உலராதிருக்கும் வரை

ன்னதான் வாய்கிழிய “வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன், ஜீவகாருண்யம் என்று பேசினாலும், ஒரு கொசுக்கடி நம் உயிர்நேயத்தை ஒரு கணமாவது பல்லிளிக்கச் செய்துவிடுகிறதல்லவா? முதல்வன் திரைப்படத்தில் சுஜாதா எழுதியிருப்பார் இப்படி. “கொசுவுக்கெல்லாம் ஜீவகாருண்யம் பாத்திட்டிருக்க முடியாது”. எனக்கு ஒரு சந்தேகம். வள்ளலார் கொசுவிடம் ஜீவகாருண்யம் பார்த்திருப்பாரா? வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றவர் கடிக்க வரும் கொசுக்களைக் காணும்போதெல்லாம் கடிந்துகொள்ளாமல் இருந்திருப்பாரா?  அவர் காலத்தில் கொசுவெல்லாம் இல்லாமல் இருந்திருக்காதே. உண்மையாகவே கேட்கிறேன். வள்ளலார் இருந்த போது அவரை ஒரு கொசு கூடவா கடித்திருக்காது? தன் உயிர்நேய போதனையை அதனிடம் சோதித்துப் பார்த்திருக்கலாமே அவர்

எனக்கு அவர் மேல் இருக்கும் சந்தேகம் வலுக்கிறது. இப்படி யோசித்துப் பார்க்கிறேன். அவர் அணிந்திருக்கும் அந்த வெண்ணிற ஆடையில் ஒரு சிறு ரத்தக்கறை கூடவா படிந்திருக்காது? ஆள் எப்போதுமே அவ்வாடையை தலைக்கு  மேலும் இழுத்துவிட்டுக்கொண்டு மொத்தமாக மூடியபடியே தான் எங்கேயும் தென்படுகிறார். வெறும் முகமும் பாதமும் மட்டும் தான் வெளித்தெரிகிறது. அதில் ஒரு ஜாக்கிரதை உணர்வு இருக்கிறதல்லவா? அக்கொசுக்கள் அவரையும் அவர் உபதேசித்த உயிர்நேயத்தையும் பதம் பார்த்துக்கொண்டே தான் இருந்திருக்க வேண்டும். எப்படியோ ஒருவழியாக ஒளி வடிவினன் ஆகி அவற்றிடமிருந்து தப்பிச் சென்று விட்டார்,

அதனால் என்னுடைய உயிர் நேயத்தில் கொசுக்களுக்கு மட்டும் இடம் கிடையாது.   என் தலைமாட்டில் தேளோ பாம்போ பூரானோ போனாலும் கூட எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் காதின் அருகே ஒரு கொசு வந்துவிடக்கூடாது.  மற்றவை எல்லாம் என்னை நாடி வருவதில்லை.  அவற்றுக்கு நான் தேவையில்லை. அவை போகும் பாதையில் நான் இருக்கிறேன் அவ்வளவு தான். ஆனால் கொசுக்கள் என்னைத் தேடி வருகின்றன. அவற்றுக்கு நான் தான் தேவையே. அது தான் காரணம் என்கிறேன். என்னால் நிம்மதியாக கண்ணசர முடியவில்லை.  காதில் விழும் அதன் ஒரு சிறு ‘ங்கொய்’ போதும் மொத்தப் படுக்கையையும் உலுக்கிய படி எழுந்து கொண்டுவிடுவேன். அந்தச் சனியனை அடித்துவிட்டுப் படுத்தால் தான் நிம்மதி.

உறங்கும் போதும் கூட கொசு பேட்டை வேல் பிடித்திருப்பது போலக் கையில் பிடித்தபடி வைத்திருந்து அப்படியே உறங்கிப் போனவன், திடுமென எழுந்து, விளக்கைப் போட்டுக்கொண்டு வெறும் காற்றை விளாருபவனாக இருப்பேன். உடனேவெல்லாம் அது அடிபடாது.  காத்திருக்க வேண்டும். நாம் விசிறுகிறோம் என்று தெரிந்து வைத்திருக்கும் அது.  கொஞ்ச நேரத்துக்குக் காற்றை விளாராமல் உடம்பை அசைக்காமல் கொள்ளாமல் அமர்ந்திருக்க வேண்டும். அப்படி அமைதியானால் அது நம்மை நோக்கி வரும். நான் அது வரும் வழியைக் கண் கொட்டப் பார்த்துக்கொண்டிருப்பேன். கண்டிப்பாக அது என்னைத் தேடி வரும். வராமல் போகாது. கடித்த இடத்தின் நினைப்பு அதற்கு இருக்கும். அது பறந்து வருவது கண்ணில் தென்பட்டதும் கையில் இருக்கும் பேட்டை எடுத்து அதன் வழியில் வீசுவேன்.  அடிப்பட்டுப் போய்விடும்.  ஒரு கொசுவைத் தான் அடித்திருப்பேன்.  ஆனால் தொடர் துப்பாக்கிச் சூடு நடந்தது போலப் பலமுறை பட்டு வெடிக்கும்.  இது தெரியாமல் கேட்பவர்கள், ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு கொசுவைக் கற்பனை செய்து வைத்திருப்பார்கள். மறுநாள் “உங்க ரூம்ல அவ்ளோ கொசுவா?” என்று கேட்பார்கள்.  ஆனால் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். ஒரு கொசு போதும் என்னைத் தூங்கவிடாமல் செய்ய.

