குறுங்கதைகள்-அரிசங்கர்

சொல் கொன்றது

சனி, ஞாயிறு அம்மாவுடன் இருந்துவிட்டு திங்கட்கிழமை விடியவே வந்து தனது ஆயாவின் வீட்டுக் கதவைத் தட்டினான் துரை. வழக்கமாக விடிவதற்கு முன்பாக எழுந்துவிடும் ஆயாவுக்கு இன்று என்ன கேடு என்று சலித்துக்கொண்டே கதவை இன்னும் வேகமாகத் தட்டினான். திறக்கப்படாததால் பின்பக்கம் சென்று பார்த்தான். கதவு திறந்திருந்தது. உள்ளே சென்றவன் சிறிது நேரத்திற்கெல்லாம் முன் பக்கக் கதவைத் திறந்துகொண்டு வேகமாக எதிர் வீட்டிற்கு ஓடினான்.

திங்கட்கிழமை காலைப் பொழுது. மொத்தத் தெருவுமே அதிர்ச்சியிலிருந்தது. ஆண்கள் யாருக்கும் வேலைக்குப் போக வேண்டுமென்ற எண்ணமே எழவில்லை. பெண்கள் யாரும் வாசல் கூட்டவில்லை, நீர் தெளிக்கவில்லை. குழந்தைகளை எழுப்பி பள்ளிக்கு அனுப்ப முயலவில்லை. தெருவின் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் தெருவின் மத்தியிலிருந்த மஞ்சள் பெயிண்ட் அடித்த துரைசாமியின் வீட்டின் முன் கூடியிருந்தனர். துரைசாமி அந்த வீட்டில் குடியிருக்கவில்லை. அவர் தன் குடும்பத்துடன் வேறு ஒரு வீட்டில் இருந்தார். இந்த வீட்டில் அவருடைய அம்மாவும் சிறிது நாட்கள் முன்பு வரை மூத்த மகன் குமாரும் இருந்தனர். அவன் படிப்புக்காக வெளியூர் சென்றுவிடத் தனது இரண்டாவது மகன் துரையை அம்மாவுக்குத் துணையாக விட்டிருந்தார்.

தகவல் காட்டுத்தீயானது. கூட்டம் கூடிக்கொண்டேயிருந்தது.

“இன்னா வயசு இருக்கும் கிழவிக்கு” என்றார் கூட்டத்தில் ஒருவர்.

“எப்புடியும் எண்பதுக்கு மேல இருக்கும்”

“இந்த வயசுல தூக்கு மாட்டிக்கிற அளவுக்கு இன்னா அதுக்கு”

வீட்டைச் சுற்றி பேச்சுக்கள் ஈசல்களைப் போல் பறந்துகொண்டிருந்தது.

துரைசாமி தனது மனைவி அன்பரசியோடு வந்தார். சொந்தங்கள் வந்தது. போலிஸ் வந்தது. ஆனால், எண்பது வயது கிழவி தூக்குப்போட்டுச் சாகும் அளவிற்கு என்ன இருக்குமென்று யாருக்கும் பிடிபடவில்லை. எல்லாம் முடிந்தது. ஆளுக்கொரு பதிலை உருவாக்கினர். சிலருக்கு அதில் திருப்தி கிடைத்தது. சிலருக்கு இன்னும் உருத்தல் இருந்தது.

துரைசாமியும் அவர் மனைவியும் தனியாக இருந்தனர். அவர் மனைவியால் அங்கே இருக்கவே முடியவில்லை. “வூட்டுக்கு போலாம்” என்றாள்.

“காரியம் முடியற வரைக்கும் இங்கதான் இருக்கனுமாம்” என்றார் துரைசாமி.

யாரோ வெளியே இருந்து அழைக்க, துரைசாமி எழுந்து வெளியே சென்றார். அன்பரசி மட்டும் தனியாக இருந்தாள்.

