காவு -ஜி.எஸ்.எஸ்.வி. நவீன்

து இப்பம் மலையனின் வாசஸ்தலம்” வெற்றிலையில் மையிட்டுப் பார்த்தபடி நம்பூதிரி சொன்னார்.

”இங்கிருக்கது மலை வாதைகளை காத்து இருக்கது ஒரு பழைய நம்பூதிரியின் ஆன்மா. மலையன் நாராயணன் நம்பூதிரி அவரோட பேரு. மலையில பாலாற்றங்கரையில் வாழ்ந்த இசக்கிய பாதுகாத்து வாழுற மலை தெய்வம் அவர்” நம்பூதிரி சொன்னதும் என் முகம் முழுவதும் வாட்டமிழக்கத் தொடங்கியது.

”நம்பூதிரி எதுக்கு ஒரு பிள்ளைவாள் வீட்டுக்குள்ள கேறி சாமி வந்தாடணும்” என்றேன் நான். நான் இப்படிப் பல நூறு குலதெய்வ கதைகளை, அவர்கள் மாண்ட சரித்திரத்தைக் கேட்டாயிற்று. இப்போது புதிதாக ஒரு நம்பூதிரி மாடனின் கதையைக் கொண்டுவந்து அமர்ந்திருந்தார் எங்கள் வீட்டில் வாதையை நீக்க வந்த ஆற்றங்காவு திரிவிக்ரமன் நம்பூதிரி.

“அது இவங்க அப்பாவோட பீடைல்லா” உள்ளறையிலிருந்து லட்சுமியின் குரல் மட்டும் வெளியே வந்தது. தீர்வுகள் இல்லாத பல கதைகள் வீட்டில் ஏற்கனவே அப்பாவைச் சுற்றி இருந்தன. நான் உடல் முழுதாகத் தளர்ந்து நிர்க்கதி ஆனவன் போல் என் மனைவியின் குரல் வந்த திசையைப் பார்த்தேன்.

வீட்டின் நடு முற்றத்தில் நம்பூதிரி அரிசியில் பகவதியின் உருவத்தை வரையத் தொடங்கினார். அவர் தனக்குள் மந்திரம் போல் எதையோ உச்சரிப்பது தெரிந்தது.

என் கண்களிலிருந்த அவநம்பிக்கையை நம்பூதிரியின் முன் முழுதாக மறைக்க முயன்றேன். அப்பா இறந்து கடந்த நான்கு வருடங்களில் ஏதேதோ பரிகாரங்கள் செய்தாயிற்று. ஆனால் வீட்டில் இரவில் கேட்கும் குரல் மட்டும் நின்றபாடில்லை. முதலில் ஒரு பாட்டு போல் தூரத்தில் ஒலிக்கும். அது கூடி கூடி வீட்டின் தெற்கு மூலையில் யாரோ ஒற்றையில் பாடுவது போல் சத்தம் கேட்கத் தொடங்கும். அது எழுந்து சன்னதம் வந்தவர்போல் இரவு முழுவதும் வீட்டைச் சுற்றி ஒரு மனிதன் பாடி வருவார். மந்திரம் ஓதுவார். ஆடுவார். ஒரு சாமிக் கொண்டாடியின் செய்கைகள் வீட்டை இரவு முழுவதும் நிறைக்கும். சரியாக அப்பா இறந்து பதினாறாம் நாளிலிருந்து இந்தச் சத்தம் கேட்கத் தொடங்கியதால் வீட்டில் எல்லோரும் அது அப்பாவின் ஆவி என நம்பத் தொடங்கினர். அவர் ஆத்மாவைக் குளிர்விக்கப் பரிகாரங்கள் வீட்டில் நிகழத் தொடங்கியது நான்கு வருடங்களாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

“உங்க வீட்டில துர்மரணம் அடைஞ்சவங்க யாராச்சும் உண்டா?” என்றார் நம்பூதிரி.

சற்று யோசித்துவிட்டு அம்மாவைப் பார்த்தேன். அவள் நிலைப்படிக்குப் பின்னால் தன்னைப் பாதி மறைத்து நின்றுகொண்டு தலையாட்டினாள்.

நான் நம்பூதிரியிடம் “இல்லை” என்றேன்.  எனக்கும் கடந்த மூன்று, நான்கு தலைமுறையில் அப்படி இறந்தவர்கள் என யாரும் நினைவில் எழவில்லை.  

நம்பூதிரி தன்னுள்ளே பேசிக்கொண்டு “சரி செய்யலாம்… சரி செய்யலாம்…” என்றார். நம்பூதிரி “சாந்தி உண்டு… சாந்தி உண்டு…” எனச் சன்னதம் வந்தவர் போல் பாடினார்.

லட்சுமி சொன்னது போல் இத்தனை நாளில் வீட்டைச் சுற்றி வருவது அப்பா தான் என நானும் நம்பத் தொடங்கியிருந்தேன். ஏனென்றால் எங்கள் வீடு அப்படியொன்றும் புராதன, பூர்வீக வீடொன்றும் இல்லை. அப்பா தான் ஒவ்வொரு கல்லாக எடுத்து இந்த வீட்டைக் கட்டினார். இந்த வீட்டைக் கட்டி முடிக்க அவருக்கு முப்பது வருடம் ஆகியது. மூன்று மாடங்கள்கொண்ட அழகிய பெரிய ஓட்டு வீடு. வீட்டைக் கட்டி முடித்தபோது அது காலத்தால் பழமையானதாகத் தோற்றம் கொள்ளத் தொடங்கியது.

ஆனால் அதற்காக அப்பா தன் சம்பாத்தியம் முழுவதையும் செலவிட்டார். அப்பாவிற்கு இந்த பித்து நாங்கள் பிறப்பதற்கு முன்பாகத் தொடங்கிவிட்டது. திருமணம் ஆவதற்கு முன்பாகவே அவர் வீடு கட்டிக் கொண்டிருப்பதாக அம்மா சொன்னாள். இந்த பித்து என்னுடைய இருபத்தி இரண்டாவது வயதில்தான் அப்பாவுக்கு ஓய்ந்தது. ஆனால் அப்போது நாங்கள் ஆறு லட்ச ரூபாய் கடனாளி ஆகியிருந்தோம். நானும், தம்பியும் கல்லூரி படிப்படி தொடர முடியாமல் ஆனது.  அப்பா எங்கள் யாரைப் பற்றியும் கவலை கொள்ளவில்லை. எதையும் யோசிக்காமல் அவர் வீட்டைக் கட்டி முடித்திருந்தார்.

