பேய்களை நான் விசுவசிப்பதில்லை. அருவருப்பானவை, அலுப்பூட்டுபவை என்றெல்லாம் குறிப்பிடும் அளவுக்கு அவற்றின் மீது எனக்கு எந்த அனுதாபமும் இருந்ததில்லை. பேய்கள் பொதுவாக நாம் உறக்கத்தில் ஆழ நினைக்கும் தருணத்தில்தான் தங்கள் சேட்டைகளை ஆரம்பிக்கும். நமக்குத் துளியும் ஆர்வமில்லாத, கொலை, தற்கொலை போன்ற விரும்பத்தகாத விஷயங்களைப் பேசிப் பேசி நம் நிம்மதியைக் குலைக்கும்.
வீட்டுக்குள் பேயை வரவிடாமல் தடுக்க யாராலும் முடியாது. கதவைப் பூட்டிவைத்தாலும் பயன் இல்லை. சாவித்துவாரம் வழியாகக் கூட பேயால் உள்ளே நுழைந்துவிட முடியும் என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். கடினமான சுவரையும் ஊடுருவி உள்ளே புகுந்து உபத்திரவம் தந்த பேய்க்கதைகள் பல உண்டு. அறைக்குள் வந்துவிட்டப் பேயை வெளியில் துரத்தவும் முடியாது. அது தாக்குதலுக்கும் அப்பாற்பட்டது. பேயைத் துரத்த அதன் மீது எதையாவது தூக்கி வீசுகிறோம் என்று வைத்துக் கொள்வோம், அது நாம் புதிதாக வாங்கி வைத்திருக்கும், விலைமதிப்புள்ள கண்ணாடியை உடைப்பதில்தான் முடியும்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு பேயிடம் நான் சிக்கி அவஸ்தைப்பட்ட சம்பவம் நினைவுக்கு வருகிறது. அப்போது பெர்த்துக்கு அருகில் புதர்க்காட்டில் தடுப்புவேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். அந்தப் பணியின்போது மரப்பலகைகளால் ஆன ஒரு பழைய வீட்டில் தங்கியிருந்தேன். அந்த மர வீடு அதற்கு முன்பு கைதிகளின் முகாமாகவோ, காவலர்களின் முகாமாகவோ இருந்ததாம். எதுவென்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை.
எல்லாப் பேய்களையும் போலவே அந்தப் பேயும் மண்டையோடும் எலும்புக்கூடுமாகக் காட்சியளித்தது. பழங்காலக் கைதிகளின் சீருடையை அணிந்திருந்தது. அது கிழிந்து நைந்து கந்தலாக இருந்தது. பேயின் கால்களில் துருப்பிடித்த கால்விலங்குகள் இன்னமும் இருந்தன. ஆனால் பேய் தன் போக்கிற்கு தாராளமாக எட்டு வைத்து நடந்தது. கால்விலங்கு எலாஸ்டிக்கைப் போல எவ்வளவு தூரம் அது காலை அகட்டினாலும் அகன்று கொடுத்தது. தன்னுடைய கால்களில் விலங்கு இருப்பதையே அந்தப் பேய் கவனிக்கவில்லையோ என்று தோன்றியது. அதன் தாடை எலும்பின் அமைப்பு, ஆர்ட்ஃபுல் டோட்ஜரின்[1] முகபாவங்களுள் ஏதோவொன்றை ஒத்திருந்தது. தலைக்குப் பின்னால் சாதாரணமாக ஒளிரும் ஒளிவட்டத்தைப் போல் அல்லாது, அப்பேய் அணிந்திருந்த அகன்ற அம்புக்குறி[2] அடையாளத்தின் பிரகாசமான கதிர்கள் அதன் மண்டையோட்டுக்கு மேலே ஒளிவீசிக் கொண்டிருந்தன.
