சங்கரபாகம் அவருடைய மகன் வீட்டிற்கு வந்து பதினாறு நாட்கள் ஆயிற்று.
கூச்சமில்லாமல் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார். சில சமயம் மருமகளோடு ஒரு அவசரத்திற்காக ஒன்றாக உட்கார்ந்து மேஜையில் சாப்பிடும் போது இயல்பாக இருக்க முடியவில்லை. தண்ணீரை பாட்டிலில் வைக்கிறார்கள். அதைக் குடிக்கும் போது எப்படியும் சிந்திவிடுகிறது. அதிகம் பேசுவதில்லை. என்றாலும், ‘பார்த்து மாமா’ என்று சொல்லிவிட்டு , ‘சுந்தரி, ஒரு டவல் எடுத்துக் கொடு’ என்று மருமகன் சொல்வது போதுமானதாக இருக்கிறது.
சுந்தரி கூட, ‘அப்பா, உங்களுக்குப் பிடிக்கும்’லா. இன்னொரு அடை வாங்கிக் கிட்டா என்ன?’ என்று கேட்கிறாள். இவருக்கும் இன்னொரு அடை வேண்டும் தான். மருமகனைப் பாராமல், தட்டைப் பார்த்துக் குனிந்தபடி, ‘இல்லம்மா போதும். இதுவே சரியா இருக்கும். இதுக்கு மேலே என்றால் வயிறு சேட்டை பண்ணும்’ என்று சொல்லிவிடுகிறார். அதே போல, வெண்ணெய் கொஞ்சம் வைக்கட்டுமா? என்றாலும், ஏதோ ஆயுளுக்கும் வெண்ணெய் வைத்துச் சாப்பிட்டதே கிடையாது என்பது போல, ‘ ஐயையோ’ என்று சுருக்கமாகச் சொல்லி விடுகிறார். இந்த ‘ஐயையோ’ எல்லாம் சமீப காலத்தில் இப்போது வந்தது. மகள் வீடுதானே, மகன் வீடுதானே என்று சுபாவமாய்ப் புழங்கினது எல்லாம் கனகு என்கிற கனகலட்சுமி காலத்தோடு போயிற்று. என்னவோ அவள்தான் பகலையும் ராத்திரியையும் தனித்தனியாகக் கொண்டு வந்து இவரிடம் சேர்ப்பித்த மாதிரியும், இப்போது அப்படி எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லாம் ஒன்றுபோல இருக்கிறதாகவும் தோன்றிவிட்டது. துப்புகிறதுக்கு நான்கு விதை இல்லாவிட்டால் அது என்ன ஆரஞ்சுப் பழம் என்று அவருக்குப் படுகிறது.
பழங்களுக்கும் அவருக்கும் ஒரு ஓட்டுதல் உண்டு. மாம்பழத்தைத் தோல் சீவித் துண்டு போடுவது, சப்போட்டா சதைப் பற்றை ஒரு சுளை மாதிரிக் கரண்டியால் எடுத்துக் கிண்ணத்தில் போடுவது, நாவல் பழத்திற்கு உப்புப் போட்டுக் குலுக்கி வைப்பது,கீரை கடைகிற மத்தால் தட்டித் தட்டி, இரண்டாக உடைத்த மாதுளையின் முத்துக்களை எடுப்பது என்பதை எல்லாம் மிகுந்த ஈடுபாட்டோடு செய்வார். ஆனால் அந்தச் சமயத்தில் ஒரு துண்டோ, ஒரு சுளையோ எடுத்து வாயில் போடமாட்டார். ‘ அது என்ன பச்ச நாவியா? அல்லது விரதக் கொழுக்கட்டையா? ஒரு துண்டு வாயில போட்டுப் பார்க்கக் கூடாதுண்ணு யாரும் சட்டமா போட்டிருக்காங்க?’ என்று கனகு எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறது உண்டு. கனகுவுடைய கடைசித் தங்கச்சி, சங்கரபாகத்துடைய கடைக்குட்டிக் கொழுந்தியாள் ஒரு தடவை ரொம்ப அழகாகச் சொன்னாள். ‘அத்தான் மாம்பழத்துக்குத் தொலி சீவுகிறது சாமி படம் வரைகிறது மாதிரியில்லா இருக்கும்;. சங்கரபாகத்திற்கு அப்படி அவள் சொன்னத்தை கேட்டதும், அப்படியே கத்தியைக் கீழே வைத்துவிட்டு, பிசுபிசுக்கிற விரல்களோடு அவளுடைய கையைப் பிடித்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது. கனகுவைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு அப்படி எல்லாம் செய்து விட முடியுமா?
உலகத்தில் எவ்வளவோ செய்யவேண்டும் என்றுதான் தோன்றுகிறது அதை எல்லாம் செய்துவிடவா செய்கிறோம்? மழையில் தரையோடு தரையாக நகர்ந்து செல்லும் கொப்புளத்தை என்றைக்காவது தொட்டிருக்கிறோமா? சங்கரபாகத்திற்குக் கல்யாண வீட்டு ஆக்குப்புரையில் ஒத்தாசை செய்யப் பிடிக்கும். இப்போது அல்லவா காது குத்துக்குக் கூட மண்டபமும் புண்ணாக்கும் வந்திருக்கிறது. அவியலில் தேங்காய் எண்ணெய் விட்டுக் கிளறும் போது, அரிசிப் பாயசம் கொதித்து அச்சுவெல்ல வாசனையோடு தளதளவென்று வெண்கல உருளியில் துள்ளும் போது எல்லாம் பார்த்துக் கொண்டே இருப்பார். கல்யாண வீட்டுக் கோட்டைஅடுப்புக்கு என்றே பருவட்டாகக் கீறிய உரைவிறகை தவசுப் பிள்ளை தள்ளிவிடும் போது, முகத்தின் மேல் வெக்கை அடிக்கிற அளவுக்கு சங்கரபாகம் நெருங்கி நிற்பார், சாமியாடும் பரமசிவ தாஸ் கட்டியிருக்கும் மஞ்சள் சாயவேட்டியைத் தோரணம் கட்டியது போல, தீ வீசி வீசி எரிகிற போது, அப்படியே ஐந்து விரல்களையும் உள்ளே நீட்டி விடலாமா என்று கூட அவருக்குத் தோன்றும். குறுக்குத் துறைக் கோவிலில் சித்திரை விசுவுக்கும் வைகாசி விசாகத்துக்கும் எல்லாம் கரைத்து வைத்திருக்கிற சந்தனத்தில் கையை முக்குகிறது மாதிரிக் கிடையாது அது என்று அவருக்குத் தெரியும். ஆனால் அப்படி எல்லாம் ஓரோர் சமயம் அவருக்குத் தோன்றுவது உண்மைதான். அதற்காக அப்படிச் செய்து விடுவாரா என்ன?