அப்பாடா முடித்துவிட்டார் என நாங்கள் பெருமூச்சு விட்டபோது வீட்டின் தெற்கு புரையில் ஒரு இசக்கி கோவில் கட்டத் தொடங்கினார். அந்த அம்மன் அப்பாவின் வழி வரும் குலதெய்வம். அப்பா அதனை தெற்கு புரையில் பிரதிஷ்டை செய்ய மேலும் ஐந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். சொல்லப் போனால் அந்த சிலையை வடித்தது கூட அப்பா தான். அதையும் கடன் வாங்கியே செய்தார்.

“இப்ப எதுக்கு வீட்டுக்குள்ள இசக்கி கோவில்?” அம்மாவிடம் கோபமாகக் கேட்டேன்.

“அது அவருக்க குல தெய்வம். அது அங்க தான் வரும்” அம்மா வக்காலத்து வாங்கினாள். ”இத்தனை வருஷம் கெட்டி குடியைக் கெடுத்தது போதாதா. இனி புதுசா இது என்ன?” நான் வீட்டில் சண்டையிட தொடங்கியிருந்தேன். தம்பி கோபித்துக் கொண்டு சென்னை கிளம்பிச் சென்றான்.  ஆனால் அப்பா மேலும் நான்கு வருடம் எடுத்து அந்த இசக்கி கோவிலைக் கட்டி முடித்தார்.

அது கட்டி முடித்த போதுதான் வீடு முழுமை கொண்டது தெரிந்தது. நாங்கள் குடும்பத்தோடு சேர்ந்து ஒரு பெருமூச்சு விட்ட சமயம் அது. நான் ஒரு தொழில் தொடங்கலாம் எனத் திட்டமிட்டிருந்தேன்.

ஆனால் அப்போது அப்பாவின் சுபாவம் முழுதாக மாறியது. அவர் எங்கள் யாரிடமும் பேசாமல் போனார். அதற்கு முன்னும் அவர் எங்களிடம் அதிகம் பேசுபவர் இல்லை என்பதால் முதல் சில ஆண்டுகள் எங்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அவர் இயல்பிலேயே அம்மாவிடம் கூட இரண்டொரு வார்த்தைகள்தான் பேசுவார். அப்பாவின் வாழ்நாளிலேயே நான் ஒரு பத்து இருபதுமுறை தான் அவர் பேசிக் கேட்டிருக்கிறேன் என்பதால் அதனை அவர் இயல்பு என நம்பினேன். ஆனால் நாட்கள் செல்ல அவர் மௌனமாக வாசல் முற்றத்தில் உட்காரத் தொடங்கினார். அவர் வேலைக்குச் செல்வது நின்றது. அவரது சம்பாத்தியம் நின்றது. வீட்டின் முற்றத்தில் அமர்ந்து வீட்டையே வெறித்துப் பார்க்கத் தொடங்கினார். கான்கிரீட் கட்டடங்கள் அருகே வரத் தொடங்கியபோது எங்கள் வீடு மேலும் பாழடைந்து பழமை கொள்ளத் தொடங்கியது.

அப்பா முற்றத்தில் அமர்ந்து அந்த பழமையுள் தன்னைப் பழமையாக்கிக் கொண்டிருந்தார். வெறித்த அவரது விழிகள் வீட்டைப் பார்த்து பகல் முழுவதும் அமர்ந்திருந்தன. நான் சில இரவுகளில் கண்விழித்த போது அப்பா வாசலில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். அம்மாவிடம் அதைப் பற்றிச் சொன்னபோது அவள் அதைப் பெரிதாகச் சட்டை செய்யவில்லை. தம்பி போல் எனக்கும் வீட்டைவிட்டுச் செல்ல வேண்டுமென ஆத்திரம் எழுந்தது. ஆனால் நான் அப்பாவைக் குணமாக்க முடியுமெனக் காத்திருந்தேன். அவர் வீட்டைப் பார்ப்பதும் அங்கே அமர்ந்து தனியாகப் பேசிக் கொண்டிருப்பது என நாட்கணக்கில் நிற்காமல் தொடர்ந்தது.

நான் நம்பூதிரியைப் பார்த்தேன். அவர் வெற்றிலையில் எதையோ கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். நான் மெல்ல அவரருகே சென்று, “இங்கே வீட்டுக்குப் பின்னால ஒரு வாகை மரத்து இசக்கி உண்டு. அங்க தான் அப்பா தெனமும் உக்கார்ந்து பூஜை செய்வார். அப்போ மட்டும் தான் அப்பாவோட சத்தம் கேட்கும். அவர் மந்திரம் போல் எதையோ பாடுவாரு.” என்றேன்.    

“அப்படி சில வாதைகள் வந்து மலையனை அவர்களின் ஊர்தி ஆக்கும். மலையனும் அவர்களுக்குக் கட்டுப்பட்டு அமர்ந்திருப்பான்” என்றார் நம்பூதிரி. 

”சாமி அந்த மந்திரமும், சத்தமும்” என்றேன் அவரிடம்.

அவர், “உண்டு, உண்டு” எனத் தலையாட்டினார்.

“அப்பா இறந்த பிறவு தான் மந்திரத்த பாடுத சத்தம் கேக்குது” என்றேன் அவரிடம்.

அவர் சொன்னார், “இங்க வாழ்வது ஒரு மலையன். அவன் எங்கே எப்போது எப்படி வருவான் எனச் சொல்ல முடியாது. மலையன் பதினெட்டு தேவதைகளுக்கும் கட்டுப்பட்டவன். அவன் ஸ்தலம் மலையில் தனிமையில் இருப்பது. என்ன காரணம்ன்னு தெரியாம அவன் இங்க இறங்கி வந்திருக்கான்” என்றார்.

நான் “ஆமா சாமி, கருப்பா ஒரு உருவம். நல்லா உதடு பெருத்து. முகமெல்லாம் புண் வந்த மாதிரி ஒரு உருவம். அதை நான் ஒருக்க மூத்திரம் கழிக்க வரும்போது பாத்தேன்” என்றேன் அவரிடம்.

என் பின்னால் வந்து நின்ற என் மனைவி லட்சுமி, “சில சமயம் வெளுப்பாட்டும் வரும். நல்ல லட்சணமா, தேஜஸா. சுந்தரனாட்டும் ஒரு உருவம் நான் பாத்தேன்” என்றாள். நான் அவளைக் கண்களால்  “போட்டீ தூர” என்றேன். அவள் முகத்தைச் சிலுப்பிக்கொண்டு உள்ளறைக்குச் சென்றாள்.

