சூரம்பாடு

சூரம்பாடு நடக்கும் போதுதான் அவனது இறுதி மூச்சு என்று நாங்கள் நால்வரும் முடிவு செய்தோம். அது அப்படித்தான் முடியுமென்பது எனக்குத் தெரிந்த விசயம் தான். என் பேச்சை மீறி மற்றவர்கள் ஏதும் சொல்லிவிட மாட்டார்கள். ஆனால், இந்த விசயத்தில் அவர்களுக்கும் முழுப் பங்கு இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவனை முற்றாக அழித்தொழித்து விட என்னை விட அதிக வெறி கொண்டு அலைந்தவர்கள் அவர்கள் தான். ஆனால், சில நாட்களுக்கு முன் அது மாறிப் போனது. நான் உண்டு, என் வேலையுண்டு என அவன் செய்ததையெல்லாம் மறந்து என் வழியில் தான் சென்றுகொண்டிருந்தேன். கடந்த வெள்ளிச் சந்தையில் எங்கள் சந்திப்பின்போது நடந்த, நான் ஒருபோதும் மறக்க முடியாத அந்தச் சம்பவத்தின் போது அவன் சொன்ன வார்த்தைகளுக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் அவனது கழுத்திலிருந்து பீய்ச்சியடித்துத் தெறிக்கும் இரத்தத்தைக் கனவு கண்டு கொண்டிருக்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் அந்த இரத்தத்தின் சூட்டில் எங்கள் எல்லோரது வன்மமும் தீரத் தீர ஆடிக் கொண்டாடுவோம். இப்படி ஒருவன் இருந்தான், அவனை ஒன்றுமற்ற நான்கு பேர் திருகி எறிந்தார்கள் என்று ஊரெங்கும் பேச்சாகும். நேராகச் சென்று சரணடைந்து விடுவதில் ஒரு குழப்பமும் இல்லை. பிறகு அந்தப் பக்கத்திலிருந்து எழுந்து வருகிற பழிவாங்கும் கத்திகளைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு அவனது உடலின் ஒவ்வொரு இணுக்கிலும் பயம் நிறைந்து அவன் நடுநடுங்கிக் கைகூப்பிக் கெஞ்சுவதைப் பார்க்க வேண்டும். அவனது கெஞ்சலில் அவமானம் தாங்காமல் முகம் இருண்டு வெட்கம் கெட்டவனாய் எங்கள் முன் அம்மணமாய் அவன் கிடக்கும் போது, எதற்காக இது என்று நிச்சயம் அவனிடம் சொல்வேன். எதற்குச் சாகிறோம் என்பதைத் தெரிந்து கொள்வது நிச்சயம் அவனுக்கு இன்னும் வலியைக் கொடுக்கும். அல்லது வெறியைக் கூட ஏற்றும். அவன் என்னவெல்லாம் செய்தால் நாங்கள் என்னவெல்லாம் செய்யவேண்டும் என சாத்தியப்படும் அத்தனை வழிகளையும் யோசித்து வைத்திருக்கிறோம். ஒற்றைப் புளி திருப்பத்திலிருந்து முருகன் கோயிலுக்கு அவன் புல்லட்டில் வந்து சேர கூடிப் போனால் இருபது நொடிகள் ஆகலாம். அவன் பெரிய ராஜா மாதிரி இருபுறமும் பார்த்துக் கையாட்டி மிதந்து வரும்போது குறுக்காக வந்து நிற்கும் எங்கள் யாரையும் அவனுக்கு அடையாளம் தெரிய வாய்ப்பேயில்லை. ஒவ்வொருவர் முகத்திலும் ஒவ்வொரு வண்ணம் பூசுவதாக இருக்கிறோம்.

மொத்தம் மூன்று பன்றிகள். முதல் இரண்டு முறையும் மூர்க்கமான அந்தப் பன்றிகளின் கழுத்தோடு சேர்த்துக் குத்திக் கிழித்து விட்டேன். மற்ற மூவரும் அவற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓய்ந்து விழுந்தனர். நான் முதலில் ஓர் ஓரமாக நின்று அப்பன்றிகளின் அசைவைக் கவனித்துக் கொண்டிருப்பேன். ஓட விட்டு, மற்ற மூவரும் களைத்து விழும் நேரம் அப்பன்றிகள் சற்று மிதப்பில் இருக்குமோ என்னவோ. நேருக்கு நேராகச் சென்று என் குறுங்கத்தியை அவற்றின் கழுத்தில் இறக்கக் காத்திருப்பதைப் போல நிற்கும். மூன்றாவது முறை நான் மற்ற மூவருக்கும் அந்த வாய்ப்பைக் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். வெறும் மூன்று பன்றிகள் போதுமான பயிற்சி இல்லைதான். பன்றியும் மற்றவனும் சமானம் இல்லைதான். ஆனால், கத்தி பிடிப்பதற்கும், சரியாகக் குத்துவதற்கும் ஒரு வாய்ப்பு தானே. நேரமுமில்லை. ஊர் விழித்துக் கொள்ளும் முன் பயிற்சியை முடித்து விட வேண்டும்.

