கோடிட்ட இடம்

கீதா ஆன்ட்டி வீடு பூட்டும் சத்தம் கேட்டது. கைவேலையை விட்டுவிட்டு ஓடிப்போய் அவரைப் பார்த்துக்  கையசைத்துவிட்டு வருவது வழக்கம். எதிரெதிர் ஃபிளாட். 

“ பை  ரம்யா….”

ஆன்ட்டி ஒரு புன்னகையின் உதிர்வில் இன்னும் வசீகரம் கூடிப்போனவராய் தெரிவார். நன்கு பழுத்த கொய்யாப்பழத்தைப் போன்ற இளமஞ்சள் நிறம். சரியான உயரம், அதற்கேற்றாற்போல் உடல்வாகு. ஆர்கென்சாவோ, பெங்கால் காட்டனோ நன்றாக நீவி உடுத்திக்கொள்வதை அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

குடிவந்த புதிதில் அவரிடம் பேச தயக்கமாயிருந்தது. அந்த உருவத்தின் நிமிர்வு நெருங்கிப் பேசத் முடியாத அச்சத்தை உண்டாக்கிவிட்டிருந்தது. இரண்டுமுறை வராந்தாவில் நின்று அலைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். சரளமான ஆங்கிலத்தில் உரையாடியபோது அவர் முகம் தீவிரமடைந்து பின் குளிர்ந்தநீர் பட்டதுபோல் இளகியது. சுடிதாரின் பின்பக்கத்தை இழுத்தபடி நின்றிருந்த நவீனை நகர்த்திவிட்டு நான் ஜன்னலிலிருந்து விலகினேன்.

கீதா ஆன்ட்டியிடம் இயல்பாகப் பழக முடியாது என்று தோன்றியது. தோற்றத்தைக் கொஞ்சம் நாகரீகமாக மாற்றிக்கொண்டிருந்தாலும் 

சேர்ந்தாற்போல் நாலு ஆங்கில வார்த்தைகளை நாக்கைப் புரட்டிப் பேசிவிட என்னால் இயலாது. கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் படித்தவள். present continuous tense என்றால் is போட்டு ing. past continuous tense என்றால் was போட்டு ing. இப்படியானது என் படிப்பு. 

கீதா ஆன்ட்டியைப்  பார்த்தால் ஒரு புன்னகையோடு விலகிவிட எண்ணியிருந்தேன். ஆனால் நாலேநாளில் அவர் சகஜமாகப் பழகத் தொடங்கிவிட்டார். 

“ கீதா கேரளத்துப் பெண்குட்டியாக்கும்.”

302, இந்திராணி ஆன்ட்டி  அறிமுகப்படுத்திவைத்தார். 

” ஆமா சொந்த ஊர் கேரளான்னாலும் படிச்சு, வளர்ந்ததெல்லாம் இங்கதான். “

” கல்யாணம் கழிச்சதும் நம்ம ஊர்லதான்.”  

 ” மிஸஸ் இந்திராணி… உங்களுக்கு ஒன்னு தெரியுமா…. அக்கா வீட்டுக்கு கேரளா போவேன். ஒரு வாரம் தாக்குப் பிடிக்காது. ஓடி வந்துடணும்னு தோணும்.”

கீதா ஆன்ட்டி அவசரமாகச் சொன்னார். 

அவருடைய இயல்பான பேச்சு கொஞ்சம், கொஞ்சமாக என்னையும் சகஜமாகப் பழக வைத்தது. கீதா ஆன்ட்டி சிஏ படிக்கும் பிள்ளைகளுக்கு காமர்ஸ் வகுப்பு எடுத்தார். பகுதிநேரப் பணி. அதனால் காலை நேரம் வீட்டிலிருக்க மாட்டார். மாலை வாக்கிங் முடித்துவிட்டு வந்து கந்த சஷ்டி கவசமும், கோளறு பதிகமும் படிப்பார். சில சமயம் மாரியம்மன் தாலாட்டும் காதில் விழும். பிரம்பு நாற்காலியில் வசதியாக அமர்ந்துகொண்டு கண்களை மூடி, கைகூப்பிக் கட கடவென்று ஸ்லோகங்களைப் பாடுவார். ஆரம்பத்தில் அதைக் கேட்டபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 

” ஆரூரிலே சீதளாதேவி எல்லம்மா, திண்டுக்கல்லிலே கோட்டை மாரியம்மா…..”

