வி.பி.சி. நாயர்,தமிழில் (முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்)

 


அப்துல் ரஹ்மான் ( வைக்கம்) முகம்மது பஷீர்
புனை பெயர்
வைக்கம் முகம்மது பஷீர்.

 

சிறுகதைகள், நாவல்கள் கட்டுரைகள் என சுமார் 60 ஆண்டுகளாக எழுதி வந்தவர். இவருடைய சிறுகதைகள், நாவல்கள் மலையாள இலக்கிய உலகில் மிகச்சிறந்த படைப்புகளாக கருதப்படுகின்றன. ‘ பிரேமலேகனம்’. ‘பால்யகால சகி’ ‘ என் தாத்தாவிற்கு ஓர் ஆனை இருந்தது. ‘ பாத்துமாவின் ஆடு’ போன்ற நாவல்களும் ‘ எட்டுக்காலி மம்மூஞ்ஞு’ ஆனை வாரி ராமன் நாயர்’ ‘ பூவம்பழம்’ போன்ற சிறுகதைகளும் குறிப்பிடத்தக்கவை. ‘ மதிலுகள் என்ற நாவல் சினிமாவாக வந்து ஜனாதிபதி பரிசையும் பெற்றுள்ளது. மற்றும் மாநில சாகித்ய அகாதமி பரிசும் ‘ ஞானபீட விருது’ம் பெற்றவர்.

நல்ல மழை செய்து முடிந்த ஒரு நாள். அன்று மதியம்தான் நாங்கள் பேப்பூர் சுல்தானின் அரண்மனையை அடைந்தோம். உள்ளேயுள்ள ஓர் அறையிலிருந்து ஒரு புயலைப்போல் வெளியே வந்த சுல்தான். குளுமை நிறைந்த நிலவைப்போல் எங்களை வரவேற்றார். ஓர் உண்மை துறவியைப் போன்று அமைதியுடன் இருந்தது அவருடைய முகம். ஆச்சரியத்தையோ, மகிழ்ச்சியையோ, கோபத்தையோ அந்த முகத்தில் காண முடியவில்லை. ஆனால், சில நிமிடங்களிலேயே அந்த மந்திரவாதி எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அவருடைய வழுக்கைத் தலையில் பிரதிபலித்த பிரகாசத்தையும், வீணை கம்பியின் ஸ்வரத்தை போன்று மிருதுவான மனதிலுள்ள நீல வெளிச்சத்தையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்த போது அந்த ஆச்சரியம் இரட்டிப்பாயிற்று. திடீரென, அந்த ‘ பாத்துமாவின் ஆட்டுக்காரன்’ தனது ஜீவித நிழல் களைகட்டி வைத்திருந்த நினைவென்னும் அறைகளின் வாசற் கதவுகளை முழுமையாகத் திறந்தார். ஆவலை பிறப்பிக்கும் அசாதாரணமான அந்த பார்கவி நிலையத்திற்கு, அன்பார்ந்த வாசகர்களே! உங்களை அன்புடன் வெளியே வருமாறு அழைக்கின்றேன்.

1910இல் தலையோலைப் பறம்பிலுள்ள புகழ்பெற்ற ஒரு முஸ்லிம் குடும்பத்தில் காயி அப்துல் ரஹ்மானுக்கும் குஞ்ஞாச்சும்மாவுக்கும் மூத்த மகனாக பிறந்தார் பஷீர். அப்துல் காதர், பாத்திமா, முஹம்மது ஹனிபா, குஞ்ஞானும்மா, அபுபக்கர் ஆகியோர் அத் தம்பதியினரின் மற்ற குழந்தைகள் ஆவர். தொழுகையும், நோன்பும் சக்காத்துமெல்லாம் தவறாமல் கடைப்பிடித்த ஓர் உண்மையான முஸ்லிம்களாக இருந்தார்கள் பஷீரின் தாய் தந்தையர். அதனால் பஷீர் தனது எட்டாம் வயதிலேயே குர் ஆனை படித்து முடித்து விட்டார் என்றாலும், தன் இறுதிக்காலம் வரையில் ‘ சுலைமான்’ குடிக்கும் போது மட்டுமே நபியை நினைத்தார். மலையாளத்தை நான்காம் வகுப்பு வரை படித்த பஷீர், அதன்பின் வைக்கம் ஆங்கில மீடியம் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்துவிட்டார். ஒரு வியாபாரியாக இருந்த தனது தந்தை அக்காலத்திலேயே தன்னை ஓர் ஆங்கில மீடியம் பள்ளிக்கு அனுப்பியது ஒரு புரட்சிகரமான செயல்தான் என்று பஷீர் கருதினார். வைக்கம் ஆங்கிலப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் படிக்கும்போதுதான் சுதந்திரப் போராட்டம் பஷீரிடம் ஓர் ஆவேசத்தை ஏற்படுத்தியது. காந்திஜி வைக்கத்துக்கு வருகை தந்தபோது, அவரைத் தான் தொட்டுப் பார்த்த அந்த ஒரு நிமிடத்தை பஷீர் உடல் சிலிர்க்க என்றும் நினைத்துப் பார்த்தார். ஒரு ரம்ஜான் தினத்தில் அந்தி வேளையில் ஏதோ ஒரு குற்றத்திற்காக பஷீரின் ‘ பாவா’ இரண்டு மூன்று அடிகள் அவரை அடித்து விட்டார். அதனால், அந்த அடியின் வேதனை மறையும் முன்பே தன் தாயிடம் ஒரு கிளாஸ் தண்ணீரை மட்டும் வாங்கிப் பருகிவிட்டு யாரிடமும் ஒன்றும் பேசாமல் வீட்டை விட்டே வெளியேறிவிட்டார் பஷீர். தலையோலைப் பறம்பிலிருந்து புறப்பட்ட பயணம் கோழிக்கோட்டில் முடிந்தது. இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்தார். உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டு ஜெயிலுக்கு போனார். கோழிக்கோட்டிலும் கண்ணணூரிலுமுள்ள ஜெயிலில் அடைக்கும் முன்பு அடியும் உதையும் வாங்கியதுடன் துப்பாக்கி முனையாலும் ஏராளமான குத்துப்பட்டார். கண்ணனூர் ஜெயிலில் இருக்கும்போதுதான் புரட்சியாளர்கள் உடன் அவர் தொடர்பு கொண்டார். ஜெயிலில் தண்டனை முடிந்து வெளியே வந்தபோது பஷீரின் மனதிலிருந்த காந்திஜியின் அஹிம்சா கொள்கை புகைந்து ஆவியாகி போய்விட்டது. தொடர்ந்து, இந்த தைரியசாலி என்ன செய்தார் என்பதை அவருடைய வார்த்தைகளிலேயே புரிந்து கொள்ளுங்கள்.

