அவரவர் நியாயம்

வெளியே

காவல் நிலையத்தின் வாசலில் மூன்று சிறு குழுக்கள் நின்றிருந்தன. இப்படி யாராவது காவல் நிலையத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்தால், உள்ளே ஏதோ ஒரு பஞ்சாயத்து நடந்துகொண்டிருக்கிறது என்று அர்த்தம். மூன்று குழுக்களில் இரண்டு குழுக்கள் வேண்டாவெறுப்பாக நின்றுகொண்டிருக்க, ஒருகுழு மட்டும் பரபரப்பாக தங்களுக்குள் ஏதோ  பேசிக்கொண்டிருந்தது. அக்குழுவில் மொத்தம் ஐந்து பேர் இருந்தனர்.

மூன்று குழுவும் போதிய இடைவெளி விட்டு யார் பேசுவதும் யார் காதிலும் விழாதவாறு, சமயம் கிடைக்கும்போதெல்லாம் மற்ற இருகுழுக்களை முறைத்துக்கொண்டும் இருந்தன.

காவல் நிலையத்தின் வாசலில் அதன் டியூப் லைட் வெளிச்சத்திலேயே முதல் இரண்டு குழுக்கள் இருந்தன. இரண்டிலும் நடுத்தர வயது பெண்கள் மற்றும் ஆண்கள் இருக்க, காவல் நிலையத்தின் வெளியே இருந்த ஆலமரத்தின் அருகில் வெளிச்சம் இல்லாத இடத்தில் ஆரோக்கியம், முருகன், தங்கராஜ், பாஸ்கரன் மற்றும் ஷாகுல் ஆகியோர் அடங்கிய அந்த இளைஞர்கள் குழு நின்றுகொண்டிருந்தது.

ஆரோக்கியம் பிளம்பராக இருந்தான். முருகன், தங்கராஜ் மற்றும் ஷாகுல் ஒரு மேஸ்திரியிடம் டைல்ஸ் ஒட்டும் வேலையிலிருந்தனர். காவல் நிலையத்தின் உள்ளே இருந்த இவர்கள் நண்பனான நாகராஜும் இவர்களுடன் தான் வேலை செய்துகொண்டிருந்தான். பாஸ்கர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையிலிருந்தான்.

அவர்கள் அனைவருமே அவ்வப்போது காவல் நிலையத்தின் உள்ளே எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தனர்.

இரவு ஷிப்ட்டிற்கு சில காவலர்கள் அப்போதுதான் வந்திருந்தனர். வந்ததும் வராததுமாக ஒரு புதிய போலிஸ் பையனை ஃபிளாஸ்கோடு அனுப்பியிருந்தனர். அவன் வெளியே நின்றிருந்த குழுக்களைக் கடக்கும் போது தலை குனிந்துகொண்டான். அதுவும் ஆலமரத்தின் அருகிலிருந்த இளைஞர்களைக் கடக்கும் போது மிகவும் அவமானமாக உணர்ந்தான். தலையை வேறுபக்கமாகத் திருப்பிக்கொண்டு ரோடுமுனையில் இருந்த டீக்கடையை நோக்கி நடந்தான்.

அந்த ஐவரும் அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் நடுவில் நின்றுகொண்டிருந்த ஆரோக்கியம் “நல்லவேளை, நான் போலீஸாவல” என்றான்.

“மொதல்ல ஆறாவது பாஸ் பண்ணு” என்றான் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த முருகன்.

ஆரோக்கியம் அதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை.

தங்கராஜிற்கு எரிச்சலாக இருந்தது. “உள்ள இன்னா தாண்டா பண்றானுங்க?”

“ஒருவேளை செலவு மிச்சமுன்னு இங்கயே கல்யாணத்த முடிக்கறாங்களோ இன்னாவோ?” என்றான் பாஸ்கரன்.

“கஞ்சனுங்க செஞ்சாலும் செய்வானுங்க” என்றான் ஷாகுல்.

“அவனுக்கு இன்னாடா வயசு இருக்கும்?

“தெரில. ஃபெயில் ஆயி டுடோரியல்ல படிக்கிறான். கரெக்டா தெரில”

“மேட்டர முடிச்சிட்டானா இன்னா?

