‘கனலி’ கலை – இலக்கிய இணைய இதழின் வாசகர்களுக்கு வணக்கம் !
கனலி-யின் பதினோராவது இணைய இதழ் வழியாக உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். கனலி இணையதளம் தொடங்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியோடு ஓராண்டை நிறைவுச் செய்து தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறோம் எனும் உற்சாகத்தோடு வாசக நண்பர்கள், படைபபாளர்கள், விமர்சகர்கள் அளிக்கும் தொடர் ஆதரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நவில்கிறோம்.
பதினோராவது இதழிலும் இயன்றவரை இலக்கியத்தின் பல பிரிவுகளிலும் படைப்புகளை தேர்ந்தெடுத்து தொகுத்து வெளியிட்டு இருக்கிறோம்
இந்த இதழில் எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர் என இலக்கியத்தில் பல தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் க.மோகனரங்கன் அவர்களின் நேர்காணல் வெளியிடப்பட்டிருக்கிறது.
’பெட்டகம்’ பகுதியில் எழுத்தாளர் லா.ச.ரா வின் “குரு – க்ஷேத்ரம்” என்கிற மிகச்சிறந்த சிறுகதை ஒன்றை அவரின் குடும்பத்தாரின் ஒப்புதல் பெற்று மீள் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
கவிஞர்/ திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை எழுதும் “பெண் சினிமா” எனும் புதிய கட்டுரைத் தொடர் இந்த இதழ் முதல் வெளியாக இருக்கிறது.
அறிமுகப் படைப்பாளர்கள் தங்களது முதல் படைப்புகளை கனலி இணைய இதழுக்கு அளித்துள்ளார்கள்.
ராகுல் நகுலன். இவரின் முதல் சிறுகதை “டிஜிரிடூ ”
க.மூர்த்தி. இவரின் முதல் சிறுகதை “நீர்க்கன்னிகள்”
லஷ்மி பிரியா. இவரின் முதல் மொழிபெயர்ப்பு சிறுகதை “என் ஊதா நிற, வாசனை திரவியம் தோய்ந்த புதினம்”
சிறார் இலக்கியப் பிரிவில் இர.நவின்குமார் எழுதிய முதல் கதை “நட்சத்திர தேவதை”
ஆகிய அறிமுகப் படைப்பாளர்களின் படைப்புகள் கனலி இணைய இதழ் பதினொன்றில் வெளியாகி இருக்கிறது. நால்வருக்கும் கனலி இணைய இதழ் சார்பாக வாழ்த்துக்கள்..!
தமிழிலக்கியப் படைப்புகளை அதிகளவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்வது என்கிற விடயத்தில், இந்த முறை இரண்டு ஆங்கில மொழிபெயர்ப்பு சிறுகதைகள் வெளியாகி உள்ளது. எழுத்தாளர் கரன் கார்க்கியின் தமிழ்ச் சிறுகதை ஒன்றை “THIEVES’ HANDS ARE SOFT ” எனும் தலைப்பில் பத்மபிரியாவும், ஈழத் தமிழ் எழுத்தாளர் திருக்குமரன் தமிழ்ச் சிறுகதை ஒன்றை The Story of Dawood எனும் தலைப்பில் குகதர்சினியும் மொழிபெயர்த்து அளித்துள்ளார்கள்.
இதுதவிர வழக்கம்போல மிகச் சிறப்பான கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், சிறார் கலை இலக்கியப் படைப்புகள் வெளியிட்டு இருக்கிறோம்.
க்ரோனா நோய்த் தொற்றால் தொடர்ந்து உலகமே இருண்டச் சூழலை சந்திக்கும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் எங்களுக்கு நிறைய படைப்புகள் வருகிறது. அவற்றை நிதானமாக ஆழ்ந்து மீண்டும் மீண்டும் வாசிக்கும் கனலி ஆசிரியர் குழு நண்பர்கள், குறிப்பிட்ட கால நேரத்திற்குள் கலந்துரையாடல் மூலம் அனைவரும் ஒப்புக்கொளும் ஒருமித்த கருத்துக் கொள்ளும் படைப்புகளை தான் வெளியிடுகிறோம். இதுமட்டுமின்றி சில குறிப்பிட்ட கருக்களில் குறிப்பிடதக்க எழுத்தாளர்கள் எழுதினால் நன்றாக இருக்குமென நாங்கள் கருதுபவர்களிடம் சில படைப்புகளை கேட்டுப் பெற்று வெளியிடுகிறோம். அதே நேரத்தில் ’எங்களது படைப்புகள் வரவில்லையே’ என வருத்தப்படும் குரல்கள் சில நேரங்களில் எங்களுக்கு கேட்கிறது. அடிப்படையில் ஒன்றை மட்டும் தெளிவாக சொல்லிக் கொள்கிறோம். கனலி ஆசிரியர் குழு தொடர்ந்து பார்ப்பது படைப்புகளின் தீவிர இலக்கியத் தன்மை மட்டுமே. ஒரு படைப்பை ஆசிரியர் குழு நண்பர்கள் அனைவரின் ஒப்புதல் பெற்றால் மட்டுமே வெளியிடுகிறோம்.
இறுதியாக கனலி-யின் வாசகர்களுக்கு ஒரே ஒரு கோரிக்கையை முன் வைக்கிறோம். தயவு செய்து இந்த இதழில் வெளியான அனைத்து படைப்புகளையும் வாசித்து உங்களின் கருத்துக்களையும், விமர்சனங்களையும் எங்களுக்கு எழுதுங்கள். உண்மையில் அவை மட்டும் என்றென்றும் எங்களைச் செதுக்கும் உளி !
கனலி இணைய இதழ் 11 வாசிக்க இங்கே சொடுக்கவும்
மீண்டும் அடுத்த இதழான ”ஜப்பானிய இலக்கியச் சிறப்பிதழ்” வழியாக உங்களை சந்திக்கிறோம்.
அனைவருக்கும் மீண்டும் நன்றியும் அன்பும்..!
– கனலி இணைய இதழ் ஆசிரியர் குழு.
[tds_info]
தொடர்புக்கு:
அலைப்பேசி: +91 90800 43026
மின்னஞ்சல் : editor@kanli.in
[/tds_info]