திருவாரூர் பழைய ரயில்வே ஸ்டேஷனுக்கு பக்கத்தில் ஒரு ரயில்வே மருத்துவமனை இருக்கிறது. அதற்கு எதிரே ஒரு ஆலமரம் சுற்றிக் கட்டப்பட்ட சிமெண்ட் மேடையுடன் நின்றிருக்கும். பிறந்தநாளுக்குப் பட்டுப்பாவாடை சட்டை போட்டு சீருடை அணிந்த சிறுமிகள் நடுவே உட்கார்ந்திருக்கும் குழந்தைபோல உயிரே இல்லாத நகரின் நடுவே அந்த ஆலமரம் உட்கார்ந்திருந்தது.
சச்சிதானந்தம் ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்று ரொம்ப நாளெல்லாம் ஆகிவிடவில்லை. ஒரு வருடத்துக்குள்தான் இருக்கும். அவருக்கு முன்பே விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்ட மனைவி வீட்டிலிருந்ததால் அவருக்குப் பொழுது நன்றாகவே போனது. என்ன இளமை தீராத மனைவியின் உடல் தொந்தரவு செய்தது. பகலில் ஒருமுறை உறவு கொண்டுவிட்டால் இரவுக்கு சக்தி போய்விடுகிறது. ஆகவே பகல் நேரங்களில் திருவாரூரைத் தன்னுடைய சைக்கிளில் சும்மா சுற்றி வந்து கொண்டிருந்தார். சச்சிதானந்தத்துக்குப் பூர்வீகம் மதுரைப் பக்கம். அவருடைய அப்பா நாகப்பட்டினம் துறைமுகம் செயலாக இருந்த காலத்தில் குடும்பத்துடன் வந்து வெளிப்பாளையத்தில் குடியேறினார். இருந்தும் மதுரைத் தொடர்புகளை விட்டுவிடவில்லை. சச்சிதானந்தத்துக்கும் மதுரைக்கும் எந்தத் தொடர்பும் இல்லாவிட்டாலும் மனைவியிடமிருந்து தப்புவதற்கென்றே மாதம் ஒருமுறை மனைவியுடன் மதுரை போய் தங்கிவிட்டு வருவார். எத்தனை மாதங்களுக்குத்தான் ஒட்டுறவு இல்லாத ஊருக்குப் போய்வர முடியும்! அதிலும் அவர் மனைவி கடைந்தெடுத்த திருவாரூர்க்காரி. பிள்ளைகளுக்கும் திருமணமாகி உடனடியாகக் கிளம்பிப்போக முடியாத தொலைவில் இருக்கின்றனர். மேலும் அவர்களைப் போய் தொந்தரவு செய்யவும் சச்சிதானந்தத்துக்கு விருப்பமில்லை. அவரும் அவர் மனைவியும் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருக்கும் போது வீட்டுக்கு வரும் அவர் பெற்றோர்களை நினைத்து எவ்வளவு எரிச்சல் கொண்டிருக்கிறார்! அதுபோலத்தானே தன் பிள்ளைகளுக்கும் இருக்கும் என அவராகவே ஒதுங்கி வாழப் பழகிக் கொண்டார்.
