நான் இந்த ஊருக்குப் புதுசு”
“எந்த ஊருக்குப் பழசு?”
பெண்களுக்கு எல்லா ஊரும் புதுசுதானே. அவர்களுக்கு வீடு தானே ஊர்.
டீக்கடையில் நேற்று நரைத்த தாடியுடன் பைத்தியம் போலிருந்த ஒருவன் என்னை இந்தக் கேள்வியைக் கேட்டான். “நீ எந்த ஊருக்குப் பழசு?” ஒரு விலாசம் கேட்டேன். என்னையே முறைத்துப் பார்த்தான். சொல்லத் தயங்குகிறானோ? நானாகச் சொன்னேன். “ நான் இந்த ஊருக்குப் புதுசு.” பிறகும் அவன் பார்வை ஊடுருவியது. சரி. இவன் ஆளே சரியில்லை என நான் நகர்ந்துவிட்டேன்.
தாடி பைத்தியம் அல்ல என்பதைக் கேள்வி சொன்னது. சித்தராக இருக்குமோ? பயம் வந்தது. தாடி வைத்தவர்களை அணுகுவதில் பெரும் குழப்பங்கள் இருக்கின்றன, சிறு வித்தியாசத்தில் இரண்டு உச்சிகளைப் பார்க்கலாம். எச்சரிக்கையுடன் விலாசத்தைத் தேடாமலே அறைக்குத் திரும்பினேன்.
ஊருக்குப் பழசா, புதுசா என்பதை எது தீர்மானிக்கிறது? ஊரின் வழித்தடங்களை அறிந்து வைத்திருத்தலையா? வழி தெரிந்தால் ஊர் புரியுமா? ஊர் என்பது பாதைகளா? என் ஊரில் எனக்கு எல்லாச் சந்துகளும் தெரியும். அப்படியென்றால் எனக்கு என் ஊர் பழசா? தாடியின் கேள்விக்குள் என்ன இருக்கிறது? யோசித்துக் கொண்டே தூங்கிப் போனேன்.
தஞ்சாவூர்காரியான நான் ஓர் ஆய்வின் நிமித்தமாக இந்த சின்ன நகரத்திற்கு வந்துள்ளேன். வரலாற்றுத்துறை மாணவியான நான் தமிழகத்தில் எஞ்சி இருக்கும் கோட்டைகள் பற்றியும் அரண்மனை பற்றியும் ஆய்வு செய்து வருகிறேன்.
நான் வரலாற்றுப் பட்டப் படிப்பு படிக்கும்போது மருது என்று ஒரு நண்பன்., கல்லூரியில் என்னுடன் படித்தவன். இந்த நகரத்திலிருந்தான் வந்திருந்தான்.
தஞ்சையில் நாங்கள் அரண்மனைத் தெருவில் இருக்கிறோம். வீட்டிற்கு வந்த நண்பன் தன்னுடைய தெருப் பெயரும் இதுதான் என்றான்.
ஊர்ப் பெயரைக் கேட்டாலே நான் தெருப் பெயரைச் சேர்த்துத்தான் சொல்வேன். பெயரை உச்சரிக்கும் கம்பீரம் எனக்குப் பிடிக்கும். காலம் பின்னோக்கிப் போகும், கருப்பு வெள்ளையாக நினைவுகள் நீளும். காதுக்குள் குளம்புச் சத்தம் கேட்கும். வாழ்த்தொலிகள் விண்ணைப் பிளக்கும். வழியெங்கும் வீரர்கள் மரியாதை நிமித்தமாக அணிவகுத்து நிற்பார்கள். முரசு கொட்டும். துந்துபி முழங்கும். பட்டு அம்பாரத் துணி காற்றில் பளபளத்து அசையப் பட்டத்து யானை மெல்ல அசைந்து தெருவில் காலடி எடுத்து வைக்கும்.
