அனைவருக்கும் வணக்கம். ‘வண்ணநிலவன் கதையுலகு’ முழு நாள் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்புக்காக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருக்கும் ‘சிற்றில்’ அமைப்புக்கு மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
சில மாதங்களுக்கு முன்பு லாவண்யா சுந்தர்ராஜன் இந்த நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டு தலைமையுரை நிகழ்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். முதலில் சற்றுத் தயக்கமாக இருந்தது.வேறு யாரையாவது கேட்டுப் பாருங்களேன். என்று சொன்னேன். அதைச் சொல்லும்போதே வேறு யாரையும் அவர் சொல்லிவிடக் கூடாதே என்ற பதைப்பும் உள்ளூர இருந்தது. அதற்குக் காரணமும் இருந்தது.
நான் தீவிர இலக்கிய வாசிப்புக்குள் நுழைந்தது 1970 களின் ஆரம்பத்துக்குச் சற்று பிந்தைய நாட்களில். அன்று எழுதிக் கொண்டிருந்தவர்களில் பலரது எழுத்துகளையும் தீராப் பசியுடன் வாசித்திருக்கிறேன். சில எழுத்தாளர்கள் என்னைக் கவர்ந்தார்கள். மிகச் சில எழுத்தாளர்கள் என்னுடைய அந்தரங்க உணர்வாக மாறினார்கள். அவர்களில் ஒருவர் வண்ணநிலவன். அவருடைய நான்கோ ஐந்தோ சிறுகதைகளாவது என்னுடைய உணர்விலும் நினைவிலும் ஒட்டியிருப்பவை. கொஞ்சம் கூட எதிர்பாராத தருணங்களில் ஏதாவது ஒரு வண்ணநிலவன் கதை நினைவுக்கு வரும். திருத்தமான முகத்துடன் போலீஸ்காரர்கள் மத்தியில் நிற்கும் ஒரு பெண்ணைப் பார்க்கும்போதோ,, சக்கர வண்டியில் ஓர் ஆளை உட்காரவைத்து ஒரு குடும்பமே அதைத் தள்ளிக்கொண்டு போவதைப் பார்க்கும்போதோ, அபூர்வமாக ஒரு ,முஸ்லிம் பெண் வயலின் பெட்டியைச் சுமந்து செல்லுவது கண்ணில் படும்போதோ, மட்டமான மரத்தில் செய்யப்பட்ட ஜோடனைகள் இல்லாத சவப்பெட்டியைப் பார்க்கும்போதோ, பலாப்பழ வாடை மூக்கைத் துளைக்கும்போதோ, இது மாதிரியான சந்தர்ப்பங்களின்போதோ வண்ணநிலவனின் சில கதைகள் காரணமில்லாமல் நினைவுக்கு வரும். இலக்கிய வாசிப்பு இதுபோன்ற நுண்ணுணர்வுகளை அளிக்கும் என்று நம்புகிறேன். அப்படி நம்பக் காரணம் அத்தகைய உணர்வுகளைப் பெற்றுக் கொண்டிருந்தேன் என்பதால்தான். என் அந்தரங்கத்தில் பசுமையாக \இருக்கும் சில கதைகளை அளித்தவருக்கு வாசகனாக நன்றி கூறத்தான் இந்த வாய்ப்பு.
வண்ணநிலவன் கதைகள் வெளியான கால அளவிலேயே வாசித்திருக்கிறேன். அவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்டுமிருக்கிறேன். இலக்கிய நண்பர்களுடனான தனிப்பட்ட உரையாடலிலும் பொதுவாகச் சிறுகதை பற்றிய அரங்குகளிலும் சிறந்த சிறுகதைகளுக்கு உதாரணங்களாக அந்தக் கதைகளைக் குறிப்பிட்டும் இருக்கிறேன். ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக அந்தக் கதைகள் மீது காதல் கொண்டிருந்தும் அவற்றைப் பற்றி வெளிப்படையாகப் பேசியதில்லை என்பது குறையாகவே இருந்தது. அந்தக் குறையை இப்போது இந்த அரங்கு போக்குகிறது.
வண்ணநிலவன் கதைகளை ஆர்வத்துடன் வாசித்த பருவத்தில் அவருடைய ஒரு கதை தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த நாட்களில் அவருடைய மிக நல்ல கதைகளையும் வாசித்திருக்கிறேன். ஆனால் அவற்றையெல்லாம் விட நான் குறிப்பிடுகிற கதை மிகவும் பிடித்துப் போனது. அது அவருடைய மிக நல்ல கதை அல்ல என்று தோன்றினாலும் எனக்குள்ளேயே எட்டிப் பார்த்து அவர் அதை எழுதியிருக்கிறார் என்று நம்பினேன். அந்தக் கதையை மையமாகக் கொண்ட தனிப்பட்ட கதையே அதை மறக்க முடியாத ஒன்றாக ஆக்கியது.
