- ஓவியத் திரைச்சீலை
அது சொர்க்கத்திலிருந்து பூமிக்குத் தொங்குகிறது.
அதில் மரங்கள் உள்ளன,
நகரங்களும் நதிகளும் பன்றிக்குட்டிகளும் நிலவுகளும் உள்ளன.
ஒரு மூலையில், முன்னேறும் குதிரைப்படையின் மீது பனி பொழிகிறது.
இன்னொரு மூலையில் பெண்ணொருத்தி நெல் நடவு செய்து கொண்டிருக்கிறாள்.
தவிரவும் நீங்கள் காணலாம்:
ஒரு கோழியை நரி கவ்விக்கொண்டுச் செல்வதை,
திருமண இரவில் நிர்வாணமாகயிருக்கும் ஒரு ஜோடியை,
ஒரு புகைமூட்டக் கும்பலினை,
தீய விழிகளுடைய ஒரு பெண் பால் நிறைந்த வாளியினுள் துப்புவதை.
திரைச் சீலைக்கு பின்னால் என்ன இருக்கிறது?
— வெளி, ஏராளமான காலியிடம் .
தவிரவும் இப்போது யார் பேசிக்கொண்டிருக்கிறார்?
—தன் தலைக்கு மேல் தொப்பி வைத்து உறங்கும் ஒரு மனிதன்.
அவன் எழுந்ததும் என்ன நடக்கும்?
—முடித்திருத்தும் கடைக்கு செல்வான்.
அவர்கள் சவரம் செய்வார்கள்
அவனுடைய தாடியை, மூக்கை, செவிகளை, தலைமுடியை,
எல்லோரையும் போல அவனைத் தோற்றமளிக்கச் செய்ய..
- என் வலது கை விரல்களுக்கான கட்டுக்கதை
1
பெருவிரல், குதிரையின் ஆடும் பல்.
அவனுடைய கோழிகளுக்கான சேவல்.
பிசாசின் கொம்பு.
நான் பிறந்த உடன் என் சதையுடன் அவர்கள் ஒட்டிய பருத்த புழு.
அவனை கீழே குனிய வைத்து,
எலும்புகள் சிணுங்கும் வரை பாதியாக வளைக்க,
நான்கு பேர் அவசியப்படுகிறார்கள்.
அவனை துண்டித்து விடுங்கள்.
அவன் தன்னை கவனித்துக் கொள்வான்,
பூமியில் வேரூன்றியோ அல்லது ஓநாய்களுடன் வேட்டைக்குச் சென்றோ..
2
இரண்டாமவன் வழியைச் சுட்டிக்காட்டுவான்.
உண்மையான வழியை.
பாதையோ பூமியையும் நிலவையும் மற்றும் சில நட்சத்திரங்களையும் கடந்து செல்கிறது.
பாருங்கள், அவன் மேன்மேலும் சுட்டிக்காட்டுவதை.
அவன் தன்னைத்தானே சுட்டிக்காட்டுகிறான்.
3
மூன்றாமவனுக்கு முதுகு வலி.
விறைப்புடன் இருப்பதால், இந்த வாழ்க்கைக்கு இன்னும் பொருந்தாதவனாக இருக்கிறான்.
பிறவியிலேயே முதியவன்.
அவன் வசமிருந்து தொலைந்துபோன ஏதோவொன்று இருக்கிறது,
அதை என் கைகளுக்குள் தேடுகிறான்,
நாய் தன் கூர்பற்களுடன் தெள்ளுப்பூச்சியைப் பார்ப்பது போல.
4
நான்காமவன் ஒரு மர்மம்.
சிலநேரங்களில் என் கை மேசையில் ஒய்வெடுக்கும்போது
அவன் தானாகவே குதித்துச் சென்றுவிடுவான்
யாரோ ஒருவர் அவனுடைய பெயரைச் சொல்லி அழைத்தார் என்பது போல.
ஒவ்வொரு எலும்புக்கும் விரல்களுக்கும் பிறகு,
நான் அவனிடம் வருகிறேன், கவலையுடன்.
5
ஐந்தாமவனுக்குள் ஏதோ அசைந்து கொண்டிருக்கிறது,
பிறந்ததிலிருந்து தொடர்ந்து ஏதோவொன்று அசைந்து கொண்டிருக்கிறது.
பலகீனமான மற்றும் பணிவான அவனுடைய தொடுகை கனிவானது.
அது கண்ணீரின் எடையுள்ளது.
அது கண்களிலிருந்து தூசியை எடுக்கக்கூடியது..
- இந்நகருக்கு ஒன்றுமில்லை
சிறிய நதி பிறகு ஒரு பாலம்,
அப்புறம் நற்சீரான புல்வெளிகளுடன்
வெளுத்த இல்லங்களின் வரிசை.
விளிம்பின் வரம்பிலிருந்து,
ஒரு கொழுத்த நொண்டி நாய்,
மெல்ல தத்திச் செல்கின்றது,
தன் வாயில் ஒரு காகிதத்தை சுமந்தபடி.
- ஒரு காகத்தைப் போல கடந்து செல்லுதல்
இலைகளற்ற இந்த மரங்களுக்காக பேசுவதற்கு
உனக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறாதா?