” ஜெயிலிலிருந்து விடுதலையாகி வீட்டிற்கு திரும்பிய போது என் முன்னே ஓர் இரத்த கடலே தெரிந்தது. ஒரு பகத்சிங்காக இருந்தேன் நான். அதே மீசை. நான் இன்றும் கூட அதை நினைத்துக் கொள்கிறேன். வீட்டிலிருந்து மீண்டும் புறப்பட்டேன். எனது லட்சியம் தீவிரவாதத்தில் ஈடுபட்டது. அடிமை பாரதத்தின் சுதந்திரத்திற்கு எதிர்ப்பாக நிற்பவர்களை கொலை செய்யும் ஒரு தீவிரவாத கூட்டத்திற்கு நான் உருவம் கொடுத்தேன். ஒரு பத்திரிகையையும் ஆரம்பித்தேன். அதில் தீப்பொறி பறக்கும் கட்டுரைகள்! சிவப்பு எழுத்துக்களால் ஆன சுவரொட்டிகள்! கொலை செய்யப்படுபவர்களின் பட்டியலே நாங்கள் தயார் ஆக்கினோம். எங்கள் பத்திரிகையை கண்டுபிடித்து விட்டனர். கைது வாரண்டுகள் புறப்பட்டன. நான் இரவோடு இரவாக ஏழெட்டு மைல்கள் நடந்து சென்று ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ரயில் ஏறினேன்- சுதந்திரமற்ற இந்தியாவை சுற்றி பார்க்க…”
ஏழெட்டு ஆண்டுகள் அந்தப் பயணம் நீண்டு கொண்டிருந்தது. அந்தக் கால கட்டங்களில் பஷீர் செய்யாத வேலைகள் மிக சொற்பம் என்றே கூறலாம். அந்தப் பயணம்தான் மனக் கிளர்ச்சிகள் என்னும் பூக்களால் மாலை தொடுக்கும் பஷீர் என்னும் இலக்கியக் கர்த்தாவை சிருஷ்டித்தது ; மனித நேயனும் நகைச்சுவையாளனுமான பஷீரை உருவாக்கியது.

” திருமணம் மிகத் தாமதமாகத்தான் நடந்தது. அதனால் தான் இப்போதும் கூட நல்ல ஆரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் வாழ்கிறேன். என் வயது எத்தனை என்று எனக்கே தெரியாது. என் ஜாதகத்தை என் சகோதரன் எரித்து விட்டான்” என்று பஷீர் சொன்னார்.

மனைவியின் பெயர் ஃபாபி ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளார்கள். மகள் ஷாஃபினா மகன் பெயர் குட்டான். குட்டாயி என்று அழைக்கிறார்கள். பல ஆண்டுகளாக பேப்பூரில் தான் வசிக்கிறார்கள். தீவிர முயற்சியால் தான் வைவாலியில் உள்ள அந்த வீடும் இடமும் கிடைத்தது என்று பஷீர் சொன்னார். இப்போதெல்லாம் பயணம் அதிகம் செய்வதில்லை. மாலை நேரங்களில் மட்டும் சிறிது நேரம் வெளியே செல்வார். சிறுது நேரம் சீட்டாடுவார். பள்ளிக்கூட ஆசிரியர்கள் தான் அவரது கூட்டாளிகள். அவர்களின் கையிலும் காசு இல்லாமையால் பொழுது போக்காகதான் ஆடுவார்கள்.