“இருக்காதுன்னுதான் நினைக்கிறேன்”

“எப்புடி கரெக்டா சொல்ற”

“டேய்! நாங்க போவசொல்ல துணியோடதாண்டா இருந்தாங்க”

“முன்னாடியே முடிச்சிருந்தா?

ஷாகுல் அப்படிக்கேட்டதும் தங்கராஜ் அமைதியாக முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

“மச்சான் ஒன்னும் ஆயிருக்காது. நீ கவலப்படாத” என்று தங்கராஜை சீண்டினான் பாஸ்கரன்.

“நான் ஏன்டா கவலப்படப்போறன்?” என்று முறைத்தான் தங்கராஜ்.

“ஒன்னுமில்லாட்டியா அவன் வூட்டு வாசல் தெனிக்கும் போயி அவன் கூட நின்னு பேசிகினு இருக்க?” என்று மடக்கினான் முருகன்.

“நான் சின்ன வயசிலருந்து தான் அவங்க வூட்டுல நின்னு பேசிகினு இருக்கேன்”

“செரி, செரி, அழுவாத பிரச்சன முடியட்டும். நானே பேசி கட்டிவெக்கறன்” என்றான் ஷாகுல்.

ஷாகுலை முறைத்தான் தங்கராஜ். வேறு இடமாக இருந்திருந்தால் அவன் வாயில் அசிங்கமாக எதாவது வந்திருக்கும். போலிஸ் நடமாட்டம்  இருப்பதால் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அவர்கள் அருகில் தன் வாகனத்தை நிறுத்தினார் ரவி.

உள்ளே

ஏட்டய்யா மிகவும் எரிச்சலாக இருந்தார். வந்ததிலிருந்து கத்திக் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து கோவமாக “செத்த வாய மூடிகினு இரும்மா. நாங்க இங்க இன்னாத்துக்கு இருக்கோம்” என்று எரிந்து விழுந்தார்.

“ரெண்டு குடும்பமும் தனித்தனியா நில்லுங்க” என்று சொல்லிவிட்டு இரு குடும்பங்களையும் பொறுமையாகப் பார்வையிட்டார்.

வலதுபுறமாக இருந்த குடும்பத்தில் நான்கு பேர் இருந்தனர். தலை முழுவதும் நரைத்து இரண்டு தோள்களும் சற்றே குனிந்த வாக்கில் கசங்கிய சட்டையும் கைலியுமாகப் பார்க்கவே பாவமாக இருந்தார். அவருக்குப் பக்கத்தில் அவர் மனைவி அவருக்குச் சற்றும் பொருந்தாமல் சற்று இளமையாகத் தன்னைக் காட்டிக்கொண்டிருந்தார். இரண்டுபேருக்கும் பின்பக்கத்தில் அவர்களின் மூத்த மகன் நாகராஜ் நின்றிருந்தான். கருப்பாக, உயரமாக, ஒல்லியாக முகத்தில் கொஞ்சம் திருட்டுக்களையுடன் காணப்பட்டான். அவனைப் பார்த்ததுமே ஏட்டைய்யா “டேய் உன் மேல எதுனா கேஸு இருக்குதாடா?” என்றார். மொத்தக் குடும்பமும் அவசரமாக இல்லையென்று தலையாட்டியது. அவன் பக்கத்தில் அவன் தங்கை தலையைக் குனிந்துகொண்டு நின்றுகொண்டிருந்தாள். ஏட்டய்யா அவளைப் பார்த்ததுமே இது அடங்காததோ என்று தோன்றியது. ஆனால், அவர் அவளைப் பற்றி எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.

“உங்களுக்கு இரண்டு பசங்க தானா” என்றார் ஏட்டய்யா.

“இல்லைங்க சார். இன்னொரு பொண்ணு வூட்டுல இருக்குது” என்றார் குடும்பத்தலைவர்.

பிறகு திரும்பி இடதுபக்கத்திலிருந்த குடும்பத்தைப் பார்த்தார்.

