நீண்டகாலமாக விமெர்கற்றில் உள்ள தனது நாட்டுப்புறத்து வீட்டில் வாழும் எண்பத்தாறு வயதான பிரபல ஓவியர் லூசியோ பிறெடொன்ஸானி ஓர் காலையில் எழுந்து தனக்கு ஒவ்வொரு நாளும் வருகின்ற தினப் பத்திரிகையைத் திறந்தபோது பிரமித்துப் போய்விட்டார். காரணம் மூன்றாம் பக்கத்தின் கீழ் வலதுபக்கத்தில் கண்ட பின்வரும் தலைப்பால் தான்.
இத்தாலியக் கலையுலகம் கவலையில். ஓவியர் பிறெடொன்ஸானி காலமாகிவிட்டார். தலைப்பின் கீழ் பின்வரும் குறிப்புகள் இருந்தன.
21 பெப்ரவரி, விமெர்கற் மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத ஓர் குறுகியகால நோயால் ஓவியர் பிறெடொன்ஸானி இரண்டு தினங்களின் முன்னே காலமானார். தனது மரணகிரியைகளுக்குப் பின்னரேயே தனது மரணம் அறிவிக்கப்பட வேண்டும் எனத் தனது விருப்பத்தைக் காலமானவர் வெளிப்படுத்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஒரு பந்தியிலே காலமானவரின் மகிமை, பெருமை இவைகளை புகழ்ந்துரைக்கும் கட்டுரையொன்று கலை விமர்சகர் ஸ்தெபானியின் பெயரில் வெளிவந்திருந்தது. இதேவேளையில் இருபது வருடங்களுக்கு முந்திய படம் ஒன்றும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
பிரமித்துப் போய், தனது விழிகளையும் நம்பாமல் நோயாளியை போல் மிகவும் மனவேதனையுடன் தனது அவதியையும் மீறி புகழாரக் கட்டுரையில் விழிகளைப் போடுகின்றார். புகழார வரிகளுக்கு மத்தியிலே மறுக்கப்பட முடியாத ராஜ தந்திரத்துடன் கூடிய சில விஷ வரிகளும் சேர்க்கப்பட்டிருந்தன.
மூச்சுத் திணறலில் இருந்து தப்பிய பிறெடொன்ஸானி ‘’மதில்ட்! மதில்ட்! எனத் தனது மனைவியை அழைக்கிறார்.
பக்கத்து அறையிலிருந்த அவரது மனைவி ” என்ன நடந்துவிட்டது?” எனக் கேட்கிறாள்.
” விரைவாக வா! மதில்ட்! விரைவாக வா!’’ எனக் கெஞ்சி அழைக்கின்றார்.
” ஒரு கணம் பொறுத்திரு. நான் உடைகளுக்கு அழுத்தம் போட்டுக் கொண்டிருக்கிறேன்.”
” உடனடியாக வாவென்று நான் உனக்குச் சொல்கின்றேன்.”
அவரது குரல் மிகவும் கலக்கமாக இருந்ததால் அயன்பொக்ஸைக் கீழே வைத்துவிட்டு மதில்ட் ஓடி வருகின்றாள்.
” பிடி! இதனை வாசி! ஓவியர் பெருமூச்சோடு பத்திரிகையை அவளிடம் நீட்டு கின்றார்.
பத்திரிகையை அவள் பெறுகின்றாள். முகம் வெளிறுகின்றது பெண்களுக்கே உரிய அற்புதமான ஞாயமின்மையோடு தனது நம்பிக்கையீனத்தை வெளிக் கொட்டுகின்றாள்.
” ஓ! எனது லூசியோ! எனது பரிதாபத்துக்குரிய லூசியோ! எனது புதையலே! எனும்போது கண்ணீர் கொட்டுகின்றது.
இந்தக் காட்சி ஓவியருக்கு சினத்தையூட்டுகின்றது.
”மதில்ட், உனக்கு என்ன விசரா? நான் உயிரோடு இருப்பது தெரியவில்லையா? இது ஓர் தவறு என்று, நினைத்துப் பார்க்க முடியாத தவறு என்று உனக்கு விளங்கவில்லையா?