முருகன் கோயிலை மூடியபடி நிற்கும் ஆலமரத்தின் விழுதுகளில் சில சாக்குகளைச் சுருட்டித் தொங்க விட்டிருக்கிறோம். அந்த இருட்டில் யாருக்கும் எதுவும் வித்தியாசமாகத் தெரிய வாய்ப்பில்லை. சாக்குகளை எடுக்க வேண்டிய அவசியம் வந்தால் அவனை மறித்துப் பிடித்துக் கொள்வது எங்கள் மூவரின் வேலை. நெடுவன் சென்று சாக்குகளைக் கொண்டு வர வேண்டும். பிறகு அவனது சாவில் பெரும் பங்கு நெடுவனுக்கு. ஒருவேளை சாக்குகள் அந்த இருட்டிலேயே தொடர்ந்து தொங்க வேண்டி வந்தால் அடுத்த நாள் காவல்துறைக்கு கூடுதல் குழப்பம் இருக்கும். அது, நாங்கள் சரணடையாமல் தப்பிக்க நினைக்கும் பட்சத்தில். நெடுவன் எப்போதுமே சொல்வது, ‘அவனுக்க காது ரெண்டையும் நா அறுப்பேம் பாத்துக்கல. அறுத்து அவனுக்க மத்தவ வீட்டு முத்தத்துல கொண்டு போடுகனா இல்லயான்னு பாரு..’

கோயிலின் எதிர்ப்புறம் இருந்த பந்தலின் உள்ளே சூரனுக்கான நடுக்கம்பைக் கட்டியபோது அதன் கீழாக ஒரு நீண்ட குடைவைப் போட்டு அதனுள்ளே நீண்ட உளி ஒன்றைச் சொருகி வைத்திருக்கிறான் குள்ளன். ஒருவேளை நாங்கள் திட்டமிட்டிருக்கும் இடத்தில் அவனை முடிக்க முடியாமல் சூரம்பாட்டுத் தளம் வரை அவன் வந்து விட்டானென்றால் அவனது முடிவு இன்னும் பொருத்தமாக இருக்கும். சூரனைக் குத்திக் கொல்லும் வேலுக்கான கடைசித் தீபாராதனையின் போது பெரிய மைனர் மாதிரி அவன் தானே நிற்பான். அந்தக் கூட்டத்தில் சூர வாகனத்தின் நடுவே நின்றிருக்கும் குள்ளனைப் பற்றி யாருக்கு என்ன கவலை. ஆனால், சூரன் உடலெங்கும் இரத்தச் சிவப்பில் குளிக்கும் நேரம் குள்ளன் அந்த உளியை மற்றவனது அடி வயிற்றில் இறக்கியிருப்பான். குள்ளன் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கடல் மூரையைப் பொறுக்கி விற்றுப் பிழைக்க ஒரே காரணம் அவன் தான். செய்தித் தாளெல்லாம் குடும்பத்தோடு தற்கொலை என்றுதான் சொல்லின. மற்றவனுக்கு குள்ளன் என்று ஒருவன் இருப்பதும் தெரிந்திருக்காது. இதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. யாரென்றே தெரியாத எங்களின் கைகளால் அவன் துடித்துச் சாகும்போது எவ்வளவு குழம்பிப் போயிருப்பான்.