அதுகொஞ்சம் வசதியான குடும்பம்போல தெரிந்தது. அந்தக் குடும்பத் தலைவருக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது என்று அவர் சட்டைப்பையில் வெளியே தெரியும்படி வைத்துக்கொண்டிருந்த முதல்வரின் படத்தைப் பார்த்தவுடனேயே ஏட்டய்யா புரிந்துகொண்டார். இருந்தாலும் அல்லக்கைகளும் இவ்வாறே சுற்றிக்கொண்டிருப்பதால் பேசவிட்டு முடிவெடுப்போம் என்று நினைத்துக்கொண்டார். அந்த குடும்பத்தலைவரின் அருகில் அவர் மனைவி ஆக்ரோஷமாக நின்றுகொண்டிருந்தாள். இருவருக்கும் அருகில் அவர்கள் இரண்டு மகன்களும் நின்றுகொண்டிருக்க சம்பவத்திற்கு நான் தான் காரணம் என்று வெளிப்படுத்தும் விதமாக இளையமகன் தலையைக் குனிந்து நின்றுகொண்டிருந்தான்.

இரண்டு குடும்பத்தின் சொந்தக்காரர்களும் வெளியே நின்றிருந்தனர். பெண்ணுடைய அண்ணனான நாகராஜின் நண்பர்களும் மறைவாக நின்றுகொண்டிருக்க, பையனின் நண்பர்கள் ஒருவர்கூட வரவில்லை.

ஏட்டய்யா பெண்ணின் குடும்பத்தைப் பார்த்து பொதுவாகக் கேட்டார். “இப்ப இன்னா பண்ணலாம்னு சொல்றீங்க? பையன் பேர்ல கேசு போட சொல்றீங்களா?

“கேசுலாம் வேணாம்ங்க” என்றார் பெண்ணின் தந்தை.

இந்த வார்த்தையைக் கேட்டவுடன் பையனின் அம்மாவின் முகம் தன் ஆக்ரோஷத்தைச் சற்று தனித்துக்கொண்டது.

ஏட்டைய்யாவிற்கு அவர் அப்படிச் சொன்னது சற்று ஆறுதலாக இருந்தாலும், அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல், “ஏன் வேணாம்?” என்றார்.

“இன்னா இருந்தாலும் அவங்க எங்க ஆளுங்க” என்று இழுத்தார் பெண்ணின் தந்தை.

“வேற இன்னாதான் பண்ணசொல்றீங்க?” என்று சலித்துக்கொண்டார்.

அன்று இரவு காவல் நிலையத்தில் மற்ற காவலர்களுக்கு நன்றாகப் பொழுது போய்க்கொண்டிருந்தது. ஏட்டய்யா எரிச்சலடையத் தொடங்கிவிட்டார் என்றால் மற்ற காவலர்கள் உற்சாகமடைந்துவிடுவார்கள். அந்த சமயத்தில் அவர் வாயில் என்னவெல்லாமோ வரும். ஆண் பெண் என்ற பாகுபாடெல்லாம் பார்க்கவேமாட்டார்.

“இனிமே என் பொண்ணு பின்னாடி வரமாட்டேன். என் வூட்டுப்பக்கம் வரமாட்டேன்னு எழுதிகுடுக்க சொல்லுங்க” என்றார் பெண்ணின் அம்மா.

ஏட்டய்யா பெருமூச்சுவிட்டார். விஷயம் சப்பென்று முடிந்ததில் அவருக்கும் கொஞ்சம் வருத்தம் தான். இருந்தாலும் இவர்களை அனுப்பிவிட்டால் போதும் என்று நினைத்தார். பையனிடம் “இன்னாப்பா எழுதிக் குடுக்கறீயா?” என்றார்.

அவன் அமைதியாக நின்றுகொண்டிருக்க, பையனின் அம்மா “நீங்க எழுதுங்க சார். அவன் கையெழுத்துப் போடுவான்” என்றாள்.

“நான் கையெழுத்துப் போட மாட்டேன். என்னால அவளப் பாக்காம இருக்க முடியாது” என்று தலையை குனிந்துகொண்டே சொன்னான் பையன்.

அனைவரும் அவனை அதிர்ச்சியாகப் பார்க்க, அவன் கன்னத்தில் பளார் என்று விட்டார் அவன் அப்பா

வெளியே

ரவி முதலியார்பேட்டையில் பைக் மெக்கானிக்காக இருக்கிறார். திருமணம் ஆகாதவர். இவர்கள் ஐவருக்கும் செலவு செய்பவர். அவர்களுக்கு ஒரு பிரச்சனையென்றால் முதலில் வந்து நிற்பவர்.