வெண்கொற்றக் கொடையின் நிழலில் யானைமேல் பல்லக்கில் அரசன் ராஜ்ய பரிபாலனம் செய்ய வருவது தெரியும். ஒளிர்வது சூரியக் கதிர்களா ? மன்னன் மேனி ஆபரணங்களா ? மக்கள் ஆராய்வார்கள். மாமன்னன் வாழ்க, வாழ்த்தொலிகள் விண்முட்டும். அந்த சத்தத்தை மீறிக் கேட்கவேண்டும் என்ற எத்தனிப்போடு நான் அரண்மனைத் தெரு என்று சத்தமாகச் சொல்வேன். ரத்தம் சூடேறி நிற்கும். என் இடையில் குத்திட்டு நிற்காத வாளொன்று தற்காலிகமாகத் தொங்கும். வாளை உருவி தரை நோக்கிப் பாய்ச்சுவேன். மாமன்னனை வரவேற்பது போல.
மருது நேர்மாறாக சொல்வான். யாரும் கேட்டுவிடக் கூடாத ரகசியம் போலவும், வெளிச்சொல்ல முடியாத உண்மையைச் சொல்வது போலவும் ரகசியமாகச் சொல்வான். ‘அந்தப் பெயர் ஏன் அவன் நாவில் கம்பீரம் பெறுவதில்லை?’. ஊரை பற்றிப் பேசுவான். தெருவைப் பற்றிக் கேட்டால் இடத்தைக் காலி செய்வான். மூன்று வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள் பிரியும்போது மறக்காமல் முகவரி வாங்கிவைத்துக் கொண்டோம். முகவரி வாங்கும் எல்லோரையும் போல நாங்களும் அந்த முகவரி புத்தகத்தைத் திருப்பி பார்த்ததேயில்லை.
முனைவர் பட்ட ஆய்வுக்காக நான் தலைப்பைப் பதிவு செய்தவுடன் எனக்கு மருதுவின் நினைவு வந்தது. அவன் ஊரில் ஒரு கோட்டை இருப்பதாகக் கூறினானே.. அவர் ஊரிலிருந்து ஆய்வைத் துவங்க விரும்பினேன்.
அவனுடைய அரண்மனைத் தெருவைப் பார்க்கும் ஆர்வம். முகவரியைத் தேடி எடுக்கவில்லை. சின்ன ஊரில் கண்டுபிடிக்க முடியாதா? கிளம்பிவிட்டேன்.
அதிகபட்சம் பத்துத் தெருக்கள் இருக்குமா? நெரிசல் தெரியாத கடைவீதிகள், பேருந்து நிலையம். ஊரைப் பார்க்க நடந்தேன். ஆச்சரியம். கிழவியின் சுருக்குப் பையைப் போல் வாயை அகலத் திறந்தது. பெரிய தெருவுக்குள் பல கிளைகள். கிளைக்குள் கிளைகள், ஊர் பல மடிப்புகளாக இருந்தது. வந்தபிறகே தெரிந்தன, இவ்வூரின் புகையிலை மடிப்புகள்.
தஞ்சையின் அகன்று விரிந்த தெருக்களைப் பார்த்திருந்த எனக்கு இவ்வூரின் நெருக்கம் சுவராசியம் தந்தது. அதன் மர்மம் பிடித்திருந்தது.
‘அந்தப் பையன் அட்ரெஸ்ஸும் இல்லை.. முன்ன பின்ன தெரியாத ஊரு.. அங்கப்போயி என்னடி பண்ணுவ நீ’ அம்மாவின் கேள்வி முதுகுக்குப் பின்னால் தொக்கி நின்றபடி இருந்தது.
ஊருக்குள் வந்து இறங்கியவுடன் எதையுமே கண்டுபிடித்துவிட முடியாதபடி ஓர் இறுக்கம் தெரிந்தது.
வரலாற்றுப் பின்புலம் உள்ள பல ஊரின் தோற்றம் இதைவிட மோசம், அழுது வடியும் ஊர். தன் மேல் உள்ள சுவட்டை வெளிக்காட்ட முடியாமல், இன்றைய அடையாளத்தை ஏற்றுக்கொள்ள முடியாத உணர்வும் சேர்ந்து ஒரு மூச்சுத் திணறல் இருக்கும். டீக்கடையில் படுத்திருக்கும் நாய்கூட சோம்பலைத் தின்று படுத்திருக்கும். மற்ற ஊர்களில் நாய்கள் விறுவிறுப்பாக இங்கேயும் அங்கேயும் ஓடிக் கொண்டிருக்கும். இங்கு நாய்கள் எழுந்து நடமாடவே யோசிப்பதைப் போலப் படுத்திருக்கும்.