திடீரென்று அவளுக்கு ஏதோ ஆகியது. எதுவும் புரியவில்லை. ஒருவேளை தனக்குத்தான் தலைச் சுற்றுகிறதோ என்று நினைத்தாள். படபடப்பாக இருந்தது. நாக்கு வறண்டது. எழுந்து வெளியே ஓட வேண்டும் போல் இருந்தது. எழ முடியவில்லை. கழுத்தை மட்டும் மெல்லத் திரும்பினாள். அவளது மாமியார் எதிரே உட்கார்ந்து கீரை ஆய்ந்துகொண்டிருந்தாள். அவள் பயந்து கத்த எத்தனித்தாள். முடியவில்லை. தனது மாமியாரையே பார்த்துக்கொண்டிருந்தாள். வெளியே ஏதோ சத்தம் கேட்க மாமியார் நிமிர்ந்து பார்க்க அன்பரசியும் திரும்பினாள். வெளியேயிருந்து அன்பரசிதான் வந்துகொண்டிருந்தாள். இரண்டு நாட்களுக்கு முன்பான அன்பரசி. அன்று நடந்தது இப்போது அவளுக்கே காட்சிகளாக விரிந்தது.

“வாம்மா” என்றாள் கிழவி.

அவள் எதுவும் பேசவில்லை.

கிழவி சந்தேகமாக, “துரை அங்கதான வந்தான்” என்றாள்.

அன்பரசி ஆவேசமாக, “ஆமா அங்கதான் வந்தான். இனிமே இங்க வரமாட்டான். அத சொல்லத்தான் வந்தேன். கல்யாண ஆன புதுசுல என் புருசன என் கிட்டயே உடாம வெச்சிருந்த, அடுத்தது என் மொதப் புள்ள, இப்ப என் ரெண்டாது புள்ளயா? ஏன் உன்னால ஆம்பல இல்லாம இருக்க முடியாதா? இந்த வயசுலயும் அவ்ளோ அரிப்பிருந்தா எவனயாவது வெச்சிக்க வேண்டியது தான.” என்று சொல்லிவிட்டு வேகமாக வீட்டை விட்டி வெளியேறினாள். கிழவி நீண்ட நேரம் அசைவற்று உட்கார்ந்திருந்தாள். கண்கள் வறண்டு போயிருந்தன. உள்ளுக்குள் அழுகிறாள் என்று முகம் சொன்னது.

அன்பரசி பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவள் பேசிய வார்த்தைகள் உருக்கொண்டு எழுந்து ஒன்றோடு ஒன்றாகப் பிணைந்து ஒரு கயிறு போல் மாறி கிழவியின் முன்னால் விழுந்தது. கிழவி மெல்ல எழுந்தாள். நிற்க முடியவில்லை. மெல்லக் குனிந்து அந்தக் கயிற்றை எடுத்தாள். உத்திரத்தை பார்த்தாள். தன்னால் இதைச் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. மெல்ல ஒரு நாற்காலியைப் போட்டு ஏற முடியாமல் ஏறினால். அவளால் கயிரைக் கட்ட முடியவில்லை. குனிந்து கீழே பார்த்தாள். அன்பரசி கிழவியையே பார்த்துக்கொண்டிருந்தாள். “ஏம்மா மகராசி, இதக் கொஞ்சம் கட்டிக்குடேன்” என்றாள் கிழவி.