உண்மையில் இத்தனை நாளில் எனக்கு இங்குள்ள பிரச்சினை பழகியிருந்தது. இரவில் ஒருவன் வந்து பாடி ஆடிச் செல்கிறான். இவர்கள் எல்லோரும் சொல்வது போல் அது அப்பாவாக இருக்கலாம் அவ்வளவு தானே காரியம். நடு ஜாமத்தில் வரும் குடுகுடுப்பை நாயக்கன் தான் அவன் எனச் சமாதானம் சொல்லத் தொடங்கியிருந்தேன். ஆனால் அதனை அத்தனை எளிதாகவும் எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஒருவரால் ஒரு வீடு முழுவதும் கண்ணெதிரே நலிந்து சிதைந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அம்மா எதுவும் பேசாமல் மௌனமானாள்.

நம்பூதிரி கையிலிருந்த வெற்றிலையை நான்காக மடித்தார். எட்டாக்கினார். பதினாறாக மடித்துச் சுருட்டினார். அதனை நெற்றியில் வைத்து ஏதோ மந்திரம் போல் ஓதினார். வீட்டின் தெற்குப் பக்கமாகச் சென்று அதனை வீசிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடந்து வந்தார்.  

லட்சுமி என் பின்னால் வந்து, “எல்லாம் உங்க அப்பாவுக்க பீடையாக்கும்” என்றாள். அம்மா பின்னால் நின்று அதனைக் கேட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது. நான் அவளை அடிக்க கையை ஓங்கினேன். அதற்குள் நம்பூதிரி திரும்பி வந்தார்.

நான் மெல்ல அவரிடம், ”சாமி இத தீத்திறலாம்ல” என்றேன்.

அவர் “உம்” என மட்டும் உறுமினார். நான், ”இல்ல இது வீட்டுக்க காரியமாக்கும். இதை வித்துப்போட்டு நான் திருநெவேலி போர யோசனை ஒன்னு உண்டு. அங்க போயீ ஏதாச்சும் வியாபாரம் பாக்கணும். என் குடும்பத்துக்க ஜீவிதமாக்கும்” என்றேன். அவரிடம் பதிலில்லை. அவர் மெல்ல மீண்டும் களத்தைப் பார்க்கத் தொடங்கினார். “தெரியுது, இதில் தெரியுது… நடந்து வரும் மலையனின் நடை தெரியுது” என்றார்.

“பாலாற்றங் கரையோரம் படையிருக்கும் பகவதி அம்மையே…” எனப் பாடத் தொடங்கினார்.

அவர், ”ஆற்றங்கரையில வாழும் இசக்கி ஒருத்தி நடந்து வர்றா. அவள் வந்து இங்க அமர்ந்திருக்கா. அவளுக்குக் காவலா அந்த மலையன் வந்திருக்கான்” என்றார். அவர் விழிகள் களத்தையே நோக்கிக் கொண்டிருந்தன. எனக்கு அதில் எதுவும் தெரியவில்லை. அவர் “அவன் தான் இங்க வந்திருக்கது. முந்நூறு வருஷமா மலையில இருந்தவன் இப்ப இந்த வீட்டுக்கு வந்திருக்கான்.” என்றார். அவர் குரல் உச்சாடனம் செய்வது போல் எழுந்தது. நான் அரண்டவனாக அவரைப் பார்க்கத் தொடங்கினேன். அவர் அந்த மலையன் நம்பூதிரியின் கதையைக் களத்தில் பார்த்து சொல்லத் தொடங்கினார்.

***

கொல்லம் வருடம் 978ல் நடந்த கதை இது. அப்போது திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தை அரசர் அவிட்டம் திருநாள் பலராம வர்மா ஆண்டு வந்த காலம். அன்றைக்கு திருவிதாங்கூர் அரசின் அரசியல் மையம், அறிவு மையம் என இரண்டும் நம்பூதிரிகளின் கையிலிருந்தது. தென் திருவிதாங்கூரில் மட்டும் அதற்கு திருவட்டாறு, ஏற்றக்கோடு, பார்த்திப சேகரபுரம் என மூன்று முக்கிய மையங்கள் இருந்தன.

இந்த மூன்று இடங்களுமே அரசியலைத் தீர்மானிக்கும் மையங்களாகவும் இருந்தன. நம்பூதிரிகள் இந்த மூன்று ஊர்களுக்குப் பாத்தியப்பட்ட கோவில்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற ஊர்களில் உள்ள கோவில்களுக்குப் பூஜை செய்யவும் சென்று வந்ததால் தென் திருவிதாங்கூரின் சக்கரவர்த்திகளாக இவர்கள் திகழ்ந்தனர்.

திருவிதாங்கூர் அரசருக்குக் குழப்பமான சில அரசியல் முடிவுகளை ஏற்றக்கோடு நம்பூதிரிகள் எடுக்கும் வழக்கமே இருந்தது. ஏற்றக்கோடு நம்பூதிரிகள் மீமாம்சத்தில் தேர்ந்தவர்கள் என்பதால் அரசரின் நேரடிச் சலுகைகளைப் பெற்றனர். மேலும் அதர்வ வேள்வி செய்யும் சடங்குகளையும் கற்றுத் தேர்ந்திருந்தனர். திருவிதாங்கூர் அரண்மனையின் மீமாம்ச பூஜையில் ஏற்றக்கோடு நம்பூதிரிகளுக்கே முதல் மரியாதை வழங்கப்பட்டது. திருவட்டாறு, பார்த்திப சேகரபுரம் என மற்ற ஊர் நம்பூதிரிகளும் ஏற்றக்கோட்டிற்குப் படையெடுத்தனர்.

ஏற்றக்கோட்டின் இத்தனை செல்வாக்கும் நாராயணன் நம்பூதிரி என்ற ஒற்றை மனிதரின் செல்வாக்கில் நிகழ்ந்தவை. தெக்கம் வீட்டு நாராயணன் நம்பூதிரி என்றால் ஊரில் பரிச்சயம். அப்போது நம்பூதிரிக்கு வயது அதிகம் போனால் இருபத்தைந்து இருக்கும். அந்த சின்ன வயதிலேயே அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவர் ஆனார். இனி கேட்பதற்கு உலகில் ஒன்றுமில்லை. சொல்வதற்கு மட்டுமே அவரிடம் மிச்சமிருக்கிறது என்றானது. கேரளத்தின் மொத்த நம்பூதிரிகளும் வயது வரம்பு பாராமல் அவர் காலடியில் கல்வி கற்றனர்.

