கவிஞர் மாலதி மைத்ரியின் ‘பேய்மொழி’ கவிதைத் தொகுப்பினை முன் வைத்து,ஒரு உரையாடலும், சில நிகழ்வுகளும்…… -ம.கண்ணம்மாள்

“நீங்கள் யாரென்று தெரியவில்லை

எனக்கும் நான் யாரென்று தெரியவில்லை

ஏன் வந்தீர்கள்

ஏனிங்கு வந்தோம்

ஆனால் இருக்கிறோம்”  -மாலதி மைத்ரி

இவ்வரிகளிலிருந்து மாலதிமைத்ரியோடு உரையாடத் தொடங்கலாம் என நினைக்கின்றேன்.

அலை அலையாய்ப் பரவும் மனிதத்திரள்களின் முன்னே அர்த்தம் வாய்ந்த கேள்விகளைக் கேட்பது நல்லது. வெருள்வதற்கு ஏதுமின்றி நற்பதில்கள் பழுப்பேற்றம் இல்லாத பக்கங்களாய் நம்மை அடையும் போது, அது ஒரு களையான சித்திரமாகின்றது. இக்கேள்விகளுக்கான இடமாக சமயம், வரையறுக்கப்பட்ட நியதிகள், மரபுகள், பழக்கம், அறிவார்ந்த சமூகம், நிறுவனங்கள் உள்ளிட்டவை அறிதலுக்குரியதாகின்றன. உடன்நிலை, எதிர்நிலை போன்ற இரண்டும் இதற்கான பதில் முன்னீடுகள். சமூக நிகழ்வுகள் அனைத்தும் மாற்றத்திற்குட்பட்டவை. இதன் வழியாகவே இயக்கம் நடைபெறுகின்றது. இவ்வியக்கத்தில் மனித இயங்கியலில் விதிகளுக்குட்பட்ட தாராளமான இயற்கையின் மாற்றங்கள் பொதிந்துள்ளன.

ஒவ்வொருவரின் மனதில் சிறிது சிறிதாகத் தோன்றும் பல படிநிலைகள் இந்த இயங்கியலுக்குள் உட்பட்டவை. இதிலிருந்து எழக்கூடிய முரண்பாடு, மாற்றம் சமூகத்திற்கானது. இங்குக் காண்பவை அனைத்தும் ஒன்றின் மீது ஒன்றான முரண்களை அடுக்குகின்றது. சமூகஉயிரிகள் இம்முரண்பாட்டில் தன்னை வடிவமைத்து பிரச்சினைகளின் அடியில் நின்று தீர்வு காணவிழையும் சூழல் நிகழும்போது வாழ்வின் முரண்பாடுகள் தீர்க்கப்படுகின்றன. இதற்கு ‘நிகழ்தல்’ என்பது அடித்தளம். இந்நிகழ்தலைச் செய்வதில் ‘கலையும்’ மிகப்பெரும் பங்கு வகிக்கின்றது. எங்கெல்லாம் நல்ல வளர்மாற்றங்கள், புத்தான உருவாக்கங்கள் நிகழ்கின்றதோ அங்கு கலையும் வளர்கின்றது. அறிவுசார்ந்தும், சிந்தனை கொண்டும், உணர்வு வெளியைப் பல பொருண்மைகளில் சமூக உயிரிகளின் அனுபவங்களைப் பேசுகின்றது. இதற்கு, மொழியென்பது ஒரு கூடுதல் அடையாளம். தன்னிலை, பொதுநிலை, கூட்டுநிலை என்ற மூன்றையும் ‘கலை’ மனித உடலோடு உணர்வாக்கம் செய்ய முனையும் சூழலில் பல நிகழ்வுகள் கைகூடுகின்றன. இது உடலின் பல சங்கேதக் குறியீடுகளை, ஆழ், உள், வெளி, பரிமாற்றத் தோரணையில் கலை மற்றும் அரசியல் புரிதலில் உரையாடத் தொடங்குகின்றது.