அவர் உரக்கச் சொல்லும்போது புதிரான வாழ்க்கையின் சூட்சுமம் கொஞ்சம் புரிந்தது போலிருந்தது. யூகிக்க இயலாத ஒன்று ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டதாய் தோன்றியது. அது நாம் வரும்போது  நாமறியாமல் நம்கூட வரும் என்றெண்ணிக்கொண்டேன். முப்பது வயதில் கொஞ்சம் புதிதாய் யோசிக்கத் தோன்றியதில் உற்சாகமாய் இருந்தது. எனக்குப்  புத்தகங்கள் வாசிக்கும் பழக்கமுள்ளது. சிறு வயதிலிருந்தே அதுதான் பொழுதுபோக்கு. அசோகமித்திரனும், கு. அழகிரிசாமியும், சூடாமணியும் வாசிக்க சுகம். கீதா ஆன்ட்டி  நிறைய ஆங்கில எழுத்தாளர்களின் பெயர்களைக் கூறினார். வாயில் நுழையாத பெயர்கள். 

“ ஸாரிம்மா…. ஆங்கிலக்கதைகள் தவிர எதுவும் படிச்சதில்ல.”

மெதுவாகச் சொன்னார். கான்வென்ட்டில் படித்த மனுஷி அப்படிப்பட்டவராகத்தானே இருக்க முடியும்.

“ அக்கா திட்டுவா. தகழி சிவசங்கரன் பிள்ளையையும், முகம்மது பஷீரையும், பொற்றேகாட்டையும் வாசிக்க தகுதியில்லாதவ நீ. உனக்கு இந்த ஊர்ல இடமில்லடி ஓடிடுன்னு விரலை நீட்டி உருட்டி முழிச்சு அவ மிரட்டறப்ப அடக்க முடியாம சிரிப்பு வரும். அதுக்காக ஒரு புத்தகம் எடுத்துப் படிக்க முடிஞ்சதில்ல. எனக்கும் ரொம்ப அழும்புதான்.”

மென்சிரிப்பொன்று மிதந்து வரும். ஆன்ட்டி வீட்டிலிருக்கும் நேரங்களில் நைட்டி அணிந்திருப்பார். வெளியில் வரும்போது மேலே துண்டைப் போட்டுக்கொள்வார். அம்மா வீட்டுக்குச் செல்லும்போது அங்கு சில பெண்கள் நைட்டி மேல் துண்டு போட்டுக்கொண்டு வயல் வேலைக்குச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். 

“ நைட்டியைக்  கண்டுபிடிச்சவன் வாழ்க….”

என்பார் ஆன்ட்டி.

மாலை நேரத்தில் அரைமணி நேரம் கூடுகை நடக்கும். பெரும்பாலும் லட்சுமியம்மா வீட்டில் எல்லோரும் சேர்ந்திருப்பார்கள். அவரின் கணவர் வெளியூரில் வேலை பார்க்கிறார். வார இறுதி நாட்களில் வருவார். அதனால் கதையடிக்க லட்சுமியம்மா வீடு வசதியான இடமாகிப்  போனது. மொத்தம் ஏழு வீடுகளடங்கிய அந்தத் தளத்தில் நானும், இன்னொரு பெண்ணும் மட்டுமே சிறுவயது அம்மாக்கள். மற்ற ஐந்து பேரும் அறுபதைத் தொடுபவர்கள். பேச்சும், சிரிப்புமாய் லட்சுமியம்மா வீடு ரெண்டுபடும். நான் எப்போதாவது எட்டிப்பார்ப்பேன். 

