‘சவுரி மறுபடியும் காணாம போயிட்டான்’ என்பதுதான் உறவு வட்டத்தில் பேச்சாக இருந்தது. ஆனால் யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்படித் தீவிரமாகத் தேடி அலைந்ததெல்லாம் அவன் வாலிபனாக இருந்தது வரைதான். இப்போது அவன் ஐம்பதைத் தாண்டியவன். அதுமட்டுமல்ல பத்து பதினைந்து முறை இப்படித் தொலைந்திருப்பான். மிக உள்ளான கிராமத்தில் பிறந்து வளர்ந்து திரிந்து நடுத்தர வயது முதற்கொண்டு நாகப்பட்டினம் மாறி வந்த பிறகுதான் இப்படி திசையிழப்பு நிகழ்கிறது. தெரிந்து போகிறானா தெரியாமல் நிகழ்கிறதா என்று இன்னமும் யாருக்கும் தெரியாது. அவனுக்கே தெரியுமா என்று கூட தெரியவில்லை. ஏதோ மனயெழுச்சியில் உந்தப்பட்டு கால் போன போக்கில் நடந்து திசை மறந்து தொலைந்து போதல்.
சிறு வயது முதற்கொண்டே அவனுக்கிருந்த சித்த குறைபாடு. ஏதோ நச்சுக் காய்ச்சல் வந்து மூளை பிறழ்ந்து அப்படியானான் என்றார்கள். பேச்சு குழறும், வாயோரம் எச்சில் சேரும். இடது கைகால் சற்றே வலுவற்று நிலையற்றுத் தாங்கித் தாங்கி மட்டுமே நடக்க இயலும். நடக்கையில் இரண்டு கைகளும் காற்றில் சமநிலையற்று கோணலாகத் தள்ளாடும். பேசுவதில் ஓரிரண்டு வார்த்தைகள் அதுவும் ஓரசை, ஈரசைகளே புரிந்துகொள்ள முடியும். வீட்டிற்குப் போனால் கண் விரிய உச்சக் குரலில் ‘வாங்க… வாங்க…’ என்பான். எச்சிலொழுகச் சிரிப்பான். மேலான நட்புடன் கையைப் பிடித்துக் கொண்டு கூடவே நடந்து வருவான். ஊரார் முன் சிறுவிலங்குகள் முன் பெருமிதப்பட்டு வீறார்ந்து நொண்டுவான். உள்ளே அத்தையிடம் கூட்டிக் கொண்டு போய் ‘ம்மா பாவா’ என்பான். அடுப்பை மூட்டியபடி குத்துக்காலிட்டு அமர்ந்திருக்கும் அத்தையும் எழுந்து தொடை துவளும் நீள்சடை வாரி முடிந்து வெற்றிலை வரிசைப் பற்கள் தெரிய வரவேற்பாள். மற்றபடி அவன் பேசுவது அத்தைக்கும் அவனது அக்காவுக்கும் தான் புரியும்.
என்னை விட நான்கைந்து வயது இளையவன். முதன்முதலில் நாகைக்கு அருகிலுள்ள மகாதானம் கிராமத்திற்கு ஆறாவது படிக்கும்போது ரயிலில் சென்றது. பொத்தான்களை ஏற்ற இறக்கமாகப் பூட்டி இடுப்பில் அரைஞாண் கயிறு மட்டுமே பற்றியிருக்கக் கால் சட்டையைக் கழட்டி எறிந்துவிட்டு ஓடி வந்தான். கைகால்களில் ஆறா காயங்களும் வடுக்களும் தென்பட்டன. சொந்தக்காரர்கள் வருகிறார்கள் என்று அவனிடம் கூறியிருந்ததாலோ என்னவோ தூரத்திலேயே எங்களைப் பார்த்துவிட்டு ஓடி வந்தான். கூடவே அவனது அக்கா சாந்தியும் துரத்திக் கொண்டு வந்தாள். அவனால் ஏதும் அசம்பாவிதம் நிகழாதிருக்கும் கூடுதல் பொறுப்புடன் அவனைக் கண்காணிக்கும் விதமாகச் சற்றே ஆர்வம் மேலிட ஓடி வந்தாள். அவள் கல்யாணமாகித் திருக்கடையூர் போகும் வரை அப்பொறுப்பின் மீளா இம்சையில் தன் சுதந்திரம் பறிபோய்த் தவித்திருந்தாள்.