கொசு பேட்டின் மேல் படும் கொசு லேசில் சாவதில்லை. அதனுள் இருக்கும் அதன் கடைசி ஈரம் வரை எஞ்சிவிட்டு, பட்டுப் பட்டுப் பொசிங்கித் தான் சாகும்.  காற்றில் அதன் ஈரம் கருகும் நெடி அடிக்கும். கொசு என்பது கொசு அல்ல. அந்த ஈரம் தான்.

கொசுவத்தி புகைக்கும் லிக்விட் வாசனைக்கும் விரட்டும் ஒலிக்கருவிக்கும் மசியாத, புதிது புதிதானவற்றுக்கு தன்னை எளிதாகத் தகவமைத்துக் கொண்டுவிடும்  கொசுக்கள், கொசு பேட்டிடம் இருந்து தப்பவே முடியாது. அப்படி அது தப்பித்துச் செல்ல வேண்டும் என்றால் அதன் ஈரத்தை அது உதறியாக வேண்டும். உலர்ந்திருப்பதாக அது நடிக்க வேண்டும். ஆனால் அது எளிதான காரியமில்லை. இங்கு உயிர்கள் அனைத்தும் ஈரத்தினாலானவை.  ஈரத்தை உதறி தன்னை இன்னும் ஒருபடி மேலும் தகவமைத்துக் கொள்வதை இங்கு எந்த உயிராலும் இப்போதைக்கு நிகழ்த்திட முடியாது. ஈரத்தை உதறுதல் உயிரை உதறுதலே. உயிர் என்பது ஈரமே.

ஒரு நாள் இரவு, தூக்கத்தில் என் கை எனக்கே தெரியாமல் என் உடம்பில் எங்கோ சொறிந்துகொண்டிருந்தது. பிறகு என் காதில் அந்த “ங்கொய்” ஒலி விழுந்தது.  நான் உறக்கம் கலைந்து எழுந்து விளக்கைப் போட்டேன். என் உடம்பில் சொறிந்த இடத்தின் அந்தத் தினவு இன்னும் இருந்துகொண்டிருந்தது. சொறிந்தபடிக்கே சுற்றியும் முற்றியும் பார்த்தேன். பின்னால் தலைமாட்டுச் சுவற்றில் ஒரு கொசு அமர்ந்திருந்தது. அது தான் என்னைக் கடித்திருக்கிறது. என் ரத்தத்தையும் குடித்திருக்கிறது.  செந்நிற அரிசி மணி போல அதன் வயிற்றில் என் ரத்தம்.  அந்த வயிற்று வீக்கமே கொசுவை நமக்கு எளிதாக காட்டித் தந்துவிடும்.

என்னிடம் அது வசமாக மாட்டிக்கொண்டுவிட்டது. அதனால் அதன் இறக்கையை மேலே எழுப்ப முடியவில்லை.  பறந்து செல்ல முடியவில்லை. அதன் மடிக்கனம் தான் காரணம். அது ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே சுழன்று சுழன்று அமர்ந்தபடி இருந்தது. நான் பேட்டை எடுத்து அதன் மேல் வைத்தேன்.  வழக்கத்துக்கு மாறாக படபடவென இன்னும் பலமுறை வெடித்தது.  அதன் வயிற்றிலிருந்த இன்னும் உலராத என் ரத்தம் அதனை இன்னும் இன்னுமென வெடிக்கச் செய்தது.  ஒரு சாதாரண கொசு பத்து முறை நின்று வெடிக்குமென்றால் ரத்தம் குடித்த கொசுவோ இருபது முப்பது முறை நின்று வெடிக்கும்.