நம்பூதிரி மீமாசம், மாந்திரீகம், தாந்திரீகம் என மூன்றிலும் கை தேர்ந்த விற்பன்னர். அதர்வ வேதமும், அதற்கான சடங்கு முறைமைகளும் முழுதாக ஐயமறக் கற்றறிந்த ஒருவர் நாராயணன் நம்பூதிரி மட்டுமே. மீமாசம் அவர் நாவில் உச்சாடனமென நிகழ்ந்தது. எதிரிகள் வைக்கும் மந்திரமும், தந்திரமும், எந்திரமும் அவர் முன் பலிக்காமல் போனது. திருவிதாங்கூரில் ஏற்றக்கோடு நம்பூதிரிகளைக் கேள்வி கேட்க யாருமில்லை என ஆன சமயம்.

ஒருமுறை பலராமவர்மா மன்னருக்கு யாரோ மகாமாந்திரீகனை ஏவி விட்டுவிட்டனர். அதனை நாராயணன் நம்பூதிரி வரும்முன் அறிந்து சரி செய்தார்.  பீடைகொண்டு படுக்கையாகி இருந்த மன்னரைக் குணமாக்கினார். அதற்குப் பிறகு கேட்கவா வேண்டும் திருவிதாங்கூர் ராஜாவே திங்களுக்கு இரண்டுமுறை வந்து நாராயணன் நம்பூதிரியை தாழ்பணிந்து வணங்கிச் செல்லும் காலம் வந்தது. அவர் முன் சொல்லெடுக்க உலகில் மற்ற மனிதர்கள் யோசித்த சமயம்.

ஆனால் நாராயணன் நம்பூதிரி மீமாம்ச அனுஷ்டானங்களுடனே தன் வாழ்வை நிறுத்திக் கொண்டார். ஊர் எல்லையில் எளிய குடிசையிலேயே வாழ்ந்தார். நாள் தவறாமல் காட்டுக்குள் இருக்கும் ஏற்றக்கோடு பகவதி கோவிலுக்குச் சென்று பூஜைகள் செய்வது. மலர் சாத்தி வணங்கி வருவது என மறக்காமல் செய்து வந்தார். தன்னுடன் யாரும் வராத நாட்களில் தனியாகச் சென்று பூஜைகளை முடித்து வருவார்.

அப்படி ஒருநாள் நாராயணன் நம்பூதிரி மீமாம்ச பூஜைகளை முடித்துவிட்டுக் காட்டிலிருந்து வீட்டிற்குத் திரும்பியபோது அடிக்கும் வெயில் தண்ணீர் தாகம் ஏற்பட்டது. சுற்றி யாருமில்லாத பொழுது. நீரின் தவிப்பு தாங்க முடியாமல் நேராகப் பக்கத்திலிருந்த காட்டிற்குள் நுழைந்தார்.

அங்கே வாகை மரத்தடியில் மலர்கள் சூழ வெகுநாட்களாகத் தனியாக ஒரு இசக்கி காத்திருந்தாள். அவள் அங்கே இருப்பது அறிந்து யாரும் அவ்வழி நடமாடுவது இல்லை. அதர்வ வேதம் முழுதும் கற்றுத் தேர்ந்த நாராயணன் நம்பூதிரிக்கு அப்படி எந்த கட்டும் இல்லை என்பதால் அவர் நேராக அந்த வாகை மரத்தடிக்குச் சென்றார்.

அவள் அங்கே மலர்களை எண்ணிக் கோர்த்து மாலையாக்கி அணிந்து கொண்டிருந்தாள். தாகம் கண்ணை மறைக்கும் வேளையிலும் இத்தனை அழகான ஒரு பெண் பூமியிலா? எனக்கண்டு வியந்தார். கண்கள் இருண்ட போதும் அவரது மனவிழிகள் அவள் அழகைப் பார்த்தபடி இருந்தன.

அவளைக்கண்டு, “தாகம். குடிக்கக் கொஞ்சம் வெல்லம் வேணும்” அத்தனை அதிகாரம் இல்லாமல் இறைஞ்சும் தன் குரலை முதல்முறையாக நம்பூதிரி கேட்டார். அவள் சிரித்த படி சிணுங்கிய குரலில் ”இங்க என்கிட்ட யாரும் எதுவும் கொடுத்து வாங்கும் பழக்கம் இல்லை” என்றாள்.

”திருவிதாங்கூரின் மகா வித்வானான நாராயணன் நம்பூதிரிக்கு இந்த ராஜ்ஜியத்தில் அப்படி எந்தத் தடையும் இதுவரை இல்லை. குடிக்கத் தண்ணீ வேணும் கொடு”  என்றார்.

அவள் அதே சிரிப்புடன் அருகிலிருந்த சுனையைக் காட்டினாள்.  அத்தனை நேரம் நம்பூதிரியின் கண்களுக்கு அந்தச் சுனை தெரிந்திருக்கவில்லை. அவள் அதில் இறங்கிச் சென்று அவருக்கு ஒரு தென்னை ஓட்டில் நீர் எடுத்து வந்தாள். நம்பூதிரி சுனைக்கருகே சென்று அதனை வாங்கி மூன்று முறை பருகினார். கண் மலர்ந்த முதல் கணம் அந்த பெண்ணை சுனையில் பார்த்தார். ஆடியில் அவள் மும்மடங்கு அழகாகத் தெரிந்தாள்.

“ஆழத்தில் இன்னும் அழகாக இருக்கிறாய்” என்றார்.

“இங்கிருப்பதே அங்கும் தெரியும்” எனச் சொல்லி அவள் மீண்டும் சிரித்தாள். அவள் அத்தனை அழகாக நீரின் அடியில் பிரகாசித்து ஒளிவிடுவது போலிருந்தது. தான் பார்த்ததிலேயே அழகிய பெண் இவள் என்ற எண்ணம் கொண்டார். கருங்குழலோடு ஒத்த கருமேனியின் அழகை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

”கருப்பின் அழகு சொர்ணம்” எனத் தனக்குள்ளே சொல்லிக் கொண்டார். ஆனால் அது அவள் செவியை எட்டியது. அவள் தன்னுள் வந்த வெட்கத்தை அடக்கிக்கொண்டு நின்றாள்.

“உன்னோட பெயரென்ன?” அவளிடம் கேட்டார்.

அவள் “சியாமளா” என வெட்கத்துடன் பதில் சொன்னாள்.

“சியாமளா” என அந்தப் பெயரை ஒருமுறை தனக்குள் சொல்லிப் பார்த்தார்.