அப்படியான, நிகழ்தல், உடன், எதிர் வினையின் விளைவில் கூருணர்வான ஒரு படிமக்காட்டாளராக மாலதி மைத்ரி தென்படுகின்றார்.

“தூரத்திலுள்ள மலைகளை அடையாளம் வைத்து

வண்ண வண்ணப் பாறைத் துண்டுகளுடனும் கற்களுடனும்

எனது புதையல் உலகம் சுழன்று கொண்டிருந்தது

கற்களும் தோழிகளுமே காலமாய் இருந்தார்கள்

சுற்றிலும் கற்கள் எழும்பி முகமாய் முறைக்கிறது

இதற்குள் எங்கோ தான் எனது கற்களும்

ஒளிந்து கொண்டிருக்கலாம்”

களவாடப்பட்டிருக்கலாம்”

 இவ்வரிகளில் பாதிக்கப்பட்டதொரு காலத்தோடு உரையாடல் நிகழ்கின்றது. பாதிப்புக்கு உள்ளானவர்களின் அடையாள முகங்கள் காலத்திடம் கேள்வி கேட்கும் சூழல். ஆனால், நேராக இல்லை. ஒளிந்து அல்லது களவாடப்பட்ட கற்களில் முகங்கள் எனும் உணர்ச்சிகள் தன் நிகழ்வாக நடத்திக் காட்டுகின்ற அந்த இருத்தல் நிகழ்வை யாரும் பொருட்படுத்தவில்லை. முறைத்தலான சுயம் மறைக்கப்பட்டு ஏதோவொரு பொய் அதிகாரமாக்கப்படுகின்றது. இடையறாது நிகழ்த்திக்காட்ட பிரபலமான அடையாள முகம் இல்லை. என்னின் உண்மை முகம் கற்களுள் மறைந்து போயுள்ளது. அதைச் சிறப்பாக வடிக்க வேண்டியது சமூகம். வண்ணங்கள் தீட்டுவது என் பிடித்தமானது. இது போலத்தான் காலத்தின் தவிர்க்கவியலாத் தேவையினை முன்னிலைப்படுத்துகின்றார். அவரின் வார்த்தைகளில் சொல்வதென்றால்,

“ஏனிங்கு வந்தோம்

ஆனால் இருக்கிறோம்”

என்ற நிகழ்தல் தான். இஃதொரு முகம் மறைத்த அரசியல். அதைக் காலம் நிகழ்த்துகின்றது.

காலத்தின் நகர்வுகளில் ‘மனித அலைவுகள்’ அதிகம். உடைத்துத் தகர்க்கப்பட்ட முகங்கள் ஏராளம். தத்தம் உடலைக் கொண்டு வாழ, கிடத்த, நடக்க, உட்கார நிலம் மறுக்கப்பட்டது. இங்கு, நிலமும் முகங்களை மறைக்கும் சூழலில் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் ஒரு அதிகாரம் உருவான போது, அகழ்ந்து கிடக்கும் உடலைப் பிய்த்துக் கொண்டு வெளியேறும் பல நிகழ்வுகள் மறைக்கப்பட்ட முகங்களைக் கொண்டு நடந்தேறத்தொடங்கின. இதைச் செய்தவர்கள் அதிகாரக்களம் எனத் தம்மைப் பிரகடனப்படுத்தினாலும், ஒரு நிலத்தில் பிறந்த முகத்தை மறைக்கும் அதிகாரம் யார் கொடுத்தது? சொல்லப்போனால், அதிகாரம் முகத்தை மறைக்கவில்லை. ‘அகதி’ என்ற பெயரிடப்பட்டு ‘பல உடல்களை’ மறைக்கின்றது. ‘நிலம்’ என்பதின் பேரில் ‘பல்லாயிரம் உடல்களை’ புதைக்கச் செய்யும் நிகழ்வினை எதைக்கொண்டு பார்ப்பது?

