யாத்வஷேம் (எதிர்வெளியீடு, பொள்ளாச்சி). கன்னடத்திலும் நேமிசந்த்ராவுக்கு மாநில அகாதமிபரிசு. தமிழ்மொழிபெயர்ப்பிலும் கே.நல்லதம்பிக்கு தேசிய அகாதமி பரிசு. இதற்குமுன் குருதிப்புனல்நாவலுக்கு தமிழிலும், வங்காள மொழிபெயர்ப்பிலும் கிடைத்தது. இப்படி வேறுநாவல்கள் உள்ளனவா தெரியவில்லை.
யாத்வஷேம் என்றால் ஹீப்ரு மொழியில் நினைவுச்சின்னம். யூதப்படுகொலையின் நினைவாக இஸ்ரேலில் உள்ள இடம். விஷவாயு மரணக்கிணறு ஆஸ்விச்சில்தான் இருந்தது, ‘டகாவ் முகாமில் இல்லை. இந்த விஷவாயு அறை பயன்படுத்தப்படவில்லை’ என்றெல்லாம் சொல்லப்படுவது பொய் என்பது நாவல் மூலம் தெரியவருகிறது. படுகொலையுண்டவர்களின் பட்டியல் அமெரிக்காவில் முழுமையாக இருக்கிறது. ஜெர்மனியில் முழுமையாக இல்லை; டகாவ் முகாமை இப்போது மிக அழகாகக் காட்சிப்பொருளாக்கி அதன் கொடூரம் தெரியாமல் வைத்திருக்கிறார்கள். இரண்டுக்கும் பின்னால் அரசியல் நோக்கம் இருக்கிறது.
ஹிட்லரின் நாஜிப் படைகளால் துரத்தப்பட்டு உயிருக்குப் பயந்து ஓடி, ஒளிந்து உயிர்விட்ட பலவித மனிதர்கள் – லட்சங்களில். அப்படித் தப்பிப் பிழைத்து இந்தியாவிற்கு வந்து பத்து வயது சிறுமியாகத் தந்தையுடன் இங்கேயே பெங்களூரில் இந்திய மண்ணால் அரவணைக்கப்பட்டு, அதே சமயம் பிறந்த மண்ணின் வாசம் நீங்காத ஹ்யானா என்ற அனிதா தனது முதிய வயதில் தனது இந்தியக் கணவர் விவேக்குடன் தனது வேர்களைத் தேடிச்சென்று, வெறும் நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாகக்கொண்டு – விஷவாயு கிணறு உள்ள ஜெர்மனின் டகாவ் – பிறகு வாஷிங்டன் – பிறகு இஸ்ரேல் என்று தேடித்தேடி அலைந்து – நம்பவே முடியாதபடிக்கு தனது சகோதரியை அவளது முதிய வயதில் சந்திப்பதைப் பற்றிய நாவல். தேடிப் பயணம் செய்பவள் அனிதா; தேடுபவள் அவளுக்குள் இருக்கும் ஹ்யானா.
நாவல் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் அடைக்கலமான ஹ்யானா இந்திய/ கன்னட அனிதாவாகத் தன்னைத் தகவமைத்துக்கொள்வது; அறுபது வயதில் கணவனோடு தனது சொந்த நாடான யூத பூமியைத் தேடிச் சென்று தனது குடும்ப உறுப்பினர்களைத் தேடுவது; அங்கு நிலவும் தற்போதைய சூழலை வரலாற்றுப் பின்னணியில் வைத்துச் சிலாகிப்பது, திரும்புவது. முன் இரு பகுதிகள் புனைவின் கால்களையும்; இறுதிப்பகுதி சரித்திரத்தின் துழாவும் கைகளையும் கொண்டிருக்கிறது.
மிகவும் வழமையான கதை சொல்லல் மொழியில், முறையில், சொல்லப்பட்டிருக்கும் நாவல்தான். நேரிடையான, விரலைப் பிடித்து அழைத்துச்சென்று கதையைச் சொல்லிக்கொண்டு போகும் நடைதான் என்றாலும், சொல்லும் விஷயத்தில் அழுத்தமும், ரத்தமும் சதையுமான நிஜமும் உள்ள நாவல் இதை முக்கியமானதாக்குகிறது..
நாவல் முழுதும் அனிதா என்கிற ஹ்யானா – கணவன் விவேக் என்று இருவர் பார்வையில் மாறி மாறி சொல்லப்படும்போது இருவர் வாழ்வும், இணைவும், பயணமும் நமக்குச் சொல்லப்பட்டுக்கொண்டே நாவல் இந்த இணை மேல் பயணிக்கிறது.
