இராவணத் தீவு – பயணத் தொடர் 3

 

பின்னவலை : யானைகள் சரணாலயம்

 

” Man only likes to count his troubles , but he does not count his joys ” 

-fyodor Dostoevsky

நான் என் இன்பங்களை எண்ணுவதற்கு விரும்புகிறேன். வாழ்க்கை முழுக்க முழுக்க கொண்டாட்டங்களுக்கானவை. அந்த கொண்டாட்டங்களை கண்டடைய பயணங்கள் தேவையென்பதை நான் உண்மையாகவே நம்புகிறேன். தேவையாய் இருப்பதெல்லாம் எந்த இக்கட்டான சூழலைவிட்டும் முன்னோக்கி சிறிதுதூரம் செல்ல முடியுமாக இருக்கின்ற மனம்.

இந்தமுறை என் பயணங்கள் முழுவதும் ஜெ.மோவின் யானை டாக்டரை வாசித்துக்கொண்டிருந்தேன். ஒரே மூச்சில் படித்து முடித்துவிட முடியாமல் இல்லை. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக யானைகளின் உலகத்தில் நுழைந்துக்கொண்டிருந்தேன். எதை எழுதினாலும் வாசகனை அதன் பின் சுற்றவைக்கிற மாந்திரீகம் அவர் எழுத்துக்கு உண்டு. யானைகளை விரும்புகிறவர்கள் நிட்சயமாக அதை படிக்கவேண்டும்  . John Donne சொல்வதைப்போல  யானைகள் என்பது,

” Nature’s great masterpiece, an elephant; the only harmless great thing “

உலகின் அதியுன்னத படைப்பான யானைகள் பற்றி சில விசயங்களை தெரிந்துக்கொள்வது , இந்த பயணத்தில் மேலும் பல சுவாரஸ்யங்களை உங்களுக்கு ஏற்படுத்தக்கூடும் . அதில் முக்கியமாக இதை கருதுகிறேன்,

சுமார் பதினைந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் 17 வகையான யானைகள் காடுகளில் திரிந்தன. கங்கை நதி உருவாகியபோது கூடவே பல்லாயிரக்கணக்கான நீர் யானைகள் இருந்தன. இப்போது இந்தியா , ஆபிரிக்கா யானைகள் மட்டுமே இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் யானைகளை பாதுகாக்கவேண்டிய சரணாலயங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று இருந்தது. இந்த இடத்தில் இருந்துதான்  பின்னவலை யானைகள் சரணாலயம் நோக்கிய பயணம் தொடங்கியது.

அது மெல்லிய  சாரலும் , மழையுமான ஒரு நாள்.  இன்று நெருக்கமான சாலைகளாக மாறிவிட்ட கண்டியின் இந்த நெடும்பாதைகள் , மலைகளையும் , நெடிய காடுகளிற்கும் ஊடாக போடப்பட்டது என்பதால் கண்டியை ஊடறுத்து செல்கின்ற எந்தப்பயணமும் வழிநெடுக பச்சை மலைகளினதும் , நதிகளினதும் , சிங்கள குடியிருப்புகளினதும் , பௌத்த மடாலயங்களினதும் காட்சியை கொண்டிருக்கும். இரயிலில் கண்டியை ஊடறுத்து செல்கின்ற பயணங்களில் ஜன்னல் வழி விரிகின்ற காட்சியினை பார்ப்பதற்கு அவ்வளவு பசுமையாக இருக்கும். கண்டி என்றால் எனக்கு காட்டின் வாசனை , மலைகளின்  வாசனை, பூக்களின் வாசனை, எல்லா பக்கமும் ஓடுகின்ற நதிகள், தேயிலைக்காடுகள், இவைதான்.