சில சமயம் கொசுவின் இறக்கைப் பகுதி மட்டும்  கொசு பேட் வலையின் மேல் பட்டு தீய்ந்துப் போய் பிய்ந்துவிடும். அந்தச் செந்நிறக் குருதி மணி வயிறு பேட்டின் இடுக்குவழியாக நழுவி கீழே விழுந்துவிடும். அதற்கு எந்தச் சேதாரமும் ஆகியிருக்காது. அப்போதெல்லாம் நான் அதனை என் காலின் பெருவிரலால் மிதித்து நசுக்கி தரையோடு தரையாக இழுத்து ஒரு தேய் தேய்ப்பேன். ஒருமுறை அப்படி வைத்து ஒரு இழு இழுத்த பிறகு தான் என் உடம்பில் அந்தக் கொசு கடித்ததனால் ஏற்பட்டிருந்த அந்தத் தினவும் அதோடு சேர்ந்து அடங்கிப்போனதை உணர்ந்துகொண்டேன்.  நானும் பார்த்துவிட்டேன். இந்த ஒற்றுமையை என்னால் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை.  அப்படி நசுக்காமல் விட்ட சமயங்களில் அந்தத் தினவு அடங்காமல் என் உடம்பில் தொடர்ந்து இருந்து கொண்டேயிருந்து அரிக்கும்.  சொறிந்துக் கொண்டே இருக்க நேரிடும்.  உள்ளே நொதித்தும் சுழித்தும் ஓடிக்கொண்டிருக்கும் குருதி நதிக்குத் தன்னை விட்டு வெளியே விழுந்த துளியின் நினைப்பை மறக்க எடுத்துக்கொள்ளும் காலம் அதுவென தோன்றும். அது வரை உடம்பில் அந்தத் தினவு எஞ்சி நிற்கும்

இப்படி என்னைத் தேடிப் படையெடுத்துக் கடிக்கும் மொத்தக் கொசுக்களையும் பேட்டால் அடிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் நசுக்கி நசுக்கிக் கொல்வதில் தான் என்னால் மேலும் திருப்தி அடைய முடிகிறது. நசுக்கி விட்டோம் என்கிற எண்ணமே எனக்குத் தூக்கத்தை வரவழைத்தது. மறுநாள் காலை என் படுக்கையைச் சுற்றி அங்கங்கு ஈஷியும் இழுப்பியும் ஒரே ரத்தக் களரியாகக் காட்சியளிக்கும்

ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன். வாழ்நாளுக்கான என் கொசு ஆராய்ச்சியிலிருந்து இப்படி அங்கங்கு உங்களுக்கு உபரித் தகவல் தந்து செல்வேன். கொசு எழுப்பும் அந்த “ங்கொய்” ஒலியின் செறிவு அதன் மடிக்கனத்தால் மேலும் மேலுமென கூடுகிறது.  மடிக்கனத்தால் அதன் இறக்கை மேலும் மேலும்  அதிர்த்தப்படுகிறது.  கொசுவின் பாடல் உங்களுக்குக் கேட்பது அது குடித்த உங்கள் ரத்தத்தினால் தான்.  உங்கள் குருதித் தந்தியை கொசு மீட்டுவதனால் தான்.

பிறகொரு நாள் உணர்ந்தேன். இந்தக் கொசுக்கள் என்னை மட்டுமே குறி வைப்பதை. சில காலம் நான் என் காதலியின் வீட்டில் அவளுடன் தங்கியிருந்தேன். அவள் வீட்டில் எப்போதோ கொசு பேட் வாங்கி வைத்திருப்பாள் போலிருந்தது. ஆனால் அதை உபயோகிக்காமலேயே வைத்திருக்கிறாள்.  நான் அதனை எடுத்து பயன்படுத்திய போது, “இத்தனை நாளா சீந்த ஆளில்லாம கெடந்தது” என்றாள் சற்று நகைத்தபடி. அவள் வீட்டிலும் எனக்கு கொசுத் தொல்லை தான்.  எடுத்து பேட்டை விசிறிக்கொண்டிருந்தேன்.  இங்குள்ள கொசுக்கள் என் வீட்டில் உள்ளது போல இல்லை. அதன் உறிகுழலும் கால்களும் நீண்டு மாட்டுக்கொசு போல இருக்கின்றன. கடிக்கிற இடத்தில் ஊசி போல இறக்குகின்றன. கடித்த பின் எடுக்கும் தினவு அதே அளவு தான். எழுப்பும் ‘ங்கொய்’ ஒலியும் அதே தான். என் வீட்டுக்கொசு கடிக்கும்போது அது கடிக்கிறது என்பது தெரியாது. நாசூக்காக கடித்துவிட்டுப் போகும். ஆனால் இங்குள்ள கொசுக்களுக்கு அந்த ஒழுக்கம் இல்லை. கடிக்கும்போதே தெரிந்துவிடுகிறது. ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு இப்படி கொசுக்களும் வித்தியாசப்படுகின்றன.

ஒவ்வொரு நாள் காலையும் காதலி என் பக்கத்துப் படுக்கையைச் சுற்றிப் பார்த்துவிட்டு, “என்னப்பா இப்படி பண்ணி வச்சுருக்க. ஒரே ரத்தக் களரி. யாரு மொழுகுவா இந்த இடத்தை? எல்லா நாளும் இப்படியா?” என்று அலுத்துக்கொண்டாள். சில நாள், “உன்னை ஏன்டா கூப்பிட்டோம் தோண வச்சுடற. பேசாம உன் வீட்டுலயே போய் இரு” என்பாள். ஆனாலும் அலுவலகம் முடித்துவிட்டு திரும்பி வந்த பிறகு கட்டியணைத்துக் கொள்வாள்.  இரவில் வியர்வை நனைய இருவரும் சம்போகித்துக் கொள்வோம்.   சம்போகம் முடிந்து என் மேல் சாய்ந்து படுத்துக்கொண்டு, “உன் வியர்வை என்னைச் சுண்டி இழுக்குது” என்பாள். நான் அவளை விலக்கிவிட்டு விட்டு கொசு பேட்டை கையில் எடுத்துவிடுவேன்.