பஷீர் கூறியதை மேலும் கவனியுங்கள்,

” மனம் தடுமாறும் ஒரு தராசு போன்றது. அதன் தட்டுக்களை சமமாக நிலைநிறுத்த சிறிது சிரமப் படவும் வேண்டியுள்ளது. சாமியார் ஆகி விடுவதுதான் அதற்கான வழி என்றாலும்கூட நானும் வாழ்கிறேன்.”

” எதற்காக வாழ்கிறீர்கள்? என்று கேட்டதற்கு இவ்வாறு கூறிய பஷீர் மேலும் சிலவற்றையும் கூறினார். ”பசிக்கும்போது சாப்பிடுவதில் ஒரு சுகம். சாப்பிட்டபின் உறங்குவதில் ஒரு சுகம். மது அருந்துவதில் ஒரு சுகம். சொரிகின்றதில் ஒரு சுகம். இப்படி ஒவ்வொன்றையும் பார்த்தாள் வாழ்க்கை முழுவதும் சுகம் உண்டு அதனால், எப்படி தமிழ் இருக்க முடியும்?”

‘பிரசவம் என்பது இப்படி நடக்கிறது? பெண்கள் மட்டும் தான் பிரசவிக்கிறார்கள். ஆண்களால் ஏன் பிரசவிக்க முடியவில்லை? என்பது சந்தேகங்கள் 12 வயது சிறுவனான பஷீருக்கு வளர்ந்து மலர்ந்தன. அதனால் எப்படியாவது ஒரு பிரசவத்தை நேரில் பார்த்துவிட வேண்டும் என்னும் தீர்மானம் அவர் மனதில் உருவாயிற்று. கொச்சேளம்மாள் என்னும் பெண்ணின் பிரசவ நேரம். ‘பப்பன்’ என்னும் தன் கூட்டாளியையும் சேர்த்துக் கொண்டு பிரசவம் நடக்கும் அந்த வீட்டின் மேல் தட்டில் ஏறினார் பஷீர். ஒரு பலகையை எடுத்துவிட்டு பொறுமையாக உள்ளே பார்த்தார். இருளில் மண்ணெண்ணெய் விளக்கு மட்டும் அங்கு எரிந்து கொண்டிருந்தது. அதை மட்டும்தான் அவர்களால் பார்க்க முடிந்தது. அதற்குள் அவர்கள் ஏறியிருந்த இடத்திலிருந்து தூசுகள் மேலேயிருந்து கீழே கொட்டியதால், வீட்டின் தட்டின் மேல் யாரோ ஏறியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட பெண்கள் கூச்சலிட்டார்கள்.அப்புறமென்ன? தொடர்ந்து அடியுதைகள் விழுந்தன. கண்களில் மஞ்சள் நிறமும் பூச்சிகளும் பறந்தன. இளம் வயதில் பெரும் போக்கிரியாகவும், துஷ்டனாகவும் தான் பஷீர் விளங்கினார். இளமைப் பருவத்தில் நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியை அவர் விவரித்தார்.

இரண்டாம் படிவத்தில் படித்துக் கொண்டிருந்த காலம். ஒரு நாள் குளிப்பதற்காகக் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தபோது கயிறு அறுந்து வாளி கிணற்றுக்குள் விழுந்து விட்டது. குறும்புத்தனத்தில் மிதமிஞ்சிய பஷீர் கிணற்றுக்குள் இறங்கினார். அங்கேயே குளித்து முடித்துவிட்டு வேட்டி துண்டையும் துவைத்து அலசிப் பிழிந்துகொண்டு வாளியுடன் மேலேறி வந்தார். அன்று தான் வாங்கிய அடியின் சூடு இறுதிநாள் வரையில் தன் உடலில் உள்ளதை மறக்கவில்லை. பாம்புகளும், வறட்டுச் சொறி நாய்களும் போன்று கிணறும் பஷீரின் வாழ்க்கையில் நல்லதொரு பங்கு வகித்துள்ளது என புதியதொரு நிகழ்ச்சியை அவர் விவரித்தபோது எனக்கும் தோன்றியது. பஷீரின் வாய் மூலமாகவே அந்நிகழ்ச்சியையும் இங்கே நான் எழுதுகிறேன்.