விரும்பத்தகாத அந்த விருந்தாளி எப்போதும் நள்ளிரவில்தான் வரும். வந்து என்னை எழுப்பும். முன்னொரு காலத்தில் கால்விலங்கு இடப்பட்ட நிலையில் உயிரோடு புதைக்கப்பட்ட கைதியைப் பற்றி என்னிடம் கதைகதையாகச் சொல்லும். அதற்கு ஏற்பட்ட அநியாயத்தைப் பற்றி என்னென்னவோ வியாக்கியானம் பேசும். புலம்பும். தினந்தோறும் வந்து என்னைத் தூங்கவிடாமல் பேசிப் பேசித் தொல்லை தருவதைத் தவிர்க்க நான் என்னென்னவோ முயற்சி செய்தேன். எனக்கு அந்தப் பேய் சொல்லும் கதையில் எல்லாம் கொஞ்சமும் ஆர்வமில்லை என்று சொல்லிப் பார்த்தேன். எனக்குத் தூக்கம் சொக்குகிறது என்றேன். ஆனால் அது எதற்கும் மசியவில்லை. தான் பிடித்த பிடியில் விடாப்பிடியாக இருந்து என்னைத் தூங்கவிடாமல் படாதபாடு படுத்தியது. அதனால் நான் வேறொரு உத்தியைக் கையாண்டேன். பேய் சொல்லும் எல்லாக் கதையையும் ஆரம்பம் முதல் முடிவு வரை பொறுமையாகக் கேட்டுவிட்டு அதன்பால் இரக்கமுற்றவனாகி, அந்தக் கதையில் வரும் அதுவோ, அல்லது அது வக்காலத்து வாங்கும் இன்னொன்றோ, நடத்தப்பட்ட விதம் மிக மோசமானதுதான் என்று ஆறுதல் சொன்னேன். அது சொன்ன விஷயத்தை நான் ஒரு கவிதையாக எழுதுவதாகவும் வாக்களித்தேன்.
அப்போதும் கூட அந்தப் பேய்க்குத் திருப்தி ஏற்படவில்லை. வாரத்துக்கு ஏழு நாளும் ஏழு தடவை வந்து பழைய கதைகளைத் திரும்பத் திரும்ப சொல்லி என்னிடம் அனுதாபம் சம்பாதிக்க முயல்வதைத் தடுக்க முடியவில்லை. அது தன் முறையிடல்களைச் சொல்லத் தேர்ந்தெடுக்கும் நேரம் எப்போதுமே நள்ளிரவு ஒரு மணியிலிருந்து மூன்று மணி வரையிலான அகாலமாகத்தான் இருக்கும். ஒரு கட்டத்தில் என்னால் பொறுக்கமுடியாமல் போய்விட்டது. தூக்கமின்மையால் என் உடல் சோர்வடைந்து பலவீனமாகிக்கொண்டே போனது. எனவே அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்க முடிவு செய்தேன்.
நான் ஊரில் ஒரு நாய் வளர்த்தேன். பெரிய கருப்பு நிற நாய். அதன் கண்கள் மிகப் பயங்கரமானவை. கூரிய அதன் பற்கள் முதலையைக் கூட விஞ்சிவிடும். எப்போதும் தீராத பசியோடு இருக்கும் அந்த நாய்க்குப் பயம் என்பது துளியும் கிடையாது. இந்த பூமிக்கு மேலே மட்டுமல்ல, பூமிக்கு உள்ளேயும் – அது எவ்வளவு தூரம் தோண்டுகிறதோ அது வரையிலும் அந்த நாய்க்கு எதைப் பார்த்தும் பயம் கிடையாது. மரக்கட்டைக்குள் மறைந்திருக்கும் போஸம் தப்பித்துவிடாதிருக்க, முழு மரக்கட்டையையும் கடித்து சுக்கு நூறாக்கிவிடக்கூடியது.
எந்த அபத்தத்தையும் சகித்துக்கொள்ளாத நாய் அது, அது பேயாக இருந்தாலும் கூட. அந்த நாயின் முழுப்பெயர் ஆலிகேட்டர் டீசொலேஷன் (முதலைகளைக் காணாமல் ஆக்குபவன்). நாங்கள் அதைச் சுருக்கமாக ‘ஆலி’ என்று அழைப்போம்.