இப்போது சூரன் புறப்பாட்டு நேரத்திற்கான பூஜை ஆரம்பிக்கும். நான் கண்காட்ட குண்டன் அவனருகே வைத்திருந்த தாமரையிலை மடிப்பை எடுத்துச் சென்றான். சூரனுக்கு ஆளுயரத்தில் ஒரு மாலை. சாற்றிவிட்டு சூரனது காலைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டான் குண்டன். எனக்குச் சிரிப்புதான் வந்தது. ஆனால், அவன் திரும்பி வரும்போது நான் இப்படிச் சிரித்துக் கொண்டிருக்க முடியாது. விட்டால் அவனைக் கடித்தே கொன்று விடுவான் குண்டன். அவனது முகத்தின் குறுக்காகக் கிடக்கும் வெட்டுத் தழும்பு ஒரு பக்கம் இருக்கட்டும். அவன் நெஞ்சில் குத்தியிருந்த பச்சையைத் தீயினால் கருக்கி, ‘ஒரு காலமும் நம்ம தெசைக்கு வரப்புடாது, என்ன புள்ளோ?’ என்று கைகொட்டிச் சிரித்தான் மற்றவன். தன் அம்மையின் கையாலேயே ருசியாகத் தின்று திமிராகச் சுற்றி வரும் மற்றவனைக் கழுத்தில் மிதித்து அவன் மூச்சையடக்கிக் கொல்ல வேண்டும் என்பது குண்டனின் வெறி. கூடவே இன்னொரு சிறப்பு கவனிப்பையும் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறான். கோயில் சாலையின் மறுபுறம் மொத்தக் கூட்டமும் நின்று செல்லும் ராணியக்கா மிட்டாய்க் கடையின் கொதிக்கும் தேன்குழல் பொரித்த எண்ணெய். அதற்காகவே அந்தக் கடையில் கிடையாய்க் கிடந்தான் குண்டன். குடம் குடமாகத் தண்ணீர் அடித்துக் கொடுத்தான். எச்சில் இலை பொறுக்கிக் கூட்டிக் கொண்டு போய் எறிந்தான்.

நெடுவன், குள்ளன், குண்டன் மற்றும் நண்டன் என அழைக்கப்படும் நான், நான்கு பேரும் இந்த சதித்திட்டத்தில் சேர்ந்து கொண்டது தற்செயலானதன்று. இவர்கள் ஒவ்வொருவரையும் தொடர்ந்து பின் சென்று, உடனிருந்து, உண்டு, கழித்து, கொண்டாடி, அவர்கள் ஒவ்வொருவரின் கடந்த காலத்தையும் கிளறி, அவர்களுக்குள் அழிந்து போயிருந்த கொலை வெறியைத் தூண்டி விட்டு, எனக்காக அவர்கள் எப்படிச் சிந்திக்க வேண்டுமோ அப்படிச் சிந்திக்கச் செய்து  இன்று இதோ என் கண்ணசைவில் எதுவும் செய்துவிடத் தயாராக இருக்கும்படி இவர்களை உருவாக்கியிருக்கிறேன். சுயநலம் தான். அவர்களுக்கான ஆத்ம திருப்தியை வழங்கும் சுயநலம். இன்னும் சிறிது நேரத்தில் என் வாழ்வின் ஒரே பெருஞ்செயலைச் செய்து முடித்துவிடுவேன். இப்போதைக்கு எங்களை நிதானப்படுத்திக்கொள்ள சூரன் அலங்காரப் பந்தலின் பின்புறம் உட்கார்ந்து சற்று நேரம் சீட்டாடலாம்.

“லுங்கிய  அவுத்து விரி மக்ளே. எவா வந்து பாக்கப்போறா ஒன்ன?”

“குண்டனுக்க லுங்கிய அவுத்துட்டாலும்! சூரன பொறவு கொல்ல முடியுமாக்கும்?”

“ஒங்கப்பனுக்க மத்தவ கிட்ட போயி கேட்டாத் தெரியும். மத்தவரு எத்தன லுங்கியக் கொண்டு குடுத்தாருன்னு தெரியுமா மக்கா? வந்துட்டான் எனக்கச் சூரனப் புடிச்சித் தொங்க. தில்லிருந்தா இப்போ மத்தவன் வருவான்லா? அவனுக்க முன்ன போயி நில்லு பாப்பம். வாயி, மயிரு.”

“கொப்பன் கொம்மைன்னு என்ன மயித்துக்குல இழுக்க. பேச்சு ஒனக்க சூரனப் பத்தி தான? பொறவு என்னல, தைரியம் உண்டும்னா நேரா பதில் சொல்லணும். தப்பளப் பயக்கோ மாதிரி சவடால் அடிக்கப் படாது. நீ சொன்னாலும் சொல்லாட்டாலும் மத்தவன் முன்னாடி போயி நாந்தாம்ல நிப்பேன். நீ உருண்டு எந்திரிச்சி ஓடி வரதுக்கு முன்னாடி அவனுக்க இரத்தத்தப் புடிச்சி ஒனக்கச் சூரனுக்குக் களபம் தெளிக்கேன் என்னா?”

