அந்த மலாய் உணவகத்தில் வைத்து, “எதுக்குத் தயங்கறீங்க? இது ஒண்ணும் உங்க நாடு இல்லையே? எவனோ ஒருத்தனோட நாடு. இருக்கறதுக்குள்ள சம்பாதிச்சிட்டு ஓடிப் போயிடணும்” என்றான் விசாகன் குடிவெறியில். பிரிட்டனில் செட்டிலான தமிழன். ஒருகாலத்தில் வானத்தில் விமானங்களைப் பறக்கவிட வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் இருந்திருக்கிறது அவனுக்கு. அதற்கான நிறுவனத்தைத் துவங்க வேண்டுமென எங்கெங்கோ முட்டி மோதிப் பார்த்தும் இருக்கிறான். சரியான தொடர்பும் முதல்பணமும் அவனுக்கு அமைந்து வரவில்லை.
யாரையோ பிடித்து திமோருக்கு வந்து சேர்ந்தான். உடனடியாக அவனுக்கு அடைக்கலம் கொடுத்தது மலேசியாக்காரனான சத்தியநாதனே. ஐந்து வருடங்களுக்கு முன்பு வந்த சத்தி அப்போதுதான் அந்நிலத்தில் சிறுக சிறுக, நிதானமாக வேரூன்றிக் கொண்டிருந்தான். தொழில்சார்ந்து அடிப்படையிலேயே யார் மீதும் நம்பிக்கை வைக்கிற பழக்கமே இல்லாத சத்திக்கு, விசாகன் பிலிப்பைனீஸ் உணவகத்தில் வைத்துப் பேசிய முதல் பேச்சு முற்றிலும் பிடித்து விட்டது. எப்போதுமே குறைவாகப் பேசுகிற சத்திக்கு, ரொட்டியை லாவகமாகத் துண்டு போடுகிற மாதிரி, நேரிடையாகக் கண்ணைப் பார்த்துப் பேசும் விசாகனைக் கூடவே வைத்துக் கொள்ளலாம் எனத் தோன்றிவிட்டது. அப்போது அவனுக்குமே அப்படியான ஒருஆள் தேவைப்பட்டது.
ஆனாலும் எடுத்த எடுப்பில் உடனடியாக வாவென அழைத்து விடவில்லை. சில பல சோதனைகளை வைத்தான் சத்தி. உயர்ந்த விடுதிகளுக்கு அழைத்துப் போய் உணவுக் கட்டணத்தை அவன் தர முயல்கிறானா? என்பதைப் பார்த்தான். தன்னுடைய மறை காதலிகளிடம் தற்செயலாக அழைத்துப் போவதைப் போலச் சென்று, அவர்களை அவன் குறுகுறுவெனப் பார்க்கிறானா? என்பதைச் சோதித்தான்.
ஒருதடவை காருக்குள் வைத்து ஐந்து இலட்சம் டாலர் நோட்டுக்களைத் தற்செயலலாகச் சிதறடிப்பதைப் போல விசிறினான். கட்டுக்கட்டாக அங்கே இங்கே என மூட்டையிலிருந்து சிதறிய நெல்லிக் கனிகளென காருக்குள் கிடந்தன அவை.
அப்போது சத்தி அவனது முகத்தையே கூர்ந்து பார்த்தான். விசாகன் முகத்தில் துளிகூட ஆசை பொங்கி வரவில்லை. அவன் பதறக்கூடச் செய்யவில்லை என்பதை சத்தி உன்னிப்பாகக் கவனித்தான். கீழே விழுந்த டாலர் கட்டொன்று சத்தியின் காலடியில் கிடந்தது. அதை அவன் காலால் உதைத்து அந்தப் பக்கம் தள்ளினான். அப்போது மட்டும் விசாகன் ஒருகணம் திடுக்கிட்டுப் பெருமூச்சு விட்டான்.
“அது வெறும் பணம்தான். அது மேல தேவையில்லாதது எதையும் ஏத்தி வைக்கக் கூடாது. ஆஸ்கார் விருது வாங்குன டைரக்டர் ஒருத்தரே கேமரா மேல காலை போட்டு உக்காந்திருக்கார். நம்மூர்ல கேட்டா சரஸ்வதிம்பாங்க. கால்ல மிதிச்சிட்டா லட்சுமி ஓடிப் போயிடுவாளா? இல்லை வலுக்கட்டாயமா கையைப் பிடிச்சு இழுக்கறவன்ட்ட வந்திருவாளா?” என்றான். அதைக் கேட்டதும் விசாகனுக்கு உற்சாகமாக இருந்தது. பணம் அவனுக்கு வேண்டும்தான், ஆனால் பணத்திற்காக எதையும் செய்யமாட்டான் எனப் புரிந்து கொண்டான் விசாகன்.
மலேசியாவில் உள்ள ஓரளவிற்கு வசதியான குடும்பத்தில், எட்டு பிள்ளைகளில் மூத்தவன் சத்தி. அவனுக்கு அந்தக் குடும்பத்திலிருந்த சத்தமும் கூச்சலும் சின்ன வயதிலிருந்தே பிடிக்கவில்லை. அவனுக்கு எங்கேயாவது போய் அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும் எனத் தோன்றும். காலைக் கட்டிக்கொண்டு அவனுக்குக் கீழேயிருக்கிற பொடிசுகள் எல்லாம்கூடி அவனது உயிரை வாங்கும். எதற்கெடுத்தாலும், “அண்ணன்காரன் நீதான் எல்லாரையும் கடைசி வரை பொறுப்பா பாத்துக்கிடணும்” என்பார்கள். எதற்காக நான் அனைவருக்கும் பொறுப்பேற்க வேண்டும்? என மிகச் சின்ன வயதிலேயே சத்திக்குத் தோன்றி இருக்கிறது. பொறுப்பிற்கும் தனக்கும் காத தூரம் என்பது அப்போதே அவனுக்குத் தெரியும்.
வளரும் பருவத்திலிருந்தே அவர்கள் அனைவரிடமிருந்தும் தள்ளியே இருந்தான் சத்தி. அந்த வயதில் புத்தகம் ஒன்றைப் படித்தான். பதினான்கு வயதான நிக்கோலா மனுச்சி என்கிற சிறுவன் ஒருத்தன் வியன்னாவில் இருக்கிற அவன் வீட்டை விட்டுக் கிளம்புகிறான். அவனது நோக்கம் ஒன்றே ஒன்றுதான். வாழ்நாளில் முழு உலகத்தையும் சுற்றிப் பார்த்து விட வேண்டும் என்கிற ஒற்றைக் குறிக்கோளுடன் வீட்டைவிட்டு வெளியே நிலத்தில் காலை வைத்தான். சிறுவன் ஒருத்தனின் கால் நிலத்தில் அடியெடுத்து வைக்கிற காட்சியை அடிக்கடி நினைத்துப் பார்த்துச் சிலிர்த்துக் கொள்வான் சத்தி.