நான் கேட்பேன். “உன்னை ஏன் எந்தக் கொசுவும் கடிக்க மாட்டேங்குது?”

“இப்போ இந்தக் கேள்வி ரொம்ப அவசியமா?”

“இல்ல நிஜம்மா தான் கேக்கறேன்”

“த்ஸோ. எனக்கு தூக்கம் வருது”

நான் கொசுவடித்துக்கொண்டிருப்பேன். அவள் அவ்வப்போது தூக்கம் கலைந்து எழுந்துகொண்டு  உச்சுக்கொட்டி என்னை நிறுத்தச் சொல்வாள். நான் அவளைக் காதில் வாங்காமல் அடித்துக்கொண்டிருப்பேன். சொல்லி வைத்தது போல அந்தக் கொசுக்களும் என்மேல் தான் வந்து அமர்ந்து தொலைகின்றன.

அன்று விடுமுறை தினம். இருவரும் வீட்டில் இருந்தோம். பின் மதிய வேளை. ஒருவர் மேல் ஒருவர் கிடந்து முயங்கிக்கொண்டிருந்தோம். அப்போதெனப் பார்த்து என் மார்பில் வந்து ஒரு கொசு அமர்ந்தது. என் மொத்த கவனமும் அதில் திரும்பியது. கொசு பேட்டை எடுக்க எக்கினேன். நான் இருந்த நிலையில் எனக்கு கொசு பேட் சிக்கவில்லை.  என் கவனக் குலைவை கண்டு கொண்டவள் என் மேல் அமர்ந்திருந்த கொசுவை விரட்டிவிட்டாள். அதைப் பார்த்துக்கொண்டிருந்த நான் “இப்பயும் பாரு அது என் மேல தான் வந்து ஒக்காருது” என்றேன்.  அவள் சட்டென “தெரியல அதுக்கும் உன் வேர்வை சுண்டி இழுக்குமோ என்னவோ” என்று சொல்லி என் மேலேயே கவிழ்ந்தாள். என் கவனம் அவள் மேல் திரும்பியது. எல்லாம் முடிந்து இருவரும் தளர்ந்துப் போய் வெறுமனே விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தோம். நான் அப்போதெனப் பார்த்து என் முன்னிருந்த காற்றில் ஒரு சிறு அசைவைக் கண்டேன். கொசு தான். ஆனால் எதுவோ வித்தியாசமாகப் படுகிறது. அது என் மேல் வந்து அமரும் என்று எதிர்பார்த்தேன்.  ஆனால் வரவில்லை.  காற்றில் தொத்தி தொத்திச் சென்று கொண்டிருந்தது. சற்று உன்னித்து நோக்கிய போது தான் தெரிந்தது. அது ஒரு கொசு இல்லை. ஒரு கொசுப் பந்து என. அந்தப் பந்தில் மேலே ஒன்றும் கீழே ஒன்றுமாக மொத்தம் இரண்டு கொசுக்கள். அறையின் மெல்லிய காற்றோட்டத்தில் அலைபாய்ந்துக் கொண்டிருந்தது அப்பந்து. நான் அப்படியே எழுந்து கொண்டு காற்றில் அல்லாடிக் கொண்டிருக்கும் அப்பந்தைப் பின் தொடர்ந்து அறைக்குள் சுழன்று நடந்த கொண்டிருந்தேன்.  சட்டென வெறி வந்து அந்தப் பந்தைப் பிடித்து என் இரு கைகளால் அடித்தேன். என் இட உள்ளங்கையில் இரண்டு கொசுவும் இறந்துக் கிடந்து  ஒட்டியிருந்தது. அதில் ஒரு கொசுவில் இருந்து மட்டும் ரத்தம் தெறித்திருந்தது. மற்றதில் இல்லை. அது தான் என்னை சற்று முன் கடித்த கொசு.

நான் என் கைகளின் ரத்தக் கறையைப் பார்த்திருந்தபடிக்கே அருகில் இருந்த குளியலறைக்குச் சென்றேன். நான் அப்படியே அம்மணக்கட்டையாகச் சென்று கொண்டிருந்ததை என் காதலி படுக்கையில் இருந்தபடி பார்த்துக்கொண்டிருந்தாள். நான் உள்ளே சென்று வாஷ் பேசினில் என் இரு கைகளையும் நன்றாகக் கழுவிக்கொண்டேன். அருகே ஆளுயர நிலைக்கண்ணாடி இருந்தது. அதன் முன்சென்று என் நிர்வாணத்தைப் பார்த்துக்கொண்டு நின்றேன்.

