நோவின் தூல வடிவம்
காற்றில் புதையும் ஊத்தைச் சொற்களின் பிடிமண்ணை வாரி வீசுகிறது முதிர்காமம்.
பச்சைக் கூட்டத்தினிடையே
வலியின் இளங்குருத்து தனித்து எரிகிறது.
நெருப்பைப் பழிவாங்குவதற்கென
பொழிவித்த பெருமழையெல்லாம்
அம்பல முற்றத்திற்கு வெளியே
அடங்கிப் போயின.
அத்தாணி மண்டபத்தில்
காய வைத்திருந்த
உறக்கப் போர்வைகளை உலர விடாது
மடித்து வைப்பதன்றி
வலியின் பிசாசிற்கு
வேறு வேலையில்லை.
பாழில் பிதுங்கியப் பீழைத் திரவியம்
மூளியாய் நிற்கிறது
உயிர் குடையும்
இருளின் தரிப்புத் திரட்சியில்.
வலியின் கணிதம் சூனியம் பெருக்கும்
எனவும்
நோவு என்பது
தத்துவங்களின் செவிடு எனவும்
புதிய கிளிப்பிள்ளை
பழைய கிளிப்பிள்ளைக்கு வகுப்பெடுக்கிறது.
காதடைக்கும் இரைச்சல்
அண்ணாக்கு உரையாடல்
மறுக்க மறுக்க உடலை உடுக்கும் கசப்பு.
ஒன்றில் ஒடுங்கும் பேரவஸ்த்தை.
கால் பெருவிரலளவிற்கு
குறைந்த பிரபஞ்சத்தில்
ஒற்றையாய் மின்னித்தவிக்கும்
வலியின் உலகம்.
எனது வீடு
சொற்களின் பின்னே
உடல் நிமிர்த்து
செவி விடைக்க நிற்கும் நாயை
நாற்றிசையிலும் சூடிவிரட்டும் காலம்
அங்காந்த வாயில் தவிக்கும் நாவால்
காற்றினில் வியர்க்கும்.
பாஷைகளையறியாத கோழிகள்
கூரையினுயரத்தை அதிகப்பட்சமாய்
அடைந்து
ஒலி குவித்து வானிலெறிய
முற்றத்தில் விழுந்து உடைகிறது
கனவுச் சூரியன்.
மொழியறிதல்
இன்னுங்கொஞ்சம் நீளமான
கயிறு
மேய்தலி்ன் எல்லையை
விரிவாக்கும் சிறிய விடுதலை.
பிராணிகளும்
பறவைகளும் தெய்வங்களின்
சொற்களாய் அலையும் தெருவின்
கடைகோடியிலிருக்கிறது எனது வீடு.
ஒரு சொல்லில்
விழிப்பவனாகவும்
ஒரு சொல்லில் பகலுண்பவனாகவும்
ஒரு சொல்லில் உறங்குபவனாகவும்
ஒரு சொல்லாய் எஞ்சும்
ஒருவனங்கிருக்கிறேன்.
வேறு வேறு சொற்கள்
கை கால்களை பற்றியிழுக்க
பழஞ்சொற்கள் குரைக்க
புது மொழிகள் அழைக்க
சொற்களால் சொற்களில் அறையப்பட்டவனின்
பாசாங்கு நடனத்தை
வான்திரையில் படம் பார்க்கிறேன்.
மண்ணுழுந்தி
கருணையற்ற புழுக்களின்
லாவகங்களின் முன்னே
சுரணையற்று வீழ்கிறது இகஞானம்.
தன்னை உதைத்து தானெழுந்து
கரணமடிக்கும்
கூத்தாடிப் புழுக்களின் அற்புதத்தை
எனது கிண்ண நீரினுள் நெடுநேரம்
வியக்கும் பொழுது
முகம் மொய்த்திருந்தன கொசுக்கள்.
பண்டய எனது முரட்டு நாரை
புழுவென நினைத்து
விலாங்கொன்றை விழுங்கிவிட்டது.
கழுத்து நீண்டிருக்கும் காரணம்
இந்த புராணம்தான்.
மென்மன
நாங்கூழ் புழுக்கள்
மழை தழுவி பயணிக்கும்
கார்காலம்
தார்ச்சாலையில் ஏமாற்றமடைந்து
சிதறி நசியும்.
நடுவில் துண்டுபட்டு
இரு திசையிலும் நகரும் உயிர் கவலை
வீடுகளின் கதவிற்குள் சாலைகள்
திறந்து கொள்வதை
அலமந்து குமையும்.
முன்னும் பின்னும்
கீழும் மேலும்
மண் நிறைந்திருந்தது
வெளியே இழுத்து
வெய்யிலில் தொலைத்த
எந்திர மிருகத்திற்கு சமூக முகம்.
புழுவென்ற உயிரியல்
பாம்பென்ற வடிவியலில் அடிபடுகிறது.
கால்கள் விரித்து
பாதையோரப் புதரில்
நாய்போல் உருவத்தின் மேல்
குறுக்கு நெடுக்காய் புழுக்கள்
தோற்றத்தின்போதே
தோன்றியிருக்கக் கூடும்
‘வயிற்றுப் புழுவுக்கு மருந்து சாப்பிட மறக்காதே’
கனவில் வந்து
சொல்லிச் செல்கிறாள்
இறந்துபோன அம்மா.
rajan-athiappan-kavithgal