பதிலீடு -காளீஸ்வரன்

ம்மாவைச் சமாளிப்பது எப்படி ? இந்த ஒரே கேள்விதான் அருண் மனதை ஆக்கிரமித்திருந்தது.

மணி இரவு 9 இருக்கும். தாரணியை, விஜயமங்கலத்தில் அவளது அப்பா வீட்டில் விட்டுவிட்டு அருண் மட்டும், செங்கப்பள்ளிக்கு கிளம்பினான். பெங்களூரிலிருந்து வந்த அந்த ஐந்து மணி நேரப் பயணமும், பெரும்பாலும் மௌனமாகவே கழிந்தது. முன்பெல்லாம் தாரணி இப்படி இல்லை. திருமணமான இந்த இரண்டு வருடங்களில், பெரும்பாலான கார் பயணங்களில், தன்னுடைய பால்ய கதைகள், கல்லூரி நினைவுகள், பெங்களூரில் அவள் நிறுவனத்தில் நடந்த சுவாரசியமான விசயங்கள் எனப் பேசுவதற்கு தாரணியிடம் நிறைய விசயங்கள் இருந்தன. திருமணமான புதிதில், அம்மா கூடச் சொன்னாள்,

“வெகுளியாப் பேசுறாடா. நல்லபடியா பாத்துக்கோணூம்”

அருண் அடக்க முடியாத சிரிப்புடன் சொன்னான் “மோவ், புளுகறதுக்கு ஒரு அளவு வேணும், நானே இன்னும் அவகிட்ட நல்லா பேசுல. நீ அதுக்குள்ள சர்டிபிகேட்டு கொடுக்கற. போற போக்குல மாமியா மருமவ சண்டைல எந்தலைய உருட்டாம இருந்தாச் செரி”.

ஆனால் அப்படியொரு சங்கடம் அருணுக்கு வரவேயில்லை. தாரணிக்கும் அருணுக்கும் பெங்களூரில் வேலை என்பதும், மாதம் ஓரிரு முறைகள் மட்டுமே சொந்த ஊர் வருவதற்கான சாத்தியங்கள் இருப்பதும், பழனியம்மாள், மருமகளை தாங்கோ தாங்கென்று தாங்குவதற்கான காரணங்களாய் அறியப்பட்டன. திருமணமான முதல் வருட பங்குனித் திருவிழாவன்று, வீட்டுக்கு வந்திருந்த உறவினர்களின் கேலியைப் பொருட்படுத்தாது, தாரணிக்கு தலை சீவி, பூ வைத்து, அலங்கரித்த பழனியம்மாளை தாரணியின் அம்மாவே கூட கொஞ்சம் வித்தியாசமாகத்தான் பார்த்தார். அம்மா எப்போதுமே அப்படித்தான், ஒருவரை அவள் மனதுக்குப் பிடித்துவிட்டால் பிறகு, அவர்களுக்கு ராஜமரியாதைதான். அருணின் அப்பா கந்தவேல், பழனியம்மாளுக்கு அப்படியே நேரெதிர், காலை துவங்கி மாலை வரை நிற்காமல் காட்டு வேலை செய்யும் அவரால், பிறர் சொல்லுவதைக் காது கொடுத்துக் கேட்கவோ, “கூறாக” நாலு வார்த்தை சொல்லவோ வராது.

*

செங்கப்பள்ளி பாலத்தில் இருந்து சர்வீஸ் ரோட்டில் காரை திருப்பினான் அருண். கடந்துவந்த பாதை போல சுலபமில்லை. இனி ரோடு குண்டும் குழியுமாகத்தான் இருக்கும். அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர்கள்தான் அருணின் ஊர் காங்கயம்பாளையம். மீறிப்போனால் 10 நிமிடங்களில் வீடு வந்துவிடும். சர்வீஸ் ரோட்டில் இறங்கியதும் இருக்கும் முதல் கடையில் இரண்டு இட்டிலி மட்டும் சாப்பிட்டுவிட்டு காங்கயம்பாளையம் செல்லும் சாலையில் காரை ஓட்டினான். அருணுக்குப் பெரிதாகப் பசியில்லை. இருந்தாலும் வயிறு காலியாக இருப்பதை கண்ணே அம்மாவுக்குக் காட்டிக் கொடுத்துவிடும்.