எத்தனை வயதில் அது அவனுக்குத் தோன்றி இருக்கிறது? பதினான்கு வயதில் எனத் தனக்குத்தானே சொல்லிக் கொள்வான். அவனது பதினான்கு வயதில் என்ன செய்தான் என யோசித்துப் பார்த்தான். கடலைமிட்டாய் சாப்பிட்டுக் கொண்டிருந்த நினைவுகளே அவனிடம் அதிகமும் இருந்தன. அந்தப் பதினான்கு வயது பையன் கப்பலில் கள்ளத்தனமாக ஏறி, அப்புறம் உலகமெல்லாம் சுற்றி வென்ற கதை அவனை உலுக்கியது. கிடைக்கிற பாத்திரத்தில் எல்லாம் அதன் வடிவத்தைப் போல நிறைகிற நீரையொத்து அவன் எல்லா நிலங்களிலும் அதனதன் அடையாளத்தோடு வாழ்ந்த விதம் சத்தியைத் தன்னுள்ளுக்குள் திருப்பிப் பார்க்கவும் வைத்தது. தன்னை நினைக்கையில் அவனுக்கே அசிங்கமாகவும் இருந்தது. அந்தக் கணத்தில் கப்பலில் வேலைக்குச் சேர்வது என முடிவெடுத்தான்.
அந்தப் பாதை வழியாகவே அவனது நோக்கம் முழுக்கப் பயணித்தது. ஒருநாள் பையை முதுகில் மாட்டிக்கொண்டு நின்ற தினத்தில்தான், அவன் கப்பலில் வேலைக்குச் செல்லப் போகிறான் என்கிற விஷயமே வீட்டிற்குத் தெரிந்தது. சத்தியின் குணம் எல்லோருக்கும் தெரியும் என்பதால், அவனுடைய இருப்பின்மை பெரும்பாலானவர்களுக்கு இழப்பாகவும் இல்லை. மகிழ்ச்சியோடுதான் எல்லோரும் இணைந்து வழியனுப்பி வைத்தார்கள். ஒருத்தர்கூட அவன் போவது குறித்துக் கவலை தெரிவிக்கவில்லை. அந்தக் கூட்டு மகிழ்ச்சிக்குச் சத்தியின் மனம், துயரத்தின் சாயலை அளித்து, ஏனோ எடைகூடி ஏந்திக் கொண்டது. வீட்டிற்கும் தனக்குமான பந்தத்தைப் பறைசாற்றுகிற காட்சியாக இந்தக் கொண்டாட்டம் என்றைக்கும் இருக்கும் எனச் சத்தி நினைத்துக் கொண்டான். ஒருபோதும் வீடு திரும்ப மாட்டோம் என்றுதான் அச்சமயத்தில் அவனுக்குத் தோன்றியது.
கடலில் மிதந்தபடி எல்லா தேசங்களுக்கும் போய்விட்டு வந்து விட்டான். கடலை விட அவனுக்கு நிலம்தான் பிடித்திருந்தது. அடுத்த நாட்டின் கடற்கரை நகரம் எப்போது வரும் எனக் காத்துக் கிடப்பான். சிறுவனான மனுச்சியைப் போலவே தன்னைக் கருதிக் கொண்டு நகருக்குள் இறங்கி ஓடுவான். ஆட்களை வெறிகொண்டு பார்ப்பான். அங்குள்ள பெண்களை மையலோடு நோக்குவான். அவனை நோக்கி வரும் வறியவர்களுக்குப் பணத்தை அள்ளிக் கொடுப்பான். காலார அந்த நகரத்தில் நடந்து அளந்தபடியே இருப்பான். மீண்டும் கப்பலுக்கு வந்தபிறகு அந்தக் காட்சிகளை ஓட்டிப் பார்ப்பான். எல்லாமும் அவன் நினைத்த மாதிரியே இருந்தது. ஆனால் ஒன்றுமட்டும் அதில் இல்லை என்பதை உணர்வான். ஒரு நிறைவின்மை வந்து ஒட்டிக் கொள்ளும் அவனுள்ளே.
இப்படி அடுத்த நகரம், அடுத்த நகரம் என்றெல்லாம் உலகமெங்கும் சுற்றிப் பார்த்து விட்டான். எல்லாமே கடைசியில் நிறைவின்மையைத்தான் அவனுக்குத் தந்தன. கடல் தண்ணீரை முற்றிலும் உறிஞ்சிக் குடித்தால்கூடத் தன் தாகம் அடங்காதோ? என்றெல்லாம்கூட யோசித்துப் பார்த்து இருக்கிறான். எதைத் தேடி ஓடுகிறோம்? இந்த நதி கடைசியாய் எந்தக் கடலில் கடக்கப் போகிறது? என்கிற தீராக் கேள்வி அவனிடம் இருந்தது. அடிக்கடி இதுகுறித்தெல்லாம் நினைத்துக் கொள்வான். வியன்னாவில் இருந்து கிளம்பிய சிறுவனை உலகெல்லாம் செலுத்திய விசை இதுதானா? நிறைவின்மையும் போதாமையும் ஒன்றா? தான் எதன் பக்கத்தில்? என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான் பிலிப் அருகில் வந்து அமர்ந்தான்.
சத்தியைப் பற்றிய எல்லா விவரங்களுமே அவனுக்குத் தெரியும். இத்தாலியைச் சேர்ந்த பிலிப் நாசுக்கானவன். யாருடைய உலகத்திலும் அத்துமீறி நுழைய மாட்டான். முறையான தத்துவப் படிப்பும் அவனிடம் இருந்தது. அந்தப் புத்தகங்களைப் பற்றி சத்தியும் அவனும் மணிக்கணக்கில் உரையாடி இருக்கிறார்கள். சத்தியை அவன் பல சமயங்களில் அம்மணமாக நிற்கவைத்தெல்லாம் அவனது ஆழுள்ளம் குறித்து விசாரித்திருக்கிறான். சத்தி ஒரு நாடிலியாக எதைத் தேடுகிறான்? என்கிற கேள்வி பிலிப்பிற்குமே இருந்தது.