அறை விழுந்த சத்தம் வெளியே வரைக் கேட்டது. வண்டியிலேயே உட்கார்ந்திருந்த ரவி அப்படியே எழுந்து எட்டிப்பார்த்தார். அவர் உயரத்திற்கு அந்த ஐந்தடி மதிலைத் தாண்டி எதுவும் தெரியவில்லை. வண்டியை விட்டு இறங்கி அதை ஓரமாக நிறுத்திவிட்டு வந்து குழுவோடு இணைந்துகொண்டார்.

மற்ற இரண்டு குழுக்களும் சத்தம் கேட்டு உள்ளேப் போக முயல அங்கிருந்த கான்ஸ்டபிளால் விரட்டப்பட்டனர். “எதுக்கு இப்போ நாம இங்க நின்னுன்னு இருக்கோம்?” பெண் குடும்பத்தைச் சேர்ந்த குழுவிலிருந்த ஒரு பெண் சொன்னது அனைவருக்கும் கேட்டது.

காவல் நிலையத்தின் உள்ளே எட்டிப் பார்த்து ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.

ரவிக்கு இவர்கள் எதற்காகக் காவல் நிலையத்திற்கு வந்திருக்கிறார்கள் என்று தெரியும். ஆனால் முழுக்கதையும் தெரியாது. “இன்னாதாண்டா ஆச்சி?” என்று தங்கராஜைப் பார்த்துக் கேட்டார்.

“என்னயேன் கேக்கறீங்க?

“நீதான மச்சான் அந்த குடும்பத்துக்கு எல்லாம்” என்றான் ஷாகுல்.

“இப்ப நீ ஒதவாங்கினு தான் ஓடப்போற”

“டேய் எவனாவது சொல்லுங்கடா” என்று கடுப்பானார் ரவி.

“அவன் தான் அங்க இருந்தான். அவனக்கேளுங்க” என்று பாஸ்கரனைக் கைகாட்டினான் தங்கராஜ்.

“இந்த வாட்டியும் நீதான் பாத்தியா?” என்றார் ரவி.

“இந்தவாட்டியும்னா, அப்ப போனவாட்டி இன்னா நடந்துது?” என்றான் முருகன்.

“ஏன் உனுக்கு தெரியாதா?

“தெரியாதே”

“அப்பறமா அவன் கிட்டயே கேட்டுத் தெரிஞ்சிக்கோ, இப்ப இந்தக் கதைக்கு வாங்க”

பாஸ்கரன் அனைவரின் முகத்தையும் பார்த்தான். அவனுக்கு தங்கராஜின் முகத்தைப் பார்க்கப் பாவமாக இருந்தது. இருந்தாலும் ரவி கேட்கும்போது சொல்லாமல் இருக்க முடியாது. பாஸ்கரன் சொல்ல ஆரம்பித்தான்.

“அந்த பொண்ணு மட்டும் வூட்டுல தனியா இருந்துகிதுண்ணே, இவங்க எல்லாரும் எங்கயோ கோயிலுக்கு போய்கிறாங்க”

“இத்தயும் இயித்துன்னு போவ வேண்டியது தானே?” என்று குறுக்கிட்டான் முருகன்.

“ஏன், உனுக்கு இன்னா பிரச்சன?” என்று முறைத்தான் தங்கராஜ்.

“போயிருந்தா இந்த பிரச்சனையெல்லாம் வந்திருக்காதுல்ல? ஒருவேள அது கோயிலுக்கு போவக்கூடாதோ இன்னாமோ?” என்றான் முருகன்.

“அப்புடின்னா, ஒன்னும் நடந்திருக்காது தான?” என்று ஆர்வமாகக் கேட்டான் தங்கராஜ்.

ரவியைத் தவிர மற்றவர்கள் வாய்விட்டுச் சிரித்தார்கள். தங்கராஜிற்கு, தான் இதைச் சொல்லியிருக்க வேண்டாமோ என்று தோன்றியது.

“டேய் அவன சொல்ல வுடுங்கடா” என்று கடுப்பானார் ரவி.

பாஸ்கரன் தொடர்ந்தான்.

