காலை வெயில் கொஞ்சம் சுளீரென்று உடம்பைத் தாக்கிக் கொண்டிருந்தது. கையில் வைத்திருந்த பைக்குள் இருக்கும் பழங்களின் கனத்தாலும் வேகமாக நடப்பதும் கொஞ்சம் மெதுவாக நடப்பதுமாக நான் தெருக்களைக் கடந்து கொண்டிருந்தேன்.சென்ற வருடம் வீடுவரை தேடிவந்து வீட்டை மட்டும் பார்த்துவிட்டுப் போனதும் அப்படி வரும் பொழுது பக்கமாகத் தெரிந்த தூரம் இப்பொழுது அதிகமாகத் தெரிந்தது. பயணக் களைப்பும் சேர்ந்துகொள்ள என் நடையே எனக்குப் பிடிக்காமலிருந்தது. எனக்குப் பதிலாக வேறு யாரோ இப்படி நடந்துகொண்டு இருக்கிறார்களா? வெயிலைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு நாயைப் பின்பற்றி ஏழு நாய்கள்தான் வரிசையாக என்னைக் கடந்து போய்க் கொண்டிருந்தன.
எனக்கு அந்த வீட்டை நன்றாக ஞாபகம் இருக்கிறது. சுற்றியிருக்கும் எல்லா வீடுகளும் இந்த வீட்டைப் போல சமீபத்தில் கட்டப்பட்டதுதான் என்றாலும் இது மற்ற வீடுகளிலிருந்து மாறுபட்ட தோற்றத்தில் தனித்துத் தெரியும்.
நான் இந்த வீட்டுக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வருடமாகி விட்டது, இப்பொழுது அதீத கட்டிட வளர்ச்சியினால், வேறு பகுதியைப் போலத் தெரிந்தாலும், யாரையும் கேட்காமல் நானே வீட்டை அடையாளம் கண்டுபிடித்து விடுவேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது.சென்ற முறை வந்தபொழுது வீட்டைக் கண்டுபிடிக்க முடியாமல் வழியில் வந்து கொண்டிருந்த சைக்கிள்காரரை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.
அவர் ஒரு கரும் பச்சைக் கலர் ராலே சைக்கிளில் கேரியர் முழுவதும் பெரிய புல்லுக்கட்டை வைத்துக் கட்டிக்கொண்டு சற்று மேடான தெருவில் சைக்கிளை ஓட்டமுடியாமல் தள்ளிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். நான் என் நண்பரின் பெயரைச் சொன்னவுடன் இந்தத் துறையில், இந்த அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்தானே எனக் கேட்டுவிட்டு உடனே அந்த வீட்டின் இருப்பையும் அங்கு எப்படிச் செல்லவேண்டும் என்பதனையும் விளக்கமாகச் சொன்னார். எனக்கு விலாசம் சொன்ன அந்தக் கொஞ்ச நேரம் அவருக்குத் தேவையாய் இருந்திருக்கும் போல. சைக்கிளை தன் இடுப்பில் சாய்த்து வைத்த இடைப்பட்ட நேரத்தில் தலையிலிருந்த துண்டை அவிழ்த்து முகமெல்லாம் துடைத்தார். மீண்டும் தலையிலேயே கட்டிக் கொண்டு “தம்பி போயிருவீகல்ல இல்ல நான் சித்த வந்து கையைக் காட்டிவிட்டுப் போகவா” என்றார்.
எனக்கு அவரைக் கொஞ்ச நேரம் நிற்க வைத்துப் பேச்சுக் கொடுக்க வேண்டும் போல இருந்தது. இந்தக் காலத்தில் யார் இவ்வளவு பொறுமையாக நின்று பதில் சொல்கிறார்கள். “சைக்கிள் பழைய காலத்து சைக்கிளா இருக்கே, ஆனா நல்லா ஜோரா வைச்சிருக்கீங்க”‘ என்றேன். “நல்லது தம்பி வாங்கி இருவது வருஷத்துக்கு மேல இருக்கும், நான் துடைச்சு துடைச்சு வச்சுக்குவேன்” என்றார். சைக்கிளின் பின்னால் வைத்துக் கட்டப்பட்டிருந்த புல்லிலிருந்து, சோளப் பயிரை அப்பொழுதுதான் அறுத்து எடுத்தது போல வாசம் வந்து கொண்டிருந்தது. நான் என் மூச்சை நன்றாக இழுத்து அந்த வாசத்தை என் நாசி மூலமாக இதயத்துக்குக் கொண்டு சென்றேன். சில வாசனைகள் மூளைக்குப் போகிறது. சில நேரே மனசுக்கு. ‘ நல்ல வாசம்’ என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். பெரியவர் “அப்ப நான் வரவா தம்பி, பாத்துப் போங்க”ன்னு சொல்லிக்கொண்டே சைக்கிளைத் தள்ளத் தொடங்கினார். மேட்டில் சைக்கிளைத் தள்ள அவர் சிரமப் படுவதைப் பார்த்து பின்னால் போய் கேரியரில் கை வைத்து சைக்கிளைத் தள்ளி அவருக்கு உதவினேன். புல் உரசல் புறங்கையைத் தடவியது. “இருக்கட்டும் தம்பி நீங்க பாத்துப் போங்க”ன்னு சொல்லி சைக்கிளை வேகமாகத் தள்ளிக் கொண்டே போனார். நான் சற்று நேரம் நின்றேன் என்னையும், என்னைச் சுற்றியும் பரவியிருந்த புல்லின் வாசமும், எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
புதிய கட்டிடங்கள் எனக்குக் குழப்பங்களைத் தந்து கொண்டிருந்தாலும் இந்த வேப்ப மரத்தை நெருங்குகையில் வெட்டப்பட்ட அதன் பக்கவாட்டுக் கிளையிலிருந்து ஈர வாசனை வந்தது. வேப்பமர வாசனையையும் மீறி என்னையும் அறியாமல் புல்லின் வாசம் எனக்குள் நிரம்பி இருந்தது என்பதே உண்மை.