”உன் மனதில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால் தோராயமாக ஆராய்ந்து பார்த்ததில் நீ தேடுகிற ஒன்று வரப் போகிற நாட்டில் கிடைக்கலாம் என்று தோன்றுகிறது. இது என் உள்ளுணர்வுதான். காரிய காரணங்களைக் காட்டி விளக்கச் சொன்னால் என்னால் முடியாது” என்றான். அதைக் கேட்டதுமே சத்திக்குள் அதுவரை அடங்கிக் கிடந்த அந்த விசை எழுவதைப் போல உணர்ந்தான். இரவு முழுக்கத் தூங்காமல் கப்பலின் மேற்தளத்தில் அமர்ந்து, தூரத்திலிருந்து தன்னை நோக்கி வரும் அந்த நாட்டை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது பாதுகாப்பை உறுதி செய்யும்படி அவனுக்குப் பின்னாலேயே காவலுக்கு இரண்டு பணியாளர்களையும் நிறுத்தி இருந்தான் பிலிப். இந்தியாவைச் சேர்ந்த, மலையாளம் என்கிற மொழி பேசுகிற முதிய கேப்டன் ஒருவர் பிலிப்பிடம் தான் படித்த புத்தகத்திலிருந்து கதையொன்றைச் சொல்லி இருக்கிறார். அதில் திருடன் ஒருவன் சிறைச்சாலையிலிருந்து தப்பி விடுவான். தப்பியதற்காக மேலும் முப்பது நாள் சிறைத் தண்டனை கொடுத்து விடுவார்கள். அந்தச் சிறைச்சாலையின் பொறுப்பாளர் அவனிடம், “உனக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா? நாளை ஜெயிலில் இருந்து உன்னை விடுவிக்கிற நாள் என்பது தெரியாதா? இருபத்தி நான்கு மணி நேரம் உன்னால் பொறுத்திருக்க முடியாதா?” என்று கேட்டு இருக்கிறார். அதற்கு அவன், “இருபத்து நான்கு மணி நேரத்தின் அருமை பற்றி உங்களுக்குத் தெரியாது எசமான்” என்று வெடுக்கெனச் சொன்னானாம்.
அந்தக் கதையைத்தான் சத்தி விஷயத்தில் பொருத்திப் பார்த்துக் கொண்டான் பிலிப். அவன் பாட்டிற்கு இருபத்துநான்கு மணிநேர அருமை என்று சொல்லி கடலில் குதித்து நீந்தியே போக முயன்றுவிட்டால் என்னாவது? என்கிற காரணத்திற்காகவே பாதுகாவலர்களை நிறுத்திவைத்தான். அதேசமயம் அடிக்கடி சத்தியை மேற்புறத்திற்கு வந்து நோட்டம் விட்டும் செல்வான். அன்றைக்குக் கீழடுக்குக் காற்று காரணமாகக் கடல் கொந்தளிப்பாக இருந்தது. கப்பலைப் பேரலைகள் வந்து மோதியபடியே இருந்தன. பிலிப் நின்று கூர்மையாக சத்தி அமர்ந்திருந்த இடத்தைப் பார்த்தான். அவன் எந்த அலைவுறுதல்களும் இல்லாமல் மிகச் சாந்தமாக அமர்ந்து கடலையே பார்த்துக் கொண்டிருந்தான்.
மனுச்சியைப் போல நினைத்து அந்த நிலத்திலும் காலைப் பதித்தான் சத்தி. சுற்றிலும் பார்த்தபோது, ஆள் அரவமற்று இருந்தது அந்தத் துறைமுக நகரம். ஆங்காங்கேதான் மனிதத் தலைகள் தென்பட்டன. ஒரு கூச்சல் இல்லை, ஒரு வியாபாரக் கைப்பிடி அழைப்பு இல்லை, அதுவது அதுபாட்டிற்கு அமைதியாக இயங்கிக் கொண்டிருந்தது. பாராளுமன்றக் கட்டிடம் என்றார்கள். அது பகலிலேயே அமைதியாய்த் தூக்கக் கலக்கத்திலிருந்தது.
மெல்லிய கடற்காற்றில் அக்கட்டிடத்தின் உச்சியிலிருந்து கொடி ஆடியது. அந்தக் கொடியையே பார்த்துக் கொண்டிருந்தபோது தன்பதற்றம் அடங்கி மனம் சமாதானமடைவதை உணர்ந்தான். அந்த நிமிடத்தில் தன்வாழ்நாளை அங்கே கழிப்பது என முடிவெடுத்தான் சத்தி. திரைகடலோடிய கப்பலொன்று தன் நங்கூரத்தை அங்குப் பாய்ச்சி ஆசுவாசப்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தது.
அதைப் பற்றி அறிவிப்பதற்காகப் பிலிப்பிற்கு அவன் இரவு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தான். அவனுக்குப் பிடித்த லாப்ஸ்ட்ரையும், ஜானி வாக்கரையும் முன்கூட்டியே வரவழைத்தும் இருந்தான். லாப்ஸ்டரின் கொடுக்கைப் பிடித்துத் தூக்கியபடி பிலிப், “அப்படி என்ன கிடைத்தது இங்கே?” என்றான். சத்தி தனது கண்களை மூடி, நெஞ்சை வலது கையால் தடவி விட்டபடி மூச்சை ஆழமாக இழுத்து விடுகிற மாதிரிச் செய்து காட்டியபோது, பிலிப் ”அமைதியா? சியர்ஸ்” என்றான்.
அதற்கடுத்த ஆறுமாதங்களிலேயே முறைப்படி எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டுத் தன்னை ஈர்த்த அந்த நிலத்திலேயே நிரந்தரமாகக் கால்வைத்தான் சத்தி. அவனது மனம் குதூகலித்துக் கொப்பளித்தபடியே இருந்தது அக்காலத்தில். அவன் அந்த ஊர் ஆற்றைப் போலவே இயல்பாக ஓடினான் நகரின் நடுவே புகுந்து. அந்த அரசின் மேல்மட்டப் பதவியிலிருந்த அதிகாரி மோசஸிற்கு, வியன்னாவில் இருந்து கிளம்பிய சிறுவன் என்கிற அந்தக் கதை மிகவும் பிடித்துப் போய்விட்டது.