ஆக எஞ்சி இருப்பது இந்த ஆலமரம்தான். ஒருவேளை புத்தன் கூட பொழுதுபோகாமல்தான் இப்படி ஆலமரத்தில் வந்தமர்ந்து ஞானம் பெற்றிருப்பானோ என்று எண்ணிப் பார்ப்பார். ‘ச்சே ச்சே இருக்காது’ என்று சமாதானம் சொல்லிக் கொள்வார். ஆனால் அந்த ஆலமர மேடையில் படுத்துக் கிடக்கும் முகங்களில் நிலவும் சாந்தம் அவருடைய சமாதானத்தில் விரிசல் விழச்செய்யும். ஒரு புறம் பரபரப்பான ரயில் நிலையம். மறுமுனையில் எந்நேரமும் வாகனவொலி கேட்டுக் கொண்டே இருக்கும் திருவாரூரின் பிரதான கடைவீதி. இரண்டுக்கும் நடுவே இவ்வளவு அமைதியாக ஒரு இடமும் அதில் இவ்வளவு சோபை வழியும் முகங்களும் சச்சிதானந்தத்தை ஆழமாக மகிழ்ச்சியடையச் செய்கிறவை. ஆனால் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் என்பதால் அவரால் அங்கு நிம்மதியாக உட்கார்ந்திருக்க முடியவில்லை. ரயில்வேயில் வேலை பார்ப்பவர்கள், முன்னாள் மாணவர்கள், உடன் பணியாற்றிய ஆசிரியர்கள் என யாரோ ஒருவர் வந்து தொந்தரவு செய்துகொண்டே இருப்பார்கள். கொரோனாவுக்குப் பிறகு முகக் கவசம் அணிவதை யாரும் வித்தியாசமாக எடுத்துக் கொள்ளாததால் சச்சிதானந்தம் முகக்கவசம் அணிந்து வந்து அங்கு அமரத் தொடங்கினார். வழக்கமான பேண்ட் சட்டைகளைத் தவிர்த்து வெள்ளை வேட்டி சட்டை போடத் தொடங்கினார். டை அடிக்கும் பழக்கம் இல்லையென்றாலும் மீசை தாடியை ஒவ்வொரு வாரமும் திருத்துவார். சுயமாக முடிவெட்டிக் கொள்ளவும் அவருக்குத் தெரியும். அந்தப் பழக்கங்களைக் கைவிட்டார். இந்த கோலத்துக்குப் பிறகு என்ன நினைத்தாளோ மனைவியும் அவ்வளவாகத் தொந்தரவு செய்வதில்லை. இரவில் மனைவியிடம் சக்திவிரயம் செய்வது குறைந்ததும் உடலில் வலுவும் மனதில் சாந்தமும் கூடியது போல இருந்தது. சில மாதங்களாகச் சிரைக்காமல் விட்ட முகமும் ஒழுகாத குறியும் வெள்ளுடையும் சச்சிதானந்தத்துக்குத் தான் ஏதோ ஞான நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதான உணர்வை அளித்தன. ஆனால் உடல் உந்துதலை சில நேரங்களில் தவிர்க்க முடியாது. முடிந்து ஆசுவாசம் கொண்டபின் காந்தியை மரியாதையுடன் நினைத்துப் பார்ப்பார். ஒரு வாரத்துக்கு சத்தியசோதனையைப் படிப்பார். உபவாசமிருப்பார். அப்போது அவர் மனைவிக்கு சச்சிதானந்தத்தின் மீது இன்னும் மரியாதை கூடும். உபவாச நாட்களில் சச்சிதானந்தம் ஒதுக்குப்புறமாக இருக்கும் கடைகளில் போல் பஜ்ஜியும் இஞ்சி டீயும் குடித்து வருவார். ஆனாலும் அவருக்கு தனக்குள் என்னவோ ஒன்று முழுமை அடைவது போல வலுவாகத் தோன்றியது. ஒரு சில மாதங்களில் சச்சிதானந்தம் அவருக்குத் தெரிந்தவர்களால் மறக்கப்பட்டார். உண்மையில் மனிதர்களின் உடலில் நாம் எதை ஞாபகம் வைத்திருக்கிறோம் என்று ஆச்சரியமாக இருந்தது அவருக்கு. ஒரே மாதிரியான வாழ்க்கைக்குப் பழகிப்போனால் எண்ணற்ற சாத்தியங்கள் இருந்தும் உடல் எல்லோரிடத்திலும் எந்நேரமும் ஒரே மாதிரிதான் எதிர்வினையாற்றுகிறது. அந்த எதிர்வினையைத்தான் எல்லோரும் நினைவில் வைத்திருக்கிறார்கள். தன்னுள் வேறொன்றாக மாறிக் கொண்டே இருக்கிறவனை மனிதர்களால் அடையாளம் காண முடியாது என்றெல்லாம் சச்சிதானந்தம் நினைத்தார்.
ஓய்வுபெற்ற ஒன்பது மாதங்களில் சச்சிதானந்தம் இன்னொருவராக மாறிவிட்டார். இப்போது அவருக்கு நிறைய புது நண்பர்கள். அவரிடம் தினம் பத்து ரூபாய் பிச்சை வாங்கும் கிழவன், எல்லோரையும் வாய்க்கு வந்தபடி திட்டும் இளம் பைத்தியக்காரி, பக்கத்தில் இருக்கும் டீக்கடையில் க்ளாஸ் கழுவும் சிறுவன், ரயில்வே ஆஸ்பிட்டல் நர்ஸுகள், மாலை ரயிலேற வரும் சப் கலெக்டர் என்று கலவையான மனிதர்கள் சச்சிதானந்தத்தை விரும்பினர். சச்சிதானந்தமும் அவர்களை விரும்பினார்.