என் பள்ளி இறுதிப் பருவத்தில் சங்கீதம் கற்றுக் கொள்ள முயன்றேன். ஸ்வர ஸ்தானங்களைச் சரியாகத் தெரிந்துகொள்ள ஹார்மோனியம் உதவும் என்று சொன்னார்கள். அதை வாங்குவதற்குக் கனவுகூடக் காணமுடியாத தரித்திரச் சூழ்நிலை.பெரும்பாடுபட்டு காசு சேர்த்து ஒரு கருவியை வாங்கினேன். ஒரு புல்புல்தாரா. ஸ்வர ஸ்தானங்களைக் கற்றுக் கொள்ளலாம். பாட்டு வராவிட்டால் ஏதாவது தந்திக் கருவியைக் கற்றுக்கொள்ள இந்தக் கருவியின் மீட்டல் உபயோகப்படலாம் என்ற இரட்டை லாபத்தைக் கணக்குப் போட்டு வாங்கியது..நேரம் கிடைத்த போதெல்லாம் அதைத் துன்புறுத்தியதில் கைபழகியது. கொடூரமில்லாமல் ஒரு பாடலை வாசிக்க முடிந்தது. அதற்குப் பின்னர்தான் அந்த ஒரு பாட்டைத் தவிர வேறு எதையும் உருப்படியாக வாசிக்க முடியாது என்று. தெரிந்து கொண்டேன். அந்தப் பாட்டு ‘ஆத்துமமே என் முழு உள்ளமே உன் ஆண்டவரைப்பணிந்து ஏத்து’ என்ற கிறிஸ்தவ கீதம். வாசிக்கப் போராடித் தோற்றுப்போன இன்னொரு பாடல் இருக்கிறது. அது இந்த சம்பவத்துக்கு ஓரிரு ஆண்டுகள் முன்பு வெளியான திரைப்படம் ஒன்றில் இடம் பெற்ற பாடல். படத்தைப் பார்த்தவர்களேகூட அதை மறந்து விட்ட பிறகும் அந்தப் பாடல் வானொலியிலும் திருமண வீடுகளிலும் பொதுக் கூட்டங்களிலும் தவறாமல் ஒலித்துக் கொண்டிருந்தது.
புல்புல்தாரா வாங்கியதன் பலன் அந்தப் பாட்டை வெற்றிகரமாக வாசிப்பது தான் என்று மனம் தளராமல் போராடினேன். பெருந்தோல்விதான். சங்கீத ஆசையையும் கருவியையும் மூட்டைகட்டி மூலையில் போட்டேன். அதை மறந்தே போனேன். ஒரு நாள் வெளியில் சுற்றி விட்டு வீடு திரும்பினேன். வீட்டுக்குள்ளேயிருந்து புல்புல்தாராவின் நாதம் கேட்டது. எந்தப் பாட்டுக்கு நான் மல்யுத்தம் நடத்திக் கொண்டிருந்தேனோ அந்தப் பாட்டை என் அப்பா பிசிர் தட்டாமல் வாசித்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் மிக அழகான சிரிப்புடன் மடியிலிருந்த வாத்தியத்தை எடுத்து ஒதுக்கி வைத்துவிட்டுப் போனார். நான் அப்பா பிள்ளை அல்ல. சரியாகச் சொன்னால் அவர் மீது கடுமையான வெறுப்பு கொண்டிருந்தவன். இருவருக்கும் நேர்முகமான பேச்சு கிடையாது. அந்தச் சூழ்நிலையில் அவர் புதிதாகத் தெரிந்தார். அவருக்கு இசையை ரசிக்கிற மனம் இருக்கிறது என்பதும் அவரால் என்னைப் பார்த்துப் புன்னகைக்க முடியும் என்பதும். ஆச்சரியமாக இருந்தன.
அந்த ஆச்சரியத்தை அந்த மாதம் பத்திரிகையில் வெளிவந்திருந்த வண்ணநிலவன் கதை என்றென்றைக்குமாக நிலைநிறுத்திக் கொள்ள உதவியது. கதையின் முதற் பத்தியிலேயே அந்தப் பாடல் குறிப்பிடப்பட்டிருந்தது. இது அந்தப் பத்தி.