இப்பொழுதும் சற்று நின்று அந்தப் பெரியவரின் சைக்கிளைத் தள்ளி விட்டு விட்டு, புல்லின் வாசத்தோடு நடக்கத் தொடங்கினேன். இனி எதுவும் சிரமமில்லை, நேராகப் போய் வலது புறம் திரும்பி தெருக் கடைசியில் மீண்டும் வலது புறம் திரும்பினால் மூன்றாவது வீடுதான். வேகமாக நடக்கத் தொடங்கினேன்.
இந்த முறை இன்னும் ஒரு சிறு தயக்கம். வலது புறம் திரும்பியவுடன் நேர் எதிர்வீட்டில் முன்பு இருந்த வாகை மரத்தையும், அதற்கு அடுத்த வீட்டிலிருந்த போகன்வில்லா மரத்தையும் இப்போது காணவில்லை. மற்றபடி தெருவும் வீடுகளும் அப்படியேதான் இருந்தது, எனக்கு முன்னால் கண்ணுக்குத் தெரியாத ஒரு அம்புக் குறி இளங்கோவன் வீட்டைக் காட்டியது. வசதியாக இருந்தது.
இளங்கோவனுக்கும் எனக்கும் ஒரு ஐந்து வருடமாகத்தான் பழக்கம். நான் மாற்றலாகி இந்த ஊருக்கு வரும் பொழுது எங்கள் அலுவலகத்தின் இந்த ஊர் கிளையில் உதவி மேலாளராகப் பொறுப்பேற்க வந்திருந்தேன். நான் வந்த மறுநாளே கிளை மேலாளர் ஒரு மாத விடுப்பில் சென்றுவிட எனக்கு அந்த அலுவலகத்தைப் பற்றியும், ஊரைப்பற்றியும், எங்கள் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் மிகவும் விளக்கமாகவும் பொறுமையாகவும் சொல்லிக் கொடுத்ததில்தான் நானும் இளங்கோவனும் நெருங்கிப் போனோம். இரண்டு பேரும் வெகு காலம் ஒரே அறையில் தங்க வேண்டிய சூழ்நிலை. வயது வித்தியாசமும் அதிகமில்லை அதனால் மிக மிக நெருங்கிய நண்பர்களாகி விட்டோம்.
தங்கியிருந்த இடத்தில், அலுவலகம் செல்லும் இரு சக்கர வாகனத்தில், அலுவலகத்தில். கேண்டீனில், மதியம் சாப்பிட மெஸ்ஸில், மாலையில் தேனீர் அருந்தும் கடையில், எப்பொழுதாவது புகைக்கையில், மது அருந்துகையில், வார இறுதிகளில் இருவரும் அவரவர் ஊருக்குச் செல்லாவிட்டால் பார்க்கிற சினிமா தியேட்டர்களில் என எப்பொழுதும் நான் இளங்கோவைப் பக்கத்தில்தான் வைத்துக் கொள்வேன். இப்பொழுதுகூட அவன் என் பக்கத்தில் நடந்து வருவது போலத்தான் இருக்கிறது.
இளங்கோ, இளங்கோவன் என ஒருமுறை அவனுடைய பெயரைச் சொல்லிப் பார்த்துக் கொண்டேன். கூடவே ”நான்சி” என்கிற பெயரும் ஞாபகம் வந்தது. இளங்கோ, நான்சி என்று ஒரு முறை சொல்லிக்கொண்டு நானே என் தலையை வலதும் இடதுமாக ஆட்டிக் கொண்டேன்.
இன்னும் இரண்டு நிமிடங்களில் நேருக்கு நேராக இளங்கோவைப் பார்க்க வேண்டியதிருக்கும் அதற்குள் என்னை நான் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். எப்படித் தொடங்குவது எப்படிப் பேசுவது என ஒரு சின்ன நினைப்பைத் தாண்டி முடிவெடுப்பதற்குள் நான் இளங்கோவின் வீட்டின் முன்னால் நின்று கொண்டிருந்தேன்.