மக்கள் நிறைய வசிக்காத வரலாற்று நினைவிடங்கள் மட்டும் உள்ள ஊரின் நிலை இன்னும் பரிதாபம். அங்கிருப்பவர்கள் ஊரின் பழைய நூற்றாண்டுக்குள்ளேயே இருப்பார்கள். அந்தத் துயிலின் நீட்சிபோல் அவர்களின் கண்கள் கிறங்கிக் கிடக்கும். சுற்றுலா கூட்டம் வரும் சத்தம் கேட்டவுடன் அவர்களின் கண்களில் ஒரு வழிப்பு வரும். அது நிகழ்காலத்தின் வயிற்றுப் பசி கொடுக்கும் விழிப்பு. கிடைப்பதை வாங்கி வயிற்றுக்குள் போட்டுக் கொண்டபின் மீண்டும் அவர்கள் அந்த நூற்றாண்டுக்கே திரும்பி விடுவார்கள். காலம் உறைந்து கிடப்பதைக் கண்முன்னால் காட்டும் மனிதர்கள்.
மருதுவின் ஊர் கொஞ்சம் பரவாயில்லை. வரலாற்றை ஒரு மூலையில் ஒதுக்கி வைத்துவிட்டு தன் வயிற்றுப் பாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தது. எப்பொழுதாவது ஞாபகத்திற்கு வந்தால் இரவுகளில் நினைவை மீட்டிக்கொள்ளும் பக்குவம் உள்ள ஊராய் இருந்தது.
பேருந்து நிலையத்தை ஒட்டியிருந்த பழக்கடையில் கேட்டேன். பேருந்து நிலையத்தில் இருப்பவர்கள் தெரிந்த இடம், தெரியாத இடம் என எல்லா இடத்திற்கும் வழிகாட்டி அனுபவப்பட்டவர்கள் என்றொரு நம்பிக்கை எனக்கு இருந்தது. கை காட்டி மரங்கள்போல தினம் அவர்களே சரியாகவோ தவறாகவோ புதிதாக வருபவர்களுக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
கடையில் நான் பழம் வாங்க வருவதாக நினைத்துக்கொண்டு மிகுந்த வரவேற்பு கிடைத்தது.. நான் ஒரு முகவரியை விசாரிக்கத் துவங்கியதும், ‘கொஞ்சம் ஓரமா நில்லுங்க மேடம்’ என்று கை காட்டினார் வெறுப்பான குரலில். வருபவர்கள் எல்லோரிடமும் பழத்தை விற்பதில் தீவிரமாய் இருந்த அவரிடம் நிற்பதில் நேரம் வீண் என்று புரிந்தவுடன் இடத்தைக் காலி செய்தேன்.
பக்கத்திலிருந்த டீக்கடையில் நுழைந்தேன். வெந்நீரில் சர்க்கரைப் போட்டதுபோல இருந்தது டீ. ‘அரண்மனைத் தெருன்னு நம்மூர்ல இருக்காப்பா?’ டீக்கடை முழுக்க என் கேள்வி டீ கிளாஸாக கை மாறியது. டீ மீது இருந்த மரியாதையே என் கேள்வி மீதும். ஒவ்வொருவராக வெளியேறினார்கள்.
பேருந்து நிலைய கடைகளில் பாதிக்குமேல் ஏறி இறங்கி விட்டேன். எந்தத் திசை நோக்கியும் எனக்கு யாரும் கை காட்டவில்லை. முன்பெல்லாம் ஒரு தெருவுக்கு வழி கேட்டால் கொண்டுபோயே விட்டுவிட்டு வருவார்கள் என்று என் அப்பா சொல்லுவார். இப்பொழுது முகவரி கேட்டால் பாதிப் பேருக்குமேல் நமக்கெதுக்கு வம்பு என்று கையை விரித்து விடுகிறார்கள்.