ஹ்யானா, அனிதாவாகி விவேக்கைத் திருமணம் செய்து கொண்டாலும், அவளது கண்களில் யூத மண் மேல் இருக்கும் ஏக்கத்தைப் புரிந்து கொண்டவனாக, அவளை அங்கே அழைத்துப் போகிறான். இந்தியச் சூழலை, இந்த சமூகத்தை, இந்த பண்பாட்டை மனமார ஏற்று வாழ்ந்தாலும், தனது நாடு, தனது ஹீப்ரு மொழி என்பது அவளுக்குள் எப்போதும் அடியோட்டமாக இருந்துகொண்டே இருக்கிறது. மிதந்தாலும் தனது வேரையும் நீரில் மிதந்தபடியே வைத்திருக்கும் ஆகாயத்தாமரை போல் இருக்கிறாள் ஹ்யானா.
பின்மாலை நேரத்தை ‘பகல் வாடும் நேரம்’ என்று சொல்வது; கன்னட சிறுமியர்கள் விளையாடும் விளையாட்டு; உகாதி நாட்களில் அவர்கள் சொல்லும் வாழ்த்து போன்ற பலவும் தமிழில் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. கன்னடத்திலிருந்து தமிழுக்கு நேரடியாக நன்றாக மொழிபெயர்த்திருக்கிறார் கே.நல்லதம்பி.
தனது குடும்ப உறுப்பினரைத் தேடிச்சென்று வெளிநாட்டில் தனது அக்காவைப் பார்த்துத் திரும்புவது என்பதல்ல நாவல். யாத்வஷேம் என்ற நினைவுச்சின்ன இடத்தைப் பார்த்து, தற்போதைய இஸ்ரேலியச் சூழலைப் பார்க்கும் அவள் – தினமும் ஒரு பேருந்தில் குண்டு வெடித்துக்கொண்டே இருப்பதைப் பார்க்கும் அவள் – இந்தியாவிலிருந்து தேடிக்கொண்டு வந்த எனக்கு இங்கே பல விடைகள் கிடைத்தன. ஆனால் நூறு கேள்விகளுடன் இங்கிருந்து திரும்புகிறேன் என்று ஒரு வரி வருகிறது. அதுதான் நாவல் சாரம்.
நாவலில் உயிர்ப்போராட்டம் பற்றி நிறைய நாம் முன்பே அறிந்திருந்தாலும் – நாவலில் ஒரு இடத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.
ஹ்யானாவின் அக்கா ரெபெக்கா டகாவ் முகாமுக்குக் கொண்டுபோகப்படுகிறாள். ஆஸ்விச்-சில் ஆட்டு மந்தை போல யூதர்களை அழைத்துப்போய் ஒரு கூடாரத்தில் அடைப்பார்கள். அங்கே அனைவரும் உடைகளைக் களையவேண்டும். பிறகு உடலின் ரோமங்களை அகற்றுகிறார்கள். பிறகு குளியலறைக்கு அனுப்பப்படுகிறார்கள். ஒரே அறையில் பலர் அடைக்கப்பட்டு, மேலே ஷவர் வரும் துளையிலிருந்து திடீரென விஷவாயு வரும். அனைவரும் மூச்சுத்திணறி இறப்பார்கள். பிறகு அவர்களைப் பக்கத்திலேயே உள்ள பிண எரிப்பானில் இட்டு எரித்துவிடுவார்கள். இப்படி லட்சக்கணக்கில்.
டகாவிலும் அப்படி அறைகள் உள்ளன. ரெபெக்கா நிர்வாணமாக்கப்பட்டு, உடல் மழிக்கப்பட்டு அறைக்குள் அடைக்கப்படுகிறாள். தனக்குச் சாவு மிக அருகில் என்று அறையில் அடைந்து கிடந்த அனைவருமே உணர்ந்துவிடுகிறார்கள். ஷவர் துளையிலிருந்து விஷ வாயுக்காகக் காத்திருக்கும்போது, சிறிது நேரத்தில் மேலே ஷவரிலிருந்து நீர் சொட்டுகிறது. பிறகு பொழிகிறது. இனி உயிர் பத்திரம் என்று நினைக்கும் அவர்கள் மனம் அப்போது எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள் !
அங்கே சில இடங்களில் அடுப்பை எரிப்பதற்கு இறந்துபோன யூத மனித உடல்களையே பயன்படுத்துகிறார்கள். நல்ல சதைப்பிடிப்பான உடல்கள், அதற்குப் பிறகு பெண்கள், அதற்குப் பிறகு பிற உடல்கள். ஏனென்றால் பெண்கள் தோலுக்கு அடியில் கொழுப்புப் படிவுகள் பொதுவாக அதிகமாக இருக்கும். அதனால் நன்றாக நின்று எரியும் என்பதைக் கண்டுபிடித்து அப்படி உபயோகித்து வந்தார்கள் என்ற விவரம் அசாதாரணமானது.
***
நாவலில் தொடர்ந்து சொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் பலவற்றில் இரண்டு விஷயங்களை மட்டும் ஒளிர்கோடிட்டுக் (highlight) காட்ட விழைகிறேன்.
நாஜிமுகாமில் உயிருக்கு உத்தரவாதமின்றி இருக்கும் சாமானியர்களுக்கு நம்மால் எளிதில் நம்ப முடியாத அளவுக்கு ஒரு பெருநம்பிக்கை இருந்திருக்கிறது. அன்பின் மின்மினிகள் இருந்திருக்கின்றன.
