அந்திமந்தாரை

‘பிரியமுள்ள அக்காவிற்கு,

ஆண்டவரின் மேலுள்ள விசுவாசம் என்னை வழிநடத்துகிறது.

உங்களுக்கு நெடுநாளாகக் கடிதம் எழுதவேண்டும் என்று தோன்றியது. ஆனால் எல்லாமுமே அதற்குரிய நேரத்தில் தான் நடக்கவேண்டும் என இருக்கிறது போல. ஒரு அசந்தர்ப்பத்தில் நாம் இருவரும் சந்தித்தோம். மனித வாழ்க்கையில் எல்லாமுமே நமக்குப் புரிய ஆரம்பிப்பது, நாம் கொடும்வலியின் கைகளில் அகப்பட்டிருக்கும் போதுதான். பாருங்கள் அக்கா! நலம் விசாரிக்க மறந்துவிட்டேன். முதலில் நீங்களும் தம்பியும் நலமாக இருப்பீர்கள் என்றே நம்புகிறேன். உங்களோடு கோட்டார் ஆஸ்பத்திரியிலிருந்த ஒவ்வொரு நாளையும் அசைபோடும் போது நெஞ்சுக்கு இதமாக இருக்கிறது. ஆனால் உங்களை முதன்முதலில் பார்த்த பொழுது, எனக்கு ஏனோ கோபம் தான் வந்தது. உங்கள் படுக்கைக்கு வந்த நேரத்திலிருந்து தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தீர்கள், உங்களைச் சுற்றியிருந்தவர்கள் எவ்வளவோ தேற்றியும் அழுகை நின்றபாடில்லை. இத்தனைக்கும் உங்கள் பையன் அருகிலேயே நின்றுகொண்டிருந்தான். அப்போதுதான் எனக்குள் மெல்லிதாக குழந்தையில்லையே எனும் ஏக்கம் வந்தது. நினைவிழந்து, கருகி முணங்கியபடி ஒரு நூலின் கடைசிக் கற்றையில் தொங்கிக் கொண்டிருந்த என்னை, அள்ளிக் கொண்டு வந்த பின்னர், என்னருகே எப்போதும் ஒரு பெண் கான்ஸ்டபிள் நின்றுகொண்டிருப்பார். அவருடைய வேலை ஒருவேளை நான் இறந்துபோனால், அதற்கு முன்னர் மரண வாக்குமூலம் வாங்க வேண்டும். சில நேரங்களில் நான் அயர்ந்து உறங்கிவிட்டால், அவள் என்னை மெதுவாக அசைத்துப் பார்ப்பாள். அந்தத் தொடுதலில் நான் விழித்து விட்டால், கண்களில் கனிவோடு “பயறிட்டேன் பிள்ளே.. சாவ முன்னாடி சொல்லுத சொல்ல எனக்க கையால எழுத முடியுமா?” ஆசுவாசமாய் அருகில் அமர்வாள். பிறகு நான் முழுவதுமாக பிழைத்துவிட்டேன் என அறிந்ததும், அவளும் சென்றுவிட்டாள். ஆனால் பிள்ளை அப்படிப் போகுமா? அவன் உங்கள் அருகே நிற்கும் போதெல்லாம் மெதுவாக உங்களின் நெற்றியை கைகளால் வருடிக் கொண்டிருந்தான். திருமணம் ஆகி சில வருடங்களுக்குப் பிறகு, ஒருநாள் என் கணவர் காதருகே வந்து மெதுவாகக் கேட்டார் ‘ஆம்பள புள்ளயா? இல்ல பொம்பளப் பிள்ள வேணுமா?’, அன்றைக்கு அது மூன்றாவது தடவை, முகத்தைக் கோணலாக்கி நான் ‘வேண்டாம்’ என்று சொல்லும் போதே, முகத்தில் புன்னகை ததும்ப, அவர் வழக்கம் போல என்னை அதற்கும் அடித்தார்.

