காவல்துறையில் நடித்துக் காட்டுவது என்பது ஒருசடங்கு. திருடர்கள் மாட்டிக் கொண்டபிறகு, எப்படித் திருடினார்கள் என்பதைச் சம்பந்தப்பட்ட இடத்துக்கே சென்று நடித்துக் காட்டச் சொல்லி அதைப் பதிவு செய்து கொள்வது சிவப்புநாடா நடைமுறை. குரங்கினைப் போலத் தவ்வி, அமர்ந்து, நடந்து ஒவ்வொரு பொருளையும் எப்படி எடுத்தோம் எனத் தத்ரூபமாக மறுபோலச் செய்ய வேண்டும். பல நேரங்களில் சிரிப்பாணியாய் இருக்கும். பஞ்சு வைத்த ஊதாநிற உள்ளாடையை எடுத்து முகத்தில் அழுத்தி மணம் பார்த்தது எவ்வாறென ஒரு திருடன் செய்து காட்டிய போது, அந்த வயதிலும் கிளர்ச்சியாகவும் இருந்தது நவநீத கிருஷ்ணனுக்கு. அந்த வீட்டில் உள்ள பெண்ணிற்கு முன்கூட்டியே வருவதாகத் தகவல் தெரிவித்தும், அப்படி உள்ளாடையை நடுவீட்டில் பப்பரப்பேவென போட்டிருந்ததில் அவருக்கு அதிருப்தியும்.
காவல்நிலைய ஆய்வாளராகச் சமீபத்தில்தான் பதவி உயர்வு பெற்று அங்கே வந்திருக்கிற நவநீத கிருஷ்ணனுக்கு அந்தச் சரகத்தில் இது ஏழாவது திருட்டு. ஆறு திருட்டையுமே ஏழெட்டு நாட்களுக்குள் கண்டுபிடித்து விட்டார். அவரது துறையில் திருட்டு விற்பன்னர் என்றே இவரைச் சொல்வார்கள். “என்னய்யா பெரிய என்கௌண்டர் ஸ்பெஷலிஸ்ட். ஒரு மனுஷனை நிக்க வச்சு சும்மா பொட்டுன்னு சுடறது எல்லாம் வீரமா? கைதேர்ந்த திருடனோட தடத்தை மோப்பம் பிடிச்சு போறது பெரிய வேலையில்லையா? மனுஷங்களோட போட்டி இல்லை. மோப்பம் போடறதுல விலங்குகளோட போட்டி” என்பார் நவநீத கிருஷ்ணன் தனக்குக் கீழே உள்ள காவலர்களிடம்.
அதனால் திருட்டு வழக்கு என்றால் தன்னைக் கொழுத்த பூனையைப் போலவே உடனடியாகக் கருதிக் கொள்வார். வாய்ப்பிருந்தாலும் மற்றவர்களை அந்த வழக்கின் பக்கமே அண்ட விடமாட்டார். கடைசியாய்க் குற்றவாளியை அவர் கற்பனையில் நிகழ்த்திப் பார்த்த தோற்றத்தில் எல்லாம் நடிக்க வைத்துப் பதிவு செய்த பிறகே ஓய்வார். அவருக்குக் கடைசியில் அந்த நாடகத்தைப் பார்த்த பிறகே திருப்தி எழும். திருடனை இன்னொரு தடவை திருடச் செய்து பார்ப்பதில் அப்படியொரு ருசி அவருக்கு. அதற்குப் பின்னால் அவனுக்குத் தண்டனை கிடைக்கிறதா? இல்லையா? என்பதெல்லாம் அவர் கவலையே இல்லை. குற்றத்தை நிரூபிக்கிற நீதிமன்ற வழக்கு ஆவணச் சடங்குகளில் அசிரத்தையை அதிகமும் காட்டுவார். அதனை முன்னிட்டு நாலைந்து மெமோக்களைகூட வாங்கி விட்டார். ஆனாலும் நவநீத கிருஷ்ணன் திருந்தியபாடில்லை எனக் காவல்துறை வட்டாரத்தில் பேசிக் கொண்டனர்.
ஒவ்வொரு திருட்டையுமே கண்டுபிடித்த பிறகு வீட்டில் தனது மகளிடம் அந்தத் திருட்டை நடித்துக் காட்டுவதை வழக்கமாகவும் வைத்திருந்தார். அந்த ஏழாவது திருட்டு அவரது சரகத்தில் உள்ள பாழடையத் துவங்கியிருந்த ஒரு மாளிகையில் நடந்தது. அந்தச் சரகத்திலேயே அதுதான் பெரிய வீடு என அவர் பணியில் பொறுப்பேற்ற அன்றைக்கே சொன்னார்கள். ஏதோ ஒரு வாழ்ந்து கெட்ட வீட்டின் கதையாக இருந்ததால் பெரிதாக அதைப் பற்றி ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை அவர்.
பிறகொருநாள் வழக்கமான இரவு காவல் சோதனைக்குப் போன போது, வீட்டின் மாடியில் உள்ள கண்ணாடிக்கு உள்ளே ஒரு பெண்ணின் உருவத்தைப் பார்த்தார். வீட்டினுள்ளே தும்பைப் பூ மாதிரி வெள்ளை வெளிச்சம் இருந்தது. அதில் நாற்பது வயது மதிக்கத்தக்க பெண் சந்தன நிறச் சேலை அணிந்து நின்று சாலையை வேடிக்கை பார்க்கும் காட்சி தெரிந்தது. ஒளி செங்குத்தாக விழுந்ததால் அவளது முகம் தெளிவாகத் தெரியவில்லை. ஒரு பழங்கால ஓவியத்தைப் போல அந்தக் காட்சி இருந்தது அவருக்கு.