“சும்மா சலம்பாமக் கெடங்கலாம்ல. எங்க வாயக் காட்டணுமோ அங்க காட்டணும். பேயாம மூடிட்டு சீட்டக் கலச்சிப் போடுங்க. சும்மா வெளாட்டுக் காரியம் இல்ல என்னா? ஒவ்வொரு சீட்டும் மத்தவனுக்க நெஞ்சுல எறக்கப் போற எறக்குக்குன்னு நெனைக்கணும். இங்க தோத்த ஒவ்வொரு ரவுண்டுக்கும் மத்தவன் நம்ம கழுத்துல நெரிக்கது தெரியணும். சும்மா வேலயும் சோலியும் இல்லாமலா நண்டன் நம்மளச் சேத்து புடிச்சி வச்சிருக்கான்? அவன் நெனச்சா ஒத்த ஆளா வீடேறித் தூக்கிருப்பான் தெரியும்லா? நமக்கான பழி இருக்கு, நெனப்பிருக்குல்லா? சோத்தத் திங்கும்போ எறங்கமாட்டிங்கு. பின்ன, இங்க, இதே எடத்துல தான் அந்த மயிராண்டி மைனருக்க நெஞ்சப் பொளக்கணும்னு இருக்குல்லா? நம்ம பிச்சயெடுத்தத மறந்துரப்படாதுல.”

“லேய், பேச்ச நிறுத்துங்கல. முருகன் குன்றத்துல என்ன நடக்குன்னு தெரிஞ்சா?”

“அலங்காரம் முடிஞ்சி தலைவர் வெளிய எறங்கியாச்சாம். மக்க கிட்ட கொறையெல்லாம் கேட்டுட்டு வந்து சேரணும்லா? பின்ன, ரெண்டு பொண்டாட்டிமாரு வேறல்லா? அவளுவோ தூக்கிச் சொருவிட்டு வராண்டாமா?”

“சலம்பாதல. மத்தவன், பூசாரி ஒன்னும் கொழப்பிற மாட்டாம்லா?”

“அதெப்படி கொழப்புவான்? சங்குல எறங்கும்னு தெரியும்லா? பின்ன, அவனுக்கும் மத்தவன் மேல கொஞ்சம் கடுப்பு உண்டும், போல. மத்தவன முடி, மொத பூச ஒனக்குதான்னு சொன்னாருல்லா, ஞாபகம் இல்லயா?”

“பேச்சுப்படி நடந்தா செரிதான்.”

“மொதல்ல இங்கருந்து தப்புனா தானல மத்தவன் சூரம்பாடு பாப்பான். அவன இன்னிக்கு சூரம்பாடு பாக்க விடமாட்டம்ல. எனக்க செங்கிடாக்காரன் மேல ஆண பாத்துக்கோ.”

“ஆண மயிரெல்லாம் செரிதாம். நம்ம நெனச்சபடி நேரம் கூடி வரணும் மொதல்ல, பாத்துக்கோ.”

“அதெல்லாம் செரியா நடக்கும் பாரு. மொதல்ல யான மொகம் போட்டு சூரன் நிப்பான்லா, அப்போ மத்தவன் கெளம்பிருப்பான். பொறவு, சிங்க மொகம் போடும்போ ஒத்தப் புளி திருப்பத்துக் கிட்ட வரணும். வந்திருவான்னு வையி, ஏற்பாடு அப்பிடித்தான் செஞ்சிருக்கு. கடைசில சூர மொகம் வைக்கும்போ கூட்டம் கூப்பாடு போடும்லா? அப்போ நம்ம உள்ள எறங்குவோம். பின்ன, சூரன் சேவலா வந்து முருகன்கிட்ட கால்ல விழாத கொறையா கெஞ்சிக் கதறுவான்லா, அதே மாதி மத்தவன் தரைல கெடந்து நம்மக் காலப் புடிச்சிக் கெஞ்சனும்ல. நாம என்ன முருகனா, சரி மக்கா, வா வந்து எனக்க மயிலா இருந்துக்கோன்னு சொல்லதுக்கு. தாயளி, அவனுக்க கொடல உருவிக் கொடி கட்டுகனா இல்லையான்னு பாரு.  பொறவு, செத்தப்பய சேவல பிரியாணி போட்டுற வேண்டியதான். செரி தான?”

“நடந்தாச் செரிதான். பாப்பம்.”

