவரும்போது மட்டுமே இது போன்று துல்லியமான வகைப்படுத்துதல் இங்கே சாத்தியமாகும். 

மேற்குறிப்பிட்ட மூன்று தொகுப்பிலுமேகூட மிகச்சரியாக அறிவியல் கதைகள்தாம் தொகுக்கப்பட்டுள்ளனவா என்றால், இல்லையென்றே சொல்ல வேண்டியிருக்கிறது. சுஜாதாவினுடைய தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஆரம்பக்கால கதைகளில் ஒன்றான “மன்னிக்கவும், இது கதையின் ஆரம்பமல்ல” என்ற கதை ஒரு சிறப்பான சொல்விளையாட்டுக் கதை மட்டுமேயாகும். கனவினை அடிப்படையாகக்கொண்ட கதைகளான “ஓர் அரேபிய இரவு”, “ஸோம்னா” போன்றவற்றையெல்லாம் அறிவியல் சிறுகதைகள் என்று வகைப்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. 

அதே நேரத்தில் சுஜாதாவின் ‘கம்யூட்டரே ஒரு கதை சொல்லு’, ‘காலமானவர்’, ‘வாட்டர் கார் விவகாரம்’ போன்ற கதைகள் எழுதப்பட்டுக் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்ட இன்றைய தேதியில் அவற்றில் காணப்பட்ட கற்பனைகள் பலவும் நிஜமாகி உலவுவதைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது. ஒருவேளை இவை இலக்கியவாதிகளைவிட அறிவியலாளர்களுக்கு இன்னும் சுவாரஸ்யமளிப்பதாக இருக்கக்கூடும். அந்த மெல்லிய ஆச்சரியத்தை மீறி இந்தக் கதைகள் வேறு எதையும் வாசகனுக்கு கடத்துவதில்லை. இவை தொழில் நுட்பத்தைப் பற்றிப் பேசும் அளவுக்கு அறிவியலைப் பேசுவதில்லை. தொழில் நுட்பம் என்பது அறிவியலின் பயன்மதிப்பு மட்டுமே. அவற்றை முன்வைத்து எழுதப்படும் கதைகள், அறிவியலின் வழியே அப்படைப்பு வெளிப்படுத்த விரும்பும் ஒட்டுமொத்த பார்வையைத் தரத் தவறிவிடுகின்றன. அவ்வகையில் இவை வெகுஜன கதைகளாகவும், வெற்று கேளிக்கையாகவும் நின்றுவிடுகின்றன. அதற்கு மேல் இவற்றுக்கு எந்தவித இலக்கிய மதிப்பீடும் இல்லாமல் போய்விடுகின்றது. 

எழுத்தாளர் மாலன் எழுதிய கதை ஒன்று இருக்கிறது – வித்வான். எண்பதுகளின் மத்தியில் எழுதப்பட்ட கதை.  இன்றைய அமேசானின் ‘அலெக்ஸா’தான் வித்வானில் வரும் ‘யக்ஷினி’. சொன்னதைக் கேட்கும். சொடுக்கிவிட்டதைச் செய்யும். அன்று வெறும் கற்பனை. இன்று முழு நிஜம். தான் வாழ்நாள் முழுவதும் தேடிக் கற்ற வித்தையை, ஒரு கருவி சர்வசாதாரணமாகச் செய்து முடிக்கும்போது அந்த வயலின் வித்துவானுக்கு எழும் மன அவசம் முக்கியமான ஒன்று. ஆனால் கதை அங்கே நிலைகொள்ளாமல், அந்தப் பிரச்சனையை ஆழமாகப் பேசாமல் போய்விடுவது இதன் குறை. மனிதன் சொல்வதை மட்டுமே அக்கருவியால் செய்ய முடியும். தானாக யோசிக்கத் தெரியாது என்பது போல கதை முடியும். உண்மை அதற்கும் ஒருபடி மேலேபோய் நிற்கிறது. இன்று தாமாகவே யோசித்துச் செயல்படும் கணினிகள் வந்துவிட்டன. புரோகிராம் செய்யப்பட்ட(மனிதன் உள்ளீடு செய்த) கணினியை, தானே சிந்திக்கும் செயற்கை நுண்ணறிவூட்டப்பட்ட கணினி சர்வசாதரணமாக போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் இக்கதையின் முடிவு எந்த வலுவும் இல்லாமல் தெரிகிறது. ஆனால் அந்த வித்வானின் மனப்பதற்றம் இன்றைக்கும் உண்மையான ஒன்று. 

