தன்மீட்சி- வாசிப்பனுபவம்

“உங்களைச் சுற்றியிருக்கும் சமூகத்தில், உலகத்தில் நீங்கள் செய்யக் கூடுவதாக ஒரு விஷயத்தைக் கண்டடைந்தால் போதும். இந்தச் சோர்வை வென்று விடலாம். அது என்ன என்பதை கண்டடையுங்கள். அதுவே தன்னறம். அதைச் செய்யும்போதே நீங்கள் விடுதலை பெறுவீர்கள்”.

இவ்வரிகளுடன் ஆரம்பிக்கிறது இச்சிறு நூல்.

முதன்முறையாக  தன்மீட்சியைக் கையிலெடுத்து வாசித்த நாளை நினைத்துப் பார்க்கிறேன். மிகுந்த உணர்வு வயப்பட்ட நாளது. அம்மாதிரியான தினங்களில் கண்ணீர் வழிந்து கொண்டேயிருக்கும். துளிக்கூட சோகமில்லாத, காரணங்கள் ஏதுமற்ற நிற்காத கண்ணீர்.

ஒரு சொல் மலர்தல் என்ற தலைப்பில் தன்னறம் நூல்வெளி குக்கூ காட்டுப் பள்ளியின் முன்னுரையை வாசித்தபோதே மனம் ததும்ப ஆரம்பித்து விட்டது.

பூமிதான இயக்கத்தில் நிலங்களைக் கேட்டுப் பெறுவதற்கான நடைப்பயணம், உண்ணா நோன்பாக உருவெடுக்கிறது. கிருக்ஷ்ணம்மாள் ஜகனாதனின் மகன் குழந்தை பூமி, பசியால் அழுகிறான். வினோபா தர்காவுக்கு அருகிலிருக்கும் ஓட்டு வீடுகளில் கையேந்த, சிறிது நீருற்றி வைத்த பழைய சோறு கிடைக்கிறது. பிழிந்து வெறும் உப்பிட்டு குழந்தை பூமிக்குத் தர, பூமி உணவை விழுங்க விழுங்க, வினோபா அழுகையை அடக்க முடியாமல் கண்ணீர் சிந்துவதாகக் காட்சி விரிகிறது. அதற்கு மேல் என்னால் வாசிக்க முடியவில்லை.

அடுத்து, பாதையை உருவாக்கும் ஓயாத கால்கள்என்ற வரி அப்படியே மனதில் அப்பிக் கொண்டது. எத்தனை பேர் சேர்ந்து உருவாக்கிய பாதையிது!?. டெப்பி ஜி அல்ஸ்டெஸ்ட்டின் ஜிபு குறியீடுகள் நூலெங்கும் விரவிக் கிடக்கின்றன. மனவெளியில் நேர்மறை எண்ணங்களை உள்ளெழுப்பும் குணப்படுத்திகளாக இச்சித்திரக் குறியீடுகள் பயன்படுத்தப் படுகிறது.

“செயலின்மையின் இனிய மது” அத்தியாயம் சின்னஞ்சிறு சுத்தியல் கொண்டு ஓங்கித் தலையில் ஒரு தட்டு தட்டியதைப் போலிருந்தது. குரு, ஆசான் எனப்படுபவர் நம்மில் நிறைந்திருக்கும் ஈகோவை ஊதித் தள்ளி தவிடுபொடியாக்கி நம்மை அரிச்சுவடியிலிருந்து மறுபடி ஆரம்பிக்க வைப்பவர். ஒவ்வொரு முறை ஆசான் நம்மை அடிக்கும்போதும் கொள்ளைக் கோபம் கொப்பளிக்கும். காரணம் அவர் நம்மிடம் சுட்டுவதெல்லாம் நம்மைப்பற்றிய உண்மைகள், நமது அற்பத்தனங்கள், கீழ்மைகள், நாம் மூடி மறைத்து வைத்திருக்கும் நிணங்கள். ஒரு கட்டத்திற்கு மேல்தான்வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன் போல்ஆசானை மனம் நேசிக்க ஆரம்பிக்கிறது.

என் மாணவன் ஒருவன்தேர்வு செய்யப்பட்ட சிலர்” அத்தியாயம் வாசித்து விட்டு ( முதல்முறை ஜெயமோகனை வாசிக்கிறான். நான் எப்புத்தகம் கொடுப்பினும் கன்னத்தில் போட்டுக்கொண்டு வாங்கிப் போய் வாசிப்பவன்) சற்றே எரிச்சலோடு கொஞ்சம் திமிராத் தெரியுதே என்றான். கொஞ்சம்தானா!? என சிரித்தேன்.