அவர் மனைவி எப்போதாவது கேட்பார்.
‘கால தெறிச்சு அந்த ஆலமரத்துலயே ஒக்காந்திருக்கிறதுக்கு வேற ஏதும் பிஸினஸ் பண்ணலாம்ல?’
சச்சிதானந்தம் அவளைப் புன்முறுவலுடன் பார்ப்பார். அவர் ஏதாவது தத்துவார்த்தமாகப் பதில் சொல்வார் என்று அவர் மனைவி பயந்துகொண்டு போய்விடுவார். தான் ரொம்பவே உயரத்துக்கு வந்துவிட்டதாக அவருக்குத் தோன்றியது. இந்த அறுபது வருட வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களையெல்லாம்விட தனக்கு நிறையக் கொடுக்கப்பட்டுவிட்டதாக நினைத்தார். யாரையும் மன்னிக்கவும் யாரைப் பார்த்தும் இயல்பாகச் சிரிக்கவும் தன்னால் முடிந்தது குறித்து அவர் பெருமிதம் கொண்டார். அந்தப் பெருமிதத்தோடு வாழ்ந்து கொண்டிருந்தபோதுதான் சிவராமனைப் பார்த்தார்.
‘சார் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் போயிடுச்சா?’ என்று ஆலமர மேடையில் கையூன்றி வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவரை அவசரமாகக் கேட்டான். தனக்குள் சட்டென வெறுப்பு குமிழியிடுவதை உணர்ந்தார்.
‘ஏந்தம்பி எவ்வளவு பேர் இருக்காங்க எங்கிட்ட வந்து இப்புடி பிடிச்சு உலுக்குற மாதிரி கேக்குற. இந்த வேரிஸ் மை ட்ரைன் ஆப் எல்லாம் உன் போனில் இல்லையா. சீக்கிரம் போ இன்னும் ட்ரைன் போகல’ என்றார்.
சிவராமன் ‘தேங்க்யூ சார்’ என்று சுரணையே இல்லாமல் சொல்லிவிட்டு ஓடினான். அவன் தன்னை முறைக்காமல் அப்பாவியாக நன்றி சொன்னது அவருக்கு வேதனை தந்தது. அன்றிரவு சச்சிதானந்தம் சரியாகத் தூங்கவில்லை. ஏதோ பெரிய தவறு செய்துவிட்டோம் என்ற எண்ணம் தோன்றியது. இரண்டு வருடங்களுக்கு முன்பு என்றால் இப்படியெல்லாம் தோன்றியிருக்காது. இன்று சிறிய கடுஞ்சொல் கூட அவர் சொல்வதில்லை. ஏராளமான இலக்கிய நூல்களை வாசிக்கிறார். ஆன்மீக உரைகளைக் கேட்கிறார். அவரால் யாரையும் துன்புறுத்துவதை இப்போது நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.
கொஞ்ச நேரமே பார்த்திருந்த சிவராமனின் முகம் அவருக்குள் ஆழமாகப் பதிந்துவிட்டது. அவன் உருவத்தில் என்னவோ ஒரு விலகல் அவருக்கு இருந்தது. சோற்றுப்பொதியைப் போன்ற உருவம். அவன் இளைஞன்தான். மிஞ்சிப்போனால் முப்பத்தைந்து வயதிருக்கும். ஆனால் கிழடு தட்டியவன் போல அவருக்குத் தோன்றினான். இப்படி ஒரு மனிதனைப் பற்றி தன்னுள் வெறுப்பு வளர்வது அவருக்கு என்னவோ செய்தது. அவனை மீண்டும் பார்க்க விரும்பினார். அவனிடம் ஒருமுறை மன்னிப்புக் கேட்டுவிட்டால் போதும். அடுத்த ஒரு வாரமும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் போகும் நேரத்தில் அவனை எதிர்பார்த்தார். அவன் தட்டுப்படவில்லை. எட்டாவது நாள் காலை எதேச்சையாகக் கண்ணில்பட்டான். ரயில் போகும் நேரத்தில் அல்ல. வரும் நேரத்தில். அவனைப் பின்தொடர்ந்து சென்றார். அவனைப் பின்தொடர்வது அவருக்குப் பிடிக்கவில்லை. அவனுடைய தளர்ந்த உடலும் நடையும் வெறுப்பூட்டின. அவர் வயதுக்கு அவனை மிக விரைவாக நெருங்கிவிட்டார். ‘தம்பி’ என்று கூப்பிட்டார். அவன் திரும்பினான். திரும்பும்போது உடலை இறுக்கமாகப் பிடித்திருந்த சட்டை சற்றே மேலே தூக்கி இடுப்பின் சதைப் பிதுக்கம் வெண்ணிற பனியனுக்குள் தெரிந்தது. சச்சிதானந்தம் மேலும் அருவருப்படைந்தார். உப்பி தாடைக்குக் கீழே மெலிதாக சதை தொங்கத் தொடங்கும் முகம். மேடிட்ட தொப்பை வயிறு. இடுப்பில் பேண்ட் இறுக்கியதால் இன்னும் அவன் வயிறு உப்பித் தெரிந்தது. அவன் ஆச்சரியமோ அதிர்ச்சியோ இல்லாமல் அவரைப் பார்த்தான்.