பேச்செதுவும் எனக்குக் கேட்கவில்லை. என் கைகளில் வந்து சென்று கொண்டிருந்த ஒவ்வொரு சீட்டும் என்னவெல்லாம் நடக்கலாம் எனக் காட்சிகளாய்க் காட்டிக் கொண்டிருந்தன. அவன் பெரும்பாலும் தனியாகத்தான் வருவான். ஆனால், அவன் வந்த பாதையில் அடுத்த சில நொடிகளில் நிச்சயம் இரண்டு மூன்று பேர் வருவார்கள். நான் நினைத்தபடியே இங்கே அவனை மறித்து விழவே வைத்துவிட்டாலும் அவனது கூட்டுக்காரர்கள் வருவதற்குள் என் மடியிலிருந்து குறுங்கத்தியை எடுத்து அவனது கழுத்தில் இறக்கிக் கிழித்தெறிய வேண்டும். இரண்டு நொடி தாமதம் ஆனாலும் அவனது கூட்டுக் காரர்கள் எங்களைச் சூழ்ந்துகொள்ள முடியும். நிச்சயம் அவனது புல்லட் சத்தம் கேட்டு மக்கள் கூட்டம் ஒதுங்கி விலகும். எல்லோரும் பார்க்கத்தான் அவனை மறிக்கப் போகிறோம். அதுதான் நடக்க வேண்டும் கூட. ஆனால், அடிக்கடி எனக்கு இன்னொன்றும் தோன்றும். சூரம்பாடு பார்க்க குழந்தைகளும் பெண்களும் மங்கலமாகத் திரண்டு வருவார்கள். என் தங்கைகளும் தம்பியும் அம்மாவும்…. சரி, அது வேண்டாம். குழந்தைகள் பார்க்க இதை எப்படி?… அவனுக்குக் கூட பெண் குழந்தைகள் தான். சில நாட்கள் அவனது பெரிய மகளைத் தொடர்ந்து சென்று பார்த்தேன். அவனது மனைவியைப் போலவே அவளும் அப்படியொரு லட்சணம். முத்தாரம்மன் மாதிரி முகம். அவளைத் தூக்க வேண்டுமென்றால் அந்த முதல் நாளிலேயே முடிந்திருக்கும். எனக்கு அவனைப் போல முடியவில்லை. அப்படிச் செய்வதும் சரியில்லை. அவனது இரத்தம் அவனுடையதாக மட்டுமே இருக்க வேண்டும். என்ன, இரண்டு நாட்கள் அந்தப் பெண்கள் அழுது ஓய்வார்கள். ஒருவேளை ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடாமலும் இருக்கலாம். இந்த மாதிரிப் பிறவிகள் வெளியே காட்டிக் கொள்ளும் பிம்பங்களுக்குப் பின்னால் அவர்கள் குனிந்து நின்ற இடங்களும், விழுந்து கிடந்த கால்களும்… சூரன் புறப்பாட்டு மேளம். என் இடுப்புத் துண்டில் சொருகியிருந்த குறுங்கத்தியைத் தொட்டுப் பார்க்கிறேன். குண்டன் கொட்டாவி விட்டபடி கவனிக்கிறான். குள்ளன் ஒற்றைச் சீட்டிற்காகத் துடிதுடிக்கிறான். நெடுவன் பேச்சற்று தூரத்து ஒற்றைப் புளியைப்  பார்த்தபடிச் சிரிக்கிறான்.

கந்த பெருமான் தன் படைவீரப் பட்டாளத்தோடு மேளம் முழங்க வீரநடை போட்டு வருகிறான். எங்கள் அருகிலிருந்து ஓங்காரமிட்டபடி யானை முகச் சூரன் தன் அரக்கக் கூட்டத்தின் தோள்கள் மீதாக மிதந்தபடிப் புறப்படுகிறான். சூரனின் கடைசி வடிவாய் மாற வேண்டிய சேவலைக் கடித்துத் தூக்கியபடி ஓடிய நாயை விரட்டி ஓடினர் சிலர். நான் கண்ணசைக்க சீட்டுக்கட்டை லுங்கியோடு சுருட்டித் தன் இடுப்போடு இறுக்கிக் கட்டினான் குண்டன். நெடுவனும் குள்ளனும் மெல்ல சாலையைக் கடந்து ராணியக்கா மிட்டாய்க்கடையில் சென்று ஒதுங்கி நின்றனர். சூரனுக்குப் பின்புறமாக வந்த செண்டை மேளத்து ஆட்டத்தின் ஊடே சென்று சுற்றிக் கவனித்தபடி நின்றேன் நான்.

மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்க யானை முகச் சூரனை நேரிட்டு அவன் தலையைக் கொய்தெறிகிறார் கந்த பெருமான். கூட்டத்தில் ஒவ்வொருவர் முகத்திலும் தானே வென்று விட்டமாதிரி ஒரு பாவனை. யானைமுகனின் ஆணவத்தை அடக்கிய கந்த பெருமான் தன் கொலைவேலை மார்போடு சாய்த்து வைத்து முன்னும் பின்னுமாக ஆடி நிற்கிறார். நால்வர் தோள்மீது கம்பீரமாகக் கர்ஜித்தபடி வருகிறது சிங்க முகம். செண்டை மேளம் உச்சக்கட்டத்தை எட்ட சிங்கமுகனாக மாறிக் கிளம்புகிறான் சூரன்.

ஒற்றைப் புளி திருப்பத்தில் மக்கள் கூட்டம் மெல்ல விலகிச் சேர்ந்தது தெரிந்தது. அவனது புல்லட் சத்தம் அன்று கேட்டதைப் போல, துல்லியமாக அதைப் போலவே கேட்டது. எனது குறுங்கத்தி என் வயிற்றைக் கீறித் துளைத்து வெளிப் பாய்ந்து விடுவதைப் போலிருந்தது.

கந்த பெருமானும் சிங்கமுகனும் நேருக்கு நேர் இருபதடி தூரத்தில். நின்றபடி, ஆடியபடி, ஒருவரையொருவர் எடை போட்டுக் கொண்டிருக்க, மக்கள் கந்த பெருமானின் புகழ் கோஷமிட, ‘கொல், அவனைக் கொல்’ என்று எங்கும் ஒரே முழக்கம். ‘அவன் கழுத்தைக் கடித்துப் பிய்த்து எறி, அவன் இரத்தத்தைக் குடித்துக் காறித்துப்பு, அவனை அம்மணகுண்டியாக ஓட விடு, அவன் மீது சாணியைக் கரைத்து அடி, அவனைக் காலடியில் போட்டு நசுக்கு…’ கூடியிருந்த மொத்தக் கூட்டமும் ஆர்ப்பரிக்க, பத்து பேர் சேர்ந்து தூக்கிக் கொண்டு வந்த அந்தக் கூரிய வாளை நெருங்குகிறேன் நான். அதன் கண் கூசும் கூர்மையைக் கண்டு தலை வணங்கித் தொட்டு வணங்குகிறேன். ‘எடுத்தாளு, கொய்து எறி, குருதி நீராட்டு, எடுத்தாளு, எங்களைக் காப்பாற்று…’

குள்ளன் என் கைகளைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருந்தான்.

“நண்டா, என்னத்தப் பாத்துட்டு நிக்க, லேய் நண்டா, அந்தா வாராம் பாரு அந்த மயிராண்டி.”

ஒரு நொடி ஒன்றும் புரியாமல் அந்த முழக்கங்களில் மூழ்கி நின்றேன். யார் மயிராண்டி? என்னை எதற்கு இவன் இப்படி உலுக்குகிறான்? யார் அந்தக் குழந்தை? எவ்வளவு லட்சணம்! என்ன இவ்வளவு கூட்டம்? என் தங்கைகள் எங்கே? திருவிழாக் கூட்டம். தங்கைகளைக் காணவில்லை. அம்மா, அம்மா, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? தம்பி எங்கே? யாரது? யார் நீ? ஏய், என்ன செய்கிறாய்? பச்சைப் பிள்ளை அது. என்ன, எல்லாரும் பார்த்துக் கொண்டு நிற்கிறீர்கள்? என்னால் ஏன் அசைய முடியவில்லை? என் காதுகளில் என்ன பிசுபிசுப்பாக வழிகிறது? என்ன இது வெறிக் கூச்சல்?