கவிஞரின் ‘அகதி’ கவிதையினை வாசிக்கும் போது இது தோன்றுகிறது. இங்கு மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட, மறக்கவைக்கப்பட்ட காலங்களின் முன்னால் ‘அகதிகள்’ தங்கள் உடல்களைத் தூக்கிக்கொண்டு நிலம் பெயர்கின்றனர். இது, வலிமையான நிலம் கடந்த உடல்களின் அரசியல். ஆதிக்கம் என்பதற்கு இரு நிலை எப்போதும் அவசியம். 1. பணிவு 2. அடிமை. இதன் மூலமாக உடல்களை சமூகத்துக்குள்ளிருந்து தள்ளி வைத்தல். உடல்கள் என்பதே சமூக உயிரிகள் தான்.  பிறந்த நிலத்தைப் பல கெடும் சம்பவங்களாக மாற்றி உடல்களை அப்புறப்படுத்திப் பார்க்கும் ஆதிக்கம் வன்முறையானது.

“மூட்டை மூட்டையாக புளியமரத்தடியில்

தனது உடைமைகளை அடுக்குகிறாள்

மரக்கிளைகளில் தோரணமாகக்

கட்டித் தொங்கவிடப்பட்ட பைகள்

——————————————

——————————————

பைகளை ஒட்டி ஒட்டி

புதிய புதிய ஆடைகளைச் செய்து

கணக்கில்லாமல் அணிகிறாள்

எப்பொழுதும் ஒரு பூதாகரமான தோற்றத்துடனே

அலையும் அவளை நெருங்க ஒருவராலும்

முடிந்ததில்லை”

 இதில் ஒரு ‘உடல் அலைதல்’ காட்சிமைப்படுகின்றது. எந்தப் புனைவுமில்லை. மாறாக, வாழ்வின் சலிப்பும், கவலையும் உடல்களில் பரிசோதிக்கப்படுகின்றன.

 ஒரு உடலை முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்தலென்பது பிறந்த நிலத்திலிருந்து அவ்வுடலை அப்புறப்படுத்துவதுதான். அதனின் வலி சொல்லடங்காதது.

“எங்கிருந்து வந்தாள்

யாரிவள்

ஒருவருக்கும் தெரியாது

பட்டாசு சத்தம் கேட்டால்

புளியமரத்தின் வேர்களுக்குள் பதுங்கிக் கொண்டு

அழுது கதறுகிறாள்”

எங்கிருந்து வலியை அப்புறப்படுத்துவது?

இதற்கான நிர்மாணம் என்னவாக இருக்கிறதென்று பார்த்தால் ஒவ்வொருவருக்கான சுய அவிழ்ப்பு அவசியம். பட்டாசு சத்தம் இடைவிடாத வெடிகுண்டின் சத்தத்தை ஒத்து பதுங்குக்குழியை நினைவுபடுத்தித் தன் உடலைப் பதுக்கிக் கொள்ளும் பெண்ணை எதைக்கொண்டு சரியாக்கமுடியும்? என்பதில் ஒரு வினைக்கு உட்படாத அரசியல் அமர்ந்திருக்கின்றது. வெறும் அழகியல் மட்டுமல்ல கலை. பல்லாற்றான  சமூக உயிரிகளின் நிறைவேறாத ஏக்கங்கள், தன்னுணர்வு, அரசியல் கூற்றுகள், வெளிப்படைப் பேச்சுகள் போன்ற அனைத்தையும் கொண்டது தான். இதற்கான எண்ணற்ற நிகழ்வுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. உண்டு, உறங்க, தன் உடலைக் கீழே கிடத்தி ஆசுவாசப்படுத்திக் கொள்ள நிலமில்லாத போது கலை சார்ந்ததெல்லாம் அதிகார அரசியலாகின்றது.

“நான் விதைக்கவோ

என்னை விதைக்கவோ

எந்த மண் இடம் தரும்”

நிலம் பெயர்ந்தவர்களின் ஒவ்வொரு குரலாகவும் நமக்குள் இக்கேள்வியின் வழியாக ஒரு வினையினை மாலதி மைத்ரி நிகழ்த்துகின்றார். இந்நிகழ்தல் சமரசமற்ற கொதிநிலை. சுயவினாவும், விடையும் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் நிகழும்.