“ வாங்கோ ரம்யா…”

கீதா ஆன்ட்டி கனிவாய் அழைப்பார். தூங்கி எழுந்த அசதியில் கண்கள் கிறங்கியிருக்கும். எண்ணெய் மினுமினுக்கும் முகத்தில் மெரூன் நிறப் பொட்டு அவ்வளவு பாந்தமாகப் பொருந்தியிருக்கும். மசிய அரைத்த சந்தன விழுதைப் போன்ற முகம். பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கும். தலையை பிசிறில்லாமல் வாரி கொண்டை போட்டிருப்பார். உருவத்துக்குப் பொருத்தமில்லாத சிறு கொண்டை. பூக்காரம்மாவிடம் நிறைய பூ வாங்குவார். ஆனால் இணுக்கு  பூ அவர் தலையில் பார்த்ததில்லை. 

“ தலைக்கு முடியே பாரமா தோணுது. இதுல பூ வேற எதுக்கு. சரம், சரமா சாமிக்கு இட்டு அழகு பார்க்கறதோட சரி.” 

ஒருமுறை சில்லறையை எண்ணி பூக்காரம்மாவிடம் கொடுத்தபடியே சொன்னார். 

ஆன்ட்டி அவர் கணவருடன் பேசுவது நன்றாகக் காதில் விழும். இரண்டு பெட்ரூம் வீட்டில் அவர்கள் பெரும்பாலும் ஹாலிலேயே இருப்பார்கள். டிவியின் மெலிதான சத்தம் பக்கவாத்தியம் போல. அங்கிள் உம் என்றோ இல்லை என்றோ வெகு சொற்ப சொற்களையே உதிர்ப்பார். சம்பாஷணைகளில் சொற்றொடர்களாய் ஆன்ட்டி. நடுவில் வரும் கமாவும், நிறுத்தற்புள்ளியும் அங்கிள். கூடை வடிவ நாற்காலியின் கீழே மேட் போட்டு கால்களை அதில் பதித்து ஆன்ட்டி அமர்ந்திருப்பார். அருகில் செருப்புகள் கிடக்கும். செருப்பில்லாத காலுடன் ஆன்ட்டியைப்  பார்ப்பது அரிது. 

“ அதுக்குன்னு சாமிக்கு நெய்வேத்தியம் பண்ணும்போது கூடவா செருப்பு போட்டுக்கணும். உங்க போக்கே தனிதான்” என்று லட்சுமியம்மா ஒருமுறை முணுமுணுத்தார். 

“ என்ன தப்பு……. செருப்பு போட்டுக்கிட்டு  தீபம் காட்டக்கூடாதுன்னு ஏதாவது ரூல் இருக்கா. இந்தப் புத்தகத்துல இத்தனையாவது பக்கத்துல இந்தமாதிரி எழுதியிருக்குன்னு எடுத்துக் காட்டுங்க பாக்கலாம்.”

“ உங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியாது.”

“ இது பரவாயில்ல. இன்னொன்னு செய்வாங்க. கேட்டா மயங்கி விழுந்துடுவீங்க. சொல்லட்டுமா மிஸஸ் கீதா….?”

இந்திராணி ஆன்ட்டி கள்ளச்சிரிப்புடன் கேட்க, அவர் இரு கைகளையும் விரித்து தாராளமா என்றுவிட்டு மேலே கிடந்த துப்பட்டாவைச் சரிசெய்து கொண்டார். 

“ சாமிக்குப்  படைக்கறதுக்கு முன்னாடி சமைச்சத வாயில போட்டுப் பார்ப்பாங்க.”

“ என்னது….?”

நான் அவசரமாகக் கேட்டுவிட்டேன். 

“ ஆமா பின்ன…. உப்பெல்லாம் சரியாஇருக்கான்னு பாக்க வேண்டாமா. சிலசமயம் உப்பு போட மறந்திருப்போம். வாயில வைக்க வெளங்காது. நம்மளால அதைச் சாப்பிடமுடியுமா….?”