அம்மாவுடன் பேசிக்கொண்டே சாப்பிடும் இரவு உணவு அருணுக்கு மிகவும் பிடித்தமானது. அனைத்துக் கதைகளையும் தடையின்றி பேசும் சுதந்திரம் அம்மாவிடம் மட்டுமே உண்டு. இல்லாவிட்டாலும் அந்த வீட்டில் அவனுடன் பேச வேறு மனிதர்கள் கிடையாது. அப்படிப்பட்ட ஒரு இரவு உணவின் போதுதான் தாரணியைப் பற்றி அம்மா சொன்னாள்.

“அருணு, நானும் சாலப்பாளையத்து மாமனும் இன்னிக்கு விசியமங்கலம், சந்தைக்கு போயிருந்தோம்டா.”

“அதான் வார வாரம் போறீங்கள்ள, இன்னிக்கு மட்டுமென்ன புதுசா” நக்கலாக அருண் சிரித்தபோதும் அவனுக்கு விசயம் விளங்கிவிட்டது.

“ஒங்கொப்பனாட்டமே மேட்டாப்புல ஒலப்பாம, சொல்லுறத கேளு” நிமிர்ந்து பார்த்த அருணை நெருங்கி பெரும் ரகசியம் சொல்லுவதைப் போலச் சொன்னாள் பழனியம்மாள்.

“சந்தைக்கு எப்பயிம் போறதுதான். ஆனா, இந்த வாரம் அந்தப்புள்ள வூட்டுக்கும் போயிட்டு வந்தோம்டா. புள்ள நல்ல கலரு. வெகு லட்சணம்டா. பெங்களூர்லதான் வேலையாமா. அவிங்களுக்கும் திருப்தி. சாதகமும் பொருந்தியிருக்குது. நீ சேரீன்னு சொன்னா மேற்கொண்டு பேசலாங்கறாரு அப்பன். என்ன சொல்லுற ?”

குறுகுறுப்பை அடக்கிக்கொண்டு அருண் சொன்னான், “அம்மா, ஒனக்கு புடிச்சா போதுமா? எனக்கு புடுச்சிருந்தாத்தான் ஒத்துக்குவேன்”

“அந்தப் புள்ள லட்சணத்துக்கு, ஒன்னய அது கட்டிக்கிறேன்னு சொல்லிச்சுன்னா, அது நீ செஞ்ச புண்ணியம்டா கருவாப்பயலே”

மறுவாரம், கைத்தமலையில் தாரணியை அருண் பார்த்ததுமே, அம்மாவுக்கு தாரணியை ஏன் அவ்வளவு பிடித்தது என்பது அவனுக்குப் புரிந்துவிட்டது. அம்மா சொன்னதுபோலவே நல்ல லட்சணமான முகம். சிம்பிளான ஆனால் வெகு நேர்த்தியாகக் கட்டப்பட்ட புடவை, கொஞ்சமே பவுடர் பூச்சு, கழுத்தில் சின்ன சங்கிலி. பார்த்த மறுநொடியே அருண் நிறைந்துவிட்டான். அவனுக்கு மிக நன்றாகத் தெரியும், தாரணியை அம்மாவுக்கு மிகவும் பிடிக்கக் காரணம் அவளது கூந்தல். பழனியம்மாவுக்கு கல்யாணம் ஆகியிருந்த புதிதில், வந்த பங்குனித் திருவிழாவில் பட்டுப்புடவை கட்டி, சிங்காரித்து, நகை நட்டெல்லாம் பூட்டி பூஜைப்பொருட்கள் நிரம்பிய தட்டை ஏந்தி அவள் வந்த சமயத்தில், கந்தவேலுவின் ஒன்றுவிட்ட தங்கை கிண்டலுக்கு, “அண்ணி அலங்காரமெல்லாம் நல்லா பவுசாதான் இருக்குது, ஆனா தலைமுடியென்ன எலிக்குட்டி வாலாட்டமிருக்குது” எனக்கேட்கப் போக, ஏற்கனவே நீளம் குன்றிய தன் முடியினால் அம்மாவுக்கிருந்த சங்கடம், அன்றிலிருந்து வருடாவருடம் வளரலானது. தாரணி அம்மாவின் சங்கடம் தீர்க்கும் வரமாய் அமைந்தாள்.