கந்த பெருமான் மூர்க்கமாகச் சூரனின் சிங்க முகத்தைக் கொய்து எறிகிறார். மக்கள் கூட்டமெங்கும் ‘அரோகரா, வெற்றிவேல், வீரவேல்…’

“நண்டா, லேய் மயிரப் புடுங்கி,” என்றபடி யாரோ ஒருவன் என்னை ஓங்கி அறைந்தான். இன்னொருவன் என் இடுப்பிலிருந்து குறுங்கத்தியை எடுக்கக் கையை விட்டான். சட்டென அவனைத் தள்ளிவிட்டபடி என் கத்தியை வயிற்றோடு அழுத்திப் பிடித்துக் கொண்டேன். என் காதுகளுக்குள் புல்லட் சத்தம் படபடத்தது. நெஞ்சில் இறங்கிப் பேரிடியாய்க் கேட்டது. உடலெங்கும் சிலிர்க்க எதிரே பார்த்து அசைவற்று நின்றேன். எனக்குப் பத்தடி முன்னால் புல்லட்டை நிறுத்தி, கருப்புக் கண்ணாடியை எடுத்துத் தன் வேட்டி விளிம்பைத் தூக்கித் துடைத்துக் கொண்டிருந்தான் மற்றவன். அவனது தோள்களுக்குப் பின்னால் மறைந்திருந்த அந்த மெல்லிய உருவம் சற்று எம்பிப் பார்த்து பின் கீழிறங்கி உட்கார்ந்து கொண்டது. முத்தாரம்மன் முகம்.

செண்டை மேளம் கடைசிப் போருக்கான சூரனின் ஒப்பனைக்குப் பக்க பலமாக மெல்ல விட்டு விட்டு ஒலித்தது. தெரிந்த அந்த முடிவை மீண்டும் காணத் துடிக்கும் முகங்கள். வெறி கொண்டு பன்மடங்கு பலம் கொண்டு சூரமுகத்தைத் தாங்கி உயர்ந்து எழுகிறான் சூரன். காணாமல் போன சேவலுக்குப் பதிலாக புதிய சேவலொன்று சூரவாகனத்தின் அடியில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது.

நெடுவன் ஓடிச்சென்று ஆலமர விழுதில் தொங்கியிருந்த சாக்கை இழுக்கிறான். குண்டன் ராணியக்கா கடைக்குள் ஓடுகிறான். குள்ளன் சூரனின் நடுக்கம்பினடியில் விறைத்தபடி நிற்கிறான். நடுங்கியபடி நானும் என் இடுப்பிலிருந்த குறுங்கத்தியை எடுத்துப் பின்புறமாக மறைத்துப் பிடிக்கிறேன். கருப்புக் கண்ணாடியை மாட்டிக்கொண்டு தன் மகளுடன் சிரித்தபடி பேசிக்கொண்டு நிற்கிறான் மற்றவன். மகள் எதையோ சுட்டிக் காட்ட, அவன் அருகே சென்ற ஐஸ் வியாபாரியைப் பார்த்து ஏதோ கெட்டவார்த்தை சொல்லி அழைக்கிறான். அவன் நடுங்கியபடி ஐஸ் வண்டியை நிறுத்த, மகள் ஏதோ கேட்க, அதைத் தன் கையால் வாங்கி அவளிடம் நீட்டுகிறான். என் காதுகளுக்குள் இரைந்து கொண்டு வந்த பல புல்லட்டுகள் ஒற்றைப் புளி திருப்பத்தில் நின்று முறுக்கிக் கொண்டிருந்தன. கந்த பெருமானின் படை முழக்கம் சுற்றிலும் பெருகி ஒலிக்கிறது.

மகள் சிரித்தபடி ஐஸ் குச்சியைப் பிடித்து அப்பாவின் மீது தெளிக்கிறாள். அப்பாவின் சட்டையில் சிவப்பு நிறத்தில் கறை படிகிறது. அப்பா செல்லமாகக் கோபித்துக் கொள்கிறார். மகள் வேண்டுமென்றே மீண்டும் கறையாக்குகிறாள். அப்பா தனது செல்ஃபோனை எடுத்து மகளை இழுத்து நெருக்கி ஒரு புகைப்படம் எடுக்கிறார்.

நான் மெல்லப் புன்னகைத்தபடி இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நெடுவன் ஐந்தடி பின்னால் சாக்கை மறைத்து வைத்தபடி நெருங்குகிறான். குண்டன் வலப்புற மரத்தின் பின்னாலிருந்து ஒரு கண்ணாடிக் குப்பியின் மூடியில் நெருப்பைப் பற்ற வைக்கிறான். குள்ளன் என்னை விலக்கித் தள்ளிவிட்டு உளியை இறுக்கப் பற்றியபடி மற்றவனின் புல்லட்டின் முன்னால் சென்று நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறான். ஒன்றன்பின் ஒன்றாகப் பல புல்லட்டுகள் நெருங்கி வரும் சத்தம் என்னை நிலை குலையச் செய்கிறது. புன்னகை விறைப்பாக மாற என் குறுங்கத்தியை நீட்டியபடி முன் பாய்கிறேன் நான். எங்கள் நால்வரோடு சேர்த்து அவர்கள் இருவரென ஆறு பேரையும் சுற்றி வந்து அதிர்ந்த புல்லட்டுகள் மூர்க்கமாக ஓலமிட்டபடி நின்றன.