முன்னால் நகர்ந்து அமர்ந்து கேட்டார். 

“ அதுக்குன்னு பிரசாதத்தை எச்சில் பண்றது தப்பில்லையா…?”

இந்திராணி ஆன்ட்டி  அடிக்குரலில் கேட்டார். 

“ கடமைக்குப் பொங்கி நீர் வெளாவறதுதான் தப்பு. எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துட்டு நெறஞ்ச மனசோட நெய்வேத்தியம் பண்ணும்போது ஆத்மார்த்தமான நிறைவு வரும் பாருங்க. அதை அனுபவிக்கணும் மிஸஸ் இந்திராணி .”

சொல்லும்போது கீதா ஆன்ட்டியின்  முகத்தில் அதை அக்கணமே உணர்ந்துவிட்ட மாதிரியான பூரிப்பு தெரிந்தது. 

எப்போதாவது  கார்  பார்க்கிங்கில் நவீனை விளையாட விட்டு நின்றிருக்கும்போது  கீதா  ஆன்ட்டி  அவர் கணவருடன் பஜாஜ் சட்டாக்கில் வந்திறங்குவதைப்   பார்ப்பேன். பெரிய செவ்வக வடிவ குளிர்க்கண்ணாடி அணிந்திருப்பார். அப்படியே பழைய சினிமா  நடிகை போல இருப்பார். இரண்டு நிமிடங்கள் நின்று பேசிவிட்டுப் போவார். அப்போது கண்ணாடி நெற்றிக்கு மேலே ஏறியிருக்கும். 

“ குட்டி, அம்மாவை பெண்டு நிமிர்த்தறீங்களா…. இன்னும் கொஞ்சநாள்தான். நீங்க ஸ்கூல் போக ஆரம்பிச்சாச்சுன்னா  அம்மா  ஃப்ரீயாயிடுவாங்க.”

நவீனின் கன்னம் திருகி முத்தமிடுவார். அவர் கணவர் லிப்ட் அருகில் நின்று எட்டிப்பார்ப்பார். 

“ இதோ வர்றேன்.”

அவசரமாய் விலகிப்போவார். கையில்  காய்கறிப்  பையிருக்கும். 

“ கிளாஸ்  முடிச்சிட்டு வரும்போதே காய் வாங்கிட்டு வந்துடுவேன். இல்லேன்னா அவருக்குச் சாப்பாடு இறங்காது.”

அவருக்காகக் காத்திருக்கும் அவருடைய கணவர்  பார்வையை ஒருமுறை எதேச்சையாகப் பார்க்க நேர்ந்தபோது அதன் கூர்மை வித்தியாசமாகப் பட்டது. 

ஆன்ட்டி  வீட்டிற்கு நான்கைந்து முறை போய்  பேசியிருக்கிறேன். 

“ கம்மின் ரம்யா……….”

உட்கார்ந்த வாக்கிலே வாயார அழைப்பார். க்ரில் கதவின்  உள்  தாழ்ப்பாளைக் கையை நீட்டி நீக்கிவிட்டு உள்ளேபோகும் வரை பார்த்துப் புன்னகைத்தபடியே இருப்பார். இந்திராணி ஆன்ட்டியும்  வருவார். அரிதாய் சிலசமயம் இப்படிப் பேச வாய்க்கும். இந்திராணி ஆன்ட்டியுடன் அவர் பேரனும் வருவான். 

“ ஸ்கூல் வேன் தெருமுனையில இறக்கிவிட்டுப் போயிடும். இவங்கம்மா போய் கூட்டிட்டு வருவா. நேத்திக்கு போறதுக்கு கொஞ்சம் லேட்டாயிடுச்சு. பாவம் இவனே பையைத் தூக்கிட்டு நடக்க முடியாம நடந்து வந்துட்டான்.”