உடனடியாகவே மதில்ட் தனது அழுகையே நிறுத்திவிட்டு கணவனை பார்க்கின்றாள். அவரது முகம் சாந்தியடைகின்றது. சில கணங்களின் முன்னர் தன்னை விதவையாக உணர்ந்துகொண்ட அவளும் நிலைமையின் ஹாஸ்யப் போக்கால் ஓர் மகிழ்ச்சி விபத்துக்குள்ளாகின்றாள்.
” ஓ! எனது கடவுளே! இது எவ்வளவு முசுப்பாத்தியானது.ஓ! ஓ! எத்தகைய கதை! என்னை மன்னித்துவிடு. லூசியோ, உனக்குத் தெரியுமா கலையுலகின் கவலையை… நீயோ இங்கு விறைத்தும் மென் சிவப்பாக்கியும்..” கீச்சுக் குரலில் கெக்கணம் கட்டி சிரித்தாள்.
” உனது நடிப்பை நிறுத்து நடந்தது என்னவென்று உனக்கு விளங்குகின்றதா? எது மோசமானது. பத்திரிகைப் பணிப்பாளருக்கு நான் யார் என்பதை கட்டாயம் காட்டுவேன். இந்த முசுப்பாத்திகாக அவர் நிச்சயம் நிறைய கட்ட வேண்டி வரும்.
பிறெடொன்ஸானி விரைந்து நகருக்குச் செல்கின்றார். உடனடியாகவே பத்திரிகை அலுவலகத்தை நோக்கி விரைகின்றார். மிகவும் நாகரீகமாக பணிப்பாளர் அவரை வரவேற்கின்றார்.
” குருவானவரே! உட்காருங்கள் என தயவுசெய்து உங்களை நான் கேட்கிறேன். அதில் உட்கார வேண்டாம். இது வசதியானது. இதில் உட்காருங்கள். ஒரு சிகரெட்? இந்த லைட்டர்கள் ஒருபோதுமே ஒழுங்காக வேலை செய்வதில்லை. இது சினத்தையூட்டுவது. இதோ! சாம்பல் தட்டு. இப்போது நீங்கள் சொல்வதே நான் கேட்பேன். எந்த நல்காற்று உங்களை இங்கே அழைத்து வந்தது?
தனது பத்திரிகை பிரசுரித்ததையிட்டு நடிக்கிறாரா? அல்லது நக்கலடிக்கிறாரா? பிறெடொன்ஸானி இளைத்துப் போய்விட்டார்.
” உங்களது இன்றைய பத்திரிகையிலே… மூன்றாவது பக்கத்திலே… எனது மரணத்தை அறிவிக்கும் செய்தியொன்று…
” உங்களது மரணத்தை அறிவிக்கும் செய்தியா?”
மேசையிலே மடிக்கப்பட்டு கிடந்த பத்திரிகையொன்றை எடுத்துப் பணிப்பாளர் விரிக்கின்றார். பார்க்கின்றார். விளங்கிக் கொள்கின்றார்.( அல்லது விளங்கிக் கொண்டதை போல காட்டுகின்றார்.) ஓர் சங்கட கணத்தை வாழ்ந்தது போல ஓ! என்கின்றார். ஓர் கணத்தின் முறிவில் தன்னை நன்கு சுதாரித்துக் கொண்டவரைப்போல இருமுகின்றார்.
”உண்மையிலேயே ஓர் சிறு தவறு நடந்துவிட்டது. ஓர் மெல்லிய விபரீதம் நடந்துவிட்டது…”
பிறெடொன்ஸானி தனது பொறுமையை இழக்கின்றார்.
” விபரீதமா? நீங்கள் என்னைக் கொன்று விட்டீர்கள். நீங்கள் செய்தது இதுதான். இது அரக்கத்தனமானது..” என்று கத்துகின்றார்.
” ஆம், ஆம்” சாந்தமாக சொல்கின்றார் பணிப்பாளர். ” நான் என்ன சொல்கின்றேன் எனில்..ஹும்… ம்… ஓர் செய்தி பற்றிய பார்வையில்… ஹும்… ஹும்… எங்களது நோக்கத்தைச் சற்றே கடந்துவிட்டது. இன்னொரு வகையிலே பார்த்தால் எங்களது பத்திரிகை உங்களது கலைக்குச் செய்த காணிக்கையின் உண்மையான பெருமானத்திற்கு மதிப்பளித்திருப்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.”