அவருக்குமே அந்தச் சிறுவன் போலக் கிளம்பிப் போக ஆசைதான். ஆனால் வெகுகாலம் தன் வாழ்க்கையைப் போரிலேயே அதுவும் தரைப்படையிலேயே கழித்துவிட்டார். குறைந்தபட்சம் விமானியாகவாவது இருந்திருக்கக் கூடாதோ? குறைந்தபட்ச தூரமாவது பறந்திருக்கலாமே? என நொந்துகொள்ளாத நாளே இல்லை, அவர் வாழ்வில். குடியிரவுகளில் இதைத்தான் விடியவிடிய பேசிக் கொண்டிருப்பார்கள் இருவரும்.
சத்தியை அறிமுகப்படுத்தி வைத்தவருக்கு மனதார நன்றி சொன்னார் மோசஸ், அன்றைக்கான அப்பத்திற்குச் சொல்வதைப் போல. அவனோடு நெருங்கிய தொழிற்பழக்கம் வைத்துக் கொள்ளச் சம்மதித்தார். அவனுக்கு அரசின் சார்பில் தொழில் ஏற்பாடுகளையும் உடனுக்குடன் செய்து கொடுத்தார். “ஏதாவது பெரிய அளவில் பணம் பண்ணுகிற மாதிரி காரியங்களை எடுத்து வாருங்கள்” என்றார். சத்தி உடனடியாகவே, “இங்கே எனக்கு வாழப் பிடித்து இருக்கிறது. அதற்கு எவ்வளவு பணம் தேவையோ அது போதும் எனக்கு” என்றான். அவனைக் கூர்மையாகப் பார்த்துவிட்டுப் பின் அமைதியானார் அந்த அதிகாரி.
அதற்குப்பிறகு அவர் சத்தியை விட்டுக் கொடுக்கவே இல்லை. தன்னுடைய நெருக்கமான வளையத்திலேயே வைத்திருந்தார். நம்பகமானவன் என்று சொல்லி அவனைத் தனது பிற சகாக்களுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார். “நம்முடைய நாட்டில் நாம் உணராத ஏதோ ஒன்றை இங்கு அவன் உணர்ந்து விட்டான். அவனோடு தைரியமாக நீங்கள் தொடர்பு வைத்துக் கொள்ளலாம்” என்றார் அதிகாரி மோசஸ். அவரது தொடர்பால் அந்த நாட்டின் எல்லா துறைகளுக்குள்ளும் சத்தியால் போய் வர முடிந்தது. சிக்கல் இல்லாமல் எல்லோருடனும் அவன் மிகச் சரியான உறவை மேற்கொண்டிருந்தான். எனினும் சந்தேகக் கண் கொண்டு அவனது முதுகையே பார்த்துக் கொண்டிருப்பார் மோசஸ்.
ஒருதடவை சத்தி அவரிடம், “நீங்கள் உறுதியாய் நம்பித்தான் என்னை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தீர்கள் அப்புறமும் ஏன் உங்களால் என் மீதான சந்தேகத்தைக் கைவிட முடியவில்லை? அது உங்களது பிரச்சினையா? அல்லது என்னுடையதா?” என்றான். அதற்கு அவர் பைப் புகைத்துக்கொண்டு சிரித்தபடியே, “அது என் பொறுப்பு” என்றார் ஒற்றை வார்த்தையில். எதைச் சொல்கிறார் என்பதை வெகுசீக்கிரத்திலேயே புரிந்து கொண்டான் சத்தி.
அதற்கடுத்து அவன் எல்லா நாட்டுக்காரர்களுடனுமே தொழில் உறவு கொண்டிருக்கிறான். அவன் எல்லோருக்கும் முழுமுற்றான நம்பகமானவனாக இருப்பான். ஆனால் அவனது சந்தேகத்தின் நுனிக் கயிற்றை எல்லோரது இடுப்பிலும் அவர்களுக்குத் தெரியாமலேயே கட்டி விட்டிருப்பான்.
அங்கே அவனுக்கு உதவியாளர் போலக் கூடமாட வேலை செய்த பிலிப்பைன்ஸை சேர்ந்த பெண்ணையே திருமணமும் செய்துகொண்டு, திகட்டத் திகட்ட அவளோடு காதல் வாழ்க்கையிலும் இருந்தான் சத்தி.
அதற்காக அவன் ரெம்பக் கட்டுப்பெட்டியான ஆள் ஒன்றும் கிடையாது. வாய்ப்பு கிடைத்தால் பல்வேறு தேசப் பெண்களோடும் படுக்கைக்குப் போகிற ஆள்தான். ஆனால் மனதை மட்டும் யாரிடமும் கொடுக்க மாட்டான். அந்த மாதிரி எல்லா விஷயங்களிலுமே மிக மிகக் கூர்மையான தூய்மை வாதங்கள் அவனுடையவை. சின்னஞ் சிறு விஷயங்கள் குறித்து முற்றிலும் அலட்டிக் கொள்ளவே மாட்டான். அவனுமே கொடுத்து வாங்குகிறவன்தான். ஆனால் அதற்குள் அமைதியான ஒரு ஒழுங்கு இருப்பதை மட்டும் உறுதி செய்து கொள்வான்.
அவன் எதையும் வெறிகொண்டு தேடிப் போவதே இல்லை. ஆனால் உலகில் உள்ள எல்லாமும் தக்கபடி தடையற அவனைத் தேடி வந்தபடியே இருந்தன. எது இப்போது இல்லை அவனிடம்? அதனால் போதும் என்கிற நிறைவின் புள்ளியை எட்டுகிற இடத்தில் நின்றான். கடல்வழியே தான் வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து அசைபோடும் முனைப்பிலும் இருந்தான் அக்காலத்தில்.
அந்தச் சமயத்தில்தான் விசாகன் அவனது வளையத்திற்குள் எட்டு வைத்து இறங்கினான். “நான் தெளிவாகச் சொல்லி விடுகிறேன். பணத்திற்காகத்தான் இங்கே வந்தேன்” என்றான் முதல் சந்திப்பில். “தப்பில்லை. உலகம் முழுக்க எல்லோரும் அதைத்தான் தேடி ஓடுகிறார்கள்” என்றான் சத்தி. சிறிய இடைவெளி விட்டபிறகு, “திறமைதான் அதற்கான திறவுகோல். அதற்காகத் திறந்து பழகி விட்டோம் என்பதாலேயே எல்லா பெட்டிகளையும் திறந்து பார்க்க முயன்று விடக்கூடாது. இறுதியாய்ச் சொல்கிறேன், யாரையும் அமைதியிழக்க மட்டும் செய்துவிடாதே” என்றான் விசாகனிடம். அவன் சொல்வதை ஆழமாக உள்வாங்கிக் கொண்டதைப் போலத் தலையை ஆட்டினான் பதிலாய்.