துணியுலர்த்தும் கொடியிலிருக்கும்
ஒரு ஆணின் சட்டையையும் ஒரு பெண்ணின் இரவு உடையையும்
காற்று என்ன செய்ய நினைத்திருக்கிறது என்று உன்னால் விளக்க முடியுமா?
கருத்த மேகங்களை குறித்து உனக்கு என்னத் தெரியும்?
உதிர்ந்த இலைகளால் நிறைந்த குளங்களைக் குறித்து?
சாலையோரச் சந்துகளில் துருப்பிடித்து நிற்கும் பழைய ரக கார்களை குறித்து?
சாக்கடையில் கிடக்கும் பியர் குப்பியைப் பார்க்க யார் உன்னை அனுமதித்தது?
சாலையோரத்தில் கிடைக்கும் வெண்ணிறச் சிலுவையை?
விதவையின் வீட்டு முற்றத்தில் இருக்கும் ஊஞ்சலை?
உன்னை நீயே கேட்டுக்கொள்
சொற்கள் போதுமானவையா
இல்லை மரம் விட்டு மரம் சிறகடித்து பறக்கும் ஒரு காகத்தைப் போல
நீ கடந்து செல்வது மேலானதா?
- அச்சம்
ஏனென்றே தெரியாதவாறு
அச்சம் மனிதனிடமிருந்து மனிதனுக்குப் பரவுகிறது,
ஒரு இலை தன் விதிர்ப்பை மற்றொன்றிற்கு கைமாற்றுவதைப்போல.
திடீரென மொத்த மரமும் அதிர்கிறது,
ஆனால் அங்கே காற்றின் எந்த அறிகுறியுமில்லை.
- நித்தியத்துவத்தின் அனாதைகள்
ஒரு இரவில் நீயும் நானும் நடந்து கொண்டிருந்தோம்.
மிகப் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது நிலவு.
அப்புறம் முகில்கள் வந்து அதை மறைக்கப் பார்த்தது.
அதனால் வெறுங்கால்களில் மணலினை உணரும் வரைக்கும்
நம் பாதையில் கண்மூடித்தனமாக செல்ல வேண்டியிருந்தது
பிறகு அலையடிப்பதை செவியுற்றோம்.
நீ என்னிடம் சொன்னது நினைவிருக்கிறதா?
“இந்த தருணத்திற்கு வெளியிலிருக்கும் அனைத்துமே பொய்கள்தான்”
நாம் இருட்டில் உடைகளை கழற்றிக் கொண்டிருந்தோம்
சரியாக நீரின் விளிம்பில்
என் மணிக்கட்டிலிருந்து கைக்கடிகாரத்தை நழுவவிட்டபோது,
உனக்கு தெரியாமலும்
பதிலுக்கு எதையும் சொல்லிக்கொள்ளாமலும்
நான் அதை எடுத்து கடலில் தூக்கி எறிந்தேன்.
-சார்லஸ் சிமிக்
தமிழில் : வே.நி.சூர்யா
ஆசிரியரைக் குறித்து:
சார்லஸ் சிமிக் (1938-)
செர்பியாவில் பிறந்தவர். கவிஞர். மொழிபெயர்ப்பாளர். இரண்டாம் உலகப் போரினூடாக தன் பால்யத்தை கழித்தவர். பின்னாளில் அமெரிக்காவிற்கு குடியேறியவர். Hotel Insominia, The world doesn’t end என பத்திற்கும் மேற்பட்ட கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன. (சமீபத்தில் Come Closer and Listen (2019) எனும் கவிதை தொகுப்பு வெளிவந்திருக்கிறது) ஸ்டாலினும் ஹிட்லருமே என்னுடைய பயண முகவர்கள் எனச் சொல்லும் சிமிக்கின் கவிதையுலகம், போரில் சிதைந்த பெல்கிரேட் நகரின் இருண்ட மற்றும் கேலிக்குரிய பக்கங்களாலும் நவீன மனிதன் எதிர்கொள்ளும் ஆன்மிக வறுமையின் காரண காரியங்களினாலும் ஒரு வேடிக்கையான சிறுவனின் பேய்க்கனவுகளாலும் ஆனது. நோவிகா டாடிச் , வாஸ்கோ போப்பா போன்ற செர்பிய கவிஞர்களின் கவிதைகளை மொழிபெயர்த்து தொகுப்பாக வெளியிட்டுள்ளார். மேலும் Horse has six legs எனும் தலைப்பில் சமகால செர்பிய கவிதைகளின் திரட்டு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இங்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கவிதைகள் New and Selected Poems: 1962-2012 நூலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.
சிறப்பான கவிதைகள் வாழ்த்துக்கள் சூர்யா
சார்லஸ்சிமிக்கவிதைகள்
காலகட்ட கவிதைகள்
ஐந்து விரல்கள் ஒவ்வொரு விரல்களுக்கான கவிதைஎன்று எடுத்துக்கொள்ளாமல் மனிதரின் ஐந்துவகையாக
எடுத்துக் கொள்ள வேண்டும்.