‘ஒன்னுல்லப்பா அன்னிக்கு கொஞ்சம் ஹார்ஷா பேசிட்டேன் சாரி’ ஏறக்குறைய காலில் ஒட்டிய மலத்தைத் துடைக்கும் அவசரத்துடன் இச்சொற்களைச் சொன்னார். அவன் இதழ் புன்னகை போல லேசாக வளைந்தது. ஏற்கனவே உப்பியிருந்த கன்னம் இன்னும் விகாரமானது.
‘பரவால்ல சார்’ என்றான். அவன் குரலை அவரால் வெறுக்க முடியவில்லை.
‘எங்க வேலை பாக்குறீங்க தம்பி?’ என்றார்.
அவன் ஒரு அரசாங்க அலுவலகத்தைக் காண்பித்தான்.
அதன்பிறகு சச்சிதானந்தம் அவனைப் பலமுறை பார்த்திருக்கிறார். அவனிடம் பேச முயன்றிருக்கிறார். அவனும் ரயிலேறுவதற்கு முன் அவரிடம் ஒருசில சொற்கள் பேசிச் செல்வான். அவனுக்குள் என்னவோ துயரம் இருப்பதாக சச்சிதானந்தம் நினைத்தார்.
ஒருநாள் அவனாகவே ‘எனக்கு கொழந்த இல்ல சார்’ என்றான். வேதனையும் நிராதரவும் தொனிக்கும் குரல். ஆலமரத்தின் இலைகள் அவன் உணர்வுகளை வருடும்படி சிலுசிலுத்துக் கொண்டிருந்தன.
‘எல்லாம் நான் பண்ணின பாவம் சார்’ என்றான்.
‘கல்யாணம் ஆனப்ப நான் இப்படி இருக்கமாட்டேன் சார். நல்லா ஒல்லியாதான் இருந்தேன். குழந்தை இல்லன்ற ஏக்கத்துலயே இப்படி ஆயிட்டேன் சார். எனக்குத்தான் பிரச்சினைன்னு வொய்ஃப் சுத்தமா மதிக்கமாட்றா சார். அவ ஒரு ஸ்கூல்ல டீச்சரா இருக்கா. தெனமும் என்னை முந்திரி பாதாம்னு திங்க சொல்றா. ஒடம்பு ஏறாம என்ன பண்ணும். திரும்ப டெஸ்ட் பண்ணினப்ப எனக்கு ஸ்பெர்ம் கவுண்ட் நார்மலாகிடுச்சு. ஆனாலும் அவ என்னைய டார்ச்சர் பண்ணிட்டு இருக்கா சார். ஆபீஸ்லயும் ஏகப்பட்ட டென்ஷன். வீட்லயும் நிம்மதி இல்ல. செத்துடலாம் போல இருக்கு சார். என் பாவம் என்ன சுத்தி சுத்தி வருது சார்’ தலையில் அடித்துக் கொண்டவனை சச்சிதானந்தம் தோளில் சாய்த்துக் கொண்டார். அவன் வாயிலிருந்து வழிந்த எச்சில் அவர் சட்டையில் ஊறியது.