” ஒரு முறை என் மனைவியின் மோதிரம் ஒன்று கிணற்றில் விழுந்து விட்டது. அதை எடுக்க ஆளைத் தேடியபோது அசுத்தமான ஒருத்தன் வந்தான்.
அவன் கிணற்றில் இறங்கி மோதிரம் எடுப்பதற்குள் சிறுநீர் கழித்துவிட்டால் என்ன செய்வது என நினைத்த நான், அவனை இறங்க வேண்டாம் என்று கூறிவிட்டேன். அவன் போனபின், தென்னை மரத்தில் கயிற்றை கட்டி கிணற்றுள் விட்டு, அக் கயிற்றின் வழியாக நானே இறங்கினேன். தண்ணீர் இரண்டாள் மட்டம். அதனுள் மூழ்கி மோதிரத்தை எடுப்பதத்திற்குள் நான் மிகவும் சோர்ந்து விட்டேன். வியர்க்க ஆரம்பித்து விட்டது; மூச்சு நின்றுவிடும் போல் தோன்றியது. என் நிலையைக் கண்ட மனைவி ஒரு ஏணியைக் கிணற்றுள் விட்டாள். அதன் வழியாகவும் ஏற முடியாது என்னும் நிலைமையை கண்டவுடன் அவள் பதட்டமடைந்து, ” ஐயோ, எப்படியாவது ஏறி வந்து விடுங்களேன்” என்று கூச்சலிட்டாள். அது எனக்கு ஒரு பிரத்யேக சக்தியுள்ள சத்தமாக இருந்தது. அந்த சத்தத்தின் உறுதியினாலேயே நான் ஏறி விட்டேன். கிணற்றில் இருந்து தப்பித்து வெளியே வந்ததும் கிணற்றின் கரையிலேயே பல நிமிடங்கள் மேல் மூச்சு வாங்கிக் கொண்டு அப்படியே கிடந்தேன். அது , ஒரு போதும் என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.’’

வாழ்வின் பெரும்பங்கை தேச சஞ்சாரம் திலேயே அலைந்து திரிந்து கழித்துவிட்ட பஷீரின் அனுபவங்கள் அதிசயப்பட தக்கவையாகும். அவர் தன் பயணக் காலங்களில் ஆங்கிலத்தையும் இந்துஸ்தானியும் தான் பயன்படுத்தினார். கைரேகை சாஸ்திரம், முக லட்சண சாஸ்திரம், காலிஃகிராபி, பிராணாயாமம், ஹிப்னாட்டிசம், சமையல், தோட்டவேலை போன்றவைகள் எல்லாம் கூட அவர் தம் பயணத்தில் கற்று கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கராச்சியில் இருந்தபோது ஒரு ஓட்டலை கூட பஷீர் நடத்தியது உண்டு. லாகூரில் உள்ள ‘ சிவில் அண்ட் மிலிட்டரி கஸ்ட்’ என்ற பத்திரிகையில் காப்பி ஃபோல்டர் ஆகவும் வேலை பார்த்ததுண்டு. ”ருட்யார்டு கிளிப்பிங்” இங்கே வேலை செய்து கொண்டிருந்தார்.” என்று அந்தப் பத்திரிகை அலுவலகத்தில் பித்தளை போர்டில் செதுக்கி வைத்துள்ளதை பஷீர் எப்போதும் நினைவு கூர்ந்தார். தட்சசீலாவிலும் பஷீர் தங்கியிருந்துள்ளாராம். ஆனால் அங்கேயுள்ள ரகசியங்கள் மட்டும் அவருக்கு அந்நியமானது என்றார்.

ஷோலாப்பூரில் இருந்தபோது வாழ்வதற்கு வேறு எந்த வழியும் புலப்படாமயால் இன்டர்மீடியட் மாணவர்களுக்குள் டியூஷன் சொல்லிக்கொடுக்க முற்பட்டார். வைக்கம் முகம்மது பஷீர்என்னும் பத்தாம் வகுப்பு படித்த மாணவர். இரவில் இன்டர் மீடியட்டின் பாடங்களை டிக்சனரியின் உதவியுடன் மிகக் கவனத்துடன் படித்து புரிந்துகொண்டு பகலில் பிள்ளைகளுக்கு டியூஷன் எடுப்பாராம். ஆனால் அவருடைய கஷ்டகாலமோ என்னவோ தன் மருமகளுக்குக் கணக்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமென்று அந்த மலையாளி குஸ்தி வீரர் சொல்லிவிட்டார் கூறிவிட்டார்.

‘ஒன்றும் ஒன்றும் இன்னும் கொஞ்சம் பெரிய ஒன்றுதான்’ என்று உறுதியாக நம்பும் பஷீரால் கணக்காவது, சொல்லிக்கொடுக்கவாவது! நல்ல காரியம்தான் போ! அவ்வளவுதான். டியூஷன் போச்சு. ”தாங்கள் நடிப்பதற்காக சாந்தாராமிடம் சான்ஸ் கேட்டு சென்றீர்கள் என்பதாக ஒரு கதை இருக்கே, அது என்ன? தங்களுக்கு நடிப்பதற்கான ஆசை எப்படி உண்டாயிற்று?” என்ற கேள்விக்கு, வழுக்கை தலையிலுள்ள முடிகளை தடவிக் கொண்டே ஒரு புன்னகையைப் பூத்த பஷீர் அது பற்றி விளக்கமாகவே கூறினார்.