இந்திராணி ஆன்ட்டி வருத்தப்பட்டார். கீதா ஆன்ட்டி  அவனை அருகில் அழைத்தார். 

“ இன்னிக்கு எப்படிடா வந்த…?”

“ ஐ கேம் பை வாக்……..”

அவன் சாக்லெட்டை வாயில்  அடக்கியபடியே சொன்னான். 

“ அப்படிச் சொல்லக்கூடாதுடா  செல்லம். ஐ கேம் ஆன் ஃபூட். இதுதான் சரி….”

சொல்லிவிட்டு அவன்  தலையை அழுத்தமாகத் தடவிக்கொடுத்தார். பின் கையைப் பற்றி விரல்களை  வருடினார். கொஞ்சநேரம் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார். அமைதியில் உறைந்திருந்தது அவ்விடம். இல்லாமையால் நிறைந்துவிட்ட அமைதி. 

இந்திராணி  ஆன்ட்டியின்  மருமகள்  அசைவம் சமைப்பதில் கில்லாடி. வாரத்தில்  இரண்டு நாட்கள் அவர்கள் வீட்டில்  அசைவமிருக்கும். அப்போது  அவர்  வந்து கீதா  ஆன்ட்டியை அழைப்பார். 

“ ப்ரான் ஃப்ரை  உங்களுக்காக எடுத்து வச்சிருக்கேன். வாங்க………”

மெல்லிய குரலில் கூப்பிடுவார். இவர் நாற்காலியில் கிடக்கும் துப்பட்டாவை எடுத்து அணிந்துகொள்வார். 

“ கையை ரெண்டு மூணு வாட்டி  சோப்பு போட்டுக் கழுவிட்டு நாலஞ்சு ஏலக்காயை வாயில போட்டுக்குவாங்களாம். அவரு சுத்த சைவமாச்சே.”

லட்சுமியம்மா சொன்னார்.

“ நாங்கள்லாம் சின்னவங்களா இருந்தப்ப எங்க வீட்டுல சமையல்காரர் இருந்தார். அவர் ஜோரா அசைவம் சமைப்பார். நாங்க நாலுபேரும் போட்டி போட்டுக்கிட்டு வெளுத்துக் கட்டுவோம். மனுஷனுக்கு அப்படியொரு கைமணம். அப்பாவும் பஞ்சமில்லாம வாங்கிப்போடுவார்.

இதனால பொழுதனைக்கும் நான்வெஜ்தான். மசாலா வாசனை எப்பவும் அடிச்சிக்கிட்டே இருக்கும். இப்ப அதையெல்லாம் நெனச்சுப் பாக்கறேன். எங்க அக்காவும், அண்ணன்களும் எப்ப ஃபோன் பண்ணினாலும், இன்னிக்கு நெத்திலி மீன் குழம்பை ஒரு பிடி பிடிச்சோம், மட்டன் பிரியாணி அளவு தெரியாம சாப்பிட்டுட்டோம்னு என்னை வெறுப்பேத்துவாங்க.”

ஆன்ட்டி எங்கோ பார்த்து லேசாய் இதழ் பிரியச் சிரித்தபடி சொன்னார்.

“ அக்கா வீட்டுக்குப் போகும்போதெல்லாம் அசைவம் சமைக்கச் சொல்லிச் சாப்பிட வேண்டியதுதானே…”

“ சொல்லவே வேண்டியதில்ல. என் தலையைப் பாத்ததுமே அக்கா மீன் மார்க்கெட்டுக்கு கிளம்பிடுவா. தினந்தினம் ஒரு அயிட்டம் ஜமாய்ச்சிடுவா….”

“ மாமிச பட்சிணி……”

லட்சுமியம்மா செல்லமாய் திட்ட ஆன்ட்டி வேகவேகமாக தலையசைத்தார்.

“ திருட்டுப்பூனை. அதுதான் சரியா இருக்கும். நீ சாப்பிடறதைப் ஃபோட்டோ எடுத்து உன் புருஷனுக்கு வாட்சாப்ல அனுப்பிடறேன் பாருன்னு மாமா கிண்டலடிப்பாரு.”