சாகிறவரைக்கும் கனகு அவரை நம்பவில்லை. அப்படித்தான் ஒவ்வொரு முறையும் நினைத்தாள். கல்யாணம் ஆகி, சுந்தரி பிறந்து இரண்டு மூன்று வயதிலேயே அது ஆரம்பித்துவிட்டது. கனகு இவருடன் பேசுவதற்கென்றே ஒரு வகையான குரலையும் பேச்சையும் வைத்திருந்தாள். ‘நீரு என்னையும் பிள்ளைகளையும் நடுத்தெருவில விட்டுட்டு, எவள் பொறத்தாலேயாவது போகத்தான் போறேரு. எனக்கு நல்லாத் தெரியும்’ என்று அவள் சத்தம் போட ஆரம்பித்தபோது ராத்திரி ஏழு அல்லது எட்டு மணி இருக்கும்.
புத்தக அலமாரியில் இருந்த புத்தகத்தை எல்லாம் இறக்கி கட்டில் மேல் வைத்துவிட்டு, சங்கரபாகம் தான் தன் கைப்பட அந்த அலமாரிக்கு வார்னிஷ் அடித்திருந்தான். அலமாரிக் கதவு இரண்டு கையையும் விரித்தது போல அகல விரிந்து கிடக்க, ஈர வார்னிஷ் வாசனை வீடு முழுவதும் இருந்தது. சங்கரபாகம் கட்டில் மேல் இருந்து கைக்கு எட்டின புத்தகத்தை எடுத்துத் திருப்பிப் பார்த்துக்கொண்டு இருந்தான். சுந்திரியை இடுப்பில் இடுக்கியபடி கனகு வேகவமாக வந்து, கைப்பிள்ளையைத் தக்கென்று தரையில் வைத்தாள். ‘இந்தப் பிள்ளை மூஞ்சியை ஒரு தடவைக்கு மேலே, கூட இன்னொரு தடவை பார்த்திருப்பேரா? அந்த அடிச்சடியா அனுப்பின பொங்கல் வாழ்த்தை விடிஞ்சதில் இருந்து நூறு தடவை உத்து உத்துப் பாத்துக்கிட்டு இருக்கேரு. அதிலே இருந்து என்னமாவது வடியவா செய்து? என்று ஆட ஆரம்பித்தாள்.
அது பொங்கல் வாழ்த்து அல்ல. பிறந்த நாள் வாழ்த்து. நேர்த்தியாக அச்சடிக்கப் பட்டிருந்தது. ஆண்,பெண் முகங்கள், ஹார்ட்டின் படங்கள் எதுவும் கிடையாது. பனி வெள்ளை போன்ற வழவழப்பான அட்டையில் லேவண்டர் நிறத்தில் பூங்கொத்து. சங்கரபாகத்திற்கு அதுதான் லேவண்டர் பூவா என்று கூடத் தெரியாது. பவுடர் டப்பாவில் பார்த்திருக்கிறான். அந்தக் கருநீலம் அவனுக்குப் பிடித்திருந்தது. லாவண்டர் என்கிற பெயரே நன்றாக இருந்தது. இந்த அட்டையும் அதனால் பிடித்திருந்தது. மற்றபடி, அது செல்வி அனுப்பியது என்பதைத் தவிர, இன்றைக்கு அதை அவன் கையில் எடுத்துக் கூடப் பார்க்கவில்லை.
செல்வியிடமிருந்து சில புத்தகங்கள் சங்கரபாகம் அலமாரிக்கு வந்திருக்கிறது. ‘அன்புமிக்க செல்விக்கு’ என்று கையெழுத்துப் போட்டு சங்கரபாகம் செல்விக்கு கொடுத்து, திரும்பவும் அவனுடைய அலமாரிக்கே வந்திருக்கிற சில புத்தகங்களை கனகலட்சுமி எப்போது பார்த்தாள் என்று தெரியவில்லை. பார்க்கவேண்டும் என்று தீர்மானித்துவிட்டால், வீட்டிலேயே இருப்பவளுக்கா பொழுது கிடைக்காது? அவனுக்கு அதில் ஒளித்து வைக்க ஒன்றும் இல்லை. எந்த வகையில் என்றாலும் அவனுக்குப் பிடித்தமான புத்தகங்கள் அவை. அப்படிப் பார்த்தால், சங்கரபாகம், வேண்டும் என்றே தொலைத்து விட்டதாகப் பொய்சொல்லி , மார்கெட் லைப்ரரியில் அபராதம் கட்டிய ‘நீலகண்டப் பறவை’யின் முதல் பக்கத்தில் லா.சரா கதைகளில் வருகிற மாதிரிப் பெயரில், நீலாயதாட்சி என்று கையெழுத்து இருக்கிறது. அதற்கு அவன் என்ன பண்ண முடியும்?
அலுவலகத்தில் சரஸ்வதி பூஜையை ஒட்டி ஒரு பட்டிமன்றம் நடந்தது. இவன் பேசின அணி ஜெயித்து, முதல் பரிசாக இவன் உட்பட மூன்று பேருக்கும் மில்க் குக்கர் கொடுத்தார்கள். சங்கரபாகத்துக்குப் பட்டிமன்றப் பேச்சு எல்லாம் வரவில்லை. இவனைவிட எதிர் அணியில் சின்ன மரியம் நன்றாக பேசினதாகச் சொல்லி அந்த நிகழ்ச்சியைத் தலைமை தாங்கியவர் கையால் அதை அங்கேயே அந்தப் பெண்ணுக்குக் கொடுத்துவிட்டான். அதை மறைக்கவும் இல்லை. இப்படித்தான் கனகுவிடம் சொன்னான். ‘அது நல்லா பேசுச்சு. கொடுக்கணும்ன்னு தோணுச்சு. கொடுத்துட்டேன்.’