அங்கும் ஒரு மூலையில் சில மொய்ப்புகளை உணர்ந்தேன். வெண்டிலேட்டர் ஜன்னல் வழியாக ஊடுருவி வந்திருக்கின்றன. பாத்ரூமின் ஈரத்துக்கும் வெதுவெதுப்புக்கும் மேய வந்திருக்கின்றன. அந்தக் கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்து கண்ணாடியில் என்னையே பார்த்துக் கொண்டிருந்த எனது நெற்றியில் அமர்ந்தது ஒரு கொசு.  இன்னொரு கொசு கண்ணாடியில் தெரிந்த என் பிம்பத்தின் மேல் வந்து அமர்ந்தது. நான் என் நெற்றியில் அமர்ந்த கொசுவை அடிக்காமல் விரட்டிவிட்டேன். என் பிம்பத்தின் மேல் ஊர்ந்து கொண்டிருந்த அந்த இன்னொரு கொசுவையே பார்த்துக்கொண்டிருந்தேன். என் வலக்கை அதை அடிக்க உயர்ந்தது. நான் என்னைக் கட்டுப் படுத்திக்கொண்டேன். அது கண்ணாடி தளத்தை துழாவிக் கொண்டிருந்தது.ஒரு யோசனை தோன்றியவனாக, கொஞ்சம் நேரம் அப்படியே பார்த்துக்கொண்டு நின்றேன். பிறகு ஒரு கணம் கண்ணாடிக்கு முன் இருந்து நகர்ந்து அகன்று சென்றேன்.  நான் எண்ணியிருந்தது போலத் தான் நடந்தது. அது வரைக்கும் அகன்று செல்லாதிருந்த அந்தக் கொசு நான் கண்ணாடித் தளத்தை விட்டு நகர்ந்ததும் அகன்று சென்றுவிட்டது. நான் சொல்லியிருந்தேன் அல்லவா? கொசுக்கள் என்னை குறிவைக்கின்றன என்று. நான் வேகமாக வெளியே சென்று இடுப்பில் ஒரு துவாலையை உடுத்திக்கொண்டு வந்து கூடவே கையில் கொசு பேட்டையும் எடுத்துக்கொண்டு உள்ளே வந்து ஒரு கொசுப் படுகொலையையே நிகழ்த்தினேன். மொத்தக் கொசுவையும் அடித்து ஒழித்துவிட்டு குழாயைத் திறந்துவிட்டு அத்தனை கொசுக்களையும் பாத்ரூமின் கழிவு நீர் செல்லும் சல்லடையில் தள்ளினேன். அவை மொத்தத்துக்கும் இன்று ஜலசமாதி.

பின்னர் எப்பவோ கேள்விப்பட்டேன். கொசுக்களில் ஆண் கொசுக்கள் மனிதனையே அண்டாதாம். பெண் கொசுக்கள் மட்டும் தான் ரத்தம் குடிக்க அவனிடம் வருமாம். அவை தான் ஒரு மனிதனின் உடல் சூட்டினாலோ அவன் வியர்வையினாலோ அவன் விடும் மூச்சினாலோ வெளிப்படும் மனித வாடையை வைத்துக்கொண்டு தேடி வருமாம். வந்து மனித ரத்தத்தை உறிஞ்சி வயிற்றில் சேகரித்து வைத்துக்கொண்டு ஆண் கொசுவுடன் குலாவி உறிஞ்சிய ரத்தத்தினில் இருக்கும் புரதத்தைச் சத்தாக்கி  முட்டை பொறித்து இனப்பெருக்கம் செய்யுமாம்.

அன்று என் கையில் இரண்டு கொசுக்கள் செத்துக் கிடந்தன அல்லவா? அதில் ஒன்று ஆண். இன்னொன்று பெண். அவை அப்படித் தான் ஒன்றை ஒன்று தழுவி தங்களைப் பந்தாக்கிக் கொண்டு காற்றில் அலைபாய்ந்தபடி முயங்குமாம். அதில் அந்தப் பெண் பூச்சி தான் என்னை கடித்துவிட்டுப் போய் தன் இணையைத் தேடிக் கண்டுகொண்டு முயங்கியிருக்கிறது. என் ரத்தத்தைக் கொண்டு அது எழுப்பும் அந்தச் சீறிய “ங்கொய்” ஒலி, ஆண் பூச்சிக்கு அது விடும் சங்கேதம். “நான் நிரம்பியிருக்கிறேன் வா. என்னைக் கூடி முயங்கு” என்கிறது அது. அன்று அது என் ரத்தத்தைக் கொண்டு சமிக்ஞை விடுத்து என் ரத்தத்தைக் கொண்டே முட்டை பொறிக்கத் துணிந்து என் கண் முன்னே முயங்கியிருக்கிறது. பிறகு அடிக்காமல் எப்படி விடுவது அதை?