நான் அழைப்பு மணியில் கையை வைப்பதற்கும் இளங்கோ மூடியிருந்த கதவைத் திறந்துகொண்டு வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது. இப்படி எப்போதாவதுதான் ஒன்றும் ஒன்றும் சரியாக நடக்கிறது. சரியாக நடக்கவில்லை என்பதற்காக எதுவும் நின்று விடுகிறதா என்ன? நடப்பது நடந்துகொண்டுதானே இருக்கிறது. இப்படிச் சரியாக நடப்பது சில நேரங்களில் ஒருவருக்கு நல்லதாகவும் மற்றவருக்கு இடைஞ்சலாகவும் ஆகிவிடும். அல்லது இருவருக்குமே நல்லதாகவும் அமைந்து விடுவதும் நடக்கத்தானே செய்கிறது. இப்பொழுது எனக்கும் இளங்கோவுக்கும் அமைந்தது போல.
இளங்கோவுக்கு வயது கூடியிருந்தது. தலை முடி மற்றும் மீசையின் நிறம் மாறாமல் வைத்திருக்கச் செய்யும் வித்தையை நன்றாகக் கற்று வைத்திருக்கிறான் என்று அவன் தோற்றமே காட்டியது. கொஞ்சம் தொப்பையைத் தவிர இளங்கோ அப்படியே இருந்தான்.
“சார் வாங்க என்ன டிரெய்ன் லேட்டா?” – கேட்டுக்கொண்டே படிகளில் இறங்கிவந்து கேட்டின் கொக்கிகளை நீக்கி, கதவைத் திறந்து விட்டான்.
“இல்லை இளங்கோ டிரெய்ன் கரெக்ட் டயம்தான். நான்தான் ரூமுக்குப் போய் தயாராகி வந்தேன்” என்றேன்.
“என்ன சார் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறீங்க நேரா இங்க வந்திருக்கலாமில்ல” என்றான். பேசிக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தோம்.
வீட்டிற்குள் யாரும் இல்லை என்பது நன்றாகத் தெரிந்தது. நான் கேட்கும் முன்னே “சார் அவ நேத்துத்தான் ஊருக்குப் போனா, அவங்க ஊர்ல கொடை . நானும் போயிருக்கணும். நீங்க வாரேன்னு சொன்னவுடனே அவளைப் போகச் சொல்லிட்டு நான் தங்கிட்டேன், நாளைக்குக் கிளம்பி நானும் போகணும், இது கல்யாணத்துக்கு அப்புறம் வர்ற முதல் கொடை அதனால போயே தீரணும்” என்று சொன்னான்.
”முதல்லயே சொல்லியிருந்தா நான் அடுத்தவாரம் வந்திருப்பேன் இல்லையா எனக்காக ஏன் இந்த ஏற்பாடு” என்றேன்.
”பரவாயில்ல சார்” என்றான்.
”கொஞ்சம் இருங்க சார்ன்னு” சொல்லிவிட்டு வீட்டுக்குள் போனான். இளங்கோ வரும் பொழுது கைகளில் இரண்டு கண்ணாடி கிளாசுகளும். ஒரு விஸ்கி பாட்டிலும். அதை வைத்துவிட்டு, மீண்டும், உள்ளே போய் தட்டு நிறைய கை முறுக்கும், மிக்சருடனும் வந்தமர்ந்தான்.
நான் வந்து இன்னும் சரியாக உட்காரக் கூட இல்லை. அதற்குள் இந்த வீடு நானும் இளங்கோவும் தங்கியிருந்த அறையாக மாறிவிட்டது. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் “ என்ன இளங்கோ பகல் நேரத்தில் இதெல்லாம் எதற்கு, அதுவும் வீட்டிலேயே” எனக் கேட்டு வைத்தேன்.
”இருக்கட்டும் சார் எவ்வளவு நாளாச்சு” என்றான்.
”இதுக்கெல்லாம் வீட்டில ஒண்ணும் சொல்லமாட்டாங்களா” என்றேன், ”இதை விட பெரிய விஷயங்களுக்கே ஒண்ணும் சொல்றதில்லை இதுக்கென்ன சார்” என்று சொல்லிக் கொண்டே என் அனுமதியை எதிர்பாராமல் பாட்டிலைத் திறக்கத் தொடங்கினான். “இருங்க சார்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே போனான்.
திறந்திருக்கிற ஒரு கதவை அடைத்துவிட்டு, அடைத்திருக்கும் ஒரு கதவைத் திறக்கப் போனது போல இருந்தது.
நான் கால்களை நீட்டித் தளர்த்திக் கொண்டே சுற்றிலும் பார்த்தேன்.