“நானும் நாகராஜும் தான் சைக்கிள்ல அவங்க வூட்டுக்கு போறோம். நான் வெளியத்தான் நின்னு இருந்தேன். நாகராஜ் சைக்கிள உள்ள ஏத்தி உட்டுன்னு இருக்கான், திடீர்னு இவன் பின்பக்கமா எகிறி குதிச்சி ஓடறான். மொதல்ல நாங்க எவனோ உள்ள பூந்து இந்த பொண்ண எதோ பண்ணிட்டான்னு தான் நெனச்சோம். ஆனா, இது பின்னாடியே போய் சட்டைய தூக்கி அவன் கிட்ட எறியுது. நாகராஜ் ஒரு செகண்ட் அப்பிடியே ஷாக்காயி நின்னுட்டான். எனக்கும் ஒன்னும் புரியல. அவன தொறத்தறதா வேணாமான்னு. அது ஒன்னும் தெரியாத மாதிரி ரூமுக்குள்ள போயி பூந்துகிச்சி.”

“செரிடா, மேட்டர உங்களுக்குள்ளயே முடிச்சிக்க வேண்டிது தான, இன்னாத்துக்கு பெருசாக்கனீங்க”

“அட ஏண்ணே! அவன் எகிறி குதிச்சி ஓடும்போது அவங்க வூட்டுல இருக்கறவங்க ஆட்டோல வந்து நிக்கறாங்க. இவன் சட்டைய கக்கத்துல வெச்சின்னு வெறும் ஒடம்புல ஊட்டுக்கு பின்னாடிலருந்து ஓடறதப்பாத்துட்டு எப்புடி சும்மா இருப்பாங்க?

“முடிச்சிட்டானாடா” என்று தயங்கியவாறே கேட்டார் ரவி.

பாஸ்கரன் எதுவும் பதில் சொல்லாமல் ஓரக்கண்ணால் தங்கராஜைப் பார்த்தான். பாஸ்கரன் பார்த்ததை அவன் கவனித்துவிட்டான்.

“இன்னொரு வாட்டி என்னப் பாத்தன்னு வெச்சிககயேன்” என்று பாஸ்கரனை எச்சரித்தான்.

ஆனால், அதைப் பார்த்த மற்றவர்களுக்கு சிரிப்புதான் வந்தது. பாஸ்கரன் தொடர்ந்தான், “பையன ஏற்கனவே நாகராஜிக்கு தெரியும் போல. குடும்பமா அவங்க ஊட்டு வாசல்ல போல காத்திட்டு, இப்ப ரெண்டு குடும்பமும் இங்க வந்திருக்குதுங்க”

கடிதம் எழுதி முடிக்கப்பட்டு பெண்ணின் அம்மா அதைப் படித்துக்கொண்டிருந்தாள். அவளுக்குத் திருப்தியாக இருந்தது. அதை ஏட்டய்யாவிடம் கொடுத்தாள். அவர் அதை வாங்கி பிள்ளை வீட்டாரிடம் கொடுத்தார். பையனின் அப்பா அதை வாங்கிப் படித்துவிட்டுக் கையெழுத்துப் போட்டார். பிறகு தன் பையனிடம் அதை நீட்டினார். அவன் அதை வாங்கவேயில்லை. அவர் அவனை அடிக்க மீண்டும் கையை ஓங்க, “சும்மா, சும்மா என் புள்ள மேல கைய வெக்காதீங்க” என்று கத்தினாள் பையனின் அம்மா.

“டேய் வாங்கி கையெழுத்துப்போட்டு குடுத்துட்டு வாடா, ஏதோ ஊர்ல இல்லாத ரதிய பெத்துவெச்சிகிறாங்க”

பெண்ணின் அம்மா ஏதோ சொல்ல வாயெடுக்க அவள் கணவர் தடுத்ததால் அமைதியானாள்.

அனைத்துப் பிரச்சனையும் முடிந்து மெல்ல காவல் நிலையத்தைவிட்டு வெளியே வந்தனர். பையன் திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்தான். அவள் கண்களும் அவன் மேலேயே இருந்தது. சுற்றியிருந்த அனைவரும் இதைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“இப்ப எங்க மொத ராத்திரிக்கி இட்டுன்னு போறாங்களா?” என்றான் ஷாகுல்.

யாரும் பதில் சொல்லவில்லை. நாகராஜ் மட்டும் இவர்களை நோக்கி வந்தான். ரவிதான் முதலில் அவனிடம் கேட்டார். “இன்னாட ஆச்சி?”.

