இச்சா நாவலை முன்வைத்து ஷோபாசக்தியுடன் ஓர் உரையாடல்.

எழுத்தாளர் ஷோபாசக்தி தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கும் குறிப்பிடத்தக்க ஈழத்தை சார்ந்த படைப்பாளி, இவர் சிறந்த திரைப்பட நடிகரும் கூட…! 

சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், விமர்சனங்கள் என்கிற எல்லா பிரிவுகளிலும் ஷோபாசக்தி நிறைய எழுதிக் குவித்திருக்கிறார்.  சமீபத்தில் வெளியான அவரின்  ‘இச்சா’ நாவலை முன்வைத்து கனலி கலை இலக்கிய இணையதளம் சார்பாக க.விக்னேஷ்வரன்  நடத்திய ஓர் உரையாடல் இதோ..!

 


‘இச்சா’ நாவலின் கரு எங்கு, எப்படிபட்ட மனநிலையில் உருவாகியது? இன்று நாவலை நீங்கள் வாசிக்கும் போது அந்த கரு அல்லது எண்ணம் சரியாக வந்துள்ளதாக நினைக்கிறீர்களா? 

‘Dheepan’ திரைப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டபோது, அந்த விழாக்களில் நான் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களதும் பார்வையாளர்களதும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியிருந்தது. அந்தப் படத்தில் நான் நடிகன் மட்டுமே என்றபோதிலும்,  படம் இலங்கையில் நடந்த யுத்தத்தைப் பின்னணியாகக் கொண்டிருந்ததாலும் நான் ஏற்ற பாத்திரம் புலிப் போராளியின் பாத்திரம் என்பதாலும் படத்தின் கதை ஓரளவிற்கு எனது சொந்த வாழ்க்கையை ஒத்திருந்ததாலும், படத்திற்கு அப்பால் தமிழர்கள் மீதான இனப்படுகொலை – போர்- புலிகள் குறித்தும் என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. பெண் போராளிகளது பாத்திரம் குறித்தும் தற்கொலைப் போராளிகள் குறித்தும் என்னிடம் திரும்பத் திரும்பக் கேள்விகள் எழுப்பப்பட்டன. அந்தக் கேள்விகளே  என்னை இச்சாவை எழுதத் தூண்டின. 

நாவலை வாசித்தவர்களிடமிருந்து வரும் எதிர்வினைகள் என்னை உற்சாகப்படுத்துகின்றன. எனது மனதில் நினைத்திருந்த கதைகளையும் படிமங்களையும் என்னுடைய போர் எதிர்ப்பு நிலைப்பாட்டையும் சரியான முறையில் வாசகர்களிடம் கடத்தியிருப்பதாகவே பெரும்பாலான எதிர்வினைகளைப் படிக்கும்போது நான் புரிந்துகொள்கிறேன்.

இலங்கையின் நில அமைப்புகள் சிலவற்றை பற்றி இச்சா மிகத்தெளிவாக சொல்கிறது . நாவலை எழுதும் போது அந்த நிலத்தை பிரிந்து வாழும் மன நெருக்கடிகளை எப்படி எதிர் கொண்டீர்கள்? 

சிறுகதை  அல்லது நாவல் எழுதுவது மட்டுமல்ல சினிமாக்களில் நாடகங்களில் நடிப்பதும் கூட எனக்குத் தெளிவான மூளைச் செயற்பாடு மட்டுமே. மன எழுச்சிகளும் உணர்வுத் தழும்பல்களும் என்னுடைய எழுத்தையோ நடிப்பையோ பாதிப்பதில்லை. பாதிக்கவும் கூடாது என்றே நினைக்கிறேன். 

எழுதுவதால் மனதில் நெருக்கடி புதிதாகத் தோன்றுவதில்லை. என் நிலத்தை நான் பிரிந்து வாழும் மன நெருக்கடியும் பதற்றமும் எப்போதும் என்னுடனேயே இருக்கின்றன. உண்மையில் ஒரு கதை அல்லது நாவல் எழுதி முடிக்கையில் அந்த நெருக்கடி அல்லது பதற்றம் மனதில் சற்றுத் தணியவே செய்கிறது.

நாவலில் வரும் கேப்டன் ஆலா என்கிற பெண் கதாபாத்திரம் பாதி உண்மை  அல்லது பாதி கற்பனையாக… ஏன் முழுவதும் உண்மையாக கூட இருக்கலாம். ஆனால் ஆலாவைப் பற்றி நாவலில் சொல்லாமல் போன சில விடயங்களை சொல்ல முடியுமா? 

எழுத்தாளர் ஜெயகாந்தனின் இந்தக் கூற்றை ஆயிரம் தடவை சொல்லிவிட்டேன். இன்னொருமுறையும் சொல்கிறேன்:

‘என் கதைக்குள் நான் சொல்லாத எதையும் கதைக்கு வெளியே நான் சொல்லிவிட இயலாது.’