இளங்கோவின் வீடு சுத்தமாக இருந்தது. மூலையில் ஒரு தொலைக்காட்சிப்பெட்டி அதன் மேல் ஒரு அழகிய சிற்பம் அதில் ஆங்கிலேயர்களின் உடை அலங்காரங்களுடன் ஒரு பெண்ணும் ஆணும் நடனமாடுகிற மாதிரி வளைந்து நின்று கொண்டிருந்தார்கள். பக்கத்தில் ஒரு பூ ஜாடி அதில் வாசமில்லா மலர்களினால் அலங்காரம், நிலை மேலே ஒரு சுவர்க்கடிகாரம் அதற்குக் கொஞ்சம் தள்ளி மாத காலண்டர், தொலைக்காட்சிப்பெட்டிக்கு எதிர் மூலையில் ஒரு வட்ட மேஜையில் சமீபத்தில் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒரு செவ்வக வடிவ ஸ்டாண்டில். நான் அமர்ந்திருக்கிற சோபாவும் டீப்பாயும் அதற்கு அடியில் ஒரு நேர்த்தியுடன் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற தினசரிப் பத்திரிக்கைகள் மற்றும் சில வாரப் பத்திரிக்கைகளும் என வீடு முழுவதும் ஒரு ஒழுங்கில் இருந்தது
இளங்கோ அலுவலகத்திலேயே அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதக் கூடியவன் என்பதனால் எப்பொழுதும் கணக்குப் பிரிவிலும் தணிக்கைப் பிரிவிலும்தான் வேலை கொடுப்போம், ஆடிட் ரிப்போர்ட்டில் இருக்கும் கொக்கிகளை அவன் பதில் எழுதி நிமிர்த்துவதில் கெட்டி. அதே நேர்த்தியில் வீடும் இருப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இளங்கோவின் புது மனைவியுடன் இருக்கிற புகைப்படம் ஏதோ ஒரு ஸ்டூடியோவில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்களுக்குப் பின்னாலிருந்த திரைச் சீலையில் கடலும் கடலில் ஒரு தோணியும் போய்க்கொண்டிருக்க இவர்கள் இருவரும் நெருங்கி நின்றுகொண்டிருந்தார்கள். இளங்கோவின் மனைவியின் தோற்றம் புது மனைவிக்குரிய எல்லா அடையாளங்களுடனும் இருந்தது. அளவான புது நகைகளும், தலைமுடியை வழியச் சீவி ஹேர் பின் கொண்டு நன்றாக இறுத்தி, தலை நிறைய பூ வைத்துக்கொண்டு, புடவை நழுவாமலிருக்க தோள்பட்டைப் பக்கத்தில் கிளிப் குத்தி நின்றுகொண்டிருந்தது.
புகைப்படம் எடுப்பவர் இருவரையும் நெருங்கி நிற்கச் சொல்லியிருக்க வேண்டும், அதற்காக இளங்கோ கழுத்தை மனைவியின் பக்கம் இலேசாகச் சாய்ந்திருக்கிற மாதிரி நிற்க அந்தப் பெண் வெட்கத்தோடு இலேசாகச் சிரிக்க அந்த அற்புதமான வினாடிகளைக் கொஞ்சம்கூடத் தாமதிக்காமல் எடுக்கப்பட்டிருந்த ஒரு நல்ல புகைப்படம் அது என எனக்குப்பட்டது. அந்தப் படத்தைக் கையில் எடுத்துப் பார்க்க வேண்டும் போல இருந்தது. இளங்கோவும் அவனது மனைவியும் இருக்கிற போட்டோவை நான் கையில் எடுப்பதற்கும் “என்ன சார் பார்க்கறீங்க? அதுதான் உங்களுக்குத் தெரியாத என் புது மனைவி” என்று சொல்லியபடி தண்ணீர் பாட்டிலை டீப்பாயில் வைத்துக்கொண்டே என் கண்களைப் பார்த்துச் சிரிப்பதற்கும் சரியாக இருந்தது.
நானும் சிரித்துக்கொண்டே புகைப்படத்தை அதே இடத்தில் வைத்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் சோபாவில் வந்து அமர்ந்து கொண்டேன்.
இளங்கோ குளிர்விக்கப்பட்டிருந்த தண்ணீரை பாட்டிலிலிருந்து இரண்டு கண்ணாடி தம்ளர்களிலும் ஊற்றிக்கொண்டிருந்தான். அடர் பிரவுன் திரவம், மினுங்கும் தங்க நிறமாகிறவரை பார்த்துப் பார்த்து ஊற்றிவிட்டு சோபாவில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்துகொண்டான். எங்கள் இருவருக்கும் பேச நிறைய இருந்தாலும் பேசவே கூடாது அல்லது எப்படி பேச்சைத் தொடங்குவது என்பது போல அமைதியாக இருந்தோம்.
சில நேரங்களில் பேசுவதைவிட பேசாமலேயே எத்தனையோ விஷயங்கள் புரிய வைக்கப்படுகின்றன இல்லையா. மௌனம் சில தருணங்களில் நம் மனதை அடுக்குவது போலக் கலைத்துப் போடுவதும் நடக்கத்தானே செய்கிறது.
எனக்கும் இளங்கோவுக்கும் இந்த மௌனம் இந்த சமயத்தில் தேவைதான். மௌனத்தை யார் முதலில் கலைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே, ”சார் இந்தாங்க” என்று ஒரு கண்ணாடி டம்ளரை என் கையில் கொடுத்தான்.