தலையைக் குனிந்தபடியே நடந்து வந்துகொண்டிருந்தான். அந்தத் தெருவில் நடமாட்டம் குறைந்துவிட்டது. ஒரு வீட்டுக்குள்ளிருந்து ராதையின் நெஞ்சமே.. பாடல் கேட்டது. வழக்கமாக எந்த இடத்தில் அந்தப் பாடலைக் கேட்டாலும் நின்று ரசித்துக் கேட்பவன் இன்று நிற்காமல் போகிறான்.
இலக்கியப் பித்து முற்றி இலக்கியம்தான் சர்வரோக நிவாரணி என்ற மனநிலையிலிருந்த அன்று இந்தக் கதை அந்தப் பாடலை இலக்கியப் பொருத்தம் கொண்டதாக நினைக்கச் செய்தது. அதை வெளியில் சொல்வது அன்றைக்குக் குறைச்சலான காரியம். தீவிர இலக்கியவாதிகள் கேளிக்கை சினிமாக்களையோ சினிமாப் பாடல்களையோ பொருட்படுத்திப் பேசுவது தகுதிக் குறைவான செயலாகக் கருதப்பட்டது. பாடாவதியான வணிகப் படங்களுக்கும் அதி நவீன இலக்கியவாதிகளும் பின் நவீனத்துவக் கோட்பாட்டாளர்களும் பண்பாட்டு ஆய்வு என்ற பெயரில் வியாக்கியானங்கள் எழுதிக் குவிக்கும் இன்றைய பின்னணியில் அது அவ்வளவு மோசமான செயலாக இருந்திருக்காது என்றே தோன்றுகிறது.
பீடிகையே நீண்டு விட்டது என்று நினைக்கிறேன். அந்தக் கதையையும் பாடலையும் சொல்லி விடுகிறேன். கதை ‘கரையும் உருவங்கள்’ 1974 ஆம் ஆண்டு தீபம் ஆகஸ்டு இதழில் வெளிவந்தது. அதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னால் வெளியான ‘கனிமுத்து பாப்பா’ படத்தில் இடம் பெற்றதுதான் ‘ராதையின் நெஞ்சமே கண்ணனுக்குச் சொந்தமே’ என்ற பாடல். பி.சுசீலா பாடியது. பிடித்த கதையில் வரும் கதாபாத்திரம் நினைவு கூர்கிற பாடல் வாசகனுக்கும் பிடித்ததாகத்தானே இருக்க வேண்டும்? அப்படி அந்தப் பாடலின் பின்னணி விவரங்களைத் திரட்டினேன். பாட்டில் கண்ணன் என்று வருவதால் நிச்சயம் அது கண்ணதாசன் எழுதிய பாடலாக இருக்க வேண்டும் என்று பார்த்தால் அதை எழுதியவர் பூவை செங்குட்டுவன். சரி, இசை பிரமாதம் என்று நினைத்தால் அந்த மெட்டு இந்தியிலிருந்து ஸ்வரம் பிசகாமல் இறக்குமதி செய்த மெட்டு. கனிமுத்து பாப்பா வெளியாவதற்கு முந்தைய வருடம் வெளிவந்த இந்திப் படமான ‘ஷர்மீலி’யில் எஸ்.டி. பர்மன் இசையமைத்த ( கில்தெஹெ குல் யஹான் ) பாட்டு. அதற்கு ஆண்குரலிலும் பெண்குரலிலுமாக இரண்டு வடிவங்கள் இருக்கின்றன. ஷர்மீலி படத்தைப் பற்றி வண்ணநிலவன் ‘ஒரே ஒரு நாள்’ என்ற குறுநாவலில் குறிப்பிட்டிருக்கிறார். கிஷோர் குமாரும் லதா மங்கேஷ்கரும் பாடியவை. இந்தி வடிவங்களை விடத் தமிழ் நகல் கவர்ச்சியாகத் தெரிந்ததற்குக் காரணம் அதற்கு நான் கற்பித்த இலக்கிய முக்கியத்துவம்.