அன்று, கைத்தமலையில் தாரணியுடன் பேசிவிட்டு வந்த, அருணின் முகத்தைப் பார்த்த அடுத்த நொடி, எல்லாம் முடிவானதுக்கு அச்சாரமாய், மல்லிகைச் சரத்தை தாரணியில் தலையில் வைக்க வெகு வேகமாய் ஓடினாள் அம்மா.

“அக்கா, புள்ளய எவனாவது தூக்கிட்டா போகப்போறானுங்க. மொள்ள போக்கா” என சாலப்பாளையம் மாமன் கூட நக்கலடித்தார்.

நக நட்டு, சீர் செனத்தி, விருந்து செலவு என எவரையும் எதுவும் பேசவிடவில்லை அம்மா.

“எங்களுக்கு இருக்கறதே ஏழெட்டு தலக்கட்டுக்கும் தாட்டும், புள்ளய மட்டும் அனுப்பிவுடச் சொல்லுங்க” என ஒரே போடாகப் போட்டாள்.

நிச்சயதார்த்தத்துக்கு முந்தய நாளில், விட்டுப்போன செய்முறை குறித்து கேட்பதற்கென விஜயமங்கலம் பயணம் வைத்த அப்பாவை, ஒரே அதட்டில் அம்மா வீட்டில் அடங்க வைத்ததை இன்றும் அருணின் அத்தைக்காரி சொல்லிக்காட்டுவாள். நிச்சயதார்த்தம் ஆனதுதான் தாமதம். அன்றாடம் பெங்களூர் தட்பவெப்பம் உட்பட அனைத்தும் அம்மாவுக்கு அத்துப்படி, எனும் அளவுக்கு தாரணியிடம் பேசித்தள்ளினாள்.

“அம்மோவ், நானும் பெங்களூர்லதான் இருக்கேன். எங்கிட்டக்கூட முன்னமாதிரி அடிக்கடி பேசுறதில்ல. அப்படியென்ன ரகசியம் பேசுறீங்க ?” பொறுக்கமாட்டாமல், அருண் கேட்டபோதும் அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் சிரித்துவைத்தாள் பழனியம்மாள்.

“அதில்லமா, அவளுக்கு கொஞ்சம் வேல ஜாஸ்தி. நீயே நெம்ப நேரம் பேசீட்டீன்னா, என்கூட பேசறதுக்கு அவளுக்கு டைம் கிடைக்கிறதில்ல அதான்“ மீண்டும் வெட்கத்தை விட்டு அருண் சொன்னதுக்கும் அதே சிரிப்புதான்.

*

சன்னதம் வந்ததுபோல அருணின் கல்யாணத்தை நடத்தினாள் பழனியம்மாள். கந்தவேலுவின் வேலை வெறுமனே பணம் எடுத்துக் கொடுப்பதும், வரும் உறவினர்களைக் கையெடுத்துக் கும்பிடுவதும் மட்டுமே என்றானது.

அடுத்து வந்த பத்தே நாட்களின் அருணும் தாரணியும் பெங்களூர் வந்துவிட்டாலும், அந்தப் பத்து நாட்களிலேயே, பழனியம்மாளும் தாரணியும் பல வருடப் பழக்கம் போல நெருக்கிவிட்டார்கள். அருணுக்கும் பழனியம்மாளுக்குமான இரவு உணவு வேளையில், தாரணியும் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகிப் போன போது ஒருபக்கம் சந்தோசமாய் உணர்ந்தாலும், தனக்கே உரித்தான ஒன்று பங்குபோடப்பட்டதால் எழுந்த சங்கடத்தை அருணால் ஒதுக்க முடியவில்லை.