கடைசி விருந்து

புத்தகக் கடை வாசலில் வட்டமாகப் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றில் உட்கார்ந்திருந்தேன். உடன் சில எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் இருந்தனர். ஏதேதோ பேச்சுக்கள், கிசுகிசுக்கள். எதுவும் என் மண்டைக்கள் ஏறவில்லை. கேரளா உணவகங்களில் பிரியாணிக்குத் தொட்டுக்கொள்ள வைக்கும் ஊறுகாயைப் போல சம்பந்தமேயில்லாமல் நான் அங்கு இருப்பதுபோல் தோன்றியது. எதிரில் பேசிக்கொண்டிருந்த ஒரு பதிப்பாளர் சட்டென எதிரே சாலையைக் கவனிக்கும்படி ரகசியமாகச் சைகை செய்தார். உடனிருந்த அனைவரும் ஒரே சமயத்தில் ரகசியமாகத் திரும்பிப் பார்த்தோம். எதிரே நான் மிகவும் மதிக்கும் ஒரு கவிஞர் முழுப்போதையில் தள்ளாடியபடி வந்துகொண்டிருந்தார். தன்னை பார்க்கிறார்கள் என்று தெரிந்ததும் அவர் முகத்தில் தோன்றிய சிரிப்பு அவ்வளவு அழகாக இருந்தது. சிரமப்பட்டு சாலையைக் கடந்து வந்த அவர் எனக்கு நேரெதிராக இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார். அதுவரை ஆர்வமாகப் பேசிக்கொண்டிருந்த அனைவரின் முகத்திலும் ஒரு சின்ன சங்கடமும் அமைதியும் குடிகொண்டது. அவர் ஒவ்வொரு முகமாகப் பார்த்துப் புன்னகைத்தார். பதிலுக்கு யாரும் புன்னகைத்தாக என் நினைவில் இல்லை. நானும் கூட அரை மனதாகவே புன்னகைத்தேன். அது அமைதியாக முகத்தைத் திருப்பிக்கொள்வதைவிடக் கொடூரமானது என்று பின்னால் எனக்குத் தோன்றியது.

என்னுடைய அந்தப் பரிபூரணமற்ற புன்னகையை அவர் ஏற்றுக்கொண்டார். அதற்கெல்லாம் ஒரு மனம் வேண்டும். அது அவருக்கு இருந்தது. அதை அவரின் கவிதைகளிலும் அவர் எழுதிய ஒரே நாவல்களிலும் கண்டிருக்கிறேன். துரதிருஷ்டவசமாக ஒரு சிலரே தங்கள் எழுத்தையும் வாழ்க்கையையும் ஒன்றுபோல் வைத்திருப்பார்கள். அதில் அவரும் ஒருவர். சிரித்துக்கொண்டிருந்தவர் சட்டென என்னிடம் ஒரு கட்டிங் கேட்டார். அவருக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த பதிப்பாளர் ஒருவர் வேண்டாமென்பது போல் தலையாட்டினார். நானும் பணம் இல்லை என்று சைகை செய்தேன். மீண்டும் அவர் ஒரு சிகரெட்டாவது என்பது போல் சைகையால் கேட்க, பதிப்பாளர் இப்போதும் அதே மாதிரி வேண்டாமென்றார். நானும் என்னிடம் சுத்தமாக இல்லையென்று பொய் சொன்னேன். அவர் முகத்தில் அந்த சிரிப்பு மாறவேயில்லை. எனக்கும் அவருக்கும் பெரிதாக எந்தவித நட்போ பழக்கவழக்கமோ இல்லை. சிலமுறை பார்த்திருக்கிறேன். அவர் என்னைக் கவனித்திருக்கிற, நான் யாரென்று தெரியுமா என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை. எங்கே திரும்பி தன்னிடம் கேட்டுவிடப் போகிறான் என்று சுற்றியிருந்தவர்கள் நட்சத்திரத்தை என்ன தொடங்கியிருந்தனர். அவர் அதைப் பார்த்தும் அன்பொழுகச் சிரித்தார். மெல்ல எழுந்தார் என்னிடம் மட்டும் ஒரு வணக்கம் வைத்துவிட்டு மெல்ல நடந்து மறைந்தார். தான் கேட்டது கிடைக்கவில்லை என்ற ஏமாற்றமோ இத்தனைப்பேர் முன்னால் தனக்கு நேர்ந்தது அவமானம் என்று என்னமோ அவர் உடல்மொழியில் தெரியவில்லை. அவர் போனது பதிப்பாளர், “அவர் நல்லதுக்குத்தான் சொன்னேன்” என்றார். நான் எதுவும் சொல்லவில்லை. ஆனால், அந்த சிரிப்பு என்னை இம்சித்துக்கொண்டேயிருந்தது.