அப்புறம் இரண்டு மூன்று தடவை அந்தப் பெண் யாராக இருக்கும் என அவருக்குத் தோன்றவும் செய்திருக்கிறது. உயரதிகாரி என்பதால் வேறு யாரிடமும் இதுகுறித்து விசாரித்து விடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வும் இருந்தது. நவநீத கிருஷ்ணனின் எண்ணங்களின் ஊற்றில், ஏதோவொரு ஓரத்தில் அந்த ஓவியத்திற்கான இடமும் இருந்தது. “அய்யா பேய் பங்களாவில திருட்டு” என ஏதோ நகரில் குண்டு வைத்தால் ஆவதைப் போல அதிர்ச்சியுடன்தான் உதவி ஆய்வாளர் வந்து சொன்னார். கேட்ட அடுத்த நொடிகளிலேயே கிளம்பும் முனைப்பில் தொப்பியைக் கையில் தூக்கி விட்டார் நவநீத கிருஷ்ணன். திருட்டென்பதால் வந்த ஆர்வம் மட்டுமா அது?
அன்றைக்கும் அந்தப் பெண் சந்தன நிறச் சேலையில்தான் இருந்தாள். திருமணம் ஆகவில்லை என்று தயக்கமேயில்லாமல் சொன்னாள். அண்ணன் ஒருத்தனுக்கு உடல்நலம் சரியில்லை என்பதால், அவளுடைய அப்பா அமெரிக்கா சென்று இருப்பதாக அவள் சொன்னதைக் காவலர் ஒருத்தர் குறித்துக் கொண்டார். அந்தப் பெண்ணின் பெயரே வித்தியாசமாக இருந்தது, நாராயணி பாலசுப்பிரமணியன்.
அவள் முகத்தைக் குறுகுறுப்போடு உற்றுப் பார்த்தார் நவநீத கிருஷ்ணன். அவள் உடலை நெளித்து சங்கோஜப்படுவதைக் கண்டுவிட்டு, “மோப்ப நாயோட கண்ணு பழக்க தோஷத்தில உத்துப் பாத்திருச்சு. உங்க பொருளையே நீங்க எதுக்கு திருடப் போறீங்க?” என்றார். சொல்லிவிட்டுக் கண்ணை எடுத்த அவர், அவள் பக்கம் மீண்டும் திரும்பவே இல்லை. ஆனால் மனதில் அந்த ஓவியம் காட்சியாய்ப் பின் தொடர்ந்தது.
எல்லோரையும் அறைக்குள் நிறுத்திவிட்டு அவர் மட்டும் கொல்லைப் புறப் பக்கம் நடந்து சென்றார். வீட்டின் கடைசி மூலையிலிருந்த கதவைத் திறந்தால், வெளிப்புறத்தில் ஒரு தோட்டம் இருந்தது. வாழை, மா, பலா எனப் பழமரங்களுக்கு ஊடாகப் பூச்செடிகளும் இருந்தன. தூரத்தில் வாழை மரத்திற்குப் பக்கத்திலிருந்த துவைக்கிற கல்லில் ஏதோ மின்னுவதைப் பார்த்தார். சூரியஒளி செங்குத்தாக அப்போது அக்கல்லின் மீது படிந்திருந்தது. யோசனையோடு முன்னோக்கி நடந்து போன அவரது கண்களைக் கூசச் செய்யும் அளவிற்கு அது மின்னியது. பக்கத்தில் போன போதே அது வழக்கமான அளவைவிடக் கொஞ்சம் பெரியதான மூக்குத்தி என்பது தெரிந்தது.
கையில் தூக்கிப் பார்த்த நவநீத கிருஷ்ணன் அதன் அழகில் சொக்கிப் போனார். உச்சியில் பச்சைக் கல்வைத்து பறவையின் இறக்கையைப் போல இருபக்கமும் விரிந்த சங்கின் வடிவத்திலிருந்த மூக்குத்தி. அதைக் கையில் ஏந்திய அடுத்த கணம் அவருக்குள் யோசனைகள் எல்லாமும் அணைகட்டிய மாதிரி நின்றன. அனிச்சையாய் அதைத் தன் கால்சட்டைப் பைக்குள் போட்டார். திரும்பி வீட்டினுள் இருந்த மற்றவர்களை நோக்கிப் போனார். நடந்து போன போதுகூட மூக்குத்தியைப் பைக்குள் போட்டது குறித்த சிந்தனை அவருக்குள் இல்லை. நாய்க்கு மந்திரத்தினால் வாயைக் கட்டுவது போல ஏதோ நடந்து விட்டதோ? மற்றவர்களைப் பார்த்தபிறகே அந்தச் செய்கை அவருக்கு உறைக்கவே செய்தது. காப்பானே கள்ளனாகி நின்றானே என உள்ளுக்குள் நடுக்கம் பரவத் துவங்கியது நவநீத கிருஷ்ணனுக்கு. எது செய்யத் தூண்டியது அவரை?
உள்ளங்கைகள் வியர்க்கத் துவங்கியதும் கைகள் இரண்டையும் கால்சட்டைப் பைகளுக்குள் நுழைத்து மிடுக்காக நடந்து கொள்வதைப் போலப் பாவனை செய்தார். கருப்புக் கண்ணாடியை எடுத்துப் போட்டுக் கொண்டார். அவரை யாராவது மோப்பம் பிடிக்கிறார்களா என நோட்டம் விடவும் துவங்கினார்.
ஆனால் எல்லோரது பார்வையுமே அறையின் மற்ற மூலைகளில்தான் இருந்தது. தான் செய்தது தவறு என்கிற சிந்தனை அவருக்குள் பெருகிக் கிளைவிடத் துவங்கிய போது, அவர் மற்றவர்களை அவசரப்படுத்திக் குரல் கொடுத்தார். தேவையே இல்லாமல் பெருஞ்சத்தத்தில் ஒருத்தனை வைய்யவும் செய்தார். அந்தப் பெண் இருந்த திசையில் அவரது முதுகை மட்டுமே காட்டிக் கொண்டிருந்தார். காவலர்களை அதிகாரக் குரலால் விரட்டிச் சோதனையிடச் சொல்லிவிட்டு அவரது ஜீப்பில் போய் ஏறி அமர்ந்தார். அங்கேயிருந்து அந்தக் கண்ணாடி சாளரம் தெரிந்தது. அதில் அந்தப் பெண் வந்து நிற்கிற காட்சி தெரிந்ததும் தலையைக் குனிந்து கொண்டார், பிறகு நிமிரவே இல்லை.