*

திருவிழாவை முன்னிட்டு, ஊர் எல்லை துவங்கும் முன்பிருந்தே சாலையின் இருபுறங்களிலும் ட்யூப் லைட்டுகளும், சரவிளக்குத் தோரணங்களும் களைகட்டின. மிஞ்சிப்போனால் ஐம்பது, அறுபது வீடுகள் மட்டுமே இருக்கும் சிற்றூர் காங்கயம்பாளையம். அதிலும், பெரும்பாலானோர் அருணின் சொந்தக்காரர்கள்தான். கோவிலின் முன்பு அளவான கூட்டம் கூடியிருந்தது. அதையும் தவிர்க்க கோவிலின் பின்புறமாகச் செல்லும் சாலை வழியே காரைத் திருப்பினான் அருண். வீட்டின் முற்றத்தில் காரின் ஹெட்லைட் வெளிச்சம் விழுவதற்கும், பழனியம்மாள் உள்ளிருந்து வெகு ஆர்வமாய் வருவதற்கும் சரியாக இருந்தது, காரில் இருந்து அருண் மட்டும் இறங்குவதைப் பார்த்து கொஞ்சம் சலனமடைந்தாலும், ஒருவேளை அவள் விளையாடக்கூடும் என்ற நப்பாசையில் காம்பவுண்டு சுவர் வரைக்கும் சென்று நின்று வீதியைப் பார்த்தாள்.

“ம்மோவ்” தயக்கமாய் அழைத்த அருணுக்கு பழனியம்மாள் எப்படி பேச்சை ஆரம்பிப்பாளோ எனும் பயமிருந்தது.

“ஏண்டா, அத்தன விசுக்கா சொல்லியுட்டும் நீ மட்டும் வந்து நின்னா என்னடா அர்த்தம்? புள்ளய கண்ணுல பாத்து மூணு நாளு மாசமாகுது”

பதிலைத் தவிர்த்து, காரிலிருந்து பையை எடுத்துக்கொண்டு தயக்கமான நடையுடன், அம்மாவைக் கடந்து வீட்டினுள்ளே செல்ல முயற்சித்தான் அருண். தனக்குப் பின்னால் உணர்ந்த அம்மாவின் கூரிய பார்வையை அவனால் தவிர்க்க முடியவில்லை.

“மா, நாந்தான் போன்லயே சொன்னேன்ல, அவளுக்கு வேலை ஜாஸ்தி, லீவும் கெடைக்கல. அவ பூனேக்கு டிரான்ஸ்பர் ஆயி போனதுக்கப்புறம் நானுந்தான் பாக்கல. நேத்து, நீ அவகிட்டயும் பேசுனயின்னு, தாரணி சொன்னா”

“ஆமா, பேசுனாங்க அஞ்சாறு.”

கம்மிய குரலுடன், கலங்கியபடி உள்ளே சென்றாள் அம்மா. போன வேகத்தில் திரும்பி வந்து

“மொதல்ல மாதிரி, போன்லயும் சரியா பேசுறதில்ல. பகல்ல கூப்ட்டா எப்பப்பாரு மீட்டிங்கு, சேரீன்னு ராத்திரி கூப்டா, சலுப்பா இருக்குது, தூக்கம் வருதுன்னு ஆயிரம் காரணம் சொல்றா. உங்களுக்கென்ன நெறைய சோலி கெடக்குது, இங்கொருத்தி உங்க நெனப்பா இருக்கேங்கறது கூட தெரியுதோ என்னமோ”

அம்மாவின் கோபம் அருண் எதிர்பார்த்ததுதான். திருமணமான இந்த இரண்டு ஆண்டுகளில், அம்மா அருணிடம் பேசியதை விட தாரணியிடம் பேசியதுதான் அதிகம். அவனுக்கு அதில் கொஞ்சம் வருத்தம் கலந்த சந்தோசம். இந்த மூன்று மாதங்களில்தான் இத்தனை சிக்கலும். அருணுக்கும் இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அம்மாவைப் பார்க்கப் பார்க்க, பரிதாபமாய் இருந்தது. சமாதானப்படுத்தும் குரலில் சொன்னான்