பட்டினி, உடல் வாதை, கண்முன்னே மனிதர்கள் சடலமாக மாறி புகையாகக் கரியாகி வெளியேறுவதைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதும், நாளையோ ஏதாவது ஒரு நாளோ நாமும் புகையாகத்தான் போகிறோம் எனும் உண்மை கண்ணுக்கு முன்னால் தெரியும்போதும் – உயிர் தப்பிவிடுவோம் என்று, ஏதோ ஒரு நம்பிக்கை பல மனங்களில் செயல்பட்டிருக்கின்றன. எதை வைத்து அப்படி நம்பினார்கள் என்று ஊகிக்கவே முடியாதபடிக்கு இருக்கிறது அவர்கள் அபாரமான நம்பிக்கை.
ஒன்று) இந்தியாவில் பத்து வயதில் தப்பி வந்து அடைக்கலமான ஹ்யானாவுக்கு தனது அறுபது வயதில் தனது பெற்றோர் உடன்பிறந்தோர் உயிரோடிருக்க வாய்ப்பே இல்லை என்ற அச்சம் உள்ளது. ஆனாலும் எங்கோ ஒரு மூலையில் அக்கா ரெபெக்கா இருக்கக் கூடும் என்று மனம் சொல்லிக்கொண்டே இருக்கிறது. தேடிப்போகும் இடம் ஒன்றில், இறந்தவர்களின் ஷூக்கள் குன்று போலக் குவிந்து கிடக்க, அதைச் சென்று பார்த்து அழும் ஹ்யானா அக்கா ரெபெக்காவின் சிறுவயது ஷூ, அதில் வேலைப்பாடு, R என்ற எழுத்து இவற்றைப் பார்த்து, அக்காவின் மரணம் ஊர்ஜிதம் ஆனதே என்று அழுகிறாள். ஆனாலும் இறந்தவர்களின் பட்டியலை ஒருமுறை பார்த்து விடலாம் என்று கிளம்பித் தேடி, காணாமல், மீண்டும் ஓடி, ஓடி இறுதியில் அக்காவை உயிரோடு பார்க்கிறாள்.
இதே நம்பிக்கையின் மறுமுனையில், நாஜிகளால் கொண்டுபோகப்பட்டு, அம்மாவையும் தம்பியையும் கண்முன்னே இழந்து, அப்பாவும் தங்கையும் எங்கே போனார்கள் என்ற தகவலே இல்லாமல் இருந்தாலும், நாளை காலை உயிரோடு இருப்போமா இல்லையா என்ற நம்பிக்கை இல்லாமல் போனாலும், எப்படியாவது தங்கையை எங்கேயாவது பார்த்து அணைந்துக்கொள்வோம் என்று அக்கா நம்புகிறாள்.
லட்சக்கணக்கானோர் இறந்துபோன சூழலில் அக்காவைச் சந்திப்போம் என்று ஹ்யானாவும், தங்கையைச் சந்திப்போம் என்று ரெபெக்காவும் – எவ்வித தர்க்கபுத்தியும் இல்லாமல், முட்டாள்தனமாக நம்பினார்கள். அந்த முட்டாள்தனம்தான் அவர்களைச் சந்தித்துக்கொள்ள வைத்தது.
(மற்றொன்று) – டகாவ் முகாமில் அடைபட்டுக் கிடக்கும் கைதிகள் எவருக்குமே வெளியுலகத்தைப் பார்ப்போமென்று நம்பிக்கை இல்லை. நேற்று பார்த்தவன் இன்று மூளை சிதறிக் கிடக்கிறான். காவல்காரன் எஸ் எஸ் ரெபெக்காவைத் தனியாக அழைத்து வல்லுறவு கொள்கிறான். இரண்டு ரொட்டித்துண்டை வீசிவிட்டுப் போகிறான். வல்லுறவு பற்றிய கவலை சற்றும் இல்லாமல் ஆசையாக ஓடி ரொட்டியை எடுத்துச் சாப்பிடுகிறாள். பொதுவில் வீசப்படும் ரொட்டிகளுக்கும், முட்டைகோஸ் தண்ணீருக்கும் அடிதடி சண்டை நெருக்கடி. பசி எலும்பைத் தொடுகிறது. அடைபட்டிருக்கும் யூதர்கள் யாருக்கும் பெயர்கள் இல்லை. கையில் பச்சை குத்தப்பட்டிருக்கும் எண்கள்தான் அடையாளம். மனிதர்கள் வெறும் எண்களாக, எண்ணிக்கைகளாக ஆகிறார்கள். பிரச்சினை என்றால் விசாரணை எதுவும் இல்லை. நேரடியாகத் துப்பாக்கிச் சூடுதான். இப்படியான நிலையில் பசியில் வாடும் ஆர்னால்ட் இவளைப் பார்க்கும்போது