இதை அருள்வதில் உனக்கெதும் தடையுள்ளதோ என பராசக்தியை அதட்டினானே ஒருவன் அவனுக்கிருந்தது திமிர்தானென்றால் இதுவும் திமிர்தான் என்றேன். “காரணம் ஒரு சாதனையாளன், ஒரு தனித்திறன் கொண்டவன், நம் சராசரிகளை அச்சுறுத்துகிறான். அவர்களை சிறுமை கொள்ளச் செய்கிறான். அவனை அவர்கள் தங்களைப் போன்றவனல்ல என்று உணர்கிறார்கள். அதனாலேயே அவனை ஏளனம் செய்கிறார்கள். அவமதிக்கிறார்கள். தங்கள் ஒட்டுமொத்த அழுத்தத்தையும் அவன்மேல் செலுத்துகிறார்கள். அதற்கும் மேலாக அவன் சாதனை எஞ்சும்போது அது ஒன்றும் பெரிய விஷயமல்ல, நாங்களும் அவனும் சமம்தான், நாங்களும்தான் பங்களிப்பாற்றுகிறோம், எல்லாருக்கும் பங்களிப்புண்டு என்று பேசுகிறார்கள்.”

சரி, இப் புத்தகம் யாருக்கானது? – ஆற்றலும் தீராத் தேடலும் கொண்ட இன்றைய இளைஞர்களும் யுவதிகளும் இலக்கற்றுத் திரிவது வேதனை. இப்புத்தகம் அவர்களுக்கான தன்னறத்தைக் கண்டடைய முழுமையான வழிகாட்டியாகிறது.

சராசரி“, “நான்கு வேடங்கள்” மற்றும் ஒரு மரம் மூன்று உயிர்கள் இவையெல்லாம் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டிய அத்தியாயங்கள்.

பொதுவாக புத்தக விமர்சகர்கள் அதன் நிறைகுறைகளை அலசி ஆராய்ந்து எழுதுவார்கள். நான் விமர்சகரில்லை, சாமான்ய வாசகி. இப்புத்தகம் வாசகனிடம் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை மட்டுமே கூற விழையும் சாமான்ய வாசகி.

இப்புத்தகத்தை வாசித்த இவ்வொரு வார காலத்தில் என் பேச்சு குறைந்து விட்டதைக் கவனிக்கிறேன். வாயிலிருந்து ஒரு வார்த்தை அதிகமாக வருவதில்லை. எந்த வெட்டி வாதத்திற்கும் வம்புகளுக்கும் எதிர்வினை என்னிடம் இருப்பதில்லை. இவ்வெழுத்து என்னை ஆற்றுப்படுத்துகிறது. அமைதியாக்குகிறது. கூர்ந்து கவனிக்க வைக்கிறது. எனக்கு அளிக்கப்பட்ட கொடைகள் என்னென்னவென்று என் கன்னத்தில் அறைந்து எடுத்துச் சொல்கிறது. எதற்கும் எதனுடனும் பிணக்கில்லை.

இவ்வொரு வாரகாலத்தில் நான் எங்கு சென்றாலும் என்னுடன் வந்துகொண்டே இருந்தது இப்புத்தகம். நீண்ட நெடும் இரயில் பயணத்தில் என்னுடன் சப்தமற்று வெளி உலக சஞ்சாரங்களற்று என்னைத் தன்போக்கில் இழுத்து அமிழ்த்திவிட்டிருந்தது. இரவின் ஆழத்தில் உறங்குவதற்கு நேரமாகி விட்டதெனத் தொலைபேசி நினைவூட்டிய பின்னும் இன்னுமோர் ஐந்து பக்கம் என என்னை அழைத்தது. என் கைப்பைக்குள் அடங்கி ஓய்வு நேரங்களையெல்லாம் கவர்ந்து கொண்டு ஆக்ரமித்திருந்தது.

நாவின் ருசி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் அமைவது போலவே எழுத்தின் ருசியும். எந்த எழுத்து தன்னைத் தன்நிலையிலிருந்து மேம்படுத்திக் கொண்டு செல்லும் என்பதைத் துல்லியமாகக் கண்டு கொள்வதே நாம் கண்டடைய வேண்டிய தலையாயப் பணி. வாசிக்கக் கொட்டிக் கிடக்கிறது. ஆனால் காலம் மிகச் சிறிதாகவே இருக்கிறது. அக்காலம் முழுமையும் வாசித்தே கடக்க வேண்டும்.

 

நூல்: தன்மீட்சி(கட்டுரைத் தொகுப்பு)

ஆசிரியர்: ஜெயமோகன்

வெளியீடு: தன்னறம். குக்கூ காட்டுப்பள்ளி.

விலை:  200 ரூ


தேன்மொழி சதாசிவம்

Previous articleநாபிக் கமலம்
Next articleகபிலன் ஓவியங்கள்
Avatar
கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளம். www.kanali.in
Subscribe
Notify of
guest
2 Comments
Most Voted
Newest Oldest
Inline Feedbacks
View all comments