“செரி உடும்மா, பேசாட்டி போறா. இன்னும் ஒரு ரண்டு மூணு மாசந்தா. அப்புறம் பழையபடிக்கு பெங்களூரு வந்துதான ஆகணும். அத்தே, அத்தேன்னு ஆயிரம் அத்தை போட்டு உங்கோட பேசித்தான ஆகணும்”

”அவளுக்கென்ன நெலமையோ? சரி ஒரு வாட்டி நாம அங்க போய் பாத்துட்டு வரலாம்னா அது ஆவாதுன்னு ஆயிரத்தெட்டு காரணத்த அடுக்கற ” மீண்டும் துளிர்க்கவிருந்த கண்ணீர், இத்தனையும் உள்ளிருந்து கேட்டுக்கொண்டிருந்த அப்பாவின் வருகையால் தடைப்பட்டது.

“இப்பென்ன, இந்த வருச நோம்பிக்கு வரமுடியலைன்னா அடுத்த வருசம் வரப்போறா. அதுக்கேன் இத்தனை அக்கப்போரு. போயி சாப்பிடுடா” பொதுவாகச் சொன்ன கந்தவேலை ஒரு பொருமலுடன் கடந்து சென்றாள் பழனியம்மாள். வெளிவாசல் திண்ணையில் கந்தவேல் படுத்த பத்தாம் நிமிஷம் குறட்டை சத்தம் கேட்டது.

அருண் கால் முகம் கழுவி லுங்கி மாற்றிவரும் வரை ஆசாரத்திலேயே காத்திருந்தாள் பழனியம்மாள்.

“மா, நல்ல பசி. அதனால, நான் பெருந்துறைலயே சாப்பிட்டுட்டுதான் வந்தேன். காரு ஓட்டிட்டு வந்த அசதி. கூடவே தலைவேற வலிக்குது. நான் மொட்ட மாடில தூங்கப்போறேன்.” தன் முகத்தைக்கூட பார்க்காமல் சொல்லிவிட்டு இரண்டு போர்வைகளுடன் மாடிக்கு விறுவிறுவென ஏறிப்போகும் மகனையே பார்த்துக்கொண்டிருந்த பழனியம்மாள். சமையலறையில் எடுத்துவைத்திருந்த மூன்று தட்டுக்களையும் மீண்டும் பாத்திரம் கழுவும் சிங்க்கில் போட்டாள்.

அருணுக்கு தூக்கமே வரவில்லை. எவ்வளவோ தவிர்த்துப்பார்த்தும், அவன் வாழ்வில் மறக்கவே முடியாத சென்ற வருட திருவிழா நினைவில் எழுந்தது.

*

பங்குனித் திருவிழாவின் முதல் பூஜை காவல் அம்மனுக்கு. அது கந்தவேல் வீட்டு முறை. பல தலைக்கட்டுகளாகத் தொடரும் பழக்கம் அது. அதன் பின்னர்தான் பிற வைபவங்கள். பொங்கல் வைப்பது, மாவிளக்கு எடுப்பது, சாமி ஊர்வலம் என இரவு வரை ஊரே கொண்டாடித் தீர்க்கும். எப்போதுமே அழுத்தமாய் இருக்கும் அப்பா அந்தப்பூஜை முடியும் வரை மட்டும் மேலும் இறுகிவிடுவார். அம்மாவும் சரி, உயிரோடிருந்தவரை ஆத்தாவும் சரி, அந்தப்பூஜையில் துளிக்கண்ணீராவது சிந்தாமல் இருந்ததில்லை. காரணம் அருணுக்கும் தெரியும்.