அவன் பார்வையில் சோர்வையும் மீறிய ஒரு மினுமினுப்பு உண்டாகிறது. தான் திருட்டுத்தனமாகப் பெற்ற ரொட்டித்துண்டு ஒன்றை இவளிடம் சட்டென வீசிவிட்டுப் போகிறான். அவன் பெற்றது திருட்டுத்தனமாக. ஆனால் திருடப்பட்டது அல்ல. ரொட்டிக்கடையிலிருந்து ரொட்டிகள் அடங்கிய பெட்டியைத் தூக்கிப்போக காவலர்கள் இந்த யூத கைதிகளை இழுத்துப் போவார்கள். அப்படி பெட்டியைத் தூக்கும்போது அந்த முதலாளி யாருக்கும் தெரியாமல் சட்டென்று ஆர்னால்ட் கையில் இரண்டு ரொட்டிகளைத் திணிக்கிறான். சட்டென்று இவனும் தனது கால்சட்டைப் பைக்குள் திணித்துக் கொள்கிறான். அதைத்தான் ரெபெக்காவிடம் தந்துவிட்டுப் போகிறான். ஒரு மெல்லிய யூதக் காதல் – அநித்திய வாழ்வின் நடுவே – இருக்கிறது. ஆனால் அவனும் அடுத்தவாரமே இறந்து போகிறான் திருட்டுத்தனம், விதிமீறல் என்றால் உடனே சுட்டுவிடுவார்கள். ஆனால் கடை முதலாளி ஆர்னால்ட் -க்கு ரொட்டிகளை இலவசமாகத் தருவதையும், இவன் ரெபெக்காவுக்கு வீசிவிட்டுப் போவதையும் – உடன் வரும் காவலர் பார்த்துவிடுகிறார். ஆனால் பார்க்காதது போலப் போகிறார்.
***
நாவலில் இன்னொரு அழகிய தருணம் உண்டு. முகாம் கைதிகளை அவ்வப்போது வருகைப்பதிவு போலக் கணக்கெடுத்து அந்த சமயத்தில் நோயாளிகள், வேலை செய்யத் திறனற்றவர்கள், முதுமை கூடுபவர்கள் போன்றோரைச் சாகடித்து விடுவார்கள். ஒரு லெப்டினன்ட் அதிகாரி வலது கையை உயர்த்தியபடி நின்றிருப்பார். வரிசையாகக் கைதிகள் வரவேண்டும். ஒவ்வொருவர் அருகில் வரும்போதும் ஆட்காட்டி விரல் ஒருபுறம் அசைந்தால் அவர் அந்தப் பக்கம் போகவேண்டும். மறுபுறம் அசைந்தால் இந்தப்பக்கம் வரவேண்டும். அந்தப்பக்கத்தில் நிற்பவர்கள் ஓரிரு நாளில் கரிய புகையாக மாறிவிடுவார்கள். (அதில் அப்படித் தப்பிய ஒரு டாக்டர் பின்னாளில் புத்தகம் எழுதியது பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு (கொரோனா கால) பேச்சில் குறிப்பிட்டிருப்பார்)
ரெபெக்காவுக்கு நாய் என்றால் மிக விருப்பம். கெலேவ் என்ற வளர்ப்பு நாயைச் சொந்த ஊரில் விட்டுவிட்டு வந்த வருத்தம் அவளுக்கு எப்போதும் உண்டு. அவள் சிறைக்காவல்காரன் ஒருவன் வைத்திருக்கும் நாயை அடிக்கடி கொஞ்சுவாள். அதனை கெலேவ் என்றே அழைத்தாள். இத்தனைக்கும் அவன்தான் அவளோடு தொடர் வல்லுறவு கொள்பவன். நாய்க்கு வைக்கப்படும் உணவு இவர்களுக்குத் தரும் உணவை விட மேலானது. அவள் நாயைக் கொஞ்சிக்கொண்டே இருப்பாள் ஆனால் அதன் உணவைத் தொடமாட்டாள். நாயுடன் விளையாட அவன் அனுமதிப்பதையே, அவள் தனக்கான பெரிய சலுகையாக நினைப்பாள்.
சிலகாலத்தில் அவள் உடல் நலிந்து, பருவ அழகு குலைந்து, முப்பது கிலோ குறைந்து உடல் வற்றியவளாக மாறிப்போயிருப்பாள். ஒருநாள் பதிவேட்டுக்காக வரிசையில் நிற்கும்போது அவளுக்குத் தெளிவாகத் தெரியும் – இன்று அதிகாரியின் விரல் அந்தப்பக்கமாக அசையும். தனக்கு இன்றுதான் இறுதி நாள்’ என்பது..