கனகுவுக்கு அவ்வளவு ஆங்காரம் எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை. ‘அந்த சிலுப்பட்டை தானே. பார்வதி டாக்கீஸ்லே தான் பார்த்தேனே அவள் லட்சணத்தை. ஒருத்தர் பாக்கி இல்லாமல் பல்லைப் பல்லைக் காட்டிக்கிட்டு இருந்தாளே அவதானே. அவ பேசினாளாம் இவரு மில்க் குக்கரு உனக்குத்தான்’னு தூக்கிக் கொடுத்தாராம். அடுத்த ட்ரிப் எவளாவது பேசுவா, வேணும்’னா எங்க வீட்டில போட்ட மைனர் செயினைக் கழத்திக் கொடுத்திட்டு வந்திரும்.’ சங்கரபாகம் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. அன்றைக்கு ராத்திரி, தன் கழுத்தில் கிடந்த செயினைக் கழற்றி அவளிடம் கொடுத்ததோடு சரி. ‘இந்த ரோஷத்துகு ஒண்ணும் குறைச்சல் இல்லை’ என்று சொல்லிக்கொண்டுதான் அதை வாங்கி வைத்தாள். சங்கரபாகத்திற்கு எச்சிலைக் கூட முழுங்க முடியவில்லை. தொண்டையை அடைத்தது. வெளியிலேயும் உடனே போக முடியாது. அதற்கும் ‘எவ ஞாபகம் வந்துட்டுது. சட்டையை லாத்திக்கிட்டுக் கிளம்பியாச்சு’என்று சொன்னாலும் சொல்லுவாள்.
சங்கரபாகம் பட்டாசலில் கட்டியிருந்த தொட்டிலில் தூங்குகிற சின்னவனைப் பார்த்துக்கொண்டே நின்றான். சுந்தரிக்கு அப்புறம் ஐந்தாறு வருடம் கழித்துப் பையன் பிறந்திருந்தான். தொட்டில் கட்டின வெள்ளைக் காடாத் துணியின் வாசனையும் மூத்திர வாசனையுமாக உள்ளே தூங்கும் குழந்தையைப் பார்க்கப் பார்க்க அழுகை வெடித்துக்கொண்டு வந்தது. தொட்டில் கட்டியிருந்த மாகாணிக்குப் பக்கம் உத்திரத்தில் கூடு கட்டியிருந்த அடைக்கலாங்குருவி அவனுடைய நடமாட்டத்தில் கலைந்து வெளியே பறந்தது. இரும்பு பீரோ தலையில் நீட்டிக்கொண்டு இருந்த உடைந்த சிலேட்டுப் பலகையில் உட்கார்ந்து அசையாமல் பார்த்தது. சங்கரபாகத்திற்கு எல்லாம் இவ்வளவுதான் என்று தோன்றிற்று. அவன் இந்த இரவில் நடந்த இத்தனையும் தாண்டி இங்கே தொட்டில் பக்கத்தில் நிற்பது எல்லாம் அந்தக் குருவியைப் பார்ப்பதற்கு மட்டும்தான் என்று பட்டது. கனகு உதிர்த்த அத்தனை வார்த்தைகளும் தன்னை கல் தொட்டித் தண்ணீரில் முக்கிக் கழுவி, ஈரம் போக உதறி இப்படி ஒரு குருவியாக அமர்ந்துவிட்டது என்று நம்பினான். இப்போது குழந்தையின் இடுப்பு தொட்டில் துணிக்குள் நெளிந்து, கால் பாதம் தொட்டிலுக்கு வெளியே நீண்டுவிட்டு மறுபடி உள்ளே போய்விட்டது.
இப்படி குருவி மட்டும் இல்லை. காகம், கிளி, மைனா, பருந்து என்று எல்லாவற்றையும் காண்பதற்கான சந்தர்ப்பம் சங்கரபாகத்திற்கு வந்து கொண்டேதான் இருந்தது. பத்தாவது வகுப்பில் பள்ளிக்கூடத்தில் முதலாவதாக பசுபதி வந்திருந்தான். அப்பா அம்மாவை வரச் சொல்லி இருந்தார்கள். சங்கரபாகமும் கனகுவும் போய் ஹெட் மாஸ்டர் அறைப்பக்கம் நின்றார்கள். சங்கரபாகத்துடன் சின்ன வகுப்பில் படித்த ஹஸீனா அங்கே வேலை பார்க்கிறாள் என்று அவருக்கே தெரியாது. பசுபதிக்கு ஹஸீனா வகுப்பு எதுவும் எடுக்கவில்லை. ஆனால் சங்கரபாகத்தை அடையாளம் தெரிந்து வந்து ரொம்ப நேரம் பேசினாள். கனகுவைப்பற்றி அவளுக்குத் தெரியாது அல்லவா. ஏதோ ஒரு சந்தோஷத்தில் கையைப் பிடித்துக் கொண்டு இரண்டு வார்த்தைகள்பேசிவிட்டாள் போல, இவருக்கே அது நினைவில்லை. எல்லாம் முடிந்து, ஸ்கூல் காம்பவுண்டை விட்டுக் கூட மூன்று பேரும் வெளியே வந்திருக்கவில்லை. கனகு ஆரம்பித்துவிட்டாள். ‘கையைப் பிடிக்கிறதுக்கு, காலைப் பிடிக்கிறதுக்குண்ணு ஒவ்வொரு இடத்திலேயும் ஒருத்திய வச்சிருப்பீரு போல’ பசுபதி, ‘அம்மா. எங்க +2 மேத்ஸ் மேம் அம்மா அது’ என்று சொன்னான். அவன் குரல் மிகவும் உடைந்திருந்தது. சங்கரபாகம் தன் மகனுடைய தோளில் கை வைத்தார். கனகு தரையில் ‘தூ’ என்று துப்பிக்கொண்டே ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தாள்.
சுந்தரிக்கு கல்யாணம் எல்லாம் பேசி முடித்திருந்தது. வெற்றிலை கை மாறுகிற சமயம், சுந்தரி மாப்பிள்ளைக்குச் சொந்தக்காரர் பெண்ணாக இருக்க கூடாதா என்ன? இந்தப் பக்கம் பாங்க் ஆடிட் வேலையாக வந்திருப்பார்கள் போல. தங்கள் உறவினர் பையனுக்கு முடிவாகி இருக்கிறதே என்று பெண்ணைப் பார்த்துவிட்டுப் போக வந்ததில் என்ன தப்பு இருக்கிறது.