“ அய்யய்யோ….நெஜமாப் பண்ணிடப்போறாரு.”

இந்திராணி ஆன்ட்டி பதறிவிட்டார். 

“ அப்படி மட்டும் செஞ்சிட்டாருன்னா என்னவாகும்.”

கீதா ஆன்ட்டியிடம் பதிலில்லை. அவர் பேசாமல் அமர்ந்திருந்தார். 

கீதா ஆன்ட்டியின் கணவர் பிசினஸ் செய்கிறார். மார்க்கெட்டில் கடை. கடையிலிருந்து மதிய சாப்பாட்டுக்கு வருபவர் ஒரு மணி நேரத்தில் கிளம்பிவிடுவார். பின் இரவு ஒன்பது மணிக்கே தலை தெரியும். அவர் வீட்டிலிருக்கும் நேரங்களில் கடந்து செல்ல நேரிட்டால் கீதா ஆன்ட்டி ஒரு கையசைப்போடு நிறுத்திக்கொள்வார். ஹாலில் ஒரு பெரிய ஃபோட்டோ மாட்டப்பட்டிருக்கும். ஆன்ட்டியும், அவர் கணவரும் திருமணமானபுதிதில் எடுத்துக்கொண்ட புகைப்படம். ஆன்ட்டி ஸ்வர்ண விக்ரகம் போல ஜொலிப்பார். அவருக்கருகில் அந்த மனிதர் கொஞ்சமும் பொருத்தமில்லாதவராய். 

“ அக்கா  அழகு. அதுக்கு அவர் அவ்ளோ ஈடு இல்ல. ”

லட்சுமியம்மா வந்தமர்ந்த ஒரு மாலை வேளையில் கீதா ஆன்ட்டி உள்ளே சென்றிருந்தபோது அவசரமாகச் சொல்லிவிட்டார். 

“ எனக்கு இருபத்திமூணு வயசு. அவருக்கு இருபத்தொன்பது. ரெண்டுபேர் வீட்லயும் ஒத்துக்கல. ரொம்பப் போராடித்தான் சம்மதிக்க வச்சோம். 

ஆன்ட்டி ஈரக்கைகளை நைட்டியில் துடைத்தபடியே நாற்காலியில் அமர்ந்தார். ” 

“ வேற ஸ்டேட். வேற மொழி. இங்கயும் சம்மதிக்கல. அங்க அதுக்கு மேல. ரெண்டு வருஷம் மெனக்கெட்டிருக்கோம்.”

“ அந்த ரெண்டு வருஷமும் ஒங்களுக்கு போனஸ் பீரியட் தானே காதல் பண்றதுக்கு.”

“ நாட்டி லட்சுமி மாமி….”

கீதா ஆன்ட்டி சிரித்தார். அந்நிமிடமே சிரிப்பு சட்டென உதிர்ந்தும் போயிற்று. 

அன்று இந்திராணி ஆன்ட்டியின் அறுபது கல்யாணத்துக்கு எல்லோரும் சேர்ந்து போனோம். மண்டபத்தில் வைத்துச் செய்தார்கள். கூட்டம் ஏகமாய் இருந்தது. 

“ ஒங்களுக்கு எப்ப அறுபது வருது?’

காரில் போகும்போது லட்சுமியம்மா கேட்டார்.”

“ அடுத்த செப்டம்பர்ல அவருக்கு அறுபது முடியுது. ஆனா அறுபது கல்யாணம் செஞ்சிக்கறது பத்தி ஒண்ணும் யோசிக்கல.” 

“ யோசிக்கவே வேண்டியதில்ல. தாராளமா செஞ்சிக்கலாம். அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும். தம்பதி நல்ல சுகத்தோட சஷ்டியப்த பூர்த்தி செஞ்சிக்கறது பாக்கியம் தெரியுமா……..”