சரி, அது வேறு கதை. உங்கள் விஷயத்திற்கு வருவோம், எப்படி மருத்துவமனையில் மெல்ல அடுத்த நாளே உங்களால் சட்டென்று நேற்றிருந்த ஆள் நானில்லை என்பது போல மாறமுடிந்ததோ ஆச்சர்யம் தான். நீங்கள் ஒவ்வொருவரிடமும் பேசிக்கொண்டே இருந்தீர்கள். என்னை பொது வார்டுக்கு கூட்டிக்கொண்டு வந்த நாளிலிருந்து நீங்கள் வந்த நாள் வரையிலும் மற்றவர்கள் என்னிடம் பேசியதேயில்லை. நான் முகத்தைத் திருப்பிக்கொண்டிருந்த போதிலும் நீங்களாகவே என்னிடம் பேசினீர்கள். அந்த முதல் வார்த்தை இன்றைக்கும் ஞாபகம் இருக்கிறது, ‘சின்னப் புள்ளயா இருக்கீயேமோ, இப்போ பரவாயில்லயா.. தைரியமா இருக்கனும்.. பாத்ரூம் கீத்ரூம் போனும்னா என்னய கூப்பிடு’, உண்மையில் உங்களின் பாவனையானப் பேச்சால் உங்கள் மேல் எரிச்சல் தான் வந்தது. பெண் கான்ஸ்டபிள் சென்ற பிறகு, நான் சிறுநீர் கழிக்க நர்ஸை அழைக்க கத்தும் போது அவர்களங்கே ஓரிரு முறை இருந்ததில்லை. எல்லோரின் கண்களும் பரிதாபத்தோடு என்னையும், நர்ஸ் வருகிறார்களா என வாசலையும் நோக்கும், ஆனால் நீங்கள் ஓடிவந்து படுக்கையின் கீழேயிருந்த சிறுநீர் கோப்பையை என் இடுப்பிற்குக் கீழே வைத்து உதவினீர்கள். இதைப் பற்றி நாம் ஏற்கனவே பேசியிருக்கிறோம், ஆனாலும் அதற்கு முன்னர் இருமுறை படுக்கையிலே நான் சிறுநீர் கழித்ததில் ஈரம் பட்டு என் தொடைகள் இரண்டும் எரிய ஆரம்பித்தன. அதைக் கூட நான் பொறுத்துக்கொண்டேன். ஆனாலும் சிஃப்ட் மாறிவந்த நர்ஸ் முதற்கொண்டு அதற்காக எல்லோர் முன்னும் என்னைத் திட்டினார்கள். அடுத்த நாள் வரையிலும் அதே படுக்கையில் தான் கிடந்திருக்கிறேன். மூத்திரவாடை அடிக்கும் படுக்கையில் இரவு முழுக்க அழுகையோடு படுத்துக்கிடப்பேன். அழும்போது கண்ணீர் பட்டு கன்னங்களும் எரிய ஆரம்பிக்கும், நல்மேய்ப்பரை மனதிற்குள் நினைத்தபடி ஜெபித்தபடியே கிடப்பேன்.