சம்பிரதாய மோதல்களுக்குப் பிறகு ஒரு மடக்கு பிறகு ஒரு மடக்கு என முடிந்தவுடன் “இளங்கோ சொல்லுங்க” என்றேன். “நான்சிக்கு என்ன ஆச்சு, ஏனிந்த திடீர் முடிவு, என்கிட்ட ஒரு வார்த்தை கலந்திருந்தா எனக்குத் தெரிந்த ஏதாவது ஒரு வழியைச் சொல்லியிருப்பேன் இல்லையா” என்றேன்.
“சார் பரவாயில்லயே, நான்சின்னு பெயரெல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்களே” என்றான் ” பெயருக்கு என்ன சார்? பெயர் எல்லாம் நல்லாத்தான் இருந்தது”.
“இளங்கோ நான் ஏதாவது தப்பாக் கேட்டுவிட்டேனா” என்றேன்.
“இல்லை சார். நமக்குள்ளே என்ன தப்பு, சரி எல்லாம்? இப்ப நான் சொல்லப் போற விஷயம் எனக்கும், என் அம்மாவுக்கும், என் மனைவிக்கும் மட்டும்தான் தெரியும். மூணு சுவருக்குத் தெரிஞ்சது நாலாவது சுவத்துக்குத் தெரியாவிட்டால் எப்படி? ” இளங்கோ கொஞ்ச நேரம் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு தரையைப் பார்த்துப் பேசினான்.
“என் மனசுக்குப் பிடிச்ச யார்கிட்டயாவது சொன்னால்தான் சார் எனக்கும் அதை மறக்க முடியும். எனக்குப் பிடிச்ச உங்கள்ட்ட சொல்லாம யார்ட்ட சார் சொல்லப்போறேன் கணேசன் சார்” முதல் தடவையாக என் பெயரைச் சொல்லியபடி என் கையை அழுத்திப் பிடித்தான்.
மீண்டும் ஒரு அமைதி, இளங்கோ தன்னுடைய பானத்தை ஒரே மடக்கில் குடித்துவிட்டு, என்னைப் பார்த்துக்கொண்டே இருந்தான். நான் ‘இளங்கோ…’ என்றேன். கண்ணீர் அவன் கன்னங்களில் வழிந்து சட்டையில் சொட்டி நனைத்துக் கொண்டிருந்தது,
“ கணேசன் சார், நீங்க என் முதல் கல்யாணத்துக்கு வந்தீங்கள்ள , ஞாபகம் இருக்கா?”.
“என்ன இளங்கோ மறக்க முடியுமா. உங்க ஊர்ல வசதி பத்தாதுன்னு பக்கத்து ஊர்ல தங்க வச்சுட்டு அதிகாலைலே பஸ்ஸில கிளம்பி உங்க ஊர் சாவடில இறங்கி அங்கே இருந்து நடக்க வச்சிங்களே மறக்க முடியுமா.?!”
“அப்புறம்” என்றான். மறுபடி “அப்புறம் சார்” என்று திருப்பிச் சொன்னான். எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் கையில் பானத்தை எடுத்தேன்.
” சார் , கல்யாணத்தன்னைக்கு ஆபீஸுக்கு வாரேன்னு உங்க கூடக் கிளம்ப நான் என்ன கிறுக்கனா சார்? ஆனா அன்னைக்குக் கிறுக்கனா சட்டையைக் கிழிச்சுக்கிட்டது எங்க அம்மாவுக்காக சார்? தாலிகட்டி முடிச்சு பொண்னு மாப்பிள்ளை எல்லாம் கருப்பசாமி கோயிலுக்குப் போயிட்டு வந்தோம்… உச்சியிலேயும் நெத்தியிலேயும் சாமி கொண்டாடி பூசிவிட்ட திருநீறு…
இளங்கோ சொன்ன அந்தக் கோயில் எனக்கு நினைவிருக்கிறது. முன்பு ஒருதடவை அவனுடன் போயிருக்கிறேன். சிறியதும் பெரியதுமாக வெங்கல மணியாகத் தொங்கும். தரை முழுதும் அரசிலையாக உதிர்ந்து கிடந்தது. கருப்பசாமி முன்னால் உயரமாக ஒரு சூலாயுதம். எண்ணெய் வடிகிற ஒரு கல் தூணின் மாடத்தில் எரிகிற விளக்கு. நான் அந்தத் தொங்கும் மணிகளைப் படம்கூட எடுத்திருக்கிறேன்.
இளங்கோ சொல்ல ஆரம்பித்தான். ‘வீட்டுக்குள்ள வந்ததும் கையோடு ஒரு ஓரமா, கிழக்குச் சுவர்ப் பக்கமாக் கூட்டிக்கிட்டுப் போனா.. சட்டுண்ணு கேட்டா.. இது எந்த இடம் ஞாபகம் இருக்கா இளசு.. உங்க ஐயா கடைசியா கண்ணை மூடின இடம்.. அம்மா அவளுக்கு மனசு பொங்கிக்கிட்டு வந்தா இளங்கோண்ணு சொல்லாது.. இளசு இளசுண்ணு சொல்ல ஆரம்பிச்சிரும்’
இளங்கோ நான் கேட்கிறேனா என்று என் முகத்தைப் பார்த்தான். மறுபடி குனிந்துகொண்டு சொல்ல ஆரம்பித்தான்.