ஆப்பிள், உலர் பழங்கள், முந்திரிவகை இனிப்புகள் என்று வாங்கி வந்திருந்தார்கள்.சுந்தரியை அவருக்குப் பிடித்துப்போய் விட்டது. சுந்தரி கையைப் பிடித்து உட்கார்ந்து, ஆங்கிலத்தில் பேசிச் சிரித்துக் கொண்டிருந்த அரை மணி நேரத்தில் சங்கரபாகம் முகத்திலேயே ஒரு தெளிவு வந்துவிட்டது. இது உலகம் முழுவதும் உள்ளது தானே. ஒரு ஐம்பது வயது தாண்டிய ஆணுக்கு, அவனை விடப் பத்து வயது குறைவாக இருக்கிற பெண், கலகலப்பாக வாய்விட்டுச் சிரித்து, மனம் விட்டுப் பேசுவது பிடித்துத் தானே போகும்,
இத்தனைக்கும் அந்தப் பெண் இருந்தது ஒரு காப்பி குடிக்கும் நேரம் தான். சுந்தரியும் அவரும் ஆங்கிலத்தில் பேசும்போது, சங்கரபாகமும் இடையில் இடையில் ஆங்கிலத்தில் பேசிக் கலந்து கொண்டான். வழக்கத்தை விடச் சற்று உரக்கச் சிரித்தான். வாசலில் டாக்ஸி நின்றது. புறப்படும் போது சுந்தரி பையைத் தூக்கினாள். சுந்தரி கையில் இருந்து பையை வாங்கி கார் வரை சங்கரபாகம் போய், வழி அனுப்பிவிட்டு வந்தான். சுந்தரி கை அசைத்தது போல அவனும் கை அசைத்தான். ‘அருமையான மனுஷி’ என்று சுந்தரியிடம் சொன்னது கனகுவின் காதில் விழுந்துவிட்டது.
‘ஏன் அருமையா இருக்க மாட்டா? இங்கே ஒருத்தி அடுப்படியிலே கிடந்து கசங்கிக்கிட்டு இருப்பா, உயரமும் தண்டியுமா ஒருத்தி, அலுங்காம குலுங்காம காரில வந்து இறங்கி, எனக்குத் தான் முப்பத்தி ரெண்டு பல் இருக்குண்ணு இளிச்சிட்டுப் போனா அருமையாத் தான் இருக்கு.’ என்று ஆரம்பித்தாள். வந்திருந்த பெண் அவருடைய உடல் வாகுக்கு என்ன பண்ணுவார். கனகு மிக அசிங்கமாக ஒரு சைகை ச்செய்ததுதான் சங்கரபாகத்தைக் குப்புறத் தள்ளிவிட்டது. தன்னுடைய கைகளை இரண்டு மார்புப் பக்கமும் கூப்பி வைத்துக்கொண்டு, ‘இப்படி இப்படி ரெண்டையும் ஆட்டிக்கிட்டு அவ பேசுவா. நீரு அவ குசுவைக் குடிச்சுக்கிட்டு காரு வரைக்கும் அவ பொட்டி படுக்கை எல்லாம் கொண்டு வச்சிட்டு வருவீரு. இங்கே நான் விக்கிச் செத்தால் கூட, ஒரு மடக்குத் தண்ணி கோரிக் கொடுக்க எனக்கு நாதி கிடையாது. இதுலே அப்பனும் மகளும் வேறே ஒத்து’ என்று சத்தம் போட்டாள். சுந்தரி தலையில் கையை வைத்துக்கொண்டு ‘ அம்மா’ என்று ஒரு அடிப்பட்ட மிருகம் போலச் சத்தம் கொடுத்தாள். சங்கரபாகம் ஒன்றும் பேசவில்லை. கட்டிலில் போய் குப்புறப் படுத்துக்கொண்டு குலுங்கி குலுங்கி அழுதார். கொஞ்ச நேரம் கழித்து, கதவைத் திறந்து சுந்தரி உள்ளே வந்தாள். கட்டிலிலேயே அப்பா பக்கத்தில் விளிம்போடு விளிம்பாக உட்கார்ந்தாள். அவள் பிடிக்கிற வசத்தில் இருந்த சங்கரபாகத்தின் கையை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டாள். “அம்மாவைப் பற்றித் தான் உங்களுக்குத் தெரியும்’லா’ என்று தட்டிக் கொடுத்தாள். ‘ இது என்ன புதுசா?’ என்றாள். ‘அமைதியாக இருங்க” என்று இப்படிச் சின்னச் சின்னதாகச் சொன்னாள். சொன்னது போதாது என்று தோன்றியதோ என்னவோ, ‘ஒண்ணுமில்லை’என்று மெதுவாகச் சொல்லி, தன் கையில் வைத்திருந்த அப்பாவின் கையை மெல்லத் தட்டி சாந்தியைக் கொடுத்தாள்.
சங்கரபாகத்தை சமீப ஆறேழு வருடங்களில் சுந்தரி தொட்டதே இல்லை. கனகு தொட்டது கூடக் குறைச்சல். யாருமே தொடவில்லை என்றும், யாருமேஎ தொடாதது போன்ற ஒரு விதத்தில் அவருடைய மகள் அவரைத் தொட்டுவிட்டது போலவும் சங்கரபாகத்திற்குத் தோன்றியது. ‘நீ போ ம்மா. நான் கொஞ்சம் படுத்திருந்துவிட்டு வாரேன்’ என்று சொல்லிவிட்டு, தலையணையில் இருந்து முகம் திருப்பிப் பார்த்தார். ‘சரி ப்பா’ என்ற சத்தம் மட்டும் கேட்டது. அந்த அம்மா கொண்டு வந்திருந்த மல்லிகைப் பூவும் தலையுமாக சுந்தரி அப்படி நடந்து போகிற முதுகுத் தோற்றம் பிடித்திருந்தது. சங்கரபாகம் அந்த நிறைவோடு அந்தக் கணம் சாக விரும்பியது உண்மை.