அது தவிர கரையும் உருவங்கள் கதையில் சங்கரன் என்ற வேலை இல்லாத இளைஞன் பாத்திரத்தின் மனநிலைதான் எழுபதுகளில் இளைஞர்களுக்கு இருந்தது. கையாலாகாத கோபமும் வீம்பும் பொதுக் குணமாகவே இருந்தது. ஒருவேளை அந்த மன நிலையில்தான் நானும் இருந்தேன் என்பதால் அந்தக் கதை என்னைப் பாதித்திருக்கலாம். இந்தக் கதையிலும் சரி, அதை நினைவில் நீடிக்கச் செய்த அப்பா சம்பவத்திலும் சரி உள்ளாக இருந்த உருக்கம்தான் அடிப்படை என்று பின்னர் தோன்றியது. கலையின் ஆதார குணங்களில் ‘கண்ணீர்த் துளிவர உள்ளுருக்குதலும்’ ஒன்று. கண்ணீர்த் துளி வராமல் உள்ளம் உருக்குகிற கதைக் கலை வண்ணநிலவனுடையது. அதைப் புரிந்துகொண்டபோது நல்ல கதை அல்ல என்று எண்ணிய ‘கரையும் உருவங்கள்’ மிக நல்ல கதையாக மனதில் இடம் பிடித்தது. அதை எங்காவது பத்திரப்படுத்த விரும்பினேன்.
சென்ற ஆண்டு காலச்சுவடு பதிப்பகம் வண்ணநிலவனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளைக் கொண்டு வந்தது. நண்பர், எழுத்தாளர் கே.என்.செந்தில் கதைகளைத் தேர்ந்தெடுத்து விரிவான ஒரு முன்னுரையையும் எழுதினார். அந்த முன்னுரைக்கு அவர் கொடுத்த தலைப்பு கதையின் அதே தலைப்புதான். கரையும் உருவங்கள். மேலாய்வு செய்வதற்காக முன்னுரையை வாசித்த பின்பு தலைப்பைச் சற்று மாற்றி கரையாத உருவங்கள் என்று வைக்கலாம் என்று சொன்னேன். அவரும் ஒப்புக் கொண்டார். அந்தக் கதை எனக்குள் இன்னும் இருப்பதை மறைமுகமாகச் சொல்லத்தான் அதைச் செய்தேன். அந்த உள் நோக்கத்தை நண்பர் புரிந்துகொண்டாரா என்று தெரியாது.
கரையும் உருவங்கள் கதையை அவ்வப்போதாகப் பலமுறை வாசித்து இருக்கிறேன். அந்தக் கதை சித்தரிக்கும் சூழல் இன்று இல்லை. அப்பாவும் புல்புல்தாராவும் இல்லை. ஆனால் ஏறக்குறைய அரை நூற்றாண்டாக அந்தக் கதை சிரஞ்சீவியாக இருக்கிறது.
நண்பர்களே,
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் பட்டியலைப் பார்த்தபோது ஒரு விஷயம் கவனத்துக்கு வந்தது. இங்கே பேச இருப்பவர்கள் அநேகமாக எல்லாரும் எனக்கு இரண்டோ மூன்றோ தலைமுறைக்குப் பின் வருபவர்கள். நான் வண்ணநிலவனை வாசித்த பின்புலத்தில் அல்லாமல் புதிய பின் புலத்திலிருந்து வாசிப்பவர்கள். நாற்பது ஐம்பது ஆண்டுக் காலம் எழுதிய எழுத்தாளர்கள் எல்லாரும் தொடர்ந்து வாசிக்கப்படுவது அபூர்வம். எழுத்தை முன்னிட்டு அவர்கள் கொண்டாடப்படுவதும் அபூர்வம். இரண்டு அல்லது மூன்று தலைமுறைகள் கடந்தும் வாசிக்கப்படும் படைப்புகளாக வண்ண நிலவன் படைப்புகள் இருக்கின்றன என்பதன் அத்தாட்சி இது. அவருடைய நீண்ட கால வாசகனாக இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
எழுபதுகளின் தொடக்கத்தில் வண்ணநிலவன் நவீன இலக்கியத்தில் அறிமுகமாகிறார். அவருடைய வருகையே எல்லா தரப்பினரின் அங்கீகாரத்துடனும் நிகழ்ந்தது. மிக அரிதாக வாய்க்கக் கூடிய ஏற்பு அது. அவரது ஆரம்பகாலக் கதைகள் ஒவ்வொன்றும் வெளிவந்ததும் பேசப் பட்டன. விவாதிக்கப்பட்டன. வரவேற்கப்பட்டன. ஓர் இலக்கிய ஆளுமை முழுக்க உருவாகி நிற்கிற உணர்வை அவருடைய வருகை அளித்தது. இந்தக் கருத்துக்கு வலுவான தரவுகள் எதையும் என்னால் அளிக்க முடியாது. ஆனால் உதாரணங்களைச் சொல்ல முடியும். முதற் கதை வெளியான உடனேயே அதை எழுதியவர் பெரும் ஆளுமையாக அடையாளம் காணப்பட்ட நிலை தமிழ் இலக்கிய வரலாற்றில் இருக்கிறது. அப்படியான எழுத்தாளராக நான் வாசிக்க வந்த காலத்தில் பார்த்த எழுத்தாளர் வண்ண நிலவன். அதை இன்றும் ஒரு அளவுகோலாகவே குறிப்பிட்டு வருகிறேன்.