மலைகளையும் , காடுகளையும் வெட்டி குடியிருப்புகள் அமைக்க முன்னர், பாதைகள் அமைக்க முன்னர் , இவை யானைக்காடுகளாகத்தானே இருந்திருக்ககூடும் , இப்படியெல்லாம் மனம் சிந்தித்துக்கொண்டே இருந்தது. முடிவற்ற அந்த பசுமையான காட்சிகளை கடந்து கேகாலை மாவட்டத்தில் இரம்புக்கனையில் இருக்கின்றது பின்னவலை யானைகள் சரணாலயம். சுமார் இருபைத்தைந்து ஏக்கர் தென்னம்தோப்பில் மகாநதிக்கரையில் இந்த பின்னவலை யானைகள் சரணாலயம் அமைந்திருக்கின்றது .  1975 இல் கொண்டுவரப்பட்ட நீலா, குமாரி, விஜயா, கதிரா, மத்தாலி என்ற அனாதரவாக்கப்பட்ட யானைக்குட்டிகளை பாதுகாக்கவே  உருவாக்கப்பட்டிருந்தது. இன்று 88 யானைகள் வரை அவ்வாறு இங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. காட்டின் ராஜாவென்று சிங்கத்தை சொல்வார்கள். நான் யானையை சொல்வேன். ஏனோ உருவத்திலும் உடல் வலிமையிலும் பெரிய அந்த யானைகள் நடமாடும் காடு போல தோன்றுவதுண்டு.

மகிழ்ச்சியையும் துயரையும் வெளி தீர்மானிக்கும். சில இடங்கள் மகிழ்வுக்கானவை, சில இடங்கள் அமைதிக்கானவை , சில இடங்கள் கொண்டாட்டங்களுக்கானவை என்பதை தீர்மானிக்கும் அல்லது தீர்மானித்து கொள்கிறோம். அதனால்தான் மகிழ்வான, துக்கமான நினைகளை மீட்டுபவையாக இடங்கள் காணப்படுகின்றன. இந்த  பின்னவலை யானைகள் சரணாலயம் மகிழ்ச்சிக்கான இடம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

நுழைவுவாயிலில் இருந்து யானைகள் தங்கியிருக்கிற இடத்திற்கு சிறிதுதூரம் நடந்து செல்ல வேண்டும். இயற்கையான ஒரு சூழலில் மழைத்தூரலோடு நடந்து செல்கிற அந்த வழி நன்றாகத்தான் இருந்தது.

ஒரு மகிழ்ச்சியான யானைக்குட்டியை வழியில் பார்க்க கிடைத்தது. அந்த நிமிடத்தில் உலகின் அதிகூடிய மகிழ்ச்சியான யானைக்குட்டியாக அது எனக்கு தோன்றியது. அதன் வாழ்வில் முக்கியமான இழப்புகள் நடந்திருந்தன. அது தனது தாயையும் , கூட்டத்தையும் , வாழ்விடத்தையும் இழந்திருந்தது.

ஆனாலும் அது எல்லாவற்றையும் மறந்து விளையாடிக்கொண்டிருந்தது.  அந்த விளையாட்டைதான் வந்திருந்த எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இந்த மனநிலையை எடுத்துக்கொண்டு நகரமுடியுமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் .

 பின்னவலையை நோக்கி வருகிற பயணிகள் முக்கியமாக இரண்டு காரணங்களுக்காக வருவார்கள். ஒன்று இங்கு இருக்கும் இந்த யானைக்கூடாரங்களை பார்ப்பதற்கு , அடுத்தது மகநதியில் யானைக்குளியலை பார்ப்பதற்கு. இந்த யானைக்குட்டியிடம் இருந்து யானைக்கூடாரத்தை அடைய சிறிது தூரம் நடக்கவேண்டியிருந்தது.