இரண்டு நாட்களை மருது பெயரைச் சொல்லியும் அரண்மனைத் தெரு பெயரைச் சொல்லியும் வீணடித்திருந்தேன். ‘எதற்கு இந்த அடையாளங்கள் எல்லாம்? நாமே கோட்டையைத் தேடுவோமே’ என்று யோசனை தோன்றியதும் மனசும் உடம்பும் சுறுசுறுப்பானது.
ஊரில் தேர் நிற்கும் இடம் எது என்று விசாரித்துக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தேன். பழமையான தேர் ஒன்று கோயிலுக்குத் தொடர்பில்லாத ஓர் இடத்தில் நின்று கொண்டிருந்தது. கடவுள் கழுத்து சுளுக்கிக் கொள்ளும் அளவிற்குத் திரும்பிப் பார்த்தால்கூட பார்க்க முடியாத இடத்தில் தேர் நின்றிருந்தது. தேர் நிற்கும் இடம் ஊரின் பழமையான இடமாகத்தான் நிச்சயம் இருக்கும். இங்குள்ளவர்களுக்குக் கோட்டையைப் பற்றித் தெரிந்திருக்கும் நம்பிக்கையில் கடைகளில் ஏறினேன். முதலில் இரண்டு மூன்று கடைகளில் கை விரித்தார்கள்.
தேரடியின் மூலையில் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்று பயமுறுத்திக் கொண்டு பழைய ஓட்டுக் கட்டடம் ஒன்று இருந்தது. கட்டடத்தின் நிலையிலேயே வயதான பெரியவர் ஒருவர் நினைவுகளை மென்றபடி கடையில் உட்கார்ந்திருந்தார். அவர் முன்னால் நாட்டு மருந்துப் பொருட்கள் இருந்தன. அவரை ஒரு நாளைக்கு ஒருவர் தேடி வந்தால்கூட ஆச்சரியம்தான் என்று நினைத்தபடி அவர் குளத்தில் இன்று கல்லெறியப் போவது நாமேதான் என்று சுறுசுறுப்பாக நுழைந்தேன்.
காது பழுதடைந்திருந்ததைப் பார்த்தவுடன் கொஞ்சம் நம்பிக்கை இழந்தேன். என்னால் கத்திக் கத்தி பேச முடியாது என்பது மட்டுமல்ல. எந்த உண்மையும் சத்தம் போட்டபடி இருக்காது என்ற மூட நம்பிக்கையும் இருந்ததுதான். பரவாயில்லை. நான் பயந்த அளவிற்கு மோசமில்லை. அதி மெதுவாக லேசான சைகையுடன் பேசினால் அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. என் ஆய்வுத் திறமையெல்லாம் ஒரு வழியாகக் காட்டி அவரிடம் கோட்டை இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து விட்டேன். அரண்மனைத் தெரு என்று கேட்பதைக் கவனமாகத் தவிர்த்தேன்.
என் சிறிய கேள்வி அவரின் மன துவாரத்திற்குள் சாவியாக நுழைந்து பெரிய கதவுகளைத் திறந்துவிட்டது. தன் அப்பா கோட்டையின் மைதானத்தில்தான் கடை வைத்திருந்தார்; அகழியைச் சுற்றி பெரிய பூங்கா இருந்தது; அகழிக்குள் கோடையிலும் தண்ணீர் அலையடித்தபடி நின்றது; குதிரை லாயத்திற்குள் குதிரையின் கனைப்புச் சத்தம் கேட்டது; சுரங்கப் பாதையின் ஒரு வழியில் இறங்கி மற்றொரு வழியாக வெளியேறியது ஆகியவை அப்பாவின் அனுபவங்கள் என்றார்.