இவ்வாறே தொடரும் சமூகத்தில் தனக்கான இடம் தன் முனைப்பின்றித் தேட வேண்டியுள்ளது. அது, தேவையான உடலிருப்பிற்கான தளம். ஒரு நிலையான நிலம் வசப்பட வேண்டும். அதன் வழியாகவே, மனிதர்களை முதன்மைப்படுத்த முடியும். மற்றும், கலைகள் மொழிவாயிலாகப் பிரகாசிக்கத் தொடங்கும். மனிதர்களுக்கான அமைப்பியல் சிந்தனைகள், தனிநபர் மேலாண்மை, பொது நபர் பங்கீடு போல்வனவெல்லாம் உருப்பெறும். நிலத்தோடிணைந்த வாழ்வைக் கடத்துதல் எளிது. உடலின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை நிலமே குளிர்விக்கும். நிலமற்று இங்கு நிற்றலென்பது கவிதையில் எவ்வகையில் மொழியப்படுகின்றது?

  “எந்நேரமும் வரவேற்கும்

    எனக்கான ஒரு அறை

   ஐந்திணை

   எதற்குள்ளும் இல்லை

   என் வீடு

   ஆனால்,

   நான் எப்போதும்

இளைப்பாற இடமளிக்கும்

குயில் கூட்டில்

எனது அரண்மனையைக்

கட்டியெழுப்புகிறேன்

தயவு செய்து

எனது முகவரியை

வேறெங்கும் தேட வேண்டாம்”

இதில் அனுக்கமான மனநிலை இல்லை. எதிர் மனநிலையில் வாழ்வின் துயர் வாசலைப் பகிர்கின்றது. தயது செய்து / எனது முகவரியை / வேறெங்கும் தேடவேண்டாம். இச்சொற்களினடியில் மறைந்திருக்கும் உடல் இருப்பு தன் சலித்தலை நிகழ்த்துகின்றது.

இங்கு காணப்படும் அனைத்தும் ‘காட்சிப் பார்த்தல்’ என்னும் பதத்தில் அடக்கலாம். பரவெளியின் எவ்வொரு நிகழ்தலும் காட்சி. காட்சியாகத் திரைதொடும் நீண்ட மொழிசப்தங்கள். இதில் விடுபடலோ, சேர்ந்திருத்தலோ அவரவர் விருப்பு. ஆனால், சாவகாசமாக மென்று அசைபோட பல்லிடுக்குச் சிக்கிகள் உண்டு. ஒருவருக்கொருவர் திட்டி வளர்த்துக்கொள்ளும் சொற்பிரயோகங்களில் இவ்வுடல் விசமாகின்றது மற்றும் வளர்கின்றது. விசம் மரணத்தையும் சம்பவிக்கும்.

சிரத்தையற்ற மனநிலையில், போட்டிக்குழாம்களில் மெத்தனமான செயல்களில், முன்நிற்கும் எதார்த்தம் மறைந்து கெட்டபுத்தியில் சஞ்சரிக்கத் தொடங்குதலிலிருந்து மரணவாழ்வு அடிக்கோடிடப்படுகின்றது.

இதை எப்படி கவிதையில் பார்ப்பது?

“ஒருவருக்கொருவர் உணர்த்த முடியாத

பீதியில் உறையும் நேசம்

இதழோரத்தில் துளிர்க்கும் விஷப்பற்கள்

வெகு விரைவிலேயே

விரல்கடையளவு வளர்ந்து விடுகின்றன”

பின் என்னவாகக் கூடும்? விசம் பார்த்தால் மரணம். விவாதக்குரல்களாக அதிகாரச்சொற்களில் அமிழ்ந்துக்கிடக்கும் குப்பிகள் விசத்தைக் கக்கும் போது மரணம் நிகழ்கின்றது. நேசம் என்பது பீதியாகின்றது. ஒருவருக்கொருவர் / உணர்த்தமுடியாத / பீதியில் உறையும் நேசம் / இவ்வாறானது தான் விசமாகின்றது. பின், நேசமே மாமிசமாகி உண்ணுதலுக்காகின்றது. மரணத்தை எதிர்ப்பார்த்திருக்கும் மனிதர்களின் சப்பி எறிந்த எலும்புகளுக்குள் ஒரு சாவுப் பறவை கூடமைக்கின்றது. இது உத்வேகமற்ற, சுயபரிசோதனையற்ற மனித நிகழ்வுக்கான வரிகளாகப் பார்க்கப்படுகின்றது.