அந்தத் திருட்டில் ஏராளமான தங்க வைர நகைகள் காணாமல் போயிருந்தன. அவரது முன்னே இருந்த வழக்குக் கட்டில் அதன் விவரங்களும் இருந்தன. படிக்கிற போது போடுகிற கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டு, அந்தப் பட்டியலை வாசித்தார். மூக்குத்தி மட்டும் அந்தப் பட்டியலில் இல்லாமல் போயிருந்ததைக் கண்டதும் அவருக்கு ஆசுவாசமாக இருந்தது. ஆனாலும் இழந்தவர் அறியாமலும் குற்றம் நடந்து விட்டதல்லவா? அவராகவே இருந்தாலும் காவல்துறையைப் பொறுத்தவரை, அது எந்நேரம் வேண்டுமானாலும் புழக்கமேயற்ற பாழுங்கிணற்றில் கிடந்தாலும், கிளம்பக் கூடிய பூதம்தானே? அவ்வளவு நகைக் குவியல்களுக்கு மத்தியில் இதுவொரு சிறிய மூக்குத்திதானே? எனவொரு எண்ணம் அவரைச் சமாதானப்படுத்தவும் உதித்தது. இவ்வளவையும் கண்டுபிடித்துக் கொடுத்ததற்குச் சன்மானமாகவே கொடுக்கலாம் அதை.
திருடனே இவ்வளவு சீக்கிரம் வந்து மாட்டிக் கொள்வான் என அவர் கனவில்கூட நினைக்கவில்லை. உண்மையைச் சொல்லப் போனால், இந்தக் குற்ற வழக்குத் தீர்வதற்கு இன்னமும் காலத்தை எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்றுதான் நினைத்தார். ஏனெனில் காலம் எந்தக் குற்றச் சம்பவத்தையும் அடித்துத் துவைத்துப் பழைய சட்டையைப் போலாக்கி விடுகிறது. குற்றச் சம்பவம் காலப் போக்கில் ஒரு பழங்குட்டையாக மாறத் துவங்கிவிடும், சாலையில் உறைந்த ரத்தம் சாலை நிறத்திற்கே மாறிவிடுவதைப் போல. பிறகு எவரும் அந்த பழங்குட்டையில் பழைய ஆர்வத்தோடு எட்டிப் பார்க்க விரும்புவதில்லை. கண்ணும் கண்ணும் வைத்த மாதிரி ஜோடிக்கிற வேலைகள் அவ்வாறான சமயங்களிலேயே குற்றச் சம்பவத்தின் மீது ஏற்றப்படும். அவரது தொழிலில் இது வழக்கமான நடைமுறை என்பதால், நவநீத கிருஷ்ணன் அதையே இந்தத் திருட்டு வழக்கிற்கும் தற்செயலாக நடைபெற வேண்டுமென எதிர்பார்த்தார்.
மாறாகத் திருடன் மிக எளிதாகவே மாட்டிக் கொண்டான். அதிலேயே அவருடைய ஆணவம் சீண்டப்பட்டது. ஆனால் கையில் வேறொன்று இருந்ததால், இதுமுன்னேறி அதைப் பின்னுக்குத் தள்ளியது. திருடிய நகைகளில் ஒரு சிவப்புக் கல்பதித்த பட்டாம்பூச்சி நெக்லஸை கொண்டுபோய் அவனுடைய கள்ளக் காதலிக்குக் கொடுத்திருக்கிறான். அவள் புருஷன் அதை ராவிக் கொண்டு போய் அடகுக் கடையில் நின்ற போது அங்கிருந்து தகவல் வந்து எல்லோரையும் கொத்தாக அடுத்த ஒருமணி நேரத்தில் தூக்கி விட்டுத்தான் இவரிடமே வந்து தகவலையே சொன்னார்கள்.
இரண்டு மோதிரங்களை மட்டும் வெளியூரில் விற்று விட்டதாகச் சொன்னான் திருடன். எவ்வளவோ அடித்தும் அதைத்தான் மாறி மாறிச் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் சொல்வதுதான் உண்மை என்பது நவநீத கிருஷ்ணனுக்குத் தெரியும். அடிவாங்கிச் சோர்ந்த விலங்குகளின் கண்களைக்கொண்டே உள்ளே ஓடுவதைக் கண்டுகொள்வார். இரண்டு கால்களுக்கு இடையில் கம்பைக் கோர்த்து இறுக்கி முறுக்குகையில் எப்பேர்ப்பட்ட திருடனும் உண்மையைச் சொல்லி விடுவான். அப்போது சொல்வது எல்லாமே பெரும்பாலும் உண்மையாக மட்டுமே இருக்கும். “வேற எதையாச்சும் எடுத்தியா? அங்க இன்னும் லிஸ்ட்ல நிறைய இருக்கே?” என்றார் நவநீத கிருஷ்ணன்.
“எம்புள்ளை மேல சத்தியமா இதுதான் உண்மை எஜமான். ரெண்டு மோதிரத்தை மட்டும்தான் வித்து செலவழிச்சேன்” என்றான் அவன். காவலர்கள் போய், பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் பட்டியலை அவளிடம் காட்டிய போது, ஆமாம் என ஒத்துக் கொண்டதாகச் சொன்னார்கள். திருடனை வீட்டிற்கு அழைத்துப் போய் நடித்துக் காட்டச் சொல்லி விட்டால், நீதிமன்றத்தில் வழக்கை ஒப்படைத்து விடலாம் என்று இருந்த நிலையில்தான், அந்தச் சடங்கிற்குப் போகலாமா? வேண்டாமா? என்கிற குழப்பம் வந்தது அவருக்கு. ஆனால் அந்த நாடகத்தின் தீவிர ரசிகனான அவரே போகாமலிருந்தால் சந்தேகம் வந்துவிடும் என்றும் தோன்றியது. அவளே அந்த மூக்குத்தியைப் பற்றிப் பேசவில்லை, எதற்காகக் கிடந்து இப்படி உழல வேண்டும் என்கிற எண்ணமும் அப்போது உதித்தது அவருக்கு.