“அதுவும் கருப்பு தான்” என்றார் அவளிடம். அவள் வெட்கத்துடன் தலைகுனிந்து கொண்டாள். அவளது கருப்பழகில் நம்பூதிரி கொஞ்சம் கொஞ்சமாக இரும்புருகி வடிவது போலாகிக் கொண்டிருந்தார். ”கருப்புக்கு உள்ள இருக்கது எத்தனை அழகு… நான் உபாசிக்கும் பகவதியோட வடிவம் நீ” என்றாள் அவளிடம்

“நான் பார்த்ததிலேயே அழகி நீ தான்” என்று சொல்லி ”நீ இனி என்னோடு இரு” என அவளைக் கரம்பற்றி அழைத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றார். நம்பூதிரி வாகை மரத்தடியில் வாழ்ந்த சியாமளையை மீட்டு ஊருக்குள் கூட்டி வருவது உடனே பேச்சாகியது. நாராயணன் நம்பூதிரி ஊர் திரும்பும் முன் ஏற்றக்கோடு ஊர் முழுவதும் மன்றில் கூடியிருந்தது. ”இவளை ஆறு தலைமுறைக்கு முன்னே கஷ்டப்பட்டு அந்த வாகை மரத்தில் கட்டி வைத்தோம். நாராயணன் அப்படி அவளைக் கூட்டி வருவாருன்னு எதிர்பாக்கலையே” என்றார் மூத்த நம்பூதிரி.

அடுத்த அரைமணி நேரத்தில் மொத்த திருவிதாங்கூர் ராஜ்ஜியத்திலும் இதுவே பேச்சாக எழுந்தது. ஊர் முழுவதும் தனக்காகக் கூடி நிற்பதைக் கண்டார் நாராயணன் நம்பூதிரி. மற்றவர்கள் யாரும் பேசத் தொடங்கும் முன், ”நான் இவளைத் திருமணம் கட்டுவதாகச் சத்தியம் கொடுத்துவிட்டேன். அதை மீற முடியாது. இதை இந்த மண்ணறைந்து சத்தியம் செய்கிறேன்” என மூன்று முறை மண்ணறைந்து சத்தியம் செய்தார். மூத்த நம்பூதிரி, “அது நம்ம வழக்கம் இல்லை. அவ யாருன்னு…” எனச் சொல்ல வாயெடுப்பதற்குள் நாராயணன் நம்பூதிரி, “இனி இவளோட தான் என் வாழ்க்கை அதுல எந்த மாற்றமும் இல்லை. இதை இந்த ஊர் எதிர்த்தா நான் ஊரை விட்டுப் போறேன்.” எனச் சொல்லி அங்கிருந்து திரும்பி நடந்தார். அனைவரும் திகைத்த விழிகளுடன் திரும்பிச் செல்லும் நாராயணன் நம்பூதிரியையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

மூத்த நம்பூதிரி கிளம்பிச் செல்லும் நாராயணனையே பார்த்துக் கொண்டிருந்தார். “இது இப்படித்தான் நடக்கும் வேற வழியில்லை” என்றார். அவர் வீரப்பல்லையும், கோர ரூபத்தையும் காட்டி நாராயணன் அருகே செல்லும் இசக்கியை கண்டார். அவள் திரும்பி அவரை நோக்கிச் சிரித்தாள். பதினெட்டு கரங்கள், பத்ர குண்டலம், கரண்ட மகுடம், உந்திய வயிறு என அகோர ரூபத்தை அவர் முன் காட்டினாள். மூத்த நம்பூதிரி பயந்து “எனக்க பிள்ளை” எனக் கத்தினார். அன்று இரவே ஊர் எல்லையில் மூத்த நம்பூதிரி ரத்தம் கக்கி இறந்துக் கிடந்தார்.

மூத்த நம்பூதிரி இறந்த செய்தி  திருவிதாங்கூர் அரசரின் காதுக்குச் சென்றது. அவர் கணிகரை அழைத்து வருகுறி நோக்கினார். கணிகர் சோவியை மூன்று முறை உருட்டி முகம் சுழித்து, “இது ராஜியத்திற்கு போதாத காலம். அதுக்கு பரிகாரம் அந்த இசக்கியை அடக்கி திரும்பவும் வாகை மரத்துல நிறுத்த வேண்டும்.” என்றார்.

அரசர் ஊரிலுள்ள நம்பூதிரிகளை அழைத்து நாராயணன் நம்பூதிரியை மீட்டு அந்த இசக்கியை அடக்கிக் கொண்டுவரும்படி சொன்னார். அரசன் சொல் கட்டளையென நகர் முழுக்க சென்றது.

நாராயணன் நம்பூதிரி சியாமளாவுடன் மலையேறி கடந்து காடுகள் தாண்டி இலஞ்சி மலைப்பகுதியிலிருந்த பாலாற்றங்கரைக்கு சென்றார். அங்கே அவர் ஓலை கூரை வேய்ந்த குடிசை அமைத்துத் தங்கினார். சியாமளாவும் அவருக்குத் துணையாக அங்கேயே அவருடன் இருந்துவிட்டாள். நம்பூதிரிக்கு உணவுக்குக் காய், கனிகள் பறித்து வருவது. அவரது பூஜைக்குத் தேவையானவை செய்வது. அவருக்கு நீர் கொண்டுவருவது என அவருடன் வாழ்ந்தாள்.

இரவு முழுவதும் இருவரும் காதல் கொண்டு காமத்தில் ஆடினர். காமம் தீர்ந்தபோது காதல் கொண்டனர். நம்பூதிரி வாயிலிருந்து, “நீ அழகி… நீ சொர்ணம்” என்ற சொற்கள் மட்டும் உதித்துக் கொண்டிருந்தது. ஆனால் இசக்கி திருவிதாங்கூருக்குள் சென்று ஒவ்வொரு இரவும் தன்னை முன் அடக்கி வைத்தவர்கள் வம்சத்தில் ஒவ்வொருவரையாக கொன்று இரையாக்கிக் கொண்டிருந்தாள்.

நாள்தோறும் நம்பூதிரிகள் பாலாற்றங்கரை நோக்கிச் செல்லத் தொடங்கினர். அதர்வ வேதம் கற்கவும், மீமாம்சம் பயிலவும் எனக் காரணம் சொல்லிக்கொண்டு சென்றனர். அவர்கள் நாராயணன் நம்பூதிரியிடம் மூத்த நம்பூதிரி இறந்த செய்தியைக் கூறினர். அதைக் கேட்டு அவர் மீண்டு ஊருக்கு வருவார் என எளிய கணக்கு போட்டனர். ஆனால் அச்செய்தி நாராயணன் நம்பூதிரியின் செவிகளுக்குச் சென்று சேரவில்லை.