விசாகனுக்குச் சீக்கிரமே விமானச் சேவையைத் துவங்க வேண்டும். ”என் நிறுவனத்தைச் சீக்கிரம் துவங்க வேண்டும் என்பதற்காகவே கடல்கடந்து வந்து உங்கள் முன்னே அமர்ந்திருக்கிறேன்” என்றான் “உனக்கு பத்து மில்லியன் டாலர் தேவை என்றால், அதை எட்டுவதற்கான பாதையைப் பல பாகங்களாகப் பிரித்துக் கொள். ஒரே நேரத்தில் அது உன் கைக்கு வரவேண்டும் என மட்டும் நினைத்து விடாதே. பிழைக்க வந்த இடத்தில் பிறருடைய அமைதியையும் உறுதி செய்” என்றான் சத்தி.
விசாகனுக்கு உடனடியாகவே வெளிநாடுகளுக்குப் பணப் பரிமாற்றம் செய்யும் துறையில் தொழில் துவங்குவதற்கான அனுமதியைப் பெற்றுத் தந்தான். அதுவுமே நல்ல வருமானம் ஈட்டக்கூடிய தொழில்தான். வளர்கிற நாடாக அது இருந்ததால் அருவியைப் போலப் பணம் அங்கு வந்து குவிந்து வேறு எங்கோ பொங்கிச் சென்று கொண்டிருந்தது. இடையில் துண்டை விரித்து நின்றால்கூடப் போதும், பொங்கிச் சிந்திவிடும் விளிம்பின் வழியாகப் பணம். விசாகனுக்கு எடுத்த எடுப்பிலேயே பணத்தோடு நெருங்கிச் செய்யும் தொழில் வாய்ப்பு கிடைத்த வகையில் மகிழ்ச்சியும்.
சத்தியின் தனிப்பட்ட வாழ்வு எல்லைக்குள் வராமல் வெகுநேர்த்தியாக விலகி நடந்து கொண்டான் விசாகன். சத்தி அவனுக்கு இப்படி வலியப் போய்ச் செய்து தருவதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அதைப் பற்றி விசாகனே, “என்னை முழுக்க எப்படி நம்பினீர்கள்?” என்றான். “ஏன்னா நீ என்னோட மூணாவது தம்பி மாதிரி இருக்கற. தப்புப் பண்ண மாட்டன்னு கண்மூடித்தனமான நம்பிக்கை. அப்புறம் கொஞ்ச நாள் உன்னைக் கவனிச்சும் பார்த்தேன். என் கணிப்பு தப்பாது” என்றான் சத்தி. சொல்லி முடித்தவுடன் எழுந்து நின்று உடலால் பணிவைக் காட்டினான் விசாகன். அவனை அமரச் சொல்லி ஆறுதல்படுத்தினான்.
சத்தியின் மனைவிக்குமே விசாகனைப் பிடித்துவிட்டது. “உங்களுக்குத்தான் பேரண்ட்ஸ் யாரும் இல்லைன்னு சொல்றீங்களே? என்னோட சிஸ்டர் ஒருத்தி இருக்கா? கல்யாணம் பண்ணிக்கிறீங்களா? ஒரேடியா ஒரே வீட்டிலயே இருந்திடலாம்” என்றாள். ஒருபெண் நேரடியாக இப்படிக் கேட்டதும் வெட்கமாகிப் போயிற்று விசாகனுக்கு. இத்தனைக்கும் வேற்று நாட்டுப் பெண். ஆனாலும் நாட்டுக்காரன் தன்மை சுடுகாடு போனாலும் விலகாது போல என நினைத்துக் கொண்டான் விசாகன்.
விசாகன் போன கொஞ்ச நாளிலேயே சத்தியின் வீட்டில் நற்காரியம் ஒன்றும் நடந்தது. சத்தியின் மனைவியான ரெகோமி கர்ப்பமானாள். “எதுலயுமே பட்டும் படாமல் பேசுவீங்களே? இப்ப குழந்தைன்னு வந்தவுடனேயே என்ன ஆட்டம் போடறீங்க? அதுக்கு என்ன விளக்கம் இருக்கு உங்கட்ட?” என்றான் விசாகன். ஒன்றும் பேசாமல் வெட்கப்பட்டுச் சிரித்தான் சத்தி. விசாகனுமே சத்தியைத் தட்டாமாலை போலத் தூக்கிச் சுற்றிக் கீழே இறக்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டான்.
சத்தி முழுநேரமுமே அந்தப் பெண்ணைக் கவனித்துக் கொள்வதிலேயே நேரத்தைச் செலவழிக்கத் துவங்கினான். சத்தி சார்ந்த தொழில்களையுமே பொறுப்பாய் மேலெடுத்துக் கவனம் செலுத்தினான் விசாகன். அந்த வகையில் அவன் மீது சத்திக்கு எந்தப் பிராதுகளுமே இல்லை. அதையுமே முன்கூட்டியே பரிசோதித்தான். ஒரு மனிதன் எதில் வீழ்வான் என்பது சத்திக்கு நன்றாகவே தெரியும். தனது மறைகாதலி ஒருத்தியை விசாகனை வசியம் செய்ய அனுப்பினான். அவளுமே அதன்படி விசாகனை இரவு விருந்திற்கு அழைத்தாள். ஆறடி உயரத்தில் அரபிக் குதிரை மாதிரியே நடந்து வந்தாள். டக்டக்கென அவளது காலணி எழுப்பிய சத்தம் உணவகத்தில் இருப்பவர்களையே திரும்பிப் பார்க்கச் செய்தது. வந்தமர்ந்த வேகத்தில் அவள் மார்பின் துள்ளல் அடங்க சிறிதுநேரம் பிடித்தது. முனிவரே ஆனாலும் ஏறிவிட்டால், அவள் இடுப்பிலிருந்து இறங்க அடம்பிடிப்பார்கள் என்று தோன்றியது விசாகனுக்கு.
மூன்றாவது சுற்று அருந்திக் கொண்டிருந்த போது, “இங்கே இன்னும் பணம் சம்பாதிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் உன் பாஸ் அதைச் செய்வதே இல்லை. எப்போது பார்த்தாலும் அவனது மனைவியையே கட்டிக் கொண்டு அலைகிறான்” என்றாள். உடனடியாகப் பதில் சொல்லியே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கிறதா என்னவென யோசித்துக் கொண்டிருந்த போது, “அவனைப் பற்றி எதுவும் சொல்ல மாட்டாய் எனத் தெரியும். இருந்தாலும் அந்த வாய்ப்பை உனக்கு வாங்கித் தருகிறேன். மிக நல்ல வாய்ப்பு. எல்லோருமே இங்கே பணம் சம்பாதிக்கத்தான் வந்திருக்கிறோம். நாம் நினைத்ததை அடைய நேர்வழியில் போய் நீண்ட நாட்களை எடுத்துக் கொள்ளக் கூடாது. எப்போதுமே நேர்வழி அந்தக் கடலைக் காட்டிலும் தூரம்” என்றாள்.