மாடுகள் சுகமில்லை என்பதால் அத்தை வீட்டுக் கூண்டுவண்டி சிக்கல் புகைவண்டி நிலையத்திற்கு அன்று எங்களைக் கூட்டிச் செல்ல வரவில்லை. பொய்யூர் பேருந்தில் ஒரத்தூரில் இறங்கி, பெட்டிச் சுமையுடன் வரப்பு வாய்க்காலில் நடந்தேறி மெல்ல ஊருக்குள் நுழைந்தோம். கடலோர கிராமம் என்பதால் களிமண் பூமியென்றாலும் சற்றே மேலோட்டமாக வெண்மணல் பாவித்திருந்தது. தளிர் மூங்கில் கொண்டு வேயப்பட்ட முட்படல்களால் வீடுகளும் தோட்டங்களும் நாற்புறமும் பாதுகாக்கப் பட்டிருந்தன. அப்படல் கொண்ட தட்டியையே நுழைவாயில் கதவு போல் திறந்து மூட வேண்டியிருந்தது.
அவர்கள் இருவரையும் சந்திப்பது அதுவே முதல்முறை. பல காலம் பழகியதைப் போல எங்களை நோக்கி இருவரும் ஓடி வந்தார்கள். ஒருபக்கமாகச் சாய்ந்தபடி ஆனால் துரிதமாக ஓடிவந்து என் கையைப் பிடித்து சவுரிதான் முதலில் இழுத்தான், ‘வாங்க பாவா, வாங்க’ என்று. என் புறங்கை எச்சிலால் ஈரமாயிற்று. சாந்தி அவனைப் பிடித்து இழுத்தாள். அம்மா, நைனா கூட இருந்தும் அவனுக்கு இணையாவானவன் நான் மட்டுமே என்பதாலோ என்னவோ அவர்களை விட்டுவிட்டு என்னை மட்டும் கட்டிப் பிடித்தான். சாந்தி அவனது முதுகில் அடித்து ‘வுடு அவங்கள’ என்று விலக்கிப் பிரித்தாள். அவன் விடுவதாயில்லை. சட்டென வலிந்து என்னை எட்டிப் பிடித்ததும் லேசாகப் பயந்து போனேன்.
இதுபற்றி விவரம் எதுவுமே அம்மா என்னிடம் சொல்லவில்லை. அச்சந்திப்பு அதிர்ச்சியாக இருந்தது. உள்ளுக்குள் கலவரமானேன். என்னை விடுவிக்க முயன்றேன். சாந்தி காற்றில் ஆடும் அவனது சட்டை நுனியைப் பிடித்து இழுத்ததும் அவன் சற்றே தள்ளாடித் தன்னுனுவர்வு கொண்டு என்னைப் பற்றியிருந்த கரங்களை மெல்ல விடுவித்தான். நேராகப் பார்த்தான். அப்போது அவனது கண்களைச் சந்தித்தேன். களங்கமற்ற வெண்கண்கள். அவற்றுள் ஒளிர்வது கருணையா, தயவா, பரிவா, ஏக்கமா, எதுவென்று அறிந்தேன் இல்லை. அவை பூரண வெறுமையாய் இருந்தன. அகல விரிகையில் உருண்டையாக நீர் மல்கி உருளும் கண்கள், எச்சிலொழுகும் மருவற்ற சிரிப்பு என்னை ஏதோ செய்தது. மிகத் தயங்கி நானும் சிரித்தேன். கரம் நீட்டினேன். அவன் சாந்தியை உதறிவிட்டு மீண்டும் கலகலத்துச் சிரித்தபடி என்னை அணைத்துக் கொண்டான். என் தோள்பட்டை ஈரமானது.