அவர் பகல் முழுவதும் அங்கே ஒவ்வொருவருக்கும் வகுப்புகள் எடுத்தார். சியாமளா அவருக்கான பணிவிடைகள் செய்து அவரருகே அமர்ந்திருந்தாள். அவள் நம்பூதிரியைத் தனியாக விட்டுச் செல்லும் தருணத்திற்காகப் பிற நம்பூதிரிகள் காத்திருந்தனர். ஆனால் அது நிகழாமலே நாட்கள் சென்றது. பிற நம்பூதிரிகள் இரவு அங்கே தங்கும் எண்ணம் கொண்ட போது நாராயணன் நம்பூதிரி பிடிவாதமாக தன்னுடன் யாரும் இரவு தங்கக் கூடாது எனச் சொல்லிவிட்டார்.  

குடிலுக்கு வருபவர்களுக்கு சியாமளா தன் கோர ரூபத்தைக் காட்டினாள். கண்ணும், நாவும் பிதுங்கிய பேயுருவத்தைக் கண்டு பயந்தோடி வந்ததை ஊர் திரும்பிக் கூறினர். அன்றிரவே அவர்கள் அனைவரும் நாக்கும், விழிகளும் பிதுங்கி இறந்தனர்.

நம்பூதிரிகள் கற்ற அதர்வ வேதமும், மாந்திரீகமும் அவள் முன் பலிக்காமல் ஆனது. திருவிதாங்கூரின் மகா மாந்திரீகர்கள் உருவாக்கிய மந்திர தகடை எடுத்துக்கொண்டு பாலாற்றங்கரை வந்தனர். மறுநாள் அவர்கள் உடல் எலும்புகள் சுள்ளிகள் போல் ஊர் எல்லையில் கிடைத்தது. இதனை நாராயணன் நம்பூதிரியிடம் சென்று சொன்னபோது அவர் அப்படியொரு இசக்கி இங்கே காட்டில் வாழ வாய்ப்பில்லை எனச் சொல்லி அதனை நம்ப மறுத்தார். ஆனால் நாராயணன் நம்பூதிரிக்கு நடந்தது அனைத்தும் உள்ளூர தெரிந்திருந்தது.

சியாமளா அருகிலில்லாத சமயம் நம்பூதிரிகள் சேர்ந்து நாராயணன் நம்பூதிரியிடம் இசக்கியை கட்டும் பலம் கொண்ட மந்திரத் தகடை வேண்டி பெற்றனர். அவர் கொடுத்த தகடை சியாமளா நீரெடுக்க ஆற்றங்கரைக்குச் சென்ற போது அவள் பின்னால் சென்று அவளை ஆற்றில் தள்ளிவிட்டுத் தகடை எடுத்து ஆற்றைச் சுற்றிக் கட்டினர். அவளை வீழ்த்திவிட்ட பெருமிதத்தோடு நம்பூதிரியின் குடிசைக்கு வந்தபோது அங்கே சியாமளா நம்பூதிரிக்காகக் கனிகளை ஆய்ந்து கொண்டிருந்தாள்.

அன்றிரவு பாலாற்றங்கரைக்குச் சென்ற நம்பூதிரிகள் ரத்தம் கக்கி உயிரிழந்தனர். ஆனால் தொடர்ந்து மூன்றுமுறை நாராயணன் நம்பூதிரியிடம் மந்திரம் பெற்று அவளைக் கட்ட முயன்றனர். மீண்டும் உயிரிழப்பே மிஞ்சியது. ஊரில் ஒவ்வொருவரின் எலும்பும் எண்ணி யாரென ஒவ்வொரு நாளும் கண்டுப்பிடித்தனர். இதற்கு மேல் வழியில்லாததால் ஏற்றக்கோடு ஊர் முழுவதும் கூடி வந்து நாராயணன் நம்பூதிரியிடமே முறையிட்டது. அவருக்கு நடக்கும் அனைத்தும் புரிந்தது.

தொடர்ந்து உயிரிழப்பைக் கேட்டுக் கொண்டிருந்த நாராயணன் நம்பூதிரிக்கு தன் வேதம் பலிக்காமல் போனது கண்டு கோபம் வந்தது. ஆனால் அதற்கான காரணம் மட்டும் புரியாமல் இருந்தார்.

அவர் இரவு சியாமளாவிடம் விஷயத்தைச் சொன்னார். அவள் அவரைத் தேற்றினாள். “நாளை மீண்டும் முயலுங்கள். உங்களால் முடியாதது ஏதுள்ளது உலகில்” என்றாள்.

அவர் மறுநாள் புதிதாக எழுந்து பாலாற்றில் நீராடி வந்தார். தன் வேதத்தின் மீது சத்தியம் செய்து புதிய மந்திரத் தகடு ஒன்றைச் செய்துக் கொடுத்தார். ”எத்தனை அடங்காத வாதை என்றாலும் என் இந்த தகடுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்” எனச் சத்தியம் செய்தார். ஆனால் அன்று ஊர் முழுவதும் பலியாகி வீழ்ந்தது.

இப்படித் தொடர்ந்து நாட்டில் பலி நிகழ்வதைக் கண்டு திருவிதாங்கூர் தளவாய் கிளம்பி பாலாற்றங்கரைக்கு வந்தார். அவர் நேராக வந்து குடிலில் அமர்ந்திருந்த நாராயணன் நம்பூதிரியிடம் சென்று, ”வல்லிய இசக்கியொருத்தி ஊர் மொத்தமும் பலியாக்கிட்டு இருக்கா. நீங்க மனசு வச்சு அதைத் தீர்த்து வைக்கணும்” என்றார்.

நாராயணன் நம்பூதிரி மந்திர தகடை எடுத்து நடந்ததைப் பார்த்தார். தன் மந்திரம் பொய்யாய் போனதைக் கண்டார். தன் வேதம் பிழையானது கேட்டு கோபம் வந்தது. தான் செய்த பிழைக்கு பிழை நிகர் செய்ய விரும்பினார். இம்முறை பொய்த்தால் தான் உண்ணா நோன்பிருந்து உயிர் துறப்பேன் எனச் சத்தியம் செய்தார்.

அவர் அதுவரை நிகழ்த்தாத மகா அதர்வ யாகமொன்றை நிகழ்த்தினார். அதிலிருந்து வெளிவந்த மந்திரத்தகடை எடுத்து தளவாயிடம் கொடுத்தார். தளவாயின் கையில் தான் தயாரித்த காக்கும் கயிற்றை சுற்றிக் கட்டினார். மறுநாள் தளவாய் அரண்மனை முற்றத்தில் அந்த கயிற்றாலே தூக்கிட்டுக் கிடந்தார்.

அன்று இரவு சியாமளா குடில் மீண்ட போது நாராயணன் நம்பூதிரி விழித்திருந்தார். அவர் நிகழ்ந்ததை தன் மந்திரத்தால் கண்டிருந்தார். அவர் அவளிடம் “இந்நேரத்தில் எங்கு சென்று வருகிறாய்?” எனக் கேட்ட போது ஒரு கணம் சியாமளாவின் வீரப்பல் மின்னி மறைவதைக் கண்டார்.