அவள் வரிசையில் மெதுவாக நகர்ந்தபடியே இருக்க, சிறைக்காவலனின் நாய் – கெலேவ் என்று இவள் பெயர்வைத்த நாய் – இவளைப்பார்த்துவிட்டு ஓடிவந்து அவளிடம் கைகளை நக்கி, கொஞ்சி விளையாடும். அவள் அதன் கழுத்தை நீவி, பிடரி முடி அளைந்து கொஞ்சுவாள். அவளுக்கு அதுதான் அப்பா அம்மா சகோதரி எல்லாம். இன்று அவளுக்குக் கிடைக்கும் கடைசி ஸ்பரிசம் இதுதான் என்பதை உணர்ந்தவளாக அதனிடம் கொஞ்சிக்கொண்டிருப்பாள். அது அவளை விட்டு விலகாமல் விளையாடும். அதைப்பார்த்துக் கொண்டிருக்கும் அதிகாரி, சக்கையாகி, எதற்கும் உதவாத நிலையில் உள்ள இவளை, மரணத்தை நோக்கி நெட்டித் தள்ள விரலை அந்தப்பக்கமாக அசைக்கும் அத்தனை காரணங்கள் இருந்தும் – இவள் அருகே வந்தவுடன் – விரலை இந்தப்பக்கமாக அசைப்பான்.
அப்படி உயிர்பிழைத்து, முகாமிலிருந்து ரயிலில் போகும்போது குதித்துத் தப்பி வந்து இந்த நாவலில் முகாம் குறித்த உண்மையைச் சொல்லும் இந்த ரெபெக்காவின் உயிரைக் காப்பாற்றியது ஒரு இரவல் செல்லப்பிராணி. நாய். அவளது கெலேவ். அந்த நாய் இல்லாவிட்டால் இந்த நாவலில் முக்கியப் பகுதியே இல்லாமலும் போயிருக்கும்.
***
முகாமில் கிறித்தவர்களும் அடைபட்டிருந்தனர். பசிக்கு உணவில்லை. உயிர்காக்க உணவு என்று தவித்திருக்கும் நிலையில், தம்மோடு சிறைப்பட்டிருக்கும் ஒருவன் வந்து சிலுவையைக் காட்டி இயேசுவை நம்பும்படி சொல்கிறான். பாவத்துக்கு வருந்தச் சொல்கிறான். யூத இனத்து ரெபெக்கா உருவமே இல்லாத வழிபாடு உள்ள நாம் எப்படி இந்தப் பிரார்த்தனை செய்ய முடியும் என்று குழம்புகிறாள். ஆனால் ஏதோ ஒன்று நம்மைக் காப்பாற்றட்டும் என்று பிரார்த்திக்கிறாள். இந்தியா வந்த சிறுமி / குமரி ஹ்யானாவோ இங்கே பல்வேறு கடவுளர்களைப் பார்த்துக் குழம்புகிறாள்.
யூதர்களாக இருப்பதால் கொல்லப்படவேண்டும் என்று துரத்தும் நாஜிக்கு அஞ்சி இந்தியா வரும்போது, இங்கே விவேக் அம்மா தன்னுடைய டஜன் கணக்கில் உள்ள கடவுள் படத்தோடு, ‘உன்னுடைய கடவுள் படத்தையும் பூஜை அறையில் வைத்துக் கும்பிடலாம்’ என்கிறாள். ஹ்யானா தனக்கு கடவுள் உருவப் படமே இல்லையே என்கிறாள். ஆனாலும் பிரார்த்தனையில் இணைந்தே உள்ளனர். அவள் பொட்டு, புடவை என்று கன்னட சமூக உருவத்தை ஏற்கிறாள். கட்டாயத்தால் அல்ல.
***
பின்னாளில் முதிய வயதில் ரெபெக்காவை ஹ்யானா சந்தித்து அவள் அனுபவித்த எல்லாக் கொடுமைகளையும் சொல்லச் சொல்லி கேட்கிறாள். என் கண்ணீரில் இருப்பது ஏழு கடல்களின் உப்பு என்று அவள் சொல்ல, என் சகோதரி இத்தனை கொடுமையைக் கண்டு மீண்டிருக்கிறாள். ஆனால் நானோ சௌகரியமாக இந்தியர்களின் அரவணைப்பில் இருந்திருக்கிறேன்’ என்று லேசான குற்ற உணர்ச்சி கொண்டும் வருந்துகிறாள். இது முக்கியமான ஒரு பார்வையாகக் கருதவேண்டும். ஏனென்றால் தென்னிந்தியர்களுக்கு – தமிழர்களுக்கு – போர் மற்றும் அடக்குமுறை என்பதெல்லாம் வெறும் செய்திகள்தாம். கதைகள்தான். கொடுமைகளை நேரில் அறிந்தவர்களுக்கே சௌகரியமான சூழல் என்றால் என்னவென்ற புரிதல் ஏற்படும்.
உலகில் அதிகபட்ச பாதுகாப்பின்மை என்பது உயிரச்சம். அப்படி இருந்தவர்களே ஏதோ ஒரு நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள். வெளிவந்து வாழ்ந்தார்கள் என்பது ஆச்சரியமான ஒன்று.