அன்றிலிருந்து சில மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் காலை அவர் இறந்துவிட்ட செய்தியோடு விடிந்தது.சட்டென எனக்கு அந்த சிரிப்பு மீண்டும் நினைவுகளின் மேடையில் ஏறிக்கொண்டு ஆட்த் தொடங்கியது. எப்படியும் சாகத்தான் போகிறார் என்று தெரிந்திருந்தால் குறைந்தபட்சம் ஒரு சிகரெட்டாவது வாங்கி கொடுத்திருக்கலாம். அதுவே கூட அவருக்கு நான் கொடுத்த கடைசி விருந்தாக அமைந்திருக்கும். அல்லது அந்த சிகரெட் காலத்தால் அழிக்க முடியாத ஒரு கவிதையாகக் கூட மாறியிருக்கலாம். இல்லையென்றால் அவர் என்னை முறைத்துவிட்டோ திட்டிவிட்டோ சென்றிருக்கலாம். இனி காலம் முழுக்க அந்த சிரிப்பை எப்படிச் சுமப்பேன் என்று தெரியவில்லை.

இருவர்

அவன் அறையின் மத்தியில் உட்கார்ந்திருந்தான். சுற்றியிருந்த எந்த ஒன்றின் மீதும் அவனது கவனமில்லை. அவன் எதிரியிலிருந்த இருக்கையையே பார்த்துக்கொண்டிருந்தான். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் யாருக்காகவோ காத்திருந்தான். அவனிடம் காத்திருத்தலின் பதற்றமோ எரிச்சலோ துளியும் இல்லை. அவன் பிறந்ததே அதற்காகத்தான் என்பது போலவும், காத்திருத்தலே இவ்வாழ்வின் உன்னதம் என்பது போலவும் அவன் பொறுமையாகக் காத்திருந்தான். அவள் எப்போது வருவாள் அல்லது எப்போது தோன்றுவாள் என்று அவனுக்குத் தெரியவில்லை. நிச்சயம் தோன்றுவாள் என்ற நம்பிக்கை அவனிடம் இருந்தது. அவள் தோன்றியவுடன் என்ன பேச வேண்டுமென்று யோசித்தான். அவளைச் சிரிக்க வைக்க வேண்டுமா, அழ வைக்க வேண்டுமா அல்லது எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டுமா. அமைதியாக இருந்தால்? அவள் தன்னுடன் பேசுவாளா? ஆயிரம் குழப்பங்கள் அவனுள். அதை எதுவுமே முகத்தில் காட்டிக்கொள்ளாமல் காற்று இல்லாமல் அசைவற்று நிற்கும் ஒரு செடியைப் போல இருந்தான். அவன் முகம் சுவரை நோக்கி ஒரு மலர் போல அமைதியாகச் சாய்ந்திருந்தது.

தான் ஏன் இதுவரை அவளிடம் எதுவும் பேசவில்லை என்று அவனுக்குத் திடீரென்று தோன்றியது. அவள் தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பாள் என்ற கற்பனைக்குள் அவன் சென்றான். அவனுள் தோன்றிய எந்தவொன்றும் திருப்தியளிப்பதாக இல்லை. சட்டென்று அவன் தன்னைப் பற்றி நினைக்கத் தொடங்கினான். தன்னைப் பற்றி அவனால், எதுவும் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. அவனுக்கு அதைப் பற்றிய கவலைகள் எதுவுமில்லை. அவனுக்கு அவள் போதும். அவள் நினைவும் அருகாமையும் போதும். அவளுடன் இருப்பே தன்னுடைய இருப்பு என்பதை அவன் நம்பினான்.

திடீரென்று மின் விசிறி சுழல ஆரம்பித்தது. மின் விளக்கு எரிய ஆரம்பித்தது. ஏதேதோ சப்தங்கள், வாசனைகள். இவையனைத்தும் அவள் தோன்றுவதற்கான அறிகுறிகள். அவன் பரபரப்படைந்தான். எப்போது வேண்டுமானாலும் அவள் தன் கண்முன் தோன்றலாம். அவள் இன்று எப்படி இருப்பாள் என்று கற்பனை செய்ய ஆரம்பித்தான். அவள் எப்படித் தோன்றினாலும் அழகாகத்தான் இருப்பாள் என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். காலத்தை உணர முடியாத வெளியில் காத்திருத்தலின் வேதனை என்று எதுவுமே இல்லை. கோபமோ சலிப்போ காலத்தைச் சார்ந்தது. காலமற்றவனுக்கு எதுவுமே இல்லை. ஒருவேளை எதாவது இருக்கவும் செய்யலாம். அதுதானே தன்னை இத்தனை நேரம் ஏதோ செய்கிறது.