’டே.. ஐயா.. கல்யாணம் முடிஞ்ச பொண்ணு மாப்பிள்ளைக்கு உண்டான எல்லாச் சாங்கியமும் இன்னைக்கு ராத்திரியே நடக்கணும்னு அவ வீட்டிலே அவ அப்பனும் மாமனும் திருப்பித் திருப்பிச் சொல்லுதாங்க.. நான் கூட இத்தனை தடவ சொல்லுததுக்கு என்ன இருக்கு… அது தானே முறைன்னு அவங்க கிட்டே சொன்னேன்… நாம இப்படி நினைச்சா கருப்பசாமி வேறு ஒண்ணை நினைச்சுட்டாருய்யா…’
அம்மா என் கையைப் பிடிச்சுக்கிட்டா.. ஏற்கனவே மெதுவாத்தான் பேசிக்கிட்டு இருந்தவ, ஒரு ரகசியம் மாதிரி…நம்ம சாமி கொண்டாடி, பொண்ணு மாப்பிள்ளை ரெண்டு பேரும் இன்னும் பத்து நாளைக்கு பால் தனி பழம் தனியாத்தான் இருக்கணும்.. ரெண்டு பேரும் ஒருமிச்சா குலநாசம்ன்னு சொல்லீட்டு சூடத்தை முழுங்கீட்டாரு. நான் என்ன பண்ணுவேன் இளசு..? என் கை இரண்டையும் பிடிச்சு அவள் முகத்துல வச்சுக்கிடுதா.
இப்போ எனக்கு சாமி வந்த மாதிரி ஆயிட்டு. நான் தான் அம்மாவுக்கு யோசனை சொல்லுதேன். ”கவலைப் படாதே.. கணேசன் சார் வந்திருக்காரு… ஆபீசில ஆடிட் நடக்கு.. நீ இல்லாமல் கஷ்டப் படும் இளங்கோண்ணு சொல்லுதாரு… இப்பா நான் கையோட ஆபீஸ் போய் வேலையை முடிச்சுக் கொடுத்தா எனக்கு நிறைய மார்க் போடுவாங்க.. புரமோஷனுக்கு ஈசியா இருக்கும்.. போயிட்டு ஒரு வாரம் பத்து நாள்ல வ்ந்திருதேன்னு நானே அவளைக் கூப்பிட்டு சொல்லீருதேன்.. கவலைப் படாதேன்ணு அம்மாகிட்டே சொன்னேன்.. அம்மா அழுதுக்கிட்டே என்னைக் கும்பிட்டுது.”
இளங்கோ இன்னும் தரையைப் பார்த்துக்கொண்டே தான் பேசினான். அவள் அம்மா கும்பிட்டதாகச் சொல்லும் போது அவன் கைகள் கும்பிடுகிற பாவனை செய்தது.
டிராமா போடணும்னு முடிவு பண்ணியாச்சுண்ணா உடனே முழுசா போட்டிரணும்லா. நானே நான்சியைத் தனியாக் கூப்பிட்டேன். ரெண்டு பேரும் நட்டமா நிண்ணுக்கிட்டே தான் பேசினோம். ஆபீஸிலே ஆடிட் நடக்கு.. நாம் போகாட்டா ஆடிட்டர் ஆபீஸை இழுத்து மூடச் சொல்லி ரிப்போர்ட் எழுதீருவாரு.. நாம் போனா எல்லாத்தையும் சமாளிச்சிருவேன்.. பின்னால எனக்குப் பிரமோஷனுக்கு ஈஸியா இருக்கும்.. போயிட்டு வந்திருதேன்.. இதை முழுங்கி முழுங்கி அவளைப் பார்த்துக்கிட்டே சொல்லுதேன்… பார்க்கப் பார்க்க அவளையும் அப்படியே கட்டிப் பிடிச்சு முழுங்கீரலாம்னு இருந்துது… சொல்ல முடியாது முழுங்குனாலும் முழுங்கீருப்பேன்… அதுக்குள்ளே அம்மா வெளியே இருந்து இளங்கோண்ணு சத்தம் கொடுத்திட்டா…
”இதையெல்லாம் அப்போ உங்க கிட்டே எதுவும் சொல்லலை கணேசன் சார். ஆடிட் நடக்குதுண்ணா நானும் வாரேன் சார் என்று உங்க கூடவே பொறப்பட்டுட்டேன். டிராமா முடிகிறது வரைக்கும் எல்லாம் டிராமா தானே சார்?’ உங்களுக்கு பாதிக்குப் பாதி ஞாபகம் இருக்குமே..”
இளங்கோ என்னை ஏறிட்டுப் பார்த்தான். ஒரு பூவின் காம்பைப் போல மிக்ஸரில் கிடந்த ஒரு தேங்குழல் துண்டை விரல்களின் நுனியில் வைத்திருந்தான்.