***
முன்பே குறிப்பிட்டபடி, சரித்திரம் மற்றும் அரசியலின் இழைகள் நாவலின் இறுதிப் பகுதியில் நிறைய இழைகின்றன. அங்கே எழுப்பப்படும் கேள்விகள் மிகவும் காத்திரமானவை. அதிருஷ்டவசமாக இவை முற்போக்கான அறிவின் நிர்ப்பந்தத்தில் எழுப்பப்படுவதில்லை. உணர்ச்சியின் தத்தளிப்பில் எழுப்பப்படுவதில்லை. வாழவேண்டிய கட்டாயத்தினாலும் எழுப்பப்படவில்லை. வாழவேண்டிய உரிமையில் எழுப்பப்படுகின்றன.
நாவலின் எழுப்பப்படும் கேள்விகள் போரின் ரணங்களை, சோகங்களைச் செவி வழியாகக் கேள்விப்பட்டு, படித்த செய்திகளின் பின்னணியில் அமைந்தவை அல்ல. அங்கிருந்து தப்பி உயிரைப் பத்திரப்படுத்திக்கொண்டு, இந்தியா போன்ற ஒரு நிம்மதியான நாட்டில் வாழ்ந்துவிட்டு, இறந்தவர்கள் இறந்துதான் போனார்களா என்று அறிந்து கொள்வதற்காகத் தேடிச்சென்று,
இன்னமும் போரின் சுவடுகள் இருக்கும் சொந்த மண்ணுக்குச் சென்று அங்கிருந்து கேள்விகளை எழுப்புகிறது. அதனால் அவற்றில் அறிவும், உணர்வும் இணைந்த தன்மை உள்ளது. நாவலின் பலம் இந்த அம்சம் என்று சொல்லலாம்.
உதாரணமாக – அக்கா ரெபெக்காவை இப்படிக் குருதி படிந்திருக்கும் பழிவாங்கும் நிலத்தில் இருப்பதை – பாலஸ்தீனர்களைப் பழிவாங்கும் தன்மை பற்றிக் கேள்வி கேட்கும் ஹ்யானா, சுகமாக இந்தியாவில் வாழ்ந்து வந்த தான் இவற்றைக் கேட்பது நியாயமா என்ற குறுகுறுப்பு அவளுக்கு இருந்துகொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நாம் எதிர்கொண்ட மோசமான வலிகளைமற்றவருக்கு அதேபோல தருதல் என்னவித நியாயம் ஆகும்? என்ற கேள்வியும் எழுப்புகிறார்.
பாலஸ்தீன் என்ற ஒரு இடமே கிடையாது. அனைத்துமே கடவுளால் தரப்பட்ட இஸ்ரேல் என்ற மூர்க்கமான எண்ணங்கள் ஓங்கி இருக்கும் இடத்தில், சக மனிதனின் உயிரைக் காவு வாங்கும் எந்தக் கொள்கையோ, மதமோ எதைச் சாதிக்க முடியும் என்று கேட்கும் ஹ்யானா, தான் சரியான கேள்வியைச் சரியற்ற இடத்தில் கேட்கிறோம் என்பதை அறிந்தவளாகவே இருக்கிறாள்.
குரானின் மூன்றில் ஒருபகுதி யூதர்களாகிய அவர்கள் வழிபடுபவர்களைப் பற்றியே இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறாள். இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் நமக்குத் தரப்பட்ட புனித பூமி இது என்று சொல்லும் அக்காவிடம், நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து சம்பாதித்த ஜெர்மன் நிலத்தை நம்மால் உரிமை கொண்டாட முடியவில்லை. உயிருக்குப் பயந்து அகதிகளாக வெளியே ஓடினோம். இந்த நிலையில் இரண்டாயிரம் வருடப் பஞ்சாயத்து எப்படித் தீர்வைத் தரமுடியும்? என்று கேட்கிறாள். இதைத் தன்னுடைய யூத இனத்தை நோக்கியேதான் கேட்கிறாள்.
நாவலை அது காட்டும் விளிம்புகளுக்குள், அதன் பின்னணியில் புரிந்துகொள்ள முயலும்போது பொருத்தப்பாடு குன்றிய சிறு இடங்கள் இரண்டு உண்டு.
நாவலில் எங்கேயும் சாதி பற்றிப்பேசப்படுவதில்லை. அப்படி இருக்க சாதி இல்லாத மண்ணை எம் மக்களுக்குத் தா என்று யூதர்களுக்காகப் பிரார்த்திக்கிறாள் ஹ்யானா. அங்கிருக்கும் இனச்சிக்கலைச் சாதிச்சிக்கல் என்கிறாள் என்றே இதைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது..