அவள் சட்டென அவன் முன் தோன்றினால். அவனுக்கு எதிரில் உட்கார்ந்திருந்தாள். அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். முன்பெல்லாம் இவனைப் பார்த்து அச்சப்படுபவள், இப்போதெல்லாம் இயல்பாக இருக்கிறாள். எவ்வளவு நேரமாக இவள் தன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்று அவனுக்குத் தெரியவில்லை. அவளைப் பார்த்துச் சிரிக்க முயற்சித்தான். அவள் அவனைப் பார்த்துச் சிரித்தபோதுதான் தான் சிரித்துவிட்டோம் என்பதை உணர்ந்தான். அவன் மெல்ல நெருங்கியபோது அவளிடம் ஒரு மாற்றம் தெரிந்தது. அவன் சட்டென விலகினான்.

எதிரில் இருப்பது உண்மையில்லை. அது ஒரு மாயத் தோற்றம், ஒரு மனநோய் என மனம் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாலும் தனிமை அந்த எண்ணத்தையெல்லாம் துரத்திவிடுகிறது. நிஜமோ பொய்யோ, பேச, நாம் பேசுவதை விரும்பி கேட்க ஓர் ஆள் கிடைப்பது வரம். பேசு என இருவரது மனதும் கூச்சலிட்டது. ஆனால், இருவருமே பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தனர்.

அழைப்பு மணிச் சத்தம் கேட்டது. இருவருமே வாசற்கதவை நோக்கித் திரும்பினர். இருவரின் கண்களிலும் அச்சம்.

வெளியே கையில் உணவுப் பொட்டலங்களை வைத்துக்கொண்டு மீண்டும் அழைப்பு மணியை அழுத்தலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் உள்ளேயிருந்து நடந்துவரும் சத்தமும் பின்னர் கதவைத் திறக்கும் சத்தமும் கேட்க அவன் உணவைக் கொடுக்க தயாரானான். கதவு திறந்ததும் கவரை நீட்டியபடி, “மேடம் ஃபுட்” என்றான்.

அவள் மெல்ல அதை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றாள். கதவு அடைக்கப்பட்டதும் அவன் மீண்டும் தோன்றினான். அவன் கண்களில் தெரிந்த அந்தக் காதலை, ஏக்கத்தை அவள் இதுவரை யார் கண்களிலும் கண்டதேயில்லை. அவனைச் சுற்றி ஓர் ஒளி இருந்தது. அதுதான் அவன். ஒளியானவன். அவள் எதிரில் மேஜையில் இருந்த உணவுப் பொட்டலங்களைப் பார்த்தாள். அதன் அருகிலிருந்த மாத்திரைகளைப் பார்த்தாள். அது அவளைச் சரி செய்யும் மாத்திரைகள். அவனைக் கொல்லும் மாத்திரைகள். அவனுக்கு அது தெரியுமா என்று அவளுக்குத் தெரியவில்லை.

அவன் மிகவும் மெல்லிய குரலில், ‘நீ சாப்புடு’ என்றான்.

அவள் சிரித்தாள். பின் சாப்பாட்டைப் பிரித்து மெதுவாகச் சாப்பிட்டாள். அவன் அதை ரசித்துக்கொண்டிருந்தான். சாப்பிட்டு முடித்ததும் ‘மாத்திரை’ என்றான்.

அவள் முகம் மாறியது.

‘என்ன’. என்றான்.

அவள் பதிலேதும் பேசாமல் மாத்திரைகளையும் சாப்பாட்டு கவரோடு சேர்த்து குப்பையில் வீசியெறிந்தாள். அவன் இப்போது தான் நன்றாகச் சிரித்ததை உணர்ந்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.