உண்மையிலே நான் செத்திருக்க வேண்டும், பிழைத்துக்கொண்டேன். நீங்கள் ஆஸ்பத்திரியிலிருந்து கிளம்பும் போது என்னிடம் கேட்டீர்கள், “பொம்பளங்க ஜீவிதம் சபிக்கப்பட்ட ஒன்னு, சாவனும்னு முடிவுப் பண்ணி பொழச்சுட்டே, அப்படின்னா நீ வாழனும்னு உனக்க ஆண்டவரே ஆசப்படுகாரு, ஒன்னும் பிராயம் ஆகல, தைரியமா இருக்கனும், மன ஊக்கம் மட்டும் தான் நமக்குண்டு கேட்டியா.. எப்பன்னாலும் இந்த அக்காவுக்கு லெட்டர் போடு, உனக்க வயசுல எனக்கும் தங்கச்சி இருக்கா..” , என் கைகள் இந்தக் கடிதத்தை எழுதும் போதும் ஏனோ நடுங்குகின்றன. அப்போது உங்களின் கைகள் என்னை அழுத்திப் பிடித்தபோது உணர்ந்த ஒரு ஸ்பரிசம் நான் அதுவரையிலும் அறியாதது. நான் நீங்கள் வருவதற்கு மூன்று வாரத்திற்கு முன்பிருந்தே மருத்துவமனையில் இருந்தேன். நீங்கள் என்னிடம் பலமுறை கேட்டீர்கள், ஏன் சாவதற்கு ஆயிரம் வழிகள் இருக்கும் போது தீ வைத்துக் கொண்டாய்? அதையே நானும் என்னுள் பலவாறு சிந்தித்துவிட்டேன். அன்றைக்கு என் கணவர் என்னை அடித்ததும், திட்டியதும் வழக்கமான ஒன்றுதான், ஆனால் அன்றைக்கு நான் தீ வைத்துக் கொண்டதற்கு ஒரு அந்தி மந்தாரை காரணம் என்று சொன்னால் நீங்கள் நம்ப மறுப்பீர்கள். இங்கே பலர் கைவிடப் படுகிறார்கள், மனிதர்கள் எளிதாக இன்னொருவரை நெருங்குவது போல, எளிதாகக் கைவிடவும் ஆரம்பிக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன?. இதே போலொரு சூழலில் ஏற்கனவே இருந்திருக்கிறேன். என்னோடு நெருங்கிப் பழகிய தோழி ஒருத்தி ஒரு பணக்காரத் தம்பதியரால் தத்தெடுக்கப்பட்டாள். என்னுடைய எல்லாப் பொழுதும் அவளோடு கழிந்தது. முக்கியமாக மாலை நேரங்களில் நாங்கள் தோட்டத்திற்குச் செல்வோம். அங்கே பலவண்ண பூச்செடிகள் இருந்தாலும் நெருக்கியபடி வளர்ந்து நிற்கும் அந்திமந்தாரைச் செடிக்கு அருகிலே செல்வோம். அதன் பூக்கள் அப்போது தான் இதழ் விரித்து நிற்கும். பூக்களைப் பறித்து மாறி மாறி சூடிக் கொள்வோம். அவள் இனிமையாகப் பாடுவாள், நான் அவளின் மடியில் தலை வைத்துப் படுத்திருப்பேன். அவளில்லாத நானில்லை என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். அன்றோ! ஒரு நொடியில் வந்தவர்களைப் பார்த்ததும் அவள் ஏன் என்னை விட்டுப் போகத் துணிந்தாள். அன்றைய இரவின் கனத்தை என் தலையணையே அறியும். அவள் அங்கிருந்து கிளம்பும் போது என்னிடம் விட்டுப் போனது அந்திமந்தாரைச் செடியை, அதன் பிறகே அதனைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். இருள் நெருங்கும் நேரம் இப்பிரபஞ்சத்தை இதழ் விரித்து ரசிக்க ஆரம்பிக்கிறது, நாம் வேகமெடுக்கும் பகல் பொழுதில் உறங்கிப் போகிறது. அதன் பூக்கள் நெருப்பின் தழல் போலச் சிவந்து அழகாக விரியும். என்னுடைய அந்தி முழுவதுமே அச்செடியின் அருகிலே மெது மெதுவாக நகரும். அதனைக் கொண்டு உடலைத் தழுவுவேன், அதன் தொடுதல்கள் என்னை எங்கோ அழைத்துச் செல்லும். ஒருவிதமான சூட்டை உடல் முழுக்க கக்கும், எண்ணங்களை விட்டு விலகி, உடலை விட்டு விலகி, நானும் இதழ் விரித்து வான்நோக்கி நிற்பேன். இதுபோக மற்றநேரங்களில் எனக்காக ஒரு வேலை இருந்தது, காரணம் என்னுடைய கையெழுத்து அப்போது அழகாக இருக்கும். பாருங்கள் கடிதத்தில் ஏதாவது தென்படுகிறதா ? அங்கே மடம் சார்ந்தோ, அங்கிருக்கும் பிள்ளைகளின் பெற்றோருக்கோ கடிதம் எழுத நான் தான் முதல் தேர்வு. நான் இந்த உலகத்தில் யாரோடும் இரத்தஉறவு கொண்டவள் அல்ல எனும் தீர்மானம் கொண்டுநிறுத்திய ஒரு வெற்றுப் புள்ளியிலிருந்து எனை திசைதிருப்ப கடிதங்களைப் பயன்படுத்திக் கொண்டேன்.