வீட்டிற்கு எதிரே மாட்டுக் கொட்டகை எப்போதும் மணிச் சத்தம் ஒலித்தவாறே இருந்தது. ஆடுகள் அவ்வப்போது அடுக்கடுக்காகக் கத்தின. இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு கைவிட்டுப்போன அத்தையுடைய கணவனின் துணையின்றி சவுரியே தன் வாழ்வென இறுதிக்கு வந்து விட்டிருந்தனர் இருவருமாக.
காலைக் கடனுக்கு என்ன செய்வது என்று கேட்டதற்கு ‘ஆத்துப்பக்கம் அப்படியே போக வேண்டியதுதான்’ என்றாள் அத்தை. நான் விழி பிதுங்கி நிற்பதைக் கண்டு, ‘பக்கந்தான். இந்தா அவள கூட்டிகிட்டு போ’ என்றாள். அங்கே சாந்தி மிகச் சாதாரணமாக அத்தைக்கு செவிமடுத்தபடி நின்றிருந்தாள். எனக்கு வயிறு கலங்கியது. வெட்ட வெளியில் அதுவும் இவளோடா என்று பதறியது நெஞ்சு. பெண் பிள்ளைகளைப் பார்த்தாலே தெறித்தோடுபவன், இவளெதற்கு? அவளோடு பேசுவதே தயக்கமாக இருந்தது. அவள் துணையுடன் காலைக் கடனை நினைத்தே பார்க்க முடியவில்லை. அத்தைக்கு ஏதோ புரிந்தது. ‘சரி அந்த சவுரிப் பயல அழைச்சுட்டு போ’ என்றாள். ‘வெட்ட வெளியில கூச்சமா இருக்கு போல’ என்று கேலியாகச் சிரித்தாள். அப்பாடா என்று கொஞ்சம் நிம்மதியானது மனம்.
என்னை வழிகாட்டிக் கூட்டிப்போவதில் சவுரிக்குப் பெருமை தாங்கவில்லை. தாழ்வாரத்திலிருந்தே விடுவிடுவென விந்தியபடி முன்னே நடந்து வீட்டிற்கு வெளியே போய் மூங்கில்படல் வாயிலைத் திறந்து என்னை வரவேற்றான். நான் அவனைப் பின் தொடர்ந்தேன். இரண்டு கைகளையும் பின்னால் கட்டிக் கொண்டு விந்தி விந்தி மீண்டும் வீறு நடை கொண்டான்.
அந்த ஊரில் மொத்தம் ஒன்பது வீடுகள் ஒரே வரிசையில் ஒரேபக்கமாக அமைந்திருந்தன. பாதி தூரத்தில் பாதை பிரிந்து மரத்தொகுப்புக்குள் சென்றது. அதனூடே செல்ல கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஆற்றுப்பாலம் தென்பட்டது. அடர்ந்து உயரமாக நாணல் தழைகள் நின்றாடின. ஆற்றுத் தண்ணீர் கண்மறைவாய் மெல்லோசையாய்க் கடந்து கொண்டிருந்ததை உணர முடிந்தது. சவுரி என்னை புல்பரப்புக்கு இடையிலான ஒற்றையடிப் பாதையில் நடத்திச் சென்றான். அப்போது வாலாட்டிக் கொண்டே கருப்பு நாயொன்று பின்னாலிருந்து சிரித்த முகமாக நட்புடன் உறுமி, குழறி பாய்ந்தோடி வந்தது. நான் மீண்டும் பதறினேன். நல்லவேளையாக சவுரி அவனை அப்படியே குனிந்து கட்டிக் கொண்டான். பெருமிதமும் பூரிப்புமாய் மலர்ந்தான். இருவருமே குழைந்தனர். எச்சில் வழிய இருவரும் தழுவிப் புளகாங்கிதம் அடைந்தனர். பின்னர் நாங்கள் மூவருமாக