ஆனால் அடுத்த கணமே அவள் பழைய நிலை மீண்டு நம்பூதிரியின் அருகே வந்தமர்ந்தாள். அவள் அவரிடம் செல்லம் கொஞ்சினாள். ஆற்றங்கரைக்குச் சென்று நீர் அருந்தி வருவதாக அவள் சொன்னாள். வீட்டில் நீர் இருப்பதை நம்பூதிரி கண்டார். ஆனால் அவள் பேச்சைக் கேட்டதும் நம்பூதிரியின் கண்கள் அவளிடம் பணிந்தது. இரவு முழுவதும் இருவரும் மீண்டும் காதலாடினர்.

தளவாய் உயிரிழந்த விஷயமறிந்து அரசர் அரண்டு போனார். இனி பாலாற்றங்கரைக்கு யாரும் செல்லக் கூடாது என ஊரில் தடை எழுப்பினார். மறுநாள் செய்தி அறிந்து தன் மந்திரம் முற்றிலும் செயலிழந்து போனதைக்கண்டு நாராயணன் நம்பூதிரி உடல் நலிந்தார். அவர் அந்த குடிலிலேயே படுத்தபடுக்கையானார். ஆனால் அவரால் சியாமளாவை விட்டு நீங்க முடியவில்லை. சியாமளாவும் நோய்வாய் பட்ட நம்பூதிரியை பத்திரமாக பார்த்துக் கொண்டாள். சில நாளில் அவர் நோய் மீண்டு அவளுடன் வாழ்ந்தார்.

அதன் பின் ஊரில் நாராயணன் நம்பூதிரியைப் பற்றிய கதை பலவாறாக எழுந்தது. நாராயணன் நம்பூதிரியின் தலை மேல் இசக்கி எழுந்து கோரத் தாண்டவம் ஆடுவதைப் பார்த்ததாகச் சொன்னார்கள். நாட்கள் செல்ல செல்ல ஊராரின் கோபம் நம்பூதிரியின் மேல் வஞ்சமாக மாறியது. அவர் வடக்கிருந்து உயிர் துறந்ததாகச் சிலர் கூறினர். சிலர் அவர் அந்த இசக்கியுடன் களியாடிக் கொண்டிருப்பதைக் கண்டதாகக் கூறினர். ஆனால் ஒருவரால் ஊர் முழுவதும் அழிந்த வஞ்சம் அவர்களுள் கூடியது.

அவரைப் பற்றிய கதைகளை ஊதிப் பெருக்கினர். அவர் உடலுருக்கி நோய் கொண்டு படுத்திருப்பதாகவும் அந்த இசக்கி அவரின் ரத்தத்தைக் குடித்துக் கொண்டிருப்பதாகவும் செய்தி வந்தது. அவர் உடல் பெருத்து வயது முதிர்ந்து யானைக்கால் நோய் வந்தவர் போல் ஆகிவிட்டார் என்றனர் சிலர். அவரது உதட்டில் அவள் கொத்தி கொத்தி முத்தம் வைத்து அது மட்டும் துண்டாகப் பெருத்து அவலட்சணம் கொண்டிருக்கிறார் என்றனர் சிலர். இப்படி ஒவ்வொரு நாளும் அவரைப் பற்றிய செய்திகள் திருவிதாங்கூர் ராஜ்ஜியத்திற்கு வந்தது.

அவர் பாலாற்றில் ரத்தம் கக்கி உயிரிழந்ததைப் பார்த்ததாக அவ்வழியாக வந்த ஒருவன் சொன்னான் என்றனர். நாட்கள் செல்ல செல்ல நாராயணன் நம்பூதிரி ஊர் நினைவிலிருந்து மறைந்து போனார். அத்தனை கோரமும், உயிரிழப்பும் அவர்கள் கனவின் ஆழத்தில் சென்று மறைந்தது. ஆனால் ஊரில் பலி தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டிருந்தது.

ஆனால் நாராயணன் நம்பூதிரி சியாமளாவுடன் அங்கே அந்தக் காட்டில் வாழ்ந்தார். அவர் உடல் நலிந்த போதும், நோய்கொண்டு வீழ்ந்தபோதும், முதுமை கொண்டபோதும் அவளுடனே வாழ்ந்து கொண்டிருந்தார். நாட்கள் செல்ல செல்ல அவர் சித்தம் முழுவதும் அவளே நிறைந்தாள். நம்பூதிரி சிந்திப்பதும் யோசிப்பதும் சியாமளா மட்டுமே என்றானது. அவருக்கு அவள் யாரென உள்ளூர தெரிந்திருந்தது. ஆனால் அவரால் ஒரு கணம் கூட அவளை விட்டு அகல முடியவில்லை. அவர் வாழ்வின் இறுதி கணம் வரை அவளை இறுகப்பற்றியிருந்தார். இறந்த பின் இசக்கியை காவல் காக்கும் மலையன் தெய்வமாக மலையிலேயே அமர்ந்தார்.

***

“கடந்த முந்நூறு ஆண்டுகளா அவள் அவரை விட்டுப் போகாம வாழ்ந்திட்டு இருக்கா. அவரும் அவளுக்குத் துணையா கூடவே இருக்காரு.” என்றார் நம்பூதிரி.

நான் நம்பூதிரியிடம் மெல்லக் குனிந்து கேட்டேன், “அப்படி ஒன்னு தொட்டது விடாதுபுடின்னு சொல்லிற முடியாதுல்லா சாமி. எல்லாத்துக்கும் மாத்து, பரிகாரம்ன்னு ஒன்னு இருக்கும்லா. இல்லையினா சாமின்னு தெய்வம்ன்னு ஒன்னு இருக்கதுல அர்த்தமில்லையே” என்றேன்.

அவர், “ம்…” “இருக்கும்…” என்றார் சற்று இடைவெளி விட்டு. பின், “ஆனால் சில பரிகாரம்ன்றது அத்தனை சுலபமான காரியமில்லை” என்றார்.

என் உடலில் ஏனென்று புரியாத ஒரு நடுக்கம் குடிகொள்ளத் தொடங்கியது. என் முன் வரைந்திருந்த அரசியால் ஆன களத்தில், வீட்டின் தெற்கு புரையை மௌனமாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அப்பாவின் பிம்பம் எழுந்தது.

 “நாராயணன் நம்பூதிரியால ஏன் அவளை இத்தனை வருஷமா அடக்கவோ, வெல்லவோ முடியலை தெரியுமா?” நம்பூதிரி திரும்பி என்னைப் பார்த்துக் கேட்டார்.