கிருத்துவ மடத்தில் வளர்ந்தாலும் என்னுடைய பால்யம் அப்படியொன்றும் குறைகள் நிறைந்தவையல்ல. பதின்ம வயதை அடையும் வரையிலும் அன்னம்மாள் சிஸ்டரைத் தான் என்னுடைய அம்மா என்றே நினைத்திருந்தேன். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் நான் எதற்காக அங்கே இருக்கிறேன், இதுவல்ல இயல்பான வாழ்க்கை எனத் தெரியும் போது என்னுள் எவ்வித அதிர்வும் ஏற்படவில்லை. என்னைப் போலவே பல பிள்ளைகள் அங்கே இருந்தார்கள், அவர்களின் பெரும்பாலானோர் பெற்றோரை விட்டு அங்கே எதற்காகவோ வளர்ந்தார்கள். அவர்களாலே என் பேனா மை அம்மாவிற்கும், அப்பாவிற்கும் கடிதங்களை எழுதிக் குவித்தது, போகப் போக மடத்தில் இருக்கும் நூலகத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன். ஆங்கிலமும் தமிழும் மாறி மாறி வாசித்தேன். என் எண்ணங்கள் கடிதங்களில் ஊறித் திளைத்தன. பார்த்தீர்களா? இது திருமணத்திற்குப் பிறகு நான் எழுதும் முதல் கடிதம். ஒரு நாள் கையில் கெட்டி அட்டை போட்ட புத்தகம் ஒன்று கிடைத்தது, அது நூலகத்தில் யாரும் செல்லாத ஒரு மூலையில் கிடந்தது. அதன் பெயர் ‘crime and punishment’, அதைப் படித்ததிலிருந்து என்னுள் மனிதர்கள் மேலே பெரும் கரிசனம் வந்தது. குறிப்பாக என்னை நான் சோனியாவாக எண்ணிக் கொண்டேன். நீங்கள் இந்த புத்தகத்தைப் படித்திருப்பீர்களா எனத் தெரியவில்லை, ஆனாலும் சோனியாவைப் பற்றிச் சொல்கிறேன். நாம் எல்லோரும் ஏதோ ஒரு தருணத்தில் சோனியாவாக மாறுகிறோம். நீங்கள் எனக்கு சோனியாவாக மருத்துவமனையில் தெரிந்தீர்கள்.

சோனியாவின் கதையை வாசிக்கும் போது என் கண்கள் எப்போதும் ஈரத்தோடிருக்கும். அப்பனால் கைவிடப்பட்டவள், அப்படியிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் அவனாலே நரகத்தின் வாசல் வரை அழைத்துச் செல்லப்பட்டவள். அவள் ஒரு வேசி அக்கா. அவளால் எதையுமே சகிக்கமுடியும். அப்பனை என்றைக்கும் வெறுத்ததில்லை, அதுதான் அவருக்கு அவள் கொடுத்த தண்டனையோ! இன்னொருவன் நாவலில் வருகிறான், பெண்களை எப்போதுமே போகப் பொருளாய் காண்பவன். அவளின் வார்த்தைகளால் விவிலிய வரிகளைக் கேட்டே மனம் மாறி வருந்துகிறான். நாவலின் முக்கியப் பாத்திரம், ஒரு கொலைகாரன் அவள் கால்களில் விழுந்து தன் பாவத்தைத் தொலைக்க முயல்கிறான். இங்கே அடுத்தவர்களின் பாவத்தை யார் மன்னிக்க முயல்வார்கள்? கர்த்தரே மேரி மக்தலின் என்னும் வேசியின் கால்களில் விழுந்து தன் பாவத்தைக் கரைத்தார் எனும் நம்பிக்கையும் உண்டு. அது போலவே இந்த சோனியாவும் ஒரு தூய ஆத்மா. நிதர்சனம் என்ன தெரியுமா? நானும் என்னை சோனியாவாக எண்ணிக்கொண்டு எடுத்த ஒரு முடிவுதான் என்னை நெருப்பில் தள்ளியது.