இச்சா நாவலில் வலிந்து சில விஷயங்கள் திணிக்கப்பட்டாதாக உணர்கிறேன். முக்கியமாக பேய்களை பற்றியும் பாம்புகளை பற்றி வரும் சில பத்திகளும் அதாவது, நாவலில் வலிந்து எழுதப்பட்ட மாய யதார்த்தவாத பகுதிகள். இவற்றை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

நாவல் நிகழும் களம் மற்றும் மக்கள் சார்ந்தே பேய்களும் பாம்புகளும் மாந்திரீகமும் அங்கே வந்து புகுந்துகொண்டன. நாவலின் முற்பகுதி நிகழும் இலங்கையின் கிழக்குப் பகுதி மாந்திரீகத்திற்குப் பேர்போனது. பழந் தமிழ், பாடும் மீன்கள், சலதேவதைகள், நாக தம்பிரான்கள், கண்ணகி அம்மன் வழிபாடு, கூத்து, நாட்டார் பாடல்கள் எனத் தனித்தன்மை வாய்ந்த நிலமது. 

 

ஷோபாசக்தியின் மற்ற நாவல்களை விட இந்த நாவலில் விடுதலைப் புலிகள் மீது  குறைவான விமர்சனம் வைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட நாவல் சரியான மையத்தில் பயணம் செய்கிறது. இதை திட்டமிட்டு எழுதினீர்களா? 

‘ம்’ நாவலில் கூட ஒரேயொரு அத்தியாயத்தைத் தவிர புலிகள் குறித்த பேச்சே இருக்காதே.  விமர்சனத்தைத் திட்டமிடாமல் கதையைத்தான் திட்டமிடுகிறேன். இலக்கியத்தில் எனக்குக் கதைதான் முக்கியம். ஒட்டுமொத்தக் கதை வாசகர்களுக்கு அளிக்கும் சித்திரம்தான் என் அரசியல் விமர்சனமே தவிர, வேண்டுமென்றே வலித்து கதையில் ஆங்காங்கே விமர்சனக் கத்திகளைச் செருகி ஒருபோதும் கதையை அலங்கோலம் செய்யேன். அதேபோன்று, அந்தக் கதை நிகழும் போக்கின் குறுக்கே கோத்தபாய வந்தாலும் சரி புலிகள் வந்தாலும் சரி அவர்களை வீழ்த்திவிட்டுச் செல்லவும் தயங்குவதில்லை. 

கேப்டன் ஆலாவின் ஜெயில் அனுபவங்கள், வேதனைகள், ரணங்கள் ஷோபாசக்தியின் அனுபவங்கள் என்றே மனதில் தோன்றுகிறது?  இன்று திருப்பி பார்க்கையில் ஷோபாசக்தி அதை பற்றி நினைக்க விரும்புகிறாரா அல்லது மறக்க விரும்புகிறாரா? 

அதையெல்லாம் எப்படி மறக்க! நான் சாகும்வரை அந்தத் துர்நினைவுகள் என்னுடனேயே இருக்கும். ஆனால் நான் போரின் நடுவிலேயே தப்பியோடிப் புலம் பெயர்ந்துவிட்டேன். அதற்குப் பின்பு இலங்கையில் நிகழ்ந்தவை என் கற்பனைக்குக் கூட எட்டாத கொடுமைகள். நான் நாவலில் சுட்டிய மேற்கொள் போல, உயிர் பிழைத்த நாங்கள் அரைகுறை சாட்சியங்கள்தான். ஆழப் புதைக்கப்பட்டவர்களே முழுமையான சாட்சியங்கள்.

 

தஸ்தயேவ்ஸ்கி வரிகளும், பைபிள் வரிகளும், சிங்கள செவ்வியில் வரிகள் இச்சா நாவலில் எல்லாம் இடங்களிலும் வருகிறது இது ஷோபாசக்திக்கு இருக்கும் பரந்த வாசிப்பு அனுபவங்களை காட்டுகிறது.? இப்போதும் யாரையெல்லாம் வாசிக்கிறீர்கள்? எப்படிப்பட்ட படைப்புகளை வாசிக்கிறீர்கள்? 

எனக்குத் தமிழ் மொழியில் மட்டுமே வாசிக்கத் தெரியும். இப்போது தமிழ் நூல்களை வாசிப்பதும் ஒரு ரிஸ்க்கான வேலையாகிவிட்டது. சில வருடங்களிற்கு முன்புவரையும் இலக்கியவாதிகளுக்கும் வாசகர்களிற்கும் பதிப்பகங்களுக்கும் எது இலக்கியம் எது இலக்கியமில்லை என்பதில் குழப்பம் இருந்தாலும் எது போலி எழுத்து என்பதில் எந்தக் குழப்பமும் முத்தரப்பிலும் இருந்ததில்லை. அப்போது சுஜாதாவுக்கும்  வாஸந்திக்கும் பாலகுமாரனுக்கும் இலக்கியவெளியில் இடமே கிடையாது.