அவனது பதிலுக்காகக் காத்திருந்தவளிடம், “நீங்கள் எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். நான் என்ன செய்ய வேண்டும் என்பதும் எனக்குத் தெரியும். நாம் வெறுமனே நட்போடு இருப்போம்” என்று சொல்லிக் கையைக் குலுக்கினான். அதுகுறித்து அவன் சத்தியோடு இருந்தபோது, வாய் வார்த்தையாக ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் சத்தி அப்படி வேவு பார்க்க அனுப்பியது குறித்த சங்கடவுணர்வும் விசாகனிடம் தொடர்ச்சியாக இருந்தது. நானென்ன நாயா? பளிங்கு மாதிரி நடந்து வரும் எலும்புத் துண்டைப் பார்த்தால், நாக்கைத் தொங்கபோட்டுப் போய்விடுவேனா? தன்னை ஒருவகையில் கீழ்மகனைப் போலச் சத்தி நடத்தி விட்டதாகவும் உணர்ந்தான். கோபம் எழவில்லையே தவிர, ஒரு குமைச்சல் இருந்தபடியே இருந்தது விசாகனுக்கு.
சத்தியுமே அதை மோப்பம் பிடித்துவிட்டான். விசாகனை அழைத்துக் காரண காரியம் இல்லாமல் உரையாடினான் அடிக்கடி. விசாகனால் அதை வெளிப்படையாகக் கொட்டாமலும் இருக்கவே முடியாது என்பது சத்திக்குத் தெரியும். முகத்திலேயேதான் ஏந்தித் திரிகிறானே அதை? இன்னொரு வகையில் சத்தியால் ஒரு விஷயத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது. எவனொருவன் முகத்தில் தன் அகவுணர்வுகளைத் தேக்கி அதை அப்படியே பிரதிபலிக்கிறானோ, அவன் குறுக்குவழிகளுக்கு ஏற்றவனே இல்லை. போனாலும் மாட்டிக் கொள்வான். விசாகன் அந்த மாதிரியான அழுத்தத்தை எல்லாம் தாங்கிக் கொள்ளவே முடியாத முகவமைப்பு கொண்டவன் என்கிற உறுதியும் சத்திக்குக் கிடைத்தது.
ஒருநாள் இருவரும் சிவாஸ் ரீகல் அருந்திக் கொண்டிருந்த போது, “உன்னை நம்பிட்டேன்னு சொல்லிட்டு வேவு பார்க்கிறது தப்பு இல்லையா? சம்பந்தப்பட்டவங்களுக்கு அது அப்பட்டமாகத் தெரிந்த பின் வருகிற சங்கடம் எப்படி இருக்கும் தெரியுமா? அது ஊசியை வைத்துக் குத்துகிற மாதிரி வலியைக் கொடுக்கும். நிறைய நல்ல விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். பிறகு ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” எனப் பொங்கினான் விசாகன். அமைதியாய் அனைத்தையும் கேட்டு விட்டு, “அது என் பொறுப்பு” என்றான் சத்தி.
பிறகு எழுந்து விசாகனை எழுப்பி ஆறத் தழுவிக் கொண்டான். அந்தத் தழுவலில் மன்னிப்பு என்கிற ஊடுபாவு இருந்ததாக விசாகன் எண்ணிக் கொண்டான். விசாகனின் கன்னத்தைத் தட்டிச் சிரித்து, எதிரில் அல்லாமல் தன்னருகே அமரும் படி சொன்னான் சத்தி. பிறகு அவனது தோளில் அன்பாகக் கைகளைப் போட்டுக்கொண்டு, “உனக்குமே நாந்தான் பொறுப்பு. அதையும் நீ உணரணும்” என்றான். சொல்லி முடித்துவிட்டுத் தன்நாட்டில் இருந்தபோது இந்தச் சொல்குறித்து தனக்கு அப்போது இருந்த உணர்வையும் எண்ணிக் கொண்டான் சத்தி.
விசாகன் உடனடியாகவே நெகிழ்ந்து விட்டான். சிரித்தபடி, “அதெல்லாம் சரிதான். அதற்காகக் கொஞ்சமாவது மெனக்கெடுங்கள். இந்த மாதிரி பெண்களை உளவாளியாக அனுப்புவது எல்லாம் அந்தக் காலத்து டெக்னிக். சின்னக் குழந்தைகள்கூட இப்போதெல்லாம் இதைக் கண்டுபிடிக்கத் துவங்கி விட்டன. அதனால் அடுத்தமுறை புதிதாக எதையாவது செய்து பாருங்கள்” என்றான். தலையைக் குனிந்து கண்களைச் சுருக்கி துப்பாக்கியால் சுடுவதைப் போலச் சைகை காட்டிச் சிரித்தான் சத்தி.
“நிஜமாகவே சுட்டு விடுவீர்களா?” என்றான் விளையாட்டாய். “உயிரே போனாலும் அதைச் செய்ய மாட்டேன். ஏதோ மனவுணர்வில் குடும்பத்தை விட்டு வெகுதூரம் வந்து விட்டேன். ஆனால் இப்போதெல்லாம் அதுகுறித்து அதிகமும் யோசிக்கிறேன். என் நெகிழ்வான பக்கமும் அடிக்கடி திறந்து கொள்கிறது. உன் தோற்றமும் அருகாமையும் அடிக்கடி அந்தப் புத்தகத்தின் பக்கங்களை விரித்துக் காட்டுகின்றன. நீ கிட்டத்தட்ட என் தம்பி மாதிரி. இல்லை என் தம்பியேதான்” என்றான் நெகிழ்வாய் சத்தி. சத்தியம் செய்வதைப் போலக் கையைப் பிடித்துக் கொண்டான் விசாகன்.