. இங்கும் நிறைய யானைக்குட்டிகள்.   விளையாட்டுத்தனமும் குரும்பும் என்றிருந்தன . சாப்பிட்டுக்கொண்டே இருக்கவும் மகிழ்ச்சியாக இருக்கவும் அவை விரும்பின. பிறகு பார்வையாளர்களின் கைகளையோ ஆடையையோ பிடித்திழுத்து இங்கே வா வந்து என்னுடன் விளையாடு என்பது போல இருந்தது அவற்றின் சேட்டைகள். இந்த இரண்டு இடத்திற்கும் நடுவில்  பாதையின் இருமருங்கிலும் நீண்டிருக்கிறது கடைகள். இலங்கைக்கு என விசேடமான கைவினைப்பொருட்கள். ஆடைகள், சிறிய சிறிய நினைவுப்பொருட்கள் என நிறைய பொருட்கள் இங்கு கிடைக்கின்றன. ஆனால் சிறியவொன்றுக்கும் இந்தமாதிரி சுற்றுலாத் தலங்களில் அதிக விலையை கொடுக்கவேண்டியிருக்கிறது. நியாயமான விலைகளாக அது எனக்கு தோன்றுவதில்லை. இலங்கையில் எல்லாமே அப்படித்தான் இலங்கை ரூபாவில் அது அதிகமான விலைக்கு வைத்தே விற்கப்படுகிறது. இங்கு விற்கப்படுகிற யானை உருவ அலங்காரம் பதித்த உடைகள் பயணிகளிடம் பிரசித்தமாக இருக்கிறது.  இலங்கை முழுவதும் பயணம் செய்கிற பாதி வெளிநாட்டு பயணிகள் இந்த யானைப்படம் தாங்கிய உடைகளை விரும்பி அணிந்துகொள்வார்கள். இந்த கடைத்தெருக்களை கடந்து மகாநதிக்கரையை அடைந்தாயிற்று. அங்கே மேற்தளத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்தவாறு யானைகள் கூட்டம் கூட்டமாக குளிப்பதையும் விளையாடுவதையும் பார்ப்பது மனதிற்கு ஒரு இலகுவான உணர்வையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. 

மகிழ்ச்சியை ஒரு மன இலகுவை ஏற்படுத்துகின்ற மிருகமாக யானைகளை அன்று கண்டேன்.

ஆனால் அவற்றால் அதை உணர முடியுமா என்று எனக்கு தோன்றவில்லை. அது அதன் இயல்பில், அதன் மகிழ்வில், அதன் பொழுதுகளில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தது. ” Be a rainbow someone clouds ” என மாய ஏஞ்சலோ சொல்லியிருப்பார். அதுபோல அன்று எங்கள் வானத்தில் சிறு மகிழ்ச்சியின் வண்ணக்கோடுகளாக இந்த யானைகள் இருந்தன. மிருகங்களின் உலகில் மனிதர்கள் இல்லை. அவை அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கின்றன. எங்கள் உலகில் மிருகங்கள் இருக்கின்றன. மிகவும் உணர்வுபூர்வமாக அதை நாங்கள் நேசிக்கிறோம். பாதுகாப்பு, வேலையை இலகுபடுத்த, வியாபாரம் , போர், உணவு , செல்லப்பிராணி என ஏதேதோ காரணத்திற்காக நாங்கள் மிருகங்களின் தயவில்லாமல் எப்பொழுதுமே நகரமுடியாது இருக்கிறோம். எல்லாவற்றையும் இயந்திரத்தனத்தால் செய்து முடித்துக்கொள்ள முடியும் என்று ஆகிவிட்டபோதும் எங்கள்  உலகில் சிறிய பூனைக்குட்டியாவது தேவைப்படுகிறது. நிட்சயம் இந்த யானை சரணாலயத்திற்கு வாருங்கள். நிட்சயம் மகிழ்ச்சியடைவீர்கள். ஆனால் இயற்கையின் அற்புதமான மிருகம் எப்படியெல்லாம் அழித்துக்கொண்டிருக்கிறோம் என்றும் தோன்றும். யானைகளிடம் இருந்து மனிதன் நிறைய கற்றுக்கொள்ள இருக்கிறது. இதோ இந்த மாதிரியான பண்புகளை ,

“ Elephants love reunions. They recognize one another after years and years of separation and greet each other with wild, boisterous joy. There’s bellowing and trumpeting, ear flapping and rubbing “

-Trunks entwine.


  • நர்மி

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.