மொத்த நகைகளையும் எடுத்து வெல்வட் துணியில் கட்டிப் பக்குவம் செய்து எல்லோரும் அந்த மாளிகைக்குக் கிளம்பிப் போனார்கள். நகைகளை அவளிடம் காட்டிவிட்டு நீதிமன்றத்தில் ஒப்படைப்பதோடு பணி முடிந்து விடும். அவள் போய் அதை வாங்கிக் கொள்ளவேண்டும், அதுதான் சட்ட நடைமுறை. அந்த மாளிகை திருட்டு பற்றிய பேச்சுக்கள் காவல்துறையின் மேல்மட்டம் வரை ஓடின. ஏனெனில் அவ்வளவு தங்க, வைர நகைகளை அதற்கு முன் இவ்வளவு மொத்தமாகத் துறையில் இருந்தவர்களே பார்த்தது இல்லை. இந்தச் செய்தி அந்தச் சரகம் முழுக்கவே அந்நகைகளின் ஒளிச் சிதறல் போலப் பரவவும் செய்துவிட்டது. காவல்நிலையத்தை ஒட்டியிருக்கிற தேநீர்க்கடையில்கூட இதுவே பேச்சாகவும் இருந்தது என்பதை நவநீத கிருஷ்ணன் அறிவார். அவரது காவல்நிலையத்தில் உள்ளவர்களே தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் இதுபற்றிய தகவல்களைக் கண்,காது,மூக்கு வைத்துப் பகிர்ந்தும் கொண்டிருந்தனர்.
நகைகளை ஒப்படைக்க அந்த மாளிகைக்குக் கிளம்பும் போதே ஒரு கூட்டமும் வண்டிகளில் பின் தொடர்ந்து வந்தது. “பின்னாடி வர்றவனுகள அடிச்சு தொரத்தி விடுங்க. இங்க என்ன சர்க்கஸா நடக்குது?” என்று சத்தம் போட்டார் நவநீத கிருஷ்ணன். “எல்லாம் அந்த பொம்பளை தரிசனத்துக்காக வர்றானுக. கல்யாணம் ஆகாத கொமரி” என்றார் வயதான ஏட்டு. சூரியனை உள்ளங் கையில் மறைக்க முடியாது என்பதை உணர்ந்தார் நவநீதம். வெளியே நடக்கும் நாடகத்தை அவர் பார்த்துக் கொண்டிருந்தாலும், அடியாழத்தில் அமர்ந்து அந்த மூக்குத்தி சுருக்சுருக்கெனக் குத்திக் கொண்டிருந்தது. ஒருவேளை நெஞ்சுவலியின் அறிகுறியாக இருக்குமோ? யாரும் அறியாத சமயத்தில் அந்த வீட்டில் எங்கேயாவது அதை வைத்து விடலாம் என்று உள்ளுக்குள் வாலை ஆட்டிக் காத்துக் கொண்டிருந்தார்.
போய் இறங்கிய போது அவளது வீட்டிலுமே கூட்டமாக இருந்தது. தகவல் தெரிந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் நிறையப் பேர் வந்து ஏற்கனவே குழுமியிருந்தனர். காவலர்கள் இறங்கிப் போய்க் கூட்டத்தை ஒழுங்கு பண்ணினார்கள். நவநீதம் தான் பேசும்போது வந்துவிடக்கூடிய படபடப்பைத் தவிர்ப்பதற்காக, தன்னை விட உயர்ந்த அதிகாரி ஒருத்தருக்கு இவரே தகவல் சொல்லி வரவைத்து உடன் வைத்துக் கொண்டார். “பரவாயில்லையேப்பா ரெகவரி காட்டுறதுக்கு பெரிய அதிகாரியை கூப்ட்டு போற அளவுக்கு என் மேல மரியாதை உனக்கு” என்றார் அவர்.
அந்தப் பெண் அப்போதுமே எப்போதும் பார்க்கிற தோற்றத்தில்தான் இருந்தாள். எந்நேரமும் வாடாமல் இருக்க வேண்டுமெனில் பிளாஸ்டிக் மலராகத்தான் இருக்க வேண்டும்? ஆனால் அது அசலென்கிற மணத்தைப் பரிபூரணமாகத் துப்புகையில் நம்பாமல் எப்படி இருக்க இயலும்? நவநீதம் அந்தப் பெண்ணின் சுகந்தம் தீண்டாத தொலைவில் நின்று கொண்டார். உயரதிகாரி தோரணையோடு பொருட்களைக் காட்டி அவளிடம் பேசிக் கொண்டிருந்தார். திருடன் தனது நடிப்புச் சடங்கைச் செய்து காட்டத் துவங்கினான். அவன் படுக்கையறைக் கதவிற்கு அருகில் செல்லும் போது, “பெட்ரூம திறந்து பாத்தியாலே” என ரசமின்றிக் கேட்டார் அந்த அதிகாரி. அப்போது மட்டும் சடக்கென நவநீதம் திரும்பி அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தார். குங்குமப்பூ நிறத்திற்கு அவளது கன்னம் சிவந்து அடங்கியது.