”எனக்கு, ஒரு இளவரசனை போன்ற தோற்றம் அன்று இருந்தது. அதனால், நடித்தால் என்ன என்று தோன்றியது. ஷோலாப்பூரில் வைத்து சாந்தாரா மைக் கண்டு பேசினேன். அவருக்கு எனது உருவம் பிடித்துவிட்டது. ஒரு சான்ஸ் தருவதாகவும் மூன்று மாதங்கள் கழித்து பூனாவுக்கு வருமாறு கூறினார். ஸ்டுடியோவை அப்போது பூனாவுக்கு மாற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அதற்கிடையே அப்துல் ரகுமான் வீதியில் இருந்த ஓர் ஆயுர்வேத வைத்தியசாலையில் வேலை கிடைத்ததால் நடிப்பதை மறந்து விட்டேன்”

பஷீர் தனது 16வது வயதிலேயே காதலித்தார். அந்த சௌபாக்கியவதியின் பெயரையும் அந்த நாட்களையும் இந்த மனிதர் தன் நினைவென்னும் முத்து சிப்பியில் பாதுகாக்கவில்லை. அந்த வயதில் எங்கேயாவது எப்படியாவது படரவேண்டும் என்னும் ஆசை யாருக்கும் தோன்றும் என்றும் அதற்கு குறிப்பிட்ட ஒரு அர்த்தம் இல்லை என்றும் காதல் என்பது இளம்பருவத்தில் ஒரு தான்தோன்றித்தனம் என்றும் பஷீர் நம்பினார். வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க தொடங்கும்போது காதலில் ஒன்றுமே இல்லை என்னும் தத்துவ சாஸ்திரத்தை தன் முதலீடாகப் பாதுகாக்கும் இந்த ‘மந்திரபூனைக்காரர்’ காதலுக்காக என்றும் தன் விரல் நுனியை நீட்டி நிலைநிறுத்தினவராயிற்றே?

பஷீரின் இலக்கியப் படைப்புகளின் வழியே ஒரு தீர்த்த யாத்திரை நடத்துங்கள். எங்கும் வியாபித்துள்ள காதலுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் பெரியதொரு இதயத்தின் துடிப்புகளை எங்கிருந்தும் நாம் கேட்கலாம்.
பஷீரின் வாழ்க்கையில் மிகப் பெரும் கோபம் எப்பொழுது எப்படி ஏற்பட்டது என்று நான் துருவினேன். அவர் தன் நினைவோடையின் பிரவாகத்தில் குதித்து மூழ்கி ‘பஷீர்ஸ் புக் ஸ்டால்’ என்றொரு ஸ்தாபனத்தை எர்ணாகுளத்தில் நடத்திக்கொண்டிருந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை பொருக்கி எடுத்து வந்தார். ஒரு நாள் ஒரு புரொபஸர் பஷீரின் புக் ஸ்டாலுக்குச் சென்று சில புத்தகங்களை வாங்கினார். வாங்கிய புத்தகங்களுக்கு பணம் அப்போதைக்கு இல்லை என்று புரொபஸர் கூறியதும், பஷீர் தனது வாடிக்கையாளர்களின் நோட்டுப் புத்தகத்தில் பெயரையும் தொகையையும் குறித்துவைத்தார். அந்த புரொபஸர் தவணைச் சொல்லிய நேரங்கள் பல கடந்தன. இறுதியில் அந்தத் தொகை உடனே தனக்குத் தேவைப்படுகிறதெனக் கூறி பஷீர் புரொபஸரை நெருக்கினார். நெருக்குதலை தாங்கமுடியாத புரொபஸர் ‘ நான் டைரியை பாக்குறேன்’ என்று விற்றேற்றலான பதிலாக கூறினார். அப்போதுதான் பஷீர் ஒரு புயலாகவே மாறினார்.

வாழ்க்கையிலேயே அப்படிப்பட்ட கோபம் தனக்கு வந்ததில்லை என்று சொல்லும்படியாக இருந்தது பஷீர் அன்று பேசிய பேச்சுக்கள்:

”டேய் ஈனப் பய மவனே…அப்பனில்லாத நாயே” -பின்பு நான் பேசிய கெட்ட வார்த்தைகளுக்குக் கணக்கே இல்லை. சில நாட்கள் கழிந்தன. அந்தத் தொகையை அவன் திருப்பி கொடுத்து விட்டான்- இனிமையான சில கெட்ட வார்த்தைகளின் விலையாக”

கடனைப்பற்றி ஏராளமான கதைகள் அவர் சொன்னார். பஷீர் ஆண்களுக்கு கடன் கொடுக்க மாட்டாராம். அழகிய பெண்கள் கேட்டால் மட்டும் ஐந்தோ பத்தோ கொடுப்பாராம். ”நான் யாருக்கும் அதிகமொன்னும் கொடுப்பதில்லை. ஆனால் பல பேர்கள் எனக்குத் தருவதுண்டு.’’

அதைச் சொல்லும்போது தன் வாழ்வில் ஏராளமானத் துக்கத்தையும் கஷ்டத்தையும் அனுபவித்த அந்த வைவாலி ராஜாவின் முகத்தில் ஒரு மதுரமான சிரிப்பு மலர்ந்து மணம் பரப்பியது.
உலக மக்கள் தொகை 100 என்று வைத்துக் கொண்டால், அவர்களில் முழு முட்டாள்கள் 55 பேர்கள். பயங்கர கொடூர குணம் உள்ளவர்கள் இருபது பேர்கள். வஞ்சக சூழ்ச்சியாளர்கள் 15 பேர்கள். சோம்பேறிகள் 9 பேர்கள். நற்குணம் உடையோர் ஒரே ஒருவராகத்தான் இருப்பார் என்பது பஷீரின் கணக்கு. இந்தக் கணக்கில் பஷீர் தன்னை சோம்பேறிகளின் பட்டியலில் சேர்த்துக் கொண்டார். ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம் வழுக்கைத் தலை தான் என்பது இந்த அழகிய வழுக்கைத் தலையரின் எண்ணம்.