தமிழ்மகனின் ‘அமரர் சுஜாதா’ தொகுப்பிலுள்ள கதைகள் சுஜாதாவின் அறிவியல் கதைகளை முன்மாதிரியாகக்கொண்டு எழுதப்பட்டவையாகவே உள்ளன. இங்கு அறிவியல் புனைவுகள் எழுதுபவர்களுக்கு மண் சார்ந்த நம்பிக்கைகள், புராணம், இதிகாசம், சோதிடம், வானியல் போன்றவை உறுதுணையாகத் தளம் அமைத்துத் தருகின்றன. ஆனாலும், சுத்தமான அறிவியல் புனைவுகளுக்குக் கற்பனையைத் தாண்டி வலுவான அறிவியல் கருதுகோள் அடிப்படைத் தேவையாக இருக்கிறது. அங்கிருந்தே அறிவியல் புனைவு எழுந்துவர வேண்டியிருக்கிறது. அப்படி இல்லாமல் மேற்கண்ட உறுதுணைகளை ‘உத்திகளாக’ மட்டும் கொள்ளும் கதைகள் கேளிக்கையாக மட்டுமே நின்றுபோகின்றன. இவ்வகையில் இத்தொகுப்பில் உள்ள ‘துவிஜன்’, ‘வீடு’ போன்றவற்றை அறிவியல் சிறுகதைகளாக மதிப்பிட முடிவதில்லை. ‘மகாபெரியவர்’ என்ற கதை ஒரு துப்பறியும் கதைக்கான சுவாரஷ்யத்தைக் கொண்டிருந்தாலும் அதற்கு மேல் தன்னை நிறுவிக்கொள்ளத் தவறிவிடுகிறது. விஞ்ஞானத்துடன் சமகால அரசியல் போக்கின் எதிர்காலத்தை யூகித்துப் புனையப்பட்ட கதையான ‘துமரியா’ நல்லதொரு முயற்சி. 

இதே போன்று அரசியலின் எதிர்காலத்தை முன்வைத்து 1995 இல் எம்.டி.முத்துக்குமார சுவாமி ‘ஒரு துண்டு வானம்’ என்ற சிறுகதை எழுதியிருக்கிறார். இக்கதையில் அரசுக்கு எதிராகச் சிந்தித்ததன் காரணமாகச் சிறைப்பட்டிருக்கும் ஒருவனுக்கு துணையாக காணக்கிடைப்பதெல்லாம்  ஒரு துண்டு வானமும் அதன் வழியே தெரியும் கொஞ்சம் நட்சத்திரங்களும் மட்டுமே. இதையும் ஒரு வருங்காலத்தின் இருண்ட நிலையை விவரிக்கும் ஒரு டிஸ்டோப்பிய கதை என்று வகைப்படுத்தலாமே தவிர அறிவியல் புனைவென்று கூறவியலாது. ப்ரான்ஸைச் சேர்ந்த ஃப்ராங்க் பாவ்லாஃப் எழுதிய ‘பழுப்பு நிறக் காலை’ என்னும் சிறுகதை பழுப்பு நிறச் சட்டை அணியும் நாஸி படையினரைப் பற்றி எழுதப்பட்ட ஒரு டிஸ்டோப்பிய கதையேயாகும். இதை தாம் மொழிபெயர்த்துத் தொகுத்த அறிவியல் கதைகள் தொகுப்பில் (காலமே வெளி – தமிழினி வெளியீடு) ஒரு கதையாக கால சுப்ரமணியம் தேர்வு செய்திருக்கிறார். 

ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் பால் மாறும் அறிவியலை முன்வைத்து அ.முத்துலிங்கம் எழுதிய ‘எலி மூஞ்சி’, கருந்துளை-கனவு-மனப்பிளவு ஆகியவற்றை முன்வைத்து குமார நந்தன் எழுதியிருக்கும் ‘தகிக்கும் வெயில்’ போன்றவை குறிப்பிடத்தக்க முயற்சிகள். 

தமிழ் இலக்கியம் அறிவியல், கணிதம், வரலாறு, பொருளியல், அரசியல் போன்ற இன்னபிற அறிவுத்தளங்களோடு இணைந்து செயல்படுவதென்பது இங்கு வெகு அரிதாகவே நடைபெறும் நிகழ்வாக உள்ளது. இத்தனைக்கும் இன்று இங்கு எழுதிக்கொண்டிருக்கும் மூத்த-இளைய படைப்பாளிகள் பலரும் அறிவியலையோ, பொறியியலையோ பாடமாகப் பயின்றவர்களாவே இருக்கின்றார்கள். அவை சார்ந்த பணிகளில் இருந்தாலும்கூட அவை சார்ந்த நெருக்கடியிலிருந்து விலகிவரும் வாய்ப்பாகவே அவர்களுக்கு இலக்கியமிருக்கிறது. நேரடிப் புனைவாக இல்லாதபோதும், உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் சீர்மையை முன்வைத்து க.அரவிந்த் எழுதிய ஆவணப்புனைவு வகைமையைச் சார்ந்த “சீர்மை” (தமிழினி வெளியீடு) குறு நாவல் ஒரு முக்கியமான படைப்பாகும். அதே போல யாவரும் பதிப்பகம் மூலம் வெளியாகியிருக்கும் “நுண்ணுயிரிகள்”, “எஞ்சின்கள்” (ஹாலாஸ்யன்), “ரோபோஜாலம்” (வா.மணிகண்டன்) போன்ற அறிவியல் தொடர்பான அறிமுக நூல்கள் அபுனைவு வகைமையில் முக்கியமானவை. அபுனைவுகளை அலசுவது இக்கட்டுரையின் நோக்கத்துக்கு வெளியே உள்ளது. இருப்பினும், அவ்வகையிலும் அறிவியல் குறித்த படைப்புகள் தமிழில் சொற்பம் என்ற அளவிலேயே உள்ளன என்பதை இங்கே குறிப்பிட வேண்டியிருக்கிறது. தமிழ் அறிவியல் படைப்புகளின் இன்றைய நிலைக்கு இக்கட்டுரையில் ஆராயப்பட்ட தமிழ் இலக்கியச் செயல்பாடுகள், அதன் போக்குகள் போன்றவை சல்லிவேர்க் காரணங்கள் மட்டுமே. ஆணிவேரான காரணம் நம் கல்வியமைப்பில் உள்ளது. அறிவியலும் தொழில்நுட்பமும் இங்கே பணம் சம்பாதிக்கப் பயன்படும் கருவி என்பதைத் தாண்டி அறிதலின் தீ மூளவேண்டியிருக்கிறது. அதன்வழி மட்டுமே இங்கு உண்மையான மாற்றத்தை உணர முடியும்.


-கார்த்திக் பாலசுப்பிரமணியன்

2 COMMENTS

  1. அற்புதமான அலசல் இந்தக் கட்டுரை. அறியாதிருந்த பல செய்திகளை அறிந்தேன். சிறப்பான பதிவு. மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  2. நல்ல பதிவு. நளினி சாஸ்திரி, ஆர்னிகா நாசர் போன்றோரின் கதைகள் உள்ளன. விஞ்ஞான கதைகள் தொகுப்பாக உள்ளதா எனத் தெரியவில்லை..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.