என்னைத் தினமும் தூங்கவிடாமல் இம்சைப்படுத்தும் பேயை விரட்ட இந்த உலகத்தில் இருக்கும் ஒரே ஜீவன் ஆலிதான் என்று முடிவு செய்தேன். அதனால் அடுத்தமுறை எனக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவதற்காக ஊருக்குப் போனபோது கூடவே ஆலியையும் அழைத்துவந்துவிட்டேன். வரும் வழியில் அது ஐந்து கங்காருகள், பதினாறு போஸம்கள்[3], நான்கு பேன்டிகூட்கள்[4], இரண்டு கோவாலாக்கள், மூன்று செம்மறிகள், ஒரு பசுவும் கன்றும் இவற்றோடு ஒரு நாய் – இத்தனையையும் கொன்றது. அது கொன்ற விலங்குகளின் சடலங்களால் உண்டான துர்நாற்றம் ஒரு படையையே ஊரை விட்டு விரட்டும் அளவுக்கு இருந்தது அல்லது ஊரிலிருக்கும் அத்தனை நாய்களுக்கும் உணவு அளிக்கும் அளவுக்கு இருந்தது என்று சொல்லலாம்.
ஆலி களைப்பு தீர ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது நான் புகைப்பிடித்து, கொஞ்சம் தேநீரும் அருந்தி முடித்தேன். இரவு பதினொரு மணி அளவில் எப்போதும் போலப் படுக்கைக்குச் சென்று படுத்து, பேயின் வருகைக்காகக் காத்திருந்தேன். நள்ளிரவு ஒரு மணியளவில் எப்போதும் பேய் வரும்போது வரும் அமானுஷ்ய சத்தங்கள் எழத் தொடங்கின. ஆலி அது என்ன சத்தம் என்று பார்க்க வெளியே போனது. வரவிருக்கும் ஆபத்தை அறியாத பேய், பின்பக்கக் கதவு வழியாக உள்ளே நுழைந்தது. மெதுவாக மிதந்துவந்து என் படுக்கைக்கு அருகில் இருக்கும் மரப்பெட்டியின் மீது வசதியாக அமர்ந்துகொண்டு துயரம் தோய்ந்த குரலில் துக்கம் கொப்பளிக்க, தன்னுடைய சோகக்கதையைச் சொல்ல ஆரம்பித்தது. திகிலுண்டாக்கும் பேய்க்குரலில் அது ஒரு வாக்கியத்தைச் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே ஆலி பக்கவாட்டுக் கதவின் வழியாக உள்ளே வந்தது.
நாய் பேயைப் பார்ப்பதற்குள், பேய் நாயைப் பார்த்துவிட்டது. அவ்வளவுதான். பேய் விழுந்தடித்துக்கொண்டு ஜன்னல் வழியாக வெளியே பாய்ந்தது. பேயைப் பார்த்துவிட்ட ஆலி பேயின் சட்டையைக் கவ்வி அதைப் பிடிக்க முயன்றது. ஆனால் சட்டை படு கந்தலாக நைந்து போயிருந்ததால் பிடி நழுவிவிட்டது. ஆனாலும் ஆலி விடுவதாக இல்லை. ஜன்னல் வழியாகத் தானும் வெளியில் பாய்ந்து பேயைத் துரத்தியது. பேய் வீட்டைச் சுற்றிச் சுற்றி ஓடியது. கிட்டத்தட்ட மூன்று தடவை ஆலியும் பேயின் பின்னால் அதைத் துரத்திக்கொண்டு ஓடியது. ஆனால் பேய் சாதுர்யமாக மரப் பலகைகளுக்கு இடையிலிருந்த சிறிய இடுக்கின் வழியே வீட்டுக்குள் நுழைந்துவிட்டது. பேயைத் துரத்திக்கொண்டு வந்த ஆலிக்கு அந்த இடுக்கு போதுமானதா என்று யோசிக்க நேரமில்லை. தானும் அதன் வழியே நுழைய முயன்றபோது நடுவில் மாட்டிக்கொண்டுவிட்டது. பேய் மீண்டும் என் படுக்கைக்கு அருகில் வந்து அமர்ந்தது. தான் அந்தக் கதையைச் சொல்லி முடித்தால்தான் தன்னால் பேயாக நீடித்திருக்க முடியும் என்பது போல் அவசர அவசரமாக தன் சோகக் கதையைத் தொடர்ந்தது. ஆனால் அதைச் சொல்லவிடாமல் ஆலி ஆக்ரோஷமாக, கர்ணகடூரமாகக் குரைத்துக் கொண்டிருந்தது. ஒருவழியாகத் தன் அத்தனை பலத்தையும் திரட்டி தனக்கு இருபுறமும் இருந்த பலகைகளை உடைத்துத் தன்னை விடுவித்துக்கொண்டு ஆலி உள்ளே பாய்ந்தது.