வைகாசியில் அவர்களின் திருமணம் முடிந்தது. தொடர்ந்துவந்த ஒன்பது மாதங்களில், மாதம் ஓரிரு முறைகளாவது தாரணியும் அருணும் ஊருக்கு வந்து விடுவார்கள். பெரும்பாலும் ஏதாவது விசேசங்கள் அல்லது சொந்தக்காரங்க வீட்டில் விருந்து என ஏதாவது காரணம் கிடைத்துவிடும். அந்நாட்களில், தாரணியை பழனியம்மாள் தாங்கும் விதத்தைப் பார்த்து, ஊரில் தாரணிதான் பழனியம்மாள் மகளென்றும், அருணை சந்தையில் தவிட்டுக்கு வாங்கியதாகவும் ஒரு கேலிக்கதை உருவானது. அம்மாவும் சும்மாயிருந்ததில்லை, மத்தியானம் கிடா விருந்துக்கு போகவேண்டிய நாளில் கூட புள்ள வந்திருக்காங்க என காலையிலேயே கறி எடுத்துவிடும். போதாததற்கு காலையில் இவர்கள் எழும் முன்னரே சமையல் வேலையை முடித்துவிட்டு, தாரணி குளித்துவிட்டு வர காத்திருப்பாள். குளித்துவிட்டு வந்ததும், ஊரே பார்க்க மொட்டை மாடியில் தாரணியின் தலை உலர்த்தி சீவிவிட்ட பின்னர்தான் அருணுக்கு காப்பியும் சோறும் கிடைக்கும். அவர்கள் திருமணத்துக்குப் பின்னர் வந்த முதல் பங்குனித் திருவிழா அது. பூஜைக்கான முறைமைத் தட்டை தாரணி கையில் கொடுத்துவிட்டு பெருமிதமாய் முன்னே நடந்தாள் பழனியம்மாள். புது பட்டுப்புடவையில் ஜொலித்த தாரணியை அருணே வைத்த கண் வாங்காது பார்த்துக்கொண்டிருந்தான். நன்கு சீவி பின்னப்பட்டிருந்த கூந்தலின் பெரும்பகுதியை மல்லிகைச்சரமும் ரோஜா மலர்களும் அலங்கரித்தன. எல்லாம் அவன் அம்மாவின் கைவண்ணம்.

“என்ன பழனியம்மோவ், மருமவ ஜொலி ஜொலிக்கறா. இனி ஒம்பட பவுச தாங்கமுடியாதே” கிண்டல் பேசின தன் தோழிகளுக்கு அத்தனை வருட ஏக்கமும் பெருமிதமாய் மாறிட அம்மா சொன்னாள்

“பழனியம்மா மருமவன்னா சும்மாவா? ஜொலிக்கத்தான் செய்வா”

“அண்ணி, அளவா தாங்குங்க. என்னைக்கும் இப்படியே இருக்காது” அறிவுரை சொன்ன அத்தைக்காரிக்கு அம்மாவிடமிருந்து கிடைத்தது கடும் முறைப்பு.

தொடர்ந்து பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்துவந்ததும் தாரணிதான். தான் புதிதாக வாங்கிய பொம்மையை அனைவருக்கும் காட்டுவதில் கர்வம் கொள்ளும் குழந்தை ஒருத்தி, அம்மாவிலிருந்து வெளிப்பட்டாள். முன் எப்போதும் அருண் அவ்வளவு சந்தோஷப்பட்டதில்லை.

*

சமீபகாலங்களில் அருணுக்கு அரைகுறை தூக்கம் பழகிவிட்டது. சமயங்களில் முழு இரவையுமே வெறுமனே கடத்திய இரவுகளும் உண்டு. நேற்றைய இரவும் அப்படியொரு இரவாகவே கழிந்தது. கொஞ்சம் தாமதமாகவே மாடியிலிருந்து கீழிறங்கி வந்தவன் நேரே படுக்கையறைக்குள் நுழைந்தான். குளித்துக் கிளம்பி, பேருக்குக் கொஞ்சமாய் சாப்பிட்டுவிட்டு அவனும் கோவிலுக்குக் கிளம்பினான். வெகு ஜாக்கிரதையாய் அம்மாவின் முகம் பார்ப்பதைத் தவிர்த்தான்.