வீட்டுக்கு வந்தவரிடம் ‘என்னங்க நாத்தம்’ என்று மனைவி கேட்டாள்.
‘அமிர்தத்தோட நாத்தம்டி’ என்று திருப்தி நிறைந்த முகத்துடன் சச்சிதானந்தம் சொன்னார்.
மறுநாள் சிவராமனைத் தூரத்தில் பார்க்கும்போதே அவனிடம் ஒரு வேறுபாட்டை அவர் உணர்ந்தார். முதல்நாள் அப்படி அழுததற்காக வெட்கப்பட்டான்.
‘ஒங்ககிட்ட எல்லாத்தையும் கொட்டின பிறகு மனசு லேசாயிடுச்சு சார்’ என்றான். அதே உற்சாகத்துடன் ஒரு மாதம் கழிந்தது. ஒரு வெள்ளிக்கிழமை காலையில் சிவராமன் இனிப்புடன் அவரிடம் வந்தான்.
‘ப்ரீத்தி கன்சீவா இருக்கா சார்’ என்றான். சச்சிதானந்தம் அவனைத் தழுவிக் கொண்டார். அவன் உடலின் அருவருப்பூட்டும் தன்மை குறைந்ததா அல்லது உண்மையிலேயே அவன் உடல் பார்க்கும்படியான வடிவத்திற்கு வருகிறதா என்று அவரால் ஊகிக்க முடியவில்லை. மாலையில் சிவராமன் நேரம் கழித்துத்தான் வந்தான். சச்சிதானந்தம் அவனுக்காகக் காத்திருந்தார். இருவரும் அன்று கொஞ்சமாகக் குடித்தனர்.
சச்சிதானந்தம் ஆர்வத்தை அடக்கமாட்டாமல் ‘அன்னிக்கு ஏதோ பாவம்னு சொன்னியே என்ன சிவா அது?’ என்று கேட்டார்.
சிவராமன் லேசாகச் சிரித்தான்.
‘அது பாவமான்னு தெரியல. கடவுளுக்கு எம்மேல ஏதோ பெரிய கருணை இருக்குன்னு நினைக்கிறேன். ஒவ்வொரு தடவையும் என்னை காப்பாத்திட்டே இருக்கார்’ என்றான். அவன் ‘சார்’ போடாதது அவருக்குச் சற்று எரிச்சலைத் தந்தது.
‘உனக்குப் பிரச்சினை இல்லன்னா நீ எங்கிட்ட சொல்லலாம். ரொம்பநாள் உள்ள கெடந்து அழுத்திட்டு இருக்கில்லையா?’
‘சார் நீங்க எனக்குத் தெய்வம் மாதிரி. ஒங்ககிட்ட நான் எதை மறைக்கப் போறேன். இதைப்போய் என்னான்னு ஒங்ககிட்ட சொல்லிகிட்டு’ என்று இழுத்தான். மீண்டும் ‘சார்’ வந்தது அவருக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
‘சும்மா சொல்லு’ என்று சொல்லிப் புன்னகைத்தார். அவன் மனதிலிருந்து அடைசலை எடுக்க வேண்டும் என்பதைத் தாண்டி அவருக்கு அவன் சொல்லப்போகும் கதையில் ஆர்வம் தொற்றியது. பாவத்துடன் தொடர்புடைய கதைகள் எல்லாம் கிளர்ச்சி தருகிறவைதானே!
சிவராமன் சொல்லத் தொடங்கினான்.
‘அப்ப நான் லெவன்த் படிச்சிட்டு இருந்தேன் சார். எங்க க்ளாஸ் தமிழ் டீச்சர் ரொம்ப அழகா இருப்பாங்க. அவங்கள அவ்வளவு தீவிரமா காதலிச்சேன். க்ளாஸ்ல என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ராஜகுரு, மணிகண்டன், அருண்குமார். அவனுங்கள்ட்ட தமிழ் டீச்சர் பத்தி சொல்லி சொல்லி அவனுங்களுக்கும் வெறி ஏறிடிச்சி. க்ளாஸ்ல எல்லா பீரியடும் அவங்க எங்க கூட இருக்கணும்னு நெனப்போம். இண்டர்வல்ல ஸ்டாஃப் ரூம் பக்கமாவே சுத்துவோம். எங்க நாலு பேராலையும் அவங்கள பாக்காம இருக்க முடியல.’