அதற்குப் பிறகு விசாகனிடம் தொழில் சம்பந்தமான விஷயங்களில் நெகிழ்வைக் காட்டத் துவங்கினான். அவனுக்கு அதுவரை அறிமுகப்படுத்தி வைக்காத பலரோடு தொடர்பை ஏற்படுத்தித் தந்தான். இடையில் சத்தியின் பெல்ஜிய மறைகாதலி வந்து நின்று, “அன்றைக்கு அனுப்பியது அவன்தான். ஆனால் நான் சொன்ன விஷயம் உண்மையானது. அந்தக் கதவை இன்னமும் நான் மூடவில்லை” என்றாள். அதற்கும் சிரித்துக்கொண்டான் விசாகன். அந்த நேரத்தில் நாட்டில் அவசர நிலை போன்ற பிரச்சினை ஒன்றும் முளைத்தது. அதிகார மட்டத்தில் இருப்பவர்கள் இருதரப்பாகப் பிரிந்து நின்று மறைமுகமாக ஆட்சியைக் கவிழ்க்கக் கலகம் செய்து கொண்டிருந்தார்கள். நீறுபூத்த நெருப்பாக இருந்தது நிலைமை. நாட்டில் அதுவரை ஓடிய தெளிந்த நீரோடையைக் குலைக்கும் செயல்களைக் கண்டு மிகைபதற்றத்திற்கு உள்ளானான் சத்தி.
“பாலையும் நீரையும் பிரிச்சுப் பார்க்கிற அன்னப்பறவையா இருக்கற நேரம் இது” என்றான் விசாகனிடம். திடீரென எல்லாவற்றிற்குள் நுழைந்தும் சந்தேகத்தோடு கேள்விகளையும் எழுப்பினான். விசாகனுக்கு முதலில் எரிச்சல்தான் எழுந்தது. “அண்ணே ஒரு கவலையும் இல்லாம இருங்க. அண்ணிக்கு இது ஆறாவது மாசம். நீங்க அதைப் பாருங்க. நான் பார்த்துக்கறேன்” என்றான் போதையில் ஒருதடவை. சத்தி அவனது கண்களையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தான். இடக்காக எதுவும் தட்டுப்படவில்லை என்பதால் அமைதியாகவும் செய்தான்.
தனியாக ஒருநாள் அமர்ந்து கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒன்பது மாதக் கர்ப்பிணியான அவனது மனைவி பக்கத்தில் வந்து நின்று, “ஏதாவது சந்தேகப்படுகிறீர்களா?” என்றாள். இல்லையென்கிற மாதிரித் தலையாட்டி விட்டு, ”ஆனாலும்…” எனச் சொல்ல ஆரம்பித்ததை அப்படியே நிறுத்திக் கொண்டான். அவள் அடுத்தமுறை வீட்டுக்கு வந்த விசாகனிடம், எந்த ஒளிவுமறைவுகளுமின்றி, “நீங்கள் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறீர்களா? அதில் உங்களது அண்ணனுக்குக் கவலை போல. இப்போதெல்லாம் இரவு அதிக நேரம் விழித்து இருக்கிறார்” என்றாள் வெகுளியான முறையில்.
அந்த முறை அதுகுறித்து விசாகன் எதையுமே சத்தியிடம் கேட்கவில்லை. மலாய் உணவகத்தில் வைத்து முதன்முறையாக இருவருக்குள்ளும் சூடான விவாதம் மூண்டது. “அடுத்து வேறு யாராவது ஆட்சிக்கு வந்து விட்டால், நம்மால் இதுபோல் எதையுமே செய்ய முடியாது. இந்த ஆட்சி இருப்பதற்குள் எதையாவது செய்து பெரும் பணம் ஈட்டிவிட வேண்டும்” என்றான் விசாகன். அவன் அதைச் சொன்ன தோரணை சத்திக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. “நீ வெறியில இருக்க. அது வெறும் எலும்புத் துண்டுதான். புரிஞ்சுக்கோ. இப்ப என்ன சொன்னாலும் உனக்குக் காதிலேயே ஏறாது” என்றான் சத்தி. அப்போதுதான் அவன், “எவனோ ஒருத்தனோட நாடு” என்கிற அந்த வார்த்தையை உச்சரித்தான்.
”அதுதான் இப்ப நீ வச்சிருக்க எல்லாத்தையும் கொடுத்துச்சு” என்றான் சத்தி. “நான் எங்க வச்சிருக்கேன்? உட்கார்ந்து செலவழிச்சா இரண்டு வருஷத்துக்குகூட இந்த தொகை வராது. உங்களை மாதிரியா நான் சம்பாதிச்சிட்டேன். நீங்க சம்பாதிச்சு முடிச்சுட்டு இப்ப இந்த மாதிரி பேசறீங்க. என் நிலைமை அப்படியா? என் கனவு என்னாகுறது? விட்டால் உங்களைவிட மேலே போய் விடுவேன் என்கிற பயம் உங்களுக்கு” என்றெல்லாம் பொரிந்து தள்ளினான். அதற்கும் மேல் அவனோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்கிற முடிவிற்கு வந்து சத்தி எழுந்தான்.
அப்போது விசாகன், “என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது. அதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் உபத்திரமாவது செய்யாமல் இருக்க வேண்டும்” என்றான் வேகமாக. கொஞ்சம் மென்மையான குரலில், “எதுவும் என்னிடம் சொல்லவே வேண்டாம். எல்லா உறவுகளிலுமே பிளவு என்பது இயற்கையானதுதான். வணிகத்தில் அது எப்போதும் நடப்பது. மற்றும் இயல்பானது. அதனால் இதைப் புரிந்து கொள்கிறேன். இனி என்னால் எந்தத் துயரும் உனக்கு நடக்காது. இனி உன் வழி தனி” எனச் சொல்லிவிட்டு மறக்காமல் உணவுக்கான பணத்தை வைத்துவிட்டு நடந்தான்.
மனைவியிடம் இந்த விஷயத்தைச் சொல்லும் போது கொஞ்சம் கண்கலங்கி, “அவசரப்படுகிறான். ஆனால் அதுதான் அந்த வயதின் தன்மை” என்றான். ”அவன்தான் அவசரப்படுகிறான். நீங்கள் ஏன் அவனைக் கைவிட்டீர்கள்? அவன் உங்களது தம்பியல்லவா?” என்று அவனது கண்ணைக் குறுகுறுவெனப் பார்த்துக் கேட்டாள். ஒன்றும் பேசாமல் அவள் வயிற்றிலிருந்த குழந்தையைத் தடவிக் காட்டிவிட்டு வீட்டிற்குள் சென்றான் சத்தி. என்ன சொல்ல வருகிறான்? எனப் புரியாமல் தன் குறுவிழிகளைக் குறுக்கி நின்று யோசித்தாள்.