” என்ன காணிக்கை! நீங்கள் என்னை அழித்து விட்டீர்கள்.
” ஹும்…ஓர் மெல்லிய தவறு நடந்து விட்டது என்பதை நான்…
” அது எப்படியாம். நானோ உயிரோடு இருக்கிறேன். நீங்களோ நான் இறந்து விட்டேன் என எழுதி இருக்கின்றீர்கள். இதற்கு மெல்லிய தவறு என நீங்கள் பெயரிடுகின்றீர்களா? மிகவும் சாதாரணமாகப் பைத்தியமாகுவதற்கு இதைவிட வேறு எதுவும் தேவையில்லையல்லவா? இந்தக் கட்டுரை வந்த இடத்தில் ஓர் திருத்தம் முறைப்படி போடப்படவேண்டும் என்பதே நான் வலியுறுத்துகின்றேன். இதேவேளையில் மான நஷ்டம் கேட்டு வழக்கு தொடரும் உரிமையையும் நான் எடுத்து கொள்கின்றேன்.”
” மான நஷ்டமா? வேண்டாம் எனது திருவாளரே!
” குருவானவர்” என்று நிலையிலிருந்து உடனடியாகவே ஓர் சாதாரண நிலைக்கு அவர் போய்விட்டார்…
” உங்களை வந்து சேர்ந்திருக்கும் அசாதரணமான அதிர்ஷ்டத்தை பற்றி ஒரு தடவை யோசித்து பார்க்க முடியுமா? எந்த ஓவியரும் இப்படியொரு சந்தர்ப்பத்தை கண்டால் துள்ளிக்குதித்து விடுவார்…”
” என்ன! அதிர்ஷ்டமா?”
” ஆம், அதிர்ஷ்டம்! எப்படி! ஓர் கலைஞன் இறக்கும்போது அவனது படைப்புகளின் விலை குறிப்பிடத்தக்க விதத்தில் உயர்ந்து விடுகின்றது. நீங்கள் அதைத் தேட வில்லை. நிச்சயமாக அது எங்களுக்கு தெரியும். ஆனால் விலை மதிக்க முடியாத சேவையொன்று நாங்கள் உங்களுக்கு செய்துள்ளோம் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியும்.”
” இதற்காக நான் இறந்து போக வேண்டுமா? காணாமல் போக வேண்டுமா? ஆகியவை போய் விடுவதா?”
நிச்சயமாக. இந்த உணர்வு மயமான சந்தர்ப்பத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டுமா? இதனை நீங்கள் இழக்கத் தயார் இல்லையா? கொஞ்சம் சிந்தியுங்கள். மரணத்திற்குப் பின்னான ஓர் ஓவியக் கண்காட்சி. இதனை அட்டகாசமாகச் செய்தல் எங்களது பொறுப்பு. எனது குருவானவரே! பல லட்சங்களை எமக்கு அள்ளித்தரும் ஓர் விஷயம் இது.”
” நீங்கள் இவைகளைச் செய்யும் போது நான் என்னவாகுவேன்? வெளியுலகத்தில் இருந்து நான் காணாமல் போக வேண்டும் அல்லவா?”
” சொல்லுங்கள், அசந்தர்ப்பவசத்தால் சகோதரர் யாரும் உங்களுக்கு உள்ளனரா?”
” ஆம். இது எதற்கு? அவர் தென்னாபிரிக்காவில் வாழ்கின்றார்.”
” அற்புதம். அவர் உங்களை ஒத்திருரக்கின்றாரா?
” ஆம். கிட்டத்தட்ட. ஆனால் அவருக்கு தாடியுள்ளது.”