நெளிந்தோடும் மண்கோட்டுப் பாதையில் நடந்தோம். சில அடியெடுப்புகளுக்குப் பிறகு தன் முன்னே சென்ற கருப்பனை சவுரி ஓங்கிக் கத்தியபடி நட்புடன் விரட்டினான். அது வகை தெரியாது ஓடியது. சவுரி குதூகலமானான். என்னைத் திரும்பிப் பார்த்தான். நான் சிரித்தேன். அவன் இன்னும் ஊக்கமாகி கருப்பனின் வாலைத் திருகினான். அது ஒய்ங்கென்று முறுக்கிக் கொண்டு ஓடியது. இருவரும் ஓட நானும் பின்னோடினேன். சவுரி மூர்க்கமானான். எச்சில் வழிய மாட்டை விரட்டுவதுபோல நாயின் வாலைப் பலமாகப் பற்றித் தூக்கினான். வலியும் குதூகலமும் கொண்டு குழம்பி ஓடியது நாய். நாணல்களூடே புகுந்தோடியது. தன்னைக் கண்டு பயந்து அது ஓடுவதில் வெறி கொண்டான். விகாரித்துக் கத்தினான். நாய் கண்மறைந்தது.
மணற்கரையின் கடையாந்திரமாக நாங்கள் போய்ச் சேர்ந்த ஆற்றோரம் மறைவாய் இருள் சூழ்ந்து அமைந்திருந்தது. சவுரி நீள் சட்டை மறைத்திருந்த பிட்டம் தெரிய அப்படியே உட்கார்ந்தான். நான் தயங்கினேன். யாரோ அண்மையில் நிற்பது தென்பட்டது. எட்டிப் பார்க்க அங்கே சாந்தி நின்றுகொண்டிருந்தாள். மீண்டும் கலவரமானேன். கையில் செம்புத் தண்ணீரைப் பிடித்திருந்தாள். என் தலையைக் கண்டதும் ‘ஆத்துக்குள்ள எறங்க பயமா இருந்தா இந்த செம்புத் தண்ணிய ஊத்திக்க அம்மா குடுத்து உட்டுச்சி’ என்றாள். ‘அப்படியா’ என்றபடி வந்த பாதையில் நிமிர்ந்து நடந்தேன். கிராமத்திலிருந்த மூன்று நாட்களும் இப்படியே கழிந்தது.
கொட்டிலில் விட்டுவிட்டு மணியசைந்து ஒலிக்கும் சாம்பல் நிற உம்பளச்சேரி மாடுகள் நான் நுழைந்ததும் எழுந்து நின்றன. ஒன்று சிறுநீர் கழித்தது. மாட்டுவண்டியின் ஒரு பக்கச் சக்கரம் ஈரமானது. தஞ்சை நெற்கழனிச் சேற்றில் கால்பற்றி நிற்கக் குட்டையும் திடமுமான கால்கள் கொண்ட உம்பளச்சேரி மாடுகள் தான் பொருத்தம். அவற்றுக்குக் கொம்புகளில்லை. பருவத்திலேயே சுட்டெரித்து மொட்டையாக்கி விடுவார்கள். என்ன காரணமோ, தெரியவில்லை. மொட்டை மாடுகளைப் பார்க்க வேடிக்கையாய் இருந்தது.
பொங்கல் சமயங்களில் ஊருக்கு வந்தால் ஜல்லிக்கட்டு மாதிரி எதுவுமிருக்காது. மஞ்சு விரட்டு மாதிரி சும்மா அப்படியே ஊரின் எல்லா மாடுகளையும் மந்தையாக ஓட்டித் துரிதமாக மேய்த்துப் போய் வருவார்கள். உப்புச் சப்பிருக்காது. மாடுகளுக்குக் கொம்புகள்தான் பெருமிதமென்று தோன்றியது. கொம்பற்றதை எப்படிப் பிடித்து அடக்குவது?