ஏதோ ஒரு சூழ்ச்சியில் எல்லா முஸ்லிம்களும் பாகிஸ்தானுக்கு செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமானால், வைக்கம் மம்மட பட்டாச்சாரியாகவோ, வைக்கம் எம்.வி.நம்பூதிரியாகவோ, வைக்கம் மு.ப.பணிக்கராகவோ தன் பெயரை மாற்றிக் கொண்டு இங்கேயே தங்கி விடுவாராம் பஷீர்!

” தங்களை ஒரு தாழ்த்தப்பட்ட யுவதி காதலிக்கிறாள் என்று வைத்துக் கொண்டால் தாங்கள் அந்த சமூகத்தில் சேர்ந்து அவளை மணம் செய்து கொள்வீர்களா?

” தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் மகான்கள் குறைவு. இதனால் மு.ப. புலயன் என்னும் பெயரில் அவளைத் திருமணம் செய்து கொள்ள தயார்”- பட்டென வந்தது பஷீரின் பதில். தன்னால் மறக்கவே முடியாத ஒரு விபச்சாரியின் கதையை மெய்சிலிர்க்கும்படி அவர் விவரித்தார்.

எர்ணாகுளத்தில் புக் ஸ்டால் நடத்தும் போது தான் அதுவும் நிகழ்ந்ததாம். தடித்த இடையும் உப்பிய கன்னங்களும் கனவு மலரும் கண்களையுமுடைய புகழ் பெற்ற ஒரு விபச்சாரி அவள். புக் ஸ்டாலுக்கு எதிரே பூமி குலுங்க நடந்து செல்பவளை பஷீர் அவளுடன் பார்த்துக் கொண்டிருப்பாராம். அவளுக்கான தொகை மிகவும் கூடுதலானபடியால் பஷீருக்கு அவளுடைய ‘இலவச சேவை’ அவசியப்பட்டது. ஒரு நாள் அதற்காகக் காத்துக் கொண்டு நின்றார். மிகப் பணிவுடன் தன் நிலைமையை அவள் வந்ததும் எடுத்துக் கூறினார் பஷீர். இவருடைய நிலைமையை புரிந்து கொண்டவள். ஓரிரவு தன்னுடன் கழிப்பதற்கு அழைப்பு விடுத்தாள். இவரும் சென்று அவளுடன் ஓரிரவைக் கழித்துவிட்டு வந்தார். ஒரு பைசாவைக் கூட அவள் இவரிடம் கேட்கவில்லை. தன்னிடம் காசு இல்லாமையால் இவரும் அவளுக்கு கொடுக்கவில்லை. இருபதாண்டுகளுக்குப் பின் இவர் அவளுடைய வீட்டைத் தேடிப் பிடித்து அவளைப்பார்த்து ஐம்பது ரூபாயை அவள் கையில் கொடுத்தாராம். வயதாகி வசீகரமும் குறைந்திருந்த அவளால் பஷீரை அடையாளம் தெரிந்துகொள்ள முடியவில்லை. தான் யார் என்ற உண்மையை பஷீரும் தெரிவிக்கவில்லை. இவ்வாறான எத்தனையெத்தனையோ மாறுதலான நினைவுக்குறிப்புகள் இவரிடம் ஏராளமாகவே இருந்தன.

குட்டாயிக்கு ஒரு வயதான போது சளியினால் இருமலும் காய்ச்சலும் இருந்தன. இரவில் அவை திடீரென அதிகரித்து சுவாசம் நின்று விட்டது போல் தோன்றியது. பாம்புகள் நிறைந்த வெளிச்சம் இல்லாத இடுக்கான வழிகளின் ஊடே குழந்தையை எடுத்துக்கொண்டு பஷீர் ஓடினார். வழியிலேயே குழந்தைக்கு சுவாசம் வந்துவிட்டது. அப்பொழுது ஏற்பட்ட மகிழ்ச்சி பஷீரின் வாழ்க்கையில் மிகப்பெரிதாக இறுதிவரை நிலைகொண்டிருந்தது.
குட்டாயியின் தாயைத் (தங்கள் மனைவியை) தாங்கள் அடிப்பதுண்டா? என்ற கேள்விக்கு
பஷீர் தன் வீட்டு உள்ளறையை எட்டிப் பார்த்துக் கொண்டே நிதானமாகச் சொன்னார்:

” எனக்கு என்னோட பலம் என்ன என்பது எனக்கே புரியும் ஆகையால் நான் அவளை அடிப்பதில்லை. பெரும் வலிமை உள்ளதால் நான் அடித்தால் அவள் இறந்து விடுவாள். ஒரு சமயம் உதட்டில் நிமிண்டியதாலேயே சேலைக்கும் மற்றவைக்கும் ஆக 300 ரூபாய் வரை செலவாயிற்று. அதனால் இப்போதெல்லாம் அதைக் கூடச் செய்வதில்லை” என்று மெல்லிய குரலில் பஷீர் கூறியதை கதவின் பின்னால் மறைந்து நின்று கேட்டுக்கொண்டிருந்த குட்டாயியின் தாய், தலைகுனிந்து உள்ளே சென்று மறைந்தார்.