“பின்

நம் நேசத்தின் மாமிசத்தை

தினந்தோறும் புசிக்கத் தொடங்குகிறோம்

சப்பி எறியும் எலும்புகளை அடுக்கி

அப்பறவை கூடமைக்க

அவயச்சூட்டில்

பூமி உருண்டு கொண்டிருக்கிறது”

மனித உருவுக்குள் எத்தனை விதமான நினைவுகள் ஞாபகப்படுத்தல்கள் புழங்கப்பட்டிருக்கும். எத்தனை மெய்ப்புகள், பொய்கள் பேசப்பட்டிருக்கும். உயிருள்ள வாழ்க்கையை உயிரற்ற மரணம் காவு கொள்ளப் பூமி சுழல்கின்றது. மரணமென்பது நிகழ்தலில் கூட அரசியல் எனும் போர்வாள் கழுத்தைச் சீவிச் செல்கின்றது. அதற்குக் காலமே பக்க பலம். யார் என்ன செய்ய முடியும் காலத்தை? ஆனால், குறிப்பிட்ட அரசியலை மாலதி மைத்ரி வட்டமிட்டுக் காட்டுகின்றார். வலுத்தலான குறியீடாகவும் கொள்ளலாம். சமூக உயிரிகளின் இயங்கு தளத்தில் நடக்கக்கூடிய நிகழ்வுகள் தான் அவை. இதனை அகவெளி, புறவெளிகளில் போராட்டமாகப் பார்த்து சாவுப்பின்னலை நேராக்குபவர் எங்கிருக்கின்றனர்?  பிறத்தல் x இறத்தல் என்பது யாருக்குரியதாக மாற்றப்பட்டு சமூக உயிரிகளில் விரிவடைந்து செல்கின்றது என்பதும்  கேட்க ஏதுவானதொன்று.

“காலத்தின் பக்கங்களில்

அழுத்தமான நிறங்களால்

எழுதிச் செல்கிறது

இறப்பின் கரம்

கொலைகளையும்

தற்கொலைகளையும்”

என்பதாக அதிகார உயரங்களின் கரம் இறப்பைப் பேசுகின்றது. இப்படியான இந்த அநாயச வாழ்வை ‘எனது மதுக்குடுவை’யில் ஊற்றிச் சுவைக்கவும் விரும்புகின்றார். இது, ஒரு தன்னிலை நிகழ்தல். எவ்வதிகாரக் கண்காணிப்புமற்ற சத்தக்குரல். வாழ்க்கையின் சுவாரசியம் உன்மத்தமேறிக் கிடக்கின்றது. அதனாலேயே,

“என்னிடமுள்ள இக்குடுவை

என் மூதாதையரிடமிருந்து வந்தது”

எனச்சொல்லி இவ்வெளியைக் குடுவையில் நிரப்புகின்றார். இவ்வாழ்க்கை வாழ்கின்ற மனிதர்க்கானது. இரகசியமற்ற சுவைத்தலில் எந்த மாற்றுக் கதையுமில்லை.  பன்னாட்டுச் சித்தரிப்புமில்லை. அதிகாரப்பரவலற்ற ஆளுகையின் கைக்கட்டலின்றி உலகைப்பருகுதல். பார்க்கப்போனால் பருகுதலென்பதே அழகு. அதில் பொழுதுகள், பொங்கும் மது, காதல், பால்யம், சுரைக்குடுவை, மர்மப்புன்னகை எல்லாம் பரிசாக வந்து போவதில் தான் கட்டற்ற மனது நிரம்புகின்றது.