கன்றுகளுக்குத்தான் கொம்பிருக்காது. கொம்பு மனிதர்களுக்கு நிமிர்வாகவும் திமிராகவும் தோன்றுகிறது. கொம்பு ஒருவிதத்தில் தன்முனைப்பு. பெரிய கொம்பா என்று கேட்பதும் அதன்பாற்பட்டே. அரிதிற்கும் கொம்புதான் உவமை. கொம்பற்றது தானற்றதைப் போன்றது. அதற்குப் பயப்படத் தேவையில்லை. கொம்புதான் இல்லையே.
சவுரிக்கும் அப்படித்தான். கொம்பற்றவன். ஊரில் யாரும் அவனைக் கண்டு பயப்படுவதில்லை. விளையாட்டாகவோ கேலியாகவோ சில சமயம் பச்சாதாபம் கொண்டோதான் அவனிடம் நடந்து கொள்வார்கள். அவனுக்கு அடங்கிப் போக அல்லது அவன் யாரையேனும் பயமுறுத்த வேண்டுமானால் இது போன்று நாய்களை, ஆடு, கோழியென ஊரிலுள்ள சிறுவிலங்குகளை அவன் விரட்டிப் போகலாம். அவை பயந்தோடும். அல்லது அப்படி அவனுக்குத் தோன்றும். போகிற போக்கில் கோழிகளை விரட்டுவான். ஆடுகளின் வாலைப் பிடித்திழுப்பான். மொத்தென்று வயிற்றில் அடிப்பான். வீறுகொண்டு சிரிப்பான். அச்சிற்றுயிர்களும் அவனது அத்துமீறலைப் பொருட்படுத்துவதில்லை. வலிக்கும்படி இருக்காது. என்றாலும் அக்குறு வன்செயலின் வழி அவன் தனக்குள் நிறைவடைந்தான். பூரித்தான். அது அவனுக்குத் தேவைப்பட்டது. விபத்தாக ஒருமுறை ஊரில் ஒரு சிறுவனை காளையொன்று முட்டிவிட்டது பரபரப்பாகப் பேசப்பட்டது. கொம்பில்லா விட்டாலும் வலி கொண்ட முட்டல்தான் என்றார்கள்.
கடைசியாகக் காணாமல் போன அன்று ஏதோ காரணத்திற்காக மனயெழுச்சி கொண்டு ஆவேசத்தில் அத்தையைக் கீழே கிடந்த செங்கல்லால் தலையில் அடித்து விட்டான். அத்தை மயங்கி விழ, கல்லைப் போட்டுவிட்டு அழுதிருக்கிறான். ரத்தம் வழிய அக்கம்பக்கத்தவர் அவளை மருத்துவ மனைக்குக் கூட்டிச் சென்று கட்டிட்டு வீடழைத்து வந்திருக்கின்றனர்.
சின்ன வயதில் இரண்டாவது முறையாக என்னை மகாதானம் கூட்டிச் சென்றபோது இளநீர் வெட்டிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு மாமாவைச் சுற்றி நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம். மாமாவிடம் அரிவாளைக் கேட்டான் தானும் இளநீர் வெட்டவென. என் முன்னே தனது திறமையைக் காட்ட அப்படிக் கேட்டிருப்பான் என்று பிறகு தோன்றியது. மாமா மறுத்தார். அப்போதுதான் தீட்டிக் கொண்டு வந்தது என்பதால் அதன் கூர்மையால் எச்சரிக்கை கொண்டு மறுத்தார். அவன் என்னைப் பார்த்தான். நான் சிரித்தேன். மீண்டும் மீண்டும் கேட்டு மறுக்கப்படவே மூர்க்கமுற்றான். மாமா மசியவில்லை.