அவன் குடிகாரன் எனத் தெரிந்தே திருமணம் செய்தேன், அன்னம்மாள் சிஸ்டர் எவ்வளவோ பேசிப் பார்த்தார், நான் செவி சாய்க்கவில்லை. கல்லூரி படிக்கையில் ஞாயிறு தோறும் அருகில் இருக்கும் தேவாலயம் செல்ல ஆரம்பித்தேன். மடத்திலிருந்தாலும் அங்கே எனக்கென தனிப்பட்ட வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டேன். அங்கேதான் அவனைச் சந்தித்தேன், சொந்தமாக ஒரு மிட்டாய்க்கடை நடத்திவந்தான். நாங்கள் ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் எனக்கு மிட்டாய் கொண்டு வருவான். என் கதையைக் கேட்டு, மெல்ல எழுந்து என் தலையை வருடிக் கொடுத்தான். சொன்னால் நம்ப மறுப்பீர்கள், எல்லாமுமே வேகமாக நடந்தன. அவனின் பெற்றோர் மடத்திற்கு வந்து அன்னம்மாள் சிஸ்டரிடம் பேசினார்கள். சிஸ்டர் தெரிந்தவர்களிடம் அவனைப் பற்றி விசாரிக்கச் சொன்னதால் தான், அவன் பெரும் குடிகாரன் எனத் தெரிந்தது. வயதும் அதிகமாம், இவை யாவும் என் கண்களில் பெரும்பிழையாய் தெரியவில்லை. கர்த்தரின் பாதத்தில் வளர்ந்தவளால் ஒரு பாவியைத் திருத்த முடியாதா? அலகையின் கையால் வழிநடத்தப்படும் ஒருத்தனை விவிலியம் கொண்டு மீட்க முடியாதா?.

படித்து முடிக்கும் வரையிலும் யாரும் காத்திருக்கவில்லை. திருமணம் முடிந்து அவன் வீட்டிலிருந்தே கல்லூரி செல்லலாம் என முடிவெடுத்தேன். எனக்கென ஒரு வீடு, நான் எங்கே சென்றாலும் எனக்காகக் காத்திருக்கும். மடத்தில் எதுவுமே ஒரு ஒழுங்கில் நகரும். உணவும் குளியலும் எல்லாமுமே அதற்குரிய நேரத்தில் நடக்க வேண்டும். நேரம் தவறாமை அங்கே நெறி. ஆனால் சில நேரங்களில் நாம் அவற்றை விட்டொழிய ஆசைப்படமாட்டோமா? ஒரே நேர்க்கோட்டில் செல்லும் வாழ்க்கையில் என்ன சுவாரசியம் இருக்கிறது. கொஞ்சம் மீறலாமே! கூட நான் விரும்பிய முதல் ஆண் அவன்தான். எனக்கு இந்த உலகத்தைச் சுதந்திரமாகக் காணும் ஆசையிருந்தது. திருமணம் முடித்து அவன் வீட்டிற்குச் சென்றதுமே முதலில் வீட்டின் பின்னே தோட்டத்தில் அந்திமந்தாரைச் செடியை வளர்க்க ஆரம்பித்தேன். வேதப் பாடல்களை மட்டுமே கேட்டவள், சினிமாப் பாடல்களைக் கேட்டேன். எல்லாமுமே இனிமையாகப் போய்க் கொண்டிருந்தது. அவன் பகலில் வேறொருவனாகவும், இரவில் மற்றொருவனாகவும் இருந்தான். ஆரம்பத்தில் இதுதான் ஆண்களின் இயல்போ என்றெண்ணினேன்.

நாட்கள் செல்ல செல்ல இரவுகள் இனிக்க மறந்து, கசக்க ஆரம்பிக்கும் மிட்டாய்களைப் போல மாறின. ராத்திரி குடிக்காமல் உறங்க முடியாது எனச் சாக்கு சொன்னான். ஆனாலும் அருகில் அவன் கைப்படும் தூரத்தில் நான் கிடக்கவேண்டும், என் அனுமதியின்றி மேனியைத் தழுவும் கைகள் அருவருப்பைக் கொடுத்தன. வெறுப்பு ஒரு பொறியைப் போல, அதை அனுமதித்தால் பின் அதைத் தணிக்க இயலாது. நான் இணங்க மறுக்கும் சமயங்களில் வார்த்தைகளை மீறி கைகளும் என்னைத் தாக்க ஆரம்பித்தன.