அரையாண்டு விடுமுறை முடிந்ததும் டீச்சரைக் கடத்தி எங்களுடனே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். ராஜகுருதான் முதலில் சொன்னான்.
அவன் அப்படிச் சொன்னதும் எங்கள் மூவருக்குள்ளும் ஒரு பரவசமான மின்னலை கடந்து போனது. ராஜகுரு தான் திட்டத்தைச் சொன்னான். வியாழனன்று தமிழ் சிறப்பு வகுப்பு இருக்கும். அதோடு பள்ளிக்குப் பக்கத்திலுள்ள ஒரு வீட்டில் டீச்சர் டியூஷனும் எடுத்தார். அதனால் வியாழக்கிழமையில் அவர் வீட்டுக்குப் புறப்பட எட்டு மணிக்கு மேலாகிவிடும். அவர் ஒரு ஆளில்லாத அரசாங்க கட்டிடத்தின் உள்ளே நுழைந்து – அங்கு யாருமே இருக்கமாட்டார்கள் – வெளியேறினால் பேருந்து நிலையத்தை அடைவார். அங்குதான் அவரைக் கடத்தத் திட்டமிட்டோம்.
அவன் சொல்வதை சச்சிதானந்தம் திகைத்துப் போய் கேட்டுக் கொண்டிருந்தார்.
‘இப்ப யோசிச்சா அது எப்படி அவ்வளவு சரியாக நடந்ததுன்னு தெரியல சார்’ என்றான்.
அவர் அனிச்சையாகக் குரலில் ஏறிய வேகத்துடன் ‘என்ன நடந்தது?’ என்றார்.
‘நாங்க தமிழம்மாவ கடத்திட்டோம். ராஜகுரு கரெக்ட்டா லைட் ஆஃப் பண்ணிட்டான். நான் தமிழம்மா லிப்ஸ்டிக் வெளிச்சத்துலேயே அவங்க வாயக் கட்டிட்டேன். மணிகண்டன் நல்ல தடிமாடு மாதிரி இருப்பான். அவன் அவங்கள இறுக்கிப் பிடிச்சிட்டான். பக்கத்துல ஒரு வாய்க்கா ஓடும். அதுல தண்ணி இல்ல. அங்க வாயக்கட்டி தூக்கிட்டுப் போயிட்டோம்’
ரொம்பநாள் கழித்து சச்சிதானந்தம் தனக்குள் அச்சம் கூடுவதை உணர்ந்தார்.
‘ராஜகுரு வாய்க்காலுக்கு அந்தப் பக்கம் அவங்க அப்பா ஆட்டோவ எடுத்துட்டு வந்துட்டான். டீச்சர் கொஞ்ச நேரத்தில மயங்கிட்டாங்க. அங்கேருந்து எங்க ஊர்ல இருக்கிற ஒரு பழைய பண்ணை வீட்டுக்கு டீச்சரை தூக்கிட்டுப் போகுறதுதான் ப்ளான். டீச்சர் அன்னிக்கு ஒரு வெளிர் பச்சைக்கலர் புடவை கட்டியிருந்தாங்க. உடம்பெல்லாம் வேர்த்து ஒரு மாதிரி ரொம்ப அழகா இருந்தாங்க. பண்ணை வீட்டுக்கு நடந்து போறது மட்டுந்தான் ஒரேவழி. அவங்க அங்கிருந்து என்ன கத்தினாலும் யாருக்கும் கேக்காது. எல்லாம் ஒரு அரைமணி நேரத்துல நடந்துடுச்சு. ஆட்டோ ஓட்டிட்டே ராஜகுரு கேட்டான்.’
‘மாப்ள டீச்சர என்னடா பண்றது?’
அருணும் மணியும் டீச்சரின் இருபுறமும் அமர்ந்திருந்தனர். நான் ராஜகுருவுக்கு பக்கத்தில் இருந்தேன். மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். எங்களுக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. ராஜகுருதான் சொன்னான்.
‘நான் முடிவு பண்ணிட்டேன் மச்சான்’
எனக்கு நடுக்கமாக இருந்தது.
‘காலையில டீச்சர காப்பி போடச் சொல்லுவோம். காப்பி நல்லா இல்லன்னா வேப்பங்குச்சியால அடி வெளுத்துடுவேன்’
ராஜகுரு தினமும் டீச்சரிடம் வேப்பங்குச்சியால் அடிவாங்கிக் கொண்டிருந்தான்.