தான் சிறுவயது பிள்ளையாக இருந்தபோது கோட்டை மைதானத்தில் உட்கார்ந்து படித்ததாகவும், அகழியின் தண்ணீர் வற்றி விட்டதால் அதில் இறங்கி மலம் கழித்ததாகவும், பீரங்கிக் குண்டுகளைக் கண்டுபிடிக்க அங்கங்கு மண்ணைத் தோண்டி பீரங்கி குண்டுகளைக் கொண்டு வந்து எடைக்குப் போட்டு வெல்லம், குச்சி ஐஸ் வாங்கிச் சாப்பிட்டதையும் பெரியவர் சுய பெருமைகளாகச் சொல்லிக் கொண்டிருந்தார். பெரிய பெரிய இரும்புத் தூண்களை மக்கள் கொண்டு வந்து தங்கள் வீட்டில் தாழ்வாரங்கள் இறக்கப் பயன்படுத்திக்கொண்டதையும், கோட்டையின் கருங்கற்களே இன்று பலர் வீட்டுக் கடைக்கால் கற்கள் என்றும் குரலில் வருத்தத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னார். ஐஸூக்குப் போன பீரங்கிக் குண்டுகள் பற்றிச் சொல்லும்போது குதூகலம் குரலில் இப்பொழுது இல்லை.
நினைவின் ஆழத்திற்குப் போய் அகப்பட்டதை எல்லாம் அள்ளி மேலே வீசிக் கொண்டிருந்தார். நான் கீழே விழுந்தவற்றைக் கிளறி எனக்குத் தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டிருந்தேன். பேசிப் பேசி பெரியவருக்கு வாயில் நுரை தள்ளிவிட்டது. ஒரே நாளில் கசக்கிப் பிழியக் கூடாது என்று முடிவு செய்து மறுநாள் வருவதாகக் கூறி கிளம்ப ஆயுத்தமானேன்.
அப்பொழுதுதான் நினைவுக்கு வந்ததுபோல் நான் ஏன் இவ்வளவு கேட்கிறேன் என்பதை விசாரித்தார். ஆய்வைப் பற்றிக் கூறியவுடன். “சின்னப் பொண்ணா, கல்யாணங் காட்சி ஆவாத பொண்ணா இருக்க. காலாகாலத்துல நல்லது நடக்கணும். ஊரப் பாத்து கெளம்பிப் போம்மா…. அதெல்லாம் கொஞ்சம் பிரச்சனையான எடம்மா” என்றார்.
“என்கூட காலேஜ்ல ஒருத்தர் இங்கயிருந்து படிச்சார். இங்க இருக்கவே , அவரைப் பார்க்கலாமுன்னு கேட்டேன்.”
“அதெல்லாம் வேண்டாம்மா வந்த இடத்துல எந்த வம்பு தும்பும் இல்லாம போம்மா. அந்தத் தெருவுக்கெல்லாம் யாரையும் தேடிப் போவாதே.”
“இல்ல..என் கூட மூனு வருசம் படிச்சவர்தான்.”
“பொண்ணு வெளிய வரும்போது ஒருத்தரைப் பார்க்கிறது வேற. உள்ளூர்ல பார்க்கிறது வேற. சொல்லிட்டேன்.”
இதைவிட கோட்டையைத் தேடிப்போக எனக்கு வேறு சுவாரசியம் வேண்டுமா என்ன? அடுத்த நாள் காலையிலேயே ஆஜர். ஊருக்கு மையத்தில்தான் இருந்தது கோட்டை. பேருந்து நிலையத்திலிருந்து மேற்கில் திரும்பி இரண்டு நிமிடங்கள் நடந்தால் மதில் சுவர் எதிர்ப்பட்டது. ஓர் அடி நீளத்திற்கு இருக்கலாம் கோட்டையின் செங்கல். செங்கல் வரிசைக்கு சிமெண்டோ, சுண்ணாம்போ இருப்பதற்கான அறிகுறி இல்லை. ஊருக்குப் புறமுதுகு காட்டியதுபோல் சுவர் அந்த இடத்தில்தான் முடிவடைகிறது. சுவருக்கும் பக்கத்தில் உள்ள பேருந்து நிலைய பெரிய சுவருக்கும் இடையில் ஓர் ஆள் போக, எதிரில் ஓர் ஆள் வர முடியாது. ஒதுங்கி நிற்க வேண்டும். அவ்வளவு குறுகிய பாதை.