***

எனக்கு இப்போது முப்பத்தி ஒன்பது வயதாகிறது. கனடாவுக்கு வந்து நான்கைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.  தொழில் நிமித்தமாகத் தற்செயலாக இங்கே வந்தவன், பிடித்துப்போய் இங்கேயே என் இருப்பிடத்தை மாற்றி அமைத்துக்கொண்டேன். இந்தியாவுக்கு இன்னும் திரும்பிச் செல்லவில்லை. செல்ல வேண்டும் என்று தோன்றவும் இல்லை. எப்போதாவது பழைய நண்பர்களிடம் பேசுவதோடு சரி. காதலியுடனும் பிணக்கு ஏற்பட்டு பிரிந்தாகிவிட்டது. முக்கியமாக இங்கு கொசுத்தொல்லை இல்லை. கொசு பேட் பற்றின சிந்தை துளியும் இல்லை.  இந்தியாவுக்கு நண்பர்களிடம் வீடியோ காலில் பேசும்போது எப்பவாவது அவர்களின் பின்னணியில் ப்ளக் பாயிண்டில் சொருகிவைத்திருக்கும் கொசு பேட் தென்படும். அப்போது உதட்டோரமாக ஒரு சிறு நகை எழும்.

போன வாரம் வீட்டைவிட்டு வெளியே செல்ல வீட்டுக் கதவைப் பூட்டித் தாழிட்டுக் கொண்டிருந்த போது என் பிடி நழுவியது. என் வலக்கையில் சட்டென சுத்தமாக சுரணையே இல்லாமல் போனது. என்னால் என் கையை உயர்த்த முடியவில்லை. என்னவென்று தெரியாமல் வாசல் கேட்டுக்கு வந்து செக்யூரிட்டியிடம் சொன்ன போது என் பேச்சு குழறியது. அவர் பார்த்த போது, என் வாய் ஒரு பக்கமாக இழுபட்டுக் கோணியிருக்கிறது போல. உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் என்னைச் சேர்த்துவிட்டார்.

மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்தார்கள். குடிப்பீர்களா, புகைப்பீர்களா என்று கேட்டார்கள். நான் ‘எப்போதாவது’ என்று என் குழறிய மொழியில் சொன்னேன். எப்படியோ அன்றைக்கு அவர்கள் என்னை குணப்படுத்தித் தந்துவிட்டார்கள். பரிசோதனையில் எனக்கு மைல்ட் ஸ்ட்ரோக் அட்டாக் என்று தெரியவந்தது. நான் ‘எப்படி இதெல்லாம்?’ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நாற்பது வயதுக்குள்  வர வேண்டிய ஒன்றா இது? 

மேலும் அவர்கள் “இது இப்போதைய நிலவரம் தான். இன்று உங்களை சரிப்படுத்த முடிந்திருக்கிறது. ஆனால் இன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்கு வாரா வாரம் வந்து எங்களிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் நீங்கள்” என்று சொல்லியிருந்தார்கள். நான் அதற்கு உடன்பட்டேன்.

இன்று என் முதல் வார சிகிச்சைக்காக வரவேற்பறையில் காத்திருக்கிறேன். என்னை ஒரு செவிலி அழைத்துக்கொண்டு போனாள். அவள் ஒரு அறைக்குள் நுழைந்தாள்.  அங்கே இருந்த ஒரு சிறு உடை மாற்று அறையில் என்னை மொத்த ஆடையையும் களையச் சொல்லி ஒரு துண்டை கொடுத்து கட்டிக்கொண்டு வரச்சொன்னாள். நான் சென்று மாற்றிக்கொண்டு வந்தேன். அருகிலேயே இன்னோர் அறை இருந்தது. அங்கு ஓரிடத்தில் என்னை நிறுத்திவைத்தாள்.  அது ஒரு பேழைப் போல இருந்தது. என் கழுத்துக்கேற்ற உயரம் வரை அந்தப் பேழையை ஏற்றிவிட்டாள்.

“வெறும் கழுத்தும் இரு கைகளும் மட்டுமே  வெளியே தெரிய நீங்கள் இந்த பாக்சில் ஒரு 15 நிமிடம் அப்படியே நின்றிருக்க வேண்டும். நான் வெளியே சென்றுவிடுவேன். இங்கு ஒரு பஸ்ஸர் இருக்கிறது. ஏதாவது ஒன்றென்றால் இதில் நீங்கள் என்னை அழைக்கலாம்.  தெரியப்படுத்தலாம். நீங்கள் உங்கள் இடுப்பாடையையும் களைந்து விடவேண்டும்.  இதோ இந்தக் கொக்கியில் மாட்டி வைத்துவிடுங்கள். உள்ளே நீங்கள் வெறும் நிர்வாணமாக நிற்க வேண்டும். நீங்கள் தெரியப்படுத்தியதும் நான் அறையின் மற்ற விளக்குகளை அணைத்துவிட்டு இந்த நீல விளக்கைப் போட்டுவிடுவேன். அடுத்த சில நிமிடங்களில் இந்த பாக்ஸ் நன்றாக லாக்காகிவிடும்”

நானும் தலையசைத்து கேட்டுக்கொண்டேன்.