“அந்தச் சோலி மட்டும் எப்பவும் கிடையாது சார் நம்மட்ட. மூணு பொம்பளைப் புள்ளைய பெத்தவன் நான்” என்றான் திருடன். “ஆமா திருடிட்டு யோக்கிய மயிரு வேற. மூணும் பிராத்தலுக்குத்தான் போகும் பார்த்துக்க. பேச்சு எதிர்ப்பேச்சு” என்று சொல்லிவிட்டு அவனது பிடரியில் சத்தம் வர அடித்தார் அதிகாரி. “அடிக்காதீங்க” என்றாள் மெல்லிய குரலில். உடனடியாகவே அவர் ஓங்கின கையைத் தாழ்த்திக் கொண்டார். அதிகாரி கத்தரிப்பூநிற வெல்வெட் துணியைப் பிரித்து அவளிடம் காட்டிய போது, அவள் இரு கன்னங்களிலும் தன் உள்ளங் கைகளைப் பதித்துக் குனிந்து பார்த்தாள். பிறகு எடுத்துக் கொள்ளலாமா எனச் சைகையில் கேட்டாள். “ஆமா. அது உங்களதுதானே. ஆனா திருப்பி குடுத்திடணும். நாங்க கோர்ட்ல ஒப்படைச்சுருவோம். அங்கேதான் நீங்க வாங்கிக்கணும்” என்றார் நவநீதத்தின் உயரதிகாரி.
வேறு ஒன்றும் சொல்லாமல் அந்தக் கொத்திலிருந்து உச்சியில் சிவப்பு நாடா கட்டப்பட்ட நெக்லஸ் மாதிரித் தோற்றமளித்த ஒரு நகையை மட்டும் எடுத்துக் கொண்டு பூஜையறைக்குள் நுழைந்தாள். ஏதோ மலைதேசத்துப் பழங்குடி மொழியைப் போலவொன்றில், அவள் பாடும் சத்தம் வெளியில் எல்லோருக்கும் கேட்டது. திடீரென பூஜையறையில் இருந்து பொருட்கள் சரிந்து விழுவதைப் போலச் சத்தம். என்னவென்று எல்லோரும் உள்ளே ஓடிய போது கொல்லைப் பக்கம் நழுவலாமா என நவநீதம் யோசித்தார். அந்த மூக்குத்தி இருந்த கால்சட்டைப் பைக்குள் அவரது கையை நுழைக்கப் போன நேரத்தில், அவளது குரல் பூஜையறையை நோக்கி உள்ளே இழுத்தது அவரை. ஒருகை அவரை குண்டுகட்டாகத் தூக்கிக் கொண்டுபோய் அந்த அறைக்குள் அடைத்ததைப் போல உணர்ந்தார்.
உள்ளே அவள் தலையை விரித்துப் போட்டுத் தரையில் கிடந்தாள். அவளது சந்தன நிறச் சேலை தரையில் பூவின் இதழ்களைப் போலப் படர்ந்து இருந்தது. சன்னதம் கொண்டவளைப் போல எழுந்து எல்லோரையும் வெறித்துப் பார்த்தாள். அதிகாரி நவநீதனைவிட அதிக கடவுள் பக்தி கொண்டவர் என்பதால் கொஞ்சம் பரவச நிலையில் தோன்றினார். வெறித்த பார்வையோடு எழுந்த அவள், அதிகாரியின் கையிலிருந்த மற்ற நகைகளையும் வாங்கி, ஏற்கனவே அவள் எடுத்துப் போயிருந்த அந்த நகையையும் வைத்து நடந்து போய் தூரத்திலிருந்த திருடனின் காலடியில் வைத்தாள். அந்தக் காட்சியை எல்லோருமே உன்னிப்பாகப் பார்த்தனர்.
அவன் காலைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு நிமிர்ந்து பார்த்து, “இந்த எல்லா நகையையும் எடுத்துட்டு போ. உன் மூணு புள்ளைகளுக்கும் போட்டு அழகு பாரு. மூணுபேரும் தேவிகளை மாதிரி வாழ்வாங்க. ஆனா அந்த மூக்குத்தியை மட்டும் தந்திரு. அதுலதான் என் உசுரே இருக்கு. அதில ரகசியம் ஒண்ணு இருக்கு” என்றாள். அந்தக் கணம் நவநீதத்தின் முகத்தில் ஏதோ ஒரு ஒளிக்கற்றை வந்து மோதியதைப் போல இருந்தது. தலைச்சுற்றல் வந்து அடங்கியது. தனக்கு முன்னே நடக்கிற காட்சிகள் எல்லாம் மங்கலாகத் தெரிந்தன. அவர் பாடுபட்டுத் தன்நிலையை மீட்டு மறுபடி அந்தக் காட்சியைப் பார்த்தார்.
“மூக்குத்தியை மட்டும் குடுத்திடு” என அவள் மன்றாடும் தொனியில் திருடனைப் பார்த்துச் சொன்ன போது, “சத்தியமா எடுக்கலை தாயி. இது பொய்யின்னா மூணும் மூளியாகட்டும்” என்று சொல்லிவிட்டுக் கும்பிட்டான். அத்தனை நகைகளையும் காலடியில் கிடத்தி அந்த மூக்குத்தி வேண்டும் என்று சொன்னால், அது எப்படியாகப்பட்டது? என்கிற பேச்சு உடனடியாகவே அவ்வீட்டினுள் உருவாகி உருண்டு புரண்டு தெருவில் இறங்கி ஓடியது. குற்றம் இன்னமும் தீர்ந்து தன்கணக்கை முடித்துக் கொள்ளவில்லை என்பது உறுதியானது. மூக்குத்தியைக் காணவில்லை என்கிற செய்தி அங்கே நின்ற எல்லோருக்கும் தெரிந்து விட்டது. அதிலும் விலைமதிக்க முடியாதது என்கிற மதிப்பும் நாக்குகளால் கூட்டப்பட்டு விட்டது. “நீங்க கவலைப்படாதீங்க. அதையும் ஒரு புகாரா எழுதித் தாங்க. இவன் உடம்பில இன்னமும் உரிக்கிறதுக்கு தோலு இருக்கு” என்றார் அதிகாரி.