சுவரை ஒட்டி நடந்தேன். தீடிரென்று ஊர் முற்றாகத் துண்டிக்கப்பட்டு கண்முன் வேறொரு உலகம் விரிந்தது. உடைந்த கோட்டைச் சுவரை ஒட்டி ஆழமான அகழி. முழுக்க முள் மண்டிக் கிடந்தது. அகழி ஆழமாகத் தெரிந்தது. மிகப்பெரிய கோட்டைக்குக் காவல் அரணாக எத்தனை ஆண்டுகள் இருந்ததோ? கோட்டையின் முக்கியத்துவம் அகழியின் ஆழத்திலும் அமைப்பிலும் தானே தெரியும்? இந்தக் கோட்டை செல்வாக்கோடு இருந்திருக்க வேண்டும்.
அகழி முழுக்கப் புதர் மண்டியிருந்தது. அகழியின் பெரிய கருங்கல்லை மறைத்து வறட்டி தட்டியிருந்தது. இந்தப் புதரில் யார் இறங்கிப்போய் சாணி தட்டி வைத்திருப்பார்கள்? எப்படி உள்ளிறங்கியிருக்க முடியும்? உற்றுப் பார்த்ததில் மெலிந்த மனிதக் காலடித்தடம் கண்ணில் பட்டது.
புதர்மேல் காலி தண்ணீர்ப் பாக்கெட்டுகள், கசக்கி வீசிய பிளாஸ்டிக் டம்ளர்கள். ஒற்றையடிப் பாதை. சைக்கிள் வந்தால் ஒதுங்கி நிற்க முடியாதபடி பாதை ஓரம் மனித மலம். மலக் குவியலைச் சுற்றியபடி பன்றிகள். ஒன்றையொன்று மலத்தை அணுக விடாமல் விரட்டியது. விரட்டப்பட்ட பன்றியொன்று முகத்தை ‘உர்’ரென்றுக் காட்டி நகர்ந்து பாதைக்கு ஓடிவந்தது.
எங்கே அதன் மலம் பூசிய உடல் என்மேல் பட்டுவிடுமோ என்று தூக்கிவாரிப் போட்டது. ஏழெட்டுக் குட்டிகளுடன் தாய்ப் பன்றி மற்ற பன்றிகளை வெறியோடு விரட்ட, பாதை முழுக்கப் பன்றிகள் பரவின நடுவில் நான். உயிரே நடுங்கியது. அசையாமல் நின்றேன். உறுமல் ஒலி குறைந்த பிறகே திரும்பிப் பார்த்தேன். பன்றிகள் அகழிக்குள் இறங்கியிருந்தன. பன்றி மேவும் அகழி.
மீண்டும் பாதை துவங்கிய இடத்தில் வந்து நின்று கொண்டேன். கண்பார்வையின் அகலத்தைத் தாண்டி பாதை நீண்டது. குறைந்தது அரை மைல் இருக்கும். மயானம் போல், மௌனித்து நீண்டிருக்கும் பாதையைக் கடப்பதா? திரும்பி நடப்பதா? தடுமாறினேன். கோட்டை எங்கிருக்கிறது என்று பார்த்துவிட்டுத் திரும்புவோம். விடாப்பிடியுடன் நடந்தேன்.
காதுக்குள் குளம்புச் சத்தம் கேட்கவில்லை. பிற்பகல் வெயிலில் நாவில் கசப்பூறச் செய்யும் புழுதி வாசம். மலநாற்றமும் சாராய நாற்றமும் கலந்து கடுமையான நெடியைக் கிளப்பின. நடக்க நடக்க அடர்த்தியான பிணநாற்றம் முகத்தில் அறைந்தது. சுடுகாடோ இது? சுற்றிப் பார்த்ததில் தெரியவில்லை. லேசாக மயக்கம் வருவதுபோல் இருந்தது. மீறி நடந்தேன். பக்கத்திலேயே நாற்றம் கிளம்புவதுபோல் தோன்றியது. எங்கிருந்து வருகிறது என்று சுற்றிப் பார்த்தேன்.