ஆலி பேயின் மீது பாய்ந்த தருணம், பேய் ஜன்னலை நோக்கிப் பாய்ந்தது. இந்த தடவை ஆலி, பேயின் கணுக்காலைக் குறிவைத்தது. கிட்டத்தட்டக் கவ்விவிட்டது என்று நினைத்தபோது பெரும் சத்தத்துடன் ஆலியின் பற்கள் மட்டுமே கடிபட்டன. இதுவரை ஆலி குறிவைத்த எதையும் தப்ப விட்டதில்லை. எனவே நிச்சயம் ஆலிக்கு இது அதிர்ச்சியாகவும் அவமானமாகவும் இருந்திருக்கக்கூடும்.
எதையும் போனால் போகட்டும் என்று சாதாரணமாக விட்டுவிடக்கூடிய நாயல்லவே அது. மறுபடியும் ஆலி பேயின் பின்னால் துரத்திக்கொண்டு ஓடியது. பல சுற்றுகள் குடிசையைச் சுற்றிச் சுற்றி ஓடிக் களைத்த பேய் இறுதியில் தன் முயற்சியைக் கைவிட்டுவிட்டு காட்டுப்பக்கம் ஓடியது. ஆலியும் அதைத் துரத்திக்கொண்டு பின்னால் ஓடியது. இடுக்கு வழியே அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த நான் சட்டென்று எழுந்து வெளியில் வந்தேன். எதற்கும் இருக்கட்டும் என்று இரவு நேரத்தில் குதிரைக்குச் சேணம் பூட்டி எப்போதும் தயார் நிலையில் வைத்திருப்பேன். ஓடிச் சென்று குதிரையில் ஏறி நானும் அவற்றின் பின்னாலேயே கிட்டத்தட்ட ஐந்து மைல் தூரத்துக்குத் துரத்திச் சென்றேன். ஒரு இடத்தில் மரங்களுக்கு நடுவே பழைய கல்லறை போன்றிருந்த புதைமேட்டுக்குள் பேய் தலைகீழாகப் பாய்ந்து மறைந்தது.
ஆலி உடனடியாக அந்த மேட்டைத் தோண்ட ஆரம்பித்தது. கண்ணை மூடித் திறப்பதற்குள் இரண்டு அடி ஆழத்துக்குத் தோண்டிவிட்டது. அந்தப் பழைய புதைமேட்டுக்குள் மூன்றடி ஆழத்தில் வளை அமைத்து ஒரு வாம்பேட் குடியிருந்தது போலும். வாம்பேட்டுக்கும் ஆலிகேட்டருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. கொஞ்ச நேரத்திலேயே வாம்பேட் உயிரை விட்டது. ஆலி தொடர்ந்து தோண்டிக்கொண்டே இருந்தது. மேலும் இரண்டு அடி ஆழம் தோண்டிய பிறகு ஆலி எதையோ வாயில் கவ்வியபடி வெளியே வந்தது. அது அந்த இடத்தில் புதையுண்டிருந்த சடலத்தின் கால் எலும்பு. அந்த எலும்புடன் இன்னமும் கனத்த இரும்பினாலான கால்விலங்குகள் பிணைக்கப்பட்டிருந்தன. ஆலி மறுபடியும் குழிக்குள் இறங்கியது. ஆனால் சட்டென்று தோண்டுவதை நிறுத்திவிட்டு எதையோ கூர்ந்து கவனித்தது. திகிலூட்டும் வண்ணம் அமானுஷ்யமான சத்தங்கள் கேட்டன. புதைகுழியிலிருந்து மெல்லிய கருப்பு உருவம் ஒன்று வெளியே வந்து சரேலென்று புதர்க்காட்டுப் பக்கம் விரைந்தது. ஆலி அதைத் துரத்திக்கொண்டு பின்னால் பாய்ந்தது.