“இனிமே எங்கூட்டுப் பக்கம் வரமாட்டான்னு எழுதி வாங்கின்னு அனுப்பிட்டாங்க”

“அவ்ளோ தானா. உங்கப்பா சும்மாவா வுட்டாரு”

“அவங்களும் எங்காளுங்கதானாம். அதான் எங்கப்பா சைலண்ட் ஆயிட்டாரு”

அதைக்கேட்டதும் ரவி அதிர்ச்சியடைந்தார். “ஏன்டா, ஒருத்தன் எதாவது பண்ணிருந்தாலும் கூட ஜாதி பாத்து தான் நியாயம் பேசுவீங்களாடா?” என்று கோபமாகக் கேட்டார்.

நாகராஜ் அமைதியாக இருந்தான்.

“போங்கடா, போயி படுத்துத் தூங்குங்க” என்று தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். மற்றவர்கள் அனைவரும் நாகராஜுடன் இணைந்துகொண்டார். அவனுடைய அம்மா, அப்பா மற்றும் தங்கை மூவரும் ஆட்டோவில் வீட்டிற்குப் புறப்பட்டனர்.

மற்றவர்கள் அனைவரும் நாகராஜிடம் மாறி மாறி கேள்விகளாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். அவன் சில கேள்விகளுக்குப் பதில் சொன்னான். சிலவற்றிற்கு மழுப்பினான். பாஸ்கரன் மட்டும் எதுவும் பேசவேயில்லை. பேசிக்கொண்டே அனைவரும் நாகராஜின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். பிரச்சனையானதும் அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்தவர்கள் தங்கள் தூக்கத்தைச் சற்று ஒத்திவைத்திருந்தனர். பெரும்பாலான வீடுகளில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. பல ஜன்னல்களில் தலைகள் தெரிந்தன. வழக்கம் போல நாகராஜின் வீட்டின் வாசலில் வந்து வட்டமடித்து நின்றுகொண்டனர். நேரம் அதிகமாகிவிட்டது என்று அனைவரும் உணர்ந்தனர். ஆனால், யாருக்கும் வீட்டிற்குப் போக மனமில்லை. அமைதியாகவே நின்றுகொண்டிருந்தனர். நாகராஜ் மட்டும் உள்ளே சென்றான். வீட்டின் உள்ளே மயான அமைதி. கத்தியோ அழுதோ அக்கம்பக்கத்தில் யாருக்கும் எதுவும் தெரிந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர்.

வெளியே நின்றுகொண்டிருந்த நண்பர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் புறப்படலாமென்று முடிவெடுத்த சமயம் தெருமுனையில் அந்தப் பையன் வருவதை தங்கராஜ் பார்த்தான்.

“அது அவன் தானடா?”

தங்கராஜ் சொன்னதும் மற்ற அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.

“ஆமா அவன்தான்” என்றான் முருகன்.

அனைவரும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தனர். அவன் மெல்லத் தயங்கித் தயங்கி வந்தான். வீட்டை நெருங்கியபோது தலையை குனிந்துகொண்டான். வாசலில் நின்றுகொண்டிருந்த நண்பர்கள் அனைவரும் அவனையே இமைக்காமல் முறைத்துக்கொண்டிருந்தனர். அவன் அவர்களைப் பார்க்காமல் மெல்ல வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தான். வீட்டின் உள்ளேயிருந்து இவர்களைக் கவனித்த நாகராஜின் அம்மா, ‘இவர்கள் எதை இப்படிப் பார்க்கிறார்கள்’ என்று ஆச்சரியப்பட்டு அவளும் வெளியே வந்து பார்க்க, அந்தப் பையன் வந்துகொண்டிருந்தான். அவளுக்குக் கோபம் தலைக்கேறியது. இருந்தாலும் அமைதியாக நின்றுகொண்டிருந்தாள். அவன் வாசலில் நின்றுகொண்டிருந்த நண்பர்களைக் கடந்து நிலைப்படியின் அருகில் நின்றுகொண்டிருந்தவளின் முன்னால் வந்து நின்றான். ஒருகணம் அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அதற்குள் வீட்டின் உள்ளேயிருந்து நாகராஜ், அவன் அப்பா மற்றும் இரண்டு தங்கைகளும் வந்துவிட்டனர். ஏதோ பெரிதாக ஒன்று நடக்கப்போகிறதென்று அனைவருக்கும் உள்ளுக்குள் அடித்துக்கொண்டது.  அவன் நிமிர்ந்து தனது காதலியைப் பார்த்தான். அவளும் சுற்றியிருந்தவர்களைப் பற்றிக் கவலைப் படாமல் அவனைப் பார்த்து கண்களாலேயே என்னவென்று கேட்டாள். அதற்குள் சுதாரித்துக்கொண்ட பெண்ணின் அப்பா. “இன்னாப்பா? இப்பதானே எழுதிகுடுத்த. அதுக்குள்ள இங்க வந்து நிக்கற? கேஸ் குடுக்கலன்னவுடனே தைரியம் வந்துடுச்சா?