வரிசையாகத் துணி மூட்டைகளைத் தூக்கிப் பிடித்தபடி மரங்கள் நின்றன. வேண்டுதலாக இருக்குமோ? நாற்றம் எடுக்கும் வேண்டுதல் என்ன? இன்னும் நெருங்கிய பிறகே தெரிந்தது. கனத்த பிணநாற்றத்தின் காரணம். கன்று போடும் மாட்டின் உறுப்பைத் துணியில் கட்டிப் போட்டிருக்கிறார்கள். காற்றையே மூச்சுத் திணற வைத்துக் கொண்டிருந்தது.
நாற்றம் கால்களுக்கு வேகத்தைக் கொடுத்தது. குதிரை என் நரம்புகளிலிருந்தது. விரைந்தேன்.
சட்டென்று பாதை உள்ளுக்கிழுத்தது போல் கிளை பிரிந்தது. ஆடு தாண்டும் காவிரி அகன்று ஓடுவதைப்போல் விரிந்து அகன்ற தெரு முன்னால் விரிந்தது. ஐந்தாள் அகலம். பிரம்மாண்ட உருவத்திற்குச் சூம்பிய கை கால்களைப் போல் தெரு ஓரத்தில் குடிசைகள் முளைத்திருந்தன. மந்திரத்திற்குக் கட்டுப்பட்டது போல் தெருவில் நடந்தேன்.
குடிசைகளில் ஆட்கள் இருப்பதுபோல் தெரியவில்லை. அருகில் சென்றேன். ஒவ்வொரு வீடாக பார்த்துச் சென்றேன். குடிசைகளைக் கல் தூண்கள் தாங்கி நின்றன. மக்கள் வாழுமிடமாகத் தெரியவில்லை.
தெருக் குழாய் ஒன்று இருந்தது. பளபளப்பான கருங்கல். குழாய் ஈரம் தெருவில் வழியாமல் இருக்கப் போடப்பட்டிருந்தது. மூக்கைத் துளைத்துக் கொண்டே இருந்த புழுதி நெடியைக் கழுவ குழாயடிக்குச் சென்றேன். புடவையை ஏற்றிச் சொருகிக்கொண்டு முகம், கை, கால்களைக் கழுவினேன். கைக் குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு போக நினைத்தபோது குழாயடி கல்லின் எழுத்துக்கள் கண்ணில் பட்டன. குனிந்து படிக்கப் பார்த்தேன் முடியவில்லை. எழுத்துக்கள் சிதைந்திருந்தன. இந்தக் கோட்டையில் இக்கல்வெட்டு இருந்திருக்கலாம். இப்படி காலில் மிதி பட்டுக் கிடக்கிறது. வரலாற்றை அடியில் போட்டு ஈரம் தேடும் நாய் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தது.
அங்கங்கே புதர் மறைவில் உட்கார்ந்து நிறையப் பேர் பீடி பிடித்தபடி இருந்தார்கள். புதியதாகத் தெரிந்த என்னை வெறித்துப் பார்த்தார்கள். கேட்கும் அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பாததாலோ என்னவோ யாரும் என்னிடம் ஒன்றும் கேட்கவில்லை.
கோட்டை முழுதாய் எங்கிருக்கிறது என்றே என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. எந்தப் பக்கம் சுற்றி வந்தாலும் வெறும் இடிந்த சுவர்களே தெரிந்தன. கோட்டையின் நுழைவாயில் எது என்பதைக் கண்டறிய முடியவில்லை. ஒரு மைல் தூரத்தைக் கால்களால் அளப்பது போல் நடந்தேன். வழியில் எப்பொழுதாவது வாயில் பீடி வைத்துக்கொண்டு கிழிந்த கைலியில் வந்தவர்கள் கொஞ்சம் விரோதத்துடன் பார்த்தார்கள். இங்கென்ன வேலை என்பதுபோல் பார்வை மிரட்டியது.
இந்த இடத்திற்குப் போக வேண்டாம் என்று பெரியவர் சொன்னதன் காரணம் புரிந்தது. காற்று முழுக்க சாராய நெடி. வாயில் வெற்றிலைச் சாறுடன் வேலிகாத்தான் மரத்துக்கடியில் உட்கார்ந்திருந்த சில பெண்கள் எல்லாம் சூழலை அசாதாரணமாக்கியிருந்தன. இந்தக் கோட்டையின் வரலாற்றை இனி இங்குக் கண்டுபிடிக்க முடியாது. ஆவணக் காப்பகத்தின் தூசி படிந்த தாள்களில்தான் தேட முடியும் என்ற முடிவோடு கிளம்பத் தயாரானேன்.