சற்று நேரத்தில் பக்கத்தில் வைத்திருந்த வெற்றிலைப் பெட்டியை எடுத்து வரச் சொன்னார். சவுரி போகவில்லை. அவரே எழுந்து போனார். மறதியாக அரிவாளைக் கீழே வைத்து விட்டுப் போக சட்டென சவுரி அரிவாளை எடுத்து விட்டான். நான் மாமா என்று எச்சரிக்கையாகக் கத்த சட்டென மாமா சுதாரித்து அவனை நோக்கி ஓடி வந்தார். சவுரி வெடுக்கெனத் திரும்பி என்னை நோக்கி அரிவாளை வலக்கையால் வீசினான். அது கைநழுவி காற்றில் சீறிச் சுழன்று திரும்பி மாமாவின் காலைப் பதம் பார்த்துவிட்டது. நல்லவேளை அதன் நுனி மட்டுமே பட்டதால் சின்ன வெட்டோடு கால் தப்பிற்று. ஒரு நொடி ஸ்தம்பித்துப் போனோம். அவனுந்தான். என்னவெல்லாமோ நிகழ்ந்திருக்கக் கூடிய கெடு தருணமது. அவனது மூர்க்கம் மிக வீரியமும் துரிதமும் நொடிப் பொழுதுமானது. இப்படி பலமுறை நிகழ்ந்துவிடும்.
‘கழிச்சல்ல போறது. போய்த் தொலைய மாட்டேங்குது, சனியன். உயிர வாங்குது. கம்மனாட்டிப் பய. இதுக்கு ஒரு சாவு வரமாட்டேங்குது’ என்று ஒவ்வொரு முறையும் அத்தை சபித்து அழுது முடிப்பாள். பிறகு அவனைத் தேடிப் போவாள். தன்னையே மிக நொந்து அழுது புலம்புவாள். நாட்கணக்காகப் பட்டினி கிடப்பாள். தலைமுடி தளர்த்தி விரித்து எண்ணெய் விளக்கேற்றி தெய்வத்தின் முன் இருட்டில் அப்படியே அமர்ந்திருப்பாள். இப்படியே அவன் ஐம்பதைத் தாண்டிவிட்டான்.
அத்தையும் மிக மூப்பு கொண்டுவிட மகாதானத்துப் பூர்வீக நிலபுலன்களை விற்றுவிட்டு நாகை மேலக்கோட்டை வாசலில் உள்ள உறவினரின் வீட்டில் ஒண்டுக் குடித்தனத்திற்குள் அடைபட்டாள். அவளது பூர்வ கிராமத்துச் சுதந்திரம் அத்தோடு அவளை விட்டுப் போய்விட்டது. பரந்த நிலபுலங்ககளை அடக்கியாண்ட கம்பீரமும் தற்போதமும் வடிந்து போயிருந்தது. எப்போதும் சோர்வுடனே காணப்பட்டாள். உடல் உபாதையால் அவதியுற்றாள். சவுரிக்குக் கேட்கவே வேண்டாம். சிறைப்பட்டதாய் உணர்ந்திருப்பான். முப்பது வருடத்திய குழந்தைப் பொலிவு அவன் முகத்திலிருந்து முற்றிலுமாக விடைபெற்று விட்டிருந்தது. ஒருவித திகில் அவன் முகத்தில் பாவியிருந்தது. குழம்பிக் காணப்பட்டான். அவனுடைய குழந்தைப் பண்புகளைத் தொலைத்திருந்தான். மனமயக்கம் முன்னிலும் தீவிரம் கொண்டிருந்தது. முகம் முற்றிப்போய் மயிர் சேர்ந்திருந்தது. ஆனாலும் மகாதானத்திற்கு ஈடாக அவனுக்கிருந்தது குப்பையும் கழிவுமாகத் திகழும் உப்பனாறு முகத்துவாரத் தொடுமுனைதான். வீட்டிற்குள்ளிருந்த கழிவறையை அவன் எட்டிக்கூடப் பார்த்ததில்லை. எல்லாவற்றுக்கும் உப்பனாற்றின் சாக்கடைக் கரைதான்.