லட்சுமியம்மா வெளியில் பார்த்தபடியே சொல்லிக்கொண்டு வர நான் கீதா ஆன்ட்டியைப் பார்த்தேன். அவர் முகத்தில் எந்த உணர்வுமில்லை. 

மண்டபம் நிறைந்திருந்தது. இந்திராணி ஆன்ட்டி அந்த ஊரில் பிறந்து வளர்ந்து வாழ்க்கைப்பட்டவர் என்பதால் கூட்டத்திற்குப் பஞ்சமில்லாமலிருந்தது. ஃப்ளாட்வாசிகள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கொண்டோம். ஆன்ட்டியின் மருமகள் ஏக அலங்காரத்துடன் வலம்  வந்துகொண்டிருந்தாள்.

“ தேவசேனாவுக்கு இந்த மெரூன் கலர் புடவை ரொம்பப் பொருத்தமா இருக்கு…”

லட்சுமியம்மா கூற கீதா ஆன்ட்டி இடைமறித்துச் சொன்னார்.

“ மெரூன் இல்ல மாமி. அது வைன் ரெட். அவளுக்கென்ன குறைச்சல். சாதாரணமாவே அவ ரொம்ப அழகு. அலங்காரம் பண்ணினதும் ஒரு கைப்பிடி அழகு கூடிப்போன மாதிரி இருக்கு…”  என்றவர் அவளைக் கூப்பிட்டுக் கைகொடுத்தார். 

“ யூ லுக் ப்ரிட்டிம்மா….”

அவள் சிரித்தபடி  நகர்ந்து போனாள்.

கீதா ஆன்ட்டியின் கணவர் கடைக்குப் போய்விட்டு அங்கிருந்து வருவதாகச் சொல்லியிருந்தார். எல்லோரையும் சாப்பிட அழைத்தார்கள். டைனிங் ஹால் கீழ் தளத்திலிருந்தது. ஏசியின் குளுமையும், உணவுப் பதார்த்தங்களின் கமகமப்பும் ஒருவித உணர்வை உண்டாக்க வரிசையாக அமர்ந்தோம். வெள்ளை வெளேர் தாளை டேபிளில் விரித்து மேலே இளங்குருத்து வாழையிலைகளைப் போட்டிருந்தனர்.  அருகில் முழ நீள  தண்ணீர் பாட்டில். 

“ இன்னிக்கு ஒரு பிடி பிடிச்சிட வேண்டியதுதான். ”

கீதா ஆன்ட்டி பாட்டிலைத் திறந்தார் .

“ ஆன்ட்டி, அங்கிள் அங்க உட்கார்ந்திருக்கார் பாருங்க…”

நான் எதிர்வரிசையில்  வலதுகோடியில் அமர்ந்திருந்தவரைக் காண்பித்தேன். அதேநேரம் அங்கிருந்து பார்த்தவர்,

“ கீதா இங்க வா….” என்று வேகமாக அழைத்தார். முகம் கடுகடுத்திருந்தது. கீதா ஆன்ட்டி திறந்த பாட்டிலை மூடிவைத்துவிட்டு அவசரமாய் எழுந்து போனார். எங்களுக்கிடையில் ஒரு நாற்காலி கோடிட்ட இடம் போல் காலியாகக் கிடந்தது. நான் அவர் போவதையே பார்த்திருந்தேன். நைட்டி மேல் துப்பட்டா அணிந்த பெண்மணி ஒருவர் போய்க்கொண்டிருந்தார்

Previous articleஅருகன்
Next articleபுதைமணல்
ஐ கிருத்திகா
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக எழுதி வருகிறார். பல்வேறு இணைய மற்றும் அச்சு இதழ்களில் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இதுவரை மூன்று சிறுகதை தொகுப்புகள் வந்துள்ளன. நான்காவதாக காலச்சுவடு பதிப்பகம் மூலம் சிறுகதைத் தொகுப்பு இம்மாதம் வெளிவர உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.