” அற்புதம். உங்களது தாடியையும் வளர விடுங்கள். உங்களது சகோதரர் நீங்களே எனச் சொல்லுங்கள். தபால் ஆபீஸ்க்கு ஒரு கடிதம் அனுப்புவது போல எல்லாம் நடக்கும். என் மீது நம்பிக்கை வையுங்கள். விஷயங்கள் எந்த வழியில் போகின்றனவோ அந்த வழியில் போக விடவேண்டும். என்னை விளங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் சொல்வது போல ஒரு திருத்தம் போட்டால் அதனால் என்ன பயன் கிடைக்கப் போகின்றது. நான் இப்படி தனிப்பட்ட ரீதியாக சொல்வதற்கு என்னை நீங்கள் மன்னிக்கவும். திருத்தம் போட்டால்
கேலிக்குரியவராகவே பலர் முன்னேயும் நீங்கள் தோற்றம் அளிப்பீர்கள். மறு பிறப்புகள் ஒருபோதுமே இரக்கத்துக்குரியனவல்ல என்பதை மறுத்துச் சொல்வதில் எந்த அர்த்தமுமே இல்லை. கலையுலகில் விஷயங்கள் எப்படி நடக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும்தானே. உங்கள் மீதான பல புகழாரங்களின் பின்னர் உங்களது மறுபிறப்பை அறிவித்தால் அது உங்கள் மீதான மோசமான படம் ஒன்றையே காட்டும். அத்தோடு உங்கள் மீது பலருக்கு சந்தேகத்தையும் ஏற்படுத்தும்.”
அவருக்கு இல்லை என்று சொல்லத் தெரியாது போய்விட்டது. தனது நாட்டுப்புறத்து வீட்டிற்குச் சென்று ஒரு அறைக்குள் பதுங்கிக் கொள்கின்றார். தனது தாடியை வளர விடுகின்றார். அவரது மனைவியோ கவலையில் மூழ்குகின்றாள். நண்பர்கள் கவலை தெரிவிக்க அவளிடம் வருகின்றனர். குறிப்பாக ஒஸ்கார் பிறடெலி அவர்கூட ஓர் ஓவியர். எப்போதுமே பிறெடொன்ஸானியின் நிழலாக இருந்தவர். பின்னர் ஓவிய ரசிகர்கள் வரத் தொடங்குகின்றனர். அதன்பின் வணிகர்கள், ஓவியம் சேகரிப்போர், வியாபாரத்துக்கான நல்ல வாய்ப்பு கிடைத்துவிட்டது என்பதே முகர்ந்து கொண்டோர் முன்னர் மிகவும் சிரமத்துடன் 40 ஆயிரம் 50 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட ஓவியங்கள் இப்போதோ பிரச்சனை இல்லாமல் 200 ஆயிரத்தை தொட்டன. இதேவேளையில் பிறெடொன்ஸானி தனது பதுங்கு குழியிலிருந்து புதிய படங்களை கீறி அவற்றிற்கு பழைய திகதிகளை போட்டுக்கொண்டிருந்தார்.
ஒரு மாதத்தின் பின்னர் அவரது தாடி உண்மையிலேயே நீண்டு வளர்ந்து விட்டது.
பின்னர் தென்னாபிரிக்காவில் உள்ள தனது சகோதரர் வந்துவிட்டார் என்று மற்றவர்களை நம்ப வைக்க தனது பதுங்கு குழியை விட்டு வெளியேறுகிறார். கண்ணாடி போட்டிருந்தார். தனது உச்சரிப்பையும் வெயில் தேச உச்சரிப்பு போல மாற்றிக்கொண்டார். ” அவரைப்போலவே இவரும் இருக்கின்றார்” எனப்பலரும் வியந்து கொண்டனர்.
தனது மறைவு வாழ்க்கையின் பின்னர், ஓர் ஆவல் உந்தித் தள்ளியதால் மேற்கொண்ட உலா ஒன்றின்போது மயானத்தை நோக்கிச் செல்கின்றார். தனது குடும்பத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலவறைக்குள், ஓர் பளிங்கு கற்பலகையில் சிற்பி ஒருவர் தனது பெயரையும் தான் பிறந்த, இறந்த அகதிகளையும் செதுக்கி கொண்டிருப்பதை காண்கின்றார்.