இப்போது மூக்குப்பொடி போடுகிறான். முழுக்கைச் சட்டை போட்டுக் கொள்கிறான். கைமுனைகளைத் தன் வசத்திற்குச் சீரற்று மடித்து விட்டுக்கொள்கிறான். இடுப்பில் லுங்கி கட்டி அழுக்காகத் திரிகிறான். வாயில் எச்சில் சுரப்பு நின்றுவிட்டது. வாயோரம் வழிந்து வடியவில்லை. கொஞ்சம் சுரப்பதை அவ்வக்கணத்தில் சின்ன சப்தத்தோடு உறிஞ்சி உள்ளிழுத்து விழுங்கக் கற்றிருந்தான். என்றாலும் எப்போதும்போல அவனது பேச்சைப் புரிந்துகொள்வது சிரமமாகத்தான் இருந்தது. எக்காரணங்கொண்டும் அவன் வீட்டிற்குள் வருவதில்லை. வெளியிலேயே மேற்கூரை நிழலில் படுத்துக் கொள்கிறான். அதிக மழை, குளிருக்குக் கதவோரம் உள்ளே படுத்துக் கொள்வான். யாருமில்லாத போது என்னை நெருங்கி வந்து ஆதுரமாகச் சிரிப்பான். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு விரலைத் தேய்த்து காசு கொடு என்று சைகை செய்வான். மூக்குப்பொடிக்குத்தான். கொடுத்ததும் ஆனந்தித்து வெளியே நொண்டியபடி வேகமாகக் கிளம்பிப் போவான்.
போனவருடம் அத்தைக்கு முடியவில்லை என்று கேள்விப்பட்டு நாகை வந்தபோது அவனைக் கடைசியாகப் பார்த்தது. அம்மா நினைவாக வேளாங்கண்ணி போக பேருந்துக்கு நின்றிருந்தபோது வெளியூர் விடலைகள் இருவர் அவனைக் கேலி பேசிச் சிரித்தனர். அவன் லுங்கியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டான். அவர்களைப் பார்க்காமல் மறுபுறம் திரும்பிக் கொண்டான். அவனுக்குப் புரியவில்லை என்றுதான் முதலில் நினைத்தேன். நான் அவர்களை விரட்டிவிட்டு அவனை வீட்டிற்குப் போகச் சொன்னேன். அவன் போகவில்லை. அப்படியே நின்றிருந்தான் பேருந்து வரும் வரை. ஏறுகையில் என் கையைப் பிடித்துக் கிள்ளி தன் வாயில் முத்தமிட்டுக் கொண்டான். அவனுடைய எச்சில் ஈரம் ஏதும் என் மேல் படவில்லை. படாமல் பார்த்துக் கொண்டானோ என்று தோன்றிற்று.
நிறையபேர் தேடினார்கள். ஒருமுறை மயிலாடுதுறையில் அகப்பட்டான். இன்னொரு தரம் தரங்கம்பாடி. அப்புறம் தலைஞாயிறு. எப்படி அவ்வளவு தூரம் போகிறான் என்பதே புதிர்தான். கையில் ஒரு காசு இருக்காது. அத்தை முதல் நாள் பதைப்பாள். பிறகு கண்ணீர் உகுப்பாள். தொடர்ந்து வராமல் போனால் தலைவிரி கோலமாய் ஊரெல்லாம் தேடியோடுவாள். பிற்பாடு ஒப்பாரி வைப்பாள். எம்முயற்சியும் தோற்று எதற்கும் திரும்பாவிட்டால் வீட்டிற்குள் இருட்டில் முடங்கி விடுவாள். தீபவொளிச் சுடர் மட்டுமே இலங்கும். இப்போதும் அப்படித்தான் ஆனது.