ஒரு கதையை வாசித்தால் தெரிந்து விடும் அதை எழுதியவர் எழுத்தாளர் மட்டுமா? இலக்கிய ஆளுமையும் கூடவா என்று. மிக அண்மையில் ‘மெட்ராஸ் பேப்பர்’ இணைய இதழில் வண்ண நிலவனின் சாரதா கதையைப் பற்றி நுட்பமான கட்டுரையை எழுதியிருக்கும் விமலாதித்த மாமல்லன் இந்த அளவுகோலை கறாரான ஒன்றாகவே குறிப்பிடுகிறார்.
தான் ஒரு இலக்கிய ஆளுமை என்பதைக் கூச்சத்துடனும் பதற்றத்துடனும் வண்ணநிலவன் மறுப்பார் என்று தெரியும். அவரே மறுத்தாலும் அதுவே இலக்கிய விதி. அவருடைய கதைகள் வரவேற்புடனும் கவனத்துடனும் வாசிக்கப்பட்டது போலவே அனேகமாக எதிர்மறை விமர்சனங்கள் இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அவரது படைப்பாக்கத்தையும் அதைப் பற்றிய கருத்துகளையும் பின் தொடர்பவன் என்ற முறையில் இதைச் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். அரசியல் காரணங்களை ஒட்டி அவருடைய படைப்பு எதிர்மறையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நான் அறிய இலக்கிய அடிப்படையில் அவரது படைப்புகளை எதிர்மறையாக விமர்சித்தவர் ஒருவர் மட்டுமே,
வண்ணநிலவனுக்குக் கிடைத்த இலக்கிய மதிப்பு அபூர்வமானது என்று சொல்லக் காரணம் இருக்கிறது. அவர் அறிமுகமான எழுபதுகளில் அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, தி.ஜானகிராமன், ராஜநாராயணன் ஆகிய முன்னோடிகளின் கதைகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தன. சிறுகதை வளமானதாகவும் வலுவானதாகவும் இருந்தது. இந்த ஆளுமைகளை மீறிப் புதிய எழுத்தாளர் ஒருவர் கவனம் பெறுவது கடினமாக இருந்த காலம். தனது கதைகளின் இலக்கியப் பெறுமதி மூலமாக மட்டுமே வண்ணநிலவன் அந்த கவனத்தைப் பெற்றாரென்பது முக்கியம். அவரது ஆரம்பகாலக் கதைகள் ஒவ்வொன்றாக வெளியாகித் தீரும் முன்பே அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு ‘எஸ்தர்’ வெளியானது. இதுவும் அபூர்வமானதுதான். அவரது கதைகளால் வசீகரிக்கப்பட்ட நண்பர்கள் சேர்ந்துதான் தொகுப்பைக் கொண்டு வந்தார்கள். எழுத வந்த குறுகிய காலத்திலேயே சீக்கிரம் தொகுப்பு வந்தது அவருக்குத்தான். அவருக்கு முன்பே எழுதி அறிமுகமாகியிருந்த வண்ணதாசனுக்கும் அவருடன் இணைந்து எழுதிய பூமணிக்கும் பின்புதான் தொகுப்பு வெளிவந்தது.
எஸ்தர் தொகுப்பு கைக்குக் கிடைத்த அன்று அடைந்த மகிழ்ச்சியை இன்றும் மறக்க இயலாதது. 11 கதைகள் தொகுப்பிலிருந்தன. முதல் கதை அழைக்கிறவர்கள் கடைசிக் கதை கரையும் உருவங்கள் என்று நினைவு. அன்று பிரபலமாக வெளிவந்து கொண்டிருந்த சோவியத் லிட்ரேச்சரிலிருந்து எடுத்த செதுக்கோவியம் அட்டைப் படம். முன்னுரைக்குப் பதிலாகப் புத்தகம் உருவானதைப் பற்றி சம்பந்தப்பட்ட நண்பர்கள் நடத்திய உரையாடல் இடம் பெற்றிருந்தது. அந்த உரையாடல் புதிய எழுத்தாளன் மீதான வாஞ்சையையும், நம்பிக்கையையும், மதிப்பையும் வெளிப்படுத்தியது. அவ்வாறான செயல் பின்னர் நிகழ்வில்லை என்றே நினைக்கிறேன்.