“அது இல்ல அங்கிள்” என்று அழுத்திச் சொன்னான். அவனுடைய ‘அங்கிள்’ மற்றவர்களுக்கு எரிச்சலேற்படுத்தியது. இருந்தாலும் என்ன சொல்ல வருகிறான் என்று அமைதியாக இருந்தனர். “அவசரத்துல போகும்போது என் செருப்ப பின்னாடி விட்டுட்டேன். புதுசெருப்பு. காஸ்ட்லி. அதான் எடுத்துட்டு போலாம்னு வந்தேன்.”

அனைவருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அமைதியாகவே நின்றுகொண்டிருந்தனர். அதற்குள் அவன் செருப்பை அவன் காதலி எடுத்துக் கொண்டுவந்து கொடுத்தாள். அவன் அதை வாங்கிக்கொண்டு “தேங்க்ஸ்” என்று தலையாட்டினான். அவளும் பதிலுக்குத் தலையாட்டினான். அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று யாருக்குமே புரியவில்லை. அனைவரும் ஒருவித அதிர்ச்சியிலிருந்தனர்.

தங்கராஜும் பாஸ்கரனும் நடந்து சென்றுகொண்டிருந்தனர். மற்றவர்கள் அவரவர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். நாகராஜின் மொத்த குடும்பமும் தூங்கச் சென்றுவிட்டது.

தங்கராஜால் அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை.

“நீயேண்டா இவ்ளோ ஷாக்கா இருக்கற?

“அது எப்புடிடா அதுகூட என்ன லிங்க் பண்ணி பேசறீங்க?

“நீ இப்புடியிருந்த அப்புடித்தான் தோணூம்.”

“அதுக்கு. நமக்கு சின்ன வயசுலருந்து தெரிஞ்ச பொண்ணு. இப்புடி பண்ணுச்சினா ஷாக்காத்தான் இருக்கும். அதுக்குன்னு நான் அத லவ் பன்றேன்னு ஆயிடுமா”

“செரிவுடு. எதுக்கு அத்தப் பத்தியே பேசின்னு இருக்கற? நான் வேணும்னா நாளைக்கி பசங்க கிட்டலாம் தங்கராஜ் அத்த லவ் பண்ணலாயாம். அது அவனுக்கு தங்கச்சி மாதிரியான்னு சொல்லிடறன்”

தங்கராஜ் திரும்பி பாஸ்கரனை முறைத்தான். பாஸ்கரனின் மனதில் வேறு ஒரு கேள்வி இருந்தது.

“மச்சான்”

“இன்னாடா?”

“ஆனாலும் அவனுக்கு செம தைரியம்டா. எவ்ளோ தைரியம் இருந்த இவ்ளோ பிரச்சனை ஆனதுக்கு அப்பறம் அந்த பொண்ணு வூட்டுக்கு வருவான். நம்ப கிட்ட காசு இருக்குது. இவனுங்கலால எதுவும் செய்ய முடியாதுன்னு நெனச்சிருப்பானோ?

“காசு மட்டும் காரணம் இல்லடா”

“வேற இன்னா?

“நாகராஜ் ஸ்டேசன்லருந்து வெளிய வந்ததும் ரவியண்ணன் ஏன்டா கேஸ் போடலன்னு கேட்டாருல்ல?

“ஆமா”

“அதுக்கு நாகராஜ் ஒரு காரணம் சொன்னான்ல, அதுதான் இவன் தைரியத்துக்கும் காரணம்”

“இன்னாடா சொன்னான்?

“நல்லா யோசிச்சிப்பாரு”

பாஸ்கரன் யோசித்தவாறே தனது வீட்டை நோக்கி நடந்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.