“அப்பா, அப்பா, வாப்பா போயிருவோம்.”

“என்னல? மயிராண்டி மவனுவளா! பத்து வேரு வந்தா பயந்துருவனாக்கும். அவனுகளுக்க புல்லட்டு மயிரு.  வாங்கல, தள்ளே..”

மற்றவன் தன் புல்லட்டின் முன் வேட்டியை மடித்துக் கட்டி நிமிர்ந்து நின்றான். அவன் புல்லட்டின் அருகே குறுகியபடி ஒளிந்திருந்தாள் மகள். பலரது மூர்க்கமான ஓலங்களுக்கிடையே சட்டென அனைத்து புல்லட்டுகளும் ஒன்றன் குறுக்காக ஒன்றெனப் பாய்ந்து எங்களைக் கடந்து திமிறிக்கொண்டு வெளியேறின. பத்தே பத்து நொடிகள். நெடுவன் ஆலமரத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தான். குள்ளன் உளியைத் தன் தலையில் அடித்தபடி சூரனுக்குள் ஒளிந்துகொண்டான். குண்டன் பற்றியெரிந்த செடிகளுக்குள்ளிருந்து அலறியது கேட்டது. என் கைகளை யாரோ இறுக்கப் பற்றிக் கொண்டிருந்தார்கள். குறுங்கத்தியை மெல்ல என் இடுப்பிற்குள் மறைத்து வைக்கிறேன். சற்று முன் சரிந்து கிடக்கும் புல்லட்டின் அருகே சென்று குனிந்து பார்க்கிறேன். சிதறிய கருப்புக் கண்ணாடித் துண்டுகளின் மீது மல்லாந்து கிடக்கிறான் மற்றவன். எங்கிருந்தென்று சொல்ல முடியாதபடி அவன் உடலெங்குமிருந்து நாலாபுறமும் பீய்ச்சியடித்த இரத்தம் கொப்பளித்தபடி நின்று வடிகிறது.

இப்போது கொண்டு சென்றால் பிழைத்து விடுவானா? ஆம்புலன்ஸை அழைக்க 104ஆ? அல்லது 108 ஆ? யாராவது ஆம்புலன்ஸிற்கு அழையுங்கள். சீக்கிரம் அழையுங்கள். அவர் சட்டைப் பையில் என்ன இருக்கிறது பாருங்கள். போன் இருக்கிறதா? அதில் வீட்டு எண் இருக்கிறதா பாருங்கள். யாருக்காவது இந்த புல்லட்டை ஓட்டத் தெரியுமா? நான் உட்கார வைத்து அவரைப் பிடித்துக் கொள்கிறேன். தயவு செய்து யாராவது வாருங்கள். தெரியுமா, இதே இடத்தில் தான் ஏன் தங்கைகளும், அம்மாவும்…யார் நீங்கள்? ஏன் கையை இப்படிப் பிடித்து இறுக்குகிறீர்கள். எதற்காக இப்படிக் கதறி அழுகிறீர்கள்?

“அப்பா, அப்பா..”

“முத்தாரம்மா. முத்தாரம்மா..”

சேவல் வடிவாகி கந்த பெருமானைச் சுற்றிக் கொண்டிருக்கிறான் சூரன்.

மயில் மீது கம்பீரமாக அமர்ந்து சேவற்கொடி பறக்கத் திரும்புகிறான் கந்த பெருமான். என்னைப் பற்றிய கைகளை இறுக்கப் பற்றியபடி இழுத்துக் கொண்டு ஓடுகிறேன் நான்.

Previous articleஅந்திமந்தாரை
Next articleஅவரவர் நியாயம்
Avatar
நாகர்கோவிலைச் சார்ந்தவர். கிராமப்புற மாணவர்களின் கல்விப் பணியில் இருக்கிறார். இவரது சிறுகதைகள் கனலி, யாவரும், பதாகை, சொல்வனம் இதழ்களில் வெளிவந்துள்ளன. ' தெருக்களே பள்ளிக்கூடம் ' எனும் மொழி பெயர்ப்பு நூலும் வெளி வந்துள்ளது. தற்போது கோவையில் வசிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.