மீண்டும் அகழியின் துவக்கப் பகுதிக்கு வந்தேன். இப்பொழுது அங்கு நிறைய கூட்டமிருந்தது. எல்லோரின் கையிலும் ஒரு பிளாஸ்டிக் டம்ளரும். ஓர் ஊறுகாய் பாக்கெட்டும் இருந்தன. சாராய வாடையை மீறி அவ்விடத்தில் கடும் நெடி ஒன்று மூக்கைத் துளைத்தது.
நான் பார்ப்பதை அங்கிருந்தவர்களும் பார்த்தார்கள். ஒரு பெண் தனியாக அங்கு வந்து தங்களைப் பார்த்துக் கொண்டிருப்பது அவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது. அகழியின் பயன்பாட்டை நான் வியப்பாகக் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கோட்டையின் கதை என்னவாக மாறிக் கொண்டிருக்கிறது என்ற கேள்வி எனக்குள் குடைந்தது.
கூட்டத்தில் இருந்து ஒருவன் என்னை நோக்கி வரத் துவங்கினான். அவன் தான் அங்கு வியாபாரம் செய்பவன் இடத்தில் உட்கார்ந்திருந்தான்.
‘எதற்கு வருகிறான்?’ லேசான பயம். உள்ளுக்குள் என்ன கேட்கப் போகிறானோ, என்ன செய்யப் போகிறானோ தெரியவில்லையே? பயப்படக்கூடாது என்றாலும் புது ஊரில் கொஞ்சம் பயம் வரத்தான் செய்தது.
மீசை இல்லாத முகத்தில் கடுமை அதிகமாகத் தெரிந்தது. நல்ல உயரம். உயரத்தைக் குறைத்துச் சொல்ல வைக்கும் முன் தள்ளிய தொப்பை. வேக நடை .அருகில் வந்த பிறகும் நிற்காதது மாதிரி அவன் உடல் அதிர்ந்து நின்றது.
”நீ ஆர்த்திதானே?” அவன் கேள்வி ஆச்சரியம் தந்தது.
“நீங்கள்?”
“ஒங்கூட தஞ்சாவூர்ல படிச்சனே, மருது, மறந்து போயிட்டியா?”
“அடப்பாவி ஒன்னத்தாண்டா மூனு நாளா தேடி அலையறேன்… என்னடா பாதி கிழவனா இருக்க?”
“அட்ரஸ் குடுத்தேனே?”
“ஆமாம். இங்க யாருக்குமே ஒன்னையும் தெரியல, உன் தெருவையும் தெரியல.”
“தெருப் பேரைச் சொல்லிக் கேட்டிருந்தாலே சொல்லியிருப்பாங்களே.”
“சொன்னேன், யாருக்குமே தெரியலை.”
“என்னன்னு கேட்ட?”
“ஏன், நீதானே அரண்மனைத் தெருவுன்னு சொல்லியிருந்த.?”
“ம் ம்க்க்கும். எவனுக்குத் தெரியும் இங்க? நீ அம்மணத் தெருவுன்னு கேட்டிருக்கணும். அரண்மனைத் தெரு அம்மணத் தெருவாகிப் பல வருசமாச்சு.”
இப்பொழுது நீங்கள் எப்படி நிற்கிறீர்களோ நானும் அப்படித்தான் நின்றேன்.
அ.வெண்ணிலாவின் “பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் ” எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற சிறுகதை இது. ஆசிரியரின் உரிய அனுமதிப் பெற்று கனலி கலை இலக்கிய இணையதளத்தின் ’பெட்டகம் ’ பகுதியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கவிஞர் அ. வெண்ணிலாவின் இச்சிறு கதை …வெவ்வேறு தளத்திற்கு என்னை கூடவே கூட்டிப் போய் வந்து விட்டாற் போல் இருந்தது..
Very interesting. Made to travel along with the author.