முதல் தொகுப்பான ‘எஸ்தர்’ எழுப்பிய அலையை இன்னும் வீரியமாக்கியது வண்ணநிலவனின் இரண்டாவது தொகுப்பு ‘பாம்பும் பிடாரனும்’. ஆறே ஆறு கதைகள். முப்பத்தாறு பக்கம் கொண்ட தொகுப்பு. ஆறு கதைகளும் அதுவரை புழக்கத்திலிருந்த சிறுகதைகளைப் புரட்டிப் போட்டன. மிகக் குறுகியகால அளவில் மிக அதிகமாகப் பரிசோதனை ஆக்கங்களில் ஈடுபட்டவர் அவர்தான் என்றும் சொல்லலாம். அந்தப் பரிசோதனை முயற்சிகள் வெறும் பரிசோதனைகளாக இல்லாமல் வாழ்வை இன்னொரு கோணத்தில் காட்டுபவையாக இருந்தன.
நவீனத் தமிழ்ச் சிறுகதை மரபை புதுமைப்பித்தன் மரபாகவும் கு.ப.ரா மரபாகவும் வகைப்படுத்துவது பழக்கம். இந்தப் பிரிவினைக்கு உறுதியான அடிப்படை இல்லை. ஆனால் கதைகளின் திசை வழியை நிறுவிய இரண்டு முன்னோடிகளைத் தவிர்த்து விட்டுச் சிறுகதைப் போக்கைப் புரிந்து கொள்வதும் எளிதில்லை.அப்படியானால் வண்ணநிலவன் கதைகளை எந்த மரபில் வகைப்படுத்துவது என்ற கேள்வி எழும். இரண்டு முன்னோடிகளின் சாரமான கூறுகளைக் கொண்டவை என்று வகைப்படுத்தலாம். தர்மம், பதில் வராத கேள்விகள் போன்ற கதைகளை புதுமைப்பித்தன் வகையிலான கதைகள் என்றால் அயோத்தி மனைவியின் நண்பர் முதலான கதைகளை கு.ப.ரா பாணிக் கதைகள் என்று சொல்லக் கூடும். ஆனால் புதுமைப்பித்தனின் ஆவேசத்தை இன்னும் அடக்கமான தொனியிலும் கு.ப.ராவின் மௌனத்தை மேலும் ஆழமான ஒலியிலும் சித்தரித்தவர் வண்ணநிலவன் என்று சொல்லவே விரும்புகிறேன். அவர்களை அவர் விஞ்சுவது புதுமைப்பித்தனின் கோபமான வெறுமையை கரிசனம் நிறைந்த கசப்பாக மாற்றும் இடத்திலும் கு.ப.ராவின் அடக்கமான பெண் சுதந்திரத்தை இயல்பான விடுபடலாகச் சித்தரிப்பதிலும்தான். புதுமைப்பித்தனின் கதைச் சூழலை கு.ப.ராவின் மொழியில் எழுதியவர் வண்ணநிலவன் என்று சூத்திரமாக்கினால் சரியாக இருக்குமா?
‘கடல்புரத்தில்’ நாவலுக்கு எழுதிய முன்னுரையில் வண்ணநிலவன் ‘அன்பு வழி’ மாதிரியான நாவலை எழுதும் ஆசையைச் சொல்லியிருப்பார். அது அவர் தனக்குத் தானே வைத்துக்கொண்ட செய்வினை என்று நினைக்கிறேன். ஏனெனில் அவரது படைப்புகளைப் பற்றிப் பேசவும் எழுதவும் முற்பட்டவர்கள் எல்லாம் அவரது கதையுலகுக்கு அன்பு முலாம் பூசி விட்டார்கள். அவரையும் அன்பின் முக்காடு அணிந்த அருட்பெருஞ்சோதியாக உருவகப்படுத்தி விட்டார்கள். குடும்பம், சமூகம் ஆகிய அமைப்புகளுக்குள் உழலும் மனிதர்களின் திணறலையும் சாபத்தையும் வன்முறையையும் மிகையின்றிச் சித்தரித்தவர் வண்ணநிலவன் என்பது என் எண்ணம்.