தேவாலயம் செல்வதும், விவிலியம் வாசிப்பதும் மட்டுமே விருப்பமாய் மாறின. திருமணத்திற்குப் பிறகு விருப்பங்களை நான் என்னுடைய கட்டுப்பாட்டில் மட்டுமே வைத்துக் கொண்டேன், அவை என்னை விட்டுச் சிந்தியதில்லை. நான் சொன்னேனே சோனியாவைப் பற்றி, அவள் அப்பனால் கைவிடப்பட்டவள், அவள் ஒருபோதும் தன்னை எண்ணி தாழ்வுணர்ச்சியால் துவண்டதில்லை. மாறாக இறைவனின் வார்த்தைகளால் தன்னை மீட்டெடுத்தாள், அது போலவே என்னையும் எண்ணிக் கொண்டேன். என் கணவர் பெரும்பாலும் இரவு தாமதமாக வருவார். மாலையில் நான் தோட்டத்திற்குச் செல்வேன். அந்திமந்தாரையின் வாசம் என்னை அதன் கட்டுப்பாட்டில் எடுக்கும், அந்நேரம் எதைப் பற்றியும் சிந்திக்க நான் உத்தேசிப்பதில்லை. ‘கண்டச் சிறுக்கிய கூட்டிக் கொண்டு வச்சிருக்கியேல.. பாரு உனக்கு பொறவு ஒரு அண்டியும் கெடயாது..’ என் அத்தையின் குரல் திடீரெனக் கேட்கும், அவர் வீட்டிற்கு வந்துவிட்டார் என்பதன் அறிகுறி. சிலநாட்கள் கழித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், என்னைப் பரிசோதித்த மருத்துவர் என்னிடம் குறை ஏதுமில்லை எனச் சொல்லவும், அவர் என் கண்களை நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்த்தார். பிறகு காலையும் மாலையும் குடியே தொடர்ந்தது. இரவுகளில் மட்டுமே கசந்த வாழ்க்கை, பகலையும் தொற்றிக் கொண்டது.

அக்கா நீங்கள் சொன்னீர்கள் உங்கள் கணவர் உங்களோடில்லை. இவர்களுக்கு பெண்ணுடல் பற்றிய அபிப்ராயம் தான் என்ன? சாராய வாடையோடு எப்படி நம்மைக் கட்டி அணைக்கிறார்கள். நாம் மறுக்கும் போது எப்படி படுக்கைக்கு வரச் சொல்லி வற்புறுத்தலாம்?. நான் மடத்திலேயே இருந்திருக்கலாம். என் கதையையே பேசிக் கொண்டிருக்கிறேன். ஆம் யாருக்காவது அது தெரியட்டுமே! குறைந்தபட்சம் நீங்கள் என்பதால் ஒரு ஆசுவாசம்.

ஒருநாள் அந்திமந்தாரையின் அருகிலிருக்கும் போது என் உடையின் மேல் கவனம் இல்லாமல் இருந்தேன். அங்கே குடிபோதையில் வந்தவர் என்னைக் கண்டதும் சந்தேகித்திருக்கிறார். அதற்கு அவரிடம் பல காரணங்கள் இருந்தன. அதன்பிறகு மாலை சீக்கிரமாக வீட்டிற்குத் திரும்பிவிடுவார். நான் தோட்டத்திற்குச் செல்லும் போதெல்லாம் பின்னாலே வந்து நோட்டமிடுவார். செடியின் அருகே சிலவேளை நான் வருத்திக்கொண்ட வாழ்க்கையை எண்ணி, என்னை நானே ஏமாற்றி பூக்களைப் பறித்து கைகளில் வைத்துக்கொண்டு போதமில்லாமல் படுத்திருப்பேன். சில நேரம் அவற்றை மேனி நிறைத்துப் போட்டுக் கொள்வேன். பூவின் சூட்டின் கதகதப்பு, நாள் முழுவதும் வெறுமையை மட்டுமே அனுபவிக்கும் ஒருத்திக்கு வாழ்வின் மீதான பற்றுதலை அளிக்கும் சுகந்தம் போல. அப்படி ஒரு நாள் மாலை நான் தோட்டத்திற்குக் கிளம்பும் போது அங்கே அந்திமந்தாரை செடியில்லை, எனக்குள் பொருமிக்கொண்டிருந்த எல்லா உணர்ச்சிகளும் ஏனோ ஒரு புள்ளியில் குவிந்தன. என் பின்னாலே வந்தவர், “இப்போ உனக்க கள்ளமாப்பிள எப்புடி வருவான்.. தேவிடியா” எனச் சொல்லி நளியாய் சிரிக்கவும் ஆரம்பித்தார். சுழலும் எண்ணங்களில், யாவுமே என் கைகளை விட்டு அகன்று போனது போல சூன்யம் என்னை அள்ளிக் கொண்டதும், என் உடல் பூவின் சூட்டை எண்ணி ஏங்க ஆரம்பித்தது. அவரைத் தள்ளிவிட்டேன், அடுக்களைக்குள் ஓடினேன்.