நாணத்துடன் ஹஜ்ஜுக்குப் போக தனக்கு ஆசையில்லை என்று பஷீர் கூறினார். அலைந்து திரிந்து கொண்டிருந்த காலங்களில் கடற்பயணம் செய்ய மிகுந்த ஆசை இருந்ததாம். அதனால் அப்போது ஒரு ஹஜ் பயணக் கப்பலில் பயணமும் மேற்கொண்டாராம். கப்பலின் பெயர் எஸ்.எஸ். ரிஸ்வானி அந்தக் கப்பலில் ஸ்டோர் கீப்பர் என்னும் பதவியைப் பெற்று ஜித்துக்கு வரைக்கும்கூட சென்றதும் உண்டாம். அப்படியே அரேபியாவுக்குச்செல்ல வேண்டுமென்னும் மோகமும் உண்டாகியிருந்ததாம். ஆனால், என்ன காரணத்தினாலோ அது முடியாமல் போயிவிட்டதாம்.

மனைவிக்குத் தெரிந்த ஏராளமான பெண்களில், பெண் போலிஸ்காரியான சுமதியிடம் மட்டுமே பஷீருக்கு பயம் இருந்தது. ‘’என் மனைவி பால் வியாபாரம் நடத்திய வகையில் அவளுக்குத் தெரியாமல் அறுபது ரூபாயை ஒருத்தரிடம் வாங்கிவிட்டேன். உடனே சுமதி போலீஸ் மூலம் அவர் என்னைக் கைது செய்ய முயற்சித்தார். அந்த நாள் முதல் அவளிடம் எனக்குப் பயம் அதிகரித்துள்ளது என்னவோ உண்மை. மற்ற யாரிடமும் பயமில்லை.’’ காரணம் ரவுடிகள், பைத்தியக்காரர்கள், திருடர்கள் போன்றவர்கள் இவருக்கு நெருக்கமாக தெரிந்தவர்களே. பைத்தியக்காரர்களில் ஏராளமான வர்களும் பேப்பூர் சுல்தான் அரண்மனையின் விருந்தினர்கள். இப்படி இருக்கும்போது ஒரு சமயம் ஒருபைத்தியக்காரன் பஷீரிடம் வந்து, தான் ஸ்ரீ கிருஷ்ணன் என்றும், பலபத்ரனைக் காணவே இங்கு வந்திருப்பதாகவும் கூறினானாம். உடனே பஷீர் பலபத்திரன் வேடத்தை போட்டுக் கொண்டாராம். அப்படிப்பட்ட அந்த நிமிடங்கள் எந்த அளவிற்குச் சுவை மிகுந்ததாக இருந்திருந்தால், அந்த நிமிடங்களைப் பஷீர் என்றும் பாதுகாத்து வந்திருப்பார்!

பாம்புகளும் கூட பஷீரின் பலவீனமும் சாத்தியமாகும். பாம்புகளைப் பற்றிச் சொல்லும்போது, இலக்கியவாதியான பஷீர் நிறையவே பேசுவார். பாம்புகள் நிறைந்திருந்த வைவாலி வீட்டையும், தோட்டத்தையும் விரும்பி விலைக்கு வாங்கியதற்கான காரணமே அதுதானாம். எத்தனையெ த்தனையோ பாம்புகளின் கதைகளை, பல பெண்களின் கதைகளைச் சொல்வது போல மிக ஆவலுடன் அவர் கூறியிருக்கின்றார். அந்த அளவிற்கு நாமும் அவைகளை ஆவலுடனும் மகிழ்ச்சியுடனும் படித்திருக்கிறோம்!

புதிய இலக்கியத்தில் ஓர் அற்புதப் படைப்பாளி என்று விசேஷமாக பாராட்டப்படுகின்ற முகம்மது பஷீருக்கு மலையாள மொழியில் எத்தனை எழுத்துக்கள் உள்ளவென்றே உறுதியாகத் தெரியாதாம். ‘ரூ,ஸ்த,க்ள’ போன்ற எழுத்துக்களை எழுதவும் தெரியாதாம். பார்கவி நிலையத்தில் ‘ஸ்க்ரிப்டின் க்ளீம்’ என்று பாபியின் மூலம் தான் எழுதப்பட்டுள்ளதாம். எழுத்துக்கள் எல்லாம் தெரியாதென்றாலும் தினந்தோரும் ஆறு மலையாள பத்திரிகைகளையும் ஓர் ஆங்கிலப் பத்திரிகையையும் தவறாமல் படித்தாராம்.