நமக்கு முந்தைய தலைமுறை இலக்கியவாதிகளிடமும் இலக்கிய விமர்சகர்களிடமும் ஒரு பண்பிருந்தது. தமக்குப் பிடிக்காத ஓர் இலக்கியவாதி எழுதிய சிறந்த இலக்கிய நூலை அவர்கள் பகையுணர்ச்சியால் அநீதியான முறையில் நிராகரிக்கக்கூடும். ஆனால் தமது நண்பர்களோ சகாக்களோ எழுதிய ஒரு மோசமான நூலை ஆகச் சிறந்த இலக்கியம் என அவர்கள் எழுதவேமாட்டார்கள். 

ஆனால் இப்போது வேற லெவல். வெறும் குப்பை எழுத்துகளை வெளியிடும் பதிப்பாளர்களும் குப்பையைக் கொட்டியவரின் சகாக்களான இலக்கியவாதிகளும் அவற்றை ‘உன்னத இலக்கியம்’ ‘உலக மகா காவியம்’ என்றெல்லாம் சொல்லிவிடுகிறார்கள். நாமும் நம்பி புத்தகத்தை வாங்கி ஏமாந்துவிடுகிறோம். எனவே மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருக்கிறது. புத்தக சந்தைக்குள் நடக்கும்போது, கண்ணிவெடி நிலத்தில் நடப்பதுபோன்ற கவனத்துடன் நடக்க வேண்டியிருக்கிறது. 

இந்த விஷப் பரீட்சைக்கு அப்பால், சிறுபத்திரிகைகள் வழியே உருவாகி வந்த எல்லா எழுத்தாளர்களையும் மொழிபெயர்ப்பு நாவல்களையும் தேடித் தேடிப்  படித்துவிடுகிறேன். 

 

இச்சா’ போன்ற ஒரு நாவலை எழுதி முடித்தபின்பு உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது.?அடுத்த நாவல் பற்றி எண்ணம் மனதில் வந்திருக்கிறதா?

என் மனதில் எப்போதுமே குறைந்தது மூன்று நாவல்கள் ஏறக்குறைய முழு வடிவத்துடனிருக்கும். இப்போதுமுள்ளன. அவை எழுத்தாக மாறும் போதுதான் மனதிலிருந்த நாவல் வடிவத்தின் இலக்கிய யோக்கியதையும் திறனும் தெரியவரும். எனவே அடுத்து எதை எழுதுவது என்ற பதற்றம்தான் இப்போது மனதிலிருக்கிறது. 


உரையாடியவர் : க.விக்னேஷ்வரன்

3 COMMENTS

  1. மிகவும் நேர்த்தியான மற்றும் அருமையான நேர்காணல் தோழருக்கு விக்னேஸ்வரனுக்கு வாழ்த்துக்கள்..

    எழுத்தாளர் ஜெயகாந்தனின் இந்தக் கூற்றை ஆயிரம் தடவை சொல்லிவிட்டேன். இன்னொருமுறையும் சொல்கிறேன்:

    ‘என் கதைக்குள் நான் சொல்லாத எதையும் கதைக்கு வெளியே நான் சொல்லிவிட இயலாது.’

    நிதர்சனமான உண்மை..

    . புத்தக சந்தைக்குள் நடக்கும்போது, கண்ணிவெடி நிலத்தில் நடப்பதுபோன்ற கவனத்துடன் நடக்க வேண்டியிருக்கிறது.

    இந்த விஷப் பரீட்சைக்கு அப்பால், சிறுபத்திரிகைகள் வழியே உருவாகி வந்த எல்லா எழுத்தாளர்களையும் மொழிபெயர்ப்பு நாவல்களையும் தேடித் தேடிப் படித்துவிடுகிறேன்.

    மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களும் நேர்காணலை நடத்தி அதற்கான நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் தோழருக்கு…..

  2. “நன்றி “என நான் சொல்ல நினைப்பது உணர்வு சார்ந்த என் உயிரை.

    வழி காட்டுதலை தலயாய கடமையாக கொண்டு பல கலைஞர்களை இணைக்கும் இணையமாய் செயல் படும்.” கனலி ” வாழ்க !!! வெல்க !!!!.

  3. இப்போது இச்சாவை வாசித்துக்கொண்டிருக்கின்றேன். இந்நேரத்தில் மிகவும் பயணுடைய உரையாடல் இது. நன்றி விக்னேஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.