எங்கள் மூவருக்கும் அந்த யோசனை பிடிக்கவில்லை. டீச்சருக்குக் குழந்தை போன்ற மேனி. டீச்சரை என்ன செய்வது என்பதைவிட எங்களை என்ன செய்வது என்ற கவலை அதிகமானது.
ராஜகுருதான் அந்தக் கவலையைப் போக்கினான்.
‘டேய் மணி அருணு நீங்க ரெண்டு பேரும் ஹாஸ்டல்ல ஒரு வாரம் லீவு சொல்லிடுங்க. நா இவனுங்கள ஹாஸ்டல்ல விட்டுட்டு வர்ற வரைக்கும் நீ டீச்சருக்கு தொணையா இருடா சிவா. நாளைக்கு காலைல அவனுங்க வந்துடுவானுங்க. நாம் ஸ்கூல் போயிட்டு இருப்போம்’
‘எத்தன நாளைக்கிடா? போலீஸ் பிடிச்சிராதா?’ என்று அருண் கேட்டான். எனக்கு உடல் நடுங்கிவிட்டது. என் அப்பா தூக்குப் போட்டுக் கொள்வது போலவும் அம்மா என்னை மண்ணை வாரித் தூற்றுவது போலவும் இருந்தது. நான் சற்று கலங்கிவிட்டேன்.
ராஜகுரு பயப்படவில்லை.
‘கொஞ்சநாள் நம்ம கூட இருந்தா நம்மள அவங்க லவ் பண்ண ஆரம்பிச்சுடுவாங்கடா படத்துல எல்லாம் பாத்தது இல்லையா. அப்புறமா நம்மள கல்யாணம் பண்ணிப்பாங்க’
இவனையா விவரமானவன் என்று நினைத்தோம் என்று வருந்தினேன். டீச்சரைக் கடத்தி நான் என்ன செய்ய நினைத்தேன். அதுவும் தெரியவில்லை.
மணிகண்டனுக்கு இன்னொரு முக்கியமான சந்தேகம் வந்தது.
‘டீச்சருக்குத்தான் ஏற்கனவே ஹஸ்பண்ட் இருக்காரே?’
ராஜகுரு சொன்னான்.
‘அவன் டீச்சர ரொம்ப கொடுமப்படுத்துவான்டா. நீ வேணா பாரு நாம அன்பா இருந்தா நம்ப கூடவே இருந்து நம்மள கல்யாணம் பண்ணிப்பாங்க’
ஆட்டோவை ஓட்டிக்கொண்டே சிரித்தான். அருணும் மணியும் சமாதானம் கொண்டனர்.
யார் கவனத்திலும் படாதவாறு ஆட்டோவை பண்ணை வீட்டின் பின்புறமாகக் கொண்டுவந்து ராஜகுரு நிறுத்தினான். ஆற்றின் சலசலப்பு தவிர வேறு சத்தம் ஏதுமில்லை. டீச்சரைப் பிணைப்பதற்காக ஒரு சங்கிலியைத் தயாராக வைத்திருந்தான்.பண்ணை வீட்டின் வலுவான தூண் ஒன்றில் டீச்சரின் கால்களைப் பிணைத்துச் சங்கிலியைக் கட்டிவிட்டு அவர்கள் உடனடியாகப் போய்விட்டனர். எனக்கென்னவோ அவர்கள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை சுத்தமாக இல்லை. ஏறத்தாழ தப்பித்துச் செல்வது போலச் சென்றனர்.
டீச்சர் உடலிலிருந்து பெருகிய வியர்வை அவரது மொத்த உடலையும் நனைந்திருந்தது. பள்ளியில் தெரிவதை விட தற்போது இன்னும் அழகாகத் தெரிந்தார். நடுங்கிய உடலுடன் சென்று அவர் உதட்டில் முத்தமிட்டேன். நான் இன்னும் சற்று சுதந்திரம் எடுத்துக் கொண்டபோது டீச்சர் கண்விழித்தார். நான் பயந்து போய் விலகிக் கொண்டேன். நிலவொளியில் அவர் முகம் நன்றாகவே தெரிந்தது. அதில் எந்த உணர்ச்சியும் இல்லை. சற்று நேரம் அப்படியே கடந்தது.