அவ்வருடம் பூஜைத்தட்டை எப்போதும் போல அம்மாவே சுமந்து வந்தாள். தாரணி வராத விசயம் அரசல் புரசலாய் ஊருக்கே தெரிந்திருந்தது. காரணம், பணி இடமாற்றம் என்பதும், தொலை தூர ஊரான பூனே என்பதும் அதிகப்படியான கேள்விகளைத் தவிர்க்கப் போதுமானதாக இருந்தது. வீட்டிலிருந்து கோவிலுக்கு வரும்போதும், பூஜை முடியும் வரையும் எவரிடமும் பழனியம்மாள் முகம் கொடுத்துப்பேசவில்லை. அப்பாவின் முகம் வழக்கம்போல இறுகிக் கிடந்தது. ஏறிக்கொண்டு வந்த வெய்யிலில், சன்னதம் வந்து ஆடிக்கொண்டிருந்தார் பூசாரி. துளுக்கு கேட்டதும் வெட்டப்பட்ட கிடாயின் ரத்தம் அருணின் முகத்தில் தெளித்தது. பெருமுயற்சி எடுத்து கண்ணீரை அடக்கிக்கொண்டான் அருண். கண்ணீர் தளும்ப விசும்பத் துவங்கினாள் அம்மா. அப்பாவின் முறைப்பு இத்தருணத்தில் மட்டும் எடுபடுவதேயில்லை.

*

பொழுது சாயத்துவங்கியது.. தான் கொண்டு வந்த பையுடன் அம்மா தந்த பலகாரப்பையையும் கார் டிக்கியில் அடைத்தான் அருண்.

கந்தவேலு ஆசாரத்தில் தன் வழக்கமான சாய்வு நாற்காலியில் படுத்திருந்தார். தன் முன் அருண் வந்திருப்பதைக் கண்டு லேசாக எழுந்தமர்ந்தார்.

“நான் கெளம்புறேம்பா” தலையசைத்து சத்தமெழாமல் சொன்னான் அருண்.

“ரண்டு மாசம் மூணு மாசம்னா பரவால்லதான். ஆனா, ஒரு நோம்பி நொடிக்குக் கூட வரமுடியாம நீங்க சம்பாரிச்சு கொண்டுவந்து கொட்டனும்ன்னு இங்க யாரும் அழுவுல்ல. முடிஞ்சா, ஒட்டுக்கா வேல பாருங்க. இல்லாட்டா வேலையும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம். வூட்டோட புள்ளய இருக்கச்சொல்லு”

கந்தவேலு வேறெங்கோ பார்த்துக்கொண்டு சொன்னார். எப்போதும் போல வெறுமனே தலையாட்டிவிட்டு அம்மாவைத் தேடினான் அருண்.

பூஜையறையில் சாமிமுன்னர் விளக்கேற்றிக்கொண்டிருந்த பழனியம்மாள், அருணின் வருகையை உணர்ந்து திரும்பினாள்.

“அம்மா, நேரமாச்சு. நான் கெளம்புறேன். சும்மா மனச போட்டு கொழப்பிட்டு இருக்காத. அடுத்த வாட்டி வரும்போது அவள கண்டிப்பா கூட்டிட்டு வறேன். நீயே சண்டப்புடி. என்ன”

பதிலேதும் கூறாமல், அவனைப் பூஜை அறைக்குள் அழைத்தாள் பழனியம்மாள். வழக்கமாய் அவன் கிளம்பும்முன் செய்வதைப்போலவே, அவன் நெற்றியில் குங்குமம் வைத்துவிட்டாள். தணிந்த அழுத்தமான குரலில் பேசலானாள் பழனியம்மாள்

“அருணு, தலக்கட்டு தலக்கட்டா எல்லைக் காவல் சாமிக்கு மொத பூசை நம்ம வூட்ல இருந்துதான் செய்யுறோம். ஏன்னு உனக்குத் தெரியும்ல”