“தாயி தெய்வமா நின்னு என்னை நம்பணும். அடிதாங்க முடியலை என்னால” எனத் திருடன் கத்திய போது மேலும் அவனது மீது அடிகள் விழுந்தன. அவனை இழுத்துக்கொண்டு, அவளது பார்வையிலிருந்து வெளியே போனார்கள். திரும்பி வருகையில் தீராத சிக்கல் ஒன்று ஜீப்பில் ஏறி அமர்ந்தது. அப்படியே யாருக்கும் தெரியாமல் எடுத்து கீழே போட்டுவிடலாமா என யோசித்தார் நவநீதன். அவரால் யோசிக்க முடிகிறதே ஒழிய, அதைச் செயல்படுத்த முடியவில்லை என்பதை உணர்ந்தார். திரும்பும் வழி முழுக்க அவர் ஆழமான சிந்தனையில் இருந்ததை, திருட்டு குறித்து யோசிக்கிறார் என உடன் இருந்தவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.
திருடனைச் சட்டையைத் துவைப்பதைப் போலப் பிழிகிற காட்சியைத் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த நவநீதத்திற்கு நெஞ்சைப் பிடித்தாற் போல இருந்தது. அவருக்காக அவன் அடிவாங்கிக் கொண்டிருக்கிறான் என்று தோன்றிய கணத்தில், அந்த எண்ணத்தை அடியோடு வெறுத்தார் அவர். எழுந்து போய் தூக்கி எறிந்து விடலாமா அதை எனத் தோன்றியது. எதுவோ மந்திரம் ஒன்றை வீசி வாயைக் கட்டிப் போட்டதைப் போல விநோதமான அமைதியிலிருந்தார். எல்லோரும் போன பிறகு அவரை மீறி எழுந்து போய் அவனிடம் நின்றார், “எஜமான் கொல்லையில அதை பார்த்தேன். அதைச் சொன்னா விட மாட்டாங்க. எடுக்கணும்தான் தோணுச்சு. உடனே வித்துடலாம்னும் தோணிச்சு. ஆனா அந்த ஒளி பக்கத்தில நெருங்க விடலை என்னை” என்று சொல்லி மயங்கிச் சரிந்தான். நவநீதம் பெருங்குரலெடுத்துச் சத்தம் போட்டவுடன் மற்றவர்கள் ஓடிவந்தார்கள். அதற்கு மேல் அடித்தால் செத்துவிடுவான் என்கிற எச்சரிக்கை உணர்வு காவல்நிலைய வளாகத்தினுள் எழுந்தது. அவனை மறுநாள் அவசர அவசரமாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப் போன போது வழக்கின் அதிகாரி என்ற போதும் நவநீதம் போகவில்லை. வயிற்றுக் கடுப்பு என்று சொல்லிவிட்டார்.
போவதற்கு முன்பு திருடன் நின்று நவநீதத்தை உற்றுப் பார்த்துவிட்டுக் கும்பிடு போட்டது அவரது நெஞ்சைக் குடையத் துவங்கியது. அவனுக்குத் தெரிந்திருக்குமோ? என்கிற எண்ணமும் அவரது கால்சட்டையில் போய் ஒட்டிக் கொண்டது. நீதிமன்றத்தில் அவள் அழுது வீங்கிய முகத்துடன் வந்து பொருட்களைப் பெற்றுக் கொண்டதாகச் சொன்னார்கள். அந்த மூக்குத்தி பற்றிய கதைகளை எல்லோரும் காவல்நிலையத்தில் பேசிக் கொண்டதைக் கூர்ந்து கவனித்தார் நவநீதம். தொடர்ச்சியான பயிற்சிகள் வழியாக ரகசியத்தைக் காக்கிற தற்செயலான பழக்கம் எப்போதுமே காக்கிச் சட்டைக்கு உண்டு. அதை லகுவாக அப்போது பயன்படுத்தினார் நவநீதம். அவரது முகத்தில் இன்னொரு பாவனையாய் ரகசியம் காப்பதும் ஒட்டிக்கொண்டது.
பொருட்களைப் பெற்றுக்கொண்ட அவளை அவளது அண்ணன் குடும்பத்தினர் வந்து அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்று விட்டதாக நவநீதனுக்குச் செய்தி வந்த அன்று மெல்லிய மகிழ்ச்சியை அவருள் உணர்ந்தார். ஆனால் திருடன் வணக்கம் வைத்து உற்றுப் பார்த்தது மட்டும் அவரது மனதிலிருந்து அகலாத ஓவியமாய் மாறி விட்டது. நாய் எடுத்து ஒளித்து வைக்கும் எலும்புத் துண்டைப் போல அதைக் கொஞ்ச காலத்திற்கு ஒளித்து வைத்து விடலாம் எனத் தோன்றியது அவருக்கு. அதன்படியே கொண்டு போய் வீட்டில் யாரும் தொடவே தயங்கும் அவரது பெட்டிக்குள் அதை வைத்துப் பூட்டினார் நவநீதம்.
ஆனால் மூக்குத்தி குறித்த கதைகளை அவரால் ஒளித்து வைக்க இயலவில்லை. நானூறு வருடப் பழமையானதாம் அந்த மூக்குத்தி. அந்தப் பெண்ணின் முன்னோர்களைக் கடந்து வழிவழியாய் வந்து அவளது கையில் சேர்ந்ததாம். “ஒரு வேண்டுதல் பலிச்சுச்சுன்னா அதை ஒரு இடத்தில ஒப்படைக்கணும்னு வச்சிருந்தோம். நானூறு வருஷமா ஒப்படைக்க முடியலை. விடவும் மாட்டேங்குது. இப்ப காணாம போயிருச்சு. மனசு காலத்துக்கும் ஆறாது” என்றாளாம். இதுமாதிரி இன்னும் நிறையக் கதைகளைச் சொன்னார்கள். எல்லாக் கதைகளிலிருந்தும் அவர் எல்லாவற்றையும் தின்று செரித்து முடித்த பூனை மாதிரித் தப்பித்து ஓடவே விரும்பினார். ஒருகட்டத்தில் அவரது கால்சட்டை கனக்கக் கதைகள் நிரம்பியபடியே இருந்தன. பூட்ஸ் சத்தத்தோடு கலந்து கதைகளும் எட்டெடுத்து வைத்து நடந்து வந்தன அவருடனேயே.