விசாகன் அவிழ்த்துவிட்ட மாட்டைப் போல சத்தி அறிமுகப்படுத்தி வைத்த கூட்டத்தினுள் தலைதெறிக்க ஓடினான். சத்தியின் சந்தேகத்தின் நுனி அவனைத் தொடரவில்லை என்றுதான் தோன்றியது. இல்லாவிட்டால் எப்படித் தட்டுவதற்கு முன்பே கதவுகள் படக்படக்கென திறக்க முடியும்? சத்தி குறுக்கே இருந்தால், அந்த மாதிரியான வாசல்களை, அவனால் மிதித்திருக்க முடியாது என்று விசாகன் உணர்ந்தான். அங்கே ஒரு டாலரில் துவங்கி ஐந்து டாலர் வரையிலான நோட்டுக்களே அதிகமும் புழக்கத்திலிருந்தன. இந்தியாவில் அந்த நோட்டுக்களைக் கள்ள நோட்டுகளாக அச்சடித்து பர்மா வழியாக அங்கே கொண்டு வந்து புழக்கத்தில் விடுவது என்கிற திட்டத்திற்கு விசாகன் வந்து சேர்ந்து இருந்தான்.
அவனுக்கு அந்த வகையில் உதவுவதற்கு அரசின் உள்ளிருக்கும் செல்வாக்கான சிலரையும் கைக்குள் போட்டிருந்தான். மிக ரகசியமாய் அவர்கள் தங்களுக்குள் கூடிப்பேசிக் கொண்டார்கள். இரண்டு மூன்று நடையில் வேண்டுமென்கிற அளவிற்குப் பணத்தை அள்ளிவிட்டு, நாட்டை விட்டு வெளியேறி விடலாம் எனத் திட்டமிட்டனர். உண்மையில் அது பணம் கொழிக்கக் கூடிய நல்ல மறைவியாபாரம்தான். ஆனால் பாலில் தண்ணீரைக் கலப்பதைப் போல. அரசு குழப்பமான சூழலில் இருக்கையில் யாருடைய கவனமும் இதில் குவியாது என எல்லோருமே கணித்தனர்.
அதன்படி முதல் நடை கள்ளப் பணத்தைக் கொண்டு குவித்து விட்டான் விசாகன். மறுபடி ஒருநடை போய்விட்டு வந்தபிறகு பதுக்கி வைத்திருக்கும் நோட்டுகளைப் புழக்கத்தில் விடலாம் எனவும் தீர்மானித்து இருந்தார்கள். மோப்ப நாய்க்குக்கூடத் தெரியாமல் மிக ரகசியமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது இந்தப் பணி.
இரண்டாவது முறை இந்தியாவிற்குப் போய்விட்டு பெரும்பணி ஒன்றை முடித்து விட்ட திருப்தியுடன் விசாகன் விமானநிலையத்தில் வந்து இறங்கிய போது ராணுவம் அவனைச் சுற்றி வளைத்துக் கைது செய்தது. இனி தன்னால் மீளவே முடியாது என்பதை உணர்ந்தான் விசாகன். விடுதலையே ஆனாலும் அடுத்த நிமிடம் நாட்டை விட்டுத் துரத்தி விடுவார்கள். எப்படி இது வெளியே கசிந்திருக்கும்? அவனது ஆட்கள் காட்டிக் கொடுக்க வேண்டிய தேவையே இல்லையே? யார் செய்திருப்பார்கள் அதை? என அந்தப் படபடப்பிற்கு நடுவிலேயும் அவனுக்குக் கேள்விகள் முளைத்தன.
அவன் கடுமையான விசாரணைகளுக்கு நடுவே இருந்த போது சுருட்டு பிடித்த அதிகாரி மோசஸ் ஒரு தொலைப்பேசியை அவன் பக்கம் தள்ளி விட்டார். அதன் திரையைப் பார்த்துவிட்டு அதற்குப் பின்னால் இருந்தது சத்தியநாதன்தான் என்பதை உணர்ந்தான் விசாகன். இதென்ன கீழ்த்தரமான வேலை என உடனடியாகத் தன்னைமீறி முணுமுணுத்தான் விசாகன்.
தொலைப்பேசியை எடுத்துக் காதில் பொருத்திய அவன், “துயரம் வராதுன்னு வாக்கு கொடுத்தீங்களே?” என்றான் சத்தியிடம்.
எதிர்முனையில் சிறிது நேரத்திற்குப் பிறகு, “இன்னொரு வகையில அது என் பொறுப்பு” என்றான் சத்தி.
அந்தத் துயர நிலையிலும் விசாகனுக்கு அடக்க முடியாத சிரிப்பே முதலில் வந்தது. யாருக்கு யார் பொறுப்பு? எனக் கேட்டுவிட்டுச் சிரிக்கும் சத்தத்தைக் கேட்ட அந்த முனையில் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தான் சத்தி. பிறகு அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டது.
விசாகனின் முன்னால் அமர்ந்திருந்த அதிகாரி, ”அவர் எப்போதும் அப்படித்தான். உன்னைச் சீக்கிரமே உன் சொந்த ஊருக்கு அனுப்பி விடுவோம். அவரும் அதைத்தான் வேண்டுகோளாகவும் வைத்திருக்கிறார்” என்றார். விசாகனுக்கு நிலவரம் மிகச் சரியாகப் புரிந்து போயிருந்தது. அவன் பதற்றங்கள் எல்லாம் அடங்கி விசாரணைக் கைதியாய் வாழ்வதற்கான ஆயத்தங்களை மனதளவில் செய்யத் துவங்கினான். சத்தியோடு அமைதியாக இருந்திருக்கலாம் என்கிற எண்ணம் இறுதியாக அவனுள் திரண்டு வந்தது. சத்தி தம்பியைப் போலக் கட்டியணைத்த காட்சிகளுமே வந்து போயின.
கூடவே குறுகுறுப்பான அந்தக் கேள்வியும். கடைசியாய் சத்தியிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என அனுமதி கேட்டான் அதிகாரியிடம். அவருமே அனுமதி கொடுத்தார்.
“என்னை எதற்காகச் சுட்டீர்கள்?” என்றான் விசாகன்.
எதிர்முனையில் ஒன்றும் பேசாமல், பதில் சொல்லும்விதமாகக் கண்களை மூடி வலது கையை நெஞ்சில் வைத்து மூச்சை ஆழமாக உள்ளே இழுத்து வெளியே விட்டான் அவன்.
சிறைப் பொந்தில் நுழைகிற எலியின் வாலைப் பார்த்தான் இவன்.