‘இதுக்கெல்லாம் மனுஷன் சாவானா டே?’ ராமலிங்கம் பெரியப்பா அவரிடம் சொன்னார். இப்படி இப்படி நடந்தது பெரியப்பா என்று சங்கரபாகம் அவரை மருந்துக் கடைப் பக்கம் பார்த்த போது சொன்னார். அந்த மருந்துக் கடையில் பெரியப்பாவும் அவருடைய நான்கைந்து சினேகிதர்களும் தினசரி கூடுவது வேறு ஒன்றிற்காக. பெரிய கடை அது. உட்பக்கம் வீதி ஜாஸ்தி. அங்கே இருந்து ஆளுக்கு இரண்டு மடக்கு சாப்பிட்டுவிட்டு வருவார்கள். காருகுறிச்சி நாதஸ்வரம் கேட்டுவிட்டு எழுந்து வருகிற மாதிரி, முகத்தில் ஒரு களை இருக்கும்.
‘கொஞ்ச தூரம் என் கூட வா. ரயில்வே ஸ்டேஷனில் உடகார்ந்து போவோம்’ என்று கூட்டிக்கொண்டு போனார். ‘ கடுத்தான் எறும்பு இருக்கப் போகுது. பார்த்து உட்காரு’ என்று சிமெண்ட் பெஞ்சைக் காட்டினார்.
’பாவம் அந்தப் பிள்ளை என்ன டே பண்ணும்? அந்தக் குடும்பத்துக்கே அப்படி ஒரு பிசகல் உண்டும். கனகுவை உனக்கு கட்டிவைக்கச் சொல்லி ஏற்பட்டுப் பேசினதில் நானும் ஒருத்தன்’னு உனக்குக் கூட எம் மேல வருத்தம் இருக்கும். நான் சொன்னா நீ நம்பணும். கனகுவோட சித்தப்பன், பெரியப்பன் மக்கமாரு எல்லாரும் குடும்பத்துக்கு ரெண்டு பேரு ஆடிக்கிட்டும் பாடிக்கிட்டும் இருக்காங்க என்கிறது வாஸ்தவம், ஆனா நான் அறிய கனகு குடும்பத்துல யாருக்கும் சத்தியமா அப்படி ஒண்ணும் கிடையாது. நான் ஒண்ணுக்கு நாலு தடவை விசாரிச்சுட்டுதான் உங்க அப்பாகிட்டே துப்புச் சொன்னேன். நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. அங்கே சுத்தி இங்கே சுத்தி, அதே கதை இவளுக்கும் வந்தும் உன் தலையில் விடியும்னு யாரு நினைச்சா? என்றவர் அண்ணாந்து மேலே அரச மரத்தையே பார்த்துக்கொண்டு இருந்தார். கீழே கிடந்த ஒரு பழப்பு இலையைப் பொறுக்கிக் கையில் வைத்து அசையாமல் பார்த்து, மரத்தைக் காட்டி, ‘இதுவும் அங்கே தான் இருந்தது இம்புட்டு நாளும்’ என்றார். ‘மகளுக்குத் தாலி கட்டுகிற வரைக்கும் வந்துட்டே, தாழையூத்துக்கும் ஜங்கஷனுக்கும் எவ்வளவு தூரம்? இனிமேலேயா தண்டவாளம் தடம் புரண்டுவிடப்போகிறது. இந்த மட்டுக்கும் ஊர் வந்து சேர்ந்தமே’ன்னு போயிக்கிட்டு இருப்போம்.’ என்று ராமலிங்கப் பெரியப்பா சொல்லும் போது மூன்றாவது பிளாட்பாரத்தில் ஏதோ ஒரு வண்டி வந்து நின்று கூவியது. சங்கரபாகத்திற்கு அதைப் பார்த்தவுடன் மற்ற எல்லாம் விலகிவிட்டது. உலகத்திலேயே மிக அழகானது ஒரு ரயில் வந்து இப்படி அதன் கடைசி நிலையத்தில் நிற்கிற காட்சிதான் என்று தோன்றியது.
கனகு தன்னை மட்டும் பயணத்தில் விட்டுவிட்டு, சட்டென்று அவள் இறங்கிப் போய்விடுவாள் என்று எதிர்பார்க்கவே இல்லை. பசுபதிக்குக் கல்யாணம் எல்லாம் ஆகி, இரண்டாவது பொங்கல் படி கொண்டுவந்து வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். பட்டாசலில் மஞ்சள் குலையும் கரும்பும் கதலிப் பழத் தாரும் தாம்பாளமும் அப்படியே இருக்கிறது. களிமண் அப்பின சிறு கிழங்கு வாசம் அதன் தனி அடையாளத்துடன், வாசலில் பாம்பாட்டியோ குடுகுடுப்பைக்காரனோ சத்தம் கொடுக்கிறார்கள். தலையணைப் போட்டு படுத்திருந்த கனகு எழுந்திருந்து போனாள்.
அவளுக்கு என்னவோ அப்படி ஒரு பழக்கம். வாசலில் யார் வந்து நின்றாலும் அவர்களுடன் போய் பத்து நிமிஷம், அரைமணி நேரம் என்று பேச்சுக் கொடுக்காமல் வரமாட்டாள். மேல் சட்டை போடாமல் திறந்த மேனிக்கு வாசலில் வந்து நின்ற ஒரு புத்திக்குச் சரியில்லாத பெண்ணை, நடையில் உட்கார்த்தி வைத்து சாப்பாடு எல்லாம் போட்டு, கை சைகையிலேயே எந்த ஊர், கல்யாணம் ஆகிவிட்டதா, ஏன் இப்படி ஆகிவிட்டாள் என்பது போன்ற விபரங்கள் எல்லாம் கேட்பாள். அவள் என்ன சொல்வாளோ, இவளுக்கு என்ன புரியுமோ, சங்கரபாகத்திடம் சுந்திரியிடம் எல்லாம் வாசலில் நிற்கிறவளுடைய பூர்வோத்திரம் வரைக்கும் சொல்வாள். பசுபதியை ‘பசுவதி’ என்று சொல்லத்தான் அவளுக்கு வரும். ‘ஏ பசுவதி. உன் காம்ப்ராவை எடுத்துக்கிட்டு வந்து எங்க ரெண்டு பேரையும் ஒரு போட்டோ பிடி’ என்று சத்தம் கொடுப்பாள். வாசலில் ஆயிரம் வருஷம் வாழ்ந்த கிழவி மாதிரி ஒருத்தி, வரி வரியாக முகத் தோல் சுருங்கி, பல்லில் கருப்பு விழுந்து, பூனைக் கண் இடுங்கிச் சிரித்துக்கொண்டு இருப்பாள். ‘ஏழு சென்மத்தையும் இடைவெளியே இல்லாமலே தவ்வித் தவ்வி வந்திருப்பா போல’ என்று சொல்வாள். ‘பல ஸ்தலம், பல மண்ணு, பல தண்ணி’ என்று சொல்லி அவள் கையைப் பிடித்துக்கொண்டு, ‘ அப்பாவைக் கொஞ்சம் எழுந்திருச்சு வந்து பார்க்கச் சொல்லு. பூனை கண்ணு மினுங்குகிறதைப் பார்த்தால், அஞ்சு தலைப் பாம்பும் ஆதி சேஷணுமா தெரியுது’ என்பாள். பசுபதி மறுப்புச் சொல்லமாட்டான். படம் பிடிப்பான். சங்கரபாகமும் மேல் துண்டைப் போர்த்திக் கொண்டு வாசலில் வந்து நிற்பார். மற்ற நேரங்களில் கனகலட்சுமி எப்படி எப்படியோ இருந்திருந்தாலும் இது போன்ற நேரங்களில் ஒரு அபூர்வ மனுஷியாக அவள் மாறிவிடுவது போல இருக்கும். பூர்வத்தில் இருந்து அபூர்வத்திற்கு அவள் எப்போது மாறினாள். எப்படி மாறினாள் என்று கனகுவையே பார்த்துக் கொண்டு இருந்துவிடுவார்.