நான் முதலில் வாசித்த அவரது கதை ‘ அழைக்கிறவர்கள்’ ( 1973 ஆம் ஆண்டு சதங்கை தீபாவளி மலரில் வெளிவந்தது ). அண்மையில் வாசித்தது சுயமரியாதை ( 2022 பிப்ரவரி காலச்சுவடு இதழில் வெளியானது ). இந்த இரண்டு கதைகளும் அழுத்தமாக ஒன்றைச் சுட்டிக் காட்டுகின்றன. மனிதர்களின் இயல்புகள் இவையெல்லாம். அவை அவ்வளவு ஒன்றும் பிரகாசமானவை அல்ல. இருள் படிந்தவைதாம். ஆனால் இந்த இருளை மட்டுமே காட்டுவதல்ல; அதை மட்டுமே காட்டுவதல்ல. அதை மீறும் வெளிச்சத்தைப் பற்றிப் பேசுவதே அவர் எழுத்து என்று பார்க்கிறேன். அன்பைப் போதிப்பதல்ல; அதன் விளைவைச் சுட்டிக் காட்டுவதுதான் அவருடைய படைப்பு நோக்கம் என்று கருதுகிறேன். அதனாலேயே அவர் உணர்ச்சிகளை அலங்காரப்படுத்துவதில்லை. மனிதர்களை அவர்களுடைய இயல்பின் இயல்பிலேயே முன்வைக்கிறார்.
இதைச் சொல்லும்போது இன்னொரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. 1980 களின் ஆரம்ப வருடங்கள். சுந்தர ராமசாமியைச் சந்தித்திருந்தேன். அப்போது தமிழ்ச் சிறுகதைகளை மையமாக வைத்து ஒரு நீண்ட கட்டுரையை எழுதியிருந்தார். சிங்கப்பூரில் வாசிப்பதற்கான கட்டுரை அது. அதன் தட்டச்சுப் பிரதியை சும்மா படித்துப் பார்க்கக் கொடுத்தார். புதுமைப்பித்தன் முதல் அன்று கவனத்துக்குரியவராக இருந்த திலீப்குமார் வரையான எல்லாச் சிறுகதையாளர்களைப் பற்றிய மதிப்பீடுகள் முன்வைக்கப்பட்ட கட்டுரை. .அது பின்னர் ஆ,மாதவனின் ‘மாதவன் கதைகள்’தொகுப்பின் முன்னுரையாகச் சேர்க்கப்பட்டது. கலைகள் கதைகள் சிறுகதைகள் என்ற கட்டுரை. அதில் வண்ணநிலவனைப் பற்றிய பகுதி இப்படி இருந்தது.
வண்ணநிலவனின் கதாபாத்திரங்கள் வாழ்க்கைச் சோதனையில் அனைத்தையும் பறிகொடுத்த பின்னரும் அன்பின் நெகிழ்ச்சியைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர்கள். மனிதனை மனிதனாகக் காண்பதற்கு இவருக்குக் கடைசியாக மிஞ்சியிருக்கும் அடையாளம் இதுதான்.
தட்டச்சுப் படியில் ‘வாழ்க்கைச் சோதனையில் அனைத்தையும் பறிகொடுத்த பின்னரும் அன்பைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர்கள்’ என்றுதான் முதலில் இருந்தது. அதை வாசித்தபோது அன்பை எப்படித் தக்கவைக்க முடியும்? அது குணமாயிற்றே, அன்பின் செயல்களைத்தானே அனுபவிக்க முடியும் என்று அவரிடம் கேட்டேன். கொஞ்சம் அவசரக் குடுக்கைத்தனமான கேள்விதான். ஆனால் அதைக் கேட்டு விட்டு அன்பின் நெகிழ்ச்சியை என்று சேர்த்தார். சுந்தர ராமசாமி அப்படிச் செய்தது பெருமையாக இருந்தது. பின்னர் வண்ணநிலவன் கதைகளைப் பற்றி யோசிக்கும்போது இந்தச் சம்பவம் நினைவுக்கு வரும். அன்பைப் போதிப்பது ஞானிகளின் வேலையாக இருக்கலாம்.ஆனால் அன்பின் விளைவைப் பேசுவதுதானே கலைஞனின் வேலை.
வண்ணநிலவன் 7 நாவல்களை எழுதியிருக்கிறார்.அவற்றில் முதல் மூன்று நாவல்களையே இலக்கியத்துக்குக் கிடைத்த கொடை என்று நம்புகிறேன். கடல்புரத்தில், கம்பா நதி, ரெயினீஸ் அய்யர் தெரு. இவை மூன்றும் தனித்துவமானவை. புதிய களங்களைக் கொண்டவை. எளிமையாகவும் அதே சமயத்தில் பின்னல் கொண்டவையாகவும் பக்க அளவில் குறைவான போதும் புனைவில் விரிவானவையாகவும் அமைந்தவை,
ப.சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் நாவலுக்குப் பின்னர் கடலைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட நாவல் கடல்புரத்தில். ’கணையாழி’ இதழில் தொடராக வெளிவந்தது. முழுமையான நாவலாக அல்ல; நாவலின் பகுதிகள்தாம் வெளியாயின. ஒரு அத்தியாயம் வாசித்து முடித்த பின்பு அடுத்த அத்தியாயத்துக்காகக் காத்திருந்த தவிப்பு சாமிதாசுக்காக பிலோமி அனுபவித்த தவிப்புக்கு இணையானது. நூல் வடிவில் கிடைத்த பின்னர் நாவலுடனான நெருக்கம் கூடியது.