இளம் எழுத்தாளர்களைப் பஷீருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். எல்.எஸ். டி சரச சல்லாபங்களுக்குப் பின்னே செல்பவர்களால் ஜீவிதத்தின் மதுரமான காட்சிகளைக் காண முடியாதென்றும் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய ‘impulse’ ஐக் கொடுக்கும் எந்த ஓர் இலக்கியமும் மனிதர்களைக் கவர முடியாதென்றும் அவர் கருதினார். வாழ்க்கை அதன் இறுதியில் தோல்வியைத் தழுவினாலும் இறக்கும்வரை வாழ்வதற்கு நாம் பாத்தியப்பட்டவர்களாவோம் என்றும், அதனால், உறுதியுடன் வாழவே நாம் விரும்பவேண்டும் எனவும் பஷீர் உபதேசம் செய்தார்.

முன்பெல்லாம், பஷீர் முன்கோபியாகவும் துன்மார்க்கராகவும் இருந்தார். இறுதியில் ‘ கோபம்’ என்னும் வார்த்தையின் உருவ பாவங்களையும் கூட நகைச்சுவை மன்னரான பஷீர் மறந்து விட்டிருந்தார். அவர் எந்த ஒரு ரகசியத்தையும் மறைத்து வைத்ததில்லை. மனைவியிடமோ நண்பர்களிடமோ சொல்லாதவை ஏதேனும் உள்ளதென்றால் அவைகளும் கதாபாத்திரங்களாகவும் கதைகளாகவும் மாறி விட்டனவாம்.

‘ஓர்மையுடே ஓளங்களுக்கு’ பேச்சு நீண்டது. நண்பர்களின் வலு கட்டாயத்தால் எழுதிய அந்த புத்தகத்தில் தன் அனுபவங்களில் ஓர் அம்சத்தை கூட உட்படுத்த முடியவில்லை என்று பஷீர் சொன்னார் ஆனால் எழுதாத அனுபவங்கள் ஓராயிரம் உண்டென்றும் கூறினார்.

மறக்கவே முடியாத பெரியதோர் அனுபவத்தை மனதில் பதிய வைத்துக் கொண்டு, ஆறேழு மணிகளை அவருடன் கழித்த பின், வைக்கம் முஹம்மது பஷீர் என்னும் மனித பண்பாளரான அந்த நகைச்சுவை மன்னரிடம் விடைபெறும்போது, அப் பெரிய மனிதர் ஒரு விஷயத்தை மட்டும் பிரத்தியேகமாக நினைவுபடுத்தினார்.

” நிறைய பைத்தியங்கள் உள்ள இடம் கொல்லம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், அவைகளில் மூன்று நான்கு பைத்தியங்களை பிடித்து இங்கே அனுப்பி வையுங்கள். அவைகளுக்குப் பதிலாக மூன்று நான்கு பாம்புகளையும் சில வறட்டுச் சொறி நாய்களையும் நான் இங்கேருந்து அனுப்பி வைக்கிறேன்.”

நாங்கள் பேப்பூர் சுல்தானின் அரண்மனையை விட்டு வெளியே வந்தபோது ‘ பாத்துமாவின் ஆடும்’ ‘ஸுஹரயா’வும் ‘மந்திரப் பூனை’யும் அழும் சப்தம் கேட்டது. இருள் சூழ்ந்து கிடக்கும் இருண்ட வழிகளின் இடையே சென்றபோது, பஷீர் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் *’ எட்டுக்காலி மம்மூஞ்ஞு’ ஆனை வாரி ராமன் நாயர்’ மண்டன் முத்தப்பா’ ‘பொன்குரிசு தோமா’ போன்றோரின் கிசுகிசுக்கும் குரல்களை கேட்டவாறே எங்களின் கார் பேப்பூர் ராஜ்ஜியத்தை விட்டு பாய்ந்தோடியது. ‘அப்போது, கதைகளில், நிறைய மனித இதயத்தின் மணம் பரப்பி, பெரும் புகழ் பெற்று திகழ்ந்த பஷீர், அற்புத ஜோதியாக எங்களின் நினைவுகள் என்னும் மந்திரச் செப்புகளில் கனவுகளாக புகுந்து வந்துகொண்டிருந்தார். நான் அந்த கனவுகளை அதிசயத்துடன் ஜீரணிக்க முயற்சித்தேன்.

இதய மாறுபாடுகள் என்னும் ரோஜா பூக்களின் ஏளனத்தின் தேன் துளிகளை நிறைக்கும் ஓர் அற்புத மந்திரவாதி அவர். மழைத்துளியின் போதையும் மதுரமும் நிறைந்த பஷீரின் உரையாடலைக் கேட்டுக் கொண்டு இருந்தாலே போதும் நூற்றாண்டுகளை சில நிமிடங்களிலேயே வாழ்ந்து முடித்தாகி விட்டதாகி விடும்.


நன்றி :குறிஞ்சிவேலன்.

1 COMMENT

  1. பஷீர் எனும் சூஃபியின் சித்திரம் அற்புதமாக மலர்ந்துள்ளது. எத்தனை சித்திரம் தீட்டப்பட்டாலும் அனைத்திலும் ஒவ்வொரு தனித்துவமான முகம் காட்ட இந்த மேதையால் மட்டுமே முடியும். மூல படைப்பாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் கனலி இதழுக்கு பாராட்டும், வாழ்த்துக்களும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.