அப்படித்தான் அன்றைக்கும் ஒரு பாம்பாட்டிக்குச் சோறு எல்லாம் போட்டுவிட்டு, ‘இவனைப் பார்த்தாலே அப்படித்தான் இருக்கு. நாக ரத்தினத்தைக் கக்கி விட்டு அதோட வெளிச்சத்தில் இரை தேட வந்தது மாதிரிதான் இருக்கான். உளுந்தம் பருப்பு வாசனை தாங்கமுடியலை அப்படியே நெஞ்சு அடைக்கு’ என்று கையிலிருந்த சிப்பலையும் வெங்கலக் கரண்டியையும் அங்கணத்தில் போட்ட கையோடு அங்கேயே உட்கார்ந்தவள் ‘சுந்தரி கொஞ்சம் தண்ணி கோதிக் கொடு’ என்றாள். வெயிலில் கிடந்த உள்பாவாடையை மடித்து இரண்டாம் கட்டுக் கொடியில் போட்டு விட்டு சுந்தரி வருவதற்குள் கனகு ஒரு பாம்பைப் போல நெளிந்து அடுப்படியில் கிடந்தாள். பேச்சு மூச்சில்லை. சுந்தரி ‘அப்பா’ என்று கத்தும் போது அங்கணக் குழிச் சிப்பலில் ஒட்டியிருந்த சோற்றுப் பருக்கையை, கூழை வாலோடு ஒரு மூஞ்சுறு சாப்பிட்டுக் கொண்டு இருந்தது. அதன் எளிய கனத்தில் கீழ்ப் பாத்திரம் சரிந்து இடம் பெயர்ந்து உலோகச் சத்தம் முணுக்கென்று கேட்டு அடங்கியது.
கனகு தன்னை இப்படி அந்தரத்தில் விட்டுவிட்டுப் போய் விடுவாள் என சங்கரபாகம் நினைக்கவே இல்லை. சுந்தரியை விட, பசுபதியை விட எல்லாம் சங்கரபாகம் தான் தவியாகத் தவித்தார். சாப்பாட்டுத் தட்டு முன்னால் உட்கார்ந்துகொண்டும் பசுபதி வீட்டுக்காரியிடம், ‘உங்க அத்தைக்கு இலை போட்டுப் பரிமாறுகிறது என்றால் ரொம்பப் பிடிக்கும். ஒரு பூட்டு இலை வாங்கினால், மூணாவது நாலாவது இலைதான் இளசா இருக்கும். அதைப் போட்டுச் சாப்பிடச் சொல்லுவா’ என்று சொல்வார். ‘ரெண்டு வாழைக் கண்ணு புற வாசலில் வைக்கணும்ணு தோணாமலே போச்சு’ என்று வருத்தப் படுவார்.
ஒரு நாள் ராத்திரி தூங்காமல் இங்கேயும் அங்கேயும் நடந்து கொண்டு இருந்தார். ‘ என்னப்பா தூங்கலையா? இருட்டுக்குள்ளே ஸாந்திக்கிட்டே இருக்கீங்க? ‘ பசுபதி லைட்டைப் போட்டான். ‘ஒரு சத்தமுமே இல்லையேப்பா? இப்படி காமா இருக்கு’ என்றார். அவர் குரலை விடப் பார்வை வேறு மாதிரியான திகைப்பில் இருந்தது. ‘இருக்கட்டு பா’ என்று பசுபதி சங்கரபாகம் தோளில் கைவைத்தான். எப்போதும் முண்டா பனியன் போடுகிற அவர் இப்போது எதுவுமற்று இருந்தார். காரை எலும்பு தென்னிக் குழி விழுந்து கிடந்தது. ‘ரேடியோ வச்சிட்டுப் போறேன். ஏதாவது தூக்கம் வருகிறவரை கேட்டுக்கிட்டு இருங்க’ என்று பசுபதி பொத்தானை அமுக்கிய போது, ‘மலர்கள் நனைந்தன பனியாலே’ என்று பாட்டு வந்தது. ‘அணைச்சிரு. வேண்டாம்’ என்று சொல்லி விட்டு அவர் கீழே குனிந்து கொண்டார். ‘வர வர அப்பா யார் முகத்தையும் பார்த்துப் பேசுகிறதை விட்டுவிட்டார் அக்கா’ என்று மறுநாள் பசுபதி ஃபோன் பண்ணிய போது, சுந்தரி அந்தப் பக்கத்தில் அழ ஆரம்பித்தாள்.
நேற்று ராத்திரி கூடச் சாதாரணமாகத்தான் பேச்சு ஆரம்பித்தது. ‘அம்மா திதி இந்த வருஷம் எந்த தேதிக்கு வருதுப்பா? தம்பி கிட்டே ஞாபகப் படுத்தணும். டூர் கீர்ன்னு அவர் வெளியூர் போயிரக் கூடாது அல்லவா?’ என்று சுந்தரிதான் கேட்டாள். சங்கரபாகம் அதற்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை. அது தன் கவனத்தில் இருக்கிறது என்பது போலத் தலையை அசைத்துக் கொண்டார்.