ஆனால் இன்று அந்த நாவலை முந்தைய அளவு நெருக்கமானதாக உணர முடியவில்லை. அதற்கான பழியை ஜோ டி குரூஸ்தான் ஏற்க வேண்டும். கடலுக்குள்ளிருந்து நீர் மனிதர்களின் வாழ்க்கையைப் பார்க்கும் வாய்ப்பை அவரது இரண்டு நாவல்களும் _ ஆழிசூழ் உலகு, கொற்கை – ஏற்படுத்திய பின்னர் கடலைக் கற்பனையாகக் காட்டும் நாவலாக கடல்புரத்தில் பின்னொதுங்கிப் போனது. இந்த நாவல் மட்டுமல்ல; உலகப் புகழ் பெற்ற செம்மீனும் அந்த நிலையையே அடைந்திருக்கிறது. கடல்புரத்தில் இன்று என்னளவில் பரதவ வாழ்க்கையின் நிஜமல்ல. மாறாக மகத்தான காதல் கதை. பிலோமியைப் போன்ற காதலியின் உலந்துபோன கண்ணீர். சாதாரண இளைஞன் ஒருவனின் வாழ்க்கையாகத் தொடங்கும் கம்பா நதி பல குடும்பங்களின் கதையைச் சொல்கிறது. ஒரு தெருவின் கதையாகச் சொல்லப்படும் ரெயீனிஸ் அய்யர் தெருவும் ஏராளமான மனிதர்களின் கதைகளைக் கொண்டிருக்கிறது. இந்த நாவல்கள் உணர்த்தும் ஓர் உண்மை மனிதர்களால் தான் இடத்துக்கு முதன்மை உருவாகிறது என்பதே.
இதுவரை சொன்னதெல்லாம் ஒரு இலக்கிய வாசகனாக வண்ணநிலவன் படைப்புகளுடனான என்னுடைய உறவு சார்ந்தவை. ஓர் எழுத்தாளனாகவும் என்னைப் பாதித்திருக்கிறார். நான் சிறுகதையிலும் கொஞ்சம் கைவரிசை காட்ட முயன்றிருக்கிறேன். சில கதைகள் வெளியாகியுமிருக்கின்றன. மீட்சி முதல் இதழில் வெளிவந்த அடியோட்டம் என்ற கதை வண்ணனிலவன் எழுத்தின் பாதிப்பில் எழுதிய கதை. அவர் அன்று நல் அன்புத் தூதுவராகச் சித்தரிக்கப்பட்டிருந்தார்.அதனால் அந்தக் கதையின் மையப் பாத்திரத்துக்கு ராமச்சந்திரன் என்ற பெயரையே வைத்தேன். இது முதல் பாதிப்பு. இரண்டாவது பாதிப்பு ‘ரெயினீஸ் அய்யர் தெருவால் தூண்டப்பட்டது. வெல்லிங்டன் என்ற என்னுடைய நாவலின் சட்டகம் அந்த நாவலிலிருந்து பெறப்பட்டது. இந்தப் பாதிப்புகளுக்காக அவருக்கு நன்றி.
அதிகமாகவே பேசி விட்டேன் என்று நினைக்கிறேன். இந்த நிகழ்வில் புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் வண்ணநிலவனை எவ்வாறு பார்க்கவிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளவே விரும்புகிறேன். எனவே அவரது படைப்புகளைப் பற்றிய விரிவான பேச்சைத் தவிர்க்க எண்ணினேன். எனினும் சில கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள நேர்ந்தது. இந்த வாய்ப்புக்காக சிற்றில் அமைப்பைச் சேர்ந்த அனைவருக்கும் கேட்டுக் கொண்டிருந்த எல்லா நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி. வணக்கம்.
(சென்னை, டிஸ்கவரி புக் பேலஸில் 29.அக்டோபர் 2022 அன்று சிற்றில் அமைப்பின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற தண்பொருநையின் வெம்மை மனிதர்கள் – வண்ணநிலவன் கதையுலகு நிகழ்வில் ஆற்றிய தலைமையுரையின் எழுத்து வடிவம் ).
.