காலமானவரின் சகோதரர் என தன்னை சிற்பிக்கு அறிமுகம் செய்து கொள்கின்றார். பின்னர் வெண்கலக் கதவைத்திறந்து தனது பெற்றோர்களினது சவப்பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோவிற் கீழறைக்குச் செல்கின்றார். ஆ! எவ்வளவு பெரிய குடும்பம்! ஒரே ஒரு பெட்டி மட்டும் புத்தம் புதியதாகவும் அழகியதாகவும் இருந்தது. அதன் மீதுள்ள பித்தளை தகட்டில் ” லூசியோ பிறெடொன்ஸானி’’ என எழுதப்பட்டிருப்பதை வாசிக்கின்றார். பெட்டியின் மூடி ஆணிகளால் இறுக்கப்பட்டிருந்தது. இனம்புரியாத ஒரு பயத்துடன் பெட்டியின் மூலையில் தட்டிப் பார்க்கின்றார். சந்தோஷம் தருவது போல சவப்பெட்டியில் இருந்து வெறுமையான சத்தம் ஒன்று வந்தது.
ஆச்சரியம், ஆனால் மெல்ல மெல்லமாக விமர்சகர் ஒஸ்கார் பிறடெலியின் வரவுகள் அதிகரிக்கத் தொடங்கின. மகிழ்ச்சி கொண்டவளாகவும், புத்திளமை கொண்டவளாகவும் தோன்றினாள். சந்தோஷமும் ரசனையும் கலந்த உணர்வோடு தனது உருமாற்றத்தை அவதானித்தார். ஓர் மாலை நேரத்தில் பல ஆண்டுகளாக வராத விருப்பம் தனக்கு வந்ததைப் போலவும், தான் அவளை விரும்புவதாகவும் ஓர் விழிப்பு அவருக்குள் வந்தது. தனது விதவையை அவர் விரும்பினார்.
ஆனால் பிறடெலியின் ஒழுங்கான வரவுகள் நேர ஒழுங்குகளையும் கடக்காதிருந்தன எனச் சொல்ல முடியுமா? இதனை பிறெடொன்ஸானி மதில்ட்க்குச் சுட்டிக்காட்டியபோது அவள் இப்படி சீற்றமடைந்து கொண்டாள்: உனக்கு என்ன நடந்துவிட்டது? ஒஸ்கார் பாவம்! உனது உண்மையான ஒரேயொரு நண்பன். உனக்காக இரங்கும் ஒரே ஒரு நண்பன். எனது தனிமையை நினைத்து ஆறுதல் சொல்ல வந்து போகும் அவனை நீ சந்தேகிக்கின்றாய். உனக்கு வெட்கமாக இல்லையா?”
இதேவேளையில் மரணத்துக்குப் பிந்திய ஓவியக் கண்காட்சி ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு அது பெரிய வெற்றியைக் காண்கின்றது. முழுச் செலவையும் தள்ளி லாபமாகட்டும் ஐந்தரை மில்லியன் கிடைக்கின்றது. பின்னர் குறிப்பிடத்தக்க ஒரு வேகத்தில் பிறெடொன்ஸானியாவும் அவரது படைப்புகளும் மறையத் தொடங்குகின்றன. கலைச் சஞ்சிகைகளில் அவரைப்பற்றிய செய்திகளுக்கு சிறிய இடங்களே கிடைக்கின்றன. விரைவில் அவர் துண்டாகவே மறைந்து போய் விடுகின்றார்.
கவலை தரும் ஒரு வித பயத்தோடு லூசியோ பிறெடொன்ஸானி இல்லாமலேயே உலகம் முன்புபோல கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார். சூரியன் முன்புபோல உதித்தும் மறைந்து கொண்டுமிருந்தது. பணிப்பெண்கள் முன்புபோலவே காலையில் கம்பளங்களைத் தட்டி துடைத்துக்கொண்டிருந்தனர். ரயில்கள் புகையால் கறுத்துக்கொண்டிருந்தன. சனங்கள் சாப்பிட்டனர். சந்தோஷம் செய்தனர். பூங்காவின் இரும்பு வேலிக்கு முன்னால் நின்றபடி பையன்களும் பெட்டைகளும் இருட்டில் முத்தமிட்டுக் கொண்டிருந்தனர்.