“ஏன் ஞாபகம் இல்லை. அடி தெரியாவிட்டாலும் நுனி தெரியாமலா இருக்கும். நீ வந்தே. ஆடிட்டில் ஹெல்ப் பண்ணுனே. ஆபீஸிலேயே கிடந்த. ஆளே சரியில்ல. அப்புறம், ஒரு வாரம் கழிச்சு நான்தான் மேனேஜர்ட்ட சொல்லி லீவு வாங்கிக் கொடுத்து பழம் பூ இனிப்பு எல்லாத்தோட, சிரிக்க சிரிக்க கிண்டலடித்து, கழுத்தில ஒரு மாலையைப் போட்டு உன்னைய பஸ் ஏத்திவிட்டேன். ”
“அதுதான் சார் நான் சிரிச்ச கடைசிச் சிரிப்பு, அதுக்கு அப்புறம் கணேசன் சார், லைஃப் தான் நம்மளப் பார்த்து சிரிச்சுது” – இளங்கோ ஒரு சிறு மிடறு வாயில் ஊற்றிக் கொண்டான். – “நான் ஒரு மாசம் லீவை போட்டுட்டு திரும்பி நம்ம ஆபீசுக்கு வர்றதுக்குள்ள உங்களை எங்கேயோ வடக்க மாத்தி அனுப்பிச்சிட்டாங்க. நான் சிரிச்சதும் உங்களுக்குத் தெரியாது. அழுததும் உங்களுக்குத் தெரியாது”
”ஒன்னும் புரியல இளங்கோ” .
”எனக்குக் கூட என்ன புரிஞ்சுது? ஊருக்குப் போன ராத்திரி ஒன்னும் புரியல சார்”
மீண்டும் பொன்னிற திரவம் ஒரே மிடறாக உள்ளே இறங்கியவுடன் கண்களைத் துடைத்துக் கொண்டே பேசத் தொடங்கினான்.
“சார் ,நீங்க பஸ் ஏத்தி விட்டவுடனே பஸ் கிளம்பிருச்சு ஆனால் வழிலே பஸ் ரிப்பேர் ஆகி நின்றவுடன் வேற பஸ் புடிச்சு ஊருக்குப் போனா எங்க ஊருக்குப் போற கடைசி பஸ் போயிருச்சு, நான், ஊர் என்ன ஆறு கிலோ மீட்டர்தானேன்னு நடக்கத் தொடங்கிட்டேன் .”
இளங்கோ என்னிடம் கேட்டான். ” கணேசன் சார், நீங்க ராத்திரி அப்படித் தனியா நடந்திருக்கீங்களா? ஒரு தடவையாவது நடக்கணும். இளங்கோ வான்னு என்னை எல்லாம் கூப்பிடக் கூடாது. நீங்க மட்டும் தனியா ஒத்தையில நடக்கணும்..” இளங்கோ என் தோளில் கைவைக்க வருவது போல் காற்றில் துழாவினான்.
“நான் கடைசி பஸ்ஸில வந்திருவேன்னு தெரிஞ்சவுடன எங்க அம்மா அவங்க அண்ணன் வீட்டுக்கு படுக்கப் போயிருச்சு சார்” இப்போது கோணலாக ஒரு சிரிப்பில் இருந்தான் “புதுசாக் கல்யாணம் ஆனவங்களுக்கு இடைஞ்சலா இருக்கக் கூடாதாம். அதுக்காக”.
“நான் வீட்டுப் பக்கத்தில வரும் போது ராத்திரி ஒரு மணியாயிருச்சு, ஊர்ல ஒருத்தர்கூட கண்ணுல படல. யாரும் என்னையப் பார்த்திருப்பாங்களா தெரியல. இதுக்கு முந்தி எத்தனையோ தடவை இப்படிப் பிந்தி வந்து கதவைத் தட்டி இருக்கேன். அது எல்லாம் அம்மா திறக்கிற கதவு. இப்போ இவ, அதான் , கணேசன் ஸார் நீங்க இன்னும் மறக்காத பேருல்லா, இந்த நான்சி வந்து திறக்கப் போகிற கதவு…
”வீட்டை நெருங்கி கதைவைத் தட்ட கையை வைக்கும் பொழுது உள்ளே சிரிச்சு சிரிச்சு வெளையாடுற சத்தம் கேட்டுச்சு சார். பொம்பளை சிரிப்பு ஒரு மாதிரி. ஆம்பிளை சிரிப்பு ஒரு மாதிரி. இது பொம்பிளையும் ஆம்பிளையும் சேர்ந்து சிரிக்கிற சிரிப்பு… எனக்கு எப்படி இருக்கும் சார்.. ” – இளங்கோ அந்தச் சிரிப்புச் சத்தம் இப்போது கேட்பது போல, இரண்டு சுட்டு விரல்களையும் இரண்டு காதுக்கு உள்ளேயும் செருகி அடைத்தபடி எழுந்து நின்றான். எழுந்திருக்க முடியாமல் ஒரு பொட்டலம் போல மறுபடி உட்கார்ந்தான்.