அவள் வெளியே சென்றுவிட்டாள். நான் பஸ்ஸரை அழுத்தி அவளுக்கு தெரியப்படுத்திவிட்டு கழுத்தையும் கைகளையும் வெளி நீட்டியபடி அந்தப் பேழைக்குள் இருந்தேன். சில நொடிகள் கழித்து அறையின் மொத்த வெளிச்சமும் இருண்டது. அவள் சுட்டிக் காட்டிய நீல நிற நியான் விளக்கு மட்டும் எரியத் துவங்கியது. நான் அதையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். இப்போது வெளி நீட்டிய கைகளை உள்ளிழுத்து கொள்ள முடியவில்லை. என்னை முற்றிலுமாக சிறைப்படுத்திவிட்டது அது. பேழைக்கு உள்ளிருந்து எங்கோ ஒருப்பக்கமாய் வெதுவெதுப்பான வெப்பக் காற்று அடித்துக்கொண்டிருந்தது. அடுத்த கணம்  கழுத்துக் கீழான என் உடம்பில் ஆயிரமாயிரம் ஊரல்களை உணர்ந்தேன். நான் அது வரை ஏதோ கதிரொளிச் சிகிச்சை என்று தான் கருதியிருந்தேன். ஆனால் இது வேறு. இவை அவையே தான்.   அதே மாதிரியான அரிப்பு. அதே மாதிரியான தினவு.  இவை அவையே தான். எங்கிருந்து ஏவி விட்டிருக்கிறார்கள் இதை?  ஐயோ என்னால் இத்தனைக் கடியையும் ஒரு சேர தாங்கவே முடியவில்லையே. வெளியே நீட்டிய கைகள் பரபரத்தது. பதினைந்து நிமிடம் பல்லைக் கடித்துக்கொண்டு நின்றேன்.  பிறகு அந்த நீல விளக்கு அணைத்தவுடன் தான்  என் உடம்பில் அந்த மொய்ப்புக்கள் குறைந்து என்னால் நிலைமீள முடிந்தது. அவை என்னை மொத்தமாக மொய்த்துப் பிடிங்கி எடுத்துவிட்டு என்னை ஒருவழியாக்கிவிட்டுச் சென்றுவிட்டிருந்தன.

அறையில் மீண்டும் வெளிச்சம் பரவியது. நான் இருந்த அந்தப் பேழையும் தளர்ந்தது. நான் வெளியே வந்து இடுப்பாடையை அணிந்து கொண்டேன்.  உடம்பு முழுதும் அரித்துக்கொண்டிருந்தது. அரிப்பினாலேயே எரிந்துவிடுபவன் போல.  நான் கட்டுப்படுத்த முடியாமல் பஸ்ஸரை அழுத்திச் செவிலியை வரவழைத்தேன்.

அறையைத் திறந்து கொண்டு செவிலி உள்ளே நுழைந்தாள். என் கையில் ஏதோ ஒரு ஆயின்மென்டைத் தந்து, இன்னும் ஒரு அரை மணி நேரம் உடம்பில் அரிப்பிருக்கும். சொறியக் கூடாது. அதற்காக இது.  அந்த அறைக்குள் சென்று உடை மாற்றுவதற்கு முன்பு உடம்பு முழுக்க தடவிக்கொள்ளுங்கள் என்றாள்.

நான் உடை மாற்றிக்கொண்டு வெளியே வந்து அந்தச் சிகிச்சை முறை பற்றி அவளிடம் கேட்டறிந்தேன்.  அவள் சொன்னாள். “இந்தச் சிகிச்சைக்குப் பெயர் நேச்சுரல் ப்ளட் தின்னிங் தெரபி. இது ஒரு முதல் கட்டச் சிகிச்சை தான்.  ஆனால் உடம்புக்கு நன்றாகக் கேட்கும்.  ஆப்பிரிக்க நாட்டின்  வெப்ப மண்டல காடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு வகை கொசு இனத்தைத் தான்  இதற்குப் பயன்படுத்துகிறோம். அந்தக் கொசுவினத்தை இதோ அருகே எங்கள் லாபிலேயே கல்சர் செய்து பராமரித்து வளர்க்கிறோம். நீங்கள் நின்றிருந்த பேழையில் கீழே ஒரு துளை இருக்கும். கவனித்திருக்க மாட்டீர்கள். நாங்கள் அந்தப் பக்கமாயிருந்து அது வழியாக இந்தக் கொசுக் கூட்டத்தை  அனுப்பிவைப்போம்.”