சுந்தரி ஏதோ படித்துக்கொண்டு இருந்தாள். இந்த வீட்டில் ஹாலில் அருமையாக இரண்டு சோஃபாக்கள், நான்கு நாற்காலிகள் இருக்கின்றன. சுந்தரி எப்போது என்றாலும் ஹாலில் இருந்து அடுத்த அறைக்குப் போகிற சுவரில் சாய்ந்தபடி, தரையில் உட்கார்ந்துதான் படிப்பாள். பெண்கள் தங்கள் தாய் வீட்டுச் சுவர்களை இப்படித் தங்களுடைய வீட்டுக்குள் எப்படியாவது நகர்த்திக்கொள்கிறார்கள் என்று சங்கரபாகத்திற்குத் தோன்றியது. ‘இங்கே உட்கார்ந்து படிச்சால் தான், நம்ம வீட்டில் உட்கார்ந்து படிக்கிற மாதிரி இருக்கு. என்ன சுந்து?’ என்றார். படித்த வாக்கில் உட்கார்ந்து கொண்டு தன்னை ஏறிட்டுப் பார்க்கிற சுந்தரியை சங்கரபாகத்திற்கு ரொம்ப பிடித்திருந்தது. கொஞ்ச வேண்டும் போல நினைத்தார். லேசாகக் குனிந்து, வகிடு பிரிந்து பளபளக்கிற உச்சித் தலையில் உள்ளங்கையை ஊன்றி ஒரு அசைப்பு அசைத்து, ‘என்ன புத்தகம்?’என்று கேட்டார்.
சுந்தரி வலது கை விரல்களுக்குள் சிறகு விரித்திருந்த புத்தகத்தை மேலே உயர்த்தினாள். ‘உயிர்த் தேன். செல்விப் பெரியம்மா கையெழுத்துப் போட்டு உங்களுக்குக் கொடுத்தது’ என்று சிரித்தாள். சுந்தரி சிரிப்பு இவ்வளவு அழகாக விரிவதை சங்கரபாகம் இதுவரை பார்த்ததே இல்லை. இடிவிழுந்து நொறுங்கியது போல சுவரில் கையை ஊன்றிக்கொண்டு, ‘இந்த ஒரு புஸ்தகத்துக்காக உங்க அம்மை என்னை என்ன பாடு படுத்தி இருப்பா தெரியுமா?’ சங்கரபாகம் தெப்பக்குளத் தண்ணீருக்குள் விழுந்து நெளியும் கோவில் சுவரின் காவிப்பட்டைகள் போல நடுங்கினார். ‘ஒரு வருஷமா, ரெண்டு வருஷமா? நாப்பத்தாறு வருஷம். எந்த ஆம்பிளைக்கும் வரக்கூடாது அந்தத் தும்பம்’ என்று அவராகவே ஒரு ஒற்றை நாற்காலியில் உட்கார்ந்தார். சுந்தரி புத்தகத்தைத் தரையில் கவிழ்த்திவைத்து விட்டு சங்கரபாகம் பக்கம் போய், ‘ஃபேன் போடுதேன் பா’ என்றாள். அந்த விசிறிச் சத்தம் ஒரு இன்னொரு குரல் போல அவர்களுடன் இருக்க ஆரம்பித்தது. ‘ஒரு உரையாடலின் தீவிரத்திற்கு மூன்றாவது நபர் அவசியம் தான்.’ அவருக்கு அப்படித் தோன்றியது.
சங்கரபாகம் மகளின் பக்கம் தன் முகத்தை நீட்டினார். முகத்தை மட்டும் தனியாக ஒரு தட்டில் வைத்து நீட்டுவது போல இருந்தது. ‘ கண்ணாடியில் எத்தனை தடவை பார்த்துக்கிடுவேன் தெரியுமா? இது என் மூஞ்சியே கிடையாதும்மா. குதிரையோட மூஞ்சி. இங்கே பாராதே. அங்கே பாராதேன்னு கண்ணு ரெண்டுக்கும் பட்டை போட்டிருக்கும்மே, அந்தக் குதிரை மூஞ்சி மாதிரி ஆக்கிட்டா உங்க அம்மை’
சங்கரபாகம் இதுவரை நடந்த யுத்தத்திற்காக அணிந்திருந்த கவசங்களையும் கேடயங்களையும் உடை வாட்களையும் கழற்றுகிறாரா, அல்லது மாட்டத் துவங்குகிறாரா என்று சுந்தரிக்குத் தெரியவில்லை. ‘இப்போ கழட்டித் தூரப் போட்டுவிட வேண்டியதுதானே’ என்று சுந்தரி பொதுவாகச் சொன்னாள்.
‘கழட்ட முடியாதும்மா. இனிமேல் கழட்டி ஆகப் போகிறது ஒன்றும் இல்லை. உனக்குத் தெரியாது. என் முப்பது வயசுக்கு மேலே இந்த ராத்திரி வரைக்கும் உலகத்திலே இருக்கிற ஒரு பொம்பிளையைக் கூட ஏறிட்டு பார்க்க முடியாமல் போச்சு. பஸ் ஏறுகிறதுக்குப் பக்கத்தில் நிற்கிறது, ட்ரெயினில் நம்ம கம்பார்ட்மெண்டிலே வருகிறது, கல்யாண வீட்டில சரசரண்ணு பட்டுச் சேலையும் பூவுமாகப் போகிறது, ஆபிஸில புதுசா ஒரு புடவையைக் கட்டிக்கிட்டு நடமாடுகிறது, அவ்வளவு ஏன், ஆக்ஸிடெண்ட் ஆகி ரோட்டிலே சதசதண்ணு ரத்துத்துல கிடக்கிறது எந்தப் பொம்பிளையையும் நான் பார்க்க முடியாமலே போச்சு, எங்கே திரும்பினாலும், ஆம்பிளை, ஆம்பிளை, மீசை, தாடி, சிகரெட், வேர்வை, விஸ்கி, பிராந்தி..’