‘என்ன இப்ப செய்யணுமா ஒனக்கு?’ என்றார். குரலில் கோபமே இல்லை. மிக நிதானமாகக் கேட்டார்.
‘என்ன செய்யணும் டீச்சர்?’ என்றேன்.
‘ம்’ என்று கோபமாக என்னைப் பார்த்தார்.
பிறகு கசப்புடன் சிரித்துக்கொண்டே ‘நா உனக்கு டீச்சர் தானே கத்துத் தர்றேன் வா’ என்றார். அவ்வளவு வெறுப்பான வார்த்தைகளை என் வாழ்வில் கேட்டதில்லை.
பிறகு டீச்சர் குளிக்க வேண்டும் என்றார். நான் சங்கிலியை அவிழ்த்துவிட்டேன். நானும் டீச்சருடன் ஆற்றில் மூழ்கினேன். நீரின் அடியிலும் நறுமணத்தை உணர முடிந்தது. என் மனம் எல்லாவற்றுக்கும் அப்பால் எங்கோ கிடந்தது. கொஞ்ச நேரத்தில் டீச்சரைக் காணவில்லை. நான் உடையைப் பிழிந்து உலர்த்திவிட்டு நள்ளிரவுக்குப் பிறகு வீடு திரும்பினேன். அப்படித் திரும்புவது வழக்கம்தான் என்பதால் யாரும் எதுவும் கேட்கவில்லை.
‘அடுத்தநாள் டீச்சர் ஸ்கூலுக்கு வந்தாங்க சார். அவங்க யார்கிட்டயும் எதுவுமே சொல்லல. இப்ப யோசிச்சுப் பார்த்தா எவ்வளவு பெரிய சிக்கல்ல இருந்து தப்பிச்சிருக்கேன்னு ஆசுவாசமா இருக்கும். அன்னிக்கு நான் பண்ணினத நெனச்சா ஒரு நேரம் தப்புன்னு தோணும்.இன்னொரு நேரம் அன்னிக்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டதா தோணும். அன்னையிலேர்ந்து படிச்சது வேலைக்குப் போனது கல்யாணம் பன்னினது எதுவுமே பெரிய அனுபவமா இல்ல சார். அன்னிக்கே நான் விஷம் குடிச்சிட்டு செத்துருக்கணும். அதுமாதிரி ஒரு அனுபவம் கெடச்ச பெறவு இருக்கக்கூடாது சார். அது நல்லது கெட்டதுக்கெல்லாம் மேல. ரொம்ப ரொம்ப மேல’
சிவராமன் கண்களிலும் முகத்திலும் அனல் ஏறியிருந்தது. அவனை அங்கிருந்து இறக்கிக் கொண்டுவருவது சச்சிதானந்தந்துக்குத் தவறெனத் தோன்றியது. ஆனால் அவனிடம் அக்கேள்வியைக் கேட்காமல் விட்டால் சாகும்வரை தன்னால் நிம்மதியாக இருக்க முடியாது என்றும் தோன்றியது. அவருக்கு அந்த டீச்சரின் பெயர் தெரிய வேண்டும். அவன் படித்த பள்ளியின் பெயர் தெரிந்தே ஆகவேண்டும். அவர் மனைவி வழக்கத்துக்கு மாறாக வீட்டுக்கு வந்ததற்கு அவள் சொன்ன காரணம் உண்மையா என்று தெரிந்தே ஆகவேண்டும்.
முதல் கேள்விக்கு இவர் கேட்காமலேயே அவனாகவே பதில் சொன்னான்.
‘மங்கையர்க்கரசி சார் அவங்க பேரு’
சச்சிதானந்தம் அப்படியே தளர்ந்து போனார். சிவராமன் ஆலமரத்திலிருந்து கிளம்பிவிட்டான். சச்சிதானந்தம் அங்கேயே அன்றிரவும் அதற்கு அடுத்தடுத்த இரவுகளும் உட்கார்ந்திருந்தார். அவர் ஞானியாகிவிட்டதாக எல்லோரும் பேசிக் கொண்டனர்
டீச்சரை கடத்தியது காதலித்தது எல்லாம் சுவாரஸ்யமாகப் போனாலும் ஜாலியாக காலம் தள்ளிய சச்சிதானந்தத்துக்குத்தான் தலையிடி விழுந்திருக்கிறது. அங்கத நடை . சலிப்பில்லாமல் வாசிக்க முடிந்தது.