“உங்களுக்கு தெரிந்திருக்கலாம். கொசு நம் உடம்பில் அமர்ந்து கடிக்கும் போது நம் ரத்தத்தை மட்டும் உறிஞ்சி எடுத்துச் செல்வதில்லை. கூடவே ஒன்றைக் கொடுத்தும் செல்கிறது. அதன் உறிகுழாயை நம் ரத்த நாளத்தில் செலுத்தியவுடன் ஒருபக்கம் அதன் வயிற்றில் சுரக்கப்படும் ஒரு வகை திரவம் கீழிறங்கி நம் ரத்தத்தில் கலக்கிறது.  இன்னொரு பக்கம் நம் ரத்தம் மேலேறி அதன் வயிற்றை அடைகிறது.  நம் ரத்தத்தில் கலக்கிற அந்தத் திரவம் குருதி உறைதலைத் தடுத்து ரத்தத்தை லேசாக்குகிறது. அதனால் கொசுவால் நம் ரத்தத்தை எளிதாக உறிஞ்சிவிட  முடிகிறது.  மேலும் இது போன்ற ஒரு வகை கொசுக்களில் இருந்து வரும் அந்தத் திரவம் ஸ்ட்ரோக் போன்று குருதி உறைதலால் உபாதைக்குள்ளானவர்களின் ரத்தத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இயற்கையாகவே குருதி உறைதலைத்  தடுத்து ரத்த ஓட்டத்தை நெகிழ்த்தி நீர்க்கச் செய்து தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும்படி ஆக்கிவிடுவதனாலே இவற்றுக்கு ‘ப்ளட் தின்னர்’ என்று பெயர் வந்தது”அவளிடம் அடுத்த சிட்டிங்கிற்கான அப்பாய்ன்ட்மெண்ட் கேட்டிருந்தேன். அவள் இதோ வருகிறேன் என்று என்னை ஓரிடத்தில் அமர்த்திவிட்டுச் சென்றாள்.

எனக்கு உள்ளுக்குள்ளிலிருந்து புழுக்கமெடுத்தது. உடலெங்கிலும் வியர்வை ஊறி ஊறி வந்து கொண்டிருந்தது. எதிரிலே இருந்த டேபிளில் வைக்கப்பட்டிருந்த  டிஸ்யூ பே்பரை எடுத்து நெற்றியிலிருந்தும் கழுத்திலிருந்தும் கைகளிலிருந்தும் என ஒற்றி எடுத்து மாறி மாறி வழித்துப் போட்டுக்கொண்டிருந்தேன். எனக்கு வள்ளலார் நினைவு வந்தார். உயிர்நேயம் நினைவு வந்தது.  இங்கு உயிர்க்கருணை என்பது நம்மிடமிருந்து மட்டுமே துவங்கும் ஒருவழிப்பாதை இல்லை போல.

அவள் என்னிடம் மறுபடியும் வந்தாள். “அடுத்த வியாழன். மதியம் மூன்று மணிக்கு” என்றாள். நான் வழித்து வழித்துக் கடாசி எறிந்திருந்த டிஸ்யூ பேப்பர்கள் என்னைச் சுற்றிச் சிதறிக் கிடந்ததை அப்போது தான் கண்டு கொண்டேன். பாதி பண்டிலை காலியாக்கிவிட்டிருந்தேன். அவள் வந்து பார்த்த பிறகு தான் அந்த அசூயயை உணர்ந்தேன்.  அவள் அதனை புரிந்து கொண்டவள் போல, “Leave it. We will clear it off. No issues” என்றாள். பிறகு முறுவலித்தபடி “Just sweat it out and relax yourself”  என்றாள். நான் விடைபெற்றுக்கொண்டேன். கடைசியாக அந்தக் குப்பை குவியலை  ஒருமுறை நோட்டமிட்டுவிட்டு வெளியே வந்தேன்.  அதில் எஞ்சியிருப்பது என்ன? வெறும் ஈரம்.  என் ஈரம்.

2 COMMENTS

  1. நல்ல கதை. சிறப்பாக எழுதியுள்ளார் லோகேஷ். பெருங்கருணை என்பது மனிதர்களிடம் மட்டுமிருந்து வெளிப்படும் ஒன்று இல்லை.

  2. வள்ளாரின் ஜீவகாருண்யக் கோட்பாடு சற்றே அறிவீனமானது என்று சொன்ன அதே வாயால் அக்கோட்பாடு சொல்ல வந்த கருத்தியலை சரியெனச் சொல்லி முடித்திருக்கிறார் இறுதியில். படைப்பாலரி புனைவுத் திறமை அபாரமாக வெளிப்பட்டிருக்கிறது. சற்றே யதார்த்த நிலப்பாட்டை விட்டு விலகினாலும் அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது கதை. நன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.