மீண்டும் அமைதியாக நிலைக்கு மேலே மாட்டியிருந்த கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். கடிகாரத்தின் ஓசையைத் தவிர வேறு ஓசையே இல்லாமல் வீடு அமைதியாக இருந்தது. உச்சிப்பகல் தெருவில் யாரோ சைக்கிளில் மணியடித்துக் கொண்டே போவதும், அடுத்த தெருவில் ஒன்றுமே புரியாமல் மிகச் சத்தமாக எதையோ விற்றுக்கொண்டு போவதும் மட்டுமே கேட்டது. நான் என்ன சொல்வது என்று தெரியாமல் கொஞ்சம் முறுக்கை விரலில் எடுத்தேன். வினோதம் தான். இளங்கோவின் குரலைப் போல முறுக்கு திருகிக் கொண்டே போய் வளைந்து நொறுங்கியது.
”எனக்கு வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு கதவைத் தட்டினேன். அடக்கினேன்னு சொல்றதெல்லாம் பொய் சார், அடக்க முடியுமா சார், அதையெல்லாம்”
யாருன்னு நான்சியின் பதற்றக் குரலும் கூடவே உள்ளே இருந்தவனின் அவசரத்தையும் என்னால் உணர முடிஞ்சது சார். கதைவைத் திறந்தவுடன் யாராவது பாய்ஞ்சு ஓடுவாங்கன்னு எதிர் பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்படி ஒண்ணும் நடக்கலை. உள்ளே நுழைஞ்சு ஒரு ஸ்டெப் கூட வைக்கலை சார், அவளும் அவனும் என் கால்களில் விழுந்து அப்பிடியே கெட்டியாப் பிடிச்சுக்கிட்டாங்க.
அப்புறம் எல்லாம் சினிமா மாதிரி நடந்தது கணேசன் சார். நீங்க நம்ப மாட்டீங்க… சாரி.. நீங்க மட்டும் தான் நம்புவீங்க… நான் ”வேறு வழியில்லாமல் விடிய விடிய அவங்க ரெண்டு பேரோட காதல் கதையையும் என்னோடு அவளுக்கு நடந்த கட்டாய கல்யாணக் கதையையும் கேட்டேன் சார் ” என்றான்.
மீண்டும் அவன் கண்களில் கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது, எனக்குப் பேச எதுவுமே இல்லாதது போல் தோன்றியது. முதுகில் தட்டிக் கொடுத்திருக்கலாம். கையோடு இழுத்து இளங்கோவை அணைத்திருக்கலாம், அவன் அம்மாவைப்பற்றிக் கேட்டிருக்கலாம் அப்படி எதுவும் செய்யத் தோன்றவில்லை, ஒன்றுமே செய்யாமல். எழுந்து வீட்டைச் சுற்றிப் பார்ப்பது போல் அடுப்படி, பாத்ரூம், படுக்கையறை எல்லாப் பக்கமும் போய்விட்டுவந்து சோபாவில் அமர்ந்தேன்.
எனக்கு போன முறை வந்த சமயம் பார்த்த பெரியவரை, அவர் சைக்கிளில் இருந்த புல்லுக் கட்டை, அதோடு அவர் அந்த மேட்டில் ஏறுவதற்கு நான் சைக்கிளைப் பின்னால் இருந்து தள்ளி உதவினதை, அந்தப் புல்லுக்கட்டு வாசனை என் கூடவே வந்ததை, அதுவும் ஒரு வெட்டப்பட்ட வேப்ப மரத்தின் ஈர வாசனையை மறக்கடிக்கும் அளவுக்கு நிரம்பிவிட்டதை எல்லாம் இளங்கோவிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு இருந்த ஒரு மிதமான போதை அதை சொல்லச் சொல்லியது.
இளங்கோ அழுது முடித்திருந்தான். கண்ணீர்ப் பிசுக்கு நத்தைத் தடம் புல்லில் கிடப்பது போலக் கன்னத்தில் கிடந்தது.
நான் இளங்கோவிடம் சொல்ல ஆரம்பித்தேன் அல்லது கேட்க ஆரம்பித்தேன்
” இளங்கோ, நீ என்றைக்காவது ஒரு புல்லுக்கட்டுக்காரக் கிழவர் சைக்கிளை மேட்டுக்குத் தள்ளி விட்டிருக்கியா? “
“கிளையை வெட்டின வேப்ப மரத்தில இருந்து ஈரமா, சொல்லப் போனா கசப்பா ஒரு வாசனை வருமே தெரியுமா?”
“உனக்குப் புல் வாசனை பிடிச்சுப் போச்சுண்ணா, அந்த வேப்பமரத்து வாசனை எல்லாம் மூக்குக்கு அதுக்குப் பிறகு கொஞ்சம் கூடத் தட்டுப் படாது இல்லையா?”
இளங்கோ இன்னும் குனிந்தே இருந்தான். நான் மேலும் பேச ஆரம்பித்தேன்.
” இந்த வீடு முழுசும் இப்போ புல் வாசனையால நிரம்பி இருக்கு தெரியுமா உனக்கு?”
இளங்கோ லேசாக நிமிர்ந்து என்னைப் பார்த்தான். அவன் நாசித் துளைகள் விரிவது போல இருந்தன.
புகைப்படம் : சரண் முத்து