சங்கரபாகம் நாளை அரங்கேறப் போகும் ஒரு நாடகத்திற்கான இறுதி ஒத்திகையை நிகழ்த்துவது போல, குவியல் குவியலான வார்த்தைகளையும் பாவனைகளையும் தனித்தனியாகத் தேவைக்கு ஏற்றது போல உச்சரித்து அசைந்துகொண்டு இருந்தார்.
சுந்தரிக்கு அப்பாவைப் பார்க்கப் பயமாக இருந்தது. விருப்பமாக இருந்தது. அம்மா எப்படி எல்லாம் பேசுவாள் என்பதைப் பார்த்துப் பார்த்தே அவள் வளர்ந்திருந்தாலும் இப்படி ஒரு அப்பாவை இன்றைக்குத்தான் பார்ப்பது போல இருந்தது.
சங்கரபாகம் சுந்தரியைப் பார்த்து, ‘ அந்த புஸ்தகத்தை எடு’ என்றார். எழுந்திராமல், அப்படியே ஒரு கன்றுக்குட்டி போல, முட்டி போட்டுக் கையூன்றி நகர்ந்து, சுந்தரி அந்தப் புத்தகத்தை எடுத்து அப்பாவிடம் கொடுத்தாள்.
சங்கரபாகம் அந்தப் புத்தகத்தை எடுத்து, முதல் பக்கத்தில் இருக்கிற கையெழுத்தையே பார்த்தார். ஒரு கட்டுப் பணத்தாளை, ஒரு அடுக்குச் சீட்டை விசிறுவது போல அந்தப் பழப்புத்தாட்களை விரல் அழுத்தத்தில் மடித்து விடுவித்தார்.
‘உங்க அம்மை மட்டும் உலகத்தில் இருந்தால் போதுமா? செல்வி இருக்கணும், நீ இருக்கணும், உன் வீட்டுக்காரர் இருக்கணும், நான் இருக்கணும், பசுபதி, பசுபதி வீட்டுக்காரி இருக்கணும். எல்லாரும் தானே இருக்கணும்.’ சங்கரபாகம் அவருக்கு உண்டான வேகத்தில், அவருக்குத் தோன்றியதைத் தோன்றியது போல, முழுவதும் சொல்ல முடியாமலும், முழுவதும் சொல்ல விரும்பாமலும் அப்படியே திகைத்தாற் போல அமர்ந்திருந்தார்.
‘எல்லாரும் தான் இருக்கோமே ப்பா’ சுந்தரி அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டாள். அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டு இருந்தவர், கொஞ்சம் சிரித்துவிட்டு மறுபடி பேச ஆரம்பித்தார்.
‘உத்து உத்து ரொம்ப நேரம் டிவியைப் பார்த்துக்கிட்டு இருந்துட்டு, ஆஃப் பண்ணினா, ஸ்கீரினிலே ரெண்டு செகண்ட் அந்த உருவம் கோஸ்ட் மாதிரித் தெரியும். உங்க அம்மையையே இத்தனை வருஷமாகப் பார்த்துட்டு இருந்துட்டு, இப்ப திடீர்ன்னு உலகத்தைப் பார்த்தால், உலகம் முழுவதும் இருக்கிற பொம்பிளையா உங்க அம்மை தான் தெரியுதாளோ என்னமோ?” சங்கரபாகம் இதைச் சொல்லிவிட்டு, சுந்தரி கையைத் தன் கையில் அடித்து, கை தட்டுவது போல உரக்கச் சிரித்தார்.
சுந்தரிக்கு அப்பாவுடன் சேர்ந்து சிரிக்க முடியவில்லை. சட்டென்று நெகிழ்ந்துவிட்டது. அம்மாவை அப்பா எவ்வளவு நேசிக்கிறார் என்றுதான் அவள் அதைப் புரிந்து கொண்டாள். தான் அப்படி உணர்வதை ஆங்கிலத்தில் சொல்வது சரியாக இருக்கும் என்று தோன்றியது.
‘அப்பா. நீங்கள் எவ்வளவு பெரிய காதலர்’ என்றாள்.
சங்கரபாகம் அதே அளவு உணர்வு பூர்வமான ஆங்கிலத்தில், ‘நிச்சயமாக’ என்றார்.
‘அப்படியானால், நாளை உங்களுக்குப் பெண்கள் மயமாக விடிகிறது’
‘இல்லை. கனகலட்சுமி மயமாக’ சங்கரபாகம் மெதுவாக, சுந்தரியைப் பிடித்துக்கொண்டே எழுந்தார். மடியில் அதுவரை வைத்திருந்த புத்தகத்தைக் கையில் எடுத்தார். அவர் தன்னிடம் அதைக் கொடுக்கப் போகிறதாக எண்ணிய சுந்தரி அதை வாங்கக் கையை நீட்டினாள்.
‘இது இன்று என்னிடம் இருக்கட்டும்’ சங்கரபாகம் புத்தகத்தை வயிற்றோடு அணைத்தாற் போல வைத்துக் கொண்டார். அப்படி அதை அவர் வைத்துக் கொண்டது சுந்தரிக்கு மிகவும் பிடித்தது.
ஒரே ஒரு சிறு நொடி, சுந்தரி புத்தகத்திற்குக் கீழே தெரிந்த சங்கர பாகத்தின் நாபிக் குழியையே பார்த்தாள். அங்கிருந்து புறப்பட்ட குளிர்ந்த தண்டின் நுனியில் ஒரு தாமரைப் பூ மலர்ந்திருப்பது போலவும் அதில் ஒரு பெண் அமர்ந்திருப்பது போலவும் சுந்தரிக்குத் தோன்றியது.
சுந்தரி அவளை அறியாமல், அவளுடைய கையைத் தன் அடிவயிற்றில் வைத்துக் கொண்டாள்.
-வண்ணதாசன்
“நாபிக் கமலம் ” சிறுகதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட இச்சிறுகதை. ஆசிரியரின் உரிய அனுமதி பெற்று பெட்டகம் பகுதியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நன்றி :
ஓவியம் : ஞானப்பிரகாசம் ஸ்தபதி
நெகிழ்ச்சியான கதை❤️
“உங்க அம்மை மட்டும் உலகத்தில் இருந்தால் போதுமா” …💚
Fantabulous ♥️
வண்ணதாசன் எழுதி எனக்குப் பிடித்தப் பல கதைகளில் இதுவும் ஒன்று. நன்றி கனலி.