“வீட்டுத்தென்னையின் முதல்காய்

குலதெய்வப் படையலானது

அடுத்த பாளையில் கள்ளிறக்கி

உலகை இரண்டாவது முறை

சுவைக்கக் கொடுத்தாள் அம்மா

மோகத்தின் பித்தேறிப் பருகிக் கொண்டிருக்கின்றேன்

இவ்வுலகை இக்குடுவையில் ஊற்றி”

இப்படி உலகைப் பருகிய பின் இப்பெரும் நிலம் முழுதும் முலைப்பாலால் ‘உயிர் சுரக்கும் தேனடையாக’ மாலதிமைத்ரியால் பார்க்கப்படுகின்றது. ஒவ்வொரு தாயின் மனித உருக்கள் குருதியினைப் பாலாக அருந்தி உயிர்க்கூடு நிரப்புகின்றன. எங்குப் பார்க்கினும் அமுதூட்டும் அன்னக் கிண்ணிகளாகக் காணத் தோன்றுகின்றது. இவ்வுலக உருக்களே பெண்களால் நிறைந்து நிறைந்து வழிகின்றது. களங்கமற்ற உணர்விலிருந்து சாத்தியப்படுத்துகின்றது. இது மிகப்பெரும் பெருமூச்சு. சமூகத்தின் மொத்த பெண்களின் வெளியினை கொண்டாடித் தீர்த்தல். உலகின் ஈர்ப்பென்பது அது தான்.

“கோடி கோடி முலைகளாய்ப் பூரிக்கும்

அண்டப் பேரொளியில்

குளம் குட்டை அருவி

ஆறு ஆழியெல்லாம்

பூ தேவியின்

கொக்கலிக்கும் முலைகள்”

அவரால்,

பாலை மட்டுமல்ல. இதயத்தைத் தருமளவுக்கு ஈரம் நிறைந்தும் சொற்களைக் கொடுக்கமுடிகின்றது. அதனுள் பெரும் அமைதியும், பேரழகும் பொருந்திக் கொள்கின்றது. சமூக உயிரிகளின் சாராம்சமாக,

“தானியங்கள் பூக்கும் தாவரமவள்” எனச் சொல்லி,

“பசியாயிருந்தால் பானையிலிருந்து

கொஞ்சம் அகழ்ந்து கொடுக்கிறாள்

சட்டியும் காலியானால்

அரைப்படியளவு உதிர்த்துத் தருகிறாள் இதயத்தை

பொங்கி உண்ண”

வாழ்க்கையில் விசாரணையற்ற மனநிலை இவ்வரிகளில் நிகழ்கின்றது. உடல்களின் அனுகூலமான உச்சம் இக்கவிதையின் வெளிப்பாடு. “பெண்ணின்றி வேறேது” என்ற பூரணம். அடைத்திருக்கும் உயிரைத் திறந்துவிட்டு வேடிக்கை பார்த்தலில் எத்தனை சுகம் காணமுடியும். சொல்லமுடியாத இன்பம் அது. அதைத்தான் உதிர்க்கின்றார் கவிஞர்.

சரி. இப்படியாக நீளும் கவிதைகளில் எதனை முன் வைக்கின்றார்? எதனை வேண்டுகின்றார்? எதனைத் தேவையென்கின்றார்?

பதிலாக, அவர் வரிகளில்,

“பேயின் சாயலெல்லாம்

பெண்

பெண்ணின் சாயலெல்லாம்

பேய்

பேயின் மொழி

கவிதை

கவிதையின் சாயலெல்லாம்

புனிதவதி

பெண்ணாகி

கவியாகி

பேயாகி

பேயின் மொழி

விடுதலை

பூமிக்கு வெளியே

நிற்கிறாள்

நீலி”

என்றதொரு கவிதையே அனைத்திற்குமானது.

என்னின் முடிவாக சொல்ல நினைப்பது,

‘உரையாடல் என்பது சமூகம்

நிகழ்வுகள் என்பது உடல்’.

அவ்வளவு தான்………

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.