தெரியும் என அருண் தலையாட்டியதைக் கவனிக்காதவளாய் பழனியம்மாள் தொடர்ந்தாள்

“நம்ம வம்சத்துல முன்ன எப்பயோ எவரோ, ஒரு கன்னிப்பொண்ணுக்கு செஞ்ச வினை நம்மள சாபமா தொரத்துது. அதனாலதான் நம்மூட்ட பொறக்கற பொம்பளப் புள்ளைங்க நெலைக்கறதில்லை. சின்ன வயசுலயே நோய் நொடின்னு வந்து போயிடுறாங்க. உங்கப்பாவுக்கு மூத்த அக்கா அஞ்சு வயசில செத்ததும், உங்க தாத்தாவுக்கு நேர் எளைய புள்ள இருந்திருந்த மாதிரி செத்ததும் அதனாலதான். ஒவ்வொரு தலக்கட்டுலயும் பொம்பளப்புள்ள பொறக்கறதும், சொல்லிவச்ச மாதிரி அது நெலைக்காம போறதும் நடந்துக்கிட்டேதான் இருக்குது. போகாத கோயிலில்ல. பண்ணாத பரிகாரமில்ல. வருசந்தவறாம பூசை வச்சு பலி கொடுத்தும் ஆத்த முடியாத கோபமா அந்த சாபம் தொடருது. இந்த விசயமெல்லாம் ஒனக்கும் தெரியும். ஏன் நம்மூருக்கே தெரியும்.” மௌனம் அந்த அறையை நிறைத்திருந்தது. நன்றாகக் கவிழ்ந்திருந்த இருட்டில் ஒற்றை விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருக்க, அவ்வொளியில் அதுவரை அருண் அறிந்திராத பழனியம்மாளின் முகம் வெளிப்பட்டது.

”ஆனா, வெளியாள் யாருக்குமே தெரியாத, நம்மூட்டுக்குள்ள மட்டுமே பொழங்குற ரகசியம் ஒண்ணிருக்குது.“

முகம் வெளிறிப்போய் அமர்ந்திருந்தான் அருண். கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொண்டு, அருண் இருப்பதையே உணராதவளாய் தொடர்ந்தாள் பழனியம்மாள்

“எங்களுக்கு பொட்டப்புள்ள பொறக்கல. ஒத்தைக்கொரு பையன்தான். நீ காலேஜ் படிக்கும்போதுதான் நம்ம ஆத்தா செத்துப்போனாங்க. சாகறதுக்கு முந்தின நாள் ராத்திரி எம்மாமியாக்காரி, என் கைய புடிச்சுகிட்டு சொன்ன விசயம், இன்னைக்கு சொன்னாப்புல இருக்குது.” சின்ன இடைவெளி விட்டுத் தொடர்ந்தாள் அம்மா

“பல தலக்கட்டுக்கு முன்னால, ஒருவாட்டி நம்ம குடும்பத்துல இதே மாதிரி பொம்பளப்புள்ள பொறக்காம போயிருக்கு.”

நிமிர்ந்து, தன்னைப் பார்த்த அம்மாவின் பார்வை, முதன்முறையாக அருணுக்கு பயமளித்தது

“சாமி, என் ராசா, நம்ம குடும்பத்து மேல இருக்கற சாபம் நம்மூட்ல பொறக்கற பொட்டப்புள்ளைங்களுக்கு மட்டுமில்லை. சூதானமா இருந்துக்கோங்க தங்கமே” குழறிக் குழறி வந்தன சொற்கள்.

ஆஸ்பிட்டல் பெட், பினாயில் வாசனை, இரவில் ஒளிரும் ICU / OPERATION THEATER எனும் சொற்கள், இளம் பச்சை வண்ண கவுன், மழிக்கப்பட்ட தலை என அவனின் மூளைக்குள் பல காட்சிகள் சுழன்றடித்தன.

“அம்மா” எனக் கதறியபடி பழனியம்மாளின் காலில் விழுந்தான் அருண்.