ஒரு நாள் நாட்டுப்புற உலாவொன்றிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வரும்போது, முகப்பறையில் தனது இனிய நண்பர் ஒஸ்கார் பிறடெலியின் மழைக்கோட் தூக்கப்பட்டு கிடப்பதே அடையாளம் கண்டு கொள்கின்றார். வீடு அமைதியாகவும், ஓர் வினோதமான அந்தரங்கத்திலும், அழைப்பு கரம் நீட்டுவது போலவும் இருந்தது. அத்தோடு கீழ் குரலில் பேசும் சத்தமும், முணுமுணுப்புகளும், மிருதுவான பெருமூச்சுகளும் கேட்டன.
அவரது கால்கள் உடனடியாகவே வாசலை நோக்கி சென்றன. பின்னர் மிகவும் மெதுவாக வெளியேறி மயானத்தை நோக்கி நடக்கின்றார். அது ஓர் மழைக்கான இனிய மாலையாக இருந்தது.
தனது குடும்பத்துக்குரிய மயான கோவிலுக்கு வந்தவுடன், தன்னைச் சுற்றி ஒரு தடவை பார்க்கின்றார். வாழும் உயிர்கள் என்று எதுவுமில்லை. வெண்கல கதவை திறக்கின்றார்.
இரவு வந்ததும் அவசரப்படாமல் மிகவும் மெதுவாக ஓர் சின்னக் கத்தியின் உதவியுடன் புத்தம் புதிய சவப்பெட்டியை மூடியிருந்த ஆணிகளை கழட்டுகின்றார். அவரது சவப்பெட்டி. அதாவது லூசியோ பிறெடொன்ஸானி யின் சவப்பெட்டி.
மிகவும் அமைதியாக பெட்டியை திறக்கின்றார். இறந்தவர்களுக்கான அமர நித்திரைக்கு தோதாக எப்படி கிடந்தால் நல்லது என யோசித்து முதுகை நீட்டி அதற்குள் கிடந்து பார்க்கின்றார். தான் நினைத்ததை காட்டிலும், கிடந்த விதம் தோதானது என அவருக்கு படுகின்றது.
எந்தப் பதட்டமும் இல்லாமல் சவப்பெட்டியின் மூடியை தனக்கு மேல்கொண்டு வருகின்றார். அது மூடப்படுவதற்கு ஒரு சிறு வெளி மட்டுமே தெரியும்போது யாரும் தன்னை அழைக்கின்றார்களா என்பதை அறிய சில கணங்கள் தனது காதுகளை கூர்மையாக்குகின்றார். ஆனால் எவருமே அவரை அழைக்கவில்லை.
எனவே மூடிப்பெட்டியை முழுமையாக விழ விடுகின்றார்.
மூலம் :டினோ புஷாற்றி
பிரெஞ்சிலிருந்து தமிழில்: க.கலாமோகன்
[ads_hr hr_style=”hr-dots”]
குறிப்பு:
[tds_note]டினோ புஷாற்றி (DINO BUZZATI) இத்தாலிய எழுத்தாளர் (BELLUNO 1906- MILAN 1972) மிலானில் சட்டபடிப்புகளை முடித்தபின்னர் இலக்கியத்துறையில் தனது கவனத்தைத் திருப்புகின்றார். இளம்வயதிலேயே கவிதைகளை எழுதுகின்றார். இருபதுவயதில் CORRIERE deila sera வின் எதியோப்பிய நிருபராகவும் பின்னர் கடற்படைத்துறையில் யுத்த நிருபராகவும் கடமையாற்றுகின்றார். இவர் ஓர் ஓவியரும் கூட. நாடகங்கள் சிறுகதைகளை நிறைய எழுதிய இவரது சிறுகதையான LE DEFUNT PAR ERREUR, ‘தவறு‘ எனும் தலைப்பில் பிரெஞ்சு மொழிபெயர்ப்பிலிருந்து தமிழிற்கு வழங்கப்படுகிறது. தலைப்பு மொழிபெயர்ப்பாளருடையதே.[/tds_note]
[tds_note]
மொழிபெயர்ப்பாளர் க.கலாமோகன் குறித்து விக்கிபீடியாவில் வாசிக்க இங்கே சொடுக்கவும்[/tds_note]
சிறப்பான மொழிபெயர்ப்பு !
கதையை இலகுவாக உள்வாங்கி கொள்ள முடிந்தது.