நாவலின் முடிவில் அனிதா இந்தியா திரும்பும்போது ஈராக் போர், குஜராத் கலவரம் போன்றவற்றை அறிகிறாள். ஷெட்டி என்ற வியாபாரி குஜராத் செல்லும்போது அங்கிருந்த முஸ்லிம் நண்பரின் மகளைக் கலவரத்திலிருந்து மீட்டு பெங்களூர் கொண்டுவந்து சவிதா என்ற பெயரில் அறிமுகப் படுத்துகிறார். அவள் அனிதா வீட்டில் வளர்கிறாள். இது சட்டென நாடகத்தனமான ஒரு தளத்துக்குச் சென்று அதன் மூலம் சமத்துவமான, மதவேறுபாடற்ற வாழ்வை வலியுறுத்தும் பாங்கில் முடிகிறது. மேலும், நாடுகளுக்கு இடையேயான ஈராக் போர்,. குஜராத்தில் நடந்த கலவரம், ஹிட்லர் செய்தது இன அழிப்பு. மூன்றையும் ஒரே கோட்டில் வைத்து நாவல் முடிவை நோக்கி அவசரமாகப் பேசுகிறது அனிதாவின் பார்வை.
அதே அனிதாதான் தன்னைப்பற்றி அக்கா கேட்கும்போது, ஹிட்லரின் தேசத்திலிருந்து காந்தியின் மண்ணிற்குச் சென்றேன். அவர்களும் நாட்டுக்காக உயிரை விட்டவர்கள். ஆனால் அஹிம்சை போராட்டத்தின் வடிவம் அற்புதமாக இருந்தது. மரண ஹோமம் செய்த நாஜி நிலத்திலிருந்து, அஹிம்சை தர்மம் இருந்த காந்தி, புத்தன், சமணர்களின் நாட்டுக்கு வந்திருந்தேன் என்கிறாள்.
***
மதத்தின் வாசகங்களே இன்று அரசியல் ரீதியாக மாற்றிப் புரிந்துகொள்ளப்படுகிறது என்பதைச் சொல்லும் இடம் ஒன்று நாவலில் உண்டு. ரெபெக்கா தங்கை அனிதாவிடம் கேட்கிறாள் ‘இந்த இஸ்ரேல் உன்னுடைய சந்ததிகளுக்கு என்றுதானே கடவுள் ஆபிரகாமிடம் சொன்னார்? கடவுள் வார்த்தை பொய்யாகுமா? என்று கேட்கும்போது அனிதா பதிலுக்குக் கேட்கிறாள் ‘அப்படி என்றால் இஸ்மாயிலும் அவருடைய சந்ததிதானே? என்று சொல்லி மேலும் பேசுகிறாள். இதற்கு மேலும் பேசினால் நான் காஃபிர் ஆக்கப்படுவேன் என்று நிறுத்திக்கொள்கிறாள். யூதர்கள் அனைவருமே இஸ்ரேலியர்கள். ஆனால் இஸ்ரேலியர்கள் அனைவரும் யூதர்கள் இல்லை என்பதை உணர்கிறாள்.
மதம் என்பது வெற்று அரசியலாக ஆகியிருக்கும் நிலையைச் சொல்லும் இடம் ஒன்று உண்டு. நவநாகரீக மேற்கத்திய உடை அணிந்துகொண்டு முரட்டுத்தனமாக முஸ்லீம்களை எதிர்க்கும் அக்கா மகன், டெர்ரி, ஒருநாளாவது சினகாக் சென்று பிரார்த்தனை செய்திருப்பானா? என்று ஹ்யானா கேட்கிறாள்.
***
இறந்த பிள்ளைகள் வளர்வதில்லை; நம்புவதற்கு உண்மைகள் தேவையில்லை; புனிதப் போருக்காக ரத்தம் சிந்த பழைய ஏற்பாட்டில் எங்கே சொல்லி இருக்கிறது?கல்லில் கடவுள் இல்லை என்றோம், ஆனால் கல் சுவரில் சாய்ந்து பிராத்திக்க வந்திருக்கிறோம் (அழுகைச் சுவர் பிரார்த்தனை); யார் தீவிரவாதிகள் என்று எப்படிச் சொல்வது?; போன்ற அழுத்தமான வரிகள் உள்ளன. 1943-ல் ஹிட்லரை எதிர்க்கவே முடியாது என்று அனைவரும் ஒதுங்கி இருந்தபோது தைரியமாக வெளியே வந்து போராடியது பெண்கள் மட்டுமே போன்ற முக்கிய தகவல்கள் நாவலில் உண்டு.
***
அடுத்தடுத்து முன்னேறிக்கொண்டிருக்கும் நாவல், அவளது இறுதித் தேடலாக இஸ்ரேல் சென்று இந்தியா திரும்புகையில் நாவல் சரியாக முடிந்து விடுகிறது. ஆனால் அதற்குப் பிறகு சவிதா என்கின்ற பெயரில் சபீகா என்ற முஸ்லிம் பெண் அவர்கள் வீட்டில் தங்கியிருப்பது ,மகன் விசு ஆத்திரப்படுவது, அம்மா அனிதா தனது யூத தந்தையின் சமாதியை முஸ்லிம் குடும்பம்தான் பராமரிக்கிறது என்று அழைத்துச் சென்று காட்டுதல், அவன் மனம் மாறுதல், அனிதா டவுன் ஹால் அருகே போராட்டத்தில் கலந்துகொண்டு திரும்புதல் என்று உபதேசமாக மாறி நீர்த்து முடிகிறது.