இங்கே நாகை நகராட்சியில் எவ்வொரு சிறு விலங்கும் அவனருகில் இல்லை. அதிகபட்சம் உப்பாற்றுக் கரையில் பன்றிகள் கூட்டமாய் வால் சுழற்றியோடும். ஏனோ அவன் அவற்றைத் துரத்துவதில்லை. ஆண்டுகளாக அச்சாக்கடைப் பரப்பை இருவரும் பகிர்ந்திருந்த போதும் நட்புறவேதும் அமையவில்லை. அவனுக்குப் பயந்து ஓட என்று எவ்வுயிரும் இந்நகரில் இல்லை. அவனது இருப்பையே யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. சிறு விலங்குகள்கூட.
கோட்டைவாசல் ஆற்றுப்பாலத்தின் பக்கவாட்டில் பழைய பாலம் இடிபாடுகளுடன் காணப்பட்டது. சிறுபோதில் அப்பாலத்தின் இரு பக்கமும் கடைகளும் விளக்குகளுமென ஒளிர்ந்து கிடக்கும். நள்ளிரவு வரை ஆள்நடமாட்டம் இருக்கும். இப்போது அப்பாலமே எவ்வடையாளமுமற்று சிதிலப்பட்டு நின்றிருந்தது. அப்பாலத்தின் நினைவு மகாதானத்து ஆற்றங்கரையை ஞாபகப்படுத்தியது.
சவுரிக்கு மகாதானம் ஞாபகம் வருமா? அதை இழந்தவனாக ஏங்குவானா? விலங்குகளின் உறவற்றுத் தவிப்பானா? அவனுக்கு எப்போதாவது காமம் கிளர்ந்திருக்குமா? அதுபற்றி அவனுக்கேதும் உணர்வெழுச்சிக் கொந்தளிப்புகள் எழுந்திருக்குமா? அப்படி எந்தவொரு இச்சைக் கீற்றும் யாரும் கண்டதில்லை. சமீபகாலமாக வீட்டருகில் உள்ள அம்மன் கோவிலில் திருநீறும் குங்குமமும் வாங்கி நெற்றியில் தீட்டிக் கொள்வதாகத் தெரிகிறது. என்ன வேண்டுதல், பிரார்த்தனை இருக்கும் அவனுக்குள்? கடவுளென்பதை அவன் என்னவாகப் புரிந்து வைத்திருப்பான். தவம், தியானம், பக்தி என்பதெல்லாம் பற்றி அவனுக்கு ஏதும் தெரியுமா? அறியாமையே பேரறிவாமோ? அவனைப் பொறுத்தவரையில் இறை என்பதன் நிஜமான அர்த்தம்தான் என்ன? இறைப் பிரக்ஞை என்று ஏதேனும் துளிர்ப்பு உண்டா அவனுக்கு? இவ்விருப்பு அவனுக்கு என்னவாகத் தோன்றும்? அவனைப் பொறுத்தவரையில் இவ்விருப்பின் அர்த்தங்கள்தான் என்ன?
என்னென்னவோ எண்ணத் திரள்கள், ஏதேதோ நினைவுகள். ஏனென்று உணர்ந்தறிவதற்குள் இந்த முறை சவுரி கிடைக்கவே மாட்டானோ என்கிற சந்தேகம் மூண்டது. கிட்டத்தட்ட இருபத்தைந்து நாட்கள் ஆகிவிட்டன. உள்ளூர் கேபிளில் கூட விளம்பரம் கொடுத்தாயிற்று. வெளியூர் பேருந்துகளின் முதுகில் ‘சவுரி எனும் சவரிமுத்து’ காணவில்லை எனும் நோட்டிசு ஒட்டியாயிற்று. எப்பலனுமில்லை.
என்றாலும் ஒரேயொருமுறை மகாதானம் சென்று பார்த்துவந்தால் தேவலை என்று தோன்றியது.இப்போதெல்லாம் அவனுக்கு விவரம் புரிகிறது போலும்.
காலம் அவனுக்கும் கற்றுக் கொடுக்கும் தானே; கொம்பற்றதும் முட்டும்தானே?
அறியாமையே பேரறிவா….