என் குதிரை களைத்துப் போயிருந்தது. அதனால் பேயைத் துரத்தும் வேலையை ஆலியிடமே விட்டுவிட்டு நான் வீடு திரும்பி, தகவலுக்காகக் காத்திருந்தேன்.
மூன்று நாட்கள் கழித்து ஆலி திரும்பி வந்தது. அதன் ரோமங்கள் மோசமாகக் கருகியிருந்தன. அதன் மீது கடும் துர்வாடை வீசியது. ஆலி அந்தப் பேயை பாதாள லோகம் வரை விரட்டிவிட்டு வந்திருக்கிறது என்று தோன்றியது. சொல்ல முடியாது, ஒருவேளை ஆலி, பாதாள லோகத்தின் காவல் நாயான செர்பரஸை[5] நேருக்கு நேர் எதிர்கொண்டுவிட்டு வந்திருக்கும் என்றுகூடத் தோன்றியது.
ஆனாலும் ஆலியின் வால் நிமிர்ந்து இருந்தது. ஆலி பொங்கி வழியும் பெருமித இளிப்புடன் வாயின் எல்லாப் பல்லையும் காட்டிக்கொண்டு நின்றிருந்தது. ஆலி அந்தப் பேயை திரும்பிவர முடியாத உலகத்தில் விட்டுவிட்டு வந்திருக்கிறது என்பது தெள்ளந்தெளிவானது. ஏனெனில் அதற்குப் பிறகு அந்தப் பேயை நான் பார்க்கவே இல்லை.
-ஹென்றி லாசன்,தமிழில் – கீதா மதிவாணன்
[1] ஆர்ட்ஃபுல் டோட்ஜர் – சார்லஸ் டிக்கின்ஸின் ‘ஆலிவர் ட்விஸ்ட்’ நாவலில் வரும் ஒரு கதாபாத்திரம். பிக்பாக்கெட் அடிப்பவன். ஏமாற்றுக்கும் மோசடிக்கும் பேர்போனவன்.
[2] அகன்ற அம்புக்குறி – பிரிட்டிஷ் ராணுவத்துக்குச் சொந்தமானது என்பதைக் குறிக்கும் அடையாளம். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஆஸ்திரேலியக் கைதிகளின் சீருடையில் இந்த அடையாளக்குறி இடம்பெற்றிருந்தது.
[3] போஸம் – பூனை அளவிலான ஆஸ்திரேலிய மர வாழ் விலங்கு
[4] பேன்டிகூட் – ஆஸ்திரேலிய எலி
[5] செர்பரஸ் – கிரேக்கப் புராணத்தின் படி பாதாள லோகத்தின் வாசலில் காவல் காக்கும் மூன்று தலை நாய்
மிகத் தரமான, தெளிவான, அதே நேரம் எளிமையான சொற்களினாலான பிரமாதமான மொழிபெயர்ப்பு. கீதா.மதிவாணனின் அநேகமான மொழிபெயர்ப்புக் கதைகளை வாசித்திருக்கிறேன். தடங்கல்கள் எதுவுமில்லாத ஆற்றொழுக்கான எழுத்தோட்டத்திற்குச் சொந்தக்காரர் அவர். அவர் மொழிபெயர்ப்புக்குத் தேர்ந்தெடுக்கும் கதைகளும் அதைத் தமிழுக்குக் கொண்டுவரும் நேர்த்தியும் தமிழுக்குக் கிடைத்த பெரும் வரம் என்றே சொல்லத் தோன்றுகிறது.
இந்தக் கதை அதற்கு மற்றொரு சாட்சி. தொடர்ந்து அவர் நமக்கு இப்படியான வாசிப்பு அனுபவங்களைத் தரவேண்டும் என்று சுயநலத்தோடு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் கனலிக்கும் எனது மனமார்ந்த நன்றி. வேகமாகவும் மேலோட்டமாகவும் ஓடிக்கொண்டிருக்கும் இன்றய உலகில் உங்கள் பணியும் சேவையும் மிகுந்த பாராட்டுக்கும் பொதுமக்களுக்கான சிறப்புமிகு உபயோகத்திற்குமுரியது. உங்கள் எல்லோருக்கும் பயனாளர் என்ற வகையில் என் மனமார்ந்த நன்றிகள்
உங்கள் வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.