எனக்கு கரையான் புற்று போல் இந்த வீட்டை நிறைத்துக் கொண்டிருந்த அப்பாவின் பிம்பம் மந்திர உச்சாடனம் கொண்டு ஆடி வரும் நம்பூதிரி பிம்பத்தோடு இணைந்து கண் முன் எழுந்து வந்தது.

”தெரியல சாமி” என்றேன். என் உடல் மேலும் பதட்டம் கொள்ளத் தொடங்கியது.

“அந்த நம்பூதிரி முதல்முறை அவளை சுனையில் பார்த்த முகம். அந்த கணம்” என்றார். ”இத்தனை ஜென்மம் அவளை விடாது பிடிக்க அப்படி அந்த கணத்துல என்ன பிரமாதமா இருக்கு.” நான் கேட்டேன்.

வீட்டின் பின்கட்டில் இருக்கும் இசக்கியின் அழகிய முகம் நினைவிற்கு வந்தது. அதனை மறக்க விரும்பிய போதும் கண் முன் அந்த முகமே எழுந்து வந்து நின்றது. நாங்கள் வீடு கட்டியிருக்கும் இந்நிலத்தை முதல் முறை வந்து அப்பா பார்த்த கணம் நினைவில் எழுந்தது. அந்த கணத்தில் காடாய் கிடைந்த நிலத்தில் அவர் என்ன பார்த்திருக்கக் கூடும்.

“இதுக்கு காரணம் கேட்டா பதில் சொல்ல முடியாது. ஆனா, அது தான் மனுஷனோட சுபாவம். அந்த ஒரு கணம் அது தெய்வம் வந்து மனுஷங்க உடம்புல குடிக் கொள்றது. அது ஒரு பிடி. அது நாராயணன் நம்பூதிரிக்குள்ள நிகழ்ந்தது. அவர் சுனையில அவளைப் பார்த்தப்ப அவளும் அவரை பார்த்திட்டா. அதனால் தான் ஊர் எல்லையை நம்பூதிரிக் கூட நீங்கி போகும் போது அந்த வாகை வனத்து இசக்கி மூத்த நம்பூதிரியிடம் ஒரு வரம் கொடுத்து போனா” எனச் சொல்லி என் கண்களைப் பார்த்து நிறுத்தினார்.

நான் “என்ன?” என்றேன். என் பதட்டம் அதிகரித்து உடல் அதிர்வு கொள்ளத் தொடங்கியது.

நம்பூதிரி சொன்னார், “அவள் திரும்பி மூத்த நம்பூதிரியை நோக்கி, ‘இந்த நாராயணன் நம்பூதிரி நினைச்சா என்னை மறுபடியும் கட்ட முடியும். இவன் ஒரு முறை ஒரே ஒரு முறை மனசார நான் கட்டுப்பட வேணுமென நினைச்சு மந்திரத்தை உச்சரித்தா போதும். நான் திரும்பி வந்து கட்டுப்பட்டு அமர்ந்திருப்பேன்’ என்று சொல்லி திரும்பி பார்க்காமல் நடந்தாள்.” என் கண்கள் இருண்டுக் கொண்டு வந்தது. முன்னால் அமைத்திருந்த களத்தில் வீட்டின் ஒவ்வொரு முகமாக எழுந்து வந்தது. அவை எல்லாம் மறைந்து வீட்டு முற்றத்தில் அசையாது வெறித்திருந்த அப்பாவின் விழிகள் வந்தது. அவ்விழிகளில் எழுந்து நாராயணன் நம்பூதிரி ஆடிக் கொண்டிருந்தார். களத்தின் எதிரி முனையில் அமர்ந்திருந்த வாகை மரத்தடி இசக்கி அவ்வாடலை புன்னகையுடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்

5 COMMENTS

  1. மின்னிதழ்களில் வரும் கதைகளை விடாமல் வாசித்து வருகிறேன். பல கதைகள் முழுமையாகச் சொல்லப்படாமலும் தொய்வு நிலையில் இருப்பாதவும் உணர்ந்துபோது சலிப்புதான் உண்டானது. அந்தப் பின்னடைவையெல்லாம் இந்த ஒரு கதை தீர்த்து வைக்கிறது.. ஒருகால் மாந்திரீக யதார்த்த பாணி கதையாக வடிக்கப்பட்டமையாலும் இக்கதை வலிமையுடன் நிற்கிறது எனலாம். கதைசொல்லியின் வீட்டைக் குடும்பத்தை அதே இசக்கிதான் நாசம் செய்துகொண்டிருக்கிறது என்று நம்ப வைத்த சொல்முறையை கதை கையாண்டிருக்கிறது. நம்பூதிரி இசக்கி வசமானபோது கதை சூடு பிடிக்கிறது. அதன் பின்னர் அடுக்கடுக்காக நடக்கும் வன்மங்கள் மிக நேர்த்தியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் படித்து முடித்த போது நமக்கு கதைசொல்லிக்கும் அவன் குடும்பத்துக்கும் நேரப்போகும் சம்பங்கள் படிமமாக வளர்த்துவிட்டு போய்விட்டார். பதட்டமாகத்தான் இருக்கிறது

  2. வழக்கமான கதை சொல்லல் முறையில் சற்றே வித்தியாசம் , மொழிநடை எனக்கு ஜெ வின் யட்சி கதை , மலையாளத்து மாந்ரீகநாவல்களை நினைவூட்டியது நன்றியுடன்

  3. I am satisfied and happy to read this story mr.naveen.the location,the construction of the house,isakki(yatchi),reminds jeyamohan who is my favorite author too.if yatchi sits under a shenbaga tree it is absolutely a jayamohan story.
    All the best Naveen.i m searching for more stories in net
    I have read this twice or thrice.it just open on my mobile.i was in greater stress nowadays.i read this story.i found myself light hearted and happy.

  4. ஆரம்பத்தில் மர்மமாக தொடங்கி flashback-ல் திகிலை அடையச் செய்கிறது இந்த கதை. ஆழத்தில் இன்னும் அழகாக இருக்கிறாய் என்ற வரி நம்பூதிரிக்கு அந்த ஆழம் ஏதோ ஒன்றை கொண்டு வர போகிறது என துணக்குற செய்தது, அந்த ஆழம் அவனை ஆட்கொள்கிறது பின்பு ஆட்டுவிக்கிறது. தெரிந்தே ஆளப்படுகிறான். அது பிள்ளை வரை தொடர்வதை உருவாக்கிய சித்திரம் கதைக்கு அருமையான முன்னகர்வை தருகிறது. வாழ்த்துக்கள் நவீன்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.