நெருப்பு என் உடலை அணைக்கும் போது எனக்குள் பெரும்வலி, கதறினேன், அழுதேன், துடித்தேன். ஆனால் நெருப்பு என் உடலெங்குமே ஒரு அந்திமந்தாரைப் பூவைப் போலப் படர்ந்தது, அது நெருப்பின் நாக்கு. அந்திமந்தாரை மட்டுமே ஒரே செடியில் பலவண்ணப் பூக்களைக் கொண்டிருக்கும். அதில் நான் நெருப்பைக் கண்டிருக்கிறேன். என் உடலெங்குமே பூக்கள் கொழுந்து விட்டு நிறம் மாறி மாறி ஜொலித்தன. நானும் ஒரு செடியாகிக் கொண்டிருந்தேன். பின் நான் மயங்கி விழவும், மீண்டும் கண் விழிக்கவும் ஆன கால இடைவேளை மூன்று நாட்கள். எனக்கு அவை நொடிகளாய் கரைந்து போயின.

வெளியே வந்த என்னை யாருமே ஏற்கவில்லை அக்கா. என் கணவர் மருத்துவமனைக்குக் கூட வந்து என்னைப் பார்க்கவில்லை. பிறகு தான் அச்சம்பவத்தின் காரணமாக அவர் ஜெயிலில் இருக்கிறார் என அறிந்தேன். எங்கே செல்ல, மீண்டும் மடத்திற்கே வந்தேன். நீங்கள் சொல்லிய வார்த்தைகள், அளித்த நம்பிக்கை உண்மையிலே மடத்திலே கிடைக்கவில்லை. துரதிர்ஷ்டம், குழந்தைகள் என்னைக் கண்டு பயப்படுகிறார்கள். அன்னம்மாள் சிஸ்டர் மட்டுமே என்னருகே வரத் தயங்குவதில்லை. என் இறந்த காலத்தின் மகிழ்வான தருணங்களுக்குத் திரும்பமுடியவில்லை. கண்ணாடியை நான் தவிர்க்கிறேன். என்னைப் பார்க்க எனக்கே பயம் அப்பிக் கொள்கிறது. எல்லாமுமே பொய் அக்கா. இங்கே அதீதநம்பிக்கை வேண்டாம், பித்தலாட்டம் தான் எங்குமே. இப்போதெல்லாம் என் வேண்டுதல் இந்த உலகத்திற்கு சோனியாக்கள் வேண்டாம் என்பதே.

பின்னொரு நாள் தோட்டத்திற்குச் சென்றேன். மடத்திலோ நான் வளர்த்த அந்திமந்தாரை செடி கருகிப் போய் நின்றது. நான் சில மணி நேரம் அங்கேயே நின்றேன். அன்னம்மாள் சிஸ்டர் என்னை அழைக்கவே ஏனோ திரும்பிவந்தேன். நான் அறிந்த வலியை ஒப்பிடும் போது இப்போது அதிகம் வலிக்கிறது. என் உடல் முழுக்க அந்திமந்தாரையின் நாவால் வருடவிட வேண்டும். அதன் சூட்டை நான் மீண்டும் அனுபவிக்க வேண்டும். அதுவே எல்லா வலியிலிருந்தும் என்னை மீட்கும், நிம்மதியைக் கொடுக்கும். அதற்காக மீண்டும் ஒரு எத்தனம், நான் அறிந்த வழி. ஒருவேளை நீங்கள் என்னைப் பார்க்க விரும்பினால், வரும்போது ஒரு அந்திமந்தாரை செடியைக் கொண்டு வாருங்கள் அக்கா. என் ஆண்டவரிடம் உங்களுக்காக மன்றாடுவேன். உங்கள் பிள்ளைக்கு நல்மேய்ப்பராய் ஆண்டவர் இருப்பார்.

‘நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும் போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்’

அன்புடன்,
மேரி’.

Previous articleஓணி
Next articleசூரம்பாடு
வைரவன் லெ ரா
சொந்த ஊர் ஒழுகினசேரி, நாகர்கோயில். பணிநிமித்தமாய் பெங்களூருவில் வசிக்கிறார். இலக்கிய வாசிப்புடன் சிறுகதைகளும் எழுதிவருகிறார். இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'பட்டர்-பி' டிசம்பர் 2021-ல் யாவரும் பதிப்பகம் மூலம் வெளிவந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.