”ஏம்ப்பா இந்த திருட்டு எப்படி நடந்துச்சுன்னு நடிச்சுக் காட்டலை” என்று வந்து நின்றாள் முழுகாமல் இருந்த அவளுடைய மகள். அவளிடம் அந்த மூக்குத்தியைக் காட்டினால் காறித் துப்பிவிடுவாள் என்பது அவருக்கு உடனடியாகவே உறைத்தது. பிறகெதற்காகச் செய்தார் அதை? மகள் இல்லாவிட்டால் என்ன? பேத்தியிடம் அதைத் தருகையில் காலம் அந்தச் சம்பவத்தைப் பழங்குட்டையாக மாற்றி இருக்குமே? அப்போது மகளே இருப்பாளா? அவரே இருப்பாரா? எவரும் இருப்பார்களா? என எண்ணங்கள் சுழன்றடித்தன அவருக்குள். மெதுவாக மகளிடம், “அந்தப் பொண்ணோட கண்ணு என்னமோ செய்யுது” என்றார். சொல்லிமுடித்த பிறகே அதைச் சொன்னார் என்பதையும் உணர்ந்தார்.
மூக்குத்தி வந்ததிலிருந்தே நவநீதத்தின் பழைய உற்சாகம் காணாமல் போயிருந்தது. மூக்குத்தியை எடுத்த போது மட்டுமே நிதானமாகப் பார்த்தார். ஆனால் அதற்கடுத்து அதை ஆசைதீர அவர் பார்க்கவே இல்லை. தன்னுடையது என்றால் அது உள்ளுக்குள் பொங்கிப் பூத்திருக்குமோ? பார்க்க வேண்டும் என்று தோன்றி, பெட்டியைத் திறந்து, பிறகு ஆர்வமே இல்லாமல் பலதடவை மூடிவைத்திருக்கிறார். அளவில் சிறியதான அந்த மூக்குத்தி, கோழி கழுத்தில் மாட்டிய முள்கோர்த்த சின்ன வெங்காயத்தைப் போலப் பெட்டிக்குள் கிடந்தது. கொக்கொக்கெனச் சத்தம் நவநீதத்தின் உள்ளுக்குள் கேட்டது. குடும்பத்திலிருந்து எண்ணெய்யைப் போல அவர் பிரிந்து மிதப்பதை மற்றவர்கள் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டார்கள். காவல்காரனுக்கு ஆயிரம் கவலை என்பதாக அவர்கள் அவரை எடுத்துக் கொண்டார்கள்.
பேத்தியா? பேரனா? பேரனுக்கு எப்படி மூக்குத்தி போட? என்றெல்லாம் சிலசமயம் யோசிப்பார் நவநீதம். அந்த பண்டோரா பெட்டியைத் திறக்க எப்போது காலம் வழிவிடும் என ஆழமாகவும் சிந்தித்தார். மூக்குத்தி வந்த பிறகிலிருந்து அவர் அறைக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை. பெட்டியைப் பூட்டிச் சாவியை எடுத்துக் கொண்டு, “டிபார்ட்மெண்ட் ரகசியம் ஒண்ணு இருக்கு. அதை காக்குறது காவல்காரனோட கடமை. உயிர்போனாலும் அதை வெளியில சொல்லாம இருக்கறவந்தான் நல்ல காவல்காரன்” என்றார் மனைவியிடம். “கத்தை கத்தையா பேப்பரை சொருகி வச்சிருப்பீங்க. வேற என்ன தங்கமும் மரகதமுமா இருக்கப் போகுது” என்றாள் மனைவி. தங்கம் மற்றும் வைரத்தோடு கலந்து உச்சியில் இருக்கும் அந்தப் பச்சைக் கல் மரகதமாக இருக்குமோ என அந்த நேரத்தில் தோன்றியது அவருக்கு. ஆனால் விலைமதிப்பு இல்லாதது என்பது மட்டும் அவரது காவல்துறை புத்திக்கு உறைத்தது. ஏதாவது கோவில் உண்டியலில் போட்டுவிடலாமா என்ற சிந்தனையும் அவ்வப்போது வந்து போனது அவருக்கு.
மூக்குத்தி வந்த நாற்பத்தெட்டாவது நாள் அது நடந்தது. அன்றைக்குப் பௌர்ணமி நிலவை மொட்டைமாடியில் நின்று கொண்டிருந்த போது பார்த்தார் நவநீதம். ஓடிப் போய் அந்த மூக்குத்தியைப் பார்க்க வேண்டுமெனத் தோன்றியது அவருக்கு. படியில் இறங்கி ஓடி அவர் அறைக்குள் போவதை அவருடைய பெண் தூரத்திலிருந்து பார்த்தாள். பெட்டியைக் கைநடுங்கத் திறந்த அவர், வெள்ளை வேட்டி ஒன்றை விலக்கினார். கண்ணைக் கூசச் செய்கிற ஒளியைக் கண்டதும் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அப்படியே சாய்ந்தார் நவநீதம்.
அவர் மறுபடி விழித்துப் பார்த்த போது மருத்துவமனையில் அவரைச் சேர்த்து இருந்தார்கள் என்பதை அறிந்தார். அவரை வந்து பார்த்தவர்கள் என ஒரு பேப்பரில் பெயர்களை எழுதிக் காவலர்கள் கொடுத்தார்கள். அதில் திருடன் ஏகாம்பரத்தின் பெயரையும் பார்த்தார் நவநீதம். அதைச் சுட்டிக் காட்டி, “இவம் எதுக்கு வந்தான்” எனச் சைகையில் கேட்டுவிட்டு நெஞ்சைப் பிடித்துக் கொண்டார். “அந்த மாளிகைக்குள்ள நுழைஞ்சதுல இருந்து எல்லாமும் துர்சகுனம் அப்படீன்னு சொன்னான். அந்தம்மா அடிக்கடி கனவில வர்றாளாம். அதுக்கு நாங்க என்னடா பண்றதுன்னு தலையில ரெண்டு போட்டு அனுப்பி வச்சேன்” என்றார் தலைமைக் காவலர். எதையோ சொல்ல வந்திருக்கிறான் போல, அவனைத் திரும்பப் பார்க்க முடியுமா என நவநீதம் யோசித்தார்.
மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குப் போனபின்னும் அவருக்குத் திருடனின் நினைப்பாகவே இருந்தது. எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அழுத்தமாக இருந்ததை வீட்டினுள்ளும் உணரத் துவங்கினார்கள். அந்த அமாவசை போய் அடுத்த பௌர்ணமி வந்த போது, இரவில் தூக்கத்தில் உடல் ஊர்வதைப் போலத் தோன்றியது நவநீதத்திற்கு. யாரோ பெண்ணுடல் அவரது உடலில் மேய்வதைப் போலவொரு உணர்வு. கண்ணை அவரால் விழித்துப் பார்க்க முடியவில்லை. கைகள் நெஞ்சை வருடி முகம் நோக்கி மேலேறுவதை உணர்ந்தார். ஒரு பெண் வாஞ்சையாக அவரது தலைமுடியைக் கோதி, வெப்ப மூச்சுக்காற்று படரக் குனிந்து அவரது காதினுள் அந்த ரகசியத்தைச் சொன்னாள். அந்த ரகசியம் அவருக்கு நன்றாகச் சத்தமாகக் கேட்டது.
காவல்காரனின் ரகசியம் அது எனச் சத்தமாக அவர் சொன்ன போது விழித்துக் கொண்டார். அப்படிச் சொன்னது அவர்தான் என்பது விழித்தபிறகே அவருக்கு உறைத்தது. எழுந்து போய் பெட்டியைத் திறந்த அவர் அந்த மூக்குத்தியின் மீது கண்ணைப் பதிக்காமலேயே அப்படியே அந்தத் துணியோடு எடுத்துப் பையில் சொருகிக் கொண்டு, அதிகாலையில் நடை போவதற்காகத் தெருவில் இறங்கி நடந்தார். கடற்கரையில் பனி மூட்டமாகப் பெய்து கொண்டிருந்தது. கடல் நீரில் மிதப்பதைப் போலப் பறக்கிற உணர்வு கிடைத்தது அவருக்கு. அந்தப் பையைத் தூக்கி கடலில் விசிறிவிட்டு எதிரே நிமிர்ந்து பார்த்தார். உடலில் இருந்த கனமனைத்தும் இறங்கி விட்டதாகத் தோன்றியது அவருக்கு. கடலலைச் சத்தத்தை மீறி மூச்சுச் சத்தம் அவருக்கு நன்றாகக் கேட்டது, வலம்புரிச் சங்கிலிருந்து கசியும் சத்தத்தைப் போல.
திரும்பிப் பார்க்காமல் நடந்த நவநீதம் வீட்டில் வந்து திறந்து கிடந்த பெட்டியைப் பார்த்தபோது, அதிலிருந்து சுகந்தம் வீசியது. அதற்கடுத்து அடுக்கடுக்காக நடந்த சம்பவங்களினால் கொஞ்சம் ஆடித்தான் போனார், தர்க்கரீதியிலான ஆதாரங்களை மட்டுமே அடித்தூணாகக் கொண்டு செயல்படும் காவல்துறை அதிகாரியான நவநீதம். அவர் வடகிழக்கு மூலையிலிருந்த கடலில் கொண்டுபோய் அந்த மூக்குத்தியைப் போட்டார். அது தெற்குமுனையான கன்னியாகுமரி கடற்கரையில் மூதாட்டி ஒருத்திக்குக் கிடைத்ததாகச் செய்தித்தாளில் வந்திருந்தது. அந்தச் செய்தியில் வந்திருந்த புகைப்படத்தை நன்றாக உற்றுப் பார்த்தார். நிச்சயமாக அது அந்த மூக்குத்திதான். அமெரிக்காவிலிருந்த அவளுக்கு அந்தப் புகைப்படத்தை அனுப்பினார்கள். அவளும் அதுதான் என்று உறுதி செய்தாள். ஆனால் அதைக் கண்டெடுத்த மூதாட்டி, “என்னோடது கிடைச்சிருச்சு. என்னோடது கிடைச்சிருச்சு” என்று சித்தம் கலங்கியவளைப் போல அரற்றியபடி, கோவிலில் கொண்டு போய் அதை ஒப்படைத்து விட்டாளாம். அதனால் மூக்குத்தி அங்கே போய்ச் சேர்ந்ததில் தனக்குப் பிரச்சினையில்லை என்று சொல்லிவிட்டு தொலைபேசியை வைக்கையில், “மனசு விட்டு சிரிச்சேன்னு நவநீதம் சார்ட்ட சொல்லுங்க” என்றாளாம். அன்றைக்கு கனவில் முகத்திற்கு அருகில் வந்து மலர்ந்து சிரித்தாள் அந்தப் பெண்.
அந்தச் சிரிப்பையே மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்த போது, அவரை உலுக்கியெழுப்பி அவருக்கு பேத்தி பிறந்த செய்தியைச் சொன்னார்கள். துள்ளலுடன் எழுந்து மருத்துவமனைக்கு ஓடினார். பேத்தியைக் கையில் ஏந்திய போது உற்றுக் கவனித்தார். அவருக்கு மட்டுமே தெரிந்ததோ அது?
சின்னஞ்சிறிய மூக்கில் சங்கு வடிவத்தில் ஒரு மச்சம்.
Super story
காவல் துறையின் பணிசார்ந்த நடவடிக்கைகளை அருமையான நடையில் கொண்டு செல்லுகிறது இச்சிறுகதை. சிறு சபலம் திருட்டாக மாறி, அந்த அவஸ்தை வாசகனுக்கும் தொற்றிக் கொள்ளும் போது சிறுகதை மனதுக்கு நெருக்கமாகி விடுகிறது. சிறப்பு.