திரைப்படம் முடிந்த பிறகும் திரையில் ஓடிக்கொண்டிருக்கும் படக்குழுவினர் பெயர்களைப்போல, நாவல் நின்றிருக்க வேண்டிய இடத்தைத் தாண்டி சற்று செயற்கையாக – அதுவும் மிகக்குறைந்த பக்கங்களில், சொல்லி முடிக்கவேண்டிய அவசரத்தில் – ஓடி நிற்கிறது.
***
நாவலின் செய்தியைச் சொல்லும் பல இடங்களில் ஒரு இடம் – இயேசு சிலுவையில் அறையப்பட்டு அவரது உடல் கிடத்தப்பட்டிருந்த பாறையைப் புனித செபால்டின் தேவாலயத்தில் வைத்திருப்பதால் அதைப் பார்க்க யூத ஹ்யானா விரும்புகிறாள். நாம் இயேசுவை வணங்குவதில்லையே என்கிறாள் அக்கா ரெபெக்கா. ஆனாலும் தன் மகனைத் துணைக்கு வைத்து அனுப்பிவைக்கிறாள். ஆலயத்துக்குள் நுழையும் முன்பு ஹ்யானா தனது செருப்புகளை அக்காவிடம் விட்டுவிட்டுச் செல்கிறாள். செருப்பை ஏன் விடுகிறாய்? எனும்போது ஆலயத்துக்குள் வழிபடப் போகும்போது செருப்பு கூடாது என்ற இந்துமத நம்பிக்கையைச் சொல்கிறாள்.
வரலாற்றில் தவறுகள் இருக்கக் கூடும். அவற்றை இன்று நாம் சரி செய்ய முனைந்தால் புதிய தவறுகளைச் செய்வோம் – இன்றிருக்கும் பிரச்சினைகளை நாம் உருவாக்கிவிட்டு, அதற்கு இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பு இருந்தவற்றில் ஆதாரம் தேடிப்போவது அர்த்தமற்றது – தாய்நிலத்துக்கு மீண்டும் வரவேற்கிறோம் என்று நீங்கள் சொன்னால் அதை முதலில் சொல்லவேண்டியது எல்லையில் அவதிப்படும் பாலஸ்தீனரிடம்தானே – எங்கள் பிரச்சினைக்கும் உங்கள் பிரச்சினைக்கும் பொதுவான அம்சம் முஸ்லிம்கள் என்று இஸ்ரேலிய டெர்ரி இந்திய அனிதாவிடம் சொல்லும்போது அப்படி அல்ல என்று விளக்கி மறுப்பது – எல்லாப் புனிதப்போர்களிலும் பொதுவான பலியாடுகள் பெண்கள்தானே – பகிர்ந்துகொண்டு வாழ்ந்துவிடலாம், பறித்துக்கொண்டு வாழமுடியுமா? – போன்ற நல்ல வரிகள் நாவலில் உண்டு.
நாவலில் நிதர்சனமாக ஒரு உண்மை எளிமையாக வெளிப்படும் இடம் ஒன்று உண்டு. நான் சாதி (இனம் என்பதையே அப்படிச் சொல்கிறார் என்று தோன்றுகிறது) இல்லாத சமூகத்தின் கனவைக் காணவில்லை. இத்தனை ஆண்டுகளாக வேறொரு மதத்தின் நிழலில் இருந்தாலும், நான் ஒரு யூதப் பெண் என்பது எனக்கு மறக்கவில்லை. ஆனால் பயம் இல்லாமல் இருந்தேன். அவரவர் மதங்களைப் பின்பற்றி பயமில்லாமல் வாழக்கூடிய மண்ணின் கற்பனை எனக்கிருந்தது என்று அக்காவிடம் ஹ்யானா சொல்லும் இடம்.
நாவல் எழுதிய நேமிசந்த்ரா இந்த நாவலுக்காகச் சுமார் எட்டு ஆண்டுகள் உழைத்து, பல நாடுகளுக்குச் சென்று தேடி, ஏராளமான புத்தகங்களை வாங்கிப் படித்து, ஆங்காங்கே பலரைச் சந்தித்து பெரும் உழைப்பில் உருவான நாவல் என்பது படிக்கும்போது தெரிகிறது. பாராட்டப்படவேண்டிய உழைப்பு. படிக்க வேண்டிய நாவல்.
ஒரு சிறிய சந்தோஷம் – நானறிந்தவரையில், இந்த கன்னட நாவல் கர்நாடகத்தில் சிலாகிக்கப்பட்டதை விடத் தமிழில் பெரும் கவனத்தைப் பெற்றிருக்கிறது என்றே தோன்றுகிறது. அகாதமி பரிசு வருவதற்கு முன்னரே தமிழில் தந்த நல்லதம்பி பாராட்டுக்குரியவர்.