மழை நின்றுவிட்டது
குழந்தைகள்
பள்ளிக்குச் சென்றுவிட்டனர்
பெரியவர்கள்
வேலைக்கு கிளம்பி விட்டனர்
தளர்ந்து ஆடுகின்றன
குளிருக்கு விரிந்து
தாழிடமுடியாத உள்ளறைக் கதவுகள்
உலகம் அடுக்கிவைத்த
பொறுப்புகளின் இடுக்கிலிருந்து
இலகுவாகி வெளிவருகிறது
இல்லம்
தினம் தினம் வெளிச்சுவற்றை
முட்டிப் பார்க்கும் பட்டாம்பூச்சியே
எங்கிருக்கிறாய் நீ?
இதோ பூக்கிறது
என் வீடு
2
தனியாக இருப்பவன் கையில்
ஒரு மலரைக் கொடுத்தது போல
எனக்கு அந்த அறை
கொடுக்கப்பட்டிருந்தது
நான் அதை
கையில் வைத்து
சுழற்றிக் கொண்டிருந்தேன்
அதற்கொரு பிரத்தியேக
வாசமிருந்தது
குறிப்பிட முடியாத
வண்ணமிருந்தது
அங்கு
மெல்லிய காற்றிற்கு
ஒரு ஃபேன் இருந்தது
அதன்
இதழ்களில் ஒளி தவழ
ஒரு ஜன்னல் இருந்தது
நட்டநடுவே ஒருவன்
உட்கார்ந்திருப்பது போல்
கூரிருள் கொஞ்சம் இருந்தது
மலருக்குள் மலர் வைத்த ரகசியம்
அதனுள் இருந்தது
3
ஆக்டோபஸ் வானம்
நிறம் மாற்றி
நிறம் மாற்றி
யாரை நடிக்கிறார்
வானம் ?
என்னைத்தான்
என் வீட்டிற்குள் புகுந்துவிடத்தான்
இத்தனை நாடகம்
நான் திறந்துவைத்த வாசல்களை
மேலும் திறந்துவைத்தேன்
ஏதுமறியாததுபோல் வெளியே சென்று
தாமதமாகத் திரும்பிவந்தேன்
என்னைப்போல் இப்போது
வீட்டில் உறங்குகிறார்
Mr.வானம்
மெல்ல வீட்டைப்பூட்டி
சாவியைச் சுழற்றினேன்
இரு உலகே
நாளை வருவது
உனது புதிய வானம்
4
வீட்டிற்குள் இருந்த
வானைத் திறந்தது
மரபீரோ கண்ணாடியில்
ஜன்னல்
இப்போது
வீட்டிற்குள் இருந்து
வீட்டிற்குள் பாய்கிறது
ஒளி
வானை
ஒளியை
பொலிவுறச்செய்ய
நான் வெறும்
கண்ணாடியைத் துடைத்தேன்
அதில் அப்போது
பறந்து மறைந்த
பறவை இன்னும்
வீட்டிற்குள்தான் இருக்கிறது.
வீடுகளின் பல பரிமாணங்களோடு, கவிதை அற்புதம்
பரபரப்பான மன ஓட்டத்தில் ஆனந்தகுறமார் கவிதைகள் மயிலிறகால் மனதை வருட வல்லன. திரும்பத் திரும்ப வாசித்து இதமுறலாம்❤️❤️❤️❤️